ஈரோட்டின் பகுதியாகிய கருங்கல்பாளையம் என்ற ஊரில் இயங்கிவந்த வாசகசாலையின் 9வது ஆண்டுவிழா நிகழ்வினைப் பற்றி குடியரசு இதழில் 1925 இல் வெளிவந்த துணைத்தலையங்கம் விடுதலைக்குப் போராடிக்கொண்டிருக்கின்ற மக்கள் மத்தியில் வாசகசாலைகளுக்கு இருக்கக் கூடிய அவசியத்தையும் சிறு சங்கங்கள் தொடர்ச்சியாக செயற்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்துவதாக அமைகின்றது. அன்றைய இந்திய – தமிழகச் சூழலில் கூறப்பட்ட இந்த விடயங்கள் இன்றைய ஈழத்துச் சூழலுக்கும் பொருந்தும்; தொடர்ச்சியாக சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் இதன் சாரத்தினை உள்வாங்கிக்கொள்வது அவசியம் என்று கருதின்றேன். பல்வேறு சந்தர்ப்பங்களில் பெரியார் சர்வசாதாரணமாக தனக்கேயுரிய பாணியில் கூறிச்சென்ற விடயங்கள் அனுபவம் நிறைந்த வழிகாட்டிகள்!
இத்துணைத் தலையங்கத்தின் முக்கியமான பகுதியாக நான் கருதுவதை இத்துடன் கீழே இணைத்துள்ளேன்
-அருண்மொழிவர்மன்
சுயராஜ்யப் போராட்டம் என்பது ஒருபுறம் நடந்துவருகையில் நாட்டாரின் கவனத்தை இச்சிறு விஷயங்களில் புகுத்துதல் சரியாமோ என்று ஐயுறலாம். தனிமனிதன், தனிக்குடும்பம், தனிப்பட்ட ஊர் இவர்களின் முன்னேற்றத்தின் வாயிலாக தேசத்தின் முன்னேற்றத்தை நாடுவதே எமது நோக்கமென்று தொடக்கத்திலே கூறியுள்ளோம். முக்கியமாக ஸ்ரீமான் ஆச்சாரியார் (இராஜாஜி) தமது முடிவுரையில் எடுத்துக்காட்டிய வண்ணம், நமது நாட்டின் தற்போதைய நிலைமையில் வாசகசாலைகளும், இராப் பள்ளிக்கூடங்களும், இராட்டைச் சங்கங்களுமே பெரிதும் வேண்டற்பாலன. ஒரு தேசத்தின் சுதந்திர போராட்டத்தில் சிறிதுகாலம் பெருங்கிளர்ச்சியும், உத்வேகமும் தோன்றுவதுண்டு. இக்காலத்தில் பெருங்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் மிகுந்திருக்கும். சிறு சங்கங்கள் ஒளி மழுங்கித்தோன்றும். ஆனால் இவ்வுத்வேகக் கிளர்ச்சி என்றும் நீடித்திருக்க முடியாது. பெருங்கிளர்ச்சியின் வேகம் குன்றுங்காலத்து நாட்டில் சோர்வு மிகுந்திருப்பது இயல்பு. இக்காலத்தில் சிறு சங்கங்களினாலேயே நாட்டிற்கு நீடித்த நன்மைகள் விளையும். இச்சிறு சங்கங்களின் மூலமாகவே மக்களின் குணத்தைப் பண்படுத்தவேண்டும். சத்தியம், உறுதி, தைரியம், விடாமுயற்சி முதலிய உயர் குணங்களை இச்சங்கங்களின் மூலமாகவே வளர்த்தல்கூடும்.
ஆகவே, நமது நாட்டின் தற்போதைய நிலைமையை உய்த்துணர்தோர் இன்று நமது பெருந்தேவை சிறு சங்கங்களே என்பதை எளிதில் அறிந்துகொள்ளலாம். காந்தியடிகள் நிர்மாண திட்டத்தை பெரிதும் வலியுறுத்தி வருவதும் இக்கருத்தைப் பற்றியே என்பது எமது உறுதி. ஆர்ப்பாட்டமும் உற்சாகமும் அடங்கிய இக்காலத்தில் பொதுஜனங்களிடையே திறமை, தைரியம், சத்தியம் முதலிய உயர்குணங்களை வளர்த்து நிலையான அடித்தளத்தின் மீது சுயராஜ்ய மாளிகையை எழுப்புவதற்கான திட்டம் நிர்மாண திட்டமாகும். இத்திட்டத்தை நிறைவேற்றி வைப்பதற்குச் சிறு சங்கங்கள் பெருந்துணையாயிருக்கும். ஆகவே தேசத்தின் நன்மைக்கு இவ்வளவு இன்றிமையானதொரு விஷயத்தில் தமிழ்நாட்டுக்கு வழிகாட்டும் கருங்கல்பாளையம் வாசகசாலை நிர்வாகிகளுக்குத் தமிழ்நாட்டார் கடமைப்பட்டுள்ளார்.
17-05-1925 குடியரசு துணைத் தலையங்கம்
Leave a Reply