நிறப்பிரிகை ரவிக்குமார் ஆசிரியராக இருக்கின்ற மணற்கேணி இதழின் முதல் இரண்டு இதழ்களை பெற்றுக்கொண்டேன். இதழ்களை புரட்டிப் பார்த்தவுடனேயே மனதில் தோன்றிய விடயம், அவற்றின் அச்சு நேர்த்தி. தமிழ்ச் சிற்றிதழ்களின் அச்சு நேர்த்தி பற்றிய பேச்சுகள் எழும்போதெல்லாம் பரந்தாமனின் அஃக் இதழ் பற்றியே சிலாகிக்கப்படும். துரதிஸ்டவசமாக எனக்கு அந்த இதழ்களில் ஒன்றையேனும் பார்க்கக் கிடைக்கவில்லை என்றாலும் தமிழ்ச் சிற்றிதழ் சூழலில் அச்சு நேர்த்தி, ஒரு/ழுங்கமைப்பு போன்ற விடயங்களில் காட்டப்படும் சிரத்தையின்மை பற்றி நிச்சயமாக அங்கலாய்ப்பு இருக்கின்றது. மணற்கேணி இதழ்களைப் பொறுத்தவரை உயிர்மை, காலச்சுவடு, தீராநதி போன்றவற்றின் அதே வகையான உள்ளடக்கத்துடன் அவற்றை விட பல மடங்கு தரமான பக்கங்கள், நேர்த்தியுடன் வெளிவருகின்றது.
ரவிக்குமார் என்னைப் பொறுத்தவரை விதைத்திருந்த நம்பிக்கைகள் விழுதுகள் விட்டுப் பரந்திருக்கும் ஆலமரம் போன்று பரந்தவை. இன்று அதே ரவிக்குமார்தான் கருணாநிதி தனக்கு அண்ணா விருது கொடுத்த போது பேசிய பேச்சினை தனது வலைத்தளத்தில் வெளியிட்டு பெருமிதம் கொள்கிறார். அந்தப் பேச்சின்போது கருணாநிதி சொல்கிறார்,
“ரவிக்குமார் அவர்கள் பல நூல்களை எழுதியவர். எனக்கே ஆச்சரியமாக இருந்தது – இவ்வளவு நூல்களா ,நாமே இவ்வளவு எழுதவில்லையே என்று. அவ்வளவு நூல்களை – உலகத்திலே உள்ள பல தலைவர்களைப் பற்றி – பல கருத்துகளைப் பற்றி விமர்சனங்களையெல்லாம் எழுதியவர் அவர். இன்னும் சொல்லப்போனால் ஆரம்ப காலத்தில் அவர் எங்களைத் தீவிரமாக எதிர்த்தவர். தீவிரமாக எதிர்த்தால்தான் பிறகு தீவிரமாக ஆதரிப்பார்களென்று எனக்கு நன்றாகத்தெரியும் . எனக்கு அவரிடம் எப்போதுமே அவருடைய பேச்சில் ,அவருடைய நடவடிக்கையில் , அவருடைய எழுத்தில் மயக்கம் உண்டு. இவர் நம்மிடமே இருக்கவேண்டுமே என்று கருதியிருந்தேன். பிறகு பார்த்தால் அவர் சிறுத்தைகளிடம் இருந்தார். அதுவும் நம் இடம்தான் என்று அதிலே ஒரு ஆறுதல் கொண்டேன்.”
என்று. கருணாநிதியின் இலக்கியச் சேவையை ரவிக்குமாரின் எழுத்துக்களோடு ஒப்பிட்டு – அதுவும் எண்ணிக்கையளவில் – பேசுகிறார் கருணாநிதி. இதைவிட ரவிக்குமாரை வேறு எப்படியாவது கேவலப்படுத்தலாமா என்பது தெரியவில்லை. ரவிக்குமார் பற்றிய நம்பிக்கைகளும் எதிபார்ப்புகளும் எனக்கு உயர்ந்திருந்த காலமொன்றில் ரவிக்குமாரின் பேட்டி ஒன்றை வாசித்தேன். அதில் நிறப்பிரிகை குழு பிரிந்தது பற்றிப் பேசும்போது நிறப்பிரிகை என்ற பெயரை அ. மார்க்ஸ் தன் சொந்தச் சொத்துப் போல தனது வீட்டிற்கும் பெயராக வைத்துள்ளார் என்று குறைபட்டிருந்தார் ரவிக்குமார் (வல்லினம் மே – ஜூலை 2002). அண்மையில் வல்லினம்நேர்காணல்களின் தொகுப்பை வாசித்தபோது அதில் ரவிக்குமாரின் மேற்சொன்ன நேர்காணலுடன் அதற்கு அ. மார்க்ஸ் ஆற்றியிருந்த எதிர்வினையையும் அதன் “முக்கியத்துவம்” கருதி வெளியிட்டிருந்தனர். அதில் அ. மார்க்ஸ் கூறுகிறார்
“எனக்கு ஒரே ஒரு வீடு தஞ்சாவூரில் உள்ளது. அதில் என் பெயர்ப் பலகை கூட இல்லை. வீட்டுக்குப் பெயரும் கிடையாது. நிறப்பிரிகை இல்லம் என்பது என் மனைவி விஜி தான் கட்டிய வீட்டிற்கு வைத்த பெயர். …. பல சொந்தக் காரணங்களுக்காகவும் நிறப்பிரிகையின் மீதும் என் மீதுமுள்ள அன்பை வெளிப்படுத்தும் முகமாகவும் இந்தப் பெயரை அவர் தேர்வு செய்தார்.”(வல்லினம் ஓகஸ்ட் – ஒன்ரோபர் 2002).
முதன் முதலாக ரவிக்குமாரின் நேர்காணலை வாசித்த போது ஐயோ இரண்டு நல்ல மனிதர்கள் இப்படி சண்டை பிடிக்கிறார்களே என்று நினைத்திருந்தேன். இப்போது…. அதை விடுங்கள். அ.மார்க்ஸ் தனது நிறப்பிரிகை என்கிற இதழின் பெயரை தனது வீட்டிற்கும் வைத்ததாக குறைபட்டுக் கொண்ட அதே ரவிக்குமாரின் இன்றைய வலைப்பதிவு முகவரி http://nirappirikai.blogspot.com. எனக்கு இதையெல்லாம் பார்க்கின்றபோது கவுண்டமணி சூரியன் திரைப்படத்தில் சொல்லிப் பிரபலமான “அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்” என்கிற காட்சிதான் ஞாபகம் வருகின்றது.
தமிழ்ச் சிற்றிலக்கிய சூழலில் நிறப்பிரிகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது மறுக்கமுடியாத உண்மை. நிறப்பிரிகையின் பெரும் வெற்றி என்னவென்றால் நிறப்பிரிகை நின்றபின்னரும் கூட அதிலிருந்து பிரிந்துபோனவர்கள் தனிநபர்களாக தம்மை, தம் அடையாளங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள் என்பதே. தற்போது நிறப்பிரிகையின் தொடர்ச்சியாக என்று சொல்லிக்கொண்டு லும்பினி என்கிற இணைய இதழ் இயங்குகிறது. நிறப்பிரிகையின் இதழ்களின் PDF தொகுப்புகள் கிடைக்கின்றன என்பதைத் தவிர லும்பினி வேறு ஏதாவது வகையில் தன்னை நிலை நிறுத்தியதா என்றால் இல்லை என்பதே ஒரே பதில். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடை வரவேற்கிறோம் என்கிற அறிக்கை லும்பினி தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதே நேரம் 2000ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் இனி மாநாட்டுக்கு எதிராக நிறப்பிரிகை எடுத்த நிலைப்பாடு பற்றிய நிறப்பிரிகையின் தொடர்ச்சி என்று நம்பப்படும் லும்பினியின் தற்போதைய நிலைப்பாடு என்னவென்பதை அறிய ஆவலாக உள்ளது. தமிழ் இனி மாநாடு பற்றி நிறப்பிரிகை சார்பில் அ. மார்க்ஸ் தமிழ் இனி 2000 என்கிற கும்பமேளா என்று ஒரு கட்டுரை எழுதினார். இது அவரது சொல்வதால் வாழ்கிறேன் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. இப்போது இலங்கையில் “கம்பன் விழாப் பாணியில்”நடைபெற்று முடிந்திருக்கின்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றி இன்றைய நிறப்பிரிகைக்காரர்களான லும்பினிகாரர்களோ அல்லது அ. மார்க்ஸோ என்ன சொல்கின்றனர் என்பது பற்றி இன்னமும் ஓரிடத்திலும் பதியப்படவில்லை. அதே நேரம் இவர்கள் இப்போது செய்கிற தகிடு தித்தங்களுக்காக நிறப்பிரிகையின் பங்களிப்பினை நாம் குறித்து மதிப்பித்துவிடமுடியாது. உயிர்மை, காலச்சுவடு, தீராநதி போன்றவை எல்லாம் சிற்றிதழ்கள் என்று தம்மை அறிமுகம் செய்துகொள்ளும் இன்றைய காலங்களில் நிறப்பிரிகை போன்ற தீவிரமான, ஆழமான கட்டுரைகளுக்கும், விவாதங்களுக்கும் இடந்தரக்கூடிய இதழ்கள் வரவேண்டியது அவசியமே. உன்னதம் அந்த வகையில் வந்திருந்தாலும் அது பெரும்பாலும் மொழிமாற்றுகளை முன்வைத்தே இயங்கி வந்தது. தவிர உன்னதம் தொடர்ந்து வெளிவருகின்றதா என்றும் எனக்கு சரியாகத் தெரியவில்லை. அதே நேரம் இலங்கையில் இருந்து வெளிவந்த கூடம் என்கிற இதழ் முக்கியமானதொன்று என்று நினைக்கிறேன். தற்போது கூடமும் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டாலும், அதன் முக்கியத்துவம் கருதி கூடத்தில் பழைய இதழ்களை வாசிப்பது அவசியம். நூலகம் தளத்தில் கூடத்தின் பழைய இதழ்கள் இருக்கின்றன. (http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)
இது போன்ற ஒரு சிற்றிதழ் அல்லது தீவிர இதழ் என்கிற தானத்தை ரவிக்குமாரின் மணற்கேணி அடைவது சிரமமாக இருக்குமென்றாலும் அவர் நினைத்தால் முடியும். சிறீராம் சிட் பன்ட்ஸ் குழுமத்தில் ஆதரவில் வெளிவந்த சுபமங்களா இதழை, சிறீராம் சிட் பண்ட்ஸ் நட்டக் கணக்கு காட்டுவதற்காகவே நடாத்தியதாகக் குறைபடுவோரும் உள்ளனர். சிலவேளை அப்படி நட்டக் கணக்கு காண்பிப்பதற்காக ரவிக்குமார் நடத்துவதாக கருதப்படும் மணற்கேணி தமிழ்த் தீவிர இலக்கிய உலகில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தவும் முடியும். பூக்கோ பற்றிய அறிமுகங்களை தமிழ்ச் சூழலில் முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர் ரவிக்குமார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன், ஆனால் பூக்கோவிற்குப் பின்னரான சிந்தனையாளார்கள், இப்பொதும் வாழும் கோட்பாட்டாசிரியர்கள் பற்றித் தமிழ்ச் சூழலில் வாதங்களும் உரையாடல்களும் நடைபெற்றது இல்லையெனவே சொல்லலாம். முடியும், ரவிக்குமார் மனது வைத்தால்.
படங்கள் நன்றி: சவுக்கு இணையத்தளம்
திரு அருண்மொழி வர்மன்
உங்கள் பதிவுக்கு நன்றி. நிறப்பிரிகை என்ற வலைப்பூவின் பெயர் அதை உரிமை கொண்டாடுவதற்கானதல்ல.அந்தப் பெயர் வழக்கொழிந்துபோய்விடக்கூடாதே என்பதற்காகத்தான்.
மணற்கேணி மூன்றாவது இதழ் வந்து இப்போது நான்காவது இதழ் வெளிவரப்போகிறது. மூன்றாவது இதழில் மாரீஸ் ப்ளான்ஷொ மிஷெல் ஃபூக்கோ குறித்து எழுதிய கட்டுரை எனது மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. நான்காவது இதழில் எலியா கனெட்டியின் நூலிலிருந்து சில பகுதிகள் வெளியாக உள்ளன. நான் நடத்திய தலித் இதழ்களை நீங்கள் பார்த்தமாதிரித் தெரியவில்லை. எனது செயல்பாடுகள் எவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கோ, எதிர்பார்ப்புகளை உருவாக்குவதற்கோ திட்டமிட்டு மேற்கொள்ளப்படுபவை அல்ல. எனக்குத் தெரிந்த விதத்தில் நான் சில காரியங்களைச் செய்கிறேன். அவ்வளவுதான்.
ஃபூக்கோவின் சமகாலத்தவர் என்றாலும் அவருக்குப் பிறகு நான் முக்கியமானவராகக் கருதும் போத்ரியாவை அறிமுகம் செய்து நான் எழுதிய கட்டுரையை வாய்ப்பு கிடைத்தால் வாசியுங்கள்.
நன்றி
ரவிக்குமார்
LikeLike
திரு ரவிக்குமார்,
நன்றிகள் உங்கள் பதிலிற்கு.
கட்டுரையின் ஆரம்பத்திலேயே நான் சொன்னது போல எனக்கு 2 மணற்கேணி இதழ்களே கிடைத்தன. காலம் இதழாசிரியர் செல்வம் இந்தியாவில் இருந்து கொண்டுவந்திருந்தார். அவரிடம் இருந்து இவற்றைப் பெற்றுக்கொண்டேன். அதே நேரம் அதற்கும் பின்னர் வந்த இதழ்கள் இங்கே கிடைக்கவில்லை. செல்வத்துக்கும் கிடைக்கவில்லை என்று சொன்னார். இங்கே வழமையாக நான் புத்தகம் வாங்கும் கடையில் சொல்லி வைத்துள்ளேன். அவர்கள் எடுப்பித்துத் தருவதாகச் சொல்லி உள்ளனர். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது உயிர்மை முதன் முதலில் வந்திருந்தபோதும் அது பற்றி சுஜாதா விகடனில் எழுதியதைப் பார்த்து இதே கடைக்காரரிடம் சொல்லித்தான் இந்தியாவில் இருந்து எடுப்பித்தேன். அவர் உயிர்மை இதழைப் பார்த்துவிட்டுச் சொன்னார், இந்தப் புத்தகங்கள் விற்காது வேணுமென்றால் உங்களுக்கா ஓடருக்கு எடுத்துத் தாறேன் என்று, ஆனால் இன்று இங்கே நிறையப் பேர் உயிர்மையைப் படிக்கின்றார்கள். அதே நேரம் உயிர்மை அதன் ஆரம்ப இதழ்களில் இருந்து இன்று நிறைய அடர்த்தி குறைந்தே இருக்கின்றது.
நீங்கள் மேலே சொன்ன கட்டுரைகளையும் மேற்கொண்டு மணற்கேணி இதழ்கள் கிடைக்கும்போதுதான் என்னால் வாசிக்க முடியும். நான் ஆசைப்படுவதெல்லாம், நீண்ட ஆழமான கட்டுரைகளை, விவாதங்களை உள்ளடக்கிய தமிழ் இதழ்கள். எனக்குத் தெரிந்து தமிழ்ச் சூழலில் இப்போது அப்படி இதழ்கள் இல்லை என்றே நினைக்கின்றேன். வலைப் பதிவுகளில் அப்படியான சில கட்டுரைகள் வந்தாலும், எனது அனுபவத்தில் வலைப்பதிவுகளில் / இணையத்தில் ஆழமான வாசிப்புகள் செய்வது மிகச் சிரமமே. நான் print பண்ணி எடுத்துத்தான் நிறையப் பதிவுகளைப் படிக்கின்றேன்.
இங்கு புத்தகங்களை எடுப்பதி இருக்கும் சிக்கலால்தான் எம்மால் நிறைய இதழ்களை உடனேயே வாசிக்க முடியாமல் இருக்கின்றது. தலித் இதழ்கள் ஏதாவது pdf கோர்ப்பில் கிடைத்தால் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கின்றேன். இங்கேயும் நண்பர்களிடம் விசாரித்துப் பார்க்கின்றேன்.
நன்றிகள்
LikeLike