டாம் சிவதாசனை அவர்களைக் கிட்டத்தட்டப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக அறிவேன் என்றாலும் இடையில் சில மாதங்கள் அவருடன் சற்றுக் கூடுதலாகப் பழகுகின்ற வாய்ப்பு கிடைத்தது. அவரது அலுவலகத்தில் நடைபெறும் சந்திப்புகளில் சிலகாலம் தொடர்ந்து சென்றும் வந்தேன். வெவ்வேறு விடயப் பரப்புகள் குறித்துத் தேடி ஆர்வமுடன் வாசிக்கின்றதோர் வாசகராகவும், அவ்வாறு வாசித்தவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து உரையாடி மகிழ்பவராகவும் அவரைக் கணித்திருக்கிறேன். கதையாக அவரது ஒரே ஒரு கதையை மட்டுமே முன்னர் வாசித்திருந்தது நினைவில் இருக்கின்றது எவ்விதமோ ஏனைய கதைகளைத் தவறவிட்டு விட்டேன். தற்போது 1993 முதல் 2025 வரையான 32 ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்ட 15 கதைகள் ”குற்ற ஆலம்” என்கிற தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன. பெரும்பாலான கதைகள் கனடாவிலும் சில கதைகள் ஈழத்தைக் களமாகவும் கொண்டு அமைந்திருக்கின்றன. ஆயினும், அனைத்துக் கதைகளும் மனிதர்களுக்கிடையிலான உறவுச் சிக்கல்கள், அகச் சிக்கல்கள், இருத்தலியல் சிக்கல்கள், பாலியல் உறவுகள், பாலியல் தேவைகளால் எழுகின்ற நெருக்கடிகள், முரண்கள் போன்றவற்றைக் களமாகக் கொண்டு அமைந்துள்ளன.
”குப்பி” என்கிற கதை, ஈழப்போரின் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுச் சரணடைந்த போராளிகள் புனர்வாழ்வு பெற்று மீண்டும் இயல்புவாழ்க்கை நோக்கிச் சென்றபோது சமூகம் அவர்களை எதிர்கொண்ட விதம் பற்றிப் பேசுகின்றது. போர்க்காலத்தில், இயக்கத்தில் இருக்கின்றபோது ரகசியமாக வீட்டுக்குச் செல்லும்போது இருக்கின்ற வரவேற்பு இப்போது இல்லை என்று புனர்வாழ்வு பெற்று ஊர்திரும்பும்போது கயல்விழி உணர்கிறாள். புனர்வாழ்வு பெற்றுத் திரும்பிய மக்களை ஏற்றுக்கொள்வதற்கும் தம்முடன் இயல்புவாழ்க்கையுடன் இணைத்துக்கொள்வதற்கும் இராணுவக் கெடுபிடி, இராணுவப் புலனாய்வுத் துறையின் நெருக்கடி போன்றவற்றால் சாதாரண மக்களுக்கு இருந்த அச்சவுணர்வு மாத்திரம் காரணம் அல்ல, அதைத்தவிரவும் மக்களுக்கு முன்னாள் போராளிகள் மீதிருந்த ஒரு விதமான இயல்பில்லாத உணர்வும் அதுபோலவே போராளிகளுக்குத் தம்மை இயல்பு வாழ்க்கையுடன் இணைத்துக்கொள்வதில் இருந்த இயலாமைகளும் காரணமாக இருக்கின்றன. இந்தச் சூழலில், சமூகத்துக்காகப் போராடப் போன தம்மைச் சமூகம் புறக்கணிக்கின்றதே என்கிற சலிப்பால் சமூகவிரோத நடவடிக்கைகளில் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் ஈடுபடுகின்ற சில முன்னாள் போராளிகளை வைத்துப் பெரும் பணத்தையும் அரசியல் அதிகாரத்தையும் பெற்றுக்கொள்கின்றார் ஒரு தமிழ் அரசியல்வாதி. கதையின் இறுதியில் கயல்விழி கொலைசெய்யப்பட்டு அவளது உடல் குப்பைத் தொட்டியில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்படுகின்றது. அவளது கொலையை அரசியலாக்கி அவளது மரணத்துக்கு நீதி வாங்கித்தரும்வரை தான் ஓயப்போவதில்லை என்கிறார் குறித்த அரசியல்வாதி. அதைக் கயல்விழியின் கணவன் உட்பட அனைவருமே நம்புகின்றனர். ஆனால், கயல்விழி முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவருடன் கதைத்துக்கொண்டிருந்ததைப் பார்த்த ஒருவனூடாகக் கயல்விழியின் ”ஒழுக்கம்” பற்றிக் கடத்தப்பட்ட செய்தியினால் அவள் குறித்த தமிழ் அரசியல்வாதியின் கீழ் இயங்குவோராலேயே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கோடி காட்டுகின்றது இக்கதை.
கொலம்பியா, சூடான் போன்ற நாடுகளிலும் யுத்தத்துக்குப் பிந்திய காலங்களில் முன்னாள் ஆயுதக்குழு உறுப்பினர்கள் தம்மை இயல்பு வாழ்க்கையுடன் இணைத்துக்கொள்வது குறித்த ஆய்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த ஆய்வுகள் முன்னாள் ஆயுதக் குழு உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் வன்முறை, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுதல் போன்றவற்றுக்கு அவர்களுக்கு வன்முறைகளுடனான நேரடி பட்டறிவு, போராட்டத்தால் ஏற்பட்ட அஞர், வறுமை, தம்மை நிலைநாட்டிக்கொள்வதற்கான சமூக மூலதனத்தைப் பெருக்கிக்கொள்ள முடியாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இவற்றுக்கான காரணிகளாக இனங்கண்டுள்ளனர். இக்கதையும் அவற்றை முன்வைப்பதுடன் முன்னாள் போராளிகளை வைத்துத் தமது பயனுக்காக அரசியல் செய்வோரையும் கோடி காட்டிவிடுகின்றது சிறப்பம்சமாகும்.
தொகுப்பில் உள்ள ”ஆனந்தனைப் புரிந்துகொள்ளல்”, ”சிலீப் ஓவர்”, ”கருப்பி” ஆகிய கதைகள் நடைபெறுகின்ற மல்வேர்ன் பகுதியில், கதைகள் நடைபெறுகின்ற அதே 90களில் நான் வாழ்ந்திருக்கின்றேன் என்பதாலும் இந்தக் கதைகளில் குறிப்பிடப்படுகின்ற வெஸ்ட் ஹில் பாடசாலையில் ஒரு கோடைகாலப் பாடசாலைக்குச் சென்றமையாலும் அந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலைசெய்தமையாலும் எனக்கு இந்தக் கதைகள் பேசுகின்ற விடயங்கள் இன்னும் நெருக்கமாக இருக்கின்றன. மல்வேர்ன் என்கிற இந்தப் பிரதேசம் தொண்ணூறுகளில் பெருமளவு இளங்குடும்பங்களைக் கொண்டதாகவும், கருப்பினத்தவர்களும் தென்னாசியர்களும் அதிகம் வாழ்வதாகவும் இருந்தது. இப்பிரதேசத்தில் மக்கள் அதிகம் குடியேறத் தொடங்கிய காலப்பகுதிகளில் இருந்து நிலவி வந்த கருப்பினத்தவர்களுக்கு இடையிலான குழு வன்முறை பின்னர், அடுத்த கட்டங்களில் அதிகளவில் குடியேறத்தொடங்கிய ஈழத்தமிழர்களுக்கு இடையிலான குழு வன்முறைகள் போன்றவை நிறைந்த காலப்பகுதி அது. அனேகம் புதிதாகக் கனடாவுக்குக் குடிபெயர்ந்தவர்களே இங்கிருந்தமையால், குடும்பங்களிடையே கலாசார நெருக்கடிகள், நிதி நெருக்கடிகள், குடும்ப உறவுகளுக்கு இடையிலான முரண்கள் போன்றன பலமாகத் தாக்கம் செலுத்திக்கொண்டிருந்தன.
உயர்கல்லூரியில் கற்றுக்கொண்டிருந்தபோது ஆங்கிலப் பாடத்தில் எமக்கு Beatrice Culleton எழுதிய April Raintree என்கிற நாவல் பாடத்திட்டத்தில் இருந்தது. மெடிஸ் என்கிற பூர்வக் குடி அடையாளத்தை (Métis identity) சேர்ந்த ஏப்ரில், செரில் என்கிற இரண்டு சகோதரிகள் தமது வீட்டில் பெற்றோரிடையே இருந்த குடும்ப வன்முறை, அதிகரித்த போதைப் பொருள்/மது பாவனை காரணமாகக் குடும்பத்திடம் இருந்து பிரிக்கப்பட்டு வளர்ப்புக் குடும்பங்களில் (Foster Family) வளர விடப்படுகின்றனர். வன்முறை, மது / போதைக்கு அடிமையான பெற்றோர் ஆகிய நிலைமைகளில் உள்ள குடும்பங்களில் இருந்து குழந்தைகளை மீட்டு நல்ல சூழலில் வாழவைக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் அவர்களை வேறொரு குடும்பத்திடம் ஒப்படைத்து வளர்க்க விடுவது வளர்ப்புக் குடும்ப (Foster Family) தீர்வு முறையாகும். ஆனால் அவ்வாறு வளர்ப்புக் குடும்பத்துக்கு அனுப்பப்பட்ட சிறுவர்கள், அங்கே பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் உள்ளானார்கள் என்றும், அவற்றின் விளைவாக அவர்களும் போதை பாவனைக்கு அடிமையானார்கள் என்றும் பின்னர் ஆய்வுகள் தெரிவித்தன. அந்தக் காலப்பகுதியில் வளர்ப்புக் குடும்பத்துக்குச் செல்லுதல் என்பதைக் கொடுமையான சிறையொன்றுக்கு செல்வதைப் போல அச்சவுணர்வுடன் பார்க்கின்ற நிலைமையே நிலவியது. “ஆனந்தனைப் புரிந்துகொள்ளல்” கதையில் ஆனந்தன் பின்வருமாறு கூறுகின்றான்;
“வகுப்பில் ஆசிரியர் பல தடவைகள் முயன்றும் நான் எனது குடும்பப் பிரச்சனைகளைப் பற்றி அவரிடம் எதையும் கூறியது இல்லை. அப்படிச் சொல்லியிருப்பின் இப்போது எங்கோ ஒரு வெள்ளைக்கார வளர்ப்புப் பெற்றோர் வீட்டில் பதினான்காவது வளர்ப்புப் பிள்ளையாக அன்ரி டிப்பிறசண்ட் குளிசைகளோடு மால் பெஞ்சுகளில் தூங்கிக்கொண்டிருப்பேன். அல்லது ஒரு மீடியம் செக்கூரிட்டி சிறையில் ஏனைய கைதிகளோடு கஞ்சா குடித்துக் காலம் கழித்திருப்பேன்.”
பாடசாலைகளில் இருக்கின்ற குழு வன்முறைக் கலாச்சாரம் (Gang culture), மோசமான குடும்ப உறவுகள், குடும்ப வன்முறை போன்றவற்றால் பாதிக்கப்படும் ஆனந்தனைப் போன்றவர்களின் நிலை பின்வருமாறு இருக்கிறது,
“எனது நிலைமை எப்படியாகும் என்று சொல்வதற்கில்லை. நான் வீடு போகும்போது வீட்டில் விளக்கு எரியாது. வெறுமையாக இருக்கும். சாப்பிட எதுவும் இருக்காது. கையில் காசும் இருக்காது. வீட்டிற்குப் போவதற்கே மனமிருக்காது. மற்ற நண்பர்களைப் போலச் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டுப் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் மனம் ஒத்துழைக்குதில்லை. இதுவரை வெற்றிகரமாகச் சமாளித்துவிட்டேன். எனக்கிருக்கும் அடுத்த தேர்வு தற்கொலை செய்துகொள்வது. இந்த வாழ்க்கையில் அர்த்தமில்லை எனவே தெரிகிறது”
புலம்பெயர்ந்து முதற்தலைமுறையாகப் பாடசாலைக்குச் சென்றவர்களின் நிலைமை இவ்விதமாகத்தான் இருந்தது. பாடசாலைக்குள் கும்பல் கும்பலாகவும் பாடசாலைக்கு வெளியில் தேவையேயில்லாம இஞ்ஜினை உறும விட்டுக்கொண்டு திரிகின்ற கார்களில், கண்ணாடியைத் திறந்துவிட்டு ஒலியைப் (Bass) பலமாக அலறவிட்டுக் கொத்தாகத் திரிகின்ற மாணவர்களுடனோ ஒட்டவே முடியவில்லை.
இந்தக் கதையில் ஆனந்தன் சொல்கின்ற இன்னொரு விடயம் மிகவும் நுட்பமானது; தகப்பன் பிரிந்துசென்றுவிட, தாய் இரண்டு வேலைகள் செய்து குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறாள். இதை “பேசாமல் அரச உதவிப்பணத்தைப் பெற்றுக்கொண்டு அம்மா குடும்பத்தைச் சமாளித்திருக்கலாம். தான் வேலை செய்து தனது பிள்ளைகளைப் படிப்பிக்கிறேன் என்று ஊர், உலகம் எல்லாம் சொல்லவேண்டும் என்ற அம்மாவின் இறுமாப்பால் அவள் அரச உதவிப்பணத்தைப் பெறாமல் இப்படிச் செய்கிறாள்” என்று ஆனந்தன் சொல்கிறான். அரச உதவிப்பணம் போன்ற சமூக உதவித்திட்டங்கள் உண்மையில் இப்படியான குடும்பங்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அளவு வினைத்திறனுடன் இருந்த காலம் அது. அதன் நோக்கமும் பாதிப்புகளுக்கு உள்ளான குடும்பங்கள் தமது அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பொருளாதார ரீதியாக இருக்கின்ற தடைகளை நீக்குவதாகவே இருந்தது. புலம்பெயர்ந்தோர் இந்நாட்டுக்கு முதலில் வரும்போது இத்திட்டங்களே பலருக்கும் தடைக்கற்களை நீக்க உதவின. ஆனால், துரதிஸ்ரவசமாக எம்மில் பலரே கூடத் தற்போது “இப்படியான சமூக நலத்திட்டங்களால் அரசு பணத்தை வீணாக்குகின்றது, எமது வரிப்பணத்தை விரயம் செய்கின்றது” என்று புலம்பத் தொடங்கியிருக்கின்றார்கள் என்பதையும் நினைவூட்டிக்கொள்வோம்.
வளர்ப்புக் குடும்பம் குறித்த அச்சவுணர்வை ”ஆனந்தனைப் புரிந்துகொள்ளல்” கதையில் சொன்னவர், “சிலீப் ஓவரில்” போதைப் பொருளுக்கும் மதுவுக்கும் அடிமையாகிவிட்ட தந்தை – தாயிடம் இருந்து மீட்கப்பட்டு வளர்ப்புப் பெற்றோரிடம் கொடுக்கப்படும் சமாந்தா அங்கே சில சவால்களை எதிர்கொண்டாலும் தன் கல்வியை நிறைவுசெய்து தாயையும் மீட்டுச் சிகிச்சையளிக்கின்றாள். ஆனால் ஆரோக்கியமான குடும்பச் சூழலில் வளர்கின்ற மாதுரியால் அப்படியாக வர முடியாமல் போய்விடுகின்றது. காதல், திருமணம், வீடு, சொத்து, நல்ல கல்வி, வேலை என எதிலுமே அவளுக்கு இச்சையில்லை. இப்படியான குடும்பத்தில் பிறந்ததைவிட வேறென்ன நற்பேறு எனக்குத் தேவை என்று கூறி அவள் நிறைவடைந்துகொள்கின்றாள். அதிர்ஷ்டம் குறைந்தவர்களுக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புவதாகவும் அதுவே தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் கூறுகிறாள். “திருப்தியின் அளவுகோல்கள் ஆளுக்கு ஆள் வேறு என மாது எங்களுக்குக் கற்பித்திருக்கிறாள். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று கதையை நிறைவுசெய்கிறார். ஆனால் இக்கதை என்னை இன்னும் சிந்திக்கத் தூண்டுகிறது. Comfort crisis என்று சொல்லப்படுகின்ற சுகவாழ்வினால் எழுகின்ற நெருக்கடி என்று இதனைச் சொல்லலாமோ தெரியவில்லை. குழந்தைகள் வளர்வதும் குழந்தை வளர்ப்பும் எப்போதும் புதிரானதுதான்.
தொகுப்பில் இருக்கின்ற ”குற்ற ஆலம்” என்கிற கதை முக்கியமான, உரையாடல்களை எழுப்புகின்ற கதை. இக்கதையில் சரசுவுக்கும் கந்தப்பருக்கும் இடையில் உறவு இருக்கின்றது. அந்த உறவினால் பிறந்தவனே சரசுவின் மகன் ராசன். சரசுவின் கணவர் சங்கரப்பிள்ளையும் இதனை அறிவார் என்றாலும் அது குறித்து அவர் சரசுவிடம் எதுவும் கேட்காமலே இருக்கிறார். கந்தப்பரும் ஏற்கனவே திருமணமானவர் என்றாலும் அவருக்கும் அவர் மனைவிக்கும் பிள்ளை பிறக்கவில்லை. இந்நிலையில் கந்தப்பர் இறந்துவிட, சங்கரப்பிள்ளை தன் மனைவி சரசுவையும் மகன் ராசனையும் அந்தச் சாவீட்டுக்குப் போகும்படி சொல்கிறார். தயங்கும் மனைவியிடம், கந்தப்பருக்கும் சரசுவுக்குமான உறவு தனக்குத் தெரியும் என்றும் ராசன் அவர் மூலமாகப் பிறந்தவன் என்பதையும் அறிவேன் என்றும் தெரியப்படுத்துகிறார். சரசு சாவீட்டுக்கு மகனையும் அழைத்துச் செல்கிறாள், அங்கே கந்தப்பரின் மனைவி சரசுவுக்கும் முன்னுரிமை கொடுப்பதுடன் ராசனுக்குப் பூணூல் அணிவித்துச் சடங்குகளையும் செய்விக்கின்றாள். சாவீடு முடிய வீடு திரும்பும் சரசுவின் தலையைத் துடைத்துவிட்ட படி சங்கரப்பிள்ளை இவ்வாறு கூறுகிறார்:
“சரசு இத்தனை வருசமா நீ இந்தக் குற்ற உணர்வைச் சுமந்துகொண்டெல்லா இருந்தனி. நீ முந்தின சரசு இல்லை எண்டிறதை நான் எப்பவோ அறிஞ்சுபோட்டன். இப்படியே சுமையைச் சுமந்துகொண்டிருந்தா அது உன்ர ஆயுளைக் குறைச்சுப்போடும். நீ பிழைவிட்டிட்ட எண்டு எனக்குத் தெரியும். உன்னையும் ராசனையும் விட்டுட்டு ஒரே நாளிலை நான் போயிருக்கலாம். ஆனா இங்க நீ மட்டும் குற்றம் செய்யேல்ல. நானும் தான். புதுக்கக் கல்யாணம் கட்டிப்போட்டுக் கொழும்பில போய்ப் படுத்துக்கிடந்த என்னிலும் பிழைதான். அதனால் உன்ர தவறை என்னால் புரிஞ்சுகொள்ள முடிந்தது. நான் எப்போவோ உன்னை மன்னிச்சுட்டன். சனத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. சரி தலையைத் துடைச்சுப் போட்டு வா, நான் டீ வைக்கிறன்”
இந்தக் கதையில் குற்ற ஆலம் என்பது எதனைக் குறிக்கின்றது? குற்றம் ஒரு விடமாகத் தங்கிவிடுகின்றது. அதிலிருந்து சரசுவை விடுதலை செய்வதற்கான ஒரு ஆற்றுப்படுத்தலாக இதனைக் கொள்ளலாமா? கதையில் சரசு அந்தக் குற்றவுணர்வில் இருந்து விடுபடுவதுபோலத்தான் அமைகின்றது, ஆனால் மனைவி சரசுவின் மனதில் இருந்த விஷத்தைத் தூக்கி மகன் ராசனின் மூளைக்குள் சங்கரப்பிள்ளை வைத்துவிட்டாரோ என்றும் சிந்திக்கத் தூண்டுகின்றது. அப்படிச் செய்தமைக்குக் காரணம், திருமண உறவில் துரோகம் செய்த மனைவியைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கின்ற பேராண்மை மிக்க கணவனைக் காட்டுவதாக இருக்கலாமோ என்று நினைக்கும்படி இருக்கின்றது.
”பாஸ்கரன் கதை”, ”பின் புத்தி” என்கிற இரண்டு கதைகள் பகடியுடன் எழுதப்பட்டிருந்தாலும் கனடிய/புலம்பெயர்/தமிழ் இலக்கியச் சூழலையும் எழுத்தாளர்களையும் புத்தக வெளியீட்டு நிகழ்வுகளிலும் இருக்கின்ற நிலைவரத்தையும் எள்ளல் செய்வதாக அமைகின்றன. விழாவுக்கு வர ஒத்துக்கொண்ட முக்கிய பேச்சாளர்கள், தலைமை தாங்குவோர் திடீரென்று வராமல் விட்டுவிட நடக்கும் நிகழ்வுகள், புத்தகத்தைப் பற்றிப் பேசாமல் வேறுவிடயங்களைப் பற்றிப் பேசுதல், டாம் சிவதாசனின் மொழியிலேயே சொன்னால் “புத்தகம் தனது கையில் நேற்றுத்தான் கிடைத்ததாகக் கூறி, மாட்டை மரத்தில் கட்டிவிட்டு மரத்தைப் பற்றி முழங்கித்தள்ளல்”, எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் சிறப்புப் பிரதி வாங்கப் பார்வையாளர்கள் அழைக்கப்படல், வெறும் கடித உறைகளைக் கொடுத்துப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளல் என்கிற எல்லா அபத்தங்களும் நிகழ்வதாகவே இந்தச் சூழல் இருக்கின்றது. இங்கே என்ன சிக்கலென்றால் புத்தகப் பதிப்பு, புத்தக விற்பனை, எழுத்து என்பவை எல்லாமே தமிழ்ச்சூழலில் ஒரு தொண்டாகத்தான் பார்க்கப்படுகின்றன. புத்தகப் பரம்பலையும் வாசிப்பையும் இதுவே வளர்க்கும் என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் இவைதான் இந்தத்துறைகளை பேண் தகுநிலையை (Sustainability) எட்டவிடாமல் வைத்திருக்கின்றன.
அதேநேரம் கலைஞர்களதும் செயற்பாட்டாளர்களும் உழைப்பினைப் பொருளாதார அளவீடுகளை வைத்து அளவிடும் போக்கே பொதுச்சமூகத்திடம் இருக்கின்றது. கலைஞர்களும், செயற்பாட்டாளர்களும் செய்யும் உழைப்புக்கான பணமதிப்புக் கிடைக்காதுவிட்டாலும் அதுவும் ஓர் உழைப்புத்தான் என்பதையும் மக்கள் உணர்வதில்லை. இன்னொரு விதத்தில் எழுத்தாளர்கள்/செயற்பாட்டாளர்கள் யதார்த்தத்தை / நிஜத்தின் வெம்மையை அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள். பொருளாதாரம் பற்றிய பிரக்ஞை இன்மையைக் காட்டி எழுத்தாளர்கள்/கலைஞர்கள் என்றாலே யதார்த்தத்தை மறந்து வெறும் கனவுகளில் வாழ்பவர்கள் என்பதாக முடித்துவிடுவது இருக்கின்றது. செய்க பொருளை! என்று வள்ளுவர் சொன்னது இன்றும் பொருள் பொதிந்ததாகவே இருக்கின்றது.
சிவதாசனின் எழுத்துகள் தனித்துவமான நடையையும் அவருக்கு உரிய பார்வையையும் கூர்மையான கவனங்களையும் நகைச்சுவை கலந்துவெளிப்படுத்துகின்றன. காமம், பாலியல் தேவைகள், பாலியல் திருப்தியின்மை, குடும்ப வன்முறை, போதை பாவனை என்று பேசாமல் கடந்த விடயங்களை அவர் கதைகள் பேசுகின்றன.
கர்ம சூத்திரம் என்றொரு கதை. திருமணத்தின் பின்னர் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லை என்கிற தாழ்வுமனப்பான்மை கொண்ட கணவனும் அதனை வெளிப்படையாகவே காட்டிக்கொள்கிற மனைவியும் வருகின்றார்கள். பெண் தன் தாயிடம் இதைப் பகிர்ந்துகொள்ளும்போது
“உங்கட அப்பாவுக்கும் இதே பிரச்சினை இருந்தது. நான் பொறுமையாக இருந்து எல்லாமே எதிர்பார்த்தபடி நடந்தது என்பதுபோல நடித்துச் சமாளித்தேன். அவரும் நெஞ்சை நிமித்திக்கொண்டு தன்ர ஆம்பிளைத்தனத்தைத் தானே மெச்சிக்கொண்டு போயிருக்கலாம். அம்மாவின் கண்களில் நீர் பனித்தது, உனக்குப் பிற நாலு பிள்ளைகளைப் பெற்றவர் அவர்”
என்கிறார் தாய். தனது சிக்கலை விதவையான விஜயலட்சுமி அக்காவிடம் கணவன் சொல்ல, அவள் மனைவியிடம் கதைக்கிறாள். அதன்பிறகு சிக்கல் தீர்கிறது. இது பற்றி விஜயலட்சுமி அக்கா,
“நீங்கள் சின்னப்பிள்ளைகள், படிச்சனீங்கள். வேலியடிக்கதைகளை நீங்கள் நக்கலடிக்கிறனீங்கள். உங்களுக்கு அதில் நம்பிக்கையில்லை.”
என்கிறாள். கேணியடி, வேலியடி, குளத்தடி, கடையடி, கோயிலடி, மதவடி என்று கதைக்கின்ற பேச்சுகள் வெறும் வெட்டிப்பேச்சுகள் அல்ல; அவை ஒருவிதத்தில் ஆற்றுப்படுத்தலும் கூட. இப்படியான நுண் அவதானங்களைக் கொண்ட கதைகளால் நிறைந்தது இந்தத் தொகுதி.
பின்குறிப்பு:
1. ரொரன்றோவில் ஒக்ரோபர் 5, 2025 அன்று நடைபெற்ற குற்ற ஆலம் நூல் வெளியீட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
2. இக்கட்டுரை டிசம்பர் 2025 ஜீவநதி இதழிலும் வெளியாகியிருந்தது.

நன்றி அருண்மொழிவர்மன். ஒரு சிறு விளக்கச் செருகல். ‘குப்பி’ கதையில் அரசியல்வாதியின் ஆவேசமான பேச்சைக் கேட்டு கைகளைத் தட்ட எண்ணியது அப்பேச்சை ஆதரித்தல்ல. அதந் பின்னால் ஒரு ஏளனம் கலந்த வெறுப்பு இருக்கிறது என்பதாகவே சொல்ல நினைத்தேன். கருத்து சரியாக வெளிப்படவில்லை.
LikeLike