ஏப்ரல் மாத மணற்கேணி இதழில் சிவா சின்னப்பொடி எழுதிய எனது பதிவுகள் – வரலாறு வாழ்க்கையும் என்கிற கட்டுரை ஒன்றை வாசித்தேன்.  இந்தக் கட்டுரையில் இலங்கையில் இருக்கின்ற வடமராட்சி, வல்லிபுரக் கோயில் மற்றும் வல்லிபுரம் என்கிற ஊர் பற்றிய வரலாற்று ரீதியான கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது.  இலங்கையின் வட மாகாணத்தில் முன்னர் பரவலாக பௌத்த நெறி பரவி இருந்தது என்பதையும் பின்னர் ஏற்பட்ட சைவ மறுமலர்ச்சிக்காலத்தில் பௌத்தம் மெல்ல செல்வாக்கிழந்தது என்பதுவும் யாழ்ப்பாணத்துச் சைவ வேளாளர்களால் தொடர்ந்து மறைக்கப்பட்டது என்பதையும் அவ்வாறு மறைக்கப்பட்டதை எவ்வாறு பௌத்த சிங்களவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதையும் இந்தக் கட்டுரை பேசுகின்றது.  இந்தக் கட்டுரையின் சாரம் இது மட்டுமல்லாமல், சிவா சின்னப்பொடியின் சிறு வயதில் வல்லிபுரத்தில் இருந்த சாதி இறுக்கம் பற்றிப் பேசுவதாக இருந்தாலும், கட்டுரையின் இன்னொரு முக்கியமான மையம் வல்லிபுரத்தில் முன்னர் பின்பற்றப்பட்ட பௌத்த நெறிபற்றிய சான்றுகளாக இருக்கின்றது.

வல்லிபுர ஆழ்வார் ஆலயப்பகுதிகளிலே 1940களில்  கிணறு தோண்டியபோது ஒரு பொற்சாசனம் கிடைக்கின்றது.  அதிலே கிபி 2ம் நூற்றாண்டில் “படகர அதன” என்ற இடத்திலே ஒரு ஒரு பௌத்த விகாரை கட்டப்பட்டதாக பிராமி எழுத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது.  இலங்கையைப் பொறுத்தவரை பௌத்தம் என்பது சமகாலச் சூழலில் பௌத்த சிங்களம் என்றே தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றது.  இலங்கையில் பெரும்பான்மை மதமாக இருக்கின்ற பௌத்தம் தன்னளவே எண்ணற்ற அதிகாரங்களை உள்ளடக்கிய ஒரு அதிகார மையமாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.  இந்தியாவில் இருக்கின்ற பௌத்தம் பற்றிய புரிதல்களுடனோ அல்லது புத்தரின் போதனைகளுடனோ இலங்கைச் சூழலை நேரடியாகத் தொடர்புபடுத்திப் பார்ப்பதில் இருக்கின்ற பெருந்தவறே இதில் இருந்துதான் தொடங்குகின்றது.  எனவே பௌத்த சிங்களவாதம் பரணவிதான போன்ற வரலாற்று ஆசிரியர்கள் தலைமையில் இந்தச் சாசனங்களால் வல்லிபுரத்தில் முன்னர் பௌத்த வழிபாடு இருந்துள்ளது நிரூபனமாவதால் அங்கே முன்னர் சிங்கள மக்களே இருந்துள்ளனர் என்றும் இந்தியாவில் இருந்து 14ம் நூற்றாண்டுக்குப் பின்னர் குடியேறிய தமிழ் மக்கள் அங்கிருந்த பூர்வீக சிங்கள மக்களை விரட்டிவிட்டு, அங்கு விகாரை இருந்த இடத்தில் விஷ்ணு கோயில் ஒன்றைக் கட்டினர் என்று நிறுவ முயன்றிருக்கின்றனர்.

அதே நேரம் வடமாகாணத்தில் பெரும்பான்மையாக இருந்த (அல்லது ஆறுமுக நாவலரால் கட்டியெழுப்பப்பட்ட) சைவ வேளாள ஆதிக்கம் சிவ வழிபாட்டைத் தவிர வேறு வழிபாட்டுமுறைகள் இயல்பிலே வடக்கிலே இருந்ததை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை.

“புத்தரை மட்டுமல்ல விஷ்ணுவை முழுமுதல் கடவுளாகக் கொண்ட வைஷ்ணவப் பாரம்பரியத்தையும் ‘அன்பே சிவம்’ என்றுரைத்த இராமலிங்க வள்ளலாரின் சமத்துவ வழிபாட்டு முறையையும் கூட ஏற்றுக்கொள்ளாத ஆறுமுகநாவலரின் சற்சூத்திரப் பரம்பரையினர் தங்களுடைய மேன்மைக்கு பங்கம் வந்துவிடும் என்பதால் சிங்கள பௌத்த பேரின வாதிகளின் இந்த அப்பட்டமான வரலாற்றுத் திரிப்பை கட்டுடைத்து உண்மையை வெளிக் கொண்டுவருவதற்கு விரும்பவில்லை.

உண்மையில் இந்த ஆலயத்தின் வரலாறு என்பது தமிழகத்தில் உத்தவேகத்துடன் எழுந்த பக்தி இயக்க காலகட்டத்தில் (கி.பி.6ம் 7ம் நூற்றாண்டுகள்) தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழ்மக்கள் மத்தியல் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமண பௌத்த மதங்கள் அழிக்கப்பட்ட வரலாற்றுடன் ஆரம்பிக்கிறது. நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கருத்தியல் போராட்டத்தில் கௌதம புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக அர்த்தப்படுத்தப்பட, புத்தருடைய தர்மச்சக்ரம் விஸ்ணுவினுடைய சக்கரமாக மாற்றப்பட தமிழகத்திலும் இலங்கையிலும் இருந்த மகாயான பௌத்த மதம் இந்துமதத்தின் வைஷ்ணவப் பிரிவுடன் ஐக்கியமாக அந்த மதத்திடைய விகாரைகள் விஷ்ணு கோவில்களாக மாற்றம்பெற்றன. பல விஹாரைகள் கைவிடப்பட்டு அழிந்துபோயின.” (சிவா சின்னப்பொடியின் வலைப்பதிவு http://sivasinnapodi1955.blogspot.com/2011/04/1.html)

இலங்கையைப் பொறுத்தவரை பௌத்தமதம் இலங்கை அரசின் சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் தூண்களில் ஒன்றாகச் செயற்படுகின்றது என்பது உண்மையே.  அதே நேரம் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்காக தமிழர்கள் மத்தியில் பௌத்த நெறி இருந்ததை மறைப்பதோ அல்லது அதன் பங்கைக் குறைப்பதோ அல்லது சிங்கள பௌத்தத்திற்கு மாற்றாக தமிழ்-சைவ என்கிற பெயரில் சைவ வேளாளப் பண்பை மீண்டும் முன்னிறுத்தலோ மிகவும் பின்னடைவாகவே முடியும்.  சைவம் என்பதற்கும் இந்து மதம் என்பதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றபோதும் கூட, இன்று நடைமுறையில் இருக்கின்ற சைவ மதம் முழுக்க முழுக்க இந்துத்துவ நடைமுறைகளையே பின்பற்றுகின்றபோது அதற்கு எதிராக எந்த முனைப்பையும் காட்டாமல் saivite என்கிற அடையாளத்தை முன்னிறுத்துவது சரியானதாக இருக்கமுடியாது.  தமிழர்கள் மத்தியில் பௌத்த வழிபாட்டுமுறை இருந்து.  கால ஓட்டத்தில் / அரசியல் மாறுதல்களால் அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துமதத்திற்குள்ளும், மிகுதிப் பேர் இஸ்லாமிய பின்னர் கிறீஸ்தவ மதங்களிற்குள்ளும் தம்மை உள்ளிணைத்துக் கொண்டனர் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்வதே சரியான வழிமுறையாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.  (வி. சீ. கந்தையா எழுதிய மட்டக்களப்புத் தமிழகம் http://goo.gl/BcA30 என்கிற புத்தகத்தில் சோழப் படையெடுப்பின் பின்னர் பௌத்த சமயத்தவர்கள் மதமாறுமாறு வற்புறுத்தப்பட்டபோது வணிக ரீதியில் சோழ அரசர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இருந்த நட்புறவினால் சைவர்களாக மாற விரும்பாத பல பௌத்தர்கள் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டதாக எழுதி இருக்கிறார்)

2

இந்தக் கட்டுரையில் என்னை முக்கியமாகப் பாதித்தது கந்த முருகேசனார் பற்றிய அறிமுகம்.  வல்லிபுரத்தில் அந்தக் காலங்களில் இருந்த சாதீயம் எப்படி மிகச் சிறு பராயத்திலேயே பாடசாலைவரை ஊடுருவி இருந்தென்று கூறுகிறார்.

“அந்தக்காலத்தில் எனக்கு பளிச்சிடும் வெண்மை நிறத்திலான சேட்டும்; அதே போல கருநீல நிறத்திலான கால்சட்டையும் அணிந்து கொண்டு பள்ளிக் கூடம் போவதற்கு சரியான விருப்பம். அத்துடன் காலில் செருப்பும் போட்டுக் கொண்டு பள்ளிக் கூடத்துக்கு போகின்ற போது பள்ளிக் கூடத்தில் வாங்கில்லையும் கதிரை மேசையிலையும் இருந்து படிக்கிற திமிரில் நிலத்தில் இருந்த படிக்கிற எங்களை கேவலமாக பார்க்கின்ற பொடியங்களுக்கும் பெட்டையளுக்கும் ‘நானும் உங்;களுக்கு குறைஞ்சவனில்லை’ என்று சொல்லிக் காட்டுகின்ற மாதிரியான ஒருவித மிடுக்கும் மகிழ்ச்சியும் எனது மனத்தில் இருக்கும்.

ஆனால் வீட்டிலிருந்து பள்ளிக் கூடத்துக்கு போய்; வகுப்பறைக்குள் கால் வைத்தவுடன் அந்த மிடுக்கும் மகிழ்ச்சியும் காணாமல் போய் அவமானம் அழுகை ஆத்திரம் எல்லாம் கலந்த இயலாமையுடன் கூடிய ஒருவிதமான துயர உணர்வே மனதில் இருக்கும்.

இங்கே ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட 1962 ம் ஆண்டு வந்த தீபாவளிக்கு இவ்வாறு கரு நீல நிறத்திலான கால்சட்டையையும் வெள்ளை சேட்டும் புதுச் செருப்பும் அணிந்துகொண்டு பாடசாலைக்கு சென்ற போது எனது வகுப்பில் இருந்த கதிரை வாங்கில் கூட்டத்தினர் “ இஞ்சை பார் புதுச் சேட்டு- புது கழிசான் – புதுச் செருப்பு – முதலாளி ஐயா வாறார்” என்று கேலி செய்து மனதை காயப்படுத்தினர். ஏதோ நான் பெரிய ஒரு குற்றம் செய்துவிட்டதாக அவர்கள் பார்த்த பார்வையும், கூறிய ஏளனச் சொற்களும் எனது பிஞ்சு மனதை காயப்படுத்தின.

வகுப்பில் செம்பாட்டு மண்ணுக்குள் சம்மாணி கட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதால் அப்பா வாங்கும் வீரகேசரி பேப்பரில் ஒரு பக்கத்தை அன்று பாடசாலைக்கு கொண்டுபோயிருந்தேன்.

நிலத்தில் அந்த பேப்பர் துண்டை விரித்துவிட்டு அமர்ந்த போது எங்களது ஆசிரியரான கதிர்காமர் வாத்தியார் வெள்ளை வேட்டி வெள்ளை ஜிப்பா நெற்றியில் திருநீற்றுக்குறி சகிதம் வகுப்பறைக்குள் நுழைந்தார். நாங்கள் எல்லோரும் எழுந்து அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்த போது “வாத்தியார் இண்டைக்கு எங்கட வகுப்புக்கு ஒரு பெரிய மனுசன் வந்திருக்கிறார்” என்று முன் வாங்கிலில் இருந்தவர்கள் கூறினார்கள்.

“பெரிய மனிசனா ஆரடா அது?” என்று கதிர்காமர் வாத்தியார் ஆச்சரியத்துடன் கேட்க, அவர்கள் வகுப்பறையின் ஓரத்தில் நிலத்தில் இருந்த என்னைக் காட்டினார்கள்.

தனது கண்ணை அகல விரித்து தான் நின்ற இடத்திலிருந்தே என்னை ஒரு பார்வை பார்த்த அவர் “என்ன பள்ளிக் கூடத்துக்கு படிக்கிறதுக்காக வெளிக்கிட்டு வந்தனியா-இல்லை கோயில் திருவிழாவுக்கு போறதுக்கு வெளிக்கிட்;டு வந்தனியா?” என்று ஏளனமாகக் கேட்டார்.

நான் நிலத்திலிருந்து எழும்பி பதில் சொல்லாமல் நின்ற போது கீழே விரித்திருந்த பேப்பர் அவர் கண்ணில் பட்டது.

“என்னடா அது?” என்று அவர் அதட்டிக் கேட்டார்.

“பேப்பர்….” ஏன்று நான் கிழ்க்குரலில் சொன்னேன்.

“அது பேப்பர் எண்டு எனக்குத் தெரியும். அதை ஏன் கீழே போட்டிருக்கிறாய்.அதைச் சொல்லு” என்று கர்ச்சித்தார்.

“வெறும் நிலத்திலை இருந்தால் கால்சட்டை ஊத்தையா போயிடுமெண்டு தான்….” என்ற நான் தயங்கித் தயங்கிச் சொல்ல…

“நீங்களே ஊத்தையங்கள்.நிலத்தில இருந்தா உங்கடை கால் சட்டை ஊத்தையா பேயிடுமோ? நீங்கள் இருக்கிறதால நிலம்தான்ரா ஊத்தையா போகுது” என்றவர் விறு விறென்று வெளியே போய் பாடசாலை கிணற்றடியில் நின்ற வாழை மரத்திலிருந்து மொத்தமான பச்சைத் தடல் ஒன்றை வெட்டிக்கொண்டு வந்தார்.

வகுப்பறையில் ஒரு நிசப்பதம். எல்லோரும் பச்சை வாழைத்தடலுடன் வரும் காதிர்காமர் வாத்தியாரை பார்த்துக்கொண்டே இருந்தார்கள். எனக்கும் அவர் அதை ஏன் கொண்டு வருகிறார் என்று முதலில் புரியவில்லை. அந்த வாழைத் தடலால் எனது உடம்பில் பத்து பதினைந்து சாத்தல்கள் விழுந்தற்கு பின்பு தான் எனக்கு எல்லாமே புரிந்தது.

என்னுடைய புத்தம் புதிய வெள்ளைச் சேட்டு கயர் பட்டுப் போனதும் கால்சட்டை செம்பாட்டு மண் பட்டு அழுக்காகிப் போனதும் கதிர்காமர் வாத்தியார் என்ற பெயரிலிருந்த அந்த மனித மிருகம் அடித்த அடியை விட அதிகம் வலித்தது” (http://goo.gl/GvDaH)

இந்தக் கொடுமைகளில் இருந்து விடுபட ஈற்றில் அவர் கந்த முருகேசனார் நடத்திய பள்ளியில் சேர்க்கப்படுகிறார்.  ஒரு பஞ்சமர் சாதிச் சிறுவனைத் தன் பள்ளியில் சேர்த்து ஆதிக்க சாதிச் சிறுவர்களுடன் சமமாகவே பாவித்து கல்வி போதித்ததற்காக – ஆதிக்க சாதியைச் சார்ந்தவராக இருந்த போதும் கூட – கந்த முருகேசனார் பிற ஆதிக்கசாதியினரால் புறக்கணிக்கப்பட்டபோதும் கூட  அவர் தன் பணியை இடை நிறுத்தவில்லை.  சாதீயக் கொடுமைகளால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் காலம் காலமாக அவர்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி தரும் விடுதலை கொண்டும் எதிர்கொள்ளலாம் என்பதை கந்த முருகேசனார் செயன்முறையில் நின்று சாதிக்கவிரும்பினார் என்றே தெரிகின்றது.

கந்த முருகேசனார் பற்றிய கட்டுரையை வாசிக்கின்ற அதே நேரத்தில் “இந்தியச் சமூகப் புரட்சியின் தந்தை மகாத்மா ஜோதிராவ் புலே” என்கிற தனஞ்செய் கீர் எழுதிய புத்தகத்தையும் வாசித்துக் கொண்டிருந்தேன்.  இரண்டு பேருமே (ஜோதிராவ் புலே தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராகவும், கந்த முருகேசனார் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்த போதும் கூட) சாதீயக் கொடுமைகளை கல்வியை தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கும் வழங்குதல் மூலம் எதிர்கொண்டனர் என்பது முக்கிய ஒற்றுமையாகும். (அதே நேரம் ஜோதிராவ் புலே பெண்களுக்கான தனிப் பாடசாலைகள் தோற்றுவித்தல் மூலமாக பெண் விடுதலை தொடர்பாகவும் பிரக்ஞையுடன் செயற்பட்டார் என்று தெரிகின்றது.  1851 யூலையில் நல்புதாவர் பேத்திலும், 1851 செப்ரம்பரில் ராஸ்தா பேத்திலும், 1852 மார்ச்சில் விதல் பேத்திலும்மாக பெண்கள் கல்விக்கூடங்களை நிறுவினார் ஜோதிராவ் புலே.)  ஈழத்துச் சூழலில் கந்த முருகேசனாரும், இந்தியாவைப் பொறுத்தவரை ஜோதிராவ் புலேயும் தமக்குரிய முக்கியத்துவம் தரப்படாமல் மறைக்கப்பட்டனர் என்கிற அவதானத்தோடு அவர்கள் ஆற்றிய ஆக்கபூர்வமான முன்னெடுப்பகளையும் கருத்திற்கொள்வது சுவாரசியமாகத்தான் இருக்கின்றது.