62000414_376627206297969_594129444600283136_nசிறுவயது முதலே வாசிப்பிலும் பொதுவிடயங்கள் தொடர்பிலும் இருந்த ஆர்வமானது ஏனைய கலைவடிவங்கள் நோக்கியும் திரும்பியது மிகவும் பிற்பகுதியிலேயே எனக்கு நிகழ்ந்தது.  அந்த வகையில் தாசீசியஸ் என்கிற பெயரானது நான் தொடர்ச்சியாகக் கேள்விப்பட்டுக்கொண்டிருந்த, பலர் வியந்தும் விதந்தும் பேசி கேள்விப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பெயர் என்றாலும் அவர் பற்றிய எனது நேரடி அறிமுகம் எனக்கு மிகவும் குறைவே. தாசீசியஸ் அவர்களின் பவள விழா சிறப்பு மலரான ஈழக்கூத்தன் ஏ.சி. தாசீசியஸ் என்கிற நூல்பற்றிய கூட்டத்தில் உரையாட என்னைக் கேட்டபோது தயக்கமும் மகிழ்ச்சியும் ஒருங்கே ஏற்பட்டது என்றே சொல்லவேண்டும்.  அந்த வாய்ப்பினை எனக்களித்த ஞானம் லம்பேட் அவர்கள் புத்தகத்தினையும் எனக்குக் கொடுத்தனுப்பியிருந்தார்.  உண்மையில் புத்தகத்தைப் பார்த்தபோது திடுக்கிட்டுப் போனேன் என்றுதான்  சொல்லவேண்டும், புத்தகம்  670 பக்கங்களுடன் மருதுவின் கைவண்ணத்தில் உருவான அழகிய அட்டைப்படத்துடன் இருந்தது.  புத்தகத்தை எனக்கு தாய்வீடு டிலிப்குமார் கொண்டுவந்த தந்தபோது நான் எஸ்.கே. விக்னேஸ்வரன் அவர்களுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன்.   புத்தகத்தைக் கையில் வாங்கிய உடனேயே விக்கி அண்ணாவிடம் “செரியான பெரிய புத்தகம் விக்கி அண்ணா, 600 பக்கம் தன்னும் வரும் என்று சொன்னேன்.  யார் யார் எழுதியிருக்கின்றார்கள் என்று கேட்டார், ஒரு சில தலையங்கங்களையும் எழுதியவர்கள் சிலரது பெயரையும் கூறியபோது, வாசித்துப் பாருங்கோ உங்களுக்குப் பிடித்திருக்கும் என்றுதான் நினைக்கின்றேன், தாசீசியஸ் முக்கியமான ஒருவர், அவரைப் பற்றிய இப்படியான தொகுப்பொன்று வந்திருப்பது நல்ல விடயம் என்று சொன்னார்.  புத்தகத்தினை முழுமையாக வாசிக்காமல் இதுவரையும் எந்தக் கூட்டத்திலும் உரையாற்றியதில்லை, அதை இம்முறையும் காப்பாற்றிவிடவேண்டும் என்ற முனைப்புடன் இந்தப் புத்தகத்தையும் முழுமையாக வாசித்தபோது தாசீசீயஸ் என்கிற பெரும் ஆளுமையைப் பற்றி மட்டுமல்லாமல், ஈழத்தின் கலை இலக்கிய வரலாறு, நாடக வரலாறு, தலைமைத்துவம், புலம்பெயர் நாடுகளின் ஊடகத்துறை வரலாறு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அறியக் கூடியதாக இருந்தது.  அந்தவகையில் மிகச் சிறந்ததோர் ஆவணத் தொகுப்பாக இந்நூல் அமைந்திருக்கின்றது.

 

தமிழர் கலை பண்பாட்டு நடுவமும் சுவிற்சர்லாந்தைத் சேர்ந்த நீதியான சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான நடுவமுடன் இணைந்து வெளியிட்டிருக்கின்ற இந்நூலின் தொகுப்பாளரும் பதிப்பாளரும் பொன்ராசா அன்ரன் அவர்களாவார்.  தாசீசியஸ் அவர்களின் பவளவிழா மலராக வெளியிடப்பட்டிருக்கின்ற இந்த நூலில்

 • அறிஞர்களின் பதிவுகள்
 • அரங்க ஆற்றுகை அனுபவங்கள்
 • நிகழ்வுகள்
 • நேர்காணல்கள்
 • பேச்சுக்கள் – எழுத்துக்கள்
 • பாடல்கள்
 • நாடகப் பனுவல்கள்
 • ஒளிப்படங்கள்
 • வாழ்க்கைச் சுருக்கம்

ஆகிய ஒன்பது பிரிவுகளில் 46 கட்டுரைகளும், 5 நேர்காணல்களும் 14 பாடல்களும் 9 நாடகப் பிரதிகளும் தொகுப்பட்டிருக்கின்றன.  அவற்றையெல்லாம் தனித்தனியாக ஆய்வுசெய்வது என்பது மிக நீண்டதோர் பணியாகும்.  எனவே தனித்தனியாக ஆக்கங்களைப் பற்றி ஆராயாமல் இந்தநூலின் முக்கியத்துவம், வாசிப்பின் ஊடாகக் குறிப்பிடவேண்டிய அம்சங்கள் என்பவற்றையே இந்தக் கட்டுரையில் முன்வைக்க இருக்கின்றேன்.

 

62168199_376608509633172_7160837967181774848_nஎழுத்துச் செயற்பாடு என்றும் கலை இலக்கியச் செயற்பாடு என்றுப் பார்க்கின்றபோது நாம் எவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்பது பற்றி ஆராய்வது அவசியமாகும்.  பொதுவாக வாசிப்பென்றும் எழுத்தென்றும் சொல்லப்படுகின்றபோது புனைவு சார்ந்தவற்றுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற போக்கு தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இந்த எழுத்துக்களை எழுதியவர்களின் தொகுப்புகளாக அவர்கள் எழுதியவற்றைத் தொகுக்கின்ற பணிகளும் இடம்பெறவே செய்கின்றன.  ஆனபோதும், அப்படியான செம்மையான முழுமையான தொகுப்புகள் வெளிவருவது கூட போதிய அளவில் இடம்பெறுவதில்லை என்றே சொல்லவேண்டும்.  இன்னொரு தளத்தில், ஈழக்கூத்தன் தாசீசியஸ் என்கிற இந்தத் தொகுப்புப் போல ஓர் ஆளுமையைப் பற்றிய பல்வேறு கட்டுரைகள், ஆக்கங்கள், நேர்காணல்கள், விழா அழைப்புகள், நிகழ்ச்சி நிரல்கள் என்பனவும் சேர்த்துத் தொகுக்கப்படுவது என்பது மிகமுக்கியமான ஒரு பணியாகும்.  அடிப்படையில் ஆவணப்படுத்தலிலும் பண்பாட்டு வரலாற்றியலிலும் அக்கறை உள்ளவனாகவோ இருப்பதாலோ என்னவோ, இந்த விடயங்களை மீள மீள வலியுறுத்துவது எனது வழக்கமாக இருக்கின்றது.  குறிப்பாக நாம் ஆவணப்படுத்தல் என்று வரும்போது ஆளுமைகளின் எழுத்துகள், படைப்புகள், செயற்பாடுகள் என்பவற்றை ஆவணப்படுத்துவதுடன் அவர்களைப் பற்றியும் ஆவணப்படுத்துவது முக்கியமானது.  ஒருவரது எழுத்துகள், படைப்புகள், செயற்பாடுகள் என்பவற்றோடு அவர் பற்றிய எழுத்துகள், படைப்புகள், அவர் பங்கெடுத்த செயற்பாடுகள், அவரது விருப்புகள், தேர்வுகள், ரசனை, உணவுப்பழக்கம், பொழுதுபோக்கு, கையெழுத்து, உடைத்தேர்வு,  பாவனைக்குரிய பொருட்கள், குரல் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் ஆவணப்படுத்தப்படவேண்டியனவே.  அப்படியான பெரும்பட்டியலில் பலவற்றை இப்படியான மலர்கள் செய்திவிடுகின்றன. அதுமட்டுமல்லாமல் குறித்த ஒரு பிரதேசத்தின், குறித்ததோர் காலப்பகுதிக்குரிய வரலாற்று எழுதியலுக்குத் தேவையான பல்வேறு தரவுகளையும் அனுபவங்களையும் தொகுத்துத் தருவனவாகவும் இத்தகைய மலர்கள் அமைந்துவிடுகின்றன.

 

இந்நூலில் அமைந்துள்ள முதலாவது கட்டுரையில் தாசீசியஸினை இலங்கைத் தமிழ்க் கூத்து மரபினை வித்தியானந்தனுக்குப் பிறகு மீட்டுருச் செய்ததில் முக்கியமானவர் என்று குறிப்பிடும் கா. சிவத்தம்பி தொடர்ந்து தாசீசியஸின் வகிபாகத்தை “தாசீசியஸின் பணி பின்னோக்கிப் பார்க்கும்போது சமாந்தர முக்கியத்துவம் உடையது.  தாளையடியைப் பிறப்பிடமாகக் கொண்ட தாசீசியஸ் நாடகக் கூத்து மரபுக்கூடாகவே வந்தவர்.  பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1960களில் முக்கியத்துவம் பெற்ற ஆங்கில நாடக இயக்கத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றவர்.  பின்னர் 1960களில் பிற்பகுதியிலும் 1970களிலும் இலங்கையிலே காணப்பெற்ற நாடகக் கலை  ஈடுபாட்டு முயற்சிகளின்போது தமிழ்ப் பாரம்பரியக் கூத்து மரபின் நாடக வலுவையும் அதன் ஆழத்தையும் புத்துருவாக்க முறையில் (Innovative) எடுத்துக்காட்டி தமிழ்ச் சிங்கள நாடக அரங்கை சிலிர்க்க வைத்தவர்” என்று குறிப்பிடுகின்றார்.  இந்தநூலின் மூலமாக நாம் தாசீசியஸ் பற்றி அறிந்துகொள்பவற்றின் சாரமாக சிவத்தம்பியின் இந்த மதிப்பீட்டினை எடுத்துக்கொள்ளலாம்.

 

தன்னுடைய சிறுவயதிலேயே மரபுரீதியான கூத்துடன் அறிமுகமான தாசீசியஸிற்கு ஆங்கில நாடகங்கள் பற்றியே அவரது முறையான கற்கை நடக்கின்றது.  சு. வித்தியானந்தன், சரத் சந்திர, ஏனஸ்ட் மக்கிண்டயர், ஐராங்கினி சேரசிங்க போன்றோரிடமிருந்து தான் கற்றுக்கொண்டவற்றைப் பற்றிப் பல இடங்களில் பதிவு செய்யும் தாசீசியஸ் இந்த நூலில் தான் மீண்டும் தமிழில் நாடகங்கள் போடத்தொடங்கியது பற்றிக் குறிப்பிடுவது முக்கியமானது.  கொழும்பில் தான் போட்ட நாடகங்கள் மற்றும் நாடக முயற்சிகள் பற்றித் தன் தாயிடம் கூறும்போது ஒரு தடவை தனது தாயார் சரி சரி நீ போடுற நாடகங்கள் எல்லாம் ஆங்கிலம் பேசுகிறவர்களுக்குத்தான் புரியும், என்னைப் போன்றவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய நாடகங்களும் எப்போது போடப்போகிறாய் என்று கேட்டதாகவும் அதை அவர் ஏனஸ்ற் மக்கின்ரேரிடம் கூறியதாகவும் அவர் சிரித்துவிட்டுப் பின்னர் ஒரு கூட்டம் ஒன்று வைத்து “இனிமேல் ஆங்கில நாடகங்களை நான் இங்கே வைத்துக் கொள்கிறேன், நீங்கள் எல்லாரும் நிறையத் தேர்ச்சிய் பெற்றிருக்கின்றீர்கள், சிங்களப் பிரிவினர் சிங்கள் நாடகங்களைச் செய்யுங்கள், தமிழ்ப் பிரிவினர் தமிழ் நாடகங்களைச் செய்யுங்கள்.  ஆங்கில நாடகங்களில் உங்காள் பங்களிப்புத் தேவைப்படும்போது உங்களைக் கூப்பிடுகின்றேன் என்று சொன்னதாகவும் அதிலிருந்து தான் தமிழில் நாடகங்கள் போடத் தொடங்கியதாகவும் கூறுகின்றார்.  இது ஒரு முக்கியமான நிகழ்வென்றே குறிப்பிடவேண்டும்;  மக்களை நோக்கிச் செல்லாத எந்தக் கலையும் கலையாக நிறைவடையாது என்றே சொல்லவேண்டும்.

இதே நூலில் இடம்பெற்றுள்ள தினமணிக் கதிரில் வெளிவந்த நேர்காணலில் தாசீசியஸ் பின்வருமாறு கூறுகின்றார்.

“நான் ஆரம்பத்திலேயே கலை, கலைக்காக இல்லை என்பதில் தெளிவாக உள்ளேன்.  எங்களுடைய கலை மக்களுக்கு செல்ல வேண்டியது அவசியம்.  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்க முடியாது போனால் ஒரு கலைஞன் கலைஞனாக இருக்கமுடியாது.  மென்மையான உணர்வுகள் கொண்டவன் தான் கலைஞன் என்பது என் கருத்து, எண்ணம் எல்லாம்”

இந்த நோக்கமும் அந்த அக்கறையின்பாற்பட்ட தொலைநோக்குமே தாசீசியஸை வழிநடத்தியிருக்கவேண்டும்.  பிபிசியில் பணியாற்றியதில் இருந்து பின்னர் ஐபிசியை உருவாக்குவதற்கான தேவை எதுவாக இருந்தது என்பது குறித்தும், பின்னர் ஐபிசியை உருவாக்கியது குறித்தும் கானா பிரபாவிற்கு வழங்கிய நேர்காணலில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.  அதுபோலவே தமிழ்க் குடில் என்கிற அவரது செயற்திட்டம் மிகவும் முன்னோடியானதென்பதை அதன் நோக்கங்களை வைத்துப் பார்க்கின்றபோது அறியமுடிகின்றது.  அதற்கப்பால் நாராய் நாராய் என்கிற நாடகப் பயணம் இன்னொரு முக்கியமான செயற்திட்டம்.  இந்த விடயங்களையெல்லாம் வெறும் தரவுகளாக இல்லாமல் எந்தச் சூழலில் எந்தப் பின்னணியில் எந்த நோக்கத்துக்காக இவையெல்லாம் உருவாகிய என்பதை இந்த நூலினூடாகவே அறியமுடிகின்றது.  புலம்பெயர் நாடுகளின் ஈழத்தமிழர் வாழ்வியல் பற்றிய சமூக பண்பாட்டு வரலாற்றினை எழுதத் தலைப்படுகின்ற ஒருவருக்குத் தேவையான மூலாதாரமான தரவுகளாக இவை அமையும்.

 

தாசீசியஸ் பற்றிக் குறிப்பிடுகின்றபோது அவரது மாபெரும் கனவான தமிழ்க்குடில் பற்றி முக்கியமாகக் குறிப்பிட்டேயாகவேண்டும்.  உலகெங்கும் உள்ள தமிழ் மக்களை ஒன்றிணைத்து வெவ்வேறு நாடுகளில் உள்ளவர்களை வெவ்வேறு நேரங்களில் சிறிது சிறிதாக நேரத்தைப் பகிர்ந்து 24 மணித்தியால வானொலியாக இயங்கவேண்டும் என்ற திட்டமே அவரது தமிழ்க்குடில் திட்டமாகும்.  இதுபற்றி கானா பிரபாவுடனான நேர்காணலில் தாசீசியஸ் பின்வருமாறு குறிப்பிடுகின்றார், “நியூசிலாந்தில் இருந்து அமெரிக்கா வரையுள்ள நாடுகளில் எங்களுடைய மக்கள் வாழ்கிறார்கள்.  அங்கே கலைஞர்களும் வாழ்கிறார்கள், ஒலிபரப்பாளர்களும் வாழ்கிறார்கள்.  ஒலிபரப்பில் ஆர்வமுள்ளவர்களும் இருக்கிறார்கள்.  இப்பொழுது எல்லாருடைய வீடுகளிலும் ஒரு கணணி இருக்கின்றது.  அதிலிருந்து தங்கள் குரலைக் கொடுப்பதற்கு மைக் ஒன்றுதான்.  அதைத் தமிழ்க்குடிலோடு இணைத்துவிட்டால் இருபத்திநான்கு மணிநேரமும் அந்தச் செய்தி போய்க்கொண்டே இருக்கும்”  தாசீசியஸ் 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு நேர்காணலில் இதைச் சொல்லியிருக்கின்றார் என்பதை வைத்துப் பார்க்கின்றபோது அது முன்னோடியானதோர் நோக்கு என்றே கூறவேண்டும்; அத்துடன் அப்படியானதோர் செயற்திட்டம் சாத்தியம் ஆகவேண்டும் என்கிற தேவை இப்போதும் இருந்துகொண்டேயிருக்கின்றது.

 

62131727_376608762966480_1800668990217912320_nஇந்த நூலில் இருக்கக்கூடிய சுவாரசியமான இன்னோர் அம்சம் சித்தர்களூடாக தாசீசியஸ் கற்றுக்கொண்ட மூச்சுப் பயிற்சி பற்றியும் அவற்றினைக் கொண்டு உளப்பயிற்சி மூச்சுப் பயிற்சி என்பவற்றைத் தான் நாடகர்களுக்குக் பயிற்சியளித்தமையையும் குறிப்பிடுகின்றார்.  சித்த மருத்துவம், சித்தர்களின் யோகங்கள் போன்ற சமூக மருத்துவங்களையும் அதன் அறிவுச் சேகரத்தையும் ஒரு சமூகமாக நாம் தொலைத்துவிட்ட நிலையில் இதுபற்றிய தாசீசியஸ் அவர்களின் தேடல் முக்கியமானதாகும்.  தவிர மரபுகள் குறித்தும் மரபரீதியான அறிவுத்தொகுதி குறித்தும் கலைஞர்களுக்கு இருக்கக்கூடிய புலமையானது எப்படி அவர்களது கலைவடிவ வெளிப்பாடுகளில் முழுமையைத் தரும் என்பதற்கு தாசீசியஸ் உதாரணம் ஆவார்.  அதுபோல பொதுவெளியில் பெண்களின் பங்கேற்பு, சாதீயம் செயற்பட்ட விதங்கள் போன்றன குறித்தும் முக்கியமான சில அவதானங்களையும் தாசீசியஸ் வெளிப்படுத்தியிருக்கின்றார்.  குறிப்பாக கூத்துகளில் தலித்துகளின் பங்கேற்பு பற்றிய கேள்வியொன்றுக்கு “இந்தக் கூத்து என்று வருகிறபோது வேளாளர்கள் எனப்பட்டவர் கூத்து அருகில் போகமாட்டார்கள்.  தூரத்தில் இருந்துதான் பார்ப்பார்கள் அல்லது தங்கள் வீட்டிற்கு அழைத்துக் கூத்து பாப்பார்கள்.  அப்போது மற்றவர்கள் வரமாட்டார்கள்.  அப்படி ஒரு பாரம்பரியம் இருந்தது.  ஈழத்து வேளாளர்கள் தமிழகத்து நாடகக் கம்பனிகளை ஈழத்துக்கு அழைத்துக் கூத்து பார்த்தார்கள் என்றால் தங்களிடம் இல்லாத ஒன்று ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருப்பதால் சகிக்க முடியவில்லை.  ஆகவே இந்தியாவிலிருந்து கொண்டுவந்து பார்க்கும்படியானது.  அப்படி வந்தது தான் பம்மல் சம்பந்த முதலியார் குழு, சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழு.  இப்படி வந்த நிலையில் தலித்துகள் உட்கார்ந்து நாடகங்களைக் காண முடியாமல் நின்று மட்டுமே பார்க்கவேண்டிய நிலை இருந்தது” என்று தாசீசியஸ் குறிப்பிடுகின்றார்.  ஒடுக்கும் தரப்பு தமது மேலாதிக்கத்தை வலுப்படுத்தவும் தாம் மேல்நிலையடைந்தவர்கள் என்றுகாட்டவும் பண்பாட்டு வடிவங்கள் எப்படி கருவிகளாகக் கையாளப்படுகின்றன என்பதை இதனுடன் தொடர்புபடுத்திப் புரிந்துகொள்ள முடியும்.

 

தனிப்பட்ட முறையில் நான் சேர்ந்துவேலை செய்கின்ற தோழர்கள், நண்பர்கள் மற்றும் தனிப்பட்ட உறவுகள் ஆகியவற்றுடன் சேர்ந்து உணவுண்ணுதல், உணவைப் பகிர்ந்துகொள்ளுதல் ஆகியவற்றின் ஊடாக ஆழமான, புரிதலுடன் கூடிய உறவுகளைக் கட்டியெழுப்பலாம் என்பதை பலமாக நம்புகின்றவன்.  அத்துடன் அதைப் பல்வேறு உரையாடல்களின்போது நண்பர்களிடம் பகிர்ந்தும் இருக்கின்றேன்.  உளவள ஆலோசகர்களும் குடும்ப உறவுச்சிக்கல்களின்போது உறவுகளை ஆரோக்கியமாகப் பேணுவதற்கான ஓர் உபாயமாக சேர்ந்து உணவுண்ணுவதை வழக்கமாக்கும்படிக் கூறிவருகின்றனர்.  தாசீசியஸ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நாடகப் பயிற்சி வழங்கப்போகின்றபோது மதிய உணவுண்ண பொட்டலங்களைப் பிரிக்கின்றபோது தாசீசியஸ் இலை அல்லது தட்டொன்றில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கிள்ளு உணவினை தனது இலை / தட்டில் போடும்படிக் கேட்டு அதையே தனது மதிய உணவாக உண்டிருக்கின்றார்.    இதைப் பார்த்து சிலர் தாசீசியசுக்கென்று ஒரு பொட்டலத்தைக் கொண்டுவந்தால், அதனை ஒரு கையிலும் வெறும் தட்டினை மறு கையிலும் ஏந்தி ஒவ்வொருவர் முன்னாலும் கொண்டு சென்று ஒரு பிடி உணவினை தனக்குக் கிடைத்த உணவுப்பொட்டலங்களில் இருந்து எடுத்துக்கொண்டு அவர்கள் கொண்டுவந்த உணவுப் பொட்டலங்களில் இருந்து ஒரு பிடி உணவினை தனது வெறுந்தட்டில்போடும்படி கேட்டு உணவுண்டிருக்கின்றார்.   தான் சாப்பிட்டு முடிகின்றநேரம் ஒவ்வொருவருக்கும் இந்தச் சாப்பாட்டை உங்கள் வீடுகளில் செய்தவர்களுக்குத் தனது நன்றிகளைச் சொல்லியும் விடுவதாகக் குறிப்பிடும் தாசிசீயஸ், சாப்பாட்டைப் பகிரவேண்டும் என்பதைவிட தான் சேர்ந்து வேலைசெய்கின்றவர்களின் குடும்பத்தினரோடும் நெருக்கமும் புரிந்துணர்வும் வரவேண்டும் என்பதற்காகவே தான் இதனைச் செய்ததாகக் குறிப்பிடுகின்றார்.  பொதுவேலைகளில் இயங்குபவர்கள் ஒவ்வொருவருக்கும் இதிலொரு செய்தியிருக்கின்றது என்றே சொல்லவேண்டும்.  அதுபோலவே சுழற்சிமுறையில் ஒருங்கிணைப்பாளர்களையும் பொறுப்புக்களையும் மாற்றுவதன்மூலம் கூட்டுத் தலைமைத்துவத்தையும் கூட்டுப் பொறுப்பேற்பினையும் செய்வதற்கான முன்மாதிரிகளையும் தாசீசியஸ் கடைப்பிடித்துள்ளார்.

 

ஈழக்கூத்தன் ஏ. தாசீசியஸ் என்கிற இந்தத் தொகுப்புநூலானது தாசீசியசின் பவளவிழா மலராக வெளிவந்துள்ளபோதும் இந்தத் தொகுப்பினூடாக தாசீசியஸ் என்கிற ஆளுமை பற்றி அறிந்துகொள்வதற்கு மேலாக ஈழத்தின் பண்பாட்டு வரலாற்றினை அறிவதற்கான முக்கியமான ஒரு தொகுப்பாகவும் அமைந்துள்ளது.  குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற ஊடகத்துறை, நாடகம் சார்ந்த செயற்பாடுகள் அவற்றினூடாக நடைபெற்ற பண்பாட்டுப் பரிமாற்றம் போன்றவற்றைப் புரிந்துகொள்ளவும் அதற்கும் மேலாக தாசீசியஸின் தொலைநோக்கான சில வேலைத்திட்டங்கள், தலைமைத்துவப் பயிற்சி, சமூக உறவுகளைக் கட்டியெழுப்புவது பற்றிய அவரது அக்கறை மற்றும் சமூக இயங்கியல் குறித்த அவரது அவதானம் ஆகியன குறித்து இந்த நூலில் உள்ள தரவுகளின் அடிப்படையிலேயே மிக விரிவாகப் பேசக்கூடியதாக இருப்பதுடன் இவை ஒருவிதத்தில் முன்மாதிரியாகவும் இருக்கின்றன.  இந்தப் புத்தகத்திற்குள் நான் புக முன்னர் எஸ்.கே. விக்னேஸ்வரன் சொன்னது சரிதான், ”தாசீசியஸ் முக்கியமான ஒருவர், அவரைப் பற்றிய இப்படியான தொகுப்பொன்று வந்திருப்பது நல்ல விடயம்”

 1. ஜூன் 2, 2019 அன்று ரொரன்றோவில் இடம்பெற்ற நாடகர் ஊடகர் ஏடகர் ஏ. சி, தாசீசியஸ் என்கிற நிகழ்வில் ஆற்றப்பட்ட உரையின் கட்டுரை வடிவம்.  இது ஜூலை மாத தாய்வீடு இதழிலும் பிரசுரமானது.
 2. 2.  இங்கே பகிரப்பட்டிருக்கின்ற ஓவியங்கள் சகரா பிலிம்ஸ் கலைஞர்களால் எடுக்கப்பட்டவை.  அவர்களுக்கு நன்றிகள்.