தொட்டாச்சிணுங்கி உறவுகள்

“ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட ஐஸ்கட்டி உடைய, நட்பு பெருக, வரும்
தலைமுறை மீது அக்கறை அதிகமாகும். முன்பைவிட அக்கறையாய், அன்புச் சூழ்நிலையில் அமைதியான இடத்தில் அடுத்த தலைமுறை வளாரும். அந்த தலைமுறையில் கலை இலக்கியமும், அரசியலும், பொருளாதரமும், வாழ்க்கை நிலையும் உயரும்…..” – பாலகுமாரன்

அண்மையில் மீண்டும் ஒருமுறை தொட்டா சிணுங்கி திரைப்படத்தை பார்த்தேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நல்ல சினேகிதம் மலரலாம், தொடரலாம் என்பதை அழுத்தமாக கூறிய மிகச்சில படங்களில் இதுவும் ஒன்று. மனதோடு மழைக்காலம் (ஷாம்-நித்யா தாஸ்), மறுபடியும் (அரவிந்த் சாமி-ரேவதி) போன்ற படங்களில் ஆண், பெண் சினேகிதம் பற்றி காட்டப்பட்டாலும் நடைமுறை வாழ்வில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை யதார்த்தமாக காட்டியது இப்படத்தில் தான். ரகுவரன் தாழ்வு மனப்பான்மையுட ரேவதி- கார்த்திக் நட்பினை சந்தேகிப்பது போல வரும் காட்சிகளில் அவர் ஒரு சாதாரண மனிதனுக்கு இயல்பாக ஏற்படகூடிய மன உணர்வுகளை அல்லது மன உளைச்சல்களை பிரதிபலிக்கிறார். மேலும் வசனம் எழுதிய இயக்குனர் அதியமானின் அற்புதமான வாதத்திறமையினால் ரேவதி, கார்த்திக், ரகுவரன், தேவயானி, நம்பியார், பிரசாத் என்று அனைத்து கதாபாத்திரங்களின் நியாயங்களும் சரியான முறையில் முன்வைக்கப்படுகின்றன.

உண்மையில் நாம் வாழும் பிற்போக்கான சமூகத்தினால் நிராகரிக்கப்படும் ஆண், பெண் நட்புகள் ஆண்களையும், பெண்களையும் மனதளவில் அங்ககீனர்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. சகோதரியாகவோ. தாயாகவோ அதன் வழிவந்த உறவுகளாகவோ அல்லது மனைவியாகவோ மட்டும் தான் ஒரு பெண்ணுடன் உறவு ஏற்படமுடியும் என்பது இங்கே எழுதாத சட்டமாக மாறிவிட்டது. நான் உயர் கல்லூரியில் படித்தபோதும், அதன் பின்னும் இந்த நெருக்கடிகளுக்கு ஓரளவு வளைந்து “அவரோட அண்ணாமாதிரிதான் பழகுகிறேன்” என்று கூறும் பெண்களையும் “அவ எனக்கு தங்கச்சி மாதிரி” என்று கூறும் ஆண்களையும் எண்ணிக்கையில்லாமல் கண்டிருக்கிறேன். எனது நண்பன் ஒருவன் அக்கா, அக்கா என்றழைத்த பெண்ணுக்கு அவனைவிட இரண்டு வயது குறைவு… இதைபற்றி அவனிடம் கேட்டபோது சொன்னான் “நான் அவவை லவ் பண்ணேல்ல, ஒருவேளை அவவோ இல்லை வேறு யாராவதோ அப்படு நினனக்காமல் இருக்க தான் இப்படி கதைக்கிறேன்”. இப்போது அந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது…. ஆனால் அக்கா, அக்கா என்று அன்பாக பழகியவனுக்கு அழைப்பு இல்லை. தனது புனித்ததை காக்க அந்த பெண் செய்த / செய்யவேண்டிய காரியம் இது…. இதற்கு காரணாம் இத்துப்போன எமது சமூக கட்டமைப்பு. ஆணும் பெண்ணும் மனதில் எந்த கள்ளமும் இல்லாமல் இவன் எனது தோழன் என்றோ அல்லது எனது தோழி என்றோ தனது குடும்பத்தினரிடமோ அல்லது கணவன், மனைவிக்கோ அறிமுகப்படுத்தும் நிலை
எம்மிடையே இன்று இல்லை.

ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் நல்ல தோழமையாக இருப்பதாலும், ஒருவரை ஒருவர் புரிந்து நடப்பதாலும் அவர்கள் வாழ்வில் எவ்வளவு அனுசரிப்பு அதிகரிக்கும் என்பது ஏன் எவருக்குமே புரிவதில்லையோ?? கல்யாணச்சந்தையில் பெண் சினேகம் அதிகம் என்பது ஒரு ஆணின் மார்க்கெட்டை குறைக்கும் விடயமாகவே இருக்கின்றது, பெண் சினேகம் என்பதே ஏன் ஒரு கொச்சையான விடயமாக கருதப்படுகிறதோ தெரி்யாது.

இப்படியான சமுதாய நிர்ப்பந்தங்களுக்கு வளாஇந்து கொடுக்காமல் கல்லூரி நாட்களில் நெருக்கமாக பழகிய (இந்த நெருக்கமாக என்பதை கூட வேறு அர்த்தத்தில் தான் சமுதாயம் பார்க்கும்) தோழனும் தோழியும் அவர்கள் குடும்பங்களாலேயே மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டு இருவரும் கண்டால் கூட கதைக்கக்கூடாது என ஆயுத முனையில் மிரட்டப்பட்டதை நன்றாக அறிந்தவன் நான்.

தொட்டாசிணுங்கி படத்தை முதன் முதலில் யாழ்ப்பாணத்தில் பார்த்துவிட்டு அதை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது எனது நன்பன் ஒருவன் இந்த நட்பு நடைமுறை சாத்தியம் இல்லாதது என்று கூற நான் சாத்தியம் என்று கூறினேன். இதற்காக பந்தயமும் பிடித்தோம். இப்போதும் நான் முழுமையாக நம்புகின்றேன், ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான நட்பு இருவரையும் முழுமைப்படுத்தும்!

2006 இல் இந்தக் கட்டுரையை முதலில் எழுதியிருந்தேன்.  அதற்கு நெடுநாட்களுக்குப் பிறகு வந்த மனுஷ்யபுத்திரனின் இந்தக் கவிதை இதற்கு நன்கு பொருந்துகின்றது

சிநேகிதிகளின் கணவர்கள்

சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
எப்போதும் உருவாகிவிடுகிறது
ஒரு சதுரங்கக் கட்டம்

ஒரு கலைக்கமுடியாத பாவனையின்
மர்ம நிழல்

ஒரு சர்க்கஸ் கோமாளியின்
அபாயகரமான சாகசங்கள்

ஒரு அபத்த வெளியில்
விரிக்கப்பட்ட வலை


சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேதிகளின் கண்களை
முற்றாகத் தவிர்த்துவிடுகிறேன்

அவளது ஆடையின் வண்ணங்களை
அவளது தேனீரின் ரகசியப் பிரியங்களை
மறுதலித்துவிடுகிறேன்

அவளைப் பற்றிய ஒரு நினைவை
வேறொரு சம்பவத்தோடு இணைத்துவிடுகிறேன்

அவளது கணவனைப்போலவே
அவளது இருப்பை
ஒரு விளையாட்டுப் பொருளாக்குகிறேன்


சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகிதங்களில்
நாம் அனுமதிக்கப்படுவது
ஒரு கருணை

அது நம்மிடம் காட்டப்படும்
ஒரு பெருந்தன்மை

சில சமயம் நம் சிநேகிதிகளுக்கு
காட்டப்படும் பெருந்தன்மை

நாம் சந்தேதிக்கப்படவில்லை
என நம்மை நம்ப வைக்கும்
ஒரு தந்திரமான விளையாட்டு


சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேகிதி எப்போதும்
பிசாசுகளின் புதிர்மொழியொன்றைப்
பேசுகிறாள்

உரையாடல்களின்
அபாயகரமான திருப்பங்களை
பதற்றத்துடன் லாவகமாகக் கடந்து செல்கிறாள்

எதைப் பற்றிய பேச்சிலும்
கணவரைப் பற்றிய
ஒரு பின்குறிப்பை இணைத்துவிடுகிறாள்

ஒவ்வொரு சந்திப்பின் முடிவில்
மிகவும் ஆயாசமடைந்து
கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது
நல்லது என்று யோசிக்கத் தொடங்குகிறாள்

சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களின் இடையே இருப்பது
ஒரு உறவல்ல
இலக்குகள் ஏதுமற்ற
ஒரு பந்தயம்

ஒரு அன்னியனுக்குக் காட்டும்
வன்மம் மிகுந்த மரியாதை

ஒரு சட்டபூர்வ உரிமையாளனுக்கு எதிராக
ஒரு பொறுக்கியின் ரகசிய கலகம்

தொண்டையில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட
ஒரு மீன் முள்


சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
நான் எனது பழக்கவழக்கங்களை
மாற்றிக் கொள்கிறேன்

அவர்களது எல்லா அக்கறைகளையும்
எனது அக்கறைகளாக்கிக் கொள்கிறேன்

சிநேகிதிகளுடன் பேச
ஒரே ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது

அவர்களின் கணவர்களுடன் பேச
ஏராளமான கச்சாப் பொருள்கள் தேவைப்படுகின்றன


சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
சிநேகிதிக்குப் பதில்
சிநேகிதியின் குழந்தைகளை
நேசிக்கக் கற்றுக் கொண்டேன்

எவ்வளவு குடிக்க வேண்டும்
ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும்
நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும்
எந்தக் கணத்தில் வெளியேற வேண்டும்
என எல்லாவற்றையும் பழகிக் கொண்டேன்

நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று

அல்லது பெயர்களை
வெறும் பெயர்களாக மட்டும்
எப்படி உச்சரிப்பது என்று

ஒரு சிநேகிதியை
‘சிஸ்டர்’ என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று

 

One thought on “தொட்டாச்சிணுங்கி உறவுகள்

Add yours

  1. நல்ல உதாரணத்துடன் எழுதி இருக்கிறீர்கள் அருண்மொழிவர்மன் சார்,பொதுப்படுத்த முடியாத விஷயம் இது என்றே உணர்கிறேன்.உதட்டளவிலான உரையாடல்கள் உணர்வுகளைத் தொட ஆரம்பிக்கும் போது தொடுதல் என்பது தவிர்க்க இயலாமல் போகும் அபாயம் இருக்கிறது. தத்தமது பாலருடன் கலந்து கொள்ள வேண்டிய விஷயம் எது; அடுத்த பாலருடன் பகிர்ந்து கொள்ளத் தக்க விஷயம் எது என்பதில் கள்ளத்தனமில்லாத தெளிவு இல்லாத வரை ஆண்-பெண் நட்பு என்பது ரிஸ்க்கான ஒன்று தான்.

    Like

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑