திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார வளைவு இடிக்கப்பட்டதைக் குறித்த செய்திகளை மார்ச் மாத 4 ஆம் திகதி யாழ்ப்பாண உதயன் பத்திரிகை வெளியிட்ட விதம் குறித்தும் அதன் முகப்புப் பக்கத்தில் இருந்த செய்திகளிலும் அவற்றுக்கு சிவப்பு வர்ணமூட்டி கவனம் குவியவைக்கப்பட்டவற்றில் மக்கள் மத்தியில் மதவெறியைத் தூண்டி நல்லிணக்கத்தைக் குலைக்கின்ற மக்கள் விரோத முனைப்பிருந்ததையும் சுட்டிக்காட்டி முகநூலில் பதிவொன்றினை எழுதியிருந்தேன்.
வேறு சில நண்பர்களும் இதை ஒத்த பதிவுகளைப் பகிர்ந்து உதயன் பத்திரிகைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். அதேநேரம் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியளிக்கக் கூடிய விதத்தில் வெளிப்படையாகவே வெறுப்புணர்வைக் காட்டுகின்ற விதத்திலான பதிவுகளையும் மக்களின் ஒரு பிரிவினரை இன்னொரு பிரிவினருக்கு விரோதிகளாகச் சித்திகரித்து மிகையூட்டப்பட்ட கற்பனாவாத அச்சமூட்டல்களைச் செய்கின்ற பதிவுகளையும் கவனிக்கக் கூடியதாக இருந்தது. சகோதரத்துடன் பார்க்கப்பட்ட சைவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமான உறவு மிகவேகமாக வெறுப்பின் விதைகளை நாலாதிசையிலும் பரவச் செய்யும்படியாக மாறக்கூடிய அளவிற்கு அவநம்பிக்கை நிறைந்த உறவாக இருக்கின்றது என்பதையும் நீண்டகாலமாகவே சிறு சிறு பூசல்களும் கசப்புணர்வுகளும் இருந்திருக்கக் கூடும் என்பதையும் அவை மதவாதிகளால் மெல்ல மெல்ல வளர்க்கப்பட்டு வந்துள்ளன என்பதையும் அறிந்துகொள்ளமுடிகின்றது.
ஏற்கனவே தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் காலூன்ற நீண்டநாட்களாக (தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக, ஈழத்தைப் பொறுத்தவரை சில ஆண்டுகளாக) கழுகாகக் காத்திருக்கின்ற இந்தியாவின் இந்துத்துவச் சக்திகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்துக்கள் / சைவர்களுக்கு எதிரான பயங்கரவாதம் / ஒடுக்குமுறை நிலவுகின்றது என்று மக்களை அச்சமூட்டி மக்களைத் தம் நிகழ்ச்சிநிரலுக்குள் கொண்டுவர முயலுகின்றார்களா என்ற நோக்கிலும் இதைப் பார்க்கவேண்டி இருக்கின்றது. (அவசர அவசரமாக Vishva Hindu Parishad உம் ஒரு அறிக்கையை விட்டு எரிய நெருப்பில் எண்ணை வார்த்திருந்தது. துரதிஸ்ரவசமாக மன்னார் மறை ஆயர் இல்லம் விட்ட அறிக்கையும் மோசமானதாகவே அமைந்திருந்தது)
ஒருபுறம் பௌத்த சின்னங்களும் சிங்கள மயமாக்கலும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வேகமாக நடந்து வருகின்றபோது அதற்கான எதிர்ச்செயற்பாடாக சைவச் சின்னங்களை நிர்மாணிப்பதிலும் இந்துத்துவப் பிரசாரத்திற்கு எடுபட்டுப் போவதுமாக சைவர்களின் நிலைப்பாடு இருக்கின்றது. சைவர்கள் மாத்திரம் என்றில்லாமல் நாடுமுழுவதும் மதங்களுக்கு இடையில் முறுகல் நிலைகளும் பரஸ்பர நம்பிக்கையீனங்களும் பரவிகின்ற சூழலில் சாதாரண மக்களில் மதவாதிகளின் பிரச்சாரத்தை நம்புவதும் அதன் தொடர்ச்சியாக மதவெறி கொண்டவர்களாகவும் பிற மதத்தவர்கள் மீது வெறுப்பைக் கக்குபவர்களாகவும் மாறிவிடுகின்ற போக்கினையே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இந்த இடத்தில், மதச்சார்பின்மை (Secularism) குறித்து நாம் உரையாடவேண்டியது உடனடித்தேவையாக இருக்கின்றது. அரசையும் மதத்தையும் தனித்தனியாகப் பார்ப்பது என்று ஆரம்பநிலைகளில் அறியப்பட்ட மதச்சார்பின்மை பற்றியும் அதனை எவ்வாறு நாம் எமது சமகாலச் சூழலில் பிரயோகிக்கலாம் என்பதையும் குறித்து சமூகத் தலைமைகளும், செயற்பாட்டாளர்களும், கலைஞர்களும் அக்கறை செலுத்தவேண்டும். குறிப்பாக அண்மையில் நடந்திருக்கின்ற திருக்கேதீஸ்வர ஆலய அலங்கார வளைவு இடிக்கப்பட்ட சம்பவத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கி வருகின்ற ஊடகமான உதயன் இந்தச் சம்பவம் மார்ச் 4, 2019 பத்திரிகையின் முகப்புப் பக்கத்தில் மதச்சார்பான, பிறமதத்தினர் மீது வெறுப்புணர்வைத் தூண்டுகின்ற மிக ஆபத்தான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது. இலங்கையில் அதிகளவு பிரதிகள் விற்பனையாகும் முதல் மூன்று தமிழ்ப் பத்திரிகைகளில் உதயனும் ஒன்றாக இருக்கும் என்று கருதுகின்றேன், அப்படி இருக்கின்றபோது மக்களை உணர்ச்சியூட்டி, இன்னொரு பிரிவினர் மீது விரோதமும் வெறுப்புணர்வும் கொள்ளும்படி தூண்டுவதை மக்கள்விரோதச் செயலாகவே பார்க்கமுடிகின்றது.
இந்த நிலையில் உடனடித் தேவையாக, ஊடகங்களுக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்வு குறித்தும் மதச்சார்பின்மை (Secularism) குறித்த ஆரம்பநிலை வாசிப்புகள், உரையாடல்களையேனும் மக்கள் மத்தியில் பரவலாக்குவதும் அவசியம்.
இந்தக் கட்டுரையுடன், Charles Talyor எழுதிய The Meaning of Secularism என்கிற கட்டுரையையும் அதன் சாரமாக க.சண்முகலிங்கன் தமிழில் எழுதி மார்ச் 2018 தாய்வீடு இதழில் வெளியான மதச்சார்பின்மை பற்றிய அரசியல் விவாதம் என்கிற கட்டுரையையும் PDF வடிவில் பகிர்கின்றேன்.
Charles Talyor இன் கட்டுரையைப் பெற Charles Taylor
க. சண்முகலிங்கனின் கட்டுரையைப் பெற Secularism
நன்றி
3.
4.
Leave a Reply