“ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்”
என்று தொடங்குகின்ற பாரதி எழுதிய பாடல், நாட்டுப் பாட்டு என்ற பெயரில் 1919 இல் வெளியான அவரது கவிதை / பாடல் தொகுதியில் இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடலில் பாரதி,
புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவ தில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றுரைத்த பேதையாகக் குறிப்பிடப்படுபவர் பச்சையப்பன் கல்லூரி தலைமை வாத்தியார் பேரா.ஜே.சி. ரோல்லோ எசோ (Prof. J.C. Rollo Eso), இவர் பச்சையப்பன் கல்லூரித் தலைமை ஆசிரியராகப் பதவி வகித்த காலம் 1912-1918 ஆகும்.[1]
எனவே, பாரதி இந்தக் கவிதையை எழுதிய காலப்பகுதி 1918 முதல் 1919 வரையாக இருக்கவேண்டும் என்பது உறுதியாகின்றது. புரட்சிக் கவி என்று உணர்ச்சிகரமாகப் புகழப்படுகின்ற பாரதி, தமிழைத் தோற்றுவித்தவன் சிவன் என்றும், அதற்கு இலக்கணம் கற்பித்தவன் அகத்தியன் என்னும் வேதியன் என்றும் சொல்கின்ற இந்தக் கவிதை, பாரதியை அவர் எழுத்துகளில் இருந்தே அம்பலப்படுத்தும் இன்னோர் சான்று. முற்போக்கான பார்வை கொண்டவராகவும், அன்றைய காலத்தில் வந்துகொண்டிருந்த பல்வேறு ஆங்கில, தமிழ் இதழ்களையும் படித்துக் கொண்டிருந்தவராகவும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியை வரவேற்றவராகவும் சொல்லப்படுகின்ற பாரதிக்கு ஒரு மொழியின் தோற்றமும், அதன் இலக்கணம் வகுக்கப்படுவதும் பற்றி இருந்த பார்வை வைதீகப் பார்வையாகவே இருக்கின்றது.
புரட்சிக்கவி என்று திருவுருவப்படுத்தப்பட்ட பாரதி 1918/1919 இல் எழுதியிருக்கக் கூடிய பாடலில் “ஆதி சிவன் பெற்று விட்டான், அகத்தியன் என்றோர் வேதியன் மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்” என்றெல்லாம் பேசுவதற்குப் பின்னால் இருக்கக் கூடிய பார்ப்பனிய மனநிலை அபாயகரமானது. அதுமட்டுமல்லமல் தமிழ்மொழியின் தோற்றம் குறித்த இந்தச் சிந்தனை பாரதியிடம் ஆரம்பம் முதலே நிலைபெற்றிருந்தமையை அவர் எழுதிய முதலாவது பாடலாகக் கருதப்படும், ஜனவரி, 1897 இல் எழுதப்பட்ட “விண்ணப்பப் பாடல்” (“எட்டயபுரம் மன்னருக்கு விண்ணப்பம்“ ) என்ற பாடலிலும் இதே கருத்தினைக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் அறியலாம்.
இந்தப் பாடலைத் தனது பதினைந்தாவது வயதில் பாரதி எழுதினார் என்பதனாலும், அவர் உதவிவேண்டி எழுதிய மடலது ஆதலாலும் எட்டயபுரம் மன்னரைக் குளிர்விக்கவேண்டிய தேவை இருந்திருக்கலாம் என்பதையும் நாம் கருத்திற்கொண்டாலும் கூட, 1918/19 இல் கிட்டத்தட்ட தனது இறுதிக்காலத்தில் எழுதப்பட்ட பாடலான கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் “ஆதிசிவன் பெற்றுவிட்டான்…“ பாடலிலும் கூட அதே நிலைப்பாட்டுடனேயே பாரதி இருந்திருக்கின்றார்.

000
இவ்விடத்தில் தமிழ்மொழியின் தோற்றம் குறித்து தமிழின் முதலாவது வரலாற்று நாவலான மோகனாங்கியை எழுதியவரும் சென்னை மாநிலக் கல்லூரி நூலகத்தின் கீழைத்தேய சுவடி நிலையத்தின் பொறுப்பாளராகக் கடமையாற்றியவருமான திருகோணமலையைச் சேர்ந்த தி.த.சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் 1892ம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியினுள் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கும் போது ஆற்றிய தொடக்க உரையான “தமிழ்ப்பாஷை” என்னும் ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடும் பின்வரும் பகுதி விதந்து நோக்கத் தக்கது:
“தமிழின் சிறப்பெடுத்துரைப்பதென்ன? அதன் உற்பத்தியை நோக்குங்காலத்தே அதன் மகிமை உள்ளங்கை நெல்லிக்கனி போற்றெற்றெனப் புலப்படவில்லையா எனக் கடாவுவாரும் உளர். தமிழின் உற்பத்தி யாதோ எனப் பண்டிதரை வினவுவோமேல் அதைப்பற்றிப் பல கொள்கைகள் இருப்பதாகத்தெரியும். சப்த சமுத்திரத்தையும் ஓர் உழுந்தளவாக்கி உள்ளங்கையில் வைத்துப் பானஞ் செய்தருளிய அகத்திய மகாமுனிவரால் அன்றோ தமிழியற்றப்பட்டது என்பார் ஒருசாரார். சூரபன்மனை வேல்கொடு தடிந்து அமரர் தம்மிடரை அடியொடு களைந்த சுப்பிரமண்ணிய சுவாமியாலன்றோ தமிழியற்றப்பட்டது என்பார் மற்றொரு சாரார். திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளன்றோ தமிழிற்கு ஆதி நாயகர் என்றறைவோர் அனேகர். ஆகவே தமிழின் மகிமை தானே புலப்படுகின்றதென நமது தமிழ்ப்பண்டிதர் மனமகிழ்ந்து இருக்கின்றனர். ஆயின் அவர் செய்த பாவமோ தமிழ் செய்த புண்ணியமோ யாதோ அறிகிலேன். தற்காலத்து அவர் மாற்றம் அவைக்கேறாது போகின்றது. ஆங்கிலேய பாஷை கற்று அணுவேனும் ஆங்கிலேய சாஸ்திரங்களிற் பயின்றோர்க்கு அவர் கூற்று நகை விளைக்கின்றது. யாதொரு பாஷையாயினும், அது எவ்வளவு அற்புதமாயிருந்த போதினும், அது ஒருவனாற் சிருஷ்டிக்கப்பட்டது என்பதைத் தற்காலத்துக் கைக்கொள்ளார். அதுநிற்க, சிவபெருமானே தமிழ்ப்பாஷையைச் சிருஷ்டித்தாரென வைத்துக்கொள்வோம். அதனாற் தமிழ்பெற்ற பயன் யாதோ? தமிழ் மாத்திரம் தானா கடவுளாற் சிருஷ்டிக்கப்பட்டது? மறுபாஷைகள் யாவராற் சிருஷ்டிக்கப்பட்டனவோ? அன்றித் தாமே முளைத்தனவோ? சகல பாஷைகளுங் கடவுளாற் சிருஷ்டிக்கப்பட்டனவாயின், தமிழ் கடவுளாற் சிருஷ்டிக்கப்பட்டது என உரத்துக் கூறுவதனாற் தமிழ் பெற்ற ஊதியமென்னோ? அற்றன்று தமிழ் கடவுள் பேசும் பாஷை என்பராயின் மறு பாஷைகள் கடவுட்குத் தெரியாதா? மறுபாஷைகள் பேசுவோரிடத்துக் கடவுள் பேசவேண்டுமாயின் தமிழிலேயா பேசுவார்? அல்லது மொழி பெயர்ப்பதற்கு ஒருவரை வைத்திருக்கின்றனரா? அல்லது அவரவரிடத்து அவரவர் பாஷையே பேசுவாராயின் தமிழைக் கடவுள் பேசினார் என்பதனால் தமிழ்க்கென்ன பயன்? அதுவுமன்றிக் கடவுள் ஹீபுறுபாஷை பேசினாரெனக் கிறீஸ்தவரும், அராபி பாஷை பேசினாரென மகமதியருங் கூறில் அவர்க்கு யாதுசமாதானஞ் சொல்வரோ? அவர் சொல்வது பொய், யாம் சொல்வது மெய் எனப்பன்முறை வற்புறுத்திக் கூறுவர் போலும்.
அதுநிற்க, கடவுள் தமிழை இயற்றினார் என்பதற்கு அத்தாட்சி யாதென நமது பண்டிதரை வினவுவமேல், வடகலை தென்கலை வரையறவுணர்ந்த சிவஞான மகாமுனிவர் காஞ்சிப்புராணத்தில் அவ்வாறு கூறினாரன்றோ? முருகமூர்த்தி திருவருள் பெற்ற கச்சியப்ப சிவாசாரியார் கந்தபுராணத்தையவ்வாறு கழறிப்போந்தனரன்றோ? சோமசுந்தர துணையடிபரவும் பரஞ்சோதி மாமுனவரும் திருவிளையாடற் புராணத் தவ்வாறு கூறியிருக்கினறனர் அன்றோ என்பார்.”
இதுமட்டுமல்லாமற் தமிழின் பெருமை என்று அக்காலத்தில் வழங்கிய புராண இலக்கியங்களில் சொல்லப்பட்டவற்றையும் எடுத்துரைத்து அவற்றில் உள்ள பகுத்தறிவுக்கு ஒவ்வாத தன்மைகளைக் கேள்விகேட்பதையும் இந்த நூலில் சரவணமுத்துப்பிள்ளை செய்துள்ளார். உதாரணமாக திருவிளையாடற் புராணத்தின் 58 வது பாடலான,
“தொண்டர் நாதனைத் தூதிடை
விடுத்தது: முதலை
உண்ட பாலனை அழைத்தது:
எலும்பு பெண் உருவாகக்
கண்டதும், மறைக் கதவினைத்
திறந்ததும், கன்னித்
தண்டமிழ்ச் சொலோ மறுபுலச்
சொற்களோ சாற்றீர்”
என்பதைச் சுட்டிக்காட்டி, இதுவெல்லாம் தமிழின் பெருமை ஆகமாட்டாது என்றுகூறி, தமிழின் தோற்றம், வளர்ச்சி, பழந்தமிழ் இலக்கியங்களின் உள்ளடக்கம் போன்றவற்றை பகுத்தறிவுடன் ஆராய்கின்றார்.
திராவிடர், தமிழ் குறித்து தி.த. சரவணமுத்துப்பிள்ளை
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்பது பெரியார் சொன்ன புகழ்பெற்ற வசனங்களில் ஒன்றாகும். இந்த இரண்டும் இல்லாததாலோ என்னவோ அண்மைக்காலமாகச் சில நபர்கள் திராவிடம், திராவிடர் என்கிற சொற்களைக் கேட்டாலே இவையெல்லாம் தமிழர்களுக்கு எதிராக பெரியார் உருவாக்கிய கருத்தாக்கங்கள் என்கிற அவதூறுகளைப் பரப்பி வருகின்றார். தன்னெஞ்சறிந்து பொய்யுரைப்போரிடம் உரையாடிப் பலனில்லை என்றாலும், 1892 ஆம் ஆண்டில், சென்னை துரைத்தனக் கல்லூரியின் தமிழ்ச்சங்கத்தின் தொடக்கவிழாவில் தி.த. சரவணமுத்துப்பிள்ளை ஆற்றிய இந்த உரையில் திராவிடம், தமிழ் குறித்து தெரிவிக்கின்ற கருத்துகள் முக்கியமானவை.
- பரத கண்டத்தின் தென்பாகத்தில் திராவிடர்கள் இருந்தனர் என்றும், பரதகண்டத்தில் முதலில் வசித்த திராவிடர்கள் ஆரியர்கள் இமயமலையைக் கடந்து இந்தியாவிற்கு வந்து வடபாகங்களைக் கைப்பற்றிக்கொள்ள திராவிடர்கள் தெற்கே வந்தனர் ஆகிய இரண்டு கருத்துகளும் இருக்கின்றன.
- திராவிடர் யாது பாஷை பேசினாரென்று நாம் அறியோம். திராவிட பாஷையென்பது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு பொதுப் பெயராயினும் ஆரியர் பெரும்பாலும் தமிழையே திராவிடமென கூறிவந்ததாக தோற்றுகிறது.
- மற்றத் திராவிட பாஷைகளைப் பார்க்கிலும் தமிழ் முந்தியென்பது திண்ணம். தற்கால திராவிட பாஷைகளுக்கு முன் இவையாவற்றுக்கும் பொதுவாக பாஷையொன்றிருந்திருக்கலாம். அது ஆங்காங்கு திருந்தியபொழுது ஓரிடத்தில் தமிழாயும், ஓரிடத்தில் தெலுங்காயும், ஓரிடத்திற் கன்னடமாயும் மாறுபட்டிருக்கலாம்.
இவ்வாறு கூறுகின்ற தி.த. சரவணமுத்துப்பிள்ளை, தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது என்று கூறுவோர்களின் வாதங்களையும் முற்றாக மறுக்கின்றார். தமிழ் என்னும் பெயருக்கான காரணங்களையும் ஆராய்ந்து, போப் கூறிய “தென்மொழி, தெம்மொழி, தமிழ் என மருவி வந்தது என்கிற கருத்தையும் கால்டுவெல் குறிப்பிட்ட “திராவிடம், தமிழ் ஆகிய இரண்டுமே திரமிடம் என்னும் மொழியிலிருந்து பிறந்தன” என்பதுவும் பொருத்தமானவையாகத் தெரிகின்றன என்கிறார்.
“ஆகவே யாது காரணம் பற்றியோ தமிழ் எனும் பெயருடைய இப்பாஷை, திராவிட பாஷைகளிலொன்றாயும் மற்றைய திராவிட பாஷைகள் யாவற்றிற்கும் முந்தியதாயும், அவற்றிற் சிறந்ததாயும் சமஸ்கிருதத்துக்குக் கீழ்ப்படியாததாயும் பல்லாயிரம் வருடங்களாகத் தென்னிந்தியாவில் வழங்கி வருகின்றது” என்று கூறுகின்ற சரவணமுத்துப்பிள்ளை, அவரது சமகாலத்தில் தமிழ் வளர்ச்சி தடைப்பட்டு மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளமையையும் சுட்டிக்காட்டுகின்றார். “…ஆகவே தற்கால இங்கிலிஷுக்குந் தமிழுக்கும் அளவிறந்த பேதமுண்டாதற் கிடமாயிற்று. நம்மனோர் விழித்தெழுந்து மறுபாஷைகளைக் கற்றுத் தமிழைத் திருத்துவரேல் தமிழுஞ் சில வருடத்தில் மிகவுந் திருந்துமன்றோ! ஆங்கிலேயே பாஷையளவு சிறப்புடைத்ததாக வருவதற்குத் தடைதானென்னோ!” என்று தமிழ் வளர்ச்சிக்குப் பரிந்துரையும் சொல்கிறார்.
பழந்தமிழ் நூல்கள்
தமிழில் முதல்நூல் அகத்தியர் எழுதிய அகத்தியம் என்று இன்றும் சிலர் கதை சொல்லிக்கொண்டிருப்பதை நாம் கேட்டிருப்போம். “இலக்கியங் கண்டதற்கிலக்கணம் இயம்பலில” என்ற நன்னூற் சூத்திரத்தை சுட்டிக்காட்டி தமிழிலக்கியம் உண்டுபடுவதற்கு முன்னேயே அகத்தியர் தமிழிலேயொரு பேரிலக்கணம் எழுதினார் எனக்கூறல் பெரு விந்தையே என்று கூறும் தி.த. சரவணமுத்துப்பிள்ளை, நாம் அப்படிக் கேட்டால் “சப்த சமுத்திரத்தையும் ஓர் உழுந்தளவாக்கி உள்ளங்கையில் வைத்தாசனஞ் செய்தருளிய அகத்தியர்க்கு இலக்கியமின்றி இலக்கணமெழுதுதல் ஒரு பெருஞ்காரியமோவென சமதானம் கூறலும் பண்டிதர் பாண்டியத்திற்கு எட்டியது அன்றிச் சின்னாட்பல் பிணிச்சிற்றறிவினராகிய நமக்குப் புலப்படும் பொருளோ” என்று கேலியும் செய்கின்றார்.
இதுபோலவே முச்சங்கங்கள் பற்றிய கதையாடல்களையும் சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் பின்வருமாறு கூறுவது அவரது தீர்க்கமான, அறிவியலின் அடிப்படையிலான ஆய்வுநோக்கினைக் காட்டுகின்றது:
“ஆயின் உள்ளதை உள்ளபடி கூறல் தமிழ்ப் பண்டிதர் குணமின்மையின் உண்மையும் அவர்வாயில் வரும்பொழுது உண்மை நிறம் மாறிப் பொய்யாகின்றது. ஆகவே சங்கங்களைப் பற்றிக் கூறுபனவற்றுள் உண்மையெவ்வளவு பொய் புளுகு எவ்வளவெனக் கண்டுபிடிக்கத் தொடங்கல் பகீரதப்பிரயத்தனமாகும். இச்சங்கங்களுள் ஒவ்வொன்றும் பல்லாயிர வருடமிருந்ததாகவும் இச்சங்களில் சிவன், சுப்பிரமணியர் முதலிய கடவுளர் சங்கத்தவராய் வீற்றிருந்தனரெனவும் இச்சங்கட்குத் தெய்வீகமான சங்கப்பலகை ஒன்றிருந்ததாகவும் இவ்வித பல கதைகளைக் கூறுவதனால் உள்ள உண்மையும் மறைந்து போகின்றது.”
அதுமட்டுமல்லாலம் மொழியுடன் மதத்தையும் கலந்து, குறைந்த பட்ச பகுத்தறிவுக்குக் கூட நியாயம் கற்பிக்காத அளவு புராணங்களை மொழியின் தோற்றத்துடனும் வளர்ச்சியுடனும் இணைந்துச் செய்கின்ற கட்டுக்கதைகளுக்கும் மொழிக்கே மதச்சாயம் பூசும் மதவாதப் போக்குக்கும் எதிராக அதனை ஆரம்பத்திலேயே தி.த. சரவணமுத்துப்பிள்ளை இனங்கண்டு குரலெழுப்பியிருப்பதும், அதையும் கல்லூரியொன்றின் தமிழ்ச்சங்க தொடக்கவிழாவில் ஆற்றிய உரையிலேயே சுட்டிக்காட்டியிருப்பதும் மிகப்பெரும் செயல். தமிழின் ஆரம்பகால இலக்கியங்களில் வெவ்வேறு மதங்களையும் நம்பிக்கைகளையும் சேர்ந்தவர்களும் தமிழிலக்கியத்துக்குப் பங்காற்றியுள்ளனர் என்பதைத் தெளிவாகவே குறிப்பிடுகிறார் தி.த. சரவணமுத்துப்பிள்ளை. அதேநேரம், புராணங்களைப் பற்றி இவர் வைக்கின்ற கடுமையான விமர்சனங்களும் முக்கியமானவை என்பதால் அவற்றைக் கீழே தருகின்றேன்.
- புராணந் தொடங்கிய காலத்திலேயே தமிழுக்கு அஷ்டமத்திற் சனி வந்தது. தமிழ் மகிமையிழந்தமைக்கும் சிறந்த காவிய முதலியவை எழுதப்படாது போனதற்கும் புராணமே முக்கிய காரணமென யான் நினைக்கின்றேன்.
- தமிழில் எழுதக்கூடிய பெரு நூல்களில் மிகவுஞ் சுலபமாயெழுதக்கூடியது தல புராணமே. பிற்காலத்துத் தலபுராணங்கள் கணக்கற்றுப் பெருகியதும் இதனாலேயே இப்புராணங்கள் எழுதப்பட்டிருக்கும் பாஷையிலிருந்தும் இப்புராணங்களிற் கூறப்படும் விஷயங்களிலிருந்தும் தமிழணங்கிற்கு வாக்குமாறிய விருத்தாப்பிய காலம் வந்தது தோற்றும்.
- புராணங்களை இருகூறாகப் பிரித்து முற்கூற்றைப் பற்றிச் சிறிது சொன்னேன். பிற்கூற்றுப் புராணங்களின் காலமே தமிழுக்குக் கலிகாலம். விருத்தாப்பியமடைந்த தமிழணங்கிற்குப் பஞ்ச புலனும் இக்காலத்துக் கெட்டன போலும். இப்புராணங்களே தமிழைப் பாழாக்கின பெரும்பேறுடையன.
சைவத்தமிழ் என்று, மதத்தை மொழிக்குள் திணித்து அதன் மூலம், மதவாதத்தையும் சனாதானத்தையும் பரப்பவும் பேணவும் முயற்சிகள் நடந்த காலத்தில் அதற்கெதிராக எழுந்தொலித்த கருத்துகளே தி.த. சரவணமுத்துப்பிள்ளையின் தமிழ்ப்பாஷை கட்டுரையின் உள்ளடக்கமாக இருக்கின்றது என்பது இக்காலத்தில் இக்கட்டுரைக்கு இன்னும் முக்கியத்துவத்தைச் சேர்க்கின்றது.
000
தமிழ்ப்பாஷை நூலின் பதிப்பாசிரியரும், தி.த. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய தமிழின் முதலாவது வரலாற்று நாவலான மோகனாங்கியை தேடிக்கண்டிபிடித்துப் பதிப்பித்ததுடன், மோகனாங்கி பற்றி அதுவரை காலம் இருந்து வந்த பிழையான, திரிவுசெய்யப்பட்ட பல அபிப்பிராயங்களையெல்லாம் உடைத்தெறிந்து மோகனாங்கியே தமிழின் முதல் வரலாற்று நாவலென்று எழுதியவரான சற்குணம் சத்யதேவன், தி.த. சரவணமுத்துப்பிள்ளையைப் பற்றி “விடுபடல்களிலிருந்து தவிர்க்கமுடியாமைக்கு” என்று குறிப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதியிருப்பார். உண்மையில் தி.த. சரவணமுத்துப்பிள்ளைக்கு நேர்ந்தது விடுபடல் என்று நாம் கடந்துபோய்விடக் கூடாது. மதவாதம் பாசிசமாக உருப்பெற்று வருகையில் மதச்சாயம் பலவந்தமாகப் பூசப்பட்டுக்கொண்டிருக்கையில் அதற்கெதிரான உரையாடல்களை முன்வைத்தவர்களது எழுத்துகளையும் சிந்தனைகளையும் பரவலாக்குவது முக்கியமான செயற்பாடாகும். தி.த. சரவணமுத்துப்பிள்ளை விடுபட்டவர் ஆக்கப்பட்டார். நான் தமிழைக் காட்டுமிராண்டி மொழியென்று சொன்னேன் தான், அதனை இன்னின்ன காரணங்களுக்காகச் சொன்னேன் என்று பட்டியலிட்டு அன்றைய சமகால தமிழ் மொழியினதும் தமிழர்களிலும் இருந்த வீழ்ச்சி நிலையையும், பகுத்தறிவுக்குப் புறம்பான அதேநேரம் ஒடுக்குமுறைக் கருத்துகளால் நிறைந்திருந்த தமிழரின் வாழ்க்கையையும் இலக்கியங்களையும் விமர்சித்துத் தமிழர் சுயமரியாதையும் அறிவும் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று தன் வாழ்நாளெல்லாம் போராடிய பெரியாரைப் பற்றி மதவாதக் கும்பல்கள் அவதூறுகளையும் திரித்தல்களையும் தொடர்ச்சியாகச் செய்துவருவதையும் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் பாரதியை புரட்சிக் கவியென்று போற்றி, அவர் பரிசுப் போட்டிக்கு எழுதிய இரண்டு பாடல்களைச் சுட்டிக்காட்டி பாரதியின் தமிழ்ப் பற்று என்று ஒரு திருவுருவை உருவாக்குகின்ற முயற்சிகள் நடப்பதையும் பார்க்கின்றோம். பாசிஸ்டுகள் வைக்கின்ற அவதூறுகளுக்கு எதிர்வினையாற்றுவதுடன் மட்டும் நம் பணி நின்றுவிடக்கூடாது. சமூகநீதிக் கருத்தியல்களைச் சொன்னவர்களையும் அவர்களது நூல்களையும் எழுத்துகள், சிந்தனைகளையும் தேடி எடுத்து வாசித்து உரையாடிச் செயற்படுவதே அவசியம்.
பிற்குறிப்பு:
தி.த. சரவணமுத்துப்பிள்ளையின் மொழி குறித்த அறிவியல் கருத்துகளை அவரது “தமிழ்ப்பாஷை” என்கிற உரை/கட்டுரையில் பார்த்தோம். அதுபோல அவரது பெண்விடுதலைக் கருத்துகளை அவர் எழுதிய தத்தை விடுதூது, மோகனாங்கி போன்ற படைப்புகளில் பார்க்கலாம்.
பாரதி பற்றிய வாலசா வல்லவன் எழுதிய திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்” நூல் பாரதி பற்றிய விமர்சனபூர்வமான பார்வையை வைக்கின்ற முக்கிய நூல்.
[1] 2024/25 இல் வெளியான ய. மணிகண்டன் எழுதிய “யார் அந்தப் பேதை” என்கிற நூலில் பாரதி பேதையென்று விளித்திருப்பது நீலகண்ட சாஸ்திரியோ அல்லது பேரா.ஜே.சி.ரோல்லோ எசோவோ அல்லவென்றும் அது அக்காலத்தில் அங்கு பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவரை விளித்து பாரதி எழுதியது என்றும் ய. மணிகண்டன் தனது ஆய்வினை முன்வைக்கின்றார். அதுமட்டுமல்லாமல் அந்த மாணவன் பாரதியைச் சந்தித்தது 1907 இல் என்றும் ஆனால் பாரதி இந்தப் பாடல் பதிப்பிக்கப்பட்டது 1919 இல் என்றாலும் அது 1910 அல்லது 1916 இல் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.
இக்கட்டுரை பெப்ரவரி – ஏப்ரல் 2025 மானுடம் இதழிலும், ஏப்ரல் 2025 ஜீவநதி இதழிலும் வெளிவந்தது.
Leave a comment