கலைஞர் என்பது ஒரு சொல்லல்ல…

kalainjarகலைஞர் எழுதிய வசனங்களில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் ராஜாராணி திரைப்படத்தில் அவர் எழுதி இடம்பெற்ற ”காவேரி தந்த தமிழகத்துப் புதுமணலில் கரையமைத்து சேர சோழ பாண்டி மன்னர் கோபுரத்துக் கலசத்தில் யார் கொடிதான் பறப்பதென்று இன்று போல் போரிட்டுக்கொண்டிருந்த காலமது…” என்று தொடங்குகின்ற வசனமாகும்.

கெடுக சிந்தை, கடிது இவள் துணிவே என்று தொடங்குகின்ற புறநானூற்றுப் பாடலுக்கு உரையாக சங்கத்தமிழ் என்கிற கலைஞரின் நூலில் இந்த வசனகவிதை இடம்பெற்றிருந்தது. நான் படித்து இன்புற்ற கலைஞரின் எழுத்து என்று சங்கத்தமிழினையே சொல்வேன்.

கனடா வந்த புதிதில், திரைத்துறையினர் கலைஞரின் பவள விழாவினை நடத்தியிருந்தனர். அதில் இந்த வசனத்தை நடிகர் சிவகுமார், கமல்ஹாசன் (ஓரிரு வரியை), சிவாஜி ஆகியோர் சொல்ல இறுதியில் கலைஞரும் சொல்லி இருப்பார். அந்த நிகழ்வின் ஒளிநாடாவினை நட்சத்திரங்கள் கூடி சூரியனுக்கு எடுத்த விழா என்று பெயரிட்டு எனது பிரத்தியேக சேகரிப்பில் கவனமாக வைத்திருந்தேன். எழுத்தாளராகவும் அரசியல்வாதியாகவும் மிகச் சிறிய வயதில் எனக்கு, வாசிப்புப் பழக்கம் ஏற்பட்ட காலம் முதலே அறிமுகமானவர் கலைஞர். ஏதோ ஒருவிதத்தில் அவர் பாதிப்பு என்னில் இருக்கவே செய்கின்றது.

கலைஞரின் நினைவாக ராஜாராணி படத்தில் இந்த வசனம் இடம்பெறும் காட்சியில் பேசப்படும் வசனத்தையும் அதன்  காணொலியையும் இத்துடன் இணைக்கின்றேன்.

//தந்தையையும் கணவனையும் போரிலே பலி கொடுத்த பெண் ஒருத்தி, தன் மகனையும் போருக்கு அனுப்பிய புறக் காட்சி வேண்மாள்!
கொஞ்சம் கேளேன்; நானே எழுதி இருக்கிறேன் புதிய நடையில்.

காவிரி தந்த தமிழகத்து புது மணலில் களமமைத்த சேர சோழ பாண்டி மன்னர், கோபுரத்து கலசத்தில் யார் கொடிதான் பறப்பதென்று இன்று போல் போர் தொடுத்து கொண்டிருந்த காலமது.

அந்நாளில் போர் களத்தில், தாய்நாடு காக்க தாவி பாய்ந்து செத்தார் தந்தை என்ற சேதி கேட்டு, தனல் மேல் மெழுகானாள் தமிழகத்து கிளி ஒருத்தி.
அனல் போலும் கண்ணுடைய அயலூர் சென்றிருந்த அவள் கணவன் வந்திட்டான்.
புனல் போக்கும் விழியாலே அவள் போர் செய்தி தந்திட்டாள்.
தந்தை களம் பட்ட செய்திக்கோ தவித்தாய்? என்றான்.
இல்லை அன்பா! முல்லை சூழ் இந்நாட்டு படைக்கோர் வீரர் குறைந்திட்டால், நல்ல உடையில் ஓர் கிழிசல் வந்தது போலன்றோ? இனி தடையின்றி நுழைவரே பகைவர் என எண்ணினேன்.
அடைபட்ட கண்ணீர் அணை உடைத்தது அத்தான் என்றாள்.
அவன் குகை விட்டு கிளம்பும் ஒரு புலியென, புகை விட்டு குமுறும் எரிமலையென, பகை வெட்டி சாய்க்கும் வாள் எடுத்தான்.
சூழ் உரைத்தான். சுடர் முகம் தூக்கினான்.
சுக்கு நூறுதான் சூழ்ந்து வரும் படை என்றான்.
நாடு மீட்காமல் வீடு திரும்பேன் என்றான்.
நங்கையோ நகை முழக்கம் செய்து நடந்திடுக கண்ணே! என்றாள்.
திருப்பி வருவேனோ இல்லையோ, எதற்கும் இப்போதே ஒரு முத்தம்.
இந்தா திரும்பு என்றான்.
கொடுத்தான்.
பின் தொடுத்தான் பகைவர் மீது பாணம்.
போர் போர் போர் எனவே முழங்கிற்று முரச ஒலி.
பார் பார் பார் அந்த பைங்கிளியின் உரிமையாளன் பகைவர் மீது பாய்ந்து கொல்லும் வீரம் பார் என்று பட்டாளத்து தோழர் எல்லாம் வியந்துரைத்தார்.
அந்த கட்டாணி முத்தாளும் கண் வழியே சிரித்திட்டாள், களத்தினிலே அத்தானுக்கு அடுக்கடுகாய் குவிந்து வரும் வெற்றிகளை கேட்டு விட்டு.
கோட்டைகள் விடு பட்டன.
எதிரியின் குதிரை கால்கள் உடை பட்டன.
வேழ படை முறிபட்டது.
வேல்கள் பொடி பட்டன.
என் கொற்றவன் படைகள் கொட்டும் பேரிகை கோடை இடியென கேட்குது கேட்குது என குதித்திட்டள்.
புது பண் அமைத்திட்டாள்.
வீரர்கள் வந்தனர்.
வெற்றி உன் கணவனுக்கே என்றனர்.
வேந்தனின் தூதுவர் வந்தனர்.
வாழ்த்துகள் வழங்கினர்.
வீட்டோரத்து தோழிகள் வந்தனர்.
வெற்றி நீட்டோலை வாசித்து மகிழ்ந்தனர்.
அந்த அழகி ஆனந்த கண்ணீர் பொழிந்தாள்.
அப்போது ஏன் அந்த மனிதன் வந்தானோ? இழவு செய்தி சொல்வதற்கு.
என் அருமை பெண் பாவாய்.
கண்ணல்ல கலங்காதே.
களச் செய்தி கடைசி செய்தி கேள் என்றான்.
அந்தோ! மாவிலை தோரணம் கட்டி, மண விழா மேடை தன்னில் வாழ்விலே ஒன்றானோம் என்று சொன்ன கண்ணாளன் மார்பிலே வேல் தாங்கி, நல்ல சாவிலே வீழ்ந்து விட்டான்.
ஆவிதான் போன பின்னும் உயிர் வாழும் ஆரணங்கு, அச்சடித்த தமிழ் பதுமை கூவி அழுதாள்.
கொத்தான மலர் அந்த குடும்பம்.
அதை கொத்தாமல் கொத்திவிட்ட கொடுஞ்சாவை பழித்தாள்.
இழித்துரைத்தாள்.
இனி என்ன மிச்சம் என்றும், கனி அழுகி போனதென்றும் கதறி அழுதாள்.
பனி வெல்லும் விழி காட்டி, பனை வெல்ல மொழியுரைத்து, பள்ளியறை கவி பாடும் நாளெல்லாம் மண் தானோ?
இனி இது தூங்காத கண் தானோ? என அழுதாள் அத்தானின் பிணம் கிடக்கும் களம் நோக்கி தொழுதாள்.
சோகத்தால் வீழ்ந்து விட்ட அவள் காதில், வெற்றி வேகத்தால் பகைவர் தட்டும் போர் முரசம் பட்டதுதான் தாமதம்.
கெட்டதுதான் கெட்டது நம் குடி. முழுவதுமே பட்டொழிந்து போகட்டும் என எழுந்தாள்.
மட்டில்லா புகழ் கொண்ட நாட்டுக்கே அன்றி வீட்டுக்கோ வாழ்வேன்? என்றாள்.
வட்டிலினால் நாள் பார்க்கும் விதம் கொண்ட தமிழ் நாட்டு மாதரசி, தொட்டிலிலே இட்டு தான் வளர்த்த தூய செல்வன், அட்டி இன்றி கல்வி கற்க ஆலமரத்தடி ஆசானிடம் சென்றிருக்கும் நினைவு கொண்டாள்.
அங்கு சென்றாள். அம்மா என்று பாய்ந்தான் அழகுமிகு மழலை மொழி அன்பு தங்கம்.
அப்பா, தாத்தா ஊர் திரும்பினாரோ என்றான்.
திரும்பி வந்து சாவூர் சென்று விட்டார்.
கரும்பே நீயும் வா என அழைத்தாள்.
என்ன வாங்கி வந்தார் என்றான்.
மானம்! மானம்! அழியாத மானம் என்றாள்.
மகனே அதை சுவைக்க நீயும் வருக என்றாள்.
வந்து விட்டான் குல கொழுந்து.
குடும்ப விளக்கு எரிந்து கொண்டே கூறுகின்றாள்.
எதிரிகளின் படை எடுப்பால் நம் குடும்பம், தலை உதிர்த்து விட்ட மரமாகி போனதடா தம்பி,
கவலை இல்லை.
களம் சென்றார்.
மாண்டார்.
ஆனால், இந்த நிலம் உள்ள வரையில் மானம் காத்தார் என்ற பெயர் கொண்டார்.
மகனே நீயும் உன் தோளிலே பலம் உள்ள வரையில் பகையை சாடு.
பரணி பாடு.
இது உன் தாய் திருநாடு.
உடனே ஓடு என தாவி அணைத்து தளிர் மகன் தன்னை, சீவி முடித்து சிங்காரித்து, ரத்த காவி படிந்த வாள் கொடுத்து, சென்று வா மகனே செறு முனை நோக்கி என வாழ்த்தி விட்ட திருவிடத்து காட்சி தன்னை போற்றி பாடாதார் உண்டோ திருமகளே இப் பூ உலகில்?//

மேலே நான் குறிப்பிட்ட கலைஞரின் பவளவிழாவில் “முதல்வர் வாழ்க, கலைஞர் வாழ்க” என்று தொடங்குகின்ற கலைஞர் என்பது ஒரு சொல்லல்ல அரைநூற்றாண்டு வரலாறு என்கிற பாடல் ஒன்றும் பாடப்பட்டது.  அதற்காக ஒளி / ஒலி வடிவினை எங்கேனும் பெறமுடியுமா என்பதையும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த வசனம் இடம்பெற்ற திரைப்படக் காட்சி

மேற்குறித்த நிகழ்வில் நடிகர் சிவாஜி பேசுகின்ற காட்சி

 

மேலே குறிப்பிடப்பட்ட வசனம் http://velpaandi.blogspot.com/2015/07/blog-post.html என்கிற பக்கத்தில் இருந்து பெறப்பட்டது

One thought on “கலைஞர் என்பது ஒரு சொல்லல்ல…

Add yours

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: