இன்றைய கல்வி முறைகள், பாடசாலைகளின் நிலைமைகள், அவை எதிர்கொள்ளும் சவால்கள், மாணவர் – ஆசிரியர் உறவு நிலை என்பன குறித்து நண்பர்களுடன் உரையாடுவதும் அவை பற்றி வாசிப்பதும் எனக்கு விருப்பமான ஒன்று, அத்தகைய உரையாடல்கள் எப்போதும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான் கல்விகற்ற காலப்பகுதியில் அதிபராக இருந்த அ. பஞ்சலிங்கம் அவர்களைப் பற்றிப் பெருமதிப்புடன் நினைந்து போற்றுவதுடன் நிறைவுறுவது வழக்கம்.
1991 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபராக பஞ்சலிங்கம் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட காலப்பகுதியானது அரசியல் மற்றும் போர்க்காலச் சூழலால் நெருக்கடி நிறைந்ததாக இருந்தது. அத்துடன், நிர்வாகக் குழப்பங்களும் அவர் பொறுப்பேற்றபோது இருந்ததாக என்னால் அப்போது ஊகிக்கக்கூடியதாக இருந்தது. இக்காலப்பகுதியில் பாடசாலைக்கு பஞ்சலிங்கம் அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்று பாடசாலையை திறம்பட நடத்திச்சென்றதுடன் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஆளுமைத் திறன் நிறைந்தவர்களாக அவர்களை உருவாக்கியவருமாவார்.
கையெழுத்துப் பிரதி எழுதுதல், வாசிப்புப் பழக்கத்தினை மாணவர்களுக்கு உருவாக்குதல் என்பவற்றினை மிகவும் வினைத்திறனுடன் அவர் மாணவர்கள் மத்தியில் பரவலாக்கினார். அவரது பதவிக்காலத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வகுப்புகளும் அவற்றின் பிரிவுகளுமே கையெழுத்துப் பிரதிகளை எழுதின, அதைவிட நண்பர்களாக இணைந்து கையெழுத்துப் பிரதிகள் எழுதியவர்களும் உண்டு. இவையெல்லாவற்றுக்கும் அவர் ஊக்கமளித்ததுடன் அந்தப் பிரதிகளைப் பார்த்து தன் கருத்துகளையும் சொல்லி மேம்படுத்துவார். கையெழுத்துப்பிரதி எழுதுதல் என்பது ஓரியக்கமாகவே அப்போது வலுப்பெற்றது. இப்போது யோசித்துப் பார்க்கின்றபோது எழுதுவதிலும் பதிப்புமுயற்சிகளிலும் எனக்கு ஆர்வமேற்பட ஊக்குசக்தியாக இருந்தது பஞ்சலிங்கம் அவர்கள் எனது பாடசாலைக்காலத்தில் பரவலாக்கிவிட்ட கையழுத்துப் பிரதியாக்கக் கலாசாரமே என்றே தோன்றுகின்றது.
அப்போது வெற்று வெள்ளைத்தாள்களைப் பெறுவதற்கு யாழ்ப்பாணத்தில் போர்ச்சூழல் காரணமாகச் சிரமம் நிரவியது, ஆனால் அதிபர் அவர்கள் கையெழுத்துப்பிரதி எழுத என்று போய்க்கேட்டால் எந்த வகுப்பு, என்ன கையெழுத்துப்பிரதி என்றெல்லாம் விசாரித்துவிட்டு பத்து வெற்று வெள்ளைத்தாள்களை எடுத்துத் தருவார். அதை எழுதிக்கொண்டுபோய்க்காட்டினால் இன்னும் 10 அல்லது 20 தாள்கள் கிடைக்கும். அதுதவிர வகுப்பு மட்டங்களில் போட்டிகளை நடத்தி சிறந்த கையெழுத்துப் பிரதிகளைத் தேர்ந்தெடுத்து பரிசுகளும் வழங்கினார். பெரும்பாலான கையெழுத்துப் பிரதிகள் மலர்கள்/ மாணவர் சஞ்சிகைகள் போலவே இருந்தபோதும் விடயவாரியான கையெழுத்துப் பிரதிகளும் கொமிக்ஸ் வடிவிலான கையெழுத்துப் பிரதிகளும் கூட வெளிவந்த அந்தக் காலகட்டம் உண்மையில் மிகமுக்கியமான ஒரு காலகட்டமாகும்.
மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை உருவாகக்வேண்டும் என்பதில் மிகவும் கரிசனை கொண்டவராகவும் பஞ்சலிங்கம் அவர்கள் இருந்தார். அப்போது பாடசாலையில் நூலகத்தில் (சிவஞான வைரவர் கோவிலின் பின்புறமாக) பாட சம்பந்தமான நூல்களே பெரிதும் இருந்தன. அத்துடன் அந்த நூலகம் எப்போது போனாலும் நிரம்பியிருப்பதாகவே இருந்தது, அதனால் ஆண்டு 6 / 7 இனைச் சேர்ந்த மாணவர்களுக்கு நூலகத்தில் இடம் கிடைப்பதே கடினமானதாக இருந்தது. இவரது காலத்தில் சிறுவர்களுக்கென ஒரு நூலகம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டதுடன் அங்கே தரமான சிறுவர் நூல்கள் நிறைந்திருந்தன. சிறுவர் நூலகத்தைப் பயன்படுத்தவும் தொடர்ச்சியாகப் புத்தகங்களை பெற்று வாசிக்கவும் மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டதுடன் அங்கே அதிக புத்தகங்களை வாசிப்பவர்களுக்கு புத்தகங்கள் பரிசாகவும் வழங்கப்பட்டன.
இவரது காலப்பகுதியில் பாடசாலையில் சேவைக் கழகம், கீழைத்தேய வாத்திய இசைக்குழு என்பன ஆரம்பிக்கப்பட்டதுடன் சங்கங்களும் கழகங்களும் தொடர்ந்து உயிர்ப்புடன் செயற்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியாகவும் இதைக் குறிப்பிடலாம். அத்துடன் சங்கங்கள் தமக்குத் தேவையான நிதி திரட்டும் பொருட்டு பாடசாலை மாணவர்களுக்கு சஞ்சிகைகளை விற்கின்ற அதனூடாக நிதிசேகரிக்கின்ற முறைமையும் அப்போது வழக்கத்தில் இருந்தது. இவ்வாறாக நங்கூரம், அறிவுக்களஞ்சியம், உலக உலா, வெளிச்சம், இந்துசாதனம், இராமகிருஷ்ண விஜயம் போன்றன பாடசாலையில் விற்பனையாயின. அதுதவிர இந்தக் கழகங்களைச் சேர்ந்தவர்களே சிற்றுண்டி விடுதி நடத்துவது (லியோ கழகம்), சைக்கிள் தரிப்பிடத்தை நிர்வகிப்பது (சேவைக் கழகம்), வாயிற் காப்பாளருக்கான பணியினை மாணவர்களே “இல்லங்களின் அடிப்படையில் பகிர்ந்து கொள்வது (House Duty) போன்ற வழக்கங்களும் பாடசாலைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இது மாணவர்களிடையே ஆரோக்கியமானதோர் பண்பாட்டுச் சூழலை வளர்த்தெடுப்பதில் உதவிசெய்தது எனலாம்.
வசீகரம் நிறைந்த கம்பீரமான தோற்றத்தையுடைய பஞ்சலிங்கம் அவர்கள் எப்போதும் வெள்ளைசட்டையும் வெள்ளைக் காற்சட்டையும் அணிந்தே பாடசாலைக்கு வருவார். பாடசாலை தொடங்கும் நேரத்தின் முன்னரே பாடசாலைக்கு வந்துவிடும் அவர் பாடசாலை பிரதான வாயிலில் மாணவர்கள் பாடசாலைக்குள் நுழையும் வழியில் இரண்டு கைகளையும் பக்கவாட்டில் வாசி மடக்கிய ஒரு கை முஷ்டியை மற்றைய கையினால் தொடர்ச்சியாக ஏந்திக்கொண்டிருக்கின்ற காட்சி நினைக்குந்தோறும் உற்சாகமளிப்பது. வகுப்புகளிற்கு ஆசியர்கள் சரியான நேரத்திற்கு வராவிட்டால், அவர் அந்த வகுப்பிலிருந்துகொண்டு வகுப்பு முதல்வரை ஆசிரியரை அழைத்துவரும்படி அனுப்பிவைப்பார். அவ்வாறு ஆசிரியர் வரும்போது அவர் சற்று தூரத்திலே வரும்போது இவர் எழும்பிச் சென்றுவிடுவார். அதேநேரம் ஆசிரியர்கள், ஊழியர்கள், மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட நலனிலும் மிகவும் அக்கறைகொண்டவர் தனிப்பட என்றும் நிறைய உதவிகளை பலருக்குச் செய்துள்ளார் என்றும் சம்பந்தப்பட்டவர்களே சொல்லி நான் கேட்டுள்ளேன்.
மாணவர்களின் கருத்துகளையும் அவர்களது பிரச்சனைகளையும் முழுமையாகக் கேட்டு பொறுமையாக விளக்கமளித்து உரையாடும் பாங்கு அவருக்கே தனித்துவமானது. பல சந்தர்ப்பங்களில் எமது வகுப்புக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் குறித்தும் சில ஆசிரியர்களின் கற்பித்தல் முறைமைகள் குறித்தும் எமது வகுப்பு சக மாணவர்களின் அபிப்பிராயங்களையும் குறைகளையும் அதிபருடன் போய் உரையாடுவர்களில் ஒருவனாக நான் இருந்துள்ளேன் (தற்போது யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் வைத்தியராகக் கடமையாற்றுகின்ற பிரசன்னாவும் கனடாவில் இருக்கின்ற நந்தகுமாரும் அனேகம் என்னுடன் வந்தவர்கள்) அந்தச்சந்தர்ப்பங்களில் எல்லாம் பொறுமையாகக் கேட்டு விளக்கமளிப்பதுடன் வகுப்பின் ஏனைய பிரிவுகள் குறித்தும் சேர்ந்து நாம் யோசிக்கவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துவார். பாடசாலை அதிபருடன் தமது குறைகள் குறித்து 12 – 15 வயதுகள் வரையுள்ள மாணவர்கள் கூட வெளிப்படையாக உரையாடலாம் என்கிற அந்தப் பண்பாடு பஞ்சலிங்கம் அவர்களின் ஆளுமையின் மிக முக்கியமான அம்சமாகும்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி என்கிற இரண்டு புகழ்வாழ்ய்ந்த கல்லூரிகளுக்கு அதிபராகக் கடமையாற்றிய பஞ்சலிங்கம் அவர்களின் அமுதவிழாவினையொட்டி (எண்பது ஆண்டு) கொக்குவில் இந்துக் கல்லூரியில் அவர் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் கல்விகற்ற 91 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்கள் திரு. முருகேசு கௌரிகாந்தன், திரு. பாலசிங்கம் பாலகணேசன் ஆகியோரை தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு ஆரம்பித்த முயற்சியானது அவரது 83 வயதில் பஞ்சநதி என்கிற மலராக வெளியிட்டிருக்கின்றார்கள். அத்துடன் அதனை கொக்குவில் இந்துக் கல்லூரி இணையத் தளத்திலேயே பகிர்ந்தும் இருக்கின்றார்கள். அதற்கான இணைப்பை இத்துடன் பகிர்ந்துகொள்கின்றேன். அதேநேரம் அதிபர் பஞ்சலிங்கம் அவர்களின் ஆளுமை, நிர்வாகத் திறன், கல்விச் சிந்தனைகள், கல்வியியல் நோக்கு என்பன குறித்து விரிவாக ஆராய்ந்து தொகுக்கப்படவேண்டும்.
கொக்குவில் இந்துக்கல்லூரி இணையத்தளத்தில் இருந்து மின்னூலினைத் தரவிறக்கம் செய்ய
Click to access Panchanathi.pdf
நூலகம் இணையத்தளத்தில் இந்த நூலினைப் பார்க்க
http://noolaham.net/project/631/63001/63001.pdf
மின்னூல்
நன்றி : இந்த மலர் எனக்கு அறியத்தந்தவர் பாலரமணா அவர்கள். அவருக்கு என் நன்றிகள்
Leave a Reply