கசடறக் கற்பித்தார் ச.வே.ப

கல்வியைக் கண்ணெனப் போற்றும் யாழ்ப்பாணத்துச் சமூகம் என்ற கூற்று நினைவுதெரிந்த நாளில் இருந்து நான் கேட்டுவளர்வது.  ஆனால் கல்வியைக் கண்ணெனப் போற்றுவது என்கிற பெயரில் கற்றலின் பயனென்னவென்பதையும் கற்பித்தலின் பொருளென்ன என்பதையும் கூட அறியாமல் அது கற்பித்தல் தொழிற்சாலைகளை நிறைத்து வைத்திருக்கின்ற பிரதேசமாகவே நடைமுறையில் இருந்துவருகின்றது.  இங்கே கற்பிக்கப்படுகின்ற விஞ்ஞானம், கணிதம், மொழி, இலக்கியம், வரலாறு, சமூக விஞ்ஞானம் உட்பட அனைத்துப் பிரிவுகளினதும் பிரதான நோக்கம் மாணாவர்களை நல்ல பெறுபேறுகளை போட்டிப்பரீட்சைகளில் பெறப்பண்ணுவது என்பதைத் தவிர வேறொன்றில்லை.  கல்விமுறை குறித்தும் அது ஏற்படுத்துகின்ற சமூகத் தாக்கம் குறித்தும் அதில் நிகழவேண்டிய மாற்றம் குறித்தும் தொடர்ந்தும் கவனத்திற்கொண்டு வருகின்றேன். அதுகுறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.  எனக்குக் கற்பித்த ஆசிரியர்கள் குறித்தும் அவர்கள் கற்பித்தலை எப்படி நோக்கினார்கள் என்றும் மாணவர்களுடன் எப்படி உறவுகளைப் பேணினார்கள் என்றும் யோசிக்கும்போதும் எனக்கு கனிவும் நெகிழ்வும் நிறைந்த நினைவுகளைத் தரும் மிகச்சிலரில் ஒருவர் தமிழாசான் ச.வே. பஞ்சாட்சரம்.

ஐந்தாம் ஆண்டுவரை தமிழ் எனக்கு விருப்பத்துக்குரிய பாடங்களில் ஒன்றாக இருந்தது.  அதற்குப்பிறகு பாடசாலையில் தமிழ் கற்பித்த ஆசிரியரோ தான் சொல்லித்தருகின்ற கட்டுரைகளை அப்படியே மனனம் செய்து அப்படியே எழுதவேண்டும் என்பதை எதிர்பார்ப்பவராக இருந்தார்.  அதுவும், அவர் மாணவர்களை நடத்தியவிதமுமாகச் சேர்ந்து தமிழ்ப்பாடம் என்றாலே வெறுக்கத் தொடங்கியிருந்தேன்.  அப்படியிருக்கின்றபோதுதான் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் எம் தமிழாசிரியராய் எமக்குக் கிடைக்கப்பெற்றார். முன்னர் இருந்த ஆசிரியர் ஏற்படுத்திய தாக்கத்தால் தமிழ்ப்பாடம் பற்றிய பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இருக்கவில்லை.  ஆயினும் என்னுடன் பாடசாலைக்கு வருகின்ற எம்மை விட வயதுகூடிய நண்பர்கள் இருவர் பஞ்சாட்சரம் சேரின்ற தமிழ் வகுப்பு நல்ல பண்பலாப் போகும் என்று எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வைத்திருந்தனர்.   அப்போதைய போர்க்காலச் சூழலில் நான் நவாலிக்கு வெளியே போய்வந்ததும் மிகவும் அரிதே என்பதால் அவரது தலைமையில் மிகச் சிறப்பாக நடந்துவந்த கவியரங்கங்களையும் நான் பார்த்ததில்லை.  இப்படியான நிலையில் எமக்குப் பாடமெடுக்கத் தொடங்கிய ச.வே.ப அவர்கள் தமிழ்ப்பாட வகுப்பினை அது இலக்கியமாகட்டும் இலக்கணமாகட்டும் உரையாடல்களினூடாக நடத்தத் தொடங்கினார்.  தமிழ் இலக்கணத்தில் இன்றும் சவாலான பகுதியாக இருக்ககூடிய புணர்ச்சி விதிகளை நிறைய உதாரணங்களுடன் மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்தியன் மூலம் நனவிலி மனதிலேயே இலக்கணப் பிரக்ஞையை உருவாக்கினார்.  தமிழ் இலக்கிய வகுப்புகளிலோ அவரது தாக்கம் இன்னொரு விதத்தில் அமைந்தது. 

அப்போதையை எமது தமிழிலக்கியப் பாடத்தில் மரபிலக்கியம் அதிலும் பழந்தமிழ் இலக்கியமே பெரிதும் இடம்பெற்றிருந்தன.  பரீட்சை பெறுபேறுகளை மனத்தில் நிறுத்தி அனேக ஆசிரியர்கள் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பம் என்று பக்கக் கணக்கில் குறிப்புகளைக் கொடுத்து நிறைத்துக்கொண்டிருந்தபோது ச.வே.ப அவர்கள் அவற்றின் பொருளையும் சுவையையும் அறியக் கற்றுத்தந்தார்.  தனிப்பட்ட அளவில் அந்தக் காலகட்டம் எனக்குக் கிடைத்த பேறென்றே சொல்லவேண்டும்.  பாடசாலையில் ச.வே.ப அவர்களிடமும் ஊரில், பண்டிதர் ஈஸ்வரநாதபிள்ளை அவர்களிடமும் நான் கற்ற தமிழ் இலக்கியமே அப்போது என்னை தமிழிலக்கியம் குறித்துத் தேடித்தேடி வாசிக்க வைத்தது.  அவர்கள் பரீட்சை நோக்கில் மட்டும் பாடத்திட்டத்துடன் நின்றுவிடவில்லை, அதற்கப்பாலும் தேடித்தேடி வாசிக்க எமக்குத் தூண்டிகளானார்கள்.  பாடப்புத்தகத்தில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் கம்பராமாயணக் காட்சிகள், சோமசுந்தரப் புலவரின் இலங்கை வளம் என்பவற்றின் சில பகுதிகள் இருக்க நான் அந்தப் புத்தகங்களைத் தேடி முழுமையாக வாசிக்கத்தொடங்கினேன்.  பாடத்திட்டத்தில் இருந்த நளவெண்பா பாடல்களுக்கு வீட்டிலிருந்த நளவெண்பா புத்தகத்தில் இருக்கின்ற பொருளைப் பார்த்தேன்.  மன்னன் புயம் நின் வனமார்புக் கச்சாகும் என்று பாடப்புத்தகத்தில் இருந்தது; வீட்டிலிருந்த புத்தகத்தில் மன்னன் புயம் நின் வனமுலைக்கு கச்சாகும் என்று அச்சாகி இருந்தது.  பாடப்புத்தகத்தில் பிழைகண்டு பிடித்துவிட்டேன் என்ற புளுகத்தில் வகுப்பில் இதை ச.வே.ப அவர்களிடம் கூறினேன்.  “பிள்ளைக்கு யார் இதைச் சொன்னது” என்று கேட்டவர் நான் நடந்ததைச் சொன்னதும் வன முலை என்றிருந்ததை கெட்ட சொல் என்று நினைச்சு இவங்கள் புத்தகத்தில மாற்றிப்போட்டிருக்கினம்.  ஆனால் வனமுலை என்பது தான் புலவர் எழுதியது என்றுவிட்டு. இரண்டு கைகளையும் மேசையில் மகிழ்ச்சியுடன் அறைந்து, கண்களை அகலவிரித்தபடி நல்லது பிள்ளை, அப்படித்தான் தேடித்தேடிப் படிக்கவேண்டும் என்று கூறினார். 

அந்த நேரத்தில் அவரது கவியரங்கங்கள் மிகவும் புகழ்பெற்றிருந்தன.  மெலிந்த உடலமைப்பையும் எளிமையான தோற்றத்தையும் கொண்ட அவர் பெருமதிப்புக்கும் அன்புக்குமுரிய ஓர் ஆளுமையாக விளங்கினார்.  பாடத்திட்டத்திற்கு வெளியேயான இலக்கிய அறிமுகத்தையும் அவரே செய்துவைத்தார்.  கனத்த மழை பெய்து வகுப்புக்குள் சாரல் அடித்துக்கொண்டிருந்த ஒருநாளில் அவர் சத்திமுத்தப்புலவரின் “நாராய் நாராய் செங்கால் நாராய்” பாடலைத் மீண்டும் மீண்டும் சொல்லிச் சிலாகித்தார்.  வறுமை மற்றும் சமூக ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அவருக்கு அக்கறையும் கரிசனையும் எப்போதும் இருந்தது.  எல்லாரையும் சமமாக மதிக்கவேண்டும் என்பதைத் திரும்ப திரும்பச் சொல்லுவார்.  இருக்கின்ற சமூக ஒழுங்கிற்குள் வைத்து எல்லாரும் மனது வைத்தால் அதைச் செய்துவிடலாமென்றே அவர் நம்பினார்.  புதுமைப்பித்தனின் பொன்னகரம் கதையை வகுப்பில் விளங்கப்படுத்தி அந்த வகுப்பு முழுவதும் புதுமைப்பித்தன் என்னவெல்லாம் எழுதியிருக்கின்றார் என்று சொல்லியிருந்தார்.  புதுமைப்பித்தன் என்ற பெயரும் ச.வே.ப சொன்னவிடயங்களும் ஆர்வமூட்டினாலும் நான் புதுமைப்பித்தனை வந்தடையை அதற்குப் பிறகு ஒரு பத்தாண்டுகள் ஆகியிருந்தன. 

அவரது தலைமுறையினருடன் ஒப்புநோக்குகின்றபோது வரலாற்று உணர்வு நிரம்பப்பெற்றவராகவும் ஆவணப்படுத்தலின் அவசியத்தை நன்குணர்ந்தவர்ந்தவராகவும் இருப்பது ச.வே.ப அவர்களின் இன்னோரு சிறப்பு.  நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தற் பணிகளுக்காக அவருடன் தொடர்புகொண்டபோது எமக்குப் பல உதவிகளையும் நல்கியதோடு தனது நூல் வெளியீட்டுநிகழ்வுகளிலும் ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்து அவர் பேசியிருக்கின்றார்.  பலமான கடவுள் நம்பிக்கையும் விடுதலைப் புலிகளின் மீதான தீவிரமான ஆதரவு நிலைப்பாடும் அவரது இன்னோர் அடையாளம்.  தனிமனித விடுதலைக்கும் இனவிடுதலைக்குமான வழிமுறைகளாக அவர் இறைநம்பிக்கையையும் இனவிடுதலைப் போராட்டத்தையும் கருதினார்.  அதேநேரம் மாணவர்களுக்கு வழிகாட்டிவிடுகின்ற, ஆனால் அவர்களது சிந்தனையை சிறைசெய்யாத அவரது ஆளுமை வெவ்வேறு கருத்துநிலைகளும் சமூகப்பார்வைகளும் கொண்டதோர் மாணவச் சந்ததியை அவர் உருவாக்கத் துணைசெய்தது.  வாசிப்பும் நான் எதிர்கொண்ட அனுபவங்களும் பழகக் கிடைத்த வேறு தோழமைகளும் கைகோர்த்து மதச்சார்பின்மையும் சமூகநீதிக்கான போராட்டமுமே மானுட விடுதலைக்கான வழி என்ற புரிதலுக்கு நான் வந்தடைந்தபோதிலும் என் மாணவப்பருவத்தை நெறிப்படுத்திய வழிகாட்டிய மிகச் சில ஆசிரியர்களுள் ஒருவராக எப்போதும் ச.வே.ப அவர்கள் இருப்பார்.

நாம் கற்றுக்கொள்ளும் விடயங்கள் குறித்து கல்வித்திட்டத்திற்கு அப்பாலும் தேடுகின்ற வழக்கத்தினை பழக்கப்படுத்தியவரும் ஊக்கப்படுத்தியவரும் என்ற வகையில் ச.வே.ப. முக்கியமானவர்.  பண்டிதரும் கவிஞருமான அவர் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியருமாவார்.  ஆங்கில ஆசிரியராகவே கற்பிக்கத் தொடங்கினவர் பின்னாளில் தமிழ்த்துறையில் தடம்பதித்த பல மாணவர்களை உருவாக்கியவர். கல்வி திணிக்கப்பட்டும் சிறைக்கூடங்களாக வகுப்புகள் இருந்த காலப்பகுதியில் வகுப்பை மாணவர்களும் ஆசிரியரும் உரையாடிக் கற்கின்ற இடமாக அவரது வகுப்பறைகள் இருந்தன.  அப்படியாகக் கிடைத்த வெளிகளில் இருந்துதான் எமது தலைமுறையில் சிலர் சிறகடிக்கத்தொடங்கினோம்.      

இக்கட்டுரை மார்ச் 2021 இல் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களின் சிறப்பிதழாக வெளிவந்த தாய்வீடு இதழில் வெளியானது. இதழுக்கான இணைப்பு https://thaiveedu.com/pdf/March2021.pdf

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: