“எம்.ஏ. நுஃமானின் கவிதையும் அரசியலும்: ஈழத்து அனுபவம்” நூல் அறிமுகம்

கவிதையும் அரசியலும் என்கிற இந்த இந்த நூலின் தலைப்பே முக்கியமானதான ஒன்றாகப்படுகின்றது.  ஈழத்தில் தேசிய இனப்பிரச்சனை பற்றிய எனது வாசிப்புகளின்போது முஸ்லிம்களின் அடையாள உருவாக்கம் பற்றிய வாசிப்புகளில் நுஃமான் எழுதிய Sri Lankan Muslims – Ethnic Identity within Cultural Diversity, என்ற நூல் முக்கியமான ஒன்றாக அமைந்திருந்தது. முஸ்லிம்கள் தேசிய இனமாக உருப்பெற்ற வரலாற்றினையும், இனமுரண்பாட்டின் வரலாற்றறையும் அந்த நூலில் அவர் ஆய்வுபூர்வமாக முன்வைத்திருப்பார்.  ஒரு கவிஞராகவும், மொழியியலாளராகவும் அதுவரை நான் அறிந்திருந்த நுஃமானின் அரசியல் பிரக்ஞையை அந்த நூலின் மூலமாக அறிந்துகொண்டேன்.  தற்போது கவிதையும் அரசியலும் என்கிற இந்த தொகுப்பினை வாசிக்கின்றபோது அவரது நோக்கும் நிலைப்பாடும் அவரது எழுத்துகளிலும் மதிப்பீடுகளிலும் எவ்விதமான தாக்கத்தை உருவாக்கின என்பதை நன்குணர முடிகின்றது.  அழகியல், அக உணர்வு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதான போர்வையில் இலக்கியத்தில் அரசியல் நீக்கம் செய்யும் போக்கு வலிதடைந்தும் வெற்றியடைந்தும் வருகின்ற சூழலில் இந்த நூலின் வருகை முக்கியத்துவமானது என்றே கருதுகின்றேன்.

கவிதைக்கும் அரசியலுக்கு உள்ள தொடர்புபற்றி நுஃமான் நூலின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“கவிதையும் அரசியலும் பற்றிப் பேசுவது முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப்போடுவது போன்றது என்று கருதும் இலக்கிய விற்பன்னர்கள் சிலர் இன்றும் இருக்கின்றார்கள்.  அவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் கவிதை எப்பொழுதும் அரசியலுடன் ஏதோ ஒருவகையில் தொடர்புகொண்டே வந்திருப்பதை நாம் மறுக்கமுடியாது.
அரசியல் என்பதை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பது இங்கு முக்கியமானது.  அதன் குறுகிய அர்த்தத்தில் அரசியல் என்பது ஆட்சி அதிகாரம் தொடர்பான விவகாரங்களைக் குறிக்கின்றது.  ஆனால் அதன் பரந்த அர்த்தத்தில் அரசியல் என்பது மனிதர்களின் அனைத்து சமூக நடத்தைகளையும் செயற்பாடுகளையும் சமூகப் பிரச்சனைகளையும் உள்ளடக்கும்.  அவ்வகையில் பார்த்தால் அரசியலுக்குப் புறம்பான மனித விவகாரங்கள் எவையும் இல்லை எனலாம்.  மத அரசியல், மொழி அரசியல், பண்பாட்டு அரசியல் என்றெல்லாம் நாம் இன்று பேசுகிறோம்.  இலக்கிய அரசியல், வாசிப்பின் அரசியல் என்பவற்றையும் நாம் இவற்றோடு சேர்த்துக்கொள்ளலாம்.” (முன்னுரை, பக்கம் 9)

இந்நூலிலுள்ள 45 கட்டுரைகளில் 37 கட்டுரைகள் வெவ்வேறு கவிதைத் தொகுப்புகளுக்கு நுஃமான் எழுதிய முன்னுரைகளாக அமைகின்றன, மீதமுள்ள கட்டுரைகளில் முதல் மூன்று கட்டுரைகளான

  1. இனத்துவ முரண்பாடும் இலக்கியவெளிப்பாடும்
  2. ஆசிய நாடுகளில் விடுதலைப் போராட்டமும் கவிதையும்
  3. கவிதையும் அரசியலும்: ஒரே புள்ளியில் தொடங்கிய நான்கு கவிஞர்கள்

ஆகியன மிகவும் முக்கியமானவை. 

இந்தக் கட்டுரைகளை இலக்கிய பிரதிகளூடாக எப்படியாக ஒரு வரலாற்று எழுதுகையைச் செய்யமுடியும் என்பதற்கான ஆதாரமாக எடுத்துச் சொல்லமுடியும்.  இன்றைய எனது அறிமுக உரையிலும் இந்த மூன்று கட்டுரைகளையைப் பின்னணியாக வைத்தே எனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள இருக்கின்றேன்.

இனத்துவ முரண்பாடும் இலக்கிய வெளிப்பாடும் பின்காலனித்துவ இலங்கையில் தமிழ்க் கவிதை என்கிற முதலாவது அத்தியாயம்

  1. இலங்கைத் தமிழர்கள்: மொழித் தேசியமும், ஈழ விடுதலைப் போராட்டமும் கவிதையும்
  2. இன முரண்பாடும் முஸ்லிம் அடையாளமும் கவிதையும்
  3. வர்க்கமும் இனத்துவ முரண்பாடும்: இலங்கைத் தமிழ்க் கவிதையில் மலையகத் தமிழரின் குரல்
  4. மதமும் இனத்துவமும் வாசிப்பின் அரசியலும்
  5. இனத்துவம் வன்முறை பால்நிலை: இரு பெண் கவிஞர்களின் இரண்டு கவிதைகள்
  6. இனத்துவத்துக்கும் தேசியவாதத்துக்கும் அப்பால்: இன வன்முறைக்கும் யுத்தத்துக்கும் எதிரான கவிதைக்குரல்கள்

என்கிற ஆறு அத்தியாயங்களைக் கொண்டது.  உண்மையில் இந்தக் கட்டுரை ஒரு தனிப்பிரசுரமாக கொள்ளத்தக்கது; ஈழத்தின் இனமுரண்களை இலக்கிய சாட்சியங்களூடான அணுகுகின்ற தன்மையை இந்தக் கட்டுரையில் அவதானிக்க முடியும்.  தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய தேசிய இனங்கள் தமக்கெதிரான ஒடுக்குமுறைகளை எப்படி எதிர்கொண்டார்கள், அவற்றின் பொதுத்தன்மைகள் என்ன என்பதை முதலிரு கட்டுரைகளில் எடுத்துரைக்கும் நுஃமான் மூன்றாவது கட்டுரையில் மலையகத் தமிழர்களின் வரலாற்றையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தையும் எடுத்துக் கூறி, இவை எவ்வாறு சி.வி. வேலுப்பிள்ளை, வண்ணச்சிறகு ஆகியோரின் கவிதைகளில் வெளிப்படுத்தப்படுகின்றன என்பதையும் கூறுகின்றார்.  யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது நுஃமான் எழுதிய “புத்தரின் படுகொலை” என்கிற கவிதை எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதைக் கூறுகின்றார்.  இதில் நுஃமான் ஒரு விடயம் சுவாரசியமானது.  சிங்களவர் மத்தியில் இந்தக் குற்றம் பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்தும் நோக்குடன் இந்தக் கவிதையை சிங்களத்தில் மொழிபெயர்த்துப் பயன்படுத்திய பேராசிரியர் கார்லோஸ் பொன்சேகா 1990 களில் நடந்த பொதுத்தேர்தல்களிலும் ஜனாதிபதித் தேர்தல்களிலும் இந்தக் கவிதையைப் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியையும் காமினி திஸநாயக்கவையும் குற்றஞ்சாற்றுகின்றார்.  ஆயினும் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் புலிகளே யாழ்ப்பாண நூலகத்தை எரித்தார்கள் என்கிற பொய்யை தனது சுயசரிதையில் எழுதியதைக் கார்லோஸ் பொன்சேகா நம்பிக்கொண்டு காமினி திஸநாயக்கவின் குடும்பத்தினரிடமும் மன்னிப்பைக் கேட்டுக்கொண்ட தாயும், தனது முன்னைய நிலைபாட்டில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்ததாயும் நுஃமான் குறிப்பிடுகின்றார். இன்றைய Post-truth காலகட்டத்தில் அரசியல் தலைவர்கள் சுயசரிதை என்ற பெயரிலும், மோசடியான தரவுகளை “ஆய்வுகள்” என்ற பெயரிலும் புத்தகங்களாக வெளியிடுவதற்குப் பின்னாலுள்ள அரசியலை இங்கே சுட்டிக்காட்டவேண்டியிருக்கின்றது.  அதுமட்டுமல்ல; யாழ்ப்பாண நூலகத்தை எரித்த குற்றவுணர்விலிருந்து பௌத்த-சிங்களப் பேரினவாதத்தை விடுதலை செய்யவேண்டும் என்ற மனநிலைக்கு வந்துசேர்ந்திருந்த கார்லோஸ் பொன்சேகாவுக்கு இன்ஸ்பெக்ரர் எழுதிய சுயசரிதை கொழுகொம்பாகப் பயன்பட்டிருக்கின்றது.

1956 தேர்தலில் ஆட்சிக்கு வந்த 24 மணிநேரத்தில் சிங்களம் மட்டும் ஆட்சிமொழியாக்கப்படும் என்கிற வாக்குறுதியுடன் தேர்தலில் நின்ற பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஐக்கிய முன்னணி பெருவெற்றிபெற்று ஆட்சி அமைத்தபோதும் அதற்கு எதிர்வினையாக தமிழ் உணர்வை முன்னெடுத்த தமிழரசுக் கட்சியே வடக்கு, கிழக்கில் வெற்றி பெருகின்றது.  இந்தச் சூழலில் வந்த தமிழ்க் கவிதைகளில் தமிழர்களின் இனத்துவ உணர்வு வெளிப்படுத்தப்பட்டது.  1950 முதல் 60 வரையான காலப்பகுதிகளில் மொழித் தேசியவாத கருத்துநிலையையும் உணர்ச்சியூட்டும் -இதற்கு நுஃமான சொற்தீவிரவாதம் Verbal Militancy என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார்- கவிதைகள் எழுதப்பட்டதையும் இந்தக் கவிதைகளின் பிரதான போக்குகள் தமிழ்ப்பற்று, சிங்கள மேலாதிக்கத்துக்கு  எதிர்ப்பு, தமிழ் மொழியினதும் தமிழர்களதும் வெற்றியும் விடுதலையும் என்று அமைந்ததையும்,  மஹாகவி, நீலாவணன், முருகையன், இராஜபாரதி, காசியானந்தன் போன்றோர் இத்தகைய கவிதைகளை எழுதியோரில் முதன்மையானோர் என்பதையும் நுஃமான் சுட்டிக்காட்டுகின்றார். 

ஆயினும் 1958இற்குப் பின்னர் ஈழத்து இலக்கிய வெளிப்பாடுகளில் தேசியவாத கருத்தியலைவிட மார்க்சிய சோசலிச கருத்தியல்கள் ஆதிக்கம் செலுத்தியைதும், முன்னர் தேசியவாத கவிதைகளை எழுதிய மஹாகவி, நீலாவணன், முருகையன் போன்றோரின் நிலைப்பாடும் தேசியவாத உணர்வுநிலையில் இருந்து மார்க்சிய நிலைப்பட்ட முற்போக்கு நிலைக்கு மாறியதாகவும் நுஃமான் குறிப்பிடுகின்றார்:

“இந்த அரசியல் பின்னணியில் பெரும்பாலான எழுத்தாளர்களும் கவிஞர்களும் பல்வேறு அளவில் சோசலிச இலட்சியங்களின் செல்வாக்குக்கு ஆட்பட்டனர்.  இவர்களுட் பலர் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்தனர் அல்லது அவற்றின் அனுதாபிகளாயினர்.  அவர்கள் தம்மை முற்போக்கு இலக்கியவாதிகள் என அடையாளப்படுத்தினர்.  இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தமிழ் இலக்கியத்தில் சோசலிச இலட்சியங்களைப் பிரச்சாரப்படுத்துவதில் முன்னணிப் பங்குவகித்துத.  சமூக சமத்துவம். இன ஒருமைப்பாடு, தேசிய ஒற்றுமை என்பவற்றை அவர்கள் நம்பினர்.  சோசலிசம் தான் இனத்துவ முரண்பாட்டுக்கான ஒரே தீர்வு என்பதை அவர்கள் உறுதியாக நம்பினர்.  சாதி ஒடுக்குமுறை, வர்க்க முரண்பாடு, பொருளாதாரச் சுரண்டல், போன்ற சமூகப் பிரச்சனைகள் இக்காலகட்த்ட தில் தோன்றிய தமிழ்ப் புனைகதை, கவிதைகளின் பிரதான தொனிப்பொருட்கள் சிலவாகும்” (பக்கம் 21)

ஆயினும் பாராளுமன்ற பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட இடதுசாரிகளின் சந்தர்ப்பவாதத்தாலும் 1972 இல் வெளிப்படையாகவே சிங்கள மொழியையும் பௌத்த மதத்தினையும் முதல்நிலைப்படுத்திய யாப்பு இடதுசாரி அமைச்சராலே வரையப்பட்டதாலும் ஏற்பட்ட ஏமாற்றம் தமிழர்களின் உணர்வுநிலையை தேசியவாதத்தினை நோக்கியும் தீவிரவாதத்தினை நோக்கியும் கொண்டுசென்றதையும் இந்தப் போக்கு ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் வெளிப்பட்டதையும் குறிப்பிடும் நுஃமான் அதற்கான இலக்கிய சாட்சியங்களையும் குறிப்பிடுகின்றார்.

இந்த நூலிலுள்ள “கவிதையும் அரசியலும்: ஒரே புள்ளியில் தொடங்கிய நான்கு கவிஞர்கள்” என்கிற கட்டுரையில் சுபத்திரனையும் புதுவை இரத்தினதுரையையும் குறித்து நுஃமான் செய்கின்ற ஒப்பீடு முக்கியமானதும் நாம் கருத்திற்கொள்ளவேண்டியதுமாகும்.  சோசலிசப் புரட்சியிலும் ஆயுதப் போராட்டத்திலும் நம்பிக்கைகொண்டிருந்தவர்களும் மாவோவிய கருத்துநிலையைச் சார்ந்திருந்தவர்களும் சமகாலத்தவர்களுமான சாருமதி, சுபத்திரன், புதுவரை இரத்தினதுரை, சண்முகம் சிவலிங்கம் ஆகிய நால்வரது கவிதைகளதும் உள்ளடக்கம் குறித்து இந்தக் கட்டுரை ஆய்கின்றது. 

ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சித் தொடர்புகளுடன் இருந்த சுபத்திரன் பின்னர் மார்க்சியக் கருத்தியலை உள்வாங்கி சீனச் சார்புக் கம்யூனிஸ்ட் அங்கத்தவராகி தீவிரமாகச் செயற்படுகின்றார்.  1970 இல் அவர் கட்சியிலிருந்து விலகினாலும், வர்க்கப் போராட்டமே சமத்துவத்துக்கான தீர்வென்பதில் அவர் உறுதியாகவே இருந்திருக்கின்றார். ஆதிக்க சாதியைச் சார்ந்த அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து உழைக்கின்றார். இடது சாரிக் கோட்பாட்டில் தீவிர நம்பிக்கையுடன் செயற்பட்டுவந்த சுபத்திரன் போன்றோருக்கு 70களின் பின்னர் இலங்கையில் இடதுசாரிக்கட்சிகளின் வீழ்ச்சி பலத்த ஏமாற்றத்தை தருகின்றது.  இதனை நுஃமான் பின்வருமாறு சொல்கின்றார்:

“1971 இன் பின்னர் இலங்கையில் இட துசாரி இயக்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து தோல்வியுற்ற பின் உண்மையான இட துசாரிகள் பலர் பற்றுக்கோடற்று விரக்தியுற்று வீழ்ச்சியடைந்தமை நமது சமகால வரலாறு. சுபத்திரனின் தற்கொலையை இந்தப் பின்னணியிலும் விளங்கிக்கொள்ள முடியும் என்று தோன்றுகின்றது”.

இதனை ஒரு புரட்சியாளனின் அவலச்சாவு என்று குறிப்பிடுகின்றார் நுஃமான்.  அதேநேரம் புதுவை இரத்தினதுரையைப் பொறுத்தவரை அறுபதிகளிலும் எழுபதுகளிலும் சுபத்திரனை ஒத்த அதே அரசியல் நிலைப்பாட்டில் இருந்த புதுவை, எண்பதுகளில் தமிழ்ச் தேசிய விடுதலை இயக்கத்தை நோக்கி நகர்கின்றார்.  சுபத்திரனின் “அடக்கப்பட்ட இனத்தின் கவிதை” ஐயும் புதுவையின் “தென்னிலங்கைத் தோழனுக்கு” என்ற கவிதையையும் ஒப்புநோக்குகின்றார் நுஃமான்.  சுபத்திரனின் கவிதையில் தொனிக்கின்ற அசைக்கமுடியாத நம்பிக்கையும், புதுவையின் கவிதையில் தொனிக்கின்ற ஏமாற்றம் நிறைந்த, ஆனால் நம்பிக்கை இன்னும் முற்றாக சிதைந்துவிடாத தொனியும் கவனிக்கத்தக்கது.

சமூக விடுதலைக்கான போராட்டத்தில் கோட்பாடொன்றின்மீதோ அல்லது அமைப்பொன்றின் மீதோ நம்பிக்கை வைத்துச் செயற்படத் தொடங்குகின்ற அர்ப்பணிப்புமிக்க ஒருவருக்கு அந்தக் கோட்பாட்டின் மீதான நம்பிக்கை பொய்த்துப் போகும்போதோ அல்லது அமைப்பு சிதைந்துபோகும்போதோ ஏற்படுகின்ற கையறுநிலை உளவியல் ரீதியில் அவர்களைச் சிதைத்தழிக்கக் கூடியது.   செழியனின் மரணத்திற்குப் பின்னர் நடந்த நினைவுகூர்தலிலும் இதனைக் குறிப்பிட்டிருந்தேன்.  அதுவரை வர்க்க விடுதலைக்காகக் குரலெழுப்பிய புதுவை பின்னர் இனவிடுதலைக்காக குரலெழுப்பவராகவே மாறியது அவரது தேர்வு; ஆனால் அந்தத் தேர்வை இந்தப் பின்னணியுடனும் சேர்த்துப் பார்க்கலாம்.

எண்பதுகளின் பின்னர் ஈழத்துக் கவிதைகளில் தேசியவாத அரசியலும் இன உணர்வும் வெளிப்பட்டமையைச் சுட்டிக்காட்டி அவற்றின் வெளிப்பாடுகளில் ஒன்றாக “மரணத்துள் வாழ்வோம்” என்கிற தொகுப்பு வெளிவந்ததை குறிப்பிடும் நுஃமான், அதன் பின்னர் முஸ்லிம்கள் தம்மை ஒரு தனித் தேசியமாக உணரத் தோன்றிய வரலாற்றையும், “மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள்” என்ற தொகுப்பு அதன் வெளிப்பாடாக வெளிவந்தமையையும் குறிப்பிடுகின்றார்.  மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் தொகுப்பில் எழுதியுள்ள 50 கவிஞர்களில் 5 பேர் மாத்திரம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர்களாக இருக்கின்ற அதேவேளை, கிழக்கைச் சேர்ந்த எந்த தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளும் தொகுப்பில் சேர்க்கப்படவில்லை என்பதையும் சண்முகம் சிவலிங்கம், சிவசேகரம் ஆகிய இருவரும் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட வன்முறைகளுக்கு எதிரான தமது உணர்வுகளையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தியபோதும் கூட அவர்கள் கவிதைகள் இந்த தொகுப்பில் இடம்பெறவில்லை என்பதையும் குறிப்பிடுகின்றார். ஒரு விதத்தில் கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஆழமான பிளவினையும் முரணையும் காட்டுவதாக இதைக்கொள்ளமுடியும்.    

இந்நூலில் ஓரிட த்தில் ஈழத்தில் தமிழ்க் கவிதைகளில் தமிழ்த் தேசியவாதமும் மொழி, இன உணர்வும் வெளிப்பட்டமையை இந்தியச் சூழலுடன் ஒப்பிட்டு பின்வருமாறு கூறுகின்றார்:

“தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு காலகட்டத்தில் திராவிட இயக்கத்தால் ஊட்டிவளர்க்கப்பட்ட மொழி உணர்வு, மொழித் தேசியவாதக் கருத்துநிலையாலும் அவர்கள் (ஈழத்தில் மொழிப்பற்று, மொழித்தேசியவாதக் கருத்துநிலையுடன் கவிதை எழுதினோர் – கட்டுரையாளர்) ஊக்கப்படுத்தப்பட்டனர்.  இக்கவிஞர்கள் தாங்கள் உருவாக்கிய கற்பனைப் போரில் மக்களையும் பங்குகொள்ளத் தூண்டும் வகையில் மிகை உணர்ச்சிப்பாங்கான மொழியையும் தாளக்கட்டு மிகுந்த யாப்பையும் பயன்படுத்தினர்.” (பக்கம் 19)

இந்த இடத்தில் ஈழத்தவர்கள் ஒருவிடயத்தை சுயவிமர்சனம் நோக்கில் அவதானிக்கவேண்டும், ஈழத்தில் இன்று தமிழ்த் தேசியம் மதவாதிகளின் கைகளைச் சென்றடைந்திருப்பதை நாம் அறிவோம்.  இதனை சிங்கள பௌத்த தேசியத்துக்கான எதிர்வினையாக சைவத் தமிழ் என்று நியாயப்படுத்திவிடுதல் கூடாது.  திராவிடக் கட்சியினர் முன்னெடுத்த மொழியுணர்வு, மொழிப்பற்று என்பவற்றில் மிகை உணர்ச்சிப் பாங்கு இருந்தபோதும், அதற்கும் அப்பால் அவர்களுக்காக வலுவான கோட்பாட்டுப் பின்புலமாக சுயமரியாதை, சமத்துவம் என்கிற சமூகநீதிக் கோட்பாடு இருந்தது.  தந்தை பெரியாரால் முன்வைக்கப்பட்ட சுயமரியாதைக் கோட்பாடும், திராவிட இயக்கங்களும், இடது சாரி இயக்கங்களும் முன்னெடுத்த பண்பாட்டுச் செயற்பாடுகளும் அவை மீளவும் மீளவும் சமத்துவம் என்பதையே தம் நோக்கமாகச் செய்த பிரச்சாரங்களும் முக்கியமானவை.  எனவே அங்கே மொழியுணர்வு என்பது மக்களைத் தாழ்மையில் இருந்து விடுதலைப் பெறுவதற்கு உற்சாகமூட்டும் பிரச்சாரமாகவே பயன்பட்டது.  ஆனால், ஈழத்தைப் பொருத்தவரை இன உணர்வு என்பதும் மொழியுணர்வென்பதும் பெருமிதமாகவே முன்னெடுக்கப்பட்டன.  இன்றுவரை தமிழ்த் தேசியக் கட்சிகள் ஈழத்தில் சமத்துவம், சமூக நீதியை என்பவற்றைத் தமிழ் அடிப்படைக் கொள்கைகளாகப் பேசாமையையும் இவற்றைப் பேசுகின்றவர்களையும் இவற்றைப் பேசிய தலைவர்களையும் ஒவ்வாமையுடனேயே பார்ப்பதையும் நாம் கவனத்திற்கொள்ளமுடியும்.

உண்மையில் இந்த தொகுப்பு கவிதையும் அரசியலும் என்கிற தலைப்பிற்கேற்ப கனதியாக அரசியலைப் பேசுவதாகவே அமைகின்றது.  கலை இலக்கியப் பிரதிகளையும் அரசியல் பிரக்ஞையுடன் பார்க்கவேண்டும் என்பதை நான் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றேன்.  வாசகர்களை அதற்காகப் பண்படுத்தக் கூடியதாக இந்தத் தொகுதி அமைந்திருக்கின்றது.  இதனை மிகச் சிறந்த முறையில் தொகுத்து அழகாக வடிவமைத்து வெளியிட்டிருக்கும் சமூகம் இயல் பதிப்பகத்திற்கும் பௌசரிற்கும் மிக்க நன்றிகள்.

ரொரன்றோவில் ஜூன் 8, 2024 அன்று 08 June 2024 அன்று Scarborough Village Recreation Centre இல் தேடகம் ஒருங்கிணைத்திருந்த சமூகம் இயல் பதிப்பக புத்தங்களின் வெளியீட்டுவிழாவில் வாசிக்கப்பட்ட இந்தக் கட்டுரை ஓகஸ்ட் 2024 தாய்வீடு இதழிலும் வெளியானது.

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் செழியன் குறித்த கட்டுரைக்கான இணைப்பு https://arunmozhivarman.com/2018/08/03/cheliyan/

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑