“இலங்கையில் தமிழ்க் கலையாக்கங் கருதி வெளிவரும் பத்திரிகை கலாநிதி ஒன்றே” என்ற பிரகடனத்தைத் தாங்கிக்கொண்டு 1942ம் ஆண்டு சித்திரைமாதம் தொடக்கம் மும்மாத வெளியீடாக “ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் (The Jaffna Oriental Studies Society)” வெளியிட்ட இதழே கலாநிதி ஆகும். இதன் நிர்வாக ஆசிரியராக சுன்னாகத்தைச் சேர்ந்த தி. சதாசிவ ஐயரும், பத்திராசிரியர்களாக சு. நடேசபிள்ளை, சுவாமி ஞானப்பிரகாசர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, வே. நாகலிங்கம், வை. இராமசுவாமி சர்மா, தி. சதாசிவ ஐயர் ஆகியோரும் இருந்திருக்கின்றார்கள். ஈழத்துத் தமிழ் இதழ்களின் முன்னோடிகளில் ஒன்றான கலாநிதி பற்றி அறியும் ஆவலுடன் அதன் இதழ்களைத் தேடியபோது நூலகம் இணையத் தளத்தில் கிடைத்த 1943ம் ஆண்டு சித்திரை மாதத்தின் பிரதி தவிர்ந்த வேறு எந்தப் பிரதியையும் கண்டறிய முடியவில்லை. இணையத் தேடுகைகளின் ஊடாகவும், இத்துறையில் அக்கறை கொண்டவர்கள் சிலரிடமும் பேசியபோதும் கூட ஆசிரியர் குழு, வெளியிடப்பட்ட காலம் முதலிய தகவல்கள் தவிர வேறு எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை. எனது பார்வைக்குக் கிடைத்த 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட இதழின் உள்ளடக்கத்தை வைத்துப் பார்க்கின்றபோது இவ்விதழின் முக்கியத்துவத்தை உணர முடிகின்றது. மரபுரிமைகள் பற்றிய கவனயீர்ப்பு அதிகரித்து வருகின்ற சமகாலத்தில் இவ்விதழானது 1940களிலேயே “தொன்மை மறவேல்” என்பதைத் தன் மகுடவாக்கியமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கலாநிதியின் தொடக்கம் பற்றியும் இடையில் ஏற்பட்ட தடங்கல்கள் குறித்தும் இவ்விதழில் வெளிவந்துள்ள ஆசிரியர் குறிப்பைக் கீழே உள்ள மின் வருடலில் காணலாம்.
இந்த இதழைப் படித்தபோது புத்தகவரவு என்கிற பகுதியில் இருந்த “போரும் காதலும்” என்கிற புத்தகத்தின் அறிமுகம் முக்கியமானதாக இருந்தது. அதன் மின்வருடல் பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
டால்ஸ்டாயின் War and Peace இனை தமிழாக்கம் செய்தவராக பொதுவாக டி. எஸ். சொக்கலிங்கமே குறிப்பிடப்படுவது வழக்கம். இவரது மொழிபெயர்ப்பின் முதலாவது பதிப்பு போரும் வாழ்வும் என்ற பெயரில் 1957 இல் வெளியானதாகவும் நீண்டகாலத்துக்குப் பின்னர் மீள்பதிப்பு போரும் அமைதியும் என்ற பெயரில் வெளியானதாகவும் அறியமுடிகின்றது. அப்படி இருக்கின்ற சந்தர்ப்பத்தில் பொ. திரிகூடசுந்தரம் அவர்களின் வெளியீடானது – ஒப்பீட்டளவில் 421 பக்கங்களில் சுருக்கமானதாக இருப்பினும் – டி. எஸ். சொக்கலிங்கம் அவர்களின் மொழிபெயர்ப்பு வெளியாவதற்கும் 14 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியாகியிருக்கின்றது என்பது முக்கியமான விடயமாகும். டால்ஸ்டாய் பற்றியும், போரும் அமைதியும் பற்றியும் தமிழிலக்கிய உலகில் பரவலான பேச்சுகள் இருப்பினும் கூட பொ. திரிகூடசுந்தரம் அவர்களின் மொழிபெயர்ப்புப் பற்றிய விபரங்கள் சரியானமுறையில் பதிவுசெய்யப்படவில்லை என்றே புலனாகின்றது. இதில் குறிப்பிடவேண்டிய விடயம் என்னவென்றால் டி. எஸ். சொக்கலிங்கம் மொழிபெயர்த்த War and Peace இன் முதலாவது பதிப்பினை போரும் வாழ்வும் என்ற பெயரில் முதலில் பதிப்பித்த சக்தி வை. கோவிந்தனே பொ. திரிகூடசுந்தரத்தின் மொழிபெயர்ப்பினையும் பதிப்பித்திருக்கின்றார். இந்தப் பின்புலத்தின் வைத்துப் பார்க்கின்றபோது பொ. திரிகூடசுந்தரத்தின் சுருக்கமான மொழிபெயர்ப்பு தந்த உந்துதலே டி.எஸ். சொக்கலிங்கத்தின் மொழிபெயர்ப்புக்கோ அல்லது அதனை சக்தி வை. கோவிந்தன் பதிப்பிக்கவோ தூண்டுதலாக அமைந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு.
இதே கலாநிதி இதழில் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை எழுதிய “பண்டைக்காலத்து இலங்கையின் பிறநாட்டு வணிகம்” என்கிற கட்டுரை இலங்கை பண்டைக்காலத்திலேயே (கி.பி. முதலாம் நூற்றாண்டு மற்றும் அதற்கும் முற்பட்ட காலங்களிலேயே) இந்தியா, கிரேக்கம், ரோம், சீனா, எத்தியோப்பியா உள்ளிட்ட மேற்கிலிருந்து கிழக்கு வரையான பல்வேறு நாடுகளுடன் வணிகத் தொடபர்புகளைப் பேணியதையும் இந்நாடுகளுக்கிடையிலான வணிகத் தொடர்புகளுக்கான வலையமைப்பின் மையமாக விளங்கியது என்பதையும் வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து நிரூபனம் செய்கின்றார். சந்திரகுப்தன் காலப்பகுதியிலேயே அவனது அவையில் இருந்த சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் இலங்கையின் முத்து வணிகம் பற்றியும் அதே காலப்பகுதியைச் சேர்ந்த மெகத்தினியின் குறிப்புகளில் இலங்கையில் இருந்து யானைகள் இந்தியாவிற்கு விற்கப்பட்டமை பற்றியும் குறிப்புகள் இடம்பெற்றிருப்பதையும், பின்னர் கி.பி. முதலாம் நூற்றாண்டில் பட்டினப்பாலையில் உருத்திரங்கண்ணனால் இலங்கையில் இருந்து உணவுப்பொருட்கள் இந்தியாவிற்கு ஏற்றியனுப்பப்பட்டமை பற்றியும் இக்கட்டுரை குறிப்பிடுகின்றது. மேலும் அந்நாளைய வரலாற்று ஆசிரியர்களாகவும் பதிவுகளை மேற்கொண்டவர்களாகவும் கொள்ளத்தக்க பிளினி, திராபோ, பெரிபிளஸ், தொலமி ஆகியோர்களின் குறிப்புகளில் அந்நாளைய இலங்கையின் வணிகத்தொடர்புகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதையும் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது.
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்களைப் பின்தொடர்ந்து வந்த அவரது மாணவர்களால் கூட அவரது எழுத்துக்கள் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை என்பது துரதிஸ்டவசமானதே. 1974 இல் த. சண்முகசுந்தரம் எழுதிய “கலையருவி கணபதிப்பிள்ளை” என்கிற நூலிலே பேராசிரியர் எழுதியவைகளில் சில என்கிற பட்டியல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்தப் பட்டியலிலே கலாநிதியில் வெளிவந்திருக்கின்ற “பண்டைக்காலத்து இலங்கையின் பிறநாட்டு வணிகம்” என்கிற இக்கட்டுரை இடம்பெறவில்லை. அந்தப் பட்டியலின் நிறைவில் வேண்டிக்கொள்ளப்பட்டவாறு பேராசிரியரின் அன்பர்களும் ஆய்வாளர்களும் இணைந்து அந்தப் பட்டியலை முழுமையாக்குவதற்கு உழைக்கவேண்டும். “பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் புலமைப்பாரம்பரியம் பற்றிய ஓர் அறிமுக ஆய்வு” என்கிற குறுநூலை இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் அதன் முன்னுரையிலே “பேராசிரியர் பற்றிய ஒரு பூரணமான ஆய்வு முயற்சி விரைவில் தொடங்கப் பெறல் வேண்டும்” என்பதை வேண்டுதலாக முன்வைத்திருந்தார். துரதிஸ்டவசமாக பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பற்றிய முழுமையாக ஆய்வுகள் இன்னமும் நடக்கவில்லை என்பதோடு தற்போது காலஞ்சென்றுவிட்ட பேராசிரியர் கா. சிவத்தம்பியின் இறுதிக்கால எழுத்துகளும் இன்னமும் முழுமையாக தொகுக்கப்படவில்லை என்பதை வேதனையுடன் குறிப்பிடவேண்டி இருக்கின்றது.
1942 இல் இலங்கைப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட பின்னரே இலங்கைப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவி உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் தமிழ்த்துறைக்கு விரிவுரையாளர் பதவியே இருந்தது. இவ்வாறு நியமிக்கப்பட்ட முதலாவது பேராசிரியர் விபுலானந்த அடிகள் ஆவார். “சர்வகலாசாலையார் இவர்களை நியமித்ததும் இந்நியமனத்துக்கு அடிகள் இசைவுகொண்டதும் இலங்கைத் தமிழ்மக்களது அரும் பெறலாகிய பாக்கியமே ஆகும்” என்று குறிப்பிட்டு இதனை ஒரு செய்திக்குறிப்பாக கலாநிதி வெளியிட்டிருக்கின்றது.
1940களில் வெளியான இந்த இதழின் உள்ளடக்கத்தை நோக்கும்போது அந்நாளிலேயே சிறுகதை, கவிதை என்கிற புனைவிலக்கியங்களுடன் பண்பாட்டு ஆய்வு, வரலாற்று ஆய்வு, இலக்கியம் பற்றி கோட்பாட்டு ரீதியாக அணுகுகின்ற கட்டுரைகள், ஓவியம் போன்ற கலைகள் பற்றிய கட்டுரைகள் என – சமகாலம் வரை பேணப்படுகின்ற சிற்றிதழ்களின் அல்லது இலக்கிய இதழ்களின் வடிவத்தில் வெளியாகிருப்பது ஆச்சரியமூட்டுகின்றது. குறிப்பாக பி. கோதண்டராமன் (இந்தியக் கலைகள்) எழுதியிருக்கின்ற “நாவல் கலை” என்கிற கட்டுரை இன்றளவும் நாவல் பற்றி தொடர்கின்ற புள்ளிகளைத் தொட்டும், விவாதித்தும் பேசியிருக்கின்றது. இக்கட்டுரை “கலாநிதி”இல் தொடர்ச்சியாக மீள்பிரசுரமாகியிருக்கின்றது. ஆயினும் அது முதலில் எங்கே பிரசுரமானதென்று குறிப்பிடப்படவில்லை. அதன்பிறகே பி. கோதண்டராமனின் இக்கட்டுரைத்தொடர் நூலாகவும் தொகுக்கப்பட்டிருக்கவேண்டும். இக்கட்டுரை மாத்திரமன்றி தென்னாட்டு மொழிகள், இருபதாம் நூற்றாண்டில் வசனம், யாழ்ப்பாண சரித்திர சந்திரிகை, பல்லவ ஓவியங்கள் ஆகிய கட்டுரைகளும் மீள்பிரசுரமான தொடர்கட்டுரைகளே. இவ்வாறான கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமானதை வைத்து நோக்கின்றபோது கலாநிதி 1940களின் சமகாலத்திய இலக்கியச் செல்நெறி பற்றியும் கலை, பண்பாடு பற்றிய வரலாற்றுப் பார்வையுடனும் கூடிய தெளிவான நோக்குடனேயே வெளிவந்திருக்கின்றது என்பதை அறியமுடிகின்றது. கலாநிதியின் ஓர் இதழ் மாத்திரமே பார்வைக்குக் கிடைத்தபோதும், அதனூடாக கலாநிதியின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடிகின்றது. இதனை ஓர் ஆதாரமாகவும் முன்மாதிரியாகவும் வைத்துக்கொண்டு கலாநிதியின் இதர இதழ்களைத் தொகுக்கவும், கலாநிதி இதழ் குறித்த தகவல்களைத் திரட்டவும் தீவிரமாகச் செயற்படவேண்டியிருக்கின்றது. அத்துடன் ஈழத்தின் இதழ்கள் குறித்தும் புலமைச் செயற்பாடுகள் குறித்ததுமான விபரங்களைத் திரட்டிப் பட்டியல்படுத்துவதன் அவசியத்தையும் இது வலியுறுத்துகின்றது.
- பதிகை என்கிற பெயரில் புதிய சொல் இதழில் நான் எழுதுகின்ற தொடரின் மூன்றாவது கட்டுரை இது. இக்கட்டுரை ஜூலை – செப்ரம்பர் 2016 புதிய சொல் இதழில் இடம்பெற்றிருந்தது. இக்கட்டுரைக்காக நான் பார்த்த கலாநிதி இதழானது நூலகம் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது. அந்த இதழுக்கான இணைப்பு : http://noolaham.net/project/59/5891/5891.pdf
- சிறு வயதில் இருந்த எனது வாசிப்புப்பழக்கத்தில் முதலாவது மடைமாற்றம் நண்பன் குணாளனுடனான எனது நட்பின் ஆரம்பத்துடன் தொடங்கியது. இப்போதும் எப்போது சந்தித்தாலும், பேசினாலும் முதல்நாள் மாலையில் விட்ட உரையாடலைத் தொடர்வது போன்ற நெருக்கத்தைத் தருகின்ற நட்பு குணாளனுடன் சாத்தியமாகின்றது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் குணாளனை இங்கே நினைவுகூர்கின்றேன்.
- இதற்கு முன்னைய பதிகைகள்,