முருகேசு பாக்கியநாதன் சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டரின் தமிழ்ச்சேவை என்கிற தொடரொன்றினை தாய்வீடு பத்திரிகையில் எழுதிவந்தார்.  அக்காலப் பகுதியில் தாய்வீட்டில் வெளிவந்துகொண்டிருந்த பல்வேறு தொடர்கள் அடிப்படையில் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடையனவாக இருந்தன.  அவற்றையெல்லாம் தொடர்ந்து படித்துவந்ததுடன் அந்த முயற்சிகள் பற்றிய எனது கருத்துகளையும் தாய்வீடு ஆசிரியர் டிலிப்குமார் அவர்களுடன் பகிர்ந்தே வந்தேன்.  அந்த வகையில் தான், எனக்கு முருகேசு பாக்கியநாதன் அவர்களுடனான நேரடி அறிமுகமும் ஏற்பட்டிருந்தது.  அந்த அறிமுகத்தினூடாக அவருடன், அவர் இந்தத் தொடரினை எழுதிக்கொண்டிருந்த காலப்பகுதியிலேயே தொடர்ச்சியாயப் பேசுவதற்கும் உரையாடுவதற்குமான சந்தர்ப்பங்கள் எனக்கமைந்தன.  ஆவணப்படுத்தல் பற்றியும் வரலாற்றெழுதியல் பற்றியும் பிரக்ஞைபூர்வமான புரிதலுடன் தொடர்ந்தியங்குவதுடன் தனது செயற்பாடுகளின் ஊடாக சமூகநீதிக்கான அக்கறையையும் வெளிப்படுத்துபவர் முருகேசு பாக்கியநாதன்.  அந்த ஆர்வத்தினதும் அக்கறையினதும் தொடர்ச்சியான ஒரு செயற்பாடாகவே கல்விக் கண் திறந்த கோவில்கள் என்கிற இந்த நூல் அமைகின்றது.  ரொரன்றோவில் இடம்பெறவிருக்கின்ற இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகவுரை வழங்குமாறு முருகேசு பாக்கியநாதன் என்னிடம் கேட்டுக் கொண்டார்.  நூலொன்றுக்கு வெளியீட்டுரை வழங்குவது என்பது அணுகாது அகலாது தீக்காய்வது போன்றது.  நூலை அணுக இருக்கின்ற ஒரு வாசகருக்கு நூல் பற்றியும் அதன் உள்ளடக்கம் பின்னணிபற்றியதுமான அறிமுகமொன்றினை வழங்குவதை நோக்காகக் கொண்டு இந்த அறிமுகவுரையினை வழங்குகின்றேன்.

MP 1

கல்விக் கண் திறந்த கோவில்கள் என்கிற இந்த நூலானது ஈழத்தில் நூறாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப் பாடசாலைகளின் வரலாறு, மற்றும் விபரங்கள் அடங்கிய ஆவணத் தொகுப்பாகும். ஆரம்பத்தில் வெளிநாட்டவர்களின் தமிழ்ச் சேவை என்கிற பெயரில் ஈழத்தில் வடக்கு கிழக்கில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவப் பாடசாலைகள் பற்றிய தொடரினையே  முருகேசு பாக்கியநாதன் தாய்வீட்டில் எழுதிவந்தார்.  கிட்டத்தட்ட 28 பாடசாலைகளை இந்தத் தொடரில் முருகேசு பாக்கியநாதன் எழுதியிருந்தார்.  அதன் தொடர்ச்சியாக அதே தாய்வீடு பத்திரிகையில் வடக்குக் கிழக்கில் நூறாண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட சைவப் பாடசாடசாலைகள் பற்றிய தொடரொன்றினையும் முருகேசு பாக்கியநாதன் எழுதிவந்தார். அந்தத் தொடரில் இருபது பாடசாலைகள் பற்றிய விபரங்களையும் வரலாற்றினையும் திரட்டி ஆவணப்படுத்தியிருந்தார்.  ஈழத்தைப் பொறுத்தவரை அங்கிருக்கின்ற பாடசாலைகள் பற்றிய இத்தகைய ஒரு ஆவணப்படுத்தல் இதற்கு முன்னர் நடக்கவில்லை என்றே கருதுகின்றேன்.  ஒடுக்கப்படுகின்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுகின்ற மக்கள் ஆவணப்படுத்தல் என்பதை ஓர் அரசியற் செயற்பாடு என்ற புரிதலுடன் முன்னெடுப்பது அவசியமானது.  அந்த வகையில் ஈழத்தின் தமிழ்ப் பாடசாலைகளின் வரலாற்றைத் தொகுப்பது என்கிற இந்தப் பெருமுயற்சியை எடுத்த முருகேசு பாக்கியநாதனுக்கு மதிப்புக் கலந்த நன்றியும் பாராட்டுகளும்.

இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு மற்றும் அதை அண்டிய காலப்பகுதிகள் ஈழத்து சமூக, பண்பாட்டு, அரசியல் வரலாற்றுத் தளங்களில் மிக முக்கியமான காலப்பகுதிகளாகும்.  இந்த நூல் அந்த வகையில் வெவ்வேறு வரலாற்றெழுதியல்களுக்கான தரவுகளைத் தரவல்ல ஆவணமாகவும் அமைகின்றது.  ஈழத்தின் தமிழ்க் கல்வி வரலாறு என்பது மிக நீண்ட பாரம்பரியம் உடையது.  பொதுவாக மூன்று தமிழ்ச்சங்கங்கள் பற்றி அடிக்கடி பேசப்படுவது வழமை.  அதன் தொடர்ச்சியாக நான்காவது தமிழ்ச்சங்கமாக மதுரை பொ. பாண்டித்துரையனார் 1901 இல் உருவாக்கிய தமிழ்ச் சங்கத்தைக் குறிப்பிடுவது வழக்கம்.  ஆயினும் யாழ்ப்பாணத்து மன்னர்கள் நான்காவது தமிழ்ச் சங்கம் ஒன்றை  13 ஆம் நூற்றாண்டுக்கும் பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கினார்கள் என்பதையும் அந்தத் தமிழ்ச்சங்கத்தின் நூலகமாகவே சரஸ்வதி மகாலயம் இருந்தது என்பதையும் இன்று அறியமுடிகின்றது.  இது குறித்த முக்கியமான ஒரு ஆய்வுநூலினை பாலச்சந்திரன் ஞானசேகரன் அவர்கள் எழுதியிருக்கின்றார்.[i] இதன்வழியாக, மிக நீண்டதொரு கல்விப் பாரம்பரியம் ஈழத்தில் இருந்துள்ளது என்பதும் கல்வியூட்டல்கள் பல்வேறு தளங்களில் நிகழ்ந்துள்ளது என்றும் கூறலாம்.  ஆயினும், அந்த மரபுவழிக் கல்வியாகட்டும் பின்னர் போர்த்துக்கீசியர், ஒல்லாந்தர் காலத்திலும் அமைக்கப்பட்ட பாடசாலைகளும் பின்பற்றப்பட்ட கல்விமுறைமைகளும் சமூகத்தில் பெரும்பான்மையான மக்களால் எட்ட முடியாததனவாகவே இருந்தன.  ஆயினும் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில், குறிப்பாக மிசனறிகளின் வருகையுடன் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளும் அவற்றினூடாகப் பின்பற்றப்பட்ட கல்விமுறைகளும் ஈழத்தில் நவீனகல்வி வரலாற்றை உருவாக்குவதுடன் கல்வியறிவு பரவலாகக் கிடைக்கப்படுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்தது எனலாம்.  குறிப்பாக இந்தக் காலப்பகுதியில் புரட்டஸ்தாந்தியர்களும் கத்தோலிக்கர்களும் மதம் பரப்பும் தமது நோக்கிற்காக மூன்று முக்கியமான செயற்பாடுகளை முன்னெடுத்தனர்[ii],

  1. பாடசாலைகளை அமைத்து அங்கு ஆங்கிலக் கல்வியை வழங்குவதனூடாக மதப்பரப்புதை பரவலாக்குவது
  2. அச்சியந்திரங்களூடாக மதப்பிரச்சார நோக்கிலான பிரசுரங்களையும் பைபிளையும் பரப்புதல்
  3. நிறுவன கட்டமைப்புகளை உருவாக்கி மதமாறியவர்களை ஒன்றிணைத்தல்

mp 2ஆரம்பத்தில் ஆங்கிலேயரால் பின்பற்றப்பட்ட இந்தமுறைமைகளை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து, மதமாற்றத்துக்கு எதிரான ஒரு பொறிமுறையாக சுதேசிகளான பௌத்தர்களும் சைவர்களும் பின்பற்ற ஆரம்பித்தனர்.  இந்தச் செயற்பாடுகளின் பிரதான நோக்கங்களாக மதமாற்றம், வணிகநலன்கள் என்பன இருந்தபோதும் இந்தச் செயற்பாடுகளின் ஊடாகவும் இந்தச் செயற்பாடுகளுக்கு எதிராக சுதேசிகள் முன்னெடுத்த பொறிமுறைகளின் ஊடாகவும் சமூகநீதிக்கான அசைவுகள் மற்றும் சமூக நீதியை நோக்கிய முன்னோக்கிய, பின்னகர்த்துகின்ற போக்குகள் குறித்தும் நாம் பிறிதாக, விரிவாக ஆராயவேண்டும்.  இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்ற பாடசாலைகள் இந்தப் பின்னணியுடன் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவ, சைவப் பாடசாலைகளாகும்.  இந்தப் பாடசாலைகளின் நிறுவுனர்களின் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் காலனியவாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள், இந்துபோர்ட் ஆரம்பித்த பாடசாலைகள், இந்துக்கல்லூரி போர்ட் ஆரம்பித்த பாடசாலைகள், நாவலராலும் அவரின் அடியொற்றியும் ஆரம்பிக்கப்பட பாடசாலைகள், தனிப்பட்ட பிரமுகர்கள்/புரவலகளால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் என்று வெவ்வேறு பின்னணிகளையும் நாம் அவதானிக்கலாம்.  ஈழத்தைப் பொறுத்தவரை அங்கு நிலவிய இறுக்கமான சாதிய ஒடுக்குமுறைகள், சமூக ஒடுக்குமுறைகள் என்பவற்றுக்கு எதிராக ஒரு சமூக அசைவியக்கம் உருவாகுவதற்கான வெளி இந்த நவீன கல்வியின் வருகையுடனும் பாடசாலைகளின் ஆரம்பத்துடனுமே உருவாகின்றது.  இக்காலப்பகுதியிலான கல்விச் செயற்பாடுகள் குறித்த ஆய்வு நூல்களாக இதுவரை பேராயர் கலாநிதி எஸ் ஜெபநேசனின் தமிழின் நவீனமயமாக்கமும் அமெரிக்க மிஷனும், இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிஷனும், இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷனும் ஆகிய நூல்களையும், பேராசிரியர் சிவலிங்கராஜா எழுதிய பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க்கல்வி போன்ற நூல்களை ஓரளவு குறிப்பிடலாம், குறமகள் எழுதிய யாழ்ப்பாணத்தில் பெண்கள் கல்வி என்கிற நூலும் அண்மையில் வெளிவந்த முத்தான சொத்து என்கிற நூலும் அன்றைய காலத்திய பெண்கள் கல்வி குறித்த விபரங்களை உள்ளடக்கியிருப்பவை; இதற்கப்பால் ஆங்கிலத்தில் வெளியான சில ஆய்வுக் கட்டுரைகள்க் குறிப்பிடலாம். ஆயினும் அவை எவையுமே பாடசாலைகளின் வரலாற்றினை முழுமையாக ஆராயும் நோக்குடையனவோ அல்லது அது பற்றிய பட்டியலாக்கம் செய்யும் நோக்குடையனவோ அல்ல.  ஆய்வுகளுக்கும் அவற்றிலிருந்து புதிய கண்டடைதல்களை நோக்கிச் செல்லவும் வரலாற்றெழுதியலுக்கும் அடிப்படையான ஒரு தேவையாக தரவுகளைத் திரட்டுவதும் பட்டியலாக்கம் செய்வதும் அமைகின்றது. முருகேசு பாக்கியநாதன் அவர்கள் செய்திருப்பது அப்படியான ஓர் அரிய முயற்சியே.  ஒரு முதல் முயற்சி என்றவகையில் இதில் சில தரவுள் பிழையாக இருந்திருக்கின்றன.  ஓர் உதாரணமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1890 என்று இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1887 ஆ அல்லது 1890 என்பது குறித்த சர்ச்சைகளும் அவற்றுக்குப் பின்னர் இருக்கக் கூடிய அரசியலும் இந்த நூலின் தொடர்ச்சியாகப் பேசப்படக் கூடியன.  அதுபோல இன்னும் பல பாடசாலைகள் தவறவிடப்பட்டிருப்பதையும் முருகேசு பாக்கியநாதன் அவர்களே குறிப்பிட்டிருக்கின்றார்.  இவையெல்லாம் உள்வாங்கப்பட்ட திருத்தப்பட்ட முழுமையான பதிவு வருவதும் முக்கியமானது.  இந்நூலில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற பாடசாலைகளின் வரலாற்றைப் பற்றி உசாவுகின்றபோது தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து இந்நூலிலேயே முருகேசு பாக்கியநாதன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்,

”இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் இணையத்தளங்கள் நிறையவே சேவை செய்கின்ற(ன ஆனால்) பல பாடசாலைகளின் இணையத்தளங்கள் இயங்கவில்லை.  சிலவற்றில் விரிவான வரலாறுகள் பதியப்படவில்லை.  சில சிறிய பாடசாலைகள் கூட இணையத் தளங்களைப் பாவிக்கின்றார்கள்.  சில 100 வருடங்கள் கடந்த பாடசாலைகளுக்கு இணையத் தளங்களே இல்லை என்பது வேதனையானது.  பல பாடசாலைகள் முகநூல் வைத்துள்ளார்கள்.  ஆனால் அவைகள் ஒழுங்காகப் பேணப்படவில்லை.

தமிழரில் ஒரேயொரு குறையுள்ளது, அவர்கள் தமது வரலாறுகளை ஒழுங்காகப் பேணாததாகும்.  அந்தக்குறை கல்விக் கண்ணைத் திறந்த பாடசாலைகள் பற்றி இருக்கக்கூடாது என்பதற்காக இதனை முடிந்தளவில் ஒரு ஆவணமாகப் பதிவுசெய்கின்றேன்.  இந்த வரலாறு முழுவதுமாக முற்றுப்பெறவில்லை என்பதனை ஒத்துக்கொள்கின்றேன்.”

இந்த நூலினைத் தொகுப்பதற்கான உழைப்பில் முருகேசு பாக்கியநாதன் தரவுகளைப் பெறுவதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை அந்தக் காலப்பகுதிகளில் அவருடன் தொடர்பில் இருந்தவன் என்றவகையில் என்னால் முழுமையாக அறியமுடிகின்றது.  அவரது பிரதான தரவு மூலங்களாக பாடசாலை மலர்களும், சில சந்தர்ப்பங்களில் இணையத்  தளங்களும் வலைப்பங்களுமே அமைந்திருந்தன.  ஆயினும் சேகரிக்கப்பட்ட தரவுகளைத் தொகுத்து ஆவணமாக்குவதில் தொழில்முறையிலான செம்மையாக்கல்கள் இல்லாமையின் பாதிப்பினையும் அவதானிக்கமுடிகின்றது.  அதற்கப்பால் பட்டியலாக்கம் செய்தது, தரவுகளைத் திரட்டி தொகுத்து வெளியிட்டிருப்பது என்ற வகையிலேயே முருகேசு பாக்கியநாதனின் கல்விக் கண் திறந்த கோவில்கள் ஒரு முதல்நிலை ஆய்வுச்செயற்பாடாகும்.


 

[i] மிகச் சிறிய நூலேயானாலும் பல்வேறு தகவல்களைத் தொகுத்து மிகுந்த தேடலுடனே இந்த நூலினை பாலச்சந்திரன் ஞானசேகரன் எழுதியுள்ளார்.  ஞானம் பதிப்பகம் வெளியிட்ட பாலச்சந்திரன் ஞானசேகரன் எழுதி ஈழமும் தமிழும் என்கிற தொடராக வெளிவந்த

  1. யாழ்ப்பாணத்து மன்னர் நிறுவிய தமிழ்ச்சங்கம்
  2. சைமன் காசிச்செட்டியின் அகராதி முயற்சிகள்
  3. ஈழத்தின் முதலாவது வானசாஸ்திர நூல் கிரகசார எண்ணல் (கி.பி. 1506)
  4. தால விலாசம்: ஈழத்தில் கிடைக்கப்பெறும் அதிபழைய விலாச நாடகம்
  5. மெல்ஹொ பாதிரியார் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு (1759)
  6. சித்திரக்கவித் திரட்டு
  7. சமூகம் வழங்கிய புலமைத்துவ அடையாளங்கள் (கி.பி. 1900 வரை)

ஆகிய நூல்கள் மிகவும் முக்கியமானவை.  இந்த நூல்கள் அனைத்தையும் நூலகம் இணையத்தளத்தில் இருந்து ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்.  பாலச்சந்திரன் ஞானசேகரனின் நூல்களைப் பின்வரும் இணைப்பினூடாகப் பெற்றுக்கொள்ளலாம்

https://tinyurl.com/y27y9e62

[ii] கணநாத் ஒபயசேகரவின் ஆய்வுகள் குறித்த ஓர் அறிமுகமாக க. சண்முகலிங்கம் எழுதிய இலங்கையில் பௌத்தமும் தேசியவாதமும் என்ற நூலில் இடம்பெற்றுள்ள “பௌத்த சமய சீர் திருத்த இயக்கமும் புரட்டஸ்தாந்திய பௌத்தத்தின் தோற்றமும் என்ற நூலில் இந்த மூன்று செயற்பாடுகளை எப்படி புரட்டஸ்தாந்தியர்களும் கத்தோலிக்கர்களும் முன்னெடுத்தார்கள் என்றும் பௌத்தம் அதை எப்படிக் கையாண்டது என்றும் க.சண்முகலிங்கம் சுருக்கமாக எடுத்துரைக்கின்றார்.  ஈழத்தின் மிக முக்கியமான ஆய்வறிஞர்களில் ஒருவராக கந்தையா சண்முகலிங்கம் அவர்களின் முக்கியமான நூல்களில் ஒன்றான இலங்கையில் பௌத்தமும் தேசியவாதமும் என்கிற நூல் சமூகவெளி படிப்பு வட்டம் வெளியிடும் சமூகவெளி சிறுநூல் வரிசையில் மூன்றாவது நூலாக வெளிவந்துள்ளது.

வரலாற்றுரீதியாகப் பல்வேறு விடயங்களைப் பகிரக்கூடிய ஓர் ஆளுமை முருகேசு பாக்கியநாதன். அவர் எழுதிய பனையியல் என்பது துறைசார்ந்து ஓர் முதன்முயற்சியாகும்.  அந்த நூலினை நூலகம் இணையத் தளத்தில் பார்க்கலாம்.

இக்கட்டுரை மே 4, 2019 அன்று ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் இடம்பெற்ற நூல் அறிமுக விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவமாகும்.  ஜூன் 2019 தாய்வீடு பத்திரிகையிலும் இது இடம்பெற்றது.