நேற்றுக் கலந்துகொண்ட செழியனின் நினைவு நிகழ்வு பற்றியதாகவே சிந்தனை இருக்கின்றது. செழியன் என்ற ஆளுமையை ஒட்டுமொத்தமாக எப்படிப் பார்ப்பது? செழியன் எப்படியானவராக இருந்தார்? அவர் சமூகத்துடன் எப்படி உறவாடினார்? செழியன் போன்ற மனிதர்களை இந்த சமூகம் எப்படிக் கையாண்டிருக்கின்றது? என்பதாகச் சிந்தனைகள் செழியன் குறித்தும் இறந்துபோன இன்னும் சில நண்பர்கள், ஆளுமைகள் குறித்ததுமாக மாறி மாறி வந்துபோய்க்கொண்டே இருந்தன.
(1)
செழியனின் இறப்பின் பின்னர் பலரும் எழுதிய குறிப்புகள் செழியனின் வீழ்ச்சியையும் தொட்டுச் சென்றனவாகவே இருந்தன. அவர்களின் குறிப்புகள், ஒரு விதத்தில் கையறுநிலையினதும் செழியனின் பாற்பட்ட அக்கறையினதும் விழைவாகவே இருந்ததை உணர முடிந்தது. ஆனால், செழியனின் வீழ்ச்சி என்று பிரதானமாக மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்ற அவரது கட்டுப்படுத்த முடியாத மதுப்பாவனையை எப்படிப் புரிந்துகொள்வது? மதுபாவனைக்கு அடிமையாதல் என்பதைவிட, அப்படியான நிலைக்குச் செழியனைத் தள்ளிய சமூகக் காரணிகளை எப்படி நாம் எதிர்கொள்வது? மிகத் தீர்க்கமான பார்வையும் தெளிவும் கொண்டிருந்த செழியன் பின்னாளில் தான் சார்ந்திருக்க இயக்கச் செயற்பாடு ஒன்றினை இன்னொரு எழுத்தாளருக்குச் சொல்லி, அவர் அதனை எந்தப் புரிதலும் இல்லாமல், கேவலமான முறையில் சித்திகரித்து எழுதியிருந்த போது மௌனம் சாதித்துக் கடந்து போனதை எந்தப் பின்னணியில் பொருத்திப் பார்ப்பது என்கிற கேள்விகள் தொடர்ந்து எழுந்தவண்ணமே இருக்கின்றன.
(2)
தனது பாடசாலை நாட்களிலேயே சமூக வேலைத்திட்டங்களை முன்னெடுத்த செழியனின் புலப்பெயர்வு நிர்ப்பந்தத்தால் நிகழ்ந்தது. அவர் சார்ந்திருந்த இயக்கத்திற்குள்ளான உள்முரண்பாடுகள், பின்னர் புலிகளால் ஏற்பட்ட மரண அச்சுறுத்தல் என்பனவே அவரை நாட்டை விட்டு வெளியேறச் செய்தவை.
செழியனின் நினைவு நிகழ்வில் பேசிய காலம் செல்வம் குறிப்பிட்டதுபோல, ”பெர்லின் விமான நிலையத்தில் வந்து இறங்கும் அகதிகள் கூட்டத்தில் என்னைத் தேடி அலையாதே” என்று எழுதிய செழியன், உண்மையில் தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று, அப்படி இருக்கத்தான் விரும்பினார். ஆனால், தமிழ் விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் வன்முறையாக வெடித்தபோதே அவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தான் சார்ந்திருந்த இயக்கத்துக்குள்ளும் ஜனநாயகத்துக்காகக் குரல் கொடுத்துப் போராடிக்கொண்டிருந்தவர் செழியன். அதே சமயத்தில் அவர் சார்ந்திருந்த EPRLF இயக்கம் விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டும், செழியன் விடுதலைப் புலிகளால் தேடப்பட்டும், தலைமறைவாகி இருக்கவேண்டிய அவலநிலை ஏற்பட்டது.
தன் நாட்டையும், மக்களையும் நேசித்த, அதன் விடுதலைக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துப் போராட்டத்தைத் தொடங்கிய செழியன் போன்ற ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டதை ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவின் சீரழிவென்றே கருதமுடியும். செழியனின் நினைவாக வெளியிடப்பட்ட “தோழமை என்றொரு சொல்” என்கிற நூலில் சி.அ. யோதிலிங்கம், செழியனின் இறப்புப் பற்றிப் பற்றிப் பேசியபோது அவரது மகள் தமிழினி, “ஓரிடத்தில் இருக்கின்ற மரத்தைப் பிடுங்கிக்கொண்டு வந்த இன்னொரு இடத்தில் நட்டால் அது எப்படி உறுதியாக நிற்கமுடியும்” என்று கூறியதைக் குறிப்பிடுகின்றார். உண்மையில் செழியன் மாத்திரமல்லாமல் திணிக்கப்பட்ட புலப்பெயர்வினை ஏற்கமுடியாமல் தமக்கான வாழூடகமாக புலம்பெயர் வாழ்வினைத் தகவமைத்துக்கொள்ளாமல் திணறியவர்கள் தான் எத்தனைபேர்!
நாட்டைவிட்டு வெளியேறிய செழியனின் மனநிலையைப் பற்றியும் அது அவரில் ஏற்படுத்திய உளவியல் ரீதியான தாக்கம் குறித்தும் இந்த நிகழ்வில் குறிப்பிட்ட செழியனின் துணைவி துளசி, தொடர்ச்சியாகச் செயற்படுவதும் எழுதுவதுமே அந்த உளவியல் தாக்கத்தில் இருந்த விடுபடுவதற்குச் செழியன் கையாளக்கூடிய உபாயம் என்று தான் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்ததாகக் குறிப்பிட்டார். புலப்பெயர்வு, அதிலும் குறிப்பாக செழியன் போன்ற மக்களை நேசித்த செயற்பாட்டாளர்கள் மீது திணிக்கப்பட்ட புலப்பெயர்வும் அது தரும் தனிமை, வெறுமை, அந்நியமாதல் என்பன தரக்கூடிய மனநெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்கான உபாயங்களாகவே துளசி கூறிய வழிமுறைகளை நாம் கருதவேண்டும்.
(3)
கனடா வந்த ஆரம்பகாலத்திலும் மிகவும் உற்சாகமாக பொதுவேலைகளை முன்னெடுக்கின்றவராகவே செழியன் இருந்திருக்கின்றார். தேடகம் அமைப்பின் ஆரம்பகால உரையாடல்களில் பங்கெடுத்ததுடன் அந்த அமைப்பின் தோற்றுனர்களில் ஒருவராகவும் செழியன் இருந்திருக்கின்றார். அதுபோல கனடாவில் மேடையேற்றப்பட்ட முக்கியமான நாடகங்கள் பலவற்றின் பிரதியை எழுதியவராகவும் செழியன் இருந்திருக்கின்றார். ஆயினும் புலம்பெயர் வாழ்விலும் செழியன் சார்ந்திருந்த, செழியன் செயற்பட்ட அமைப்புகளுக்குள் ஏற்பட்ட பிரிவுகளும் உடைசல்களும் கூட செழியனைக் கட்டாயமாகப் பாதித்திருக்கும். அதுபற்றிய சுய விமர்சனப் பார்வை கட்டாயமாக அவர் செயற்பட்ட அமைப்புகளுக்கும் அவர் செயற்பட்ட தளங்களின் சக செயற்பாட்டாளர்களுக்கும் இருக்கவேண்டும். செழியனின் மரணத்தை, அவர் செய்து கொண்ட சுய அழித்தல்களை வெறுமே செழியன் மற்றும் அவரது பழக்கங்கள் (Habbits) சார்ந்த பிரச்சனையாகவே புலம்பெயர் மக்கள் மற்றும் அமைப்புகள், குறிப்பாக கனடாவில் பேசுவது தமக்கான பொறுப்புக் கோரல்களில் இருந்து விடுபடுகின்ற; சுயவிமர்சனங்களைத் தட்டிக்கழிக்கின்ற பாங்காகவே நான் பார்க்கின்றேன்.
(4)
பொறுப்புக்கோரல் என்று வருகின்றபோது செழியனை எப்படிப் புரிந்துகொள்வது என்பது மீண்டும் குழப்பமாகவே உள்ளது. ஈழத்தில் தான் சார்ந்திருந்த அமைப்புகள், இயக்கங்களில் தொடர்ந்து பொறுப்புணர்வுடன் உரையாடி இயங்கிவந்தவர் செழியன். அவர் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த ஆரம்ப காலங்கள் பற்றிய அவரது மற்றும் அவர் நண்பர்களது குறிப்புகளிலும் அவரது இத்தன்மையைக் காணமுடிகின்றது. ஆனால் இலக்கியத் தோட்டத்தின் செழியன் முக்கிய வகிபாகம் வகித்ததாக அ,முத்துலிங்கம் அவர்கள் குறிப்பிடுகின்றார், காலம் இதழிலும் முக்கிய வகிபாகம் செழியனுக்கு இருந்ததுடன் அவர் நெடுங்காலம் அதன் உதவி ஆசிரியராக இருந்ததாகவும் காலம் செல்வம் அவர்கள் குறிப்பிடுகின்றார். ஆனால் இவை இரண்டும் பற்றிய விமர்சனப் பூர்வமான பார்வையுடன் அணுகியவர்களுக்கு செழியன் பொறுப்பாக எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. அந்த அமைப்புகளில் தான் இருப்பது கூட தனக்குத் தெரியாது என்று அவர் நகைச்சுவை என்ற போர்வையுடன் அளித்த பதில்கள் உண்மையில் ஒருவித தட்டிக்கழித்தல்களே! அதை ஏன் செழியன் செய்தார் என்று இன்றும் தெரியவில்லை.
(5)
செழியனைப் பற்றிக் குறிப்பிடுகின்றபோது முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய விடயம் அவர் வெவ்வேறு வேலைத்திட்டங்களுக்கும் அவற்றில் ஈடுபட்டவர்களுக்கும் கொடுத்த ஆதரவு பற்றியதாகும். ரொரன்றோவில் இளையவர்களாக நாங்கள் பொதுவேலைகள், இலக்கியக் கூட்டங்கள் என்பவற்றில் ஈடுபடத்தொடங்கியபோது அதற்கு முழுமனதுடன் ஆதரவளித்து எம்மை ஊக்குவித்த மிக மிகச் சிலரில் செழியனும் ஒருவர். நாம் ஒருங்கிணைத்த கூட்டங்கள் என்று மாத்திரம் என்றில்லாமல் நான் கலந்துகொண்டு பேசிய பல்வேறு கூட்டங்களில் தேடி வந்து கைகொடுத்துப் பேசும் செழியனின் இயல்பும் அவரது மென்மையான குளிர்ந்த கைகுலுக்கல்களும் இப்போதும் மனதில் இருக்கின்றன,.
கணேசன் ஐயரின் ஈழப்போராட்டதில் எனது பதிவுகள் நூல்வெளியீட்டுவிழா நடந்தபோது நாம் இருவரும் உரையாற்றி இருந்தோம். நான் பேசி அவையை நோக்கி வந்தபோது கைகுலுக்கி உற்சாக வார்த்தைகளை உடனே தந்தவர்கள் செழியனும் ஸ்ரீஸ்கந்தனும். இவர்கள் இருவரும் சொன்ன வார்த்தைகள் என் தொடர்ச்சியான இயக்கத்திற்கு வழிதந்தவை. இதையொத்த அனுபவங்களை நண்பர்கள் சிலரும் என்னுடன் பகிர்ந்துள்ளார்கள். அவர்களும் அதைப் பொதுவில் பகிரும்போது செழியனுக்கு அடுத்த தலைமுறையின் செயற்பாடு பற்றி இருந்த ஆக்கபூர்வமான நிலைப்பாடுகள் இன்னும் தெளிவாகும்.
அதுபோல நான் செயற்படும் தளங்களில் ஒன்றான நூலகம் நிறுவனத்திற்கு நெருக்கடியான காலகட்டங்களில் கணிசமான தொகை நிதிப்பங்களிப்புகளை வழங்கியவராகவும் செழியன் இருந்துள்ளார். செழியனது தனிப்பட்ட பொருளாதாரநிலை பற்றி நான் அதிகம் அறிந்தவனல்ல; ஆயினும் பல்வேறு பொது விடயங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் தாரளமாக அவர் பொருளுதவி செய்ததை அறிவேன். செழியனது மரணத்திற்குப் பின்னர் செழியனது வீழ்ச்சி என்று திரும்பத் திரும்பப் பேசியவர்கள் செழியனது இந்தப் பரிமாணத்தினைக் குறிப்பிடவேயில்லை என்பதையும் இங்கே கட்டாயமாகப் பதிவுசெய்யவே வேண்டும்.
(6)
செழியனுடனான எனது உறவு அனேகம் இலக்கிய/கலை/அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் சந்திப்பது, பேசுவது கலைவது என்றே இடம்பெற்றது. சில தடவைகள் கூட்டங்களுக்கு அழைக்க அவருடன் பேசியிருக்கின்றேன். கணேசன் ஐயரின் சுயவரலாற்றுப் பதிவு, பெயரிடப்படாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பு, கோர்டன் வைசின் “The Cage” ஆகிய நூல்கள் குறித்த எனது கட்டுரைகள் குறித்துப் பேச அவர் அழைத்திருந்தார். நூலக நிறுவனத்திற்காக வாய்மொழி வரலாறு செய்வதற்காக அவருடன் தாய்வீடு டிலிப்குமார் ஊடாக பேசி பின்னர் நான் தொடர்புகொண்டேன். மகிழ்ச்சியுடன் உடன்பட்டிருந்தார். ஜனவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் ஒரு திங்களன்று கதைத்திருந்தேன். வாய்மொழி வரலாற்றினைப் பதிய எமக்கு உகந்த நாளாக புதன் / வியாழக் கிழமையைக் குறிப்பிட்டிருந்தேன். அதனை உறுதி செய்ய மீண்டும் தொடர்புகொண்டபோது அவரைத் தொலைபேசியில் பிடிக்கமுடியவில்லை. சில நாட்களின் பின்னர் தான் செழியன் தனது கடைசிப் பயணத்திற்காக வைத்தியலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார் என்பதை அறிந்துகொண்டேன்.
இளவயதிலேயே சமூகப் போராட்டங்களில் ஈடுபட்டு அரசியல் மயப்படுத்தப்பட்ட செழியன் போன்றவர்களும் அவர்கள் தலைமுறையில் கணிசமானவர்களும் செயற்பாட்டுத் தளத்திலிருந்து அனேகம் ஒதுங்கிவிட்ட நிலையில் அர்ப்பணிப்பும் அரசியல் பட்டறிவும் கொண்ட அந்தத் தலைமுறையினரின் கூட்டு அனுபவத்தினதும் வழிகாட்டலினதும் இழப்பினை எப்படி ஈடுசெய்வது என்று கலந்தாய்வது சமகாலத்தின் முக்கிய தேவைகளில் ஒன்றாக இருக்கின்றது. செழியன் வாழ்வார், ஒரு விதத்தில் முன்மாதிரியாகவும் இன்னொரு விதத்தில் வகை மாதிரியாகவும்!
1. ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி (2018) அன்று தோழமை என்றொரு சொல் என்கிற செழியன் நினைவு ஒன்றுகூடலும் நினைவு மலர் வெளியீடும் ரொரன்றோவில் இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள், செழியன் பற்றிய நினைவுகள், மருத்துவமனையில் கடைசியாக அவரை எஸ்.கே. விக்னேஸ்வரன் அவர்களுடன் சென்றுபார்த்தபோது இருந்த செழியனின் நிலை போன்ற பல்வேறு விடயங்களுடன் செழியன் எப்படி நினைவுகூரப்படுகின்றார் என்பதுவும் தொடர்ச்சியாக மனதிற்கு உழன்றபடியே இருக்க, அடுத்தநாள் ஏப்ரல் 30 அன்று எழுதிய குறிப்பு இது.
2. இந்நிகழ்வின் ஒளித்தொகுப்பினை வடலி தளத்தில் காணலாம். அதற்கான இணைப்பு