வசந்தம் இதழ் குறித்து…

ஈழத்தவர்கள் மீதான இந்திய ஆதிக்கம் பற்றிய உரையாடல்கள் மிக நீண்டகாலமாகவே தொடர்ந்துவருகின்றன.  அரசியல் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் பிரக்ஞைபூர்வமாக இந்த உரையாடல்களை முன்னெடுக்கவேண்டிய தேவைகள் முன்னெப்போதையும் விட அதிகரித்திருக்கின்ற சமகாலச் சூழலில் ஜீவநதி இதழ் தொடர்ச்சியாக ஈழத்தின் கலை இலக்கியச் செயற்பாடுகள் குறித்த பதிவுகளையும் சிறப்பிதழ்களையும் கொண்டுவருவது முக்கியமானதாகும்.  அதிலும் ஈழத்தின் பதிப்பு முயற்சிகளும் நூல் வெளியீடுகளும் இந்தியாவின் அரசியல் நடைமுறைகள் மற்றும் பண்பாட்டு ஆதிக்கத்தால் தொடர்ந்தும் நலிவடைந்தே செல்கின்ற காலப்பகுதியில் இதழ்கள் குறித்த சிறப்பிதழ் ஒன்றினை ஜீவநதி வெளியிடுகின்றமை முக்கியமான ஒரு நடவடிக்கையாகும். அந்தச் சிறப்பிதழில் 1965 முதல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த வசந்தம் என்கிற இதழ் குறித்தும் எழுதுவது பொருத்தமானதென்றே கருதுகின்றேன்.

”ஈழத்து இலக்கியம் என்று ஒன்று உண்டா?” என்று கேட்பவர்கள் எம்மத்தியில் பலர் இன்னும் இருக்கிறார்கள்.  இது எதைக் காட்டுகிறது? எம்மேல் எம் சக்திக்கு மேற்பட்ட ஒன்று மேலாதிக்கம் வகிக்கிறது என்பதைத்தான்.  இதிலிருந்து விடுபட முடியாமல், இதை எதிர்த்து நின்று முன்னேற முடியாமல் திணறுகிறோம்; திக்கு முக்காடுகிறோம்.  அதுதான் இந்திய ஆதிக்கம் என்பது.

நாமும் மனிதர்கள் என்ற முறையில், நமக்கும் தனித்துவமான கலாச்சார பண்பாடு உண்டு என்ற முறையில், நாமும் சுயமாக சிருட்டிக்கக் கூடியவர்கள் என்ற முறையில் இந்த ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கத்தான் வேண்டும். எமது கலாச்சார பாரம்பரியத்தின் ஆண்மையை; தனித்துவத்தை நாம் நிலைநாட்டித்தான் ஆகவேண்டும்.  எந்த நாட்டுக் கலை இலக்கிய சிருட்டிகளுக்கும் ஈழநாட்டுக் கலை இலக்கியம் தாழ்ந்ததல்ல; சமதையானதுதான் என்பதை நாம் நிலைநிறுத்தியேயாகவேண்டும்.  இந்த மனப்பான்மை எங்கள் இலக்கிய கர்த்தாக்கள் மத்தியிலும் கண்டிப்பாக ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும்.  

எதற்கெடுத்தாலும் இந்தியக் கலைஞர்கள்; எவர் வாங்கினாலும் இந்தியப் பத்திரிகைகள்; எந்தப்படம் என்றாலும் இந்தியப் படம் தான் என்ற நிலை இருக்கும் வரைக்கும் இலங்கைக் கலைஞர்கள் வளர முடியுமா? இலங்கைப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் தான் நிலைக்க முடியுமா? இல்லவே இல்லை.”

என்று நவம்பர் 10, 1965 இல் வெளியான வசந்தம் இதழின் ஆசிரியர் தலையங்கம் குறிப்பிடுகின்றது.  இது வசந்தத்தின் மூன்றாவது இதழ் என்பதை வைத்துப் பார்க்கின்றபோது வசந்தம் 1965 இல் வெளிவரத் தொடங்கியிருக்கின்றது என்பதனை அறியமுடிகின்றது.  நூலகம் இணையத்தளத்தில் வசந்தத்தின்

  • 1965: நவம்பர்,
  • 1966: மார்ச், மே, ஜூலை. ஓகஸ்ட், செப்ரம்பர், ஒக்ரோபர்,
  • 1967: ஜனவரி

ஆகிய மாதங்களில் வெளியாகிய 8 இதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.  அவற்றை வாசித்ததின் அடிப்படையில் வசந்தம் முன்னெடுத்த, சமகாலத்திற்கும் தேவையான பண்பாட்டு அரசியல் உரையாடலினை உணரக்கூடியதாக உள்ளது.

வசந்தம் இதழின் தோற்றம் குறித்து ஆராயும்போது அது எந்தவொரு அமைப்பினதும் உத்தியோகபூர்வ இதழாக வெளிவந்ததாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அதன் உருவாக்கத்திலும் கருத்தியல் பின்னணியிலும் சீனச் சார்பான இடதுசாரிகளின் தாக்கம் இருப்பதை அறியமுடிகின்றது.  முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரின் கலை, இலக்கியம் குறித்த நிலைப்பாட்டையே வசந்தமும் பிரதிபலித்திருப்பதையும் நாம் அவதானிக்கலாம்.  அதில் பங்களித்தவர்களையும் நோக்கும்போது முற்போக்கு எழுத்தாளார் சங்கம் சார்ந்தவர்களால் வெளியிடப்பட்ட இதழகாக வசந்தம் இருக்கலாம் என்று கருதமுடிகின்றது.

வசந்தத்தின் முதலாண்டு நிறைவடைந்தது குறித்து ஓகஸ்ட் 1966 இதழின் ஆசிரியர் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது,

”கலை இலக்கியப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கவேண்டும் என்ற உள்ளுணர்வால் உந்தப்பட்ட இலக்கிய அன்பர்கள் சிலர் கொழும்பிலும் கண்டியிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள இலக்கியப் பிரமுகர்கள் பலருடன் தொடர்புகொண்டு பலமுறை உரையாடியதுடன் அதற்கான ஒரு சில ஆரம்பவேலைகளையும் ஏற்பாடுகளையும் செய்துவிட்டபடியால் மேற்கொண்டும் காலதாமதம் செய்வது அந்த முன்முயற்சியைத் தளர்த்திவிடும் என்ற காரணத்தால் உடனடியாகவே பத்திரிகை ஆரம்பிப்பது என்றும் அதை யாழ்ப்பாணத்திலேயே நட த்தவேண்டும் என்றும் முடிவுக்கு வந்தோம்.”

“வசந்தம் பத்திரிகைக்கு இவ்வளவு முயற்சிகள் செய்யப்படுகின்றனவே, இவை அவசியம்தானா என்ற கேள்வியும் சிலர் மத்தியில் எழலாம்.  இவர்கள் ஈழத்துக் கலாச்சார வளர்ச்சி எதிர்நோக்கும் – இன்னும் கடக்கமுடியாத பெருமலைகளாக இருக்கும் மேற்கத்தைய பிடிப்பையும் இந்திய கலாச்சார தாக்கத்தையும் உணரமுடியாதவர்களாக இருப்பதும், கலாச்சார எழுச்சி எப்படி அரசியல், பொருளாதார சமூக மாற்றத்திற்கு அவசியமானது என்பதைப் புரிந்துகொள்ளாததும்தான் காரணமாகும்.”

”மேற்கத்தைய ஊடுருவலை, இந்தியத் தாக்கத்தை எதிர்த்து நின்று வளர்த்த ஈழத்துக் கலை இலக்கிய நிலைப்பாடு ஒன்று இருக்கிறது, அதில் நிலைத்து நின்று மக்களே கலை இலக்கியத்தின் ஊற்றுக்கண் என்பதைக் கண்டுகொண்டு அவர்கள் மத்தியில் பட்டை தீட்டப்படாத ஒழுங்கு முறையாய் அமையாத  கருவூலங்களைக் கற்றுத்தேர்ந்து அவற்றை ஒளிவீசும் மாணிக்கங்களாகத் திரும்பவும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே வசந்தம் செய்யவேண்டிய கலை இலக்கியப் பணியாகும் ” 

இதழொன்றினைத் தொடங்குகின்றபோது அதற்கான தெளிவான வேலைத்திட்டமும் திட்டமிடலும் இருப்பது மிகவும் அவசியமானது.  ஈழத்திலிருந்து தொடங்கப்படுகின்ற இதழ்கள், பதிப்புமுயற்சிகளுக்கு சந்தையும் சந்தைப்படுத்தலும் அதற்கான வலையமைப்புகளை உருவாக்குவதும் பேணுவதும் சவாலாகவே இருக்கின்றன.  இவற்றின் காரணத்தால் எழுகின்ற நிதிச்சிக்கல்களும் சோர்வும் மன உளைச்சலும் ஒருகட்டத்திற்குமேல் இந்த முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துவிடுகின்றன.  ஈழத்தின் ஆரம்பகால கலை இலக்கிய இதழ்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, எனது அணுக்கத்திற்குக் கிடைத்த அவற்றின் வெளியீடுகளை வாசித்து அறிமுகக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தபோது அந்த இதழ்கள் அனைத்துமே ஏதோவொரு விதத்தில் அல்லது சந்தர்ப்பத்தில் இந்தச் சவால்கள் குறித்துக் குறிப்பிட்டிருக்கின்றன என்பதை அவதானித்தேன்.  வசந்தத்தின் ஆசிரியர் குழு இது குறித்து ஆலோசித்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னைய இதழ்களான பாரதி, புதுமை, இலக்கியம் மரகதம் போன்ற பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட கதி வசந்தத்திற்கு ஏற்படவே கூடாது என்று உறுதியெடுத்து, ஒவ்வொரு மாதமும் பத்திரிகைக்கான செலவை விற்பனையையோ விளம்பரங்களையோ எதிர்நோக்காமல் தாமே நிதி திரட்டிப் பத்திரிகையைக் கொண்டுவரமுடியும் என்று திட்டமிடுகின்றனர்.  வசந்தம் இதழ் ஒன்றின் விலையானது 35 சதங்களாக இருந்தபோது, 2000 பேரிடம் 10 ரூபாய்கள் வீதம் சந்தாதாரராகச் சேர்த்துக்கொண்டால் இதழினைத் தடங்கலின்றி கொண்டுவரமுடியும் என்கிற நிதித்திட்டமிடலினையும் இதழில் காணமுடிகின்றது.  இவ்வாறு சந்தாதாரர்களைச் சேர்ப்பது குறித்தும் சந்தாதாரரை ஊக்குவிக்கப் பரிசுகளைக் கொடுப்பது பற்றியும் அறிவித்தல்கள் வசந்தத்தின் சில இதழ்களில் காணக்கிடைக்கின்றன, ஆயினும் அதில் எவ்வளவு வெற்றியடைந்தார்கள் என்பதையும் இதழ் எவ்வளவுகாலம் தொடர்ச்சியாக வெளியானது என்பதையும் அறியமுடியவில்லை. எனக்குக் வாசிக்கக் கிடைத்த இதழ்கள் நவம்பர், 1965 முதல் ஜனவரி 1967 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை.

வாமணன் எழுதிய சுழலும் உலகில் என்கிற தொடர் பத்திவடிவில் வெளிவந்துள்ளது.  இதில் செ. கணேசலிங்கனின் நீண்ட பயணம் நாவல் வெளியீட்டுவிழா தமிழ்நாட்டில் நடந்தபோது கிவாஜ ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கு அடிக்குறிப்பு தேவை என்று சொன்னதைக் குறிப்பிட்டு ”இந்த அகம்பாவங்களை எல்லாம் இலங்கைக்கு அழைத்து நிலபாவாடை விரித்து வரவேற்றால் வேறு என்னதான் சொல்லமாட்டார்கள்” என்று குறிப்பிடுகிறார்.  அண்மையில் ரொரன்றோவில் ஆனந்த பிரசாத்தின் ”சொல்லப்படாத கதை” நூல் வெளியீட்டு விழாவில் பேசிய சிவதாசன், ஆனந்த பிரசாத்தின் நூலில் ஈழத்து வழக்குச் சொற்கள் அதிகமாக உள்ளதாகவும் இது இந்திய வாசகர்களுக்கு விளங்காது என்பதால் அவர்களுக்கு விளங்கக்கூடிய சொற்களைப் பாவித்து திருத்தியிருக்கவேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்டதை இங்கே நினைவுகூரவேண்டியுள்ளது.  கிவாஜவுக்கு முன்னரும், ஈழத்துக்கு வந்திருந்த கங்கை இதழின் ஆசிரியர் பகீரதன் ஈழத்து எழுத்தாளர்கள் பத்து வருடங்கள் பின் தங்கி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார், பகீரதன் முதல் ஜெயமோகன் வரை பெரியண்ணன்கள் பெரியண்ணன்களாகத்தான் இருக்கிறார்கள், பெரியண்ணன்களாக இருப்பதால் கிடைக்கின்ற சலுகைகளையும் அதிகாரத்தையும் அனுபவித்துக்கொள்ளும் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்; ஆனால் அந்த ஆதிக்க மனப்பாங்கை எதிர்க்கும் சுயமரியாதையற்றவர்களாக ஈழத்தவர்கள் பலரும் இருப்பதுதான் நாம் கவனத்திற்கொள்ளவேண்டியது.

இலக்கியத்தைப் போலவே ஈழத்துத் திரைப்படங்களுக்கும் ஈழத்தவர்கள் மத்தியில் இருந்து கூட போதிய ஆதரவு கிடைப்பது இல்லை.  அதேநேரத்தில் ஈழத்தவர்களின் பெருமளவு பணம் தென்னிந்திய திரைப்படச் சந்தைக்குள் சென்றுகொண்டே இருக்கின்றது.  இன்று மிகப் பிரமாண்டமான பொருட்செலவுகளுடன் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் எடுக்கப்படுவதற்கு புலம்பெயர் நாடுகளில் அந்தத் திரைப்படங்கள் பெருந்தொகைக்கு விற்கப்படுவது ஒரு முக்கியமான காரணம்.  மக்கள் வாழ்வைப் பிரதிபலிக்காத, கலையாகவும் வெற்றிகொள்ளாத மசாலாக் குப்பைகளாகவே வெளிவருகின்ற திரைப்படங்களின் உருவாக்கத்தில் ஈழத்தவரின் பணம் சுரண்டப்படுவதுடன் பண்பாட்டு ரீதியிலும் எதிர்மறையான தாக்கத்தையே நிகழ்த்துகின்றது.  இன்றைய நிலையில் புலம்பெயர் நாடுகளில் இரண்டாண்டுகளுக்கு தென்னிந்தியத் தமிழ்த்திரைப்படங்களை திரையிடாமலும் கொள்வனவு செய்யாமலும் விட்டுவிட்டால் தென்னிந்தியத் தமிழ்த் திரையுலகின் பிரமாண்டங்களை நம்பிப் படமெடுப்போரும் ”ஸ்ரார்” நடிகர்களும் வங்கிரோத்து ஆகிவிடும் நிலைதான் இருக்கின்றது; ஆனால் இதை ஈழத்தவர்கள் புரிந்துவிடாமல் இருப்பதோடு அவ்வப்போது தென்னிந்திய தமிழ் திரையுலக பிரபலங்கள் சொல்லும் ஈழ ஆதரவு கருத்துக்களுக்கே பரவசம் அடைந்துகிடப்பது பெரும் அவலம் என்றே சொல்லவேண்டும்.  1966 ஜூலை இதழில் இடம்பெற்றுள்ள ”ஒரு கோடியே நாற்பத்தொருலட்சத்து நாற்பத்தோராயிரம்” என்ற கட்டுரை குறித்த அந்தத் தொகையான பணம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சினிமா என்ற பெயரில் கொள்ளை போயிருக்கின்றது என்பதை விபரங்களுடன் சுட்டிக்காட்டியிருக்கின்றது.  இன்றைய சூழலில் ஈழத்தவர்கள் பாராளுமன்ற அரசியல் குறித்து நிறைய உரையாடுகின்றபோதும் பொருளாதாரம் குறித்து உரையாடுவதோ பிரக்ஞை பூர்வமாகக் கவனம் செலுத்துவதோ மிகவும் அரிதாகவே உள்ளது.  திரைப்படத் துறை என்று இல்லாமல் சடங்குகள், விழாக்கள் போன்றவற்றிற்கான ஆடை கொள்வனவு உட்பட இந்தியாவுக்குப் போய்ச்சேரும் ஈழத்தவர்களின் நிதிவளம் குறித்து நாம் பிரக்ஞை பூர்வமான உரையாடல்களை முன்னெடுக்கவேண்டியது மிகவும் அவசியம்.  இதே இதழில் இடம்பெற்றுள்ள, இன்றைய ஈழத்தில் தமிழ் சினிமாவின் அவசியம் என்ற கட்டுரை சினிமாக் கலையை விமர்சன ரீதியாகப் பார்க்கவேண்டும் என்று வலியுறுத்துவதுடன் இந்தியத் திரைப்படங்களில் வெளிக்காட்டப்படும் பண்பாடு எம்மை எப்படிப் பாதிக்கின்றது, அது தென்னிந்திய மக்களில் பெரும்பான்மையானோரின் வாழ்வைக் கூட பிரதிபலிக்காமல் எவ்வளவு போலியானதாக இருக்கின்றது, அதனால் எவ்வாறு ஒரு கூட்டம் பெருமளவு பணத்தினைத் சுரண்டுகின்றது ஆகிய விடயங்கள் குறித்தும் விரிவாக அலசுகின்றது.

கலை இலக்கிய இதழாகவே வசந்தம் வெளிவந்தபோதிலும் அது பண்பாடு, வரலாறு, சமகால நிகழ்வுகள் குறித்த விமர்சன பூர்வமான நோக்கிலான கட்டுரைகளைக் கொண்டு வெளிவந்திருப்பது அதன் தனிச்சிறப்பு.  கே. டானியல், டொமினிக் ஜீவா, செ. கணேசலிங்கன், நீர்வை பொன்னையன், பெனடிக்ற் பாலன், எஸ், அகஸ்தியர், அ..ந, கந்தசாமி, செ. யோகநாதன் உள்ளிட்டவர்கள் அதில் புனைவுகளை எழுதியுள்ளார்கள்.  அதுதவிர நிறையக் கட்டுரைகள் புனைபெயர்களில் எழுதப்பட்டிருக்கின்றன.  அன்றைய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த பலரும் இதில் பங்களித்திருக்கின்றனர் என்பதை அவதானிக்கமுடிகின்றது.  மலேசியாவில் இடம்பெற்ற முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு குறித்த விமர்சன நோக்கிலான கட்டுரை 3 இதழ்களில் தொடராக வெளிவந்திருக்கின்றது.  இதுதவிர இலங்கையில் கிழக்கிலங்கை முஸ்லிம்கள் சிங்களத்தைத் தம் போதனாமொழியாக ஏற்றுக்கொண்டமை குறித்த தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு, குளங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டும் கைவிடப்பட்டும் வருதல்,  1965 இல் நடந்த பல்கலைக்கழக மாணவர் வேலை நிறுத்தம் பற்றிய பல்கலைக்கழக விசாரணைக் கமிஷன் அறிக்கை தவறவிட்ட முக்கியமான விடயங்கள் பற்றி ஆராய்ந்த ”மலையைக் கெல்லி எலியைப் பிடித்தனர்” என்கிற கட்டுரை, சிங்களப் பண்பாட்டில் பிரபலமாக இருந்த முகமூடி நடனம் குறித்த மானிடவியல் நோக்கிலான கட்டுரை, 1966 இல் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான போரின் பின்னர் இந்திய தனது நாணயப் பெறுமதியை இறக்கியபின்னரும் தென்னிந்தியப் பொருட்களின் விலை அதற்குரிய விகிதத்தில் குறைக்கப்படாமல் ஈழத்தில் விற்கப்படுவதால் சுரண்டப்படும் பணம் போன்ற, முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை அக்கறையுடன் விமர்சன ரீதியில் அலசி அணுகிய கட்டுரைகள் வசந்தத்தில் தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன.  கலை இலக்கியம் என்பவற்றை அணுகும்போது அரசியல், பண்பாட்டு அரசியல், வரலாறு, பொருளியல் போன்றவற்றின் சட்டகங்களில் வைத்து ஆய்வது முக்கியமானது.  வசந்தம் அந்தப் பணியைச் செவ்வனே செய்துள்ளது.

இக்கட்டுரை 2022 இல் வெளியான ஜீவநதியின் ஈழத்து இதழ்கள் சிறப்பிதழிலும், ஒக்ரோபர் 2022 தாய்வீடு இதழிலும் வெளியானது.

ஈழத்தின் முக்கியமான ஆரம்பகால இதழ்கள் குறித்து முன்னர் எழுதிய கட்டுரைகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: