எனது வாசிப்புப் பழக்கத்திற்கு உந்துதலாக இருந்தவர் எனது பெரியப்பா சிவதாசன் என்று பலமுறை பகர்ந்திருக்கின்றேன். எனது சிறுவயது முதல் அள்ளி அள்ளி புத்தகங்களை எமக்காக அவர் வாங்கி அனுப்பிக்கொண்டேயிருந்தார். அவர் கொழும்புவில் இருந்து அனுப்புகின்ற இதழ்கள் அப்போது நவாலியில் இருந்த எமக்கு தபாலில் வரும். பெருந்தொகையாக வருகின்ற இதழ்களை சாக்குகளில் கொண்டுவந்து எங்கள் வீட்டிற்கு விநியோகம் செய்வார்கள். வீட்டில் அம்மாவும் நிறைய வாசிக்கின்றவராக இருந்ததுவும் அப்பா துறைசார்ந்து தேர்ந்து வாசிக்கின்றவராகவும் அதேநேரத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஆதரிக்கின்றவராகவும் இருந்தார் என்பதும் என் பேறுகள். என் பிறந்தநாள்களுக்கான பரிசுகளாக புத்தகக் கடைகளுக்கு அழைத்துச் சென்று விரும்பிய புத்தகங்களை வாங்கச் சொல்லி பரிசாக அழைப்பது என் அப்பாவின் வழக்கம். அதையே நான் இன்று என் மகனுக்கும் மகளுக்கும் பின்பற்றிக்கொள்வதோடு புத்தகங்களைப் பரிசாக வழங்குவது என்பதைத் தொடர்ந்து பரிந்துரைத்தும் வருகின்றேன்.
நானும் சகோதரர்களும் ஒரு வீட்டுநூலகத்தைக் கொண்டுநடத்தவேண்டும் என்பது பெரியப்பாவின் அவாவும் கனாவும். எமது வீட்டு நூலகத்திற்கு Little Library என்ற பெயரையும் அவரே வைத்துத் தந்திருந்தார். நான் மற்றும் என் தம்பியர் இருவர், தங்கையின் பெயர்களை வைத்து அதற்கான ஒரு ரப்பர் ஸ்ராம்பையும் அவர் பிற்பாடு உருவாக்கித் தந்திருந்தார். அவர் முதலில் இந்தப் பெயரை உருவாக்கும்போது எங்கள் தங்கை பிறக்கவில்லை. எனக்கு 9 வயதும் தம்பியருக்கு முறையே 6, 4 வயதுமாக இருக்கும். என்னுடைய பன்னிரண்டாவது வயதில் எனது வீட்டில் ஒரு நூலகத்தை நான் நடத்திவந்தேன். கிட்டத்தட்ட 25 – 30 பேர்வரை அதன் அங்கத்தவர்களாக இருந்து வாரத்துக்கு 1-3தடவைகள் வந்து புத்தங்களைப் பெற்று வாசித்தார்கள். என் பெற்றோரின் ஆதரவு அதற்கு உறுதுணையாக இருந்தாலும் அந்த எண்ணத்திற்கான வித்தாக இருந்தவர்கள் என் பெரியப்பாவும் பெரியம்மாவுமே.
வீட்டில் இருந்த, மீனாட்சிசுந்தரம்பிள்ளை எழுதிய மனோன்மணியம் நூலை இன்று தட்டிப் பார்த்தபோது அதில் என் பெரியப்பாவின் கையெழுத்தில் இருந்த எமது வீட்டுநூலகத்தின் விபரம் இது. சமூக மாற்றத்துகான கருவிகளில் ஒன்றாக வாசிப்பினை நான் கருதுவதற்கும், அதற்காக மூலோபாயங்களில் ஒன்றாக நூலகங்களை நான் கருதுவதற்குமான மூலம் என் பெரியப்பாவின் இந்த வீட்டு நூலகத்திட்டம் கருதிக்கொண்டு பெரியப்பாவின் கையெழுத்திலான, மனோன்மணியம் நூலுக்கான விபரக்குறிப்பினை பகிர்ந்துகொள்கின்றேன்.
Leave a comment