துறந்தார்க்கும் துவ்வாதார்க்கும் இறந்தார்க்கும்
நீ எஞ்ஞான்றும் நின்ற துணை
அன்பும் அறனும் உடைத்த இல்வாழ்வை
நீ வாழ்ந்து காட்டிய தகை
அறத்தாற்றின் இல் வாழ்க்கை ஆற்றிக்காட்டி
புறத்தாற்றுச் செல்லாமல் எமைத் தடுத்த கொடை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வான் உறையும்
தெய்வத்துக்கு ஆன இணை
பப்பாவைப் பற்றி எழுதுவதென்றால் எதை எழுதுவது? எதை விடுவது? என்ற நினைப்பிலேயே சில தினங்கள் கழிந்துவிட்டன. முன்பொருமுறை ஒரு வாழ்த்து மடலில் பப்பா பற்றி எழுதும்போது “பிரமாண்டங்களின் அழகு எல்லாம் சற்றே விலத்தி இருக்கும்போது தெரியும், அதனால் தான் சற்றே விலத்தி கனடா வந்தேன் உங்கள் பிரமாண்டத்தைப் பார்க்க” என்று எழுதியிருந்தேன். அதுபோல பிறப்புமுதல் அருகிருந்தும், சற்றே விலத்தியும் இருந்து பார்த்தும், ரசித்தும், படித்தும் வளர்ந்த ஆளுமையாக பப்பாவே இருந்தார்.
பப்பா, எங்கள் வளர்ச்சிகளில் அக்கறை கொண்டிருந்தாலும் அவ்வப்போது அவற்றை மென்மையாகச் சுட்டிக்காட்டினாலும் எங்கள் தனித்துவமான இயல்புகளில் தலையிடாமலே வளர்த்தார். இறுக்கமான யாழ்ப்பாணத்துச் சூழ்நிலையில் அதுவும், போர்க்காலத்தில் 11 வயதில் அவரது மூத்த மகனான நான் வீட்டில் ஒரு நூலகம் அமைத்து புத்தகங்களை ஊரவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பியபோது அதற்கு எந்த தடையுமில்லாமல் ஆதரவளித்தார். அந்த நூலகத்தில் அவரும் ஒரு அங்கத்தவராக இருந்தார் என்பதுவும் நினைவு. அதே காலப்பகுதியில் நான் சிறு சிறு கதைகள் எழுதி ஸ்ரேப்ளர் மூலமாக இணைத்து வைத்திருப்பேன். அதனை வாசிக்கவேண்டுமானால் இரண்டு ரூபாய் கட்டணம் என்றும் முன்னட்டையில் எழுதி இருந்தேன். அப்படி எழுதியவற்றை எல்லாம் கட்டணம் தந்து வாசித்து ஊக்கப்படுத்துவார் பப்பா. எமது பிறந்த நாட்களுக்கு யாழ்ப்பாணத்தில் அப்போது இருந்த புத்தகக்கடைகளுக்குக் கூட்டிப்போவார். பிறந்தநாள் பரிசாக வேண்டுமான புத்தகங்களை நாம் தேர்ந்தெடுக்கலாம். இப்படியாக பிள்ளைகளுக்கு மாத்திரமல்ல, எல்லாருக்கும் அவர்கள் மனமறிந்து நடந்துகொள்வார் பப்பா.
அதுபோல வாசிப்புக் குறித்த எனது தேர்வுகளிலும் அப்பா தலையிடமாட்டார். கனடா வந்த புதிதில் நான் ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றி வாசிக்க ஆர்வமாக இருந்த போது அப்பாவின் மச்சான் ஒருவர் ஊடாக சில ஜேகேயின் புத்தகங்களை அனுப்புமாறு கோரி இருந்தேன். கிட்டத்தட்ட அதே காலப்பகுதியில் ஓஷோவையும் தேடலுடன் வாசித்துக்கொண்டிருந்தேன். தவிர கம்பராமாயணம் கற்க கனடாவில் வித்துவான் இராசநாயகம் என்பவரிடம் வகுப்புகளிற்கும் சென்றுவந்துகொண்டிருந்தேன். எனது உறவினர்கள் சிலர் இவற்றால் எனது கல்வி தடைபடலாம் என்று கருத்துக்கூறி இருந்தபோதும்கூட அப்பா இவற்றுக்கு எந்தத் தடையும் கூறவில்லை. எனக்குத் நினைவு தெரிந்த காலம் முதலாக நானும் சரி சகோதரர்களும் சரி வாசிப்பவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்ளக்கூடிய முதலாவது நபராக அப்பா இருந்தார்.
அப்பாவும் சரி, அப்பாவின் சகோதரர்களும் சரி பெரிதாக உணவுகளில் அக்கறை இல்லாதவர்கள். எத்தனை விருப்பமான சாப்பாடாக இருந்தாலும் அ:ளவாகவும் குறைவாகவும் சாப்பிட்டுவிடுவது அவர்களது வழக்கம். ஆனால் உணவுகள் குறித்து மிகவும் கூர்மையாக அப்பா சில விடயங்களைப் பகிர்ந்துகொள்வார். அவர் உணவுகள் குறித்து வர்ணிப்பதைப் பார்த்தால் அவர் ஒரு தேர்ந்த சமையல் கலைஞரோ என்ற எண்ணம் எல்லாருக்கும் வரக்கூடும். எனது தம்பி அம்மாவிடம் அப்பா நல்லா சமைப்பாரோ என்று கேட்டதாக அம்மா அடிக்கடி நினைவுகூர்வார். அதுபோல அவர் வாழ்ந்த இடங்களில் எல்லாம் இருக்கக்கூடிய சிறிய கடைகளில் கூட என்னென்ன உணவுகள் நன்றாக இருக்கும் என்று அவருக்கு சரியான தெரிவுகள் இருந்தன. அவற்றை எனக்கு அறிமுகம் செய்துவைத்துக்கொண்டும் இருந்தார். 1987 ஆம் ஆண்டு கொழும்பில் இருந்த யாழ்ப்பாணத்துக்கு வேலை மாற்றலாகி வந்தபின்னர் 1997இல் நான் மீண்டும் கொழும்பு சென்றபோது இந்த இந்தக் கடைகளில் இந்த இந்த உணவுகள் நன்றாக இருக்கும் என்று சொல்லி அழைத்துப் போய் இருந்தார். மிக ரசனையான தேர்வுகளாக அவை இருந்தன. அப்போது கொழும்பில் கிறீண்லாண்ட் உணவகத்தின் வாயிலில் புத்தகக் கடை ஒன்றும் இருந்தது. தனது இளமைப் பருவத்தில் குமுதம், ஆனந்த விகடன் வெளியாகும் நாட்களில் அங்கே போய் மசால் தோசை அல்லது வடையும் கோப்பியும் குடித்தபடி விகடனை அல்லது குமுதத்தை வாங்கி முக்கியமானவற்றை அங்கிந்தே படித்துவிடுவதாக கூறி என்னையும் விகடன், குமுதம் வெளியாகும் நாட்களில் அழைத்துப்போய் தனது இளமைப் பருவ நினைவுகளை எனது பதின்மங்களின் மத்தியில் புகுத்தி இருந்தார். பின்னர் அப்பா யாழ்ப்பாணம் திரும்பிவிட, நானும் நண்பன் குணாளனும் நான் கொழும்பில் இருக்கும்வரை அதைத் தொடர்ந்திருந்தோம்.
சிறுவயது முதல் எனக்கு கிரிக்கெட் விளையாட்டில் பெரும் ஆர்வம் இருந்தது. யாழ்ப்பாணத்தில் அப்போது இடம்பெறும் கிரிக்கெட் ஆட்டங்களையும் தேடித் தேடிப்பார்ப்பது எனது வழக்கமாக இருந்தது. 1995 ஆம் ஆண்டு பரி யோவான் கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் ஆட்டத்தின் அன்று நான் பாடசாலை முடிந்து வெளியில் வரும்போது பப்பா பாடசாலை வாசலில் நிற்கின்றார். இன்றைக்கு பிக் மட்சல்லோ? பார்க்கப் போகேல்லையோ என்று கேட்டு மட்ச் பார்க்கப்போக என்று கையில் காசும் தந்து அனுப்புகின்றார் பப்பா. பின்பொருநாள் யாழ்ப்பாணத்தில் மீண்டும் மினி தியேட்டர்கள் இயங்கத் தொடங்கிய காலத்தில் தளபதி திரைப்படம் திரையிடப்பட்ட அன்று நானும் நண்பர்களும் பாடசாலைக்குப் போகாமல் திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தோம். பின்னர் வீடுதிரும்பிய பின்னர் பப்பா வழமைபோல என்னிடம் இன்று பாடசாலையில் என்ன நடந்தது என்று கேட்க, நான் இன்று பாடசாலைக்குப் போகவில்லை, படம் பார்க்கச் சென்றிருந்தோம் என்று உண்மையைக் கூறிவிடுகின்றேன். தான் எம்மை பாடசாலை நேரத்தில் தெருவில் கண்டதாகவும் அதனாலேயே கேட்டதாகவும் கூறியவர் நான் உண்மையைச் சொன்னது தனக்கு சந்தோசம் என்று கூறினார். இப்படி விநோதங்களின் கலவையாகவே பப்பா இருந்தார்.
அப்பா அவரது காலத்திய தமிழ் சினிமாக்களை அதிகம் பார்ப்பவரகாக இருந்திருக்கின்றார். எமது வீட்டில் சாப்பாட்டு நேரம் முடிய கதைத்துக்கொண்டிருக்கும்போது அப்பா அக்காலத்தைய படங்களைப் பற்றிப் பேசுவதுடன் சில காட்சிகளை நடித்தும் காட்டுவார். குறிப்பாக சிவாஜி கணேசனின் திரைப்படங்கள்… ஞானஒளி, வசந்தமாளிகை என்று அவர் நடித்துக்காட்டியதன் ஊடாகவே எமது பால்யத்துள் சிவாஜி அறிமுகமாகி இருந்தார்.
சிறுவர்களுடன் இருக்கும்போது பப்பா தானும் ஒரு சிறுவராகவே அவர்களுடன் கதைத்து கதை கேட்டுக்கொண்டு இருப்பார். நாம் சிறுவர்களாக இருந்தபோது தான் சிறுவயதில் படித்த பாடப்புத்தங்கள், ஆங்கில கதைகள் என்பன பற்றி அடிக்கடி கதைகளாகச் சொல்லுவார். ஒவ்வோராண்டும் பாடசாலை தொடங்கும்போதும் எமது கொப்பிகளுக்கு உறை போட்டு முன்பக்கத்தில் பெயர் எழுதுவது அவருக்கு பிடித்தமானதொன்று. தனது துறை சார்ந்தும், இதழ்களை வாசிப்பதிலும், பொதுவான வாசிப்பிலும் பத்திரிகைகளை வாசிப்பதிலும் அவருக்கு நிறைய ஆர்வம் இருந்தது. ஓய்வுபெற்றபின்னர் நிறைய வாசிக்கவேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். துரதிஸ்டவசமாக அது நிறைவேறாமல் போய்விட்டது.
அது தவிர மற்றவர் பேசுவதை பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்கின்ற பண்பும் பப்பாவுக்கு இருந்தது. வீட்டில் நாம் கூட பப்பாவை Good Listener என்று கேலிசெய்வோம். பப்பா எதையும் நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர். நீண்டகாலமாக எமது வீட்டில் இரவு உணவினை எல்லாரும் ஒன்றாக உண்ணுகின்ற ஒரு வழக்கம் இருந்தது. அப்போது யாழ்ப்பாணத்தில் இரவு 8:45 க்கு தூத்துக்குடி வானொலியில் இருந்து ஒலிபரப்பாகும் 3 பாடல்களுடன் எங்கள் இரவு உணவுப்பொழுது தொடங்கும். 9:00 மணிக்கு ஆங்கிலச் செய்திகள். 9:15க்கு தொடங்கி பிபிசி ஒலிபரப்பு 9:45 க்கு முடிந்தபின்னரும் பேச்சுத் தொடங்கும். திரைப்படங்கள் குறித்தும் பாடல்கள் குறித்தும், புத்தகங்கள் குறித்தும், பாடசாலையிலும் வேலையிலும் வீட்டிலும் நடந்த சம்பவங்கள் குறித்துமாக எல்லாருமாக உரையாடுவது வழக்கமாக இருந்தது. குடும்ப உறவுகளிடையேயும் தோழமையை தொடர்ந்து பேணியவாறும் அதனை தன் செயல்களால் எமக்கும் வலியுறுத்தியவராக அப்பா இருந்தார்.
கருத்தியல் ரீதியில் எனது எல்லாக் கருத்துகளுடனும் அவருக்கு உடன்பாடு இருந்திருக்காது என்றாலும் நான் பேசுபவற்றை முழுமையாகக் கேட்டு, துணைக்கேள்விகளும் கேட்டு அறிந்துகொள்ளுவார். அவர் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடந்த நாலாண்டுகளும் இரண்டும் மாதங்களும் வாரத்தில் ஆறுநாட்கள் கதைப்பதை, அதிலும் சில சமயங்களில் ஒரு நாளுக்கு இருமுறை கதைப்பதை வழமையாக வைத்திருந்தேன். அப்போதெல்லாம் நான் சம காலத்தில் வாசித்துக்கொண்டிருப்பவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்ளும்போது மிகவும் கவனமாக கேட்டறிந்துகொள்ளுவார். அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களின் முன்னர் கூட இலங்கை சென்று ஒருமாதம் அங்கே தங்கியிருந்தேன். அப்போதும் கூட நான் பங்கேற்றுவரும் புதிய சொல், நூலகம் போன்றவை பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பயணத்தின்போது சமகால அரசியல், தமிழ் சினிமா, தனுஷ், விபுலானந்தர், கா. சிவத்தம்பி, சண்முகம் அண்ணை கடை, யாழ்ப்பாணத்து சாப்பாட்டுக் கடைகள், தொன்ம யாத்திரை, என் நண்பர்கள் என்று எல்லார் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் பேசுவது மிகவும் குறைந்துவிட்ட காலப்பகுதி அது.
எனது நண்பர்கள் அனைவரும் அவருக்கும் மிகவும் நெருக்கமானவர்களாகவே இருந்தார்கள். குறிப்பாக விசாகனுடன் அவருக்கு மிக ஆத்மார்த்தமான ஒரு பிணைப்பு இருந்தது. அதுபோலவே தயாபரன், சயந்தன், தெய்வீகன், குணாளன் போன்றவர்களுடன் அவர் மிக நெருக்கமானவராக இருந்தார். ஒப்பீட்டளவில் குறையக் காலம் பழகினாலும் தயாரஞ்சன் மிக நெருக்கமான ஒருவரான மாறி இருந்தார். அப்பாவின் இறுதிநாட்களில் எனது பயணமும் புதிய சொல், அதுசார்ந்த வேலைகள், நண்பர்கள் என்பதாக அதிகம் மையம் கொண்டிருந்தது. பெயரளவில் அவர்களைத் தெரிந்திருந்தார். அதேநேரம் மிக இளவயதில் இருக்கும் அவர்கள் வாழ்வில் நிலைக்கவேண்டும் என்பதை நான் வலியுறுத்தவேண்டும் என்பதைத் தொடர்ந்துசொல்லி வந்திருந்தார்.
வாழ்வு வெற்றிகரமானது என்பதை எப்படி அளவிடுவது என்பது எனக்கு எப்போதும் சிக்கலானதாகவே இருந்தது. எனது வாழ்வில் இரண்டு மடைமாற்றங்கள் நிகழ்ந்தன என என்னால் உணரமுடிகின்றது. அவை பற்றியெல்லாம் அப்பாவுடன் பேசக் கூடியதாக இருந்தது. கருத்தியல் ரீதியாக அவருக்கு எனது பல கருத்துகளுடன் முரண்கள் இருந்தன என்று குறிப்பிட்டு இருந்தேன் ஆனால் அவர் என்னைப் புரிந்துகொண்டிருந்தார். ஒருவிதத்தில் அவரது இறுதிக்காலங்களில் நானும் அவருக்கு என்னை உணர்த்திவிட விரும்பினேன். அதனை ஓரளவு செய்திருந்தேன் என்றே கருதுகின்றேன்.
அவரது பரம்பரைக் கோயிலான காட்டுத்துறை ஶ்ரீ அம்பலவாண விக்கினேஸ்வரப் பிள்ளையார் கோயிலின் கும்பாபிஷேகம் குறித்து அவர் பெரிதும் யோசித்துக்கொண்டிருந்தார். தற்போது நடைபெற்றுவருகின்ற அந்த வேலைகள் சரியானபடி நிறைவுற அவரது ஆசியும் கிட்டும் என்று நம்புகின்றேன்.
பப்பா பற்றி எழுதுவதென்றால் ஒரு தொடராக, கணத்துக்கு கணம் காட்சிமாறும் ஜன்னலோர ரயிலிருக்கையாக நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இத்தனைகாலமும் எம்முடன் வாழ்ந்தவர், இன்னும் வாழ்வார் எம் நினைவோடு. பப்பா எப்படி எமக்கெல்லாம் இருந்தாரோ அப்படி வாழ்வதற்கான முனைப்பே எம் வாழ்வை இன்னும் அர்த்தப்படுத்தும் என நினைக்கின்றேன்.
இதற்குமேல் என்ன அதிகம் சொல்வது என்று தெரியவில்லை…
அப்பா இல்லாமல் ஓராண்டு என்று நினைக்கின்றபோதே மனம் பரிதவிக்கின்றது. என்ன செய்வது….
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
அப்பாவிற்கு அருமையான அஞ்சலி அருண்மொழி. உங்கள் முக நூல் மீள்பதிவில் இருந்து வந்து படித்தது நெகிழ்வாக இருந்தது – மிச்சிகனில் இருந்து திரு.
LikeLike