தெணியான் ஈழத்தின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராவார். இவரது இயற்பெயர் கந்தையா நடேசு என்பதாகும். ஈழத்தில் வல்வெட்டித்துறையில் இருக்கின்ற பொலிகண்டி என்ற கிராமத்தில் “தெணி” என்ற இடத்தில் பிறந்தவர். அவரது வீட்டின் பெயரும் தெணியகம் என்பதாகும். இன்று ஈழத்தில் கிராமங்களுக்குப் பெயர்கள் இருப்பதுபோல முன்னர் ஒவ்வொரு காணிகளுக்கும் வீடுகளுக்கும் பெயர்கள் இருந்தன என்பதை அறிந்திருப்பீர்கள். அந்தப் பெயரினையே தனது புனைபெயராகவும் தெணியான் வரித்துகொண்டார். தெணியான் முற்போக்கு இயக்கத்துடன் சேர்த்து அடையாளம் காணப்படுபவர். சமூக மாற்றத்துக்கான ஒரு கருவியாகவும் தூண்டியாகவும் இலக்கியத்தினைப் பயன்படுத்தவேண்டும் என்ற புரிதலுடன் அவர் இலக்கியத்தினையும் தன் எழுத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்பவர்.இந்தக் கட்டுரையில் உரையாட இருக்கின்ற ”இன்னொரு புதிய கோணம்” என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் தெணியான்
“எனது இளமைக்காலம் முதல் சமூக விவகாரங்களில் மிகுந்த அக்கறையுள்ள ஒருவனாக நான் இருந்துவருகின்றேன். சமூக அநீதிக்கு எதிரான போராட்டங்களில் நான் ஈடுப்பாட்டுடன் பங்குகொண்டிருக்கின்றேன். எந்த வகையிலும் ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயம் உருவாகவேண்டும் என்பதே என்றும் எனக்குரிய இலக்கு. அந்த இலக்கினைச் சென்றடைவதற்கான உறுதுணையான இலக்கியங்களைப் படைப்பது எனது எழுத்தின் பிரதான நோக்கம்.
இலக்கியங்களைப் படைப்பதற்கான கருப்பொருளை இந்த சமுதாயத்திடமிருந்து நான் பெற்றுக்கொள்ளுகிறேன். இந்த சமுதாயம் எனது களமாக விளங்குகின்றது. இந்த சமுதாயத்துக்கே நான் எழுதுகின்றேன். எடுத்து சமுதாயத்தில் சில மாற்றங்களை உருவாக்கும், மன எழுச்சியைச் தோற்றுவிக்கும் என்பதனை நான் உறுதியாக நான் நம்புகின்றேன். அதனால் எனது இலக்கினைக் கருத்திற்கொண்டு தொடர்ந்து எழுதிக்கொண்டுவருகின்றேன்”
என்று குறிப்பிடுகின்றார்.
தெணியானின் எழுத்துகளைப் பற்றியதும் அவரது எழுத்துச் செயற்பாடுகள் பற்றியதுமான மிகச் சத்தியமான வார்த்தைகளாக அவரது இந்தப் பிரகடனத்தினைப் பார்க்கின்றேன். அதற்கு நியாயம் செய்யும் அனைத்துத் தன்மைகளையும் கொண்டதாக “இன்னொரு புதிய கோணம்” தொகுதி அமைகின்றது. 2007 நவம்பரில் பூமகள் வெளியீடாக வெளிவந்திருக்கின்ற இந்த தொகுப்பிலே 15 கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் கதைகள் 1971 முதல் 2007 வரையான மிக நீண்டகாலப்பகுதியில் எழுதப்பட்டிருக்கின்றன
பொதுவாக விமர்சனங்கள் செய்யும்போது பிரதியை நோக்குவதற்கும் (இந்தக் கட்டுரையை நான் வாசித்தது போன்ற) குறிக்கப்பட்ட ஒரு எழுத்தாளரின் எழுத்துக்களை ஆய்வுநோக்குடன் அணுகுகின்ற கருத்தரங்குகளுக்கும் வேறுபாடு இருக்கின்றது. மிகநீண்டகாலமாக, ஐம்பது ஆண்டுகளைத் தாண்டி எழுதிவருகின்ற தெணியான் போன்றவர்களின் எழுத்துகளைப் பற்றி ஆய்வுசெய்யும்போது ஒப்புநோக்கில் அணுகுவதும், சமூக வரலாற்றுப் பின்னணியைக் கருத்திற்கொண்டு ஆய்வுசெய்வதும் அவசியம். அவர்கள் சார்ந்துநின்ற கருத்துநிலை, அவர்களை வழிநடத்திய கருத்துநிலை என்பவற்றையும் அவர்களது கலை இலக்கியம் பற்றிய கொள்கைகள், சார்கைகள் என்பவற்றையும் அறிந்துகொள்வதன் மூலமாக அவர்கள் குறித்த முழுமையான ஒரு சித்திரத்தினை நாம் பெற்றுக்கொள்ளமுடியும்.
அந்த வகையில் தெணியானின் இலக்கியம், இலக்கியச் செயற்பாடு பற்றிய கொள்கைகளையும் அவரது முற்போக்கு இலக்கியத்தின் சார்பினையும் அறிந்துகொள்வது அவரது எழுத்துகளைப் புரிந்துகொள்ள உதவும். நூலக நிறுவனம், வாய்மொழி வரலாறுகளைப் பதிவுசெய்கின்ற நோக்கத்துடன் தெணியானின் மிக விரிவான வாய்மொழிவரலாற்றினைப் பதிவுசெய்திருக்கின்றது. நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக நீண்டுசெல்கின்ற அந்த வாய்மொழிவரலாற்றின் ஒலிவடிவம் நூலக நிறுவனத்தின் செயற்திட்டங்களில் ஒன்றான ஆவணகத்தில் பதிவேற்றப்பட்டிருக்கின்றது. சாதிய அடக்குமுறைகள் அவர் மீது பிரயோகிக்கப்பட்ட விதம், அதனைக் கம்பீரமாக தாம் எதிர்கொண்ட விதம் என்பவற்றை அந்தப் பதிவில் வெளிப்படையாகப் பதிவுசெய்கின்றார் தெணியான். தெணியானைப் பற்றிய விக்கிப்பீடியா பக்கத்தில் அவரது இயற்பெயரினை கந்தையா நடேசன் என்று பதிவுசெய்திருக்கின்றார்கள். ஆனால் தனது வாய்மொழி வரலாற்றுப் பதிவில் தனது பெயர் நடேசு, நடேசன் அல்ல என்றும் பெயரில் “ன்” என்பதை இணைத்து மரியாதைக்குறைவாக அழைக்கின்ற வழமை அன்றைய நாட்களில் இருந்தபோது, அதற்காக எதிர்வினையாகத் தனக்கு நடேசு என்றும் தன் மூத்த, இளைய சகோதரர்களுக்கு முறையே சிவபாக்கியம், நவரத்தினம் என்றும் பெயரிட்டார் என்றும் அறுதியாகத் தெணியான் குறிப்பிடுகின்றார். அன்றைய தலைமுறையைச் சேர்ந்த தெணியானின் தந்தையாருக்கு இருந்த பிரக்ஞையைப் புரிந்துகொள்கின்ற பொறுப்புணர்வில் இன்றைய விக்கிப்பீடியா தலைமுறை சற்றே இடரிவிட்டது என்றே சொல்லவேண்டும்.
தினகரன் பத்திரிகையை விநியோகிப்பவர் ஒருவர் தெணியானின் தந்தையின் வாடிக்கையாளராக இருந்திருக்கின்றார். அவரிடம் தினகரன் பத்திரிகை ஒன்றுக்குப் பதிவுசெய்து வைத்திருக்கின்றார் தெணியானின் தந்தையார். ஒவ்வொருநாளும் அந்த விநியோகஸ்தர் பத்திரிகையை தெணியானின் தந்தையிடம் கொடுப்பார். இவ்விதம் மிகச்சிறுவயதிலேயே தனது பிள்ளைகளுக்கு வாசிப்புப் பழக்கமும் கல்வியும் முக்கியம் என்று உணர்வேற்படுத்தியவராக தெணியானின் தந்தை இருந்திருக்கின்றார். சாகித்ய ரத்னா தெணியான் தன்னுடைய சிறுவயதில் கள்ளு விற்றவன் என்று தெணியான் இந்தப் பதிவில் செய்கின்ற கம்பீரமான அறைகூவலைக் கேட்டுப்பாருங்கள், அது சமூக விடுதலைக்கும் சமத்துவத்துக்குமாகப் போராடுகின்ற ஒவ்வொருவருக்கும் ஊக்குசக்தியாகும்.
இந்தத் தொகுப்பில் இருக்கக் கூடிய பல்வேறு கதைகள் எழுதப்பட்ட காலங்களில் சமூக விடுதலையை நெறிப்படுத்திய கருத்தியல்களும் நடைமுறைகளும் இன்று பல்வேறு தளங்களில் மாற்றமடைந்தும் விரிவடைந்தும் சென்றிருக்கின்றன. புரிதல்கள் மாறுபட்டிருக்கின்றன. ஆயினும் அடிப்படைகள் மாறவில்லை. அந்த ஆதார முடிச்சுகளைத் தன்கதைகளில் தொட்டுச்சென்றிருக்கின்றார் தெணியான். ”வாழத்துடிக்கின்றாள்” என்று ஒரு கதை இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றது. வறுமையின் காரணமாக தனக்கு எவ்விதத்திலும் பொருத்தம் இல்லாத ஒருவனுக்கு, அவன் பணக்காரன் என்ற ஒரே காரணத்துக்காக திருமணம் செய்துவைக்கப்படுகின்றாள் சிவகாமி. தொடர்ந்து கணவனுடன் சேர்ந்து வாழ இயலாமல் பெற்றோரிடம் திரும்பிச் செல்கின்றாள் சிவகாமி. ”ஒரு பொம்பிளைக்குச் சோறும் சீலையும் மட்டும் ஒரு புரியன் குடுத்தால் போதுமே” என்று சிவகாமியைக் கூட்டிச்செல்ல வந்த மைத்துனியிடம் சிவகாமியின் தாய் கேட்கிறாள், சிவகாமியின் கணவனின் ”ஆண்மைக்குறைவு” இதன் மூலமாகக் காட்டப்படுகின்றது. ஆயினும் குடும்ப நிலையை கருத்திற்கொண்டு மீண்டும் கணவனுடன் வாழச் செல்கின்றாள் சிவகாமி. இந்தக் கதையின் இறுதிப்பகுதியைப் பின்வருமாறு எழுதுகின்றார் தெணியான்,
“தாபக் கனல் சிறுகச் சிறுகவளர்ந்து கவாலித்து, கொழுந்துவிட ஆரம்பித்ததும் சிவகாமி அதில் ஆகுதியாக விழுந்தாள். எப்படியோ அவள் ஏக்கம் தணிந்து சிவகாமி வாழ ஆரம்பித்த பின்னர்…
ஒரு நாள் இரவு, சிறுநீர் கழிப்பதற்காகச் சிவகாமியின் மைத்துனி வீட்டுக் கோடிப்புறத்துக்கு வந்தாள். யாரோ இருவருடைய பேச்சுக் குரல் கேட்டுத் திடுக்கிட்டாள். கையில் எடுத்து வந்த “ரோஜ்” ஒளியைப் பாய்ச்சிப் பிடித்த வண்ணம் “யாரது” என்று அதட்டினாள்.
அவள் அதட்டலையும் வெளிச்சத்தையும் கண்டு யாரோ ஒரு ஆண் அங்கிருந்து எழுந்து துள்ளிக் குதித்து ஓடுகிரான்.
சிவகாமி கலைந்திருந்த சேலையைச் சரிசெய்துகொண்டு சர்வாங்கமும் அச்சத்தால் கிடுகிடுத்து நடுங்க, வெட்கித் தலை குனிந்து நிற்கின்றாள்.
சிவகாமியின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது.
சிவகாமியின் மைத்துனி மெல்ல அவளை நெருங்கி வந்து “அவக்:கென அவளை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொள்ளுகின்றாள்.”
இந்தக் கதை மல்லிகை ஆண்டு மலரில் 1973 இல் வெளிவந்திருக்கின்றது. ஆண் பெண் உறவுச் சிக்கல்கள், அதில் பாலியல் சார்ந்த பிரச்சினைகள், வர்க்கங்கள் தொழிற்படும் விதம் ஆகியன ஒரு கண்ணியாக இந்தக் கதையில் பிணைந்திருக்கின்றன.
வாழத்துடிக்கின்றாள் கதையில் சிவகாமியைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகளுடனுன் அக்கறையுடனும் எழுதியிருக்கின்ற தெணியான் இதே தொகுப்பில் இருக்கின்ற ”கூரை ஒன்றுதான்” என்கிற கதையில் முரணான ஒரு களத்தை உருவாக்குகின்றார். இந்தக் கதையில் நேர்முகப் பரீட்சைக்காகக் கொழும்பு வருகின்ற குமரேசன் தனது மாமா வீட்டில் தங்குகின்றான். மாமா பணவசதி படைத்தவர். குமரேசன் மாமா வீட்டுடன் விலகலை உணர்கின்றான். அவர்கள் வாழ்க்கைமுறையை போலித்தனத்தனமானதாகக் கருதுகின்றான். குமரேசனின் மாமிக்கும் வீட்டு ட்ரைவருக்கும் இடையில் உறவு இருப்பதைக் குமரேசன் கண்டுகொள்கின்றான். தனது தாயுடன் ஒப்பிட்டு இருமையை உணர்கின்றான், குடிகாரனான தனது தந்தை, எவ்வளவோ கொடுமைப்படுத்தியபோதும், எவ்வளவோ நிஷ்டூரங்களுக்குப் பின்னரும் தனது தாய் எவ்வளவு விசுவாசமாக தனது தந்தைக்கு இருந்தாள் என்று யோசித்துவிட்டு அன்று மாலையே மாமாவிடம் மாமிக்கும் ட்ரைவருக்கும் இடையில் உறவிருப்பதைச் சொல்லத் தொடங்க மாமா இடைமறித்து, “மூடு வாயை, நாகரிகம் தெரியாதவன், அதெனக்கெப்பவோ தெரியும். அதற்கென்ன, நீ நாட்டுப்புறத்தான் தானே!” என்று திட்டுகின்றார்.
இந்த இரண்டுகதைகளையும் சில அடிப்படைகளில் ஒப்புநோக்கலாம் என்று கருதுகின்றேன். ”வாழத்துடிக்கின்றாள்” என்கிற கதையில் வருகின்ற சிவகாமியைப் பற்றிய விவரணம் அவள் மீது அக்கறை கொண்டதாகவே எழுதப்பட்டிருக்கின்றது, அவளது உறவு மீறல் குறித்து, அவளது தரப்பு சார்ந்தே அணுகுகின்ற ஒரு ஆயத்தப்படுத்தலைக் கதை சொல்லப்படும் போக்கு உருவாக்கிவிடுகின்றது. ஆனால், ”கூரை ஒன்றுதான்” கதையில் குமரேசனின் மாமிக்குப் பெயர் கூட இல்லை, கதை முழுவதும் அருணாசலத்தாரின் மனைவியாகவே அந்தக் கதாபாத்திரம் குறிப்பிடப்படுகின்றது. எந்த நியாயமும் உணர்த்தப்படாமல், ஒழுக்கம் தவறுதல்களாகவே அந்தப் பாத்திரம் வளர்த்துச் செல்லப்படுகின்றது. இந்தச் அசமநிலை எவ்விதம் உருவானது என்று நாம் கேட்கவேண்டியிருக்கின்றது. அடுத்ததாக, பணக்கார வீட்டுப் பெண்கள், அந்த வீடுகளில் வேலை செய்கின்றவர்களிடம் உறவு கொள்வது குறித்து தமிழிலக்கியத்தில் தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வருகின்றமை பல்வேறு இலக்கியப்படைப்புகளில் எழுதப்பட்டிருகின்றது, இதைப்பற்றியும் சமூக ஆய்வையும், இவ்வாறு தொடர்ச்சியாக எழுதுவதற்குப்பின்னால் இருக்கின்ற மனநிலை குறித்தும் நாம் பகுப்பாய்வு செய்யவேண்டும்.
தெணியான் சமூக மாற்றத்திற்கான கருவியாகவே தன் இலக்கியச் செயற்பாட்டினைச் செய்பவர், அதற்கான உரையாடல்களை தன் இலக்கியப் படைப்புகளூடாக அவர் வெளிப்படுத்துபவர். அந்தநோக்குடன் எழுதும்போது கதைகளுக்கான கருத்துகளை முதலே தீர்மாணித்துவிட்டு அவற்றின்பொருட்டே எழுதும்போது சிலசமயங்களில் கருத்துகளே அங்கே முதன்மைபெற்று அவற்றுக்கான கலைத்துவம் குன்றிவிடுவது உண்டு. இந்தத் தொகுப்பில் இருக்கின்ற தீராவிலை, மனிதன் உள்ளே இருக்கின்றான், இந்திரன்கள், இன்னொரு புதிய கோணம் ஆகிய கதைகளில் இத்தகைய தன்மை இருக்கின்றது. ஆனால், கலைத்துவம் குறைந்துவிட்டது என்பதற்காக அவற்றின் தேவையை நாம் மறுத்துவிடமுடியாது. தீராவிலை என்கிற கதையில் மருத்துவராக இருக்கின்ற ராதாவின் காதலன் முரளி ஒரு பொறியியலாளன். காதல் உறவு என்றாலும் திருமணம் நோக்கிச் செல்கின்றபோது சம்பிரதாயமான திருமணப் பேச்சுகளும் எதிர்பார்ப்புகளும் வருகின்றன, தான் அப்படி எதிர்பார்க்கவில்லை ஆனால் அப்பா, அம்மாவுக்காகத்தான் என்ற தோரணையில் முரளி சீதனம் பற்றிய தனது குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை ராதாவிடம் தெரிவிக்கின்றான். “ஒரு இஞ்சினியருக்கு 75/80 இலட்சம் சீதனம் கேட்கினம், ஆனால் எங்கட அப்பா அம்மா அவ்வளவு கேட்கவில்லை, 40 இலட்சம் தான் கேட்கினம் என்கிறான் முரளி. அவனிடம் முரளி, இப்ப டொக்ரருக்கு எவ்வளவு சீதனம் கேட்கினம் என்று கேட்க, 90 /100 என்று சொல்கின்றான் முரளி, ஆகக்குறைந்தது என்று ராதா கேட்க 50 இலட்சம் என்கிறான். அப்ப, நான் டொக்ரர், நீங்கள் எஞ்சினியர் எனக்குப் பத்துலட்சம் நீங்கள் தான் தரவேண்டும் என்கிறாள் ராதா. கல்யாணம், சீதனம் என்பது எப்படி ஆழமாக, ஒரு வணிகமாக இன்று மாறிவிட்டிருக்கின்றது என்பதுடன் அதன் அபத்தத்தையும் நேரடியாகக் கேள்விக்குள்ளாக்குகின்றது இந்தக் கதை.
அதேநேரம் ”அப்பா ஏன் அழுதார்” என்ற கதையில் குடும்பத்தில் நான்கு பிள்ளைகளும் பெண்களாகவே பிறந்துவிட சீதனம் போன்ற காரணிகளால் திருமண வயது தாண்டியும் முதல் மூன்று பெண்களுக்கும் திருமணம் நடக்காமல் இருக்கின்றது. பழைய சம்பிரதாயங்களில் மூழ்கிப்போன அவர்களின் தந்தை, வீட்டின் கடைசி மகள் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படிக்கின்ற தன் காதலனை வீட்டிற்குள் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்ய ஆயத்தங்களைச் செய்துவிடுகின்றாள். அதை தன் தமக்கையிடம் கூறும்போதும் அப்பா இதை ஏற்றுக்கொள்ளுவாரா என்று கேட்க, கல்யாணம் செய்துகொள்ளப் போறது நான், அப்பாவுக்கா கல்யாணம் என்று கேட்கிறாள். பின்னர், “என்ர வாழ்க்கையைத் தீர்மாணிக்கவேண்டியது நான் தான். என்னை யாரும் தடுக்க முடியாது” என்றும் சொல்லிக்கொள்ளுகின்றாள். ஆனால் இறுதியில் அவளது தாய், தந்தையிடம் சொல்லிவிட, அவர் “இல்லக் கனகம் அவளப் போகவிடு, அவள் விருப்பம் போலப் போகவிடு என்கிறார். இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த மகள், “அப்பா, ஒருபோதும் அப்படிச் இனிச் செய்யப் போவதில்லை, எனது முடிவை மாற்றிக்கொண்டுவிட்டேன்” என்கிறாள். பெண்களைத் துணிச்சல் மிக்கவர்களாகவும், விடுதலை உணர்வுள்ளவர்களாகும் தொடர்ச்சியாகக் காட்டிவிட்டும் இறுதியில் அவர்களை சமூக வழமையுடன், அது கொண்டிருக்கக் கூடிய அடக்குமுறையப் பேணுகின்ற ஒழுங்குகளுடன் சமரசம் செய்துகொள்பவர்களாகக் காட்டிக்கொள்ளுகின்ற இத்தகைய போக்கு 70களிலும் 80களிலும் தமிழ்த்திரைப்படங்களிலும் இலக்கியங்களிலும் அடிக்கடி நிகழ்ந்த ஒன்று. சுவாரசியமான விடயம் என்னவென்றால், அண்மையில் புதுசு இதழ்களின் முழுத்தொகுப்பினை வாசித்துகொண்டிருந்தபோது முதலாவது புதுசு இதழில் (1980 இல் வெளியானது) சஞ்சயன் பக்கங்களில் வந்திருந்த அவள் அப்படித்தான் திரைப்படம் குறித்த குறிப்பில் திரைப்படத்தின் இந்தப் போக்குக் குறித்து விமர்சிக்கப்பட்டிருந்தது. ஆயினும் 2004 மல்லிகையில் இடம்பெற்றிருக்கின்றது தெணியானின் இந்தக் கதை என்பதை ஒரு குறிப்பாகவேனும் பதிவுசெய்யவேண்டி இருக்கின்றது.
இந்தத் தொகுப்பில் இருக்கின்ற கதைகளில் மிக விரிவாக உரையாடவேண்டிய கதை ”தீண்டத்தகாதவன்” என்கிற கதை. இந்தக் கதையில் வருகின்ற பிரதான பாத்திரம் சிறுவயதில் கோயில் மனேஜரால் அவமானத்தப்படுத்தப்படுகின்றான். அந்த அவமானப்படுத்தல் என்பது கதையில் பல்வேறு இடங்களில் தீண்டாமை சார்ந்ததாகவே காட்டப்படுகின்றது. தன்னுடன் ஒரே வகுப்பில் படிக்கின்ற மனேஜரின் மகனைப் பார்த்து அவன் சிரித்ததற்கே மனேஜருக்குக் கோபம் வருகின்றது, “ஏன்ரா நிற்கிறாய், நீ வந்தால் ஒண்டிலையும் தொடக்கூடாது, தொட்டால் முதுகுத் தோல் உரிச்சுப் போடுவன்” என்று சொல்வதுடன் தனது மகனிடமும் “அவனுடன் பேசவும் கூடாது, அவன்ர மேலில தொடவும் கூடாது” என்றும் கூறுகின்றார். அவன் சுவரில் தொட்டாலும், கயிறில் தொட்டாலும், தூணில் தொட்டாலும் கோயில் மணியில் தொட்டாலும் உடனே மனேஜர் அவனுக்கு அடிக்கின்றார். ஒருநாள் கோயில் குதிரை வாகனத்தின் வாலில் மனேஜரின் மகன் தொட்டு ஆசையுடன் பார்க்க, அவர் அவனை குதிரை வாகனத்தில் தூக்கி நிற்க வைக்கின்றார். அதைப் பார்த்து ஆசைப்படும் இந்தப் பிரதான பாத்திரம் குதிரையில் ஏறி அமர்வது எல்லாம் தனக்கு நடக்கக் கூடிய காரியம் இல்லை என்று உணர்ந்து குறைந்த பட்சம் குதிரையைத் தொட்டாவது பார்ப்பம் என்று அதன் காலைத் தொட்டுப் பார்க்கின்றான், அந்த நேரம் பார்த்து அங்கே வந்துவிடும் மனேஜர் அதனைக் கண்டுவிட்டு் அவனது முதுகில் ஓங்கி அறைகின்றார். காலால் உதைய முனைகின்றார், அவன் ஓடிவிட அவனைத் திட்டிவிட்டு அவனது முதுகில் தொட்ட தனது கையை நன்றாகக் கழுவுகின்றார். இந்த விபரணங்கள் மூலமாக அந்தச் சிறுவன் மீது தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதையே காட்டப்படுகின்றது. கதையில் அந்தச் சிறுவனின் “தொடுதல்கள்” எல்லாம் பிரச்சனைகளாகக் காட்டப்படுவதும் அதைக் குறித்ததே என்று கருதமுடிகின்றது. ஆனால் கதையின் ஆரம்பத்தில் மனேஜரையும் அவருடன் வந்தவர்களையும் தன் சொந்தக்காரர்கள் என்றே கதாபாத்திரம் குறிப்பிடுகின்றது. அது மாத்திரமல்ல, அதே கதாபாத்திரம் “நாங்கள் சொத்தில்லாதவர்கள், பணமில்லாதவர்கள், எந்தக் கொடுமை இழைக்கப் பெற்றாலும் மௌனமாக இருக்கவேண்டியவர்கள், தட்டிக்கேட்கும் வல்லமை இல்லாதவர்கள், ஏழைகள், தீண்டத்தகாதவர்கள்” என்றும் சொல்லிக்கொள்கின்றது. பிற்காலத்தில் அதே சிறுவன் வெளிநாடு போய் பணம் உழைத்து விடுமுறையில் ஊர் திரும்புகின்றான், அவன் குடும்பம் நிதி வசதி பெற்றதாகி இருக்கின்றது. கோயிலுக்குத் தேர் செய்ய மனேஜரும் இன்னும் சிலரும் அவனிடம் நிதிப் பங்களிப்பு செய்யுமாறு கேட்க, அவன் தேருக்கான முழுப் பணத்தையும் தானே தருவதாகக் கூறுகின்றான். இறுதியில் கோயிலுக்குச் செல்லும் அவன் கோயிலுக்கு வெளியில் நிற்கின்றபோது, அவனை நோக்கி மனேஜர் வருகின்றார்.
”பூஜைகள் ஆரம்பிப்பதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன. “தம்பி என்ன வெளியிலே நிண்டிட்டியள்…” கேட்டுக்கொண்டே மனேஜர் எனக்கு முன்னே வந்து நிற்கின்றார். பின்னர் “இண்டைக்கு நீங்கள் தானே தானேசர். தர்ப்பை தரித்து, சங்கற்பம் செய்து, குருக்கள் ஐயாவிட்ட காளாஞ்சி பெற்று கோயிலைச் சுற்றி வந்து உபயகாரனாக நின்று செய்யவேண்டும்… வாருங்கோ!” என அவர் என்னை அழைக்கின்றார்.
நிதானமாக நிமிர்ந்து அவர் முகம் பார்த்து, “வேண்டாம், அதை நீங்கள் ஆரும் செய்யுங்கோ!” என்று சொல்லும்போதும், “அந்தக் குதியை மீது ஏறி நான் ஒரு தடவை ஆடவேண்டும் என உள்மனம் உள்ளே சொல்லிக் கொண்டிருக்கிறது”
என்று இந்தக் கதை நிறைவடைகின்றது. தனக்கு நிகழ்ந்த அவமானத்தை வெற்றிகொண்ட தன்மையினை கதையின் இறுதியில் அவன் உணர்வதாக காட்டப்பட்டாலும், தீண்டாமை என்பதை வர்க்கப் பிரச்சனையாகவே தெணியான் அடையாளப்படுத்துவது இந்தக் கதையில் மிகப் பெரிய பலவீனம். வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் ஈழத்தவர்களுக்கு வர்க்கப் போராட்டத்தின் ஊடாக சாதிய விடுதலையை அடைந்துவிடலாம் என்றும், தேசியப் போராட்டத்தின் ஊடாக சாதி ஒழிப்பினைச் செய்துவிடலாம் என்ற நம்பிக்கைகள் பலமாக இருந்தன, பலமாக ஊட்டப்பட்டன. ஆனால் சாதியம் ஓர் அடிப்படையான பிரச்சனை, சமூக நீதிக்கும் சமத்துவத்துக்குமான அடிப்படைகளில் சாதிய ஒழிப்பும் முதன்மையானது என்பது வலுவாக இன்று நிறுவப்பட்டிருக்கின்றது. அந்தக் கருத்துநிலையில் பார்க்கின்றபோது தீண்டாமை, தீண்டத்தகாதவர்கள் என்கிற அரசியல் சொல்லாடல்களை அவற்றுக்கான சரியான உள்ளடக்கத்துடன் பாவிக்கவேண்டியது அவசியமாகும். தெணியான் இந்தக் கதையை எழுதியிருப்பது 2005 இல் என்பதும் இக்கதை வெளிவந்திருப்பது மல்லிகையில் என்பதும் இந்தச்சித்திகரிப்பிலுள்ள அபத்தத்தையும் அதன்மீதான ஏமாற்றத்தையும் வலுவாகச் சொல்ல வைக்கின்றது.
இந்தத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற கதைகளினூடாக வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த மக்கள் அனுப்பிய பணம் கிராமங்களில் சமூக பண்பாட்டு அசைவுகளில் ஏற்படுகின்ற மாற்றங்களையும் நாம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மாயை, இந்திரன்கள் ஆகிய கதைகளை இந்த அடிப்படையில் நாம் நோக்கலாம். ஆனால் அவ்விதம் ஏற்படுகின்ற மாற்றங்களை எழுதிச் செல்லுகின்ற தொனியானது வெளிநாடுகளில் இருந்து கிடைக்கின்ற பணத்தினால் ஆதாயம் அடைபவர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் மலினமான முறையில் கேலி செய்வதாக, பொதுப்புத்தியைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது, குறிப்பாக இன்னொரு புதிய கோணம், மாயை ஆகிய கதைகளில் வருகின்ற பாத்திரங்களைக் கரிசனையுடன் புரிந்துகொள்ளவும் வெளிப்படுத்தவும் முயலவேயில்லை என்றே சொல்லவேண்டும்.
1971 முதல் 2007 வரையான மிக நீண்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட பல்வேறுகதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை உள்ளடக்கியதாக இந்தத் தொகுப்பு வெளிவந்திருக்கின்றது. ஆயினும் எந்த அடிப்படையில் இந்தக் கதைகள் தொகுக்கப்பட்டவை என்று தொகுப்பில் தெரிவிக்கப்படவும் இல்லை, வாசிப்பினூடாகவும் அறிந்துகொள்ள முடியவில்லை. இந்தத் தொகுப்பினை கொற்றாவத்தையில் இருக்கின்ற பூமகள் சனசமூக நிலையம் வெளியிட்டிருக்கின்றது. இது மிகமுக்கியமான ஒரு அம்சமாகும். சனசமூக நிலையங்கள் போன்ற உயிர்ப்பான அமைப்புகள் இதுபோன்ற பண்பாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுவது மிக ஆரோக்கியமான முன்னுதாரணமாகும். தெணியானின் படைப்புலகம், அவரது கதை மாந்தர்கள், கருத்துநிலை, சமூகப் பார்வை, மொழியாளுமை ஆகியன பற்றிய குறிப்புகளாகவே “இன்னொரு புதிய கோணம்” பற்றிய இந்தக் கட்டுரை அமையும், அவரது ஏனைய படைப்புகளையும் வாசித்து விரிவான ஆய்வொன்றினைச் செய்யவேண்டியது அவசியம் என்பதை இதுவரை வாசித்த அவரது நூல்களினூடான உணரமுடிகின்றது.
*ரொரன்றோவில் தேடகம் ஒருங்கிணைத்திருந்த தெணியானின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்கில் இக்கட்டுரை வாசிக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் 2018 தாய்வீடு பத்திரிகையில் பிரசுரமானது
*தெணியானின் வாய்மொழிப் பதிவினைப் பார்க்க http://aavanaham.org/islandora/object/noolaham%3A1066
*தெணியானின் நூல்களை நூலகம் செயற்திட்டத்தில் பார்க்க http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
2019 பெப்ரவரி 8 அன்று பெறப்பட்ட விக்கிபீடியா பக்கம்
Leave a Reply