ஞாயிறு“ஈழத்தின் தமிழ் வளர்ச்சிக்கு ஆறுமுக நாவலர் செய்த தொண்டை சிற்பத்துக்கு ஸ்ரீ நவரத்தினம் செய்துள்ளார்” என்று எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கியால் விதந்து கூறப்பட்டவர் கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள்.  1898 இல் இலங்கையின் வடபுலத்தில் உள்ள வண்ணார்பண்ணை என்கிற கிராமத்தில் பிறந்த இவர் இலங்கை, இந்தியாவின் கலைகள், சிற்பங்கள் குறித்தும் சமயவியலிலும் குறிப்பாக சைவசித்தாந்தத்திலும் முக்கியமான நூல்களை எழுதியவர்.  இவர் எழுதி 1941இல் வெளியான “தென்னிந்திய சிற்பக் கலைகள் என்கிற நூலே தமிழில் சிற்பக்கலைகள் குறித்து வெளியான முதலாவது விமர்சன நூல் என்று கருதப்படுகின்றது.  இந்நூலைப்பற்றி கல்கி கூறும்போதே

“தமிழ்மொழிக்கு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் செய்த தொண்டை ஸ்ரீ நவரத்தினம் தமிழ்ச் சிற்பத்துக்குச் செய்திருக்கின்றார் என்று சொல்லலாம். தமிழ் நாட்டில் எந்தப் புத்தகசாலையில் இந்த, அரிய புத்தகம் வைக்கப்படவில்லையோ, அந்தப் புத்தகசாலையை மூடி விடுவதே உத்தமமாகும்”

என்று குறிப்பிடுகின்றார். தொழில் முறையால் வணிகவியல் ஆசிரியராகக் கடமையாற்றிய இவர் தமிழில் வணிகவியல் குறித்து முதலில் நூல்களை எழுதியவராகவும் குறிப்பிடப்படுகின்றார்.  காலனித்துவ காலத்தில் விடுதலை உணர்வொன்று பரவியிருந்த காலப்பகுதியில் சுதேச சிந்தனைகளும், இன உணர்வும் மிளிரப்பெற்றவராக இருந்தவர்களில் ஒருவராக நவரத்தினம் அவர்களும் இருந்தார்.  இலங்கை பிரித்தானியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றபோதும் மக்கள் சிந்தனையளவில் காலனித்துவத்துக்கு அடிமைப்பட்டே இருந்தனர்.  இதிலிருந்து விடுபட்டு சுதேசக் கலைவடிவங்களையும் பண்பாட்டையும் மக்களிடத்தில் கொண்டுசெல்லவேண்டும் என்கிற பிரக்ஞை பூர்வமான தெளிவு அவரிடம் இருந்தது.  1954 இல் ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றத்தால் வெளியிடப்பட்ட இலங்கையில் கலை வளர்ச்சி நூலின் முன்னுரையில் அவர் முன்வைக்கின்ற கருத்தானது இன்றளவும் கவனத்திற்கொள்ளத்தக்கது.

“நாட்டில் கலாசார வாழ்வு மறுமலர்ச்சி அடைய வேண்டுமெனின், இந்நிலை (இதற்கு முன்னைய பந்தியில் “இலங்கை மக்களாகிய நாம், எமது பண்டைய நாகரிகச் சிறப்புகள் யாவற்றையும் மறந்து, பிறநாட்டு நாகரிகத்தில் மயங்கி வாழ்கிறோம்” என்று குறிப்பிடுகிறார்.  அதுவே ”இந்நிலை” என்பதால் குறிப்பிடப்படுகின்றது – இக்கட்டுரை ஆசிரியர்) மாறுதல் அடையவேண்டும்.  இலங்கையின் பூர்விக சரித்திர வரலாற்றையும் கலைவளர்ச்சியையும் எடுத்துக்கூறும் நூல்கள் நாட்டில் தோன்றுதல் வேண்டும்.  இக்கால ஆராய்ச்சி முறைகளைப் பின்பற்றித் தமிழிலும் சிங்களத்திலும் கலை, சமயம், கலாசாரம், சரித்திரம் முதலிய துறைகளிற் பல நூல்கள் வெளிவருதல் வேண்டும்.  இலங்கையின் சரித்திர நூல்கள் சிறந்த முறையில் இன்னும்  எழுதப்படவில்லை.  இன்று காணப்படும் சரித்திர நூல்கள் யாவும் பள்ளிக்கூட மாணவர்களின் தேவைக்காகச் சுருக்கமாக எழுதப்பட்டனவேயாகும்.  அவையும் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே ஆக்கப் பெற்றிருக்கின்றன.”

இந்நூல் வெளிருவதற்கு முதற்கொண்டே இத்தகைய நிலைப்பாட்டிலேயே நவரத்தினம் அவர்கள் இருந்திருக்கின்றார் என்பதனை அவரது எழுத்துகள் மற்றும் அவற்றின் உள்ளடக்கத்தின் ஊடாக அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது.  அவரது வீட்டில் சமயம், கலை, தத்துவஞானம், சரித்திரம் சம்பந்தமான 2000 புத்தகங்களை சேகரித்தும் ஒன்பது அலமாரிகளில் அடுக்கி வைத்திருந்ததாக நான் கண்ட கலைப்புலவர் நூலை எழுதிய கா. மாணிக்கவாசகர் பதிவு செய்கின்றார்.  இந்தப் பின்னணியும், கலை வளர்ச்சி பற்றிய ஆர்வமும் கொண்டிருந்த நவரத்தினம் அதே கருத்தியல் பின்னணியுடன், தன்னிடமிருந்த பெரும்பாலான நூல்களையும் வழங்கி,  அறிவுத்தேடலுக்கான அமைப்பாக 1930 டிசம்பர் மாதம் 5ம் திகதி உருவாக்கியதே கலா நிலையம் என்கிற அமைப்பாகும்.  இதன் தலைவராக பரமேஸ்வராக் கலாசாலைத் தலைவராக இருந்த சு. நடேசபிள்ளை அவர்களும் செயலாளராக க. நவரத்தினம் அவர்களும் இருந்துள்ளனர்.  அத்துடன் அதன் சிறப்பு வகை அங்கத்தினர்களாக சுவாமி விபுலானந்தர், சுவாமி ஞானப்பிரகாசர், டாக்ரர் அன்றியாஸ் நெல், முதலியார் செ. இராசநாயகம் (Ancient Jaffna நூலாசிரியர்) ஆகியோர் இருந்துள்ளனர். கலா நிலையம் அடிப்படையில் மூன்று நோக்குகளைக் கொண்டிருந்ததாகத் தெரிகின்றது.  அவையாவன,

 • இலக்கியம், தத்துவஞானம், பௌதிக சாஸ்திரம், ஓவியம், நாகரிகம், சரிதம் என்னும் இவற்றில் இந்தியாவும் இலங்கையும் அடைந்த பெறுபேறுகளை ஆராய்ந்தறிதல்
 • இவற்றை இக்கால ஆராய்ச்சி முறையில் விளக்குதல்
 • கலைகளின் புத்துயிர்ப்புக்கும், நாட்டின் நோக்கங்கள் கைகூடுவதற்கும் முயலுதல்

கலா நிலையம்

1930களில் கலா நிலையம் ஆரம்பிக்கப்பட்டபோது நிலவிய அரசியல், சமூக, பண்பாட்டுப் பின்னணிகளுடன் வைத்து நோக்குகின்றபோது கலா நிலையம் எத்தனை தீர்க்கமான முன்னெடுப்புகளுடன் ஆரம்பிக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.  கலா நிலையம் தன்னிடத்தில் மிகப்பெரிய நூலகம் ஒன்றினைக் கொண்டிருந்தது.  அத்துடன் அங்கே இலக்கியம், தத்துவம், கலை, சமயம், பொருளாதாரம் போன்ற தலைப்புகளில் தொடர்ச்சியாக விரிவுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன.  அன்றைய காலத்தில் வாழ்ந்த முக்கியமான ஆளுமைகள் அங்கே வந்து விரிவுரையாற்றியிருக்கின்றனர்.  அதன் இரண்டாவது ஆண்டு அறிக்கையின் படி, அவ்வாண்டில் மாத்திரம் தமிழில் 21 விரிவுரைகளையும், ஆங்கிலத்தில் 3 விரிவுரைகளையும் அது ஒருங்கிணைத்திருக்கின்றது என்று தெரிகின்றது.  அத்துடன் அதன் நூல் நிலையத்தில் 1035 நூல்கள் இருந்திருக்கின்றன என்றும் அவற்றில்

தமிழ் நூல்கள் 421
ஆங்கில நூல்கள் 614
ஏட்டுப் பிரதிகள் 41
அச்சில் இல்லாத தமிழ் நூல்கள் 76
அச்சில் இல்லாத ஆங்கில நூல்கள் 92

என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.

கலா நிலையத்தின் நோக்குகளை முன்னெடுக்கும் நோக்குடன் 1933 இல் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இதழே ஞாயிறு ஆகும்.  ஞாயிறு அதன் உள்ளடக்கத்தால் மட்டுமன்றி அதன் தோற்றத்தின் பின்னணியாலும் முக்கியமானது என்பதனால் அதனை சற்றே விரிவாக அலசவேண்டியது அவசியமானதே.  கலா நிலையத்தின் இரண்டாவது ஆண்டு அறிக்கையில் ஞாயிறு இதழின் அறிமுகமாகக் கொள்ளத்தக்கதாக பின்வரும் பகுதி அமைகின்றது.

”தமிழ்க் கலை ஆக்கத்தின் பொருட்டு முயலுதற்குச் சிறந்த தமிழ் வெளியீடு ஒன்று இன்றியமையாத கருவியாகும்.  ஆதலினால், ஒரு சிறந்த தமிழ் இதழ் வெளியிடவேண்டுமென்பது எங்கள் நோக்கங்களிலும் ஒன்றாய் இருந்தது.  இந்நோக்கம் நிறைவேறுவதற்கேற்ற பொருத்தங்கள் சில வாய்ப்புற்றமையை நினைத்து நாம் மகிழ்ச்சியடைதல் வேண்டும்.  “ஞாயிறு” என்னும் பெயருடன் இரு திங்கட்கொருமுறை ஒவ்வொரு பெரும் பொழுதிலும் வெளிவரும் சிறந்த செந்தமிழ்க் கட்டுரை வெளியீடு ஒன்று அச்சிடப்பட்டு வருகின்றது.  இளவேனிற் காலமாகிய சித்திரைத் திங்கள் முதல் வாரத்தில் முதற்கதிர் வருமென எதிர்பார்க்கின்றோம். ”

ஞாயிறு ஆரம்பம் முதலே தனக்கென ஒரு உள்கட்டுமான ஒழுங்கினைச் செய்திருந்தது என்பதை அதன் நிர்வாக ஒழுங்கிற்கு நல்லதோர் சான்றெனக் கொள்ளலாம்.

ஞாயிறு ஆசிரியக் கழகம்

தனக்குரிய குறிக்கோளினையும் தனது வகிபாகம் என்னவென்பதையும் தீர்க்கமாக முன்வைத்திருந்த ஞாயிறு இதழ் அதற்கேற்ற உள்ளடக்கத்துடனேயே வெளியாகியது. கலா நிலையம் ஆரம்பிக்கப்பட்டு, ஞாயிறு இதழ் ஆரம்பிக்கப்படுவதை ஒட்டிய காலப்பகுதிகளில் இலங்கையின் பத்திரிகைத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சிகளை இங்கே நோக்குவதும் பொருத்தமானதே. தினகரன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்களில் ஒருவராக இ. சிவகுருநாதன் ”இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி என்கிற நூலில் பதிவுசெய்வதன்படி 1930 இலிருந்து 1932 மார்ச் மாதம் தினகரன் பத்திரிகை ஆரம்பிக்கும்வரை பஞ்ச சக்தி, தினத்தபால், ஈழகேசரி, வீரகேசரி, தமிழர் தொண்டன், தொழிலாளி, ஜனதர்ம போதினி, கமத்தொழில் விளக்கம், தப்லிக்குள் இஸ்லாம், லங்கா, தமிழன், தேசபக்தன் ஆகிய பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.  இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் உணரப்பட்டும் அதிகமாகிக்கொண்டுமிருந்த இந்தக் காலப்பகுதியில் தொடங்கிய இதழ்கள் தெளிவான கருத்தியல் பின்னணியுடனேயே இயங்கியிருக்கின்றன என்பதனையும் இந்த நூலினூடாக அறிந்துகொள்ளமுடிகின்றது.  அந்த அடிப்படையில் ஞாயிறு இலங்கையர் என்கிற அடையாளத்துக்கும், தமிழர் என்கிற அடையாளத்துக்கும் இடையில் தனது நிலையை எவ்விதம் முன்னிறுத்தியது என்பது உறுதியாகத் தெரியாதபோதும், அது கலை, இலக்கியம் பற்றிய ஆய்வுகளை முன்னெடுப்பதிலும் வரலாற்றினூடாகவும் பண்பாட்டு வரலாற்றைப் பற்றிய புரிதலை உருவாக்குவதிலும், காலனித்துவகாலம் ஏற்படுத்திய அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுதலை பெறச்செய்வதிலும் நவீன ஆய்வுகளைக் கைக்கொண்டு முயன்றது என்பது தெளிவாகின்றது.  ஞாயிறு இதழுக்கான ஆக்கங்களை வழங்குவோருக்கான அறிவுறுத்தலைப் பின்வருமாறு அது பிரசுரித்திருக்கின்றது:

கட்டுரை அனுப்பும் அன்பர்கள் தமிழ்மக்கள் வரலாறு, ஏனையோர் வரலாறு, தமிழ் இலக்கிய இலக்கண நூலுரைகள், பக்தி ஞான நூலுரைகள், சம்ஸ்கிருத காவிய அலங்கார நாடகங்கள், தத்துவ தருக்க நூலுரைகள், சங்கீத சித்திர சிற்பக் கலைகள், மேற்றிசை நவீன பௌதீக நூல்கள் முதலான பொருள்களைக் குறித்து இஞ்ஞான்றை அறிவொளியால் சரித்திர முறையில் ஆராய்ச்சி உரைகளால் வரைந்தனுப்புவார்களாக.

அந்த வகையில் ஞாயிறு ஒரு ஆய்விதழுக்காக தரத்தையும், வரையறையையும் கொண்டிருந்ததை அறியமுடிகின்றது.

இக்கட்டுரையை எழுதுவதற்காக ஞாயிறு இதழ்களைத் தேடியபோது நூலக நிறுவனத்தால் (http://www.noolaham.org) ஆவணப்படுத்தப்பட்டுள்ள 1933 ஆனி-ஆடி, 1933 ஆவணி-புரட்டாதி, 1933 ஐப்பசி-கார்த்திகை, 1933 மார்கழி-1934 மாசி ஆகிய காலப்பகுதிகளுக்குரிய 4 இதழ்களே எனது அணுக்கத்துக்குக் கிடைத்தன.  சந்தாதாரர்களை பிரதானமாக நம்பியே ஆரம்பிக்கப்பட்ட ஞாயிறு இதழ், சந்தாதாரர் ஒழுங்காக பணம் செலுத்தாமையினால் அதன் இரண்டாவது இதழ் முதலே மிகுந்த சிரமத்துடனேயே வெளிவந்திருப்பது தெரிகின்றது.  அதன் ஐந்தாவது இதழிலேயே தேக்கம் ஒன்று ஏற்பட்டு இரண்டு காலப்பகுதிகளுக்கான இதழ்கள் இணைந்து ஓரிதழாகவே வெளியாகி இருக்கின்றன.  அது தொடர்பான விளக்கமும் அந்த இதழில் காணக்கிடைக்கின்றது. ஞாயிறு தனது உள்ளடக்கத்தில் மிகவும் தரமான ஆக்கங்களையே பிரசுரித்து வந்ததால் அந்நாளைய தீவிர வாசகர்களுக்கும், ஆய்வாளர்களுக்குமே இந்த இதழ் தேவையானதாகவிருந்திருக்கும் என்பதுவும் அதன் விற்பனை மற்றும் பரம்பலில் தாக்கம் செலுத்தியிருக்கக் கூடும்.  அதேநேரம் அதில் அந்நாளைய முக்கியமான அறிஞர்கள் பலரும் எழுதிய வாசகர் கடிதங்கள் பிரசுரமாகி இருப்பதனால் அது அறிஞர்கள் மத்தியில் நன்கு அறியபப்ட்டிருந்தது என்பதுவும் புலனாகின்றது.

தனது ஒவ்வொரு இதழிலும் சிற்பங்களின் படங்களைப் பிரசுரிப்பதையும் அது பற்றிய சிறுகுறிப்பினை எழுதுவதையும் ஞாயிறு வழக்கமாகக் கொண்டிருந்தது.  அகத்தியர், கௌதம புத்தரின் பரிநிர்வாணம், புலத்திய முனிவரின் உருவச் சிலை, புத்தபகவான் ஆகிய படங்களும் சிறுகுறிப்புகளும் இவ்வாறு பிரசுரமாகியிருக்கின்றன.  சிற்பக் கலை தொடர்பான கௌதம புத்தரின் பரிநிர்வாணம் அதன் மூன்றாவது இதழில் வெளியான கட்டுரை முக்கியமான ஒன்றாகும்.  அதுபோல ஞாயிறு இதழ்களில் வெளியான மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்றாக 1933 ஐப்பசி-கார்த்திகை இதழில் இடம்பெற்றுள்ள பராக்கிரமபாகுவின் உருவச்சிலையன்று, மற்று ஒரு முனைவரின் உருவச் சிலையே என்கிற கட்டுரையைக் குறிப்பிடமுடியும்.  பொலநறுவை பொற்கல் விகாரைக்கு அருகாமையில் அமைந்திருக்கின்ற நின்ற கோலத்திலிருக்கின்ற சிலையானது முதலாம் பராக்கிரமபாகுவின் சிலை என்றே பரவலாக நம்பப்பட்டுவருகின்றது.  ஆயினும் வரலாற்றாய்வாளர்கள் காலத்துக்கு காலம் அது பராக்கிரமபாகுவின் சிலை அல்ல என்று மறுத்துரைத்திருக்கின்றனர்.  இன்று, அது பராக்கிரமபாகுவின் சிலை அல்ல என்பது ஆய்வாளர்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், ஞாயிறில் 1933 இலேயே இது தொடர்பான ஆய்வினைச் செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.  அச்சிலை பராக்கிரமபாகுவின் சிலை அல்ல என்பதை மறுத்துரைக்கின்ற அதேவேளை, அது அகத்தியர் சிலையாக இருக்கக்கூடும் என்கிற வாதத்தையும் நிராகரிக்கின்ற இக்கட்டுரை அது “முனிவர்” ஒருவரது சிலையாக இருக்கலாம் என்கிற வாதத்தை முன்வைக்கின்றது.  இக்கட்டுரை புறவயமாக, ஆய்வுநோக்குடன் எழுதப்பட்டிருப்பது இன்றளவும் அதனை ஆர்வத்துடன் படிக்கத்தூண்டுகின்றது.  துரதிஸ்ரவசமாக இந்தக் கட்டுரையை எழுதியவரது பெயர் இதழில் இடம்பெறவில்லை.

சென்னை அரசினர் பள்ளிச்சங்கத்தினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட பாடத்திட்டத்தில் பண்டைத் தமிழரின் நெசவுத்திறனைப் பற்றி கூறும் கட்டுரையொன்றில் சிலப்பதிகாரம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களை ஆதாரம் காட்டி எலிமயிர்ப் போர்வை செய்கின்ற அளவு நுட்பமான திறன் இருந்ததாகவும், எலிமயிர்ப் போர்வை என்று ஒன்று இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்திருக்கின்றது.  அந்நாளையை உரைகாரர்கள் பலரும் அவ்விதமான பொருளைக் கையாண்டும் இருந்திருக்கின்றனர்.  இந்தப் பின்னணியில் எலிமயிர்ப் போர்வை என்று ஒன்று அந்நாளில் செய்யப்படவில்லை என்பதை வலியுறுத்தி இதனைப் பள்ளிச்சங்கத்துக்கு எடுத்துரைக்கும் நோக்குடன் ஞாயிறுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் சுருக்கம் ஞாயிறில் வெளியிடப்பட்டிருக்கின்றது.  எலிமயிர்ப் போர்வை என்று ஒன்று இருந்திருக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுக்கின்ற இந்த அறிஞர்கள், எலிமயிர்ப் போர்வை என்ற பதம் எப்படி உருவானது என்பது குறித்து ஞாயிறின் இரண்டாவது, மூன்றாவது இதழ்களில் எழுதியிருக்கின்றனர்.  காஞ்சிபுரம் வே. ஸ்ரீநிவாச முதலியார், சேனாபதி நடேசமுதலியார் ஆகியோர் எழுதிய கட்டுரைகளைத் தொடர்ந்து ஈழத்தில் பயிலப்பட்ட சொல்வழக்குகளை வைத்து செ. இராசநாயகம் எழுதிய  விரிவான கட்டுரை வெளியிடப்பட்டிருக்கின்றது.  நான்காவது இதழில் சுவாமி ஞானப்பிரகாசர் எழுதியுள்ள செம்மலியும் கம்பலமும் என்கிற கட்டுரையையும் இந்த உரையாடலின் தொடர்ச்சியாகக் கொள்ளமுடியும்.

திருக்கோணமலை க. விசுவலிங்கம் என்பவர் எழுதிய சாங்கிய தத்துவ ஆராய்ச்சி என்கிற கட்டுரை அதன் முதல் நான்கு இதழ்களில் வெளியாகி நிறைவடைந்திருக்கின்றது.  இக்கட்டுரையை வாசிக்கின்றபோது இக்கட்டுரை ஆசிரியர் திருக்கோணமலை க. விசுவலிங்கம் என்பவர் சாங்கிய இலக்கியத்திலும், சாங்கிய தத்துவத்திலும், மதங்களினது வரலாறு பற்றியும் அவற்றின் தத்துவங்கள் பற்றியும் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்பது புலனாகின்றது.  சாங்கியம் பற்றிய அறிமுகம் எனக்கு தேவிபிரசாத் சட்டோபாத்யாயா ஊடாகவே நிகழ்ந்தது. இந்தியத்தத்துவம் பற்றிய இந்தியர்களது ஆய்வுகள் அனேகம் 1950களிலேயே நடந்ததாகவும், அதன் மூலகர்த்தாக்களில் ஒருவர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா என்றுமே படித்திருக்கின்றேன்.  அப்படியிருக்கின்றபோது 1933 இலேயே இத்தனை விளக்கமாகவும், ஆழமாகவும் கட்டுரையொன்று ஈழத்தவர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கின்றது என்பது வரலாற்று முக்கியமானது. இந்தக் கட்டுரை தொடர்பாக மாத்திரமல்ல, இக்கட்டுரையை எழுதிய திருக்கோணமலை க. விசுவலிங்கம் என்பவர் கூட இன்னும் தெரியப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

ஞாயிறு இதழ்களில் தொடர்ந்து எழுதியவர்களின் சுவாமி ஞானப்பிரகாசரும் ஒருவர்.  ”சொற்களின் வரலாறு என்று அவர் எழுதிய தொடர் கட்டுரைகளில் கொடுத்தலும் வாங்கலும், தொன்மை போன்ற சொற்களின் வரலாறு பற்றி எழுதியுள்ளார்.  முன்னர் குறிப்பிட்ட செம்மலியும் கம்பலமும் என்கிற கட்டுரையும் இந்த விடயப் பரப்பினைச் சார்ந்ததுவே.  ”பெருங்காப்பிய ஆராய்ச்சி என்பது ஞாயிறில் இடம்பெற்ற இன்னொரு தொடர்.  இதனை அப்போது யாழ் மத்திய கல்லூரி அதிபராக இருந்த வியாகரண மஹோபாத்தியாயர் வை. இராமசாமி சர்மா அவர்கள் எழுதியிருக்கின்றார்.  இத்தொடர் தமிழ்க் காப்பியங்கள் பற்றியும் காப்பியம் பற்றியும் ஆராய்கின்ற அதேநேரம் மணிமேகலையை முன்னிறுத்திய ஆய்வாகவும் அமைகின்றது.

தொடர்கட்டுரைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவம் போல ஞாயிறில் ஒவ்வொரு இதழிலும் நிறைவான பல கட்டுரைகளும் மிகப்பெரிய வீச்சுடன் அமைந்திருப்பது இன்னொரு முக்கிய அம்சமாகும்.  அதன் வெவ்வேறு இதழ்களில் இடம்பெற்ற “சார்ள்ஸ் டார்வின் என்பாரும் உயிர்களின் உருவத்தோற்றத்தைப் பற்றிய அவரது கொள்கையும்” என்கிற தா. ஆபிரகாம் எழுதிய கட்டுரையும், ”உரோமரின் வாழ்க்கை வரலாறு” என்கிற ரி. இராமநாதனின் கட்டுரையும் சங்ககாலத்துத் தெய்வ வழிபாடு என்கிற சுவாமி விபுலானந்தரின் கட்டுரையும், தமிழகத்துத் தர்க்கநூல் வளர்ச்சி என்கிற திரு. பொ. கைலாசபதியின் கட்டுரையும், சாளுக்கிய அரசர்களின் சிற்பக் கோயில்கள் என்கிற திரு. சி.கு. நாராயணசாமி முதலியாரின் கட்டுரையும், யோகதர்சனம் என்கிற திருக்கோணமலை க. விசுவலிங்கம் எழுதிய கட்டுரையும் இவ்வகையில் முக்கியமானவை. பன்மணிக்கோவை என்கிற பகுதியில் தமிழரின் அரங்கமேடை என்பது பற்றி வருகின்ற விவரணம் இன்றைய திரைப்படங்களுடனும் ஒப்பிட்டு நோக்கக்கூடியது.  ஆரம்பகால தமிழ்நாட்டு நடிகர்கள் ஒவ்வொரு கதையையும் பலபாகங்களாகப் பிரித்து அவற்றில் என்ன என்ன ரசங்கள் நிறைந்திருக்கின்றன என்று அவதானித்து அதன் அடிப்படையிலேயே காட்சி அமைப்பையும் உரையாடல்களையும் பாடல்களையும் மெட்டுக்களையும் அமைத்தனர் என்றும் சிருங்காரம், சோகம், வீரம், ஹாஸ்யம் என்கிற ரசங்கள் முக்கியமானவையாக உணரப்பட்டு காட்சிகள் அமைக்கப்பட்டன என்று இப்பகுதி கூறுகின்றது.  ஆரம்பகாலத் திரைப்படங்களில் நேரடியாக இருந்த இந்த உத்தி இன்றும் கூட தாக்கம் செலுத்துகின்றது என்பது உண்மையே.

இதழ்கள் வரும்போது அவற்றின் பக்கங்களை இதழ்களுக்கு இதழ் தொடர்ச்சியாக வழங்குவது அந்நாளைய மரபாக இருக்கவேண்டும்.  அதாவது, முதலாவது இதழ் நூறு பக்கங்களுடன் நிறைவுற்றால் அடுத்த இதழ் நூற்றியொராவது பக்கத்துடன் ஆரம்பிக்கும்.  இந்த மரபு ஞாயிறிலும் பின்பற்றப்பட்டிருக்கின்றது.  அச்சுத்துறை வளரத் தொடங்கிய ஆரம்பகாலங்களில் வெளிவந்த இதழ் என்பதால் அதன் எழுத்துருக்கள் இன்னொருவிதமான ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியன.  அதுபோல நூலில் கிடைக்கின்ற விளம்பரங்களிலும் அறிக்கைகளும் உள்ள புத்தகங்களினதும் பத்திரிகைகளினதும் இதழ்களினதும் பெயர்கள் பட்டியலாக்கம் செய்யப்படவேண்டியன.  இக்கட்டுரையை வாசிப்பவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் முகமாக சில விளம்பரங்கள் இக்கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

கலா நிலையம்

இக்கட்டுரைத் தொடருக்காக ஈழத்தின் ஆரம்பகால இதழ்களைத் தொடர்ச்சியாக வாசித்துவருபவன் என்றவகையில் ஞாயிறு எனக்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்த இதழ் என்றே சொல்லவேண்டும்.  ஞாயிறு என்று ஒரு பத்திரிகை வெளியானது என்பதனை மங்களம்மாள் மாசிலாமணி பற்றியும் கலைப்புலவர் க. நவரத்தினம் பற்றியும் தேடுதல்களில் ஈடுபட்டபோது அறியக்கிடைத்தது.  ஆயினும் அதன் வீச்சம் இத்தனை வீரியமாக இருந்திருக்கும் என்று நினைக்கவில்லை.  க. நவரத்தினம், சுவாமி விபுலானந்தர், சுவாமி ஞானப்பிரகாசர், செ. இராசநாயகம், சு. நடேசபிள்ளை, பண்டிதர் கா.பொ. இரத்தினம் என்கிற பெரும் ஆளுமைகள் இந்த இதழ்களில் பங்கேற்றுள்ளார்கள்.  திருக்கோணமலை க. விசுவலிங்கம் என்பவர் பற்றி இதுவரை அறிந்திலன் எனினும் அவர் பற்றிய தேடலுக்கான உந்துதல் ஏற்பட்டுள்ளது.  இந்த இடத்தில் இதுபோன்ற நூல்களை ஆவணப்படுத்தி இலகுவான அணுக்கத்துக்கு வழிசமைத்துத் தரும் நூலக நிறுவனத்துக்கும் என் நன்றிகள். அதற்குமப்பால் ஞாயிறு இதழ்களை முழுமையாகத் தொகுக்கவும் அவற்றை முறையாக ஆய்வுசெய்து மீள்பதிப்பிக்கவும் வேண்டியது முக்கியமானது.  அதுபோலவே ஞாயிறில் எழுதியவர்களில் அறியப்பட்ட பெயர்கள் தவிர ஏனையவர்கள் குறித்த விபரங்களைத் திரட்டுதலும் அவசியம்.  ஞாயிறு என்ன நோக்கிற்காகத் தொடங்கப்பட்டதோ அதற்கான எல்லாத் தேவைகளும் இப்போதும் இருக்கின்றன.


இக்கட்டுரைக்கான உசாத்துணை நூல்கள்

 1. நான் கண்ட கலைப்புலவர் : கா. மாணிக்கவாசர் எழுதியது
 2. இலங்கையில் கலை வளர்ச்சி : கலைப்புலவர் க. நவரத்தினம் எழுதியது
 3. கலைப்புலவர் க. நவரத்தினம் : தமிழினி கமல்ராஜ் எழுதியது
 4. ஞாயிறு இதழ்கள்
 5. ஈழத்துத் தமிழ் பத்திரிகைகள் ஓர் ஆய்வு : ஆ.சிவநேசச்செல்வன் எழுதியது
 6. இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி : இ. சிவகுருநாதன் எழுதியது

இக்கட்டுரை புதிய சொல் ஜனவரி-மார்ச் 2017 இதழில், பதிகை என்கிற தொடர் கட்டுரையாக வெளியானது.

ஈழத்து இதழ்கள் தொடரின் முன்னைய கட்டுரைகள்:

 1. இளங்கதிர்
 2. கலைச்செல்வி
 3. கலாநிதி