ஐ. சாந்தனின் “காலங்கள்”

Santhanஎனது சிறிய வயதில் நான் நேரடியாகக் கண்டறிந்துகொண்ட முதல் எழுத்தாளர் என்று ஐ. சாந்தனையே சொல்ல முடியும்.  அவரது கிராமத்தையே நானும் சேர்ந்தவன் என்பது அதற்கான வாய்ப்பினையும் எனக்கு நல்கியது எனலாம்.  அப்போது நான் படித்துக்கொண்டிருந்த சிறுவர் பாடசாலையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் 1987ல் நடைபெற்றன.  அந்நிகழ்வுகளின் போதோ அல்லது அதனைத் தொடர்ந்து வந்த  ஒருசில ஆண்டுகளிலோ இடம்பெற்ற ஏதோ ஒரு பாடசாலை விழாவில் சாந்தன் அவர்களின் இயக்கத்தில் “சுப்பன்ணாவும் சோமன்ணாவும்” என்றொரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.  அந்த வயதில் மிகவும் வித்தியாசமானதாக அந்த நாடகம் இருந்தது. ஒருவருக்குப் பின் ஒருவராக இரண்டு பேரை நிற்கவைத்து, அதில் ஒருவரின் கைகளையே கால்களாக்குவதன் மூலம் குள்ளமான மனிதர் ஒருவரை உருவாக்கும் உத்தியுடன், இரண்டு குள்ள மனிதர்களை மேடையில் தோன்ற வைத்து அந்த நாடகம் அமைந்திருந்தது.  புத்தக வாசிப்பினை எப்போதும் ஆதரித்து வந்த எனது வீட்டினரும் அப்போது வீதியால் அடிக்கடி செல்லும் சாந்தனை எழுத்தாளர் என்று மரியாதையுடன் எனக்கு அறிமுகஞ்செய்து வைத்திருந்தனர்.  நான் அப்போது கற்றுக்கொண்டிருந்த அதே பாடசாலையிலேயயே அவரது சகோதரி கற்பித்தும் வந்தார்.  அவரது சகோதரியின் மகனும் அங்கேயே, என்னைவிட ஒரு வகுப்புக் குறைவாகக் கற்று வந்தார்.  இதனால் சாந்தனைத் தொடர்ச்சியாகக் காணும் வாய்ப்புக் கிடைத்தும் வந்தது.  அவரது எழுதப்பட்ட அத்தியாயங்கள் குறுநாவலும், முளைகள் சிறுகதையும் குறிப்பிடும் பாடசாலையும் இதுவே.  ஆயினும் சாந்தனின் எழுத்துகளை நான் அதிகம் வாசித்தது கனடா வந்த பின்னரே.

ஈழத்து எழுத்தாளர்களில் தனித்துவமானவர்களில் ஒருவர் சாந்தன்.  மிகுந்த சொற் சிக்கனத்தோடு அதே நேரம் சுவாரசியத்தோடும் எழுதுபவர்.  இவரது கதைகளில் பெரும்பாலும் கதாநாயகன் “சாந்தன்” ஆகவோ அல்லது சாந்தனின் சாயல் கொண்டவர்களாகவோ இருப்பர். ஆயினும் இவரது கதைகள் அவரது கதைகளைக் கூறுவதில்லை.  ஒரு சம்பவம் பற்றிய பார்வையை அல்லது விமர்சனத்தினைத் தனது படைப்புகள் ஊடாகப் பதிவு செய்யும்போது அது கதாநாயகன் வாழ்விலே நடப்பதாகவோ அல்லது அவன் பார்வையில் நடப்பதாகவோ காட்டப்படும்.  ஒரு விதத்தில் சாந்தன் சமூகம் பற்றிய தன் பார்வையையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்துவதகாகக் கைக்கொள்ளும் கருவிகளே அவரது படைப்புகள் எனலாம்.  ஆயினும் அவை அதனை நேரடியாகக் கூறாமல் படைப்புகளின் ஊடாகவும் அவற்றில் இடம்பெறும் சம்பவங்கள், உரையாடல்கள் வாயிலாகவும் வாசகர்களுக்குக் குறிப்பால் உணர்த்துபவை.  ஒரு விதத்தில் சாந்தனின் சிறுகதைகள் ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படத்துடனோ அல்லது கார்ட்டூன் சித்திரத்துடனோ ஒப்பிட்டு நோக்கக் கூடியன.

ஆங்கிலத்திலும் தமிழிலுமாக தனது புனைவுகளை எழுதும் சாந்தன் இரண்டு மொழிகளிலும் சாகித்திய விருதினைப் பெற்றிருக்கின்றார்.  இதுவரை இவர் சிறுகதை, குறுநாவல், நாவல், மொழிபெயர்ப்பு என்று 18 நூல்களை எழுதியிருப்பதாக விக்கிபீடியா தொகுத்திருக்கின்றது.  ஆயினும் அதைவிட அதிகமாக வெளியாகியிருக்கலாம் என்றே கருதுகின்றேன்.  இவற்றுள் இந்தக் கட்டுரையில் நான் பகிரப் போகின்ற “காலங்கள்” என்கிற சிறுகதைத்தொகுதியில் 15 சிறுகதைகள் இடம்பெறுகின்றன.  இச்சிறுகதைகள் 1974 இற்கும், 1990 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்டிருக்கின்றன.

“தலைமுறைகள்” வாழ்வின் எல்லா அம்சங்களிலும் போரின் பாதிப்புகள் நிறைந்திருந்த ஒரு காலகட்டத்தின் மாணவர்களைப் பற்றிப் பேசுகின்றது.  Damp-proof என்ற சொல்லுக்கு விளக்கம் சொல்ல முற்படும் ஆசிரியர், ப்ரூவ் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று கேட்கின்றார்.  “நிறுவல்” என்று மாணவர்கள் பதிலளிக்கின்றனர்.  தடை, அல்லது தடைகாப்பு என்பதே இவ்விடத்தில் பொருத்தமான அர்த்தம் என்று சொல்லிவிட்டு அந்த அர்தத்தில் ஓர் உதாரணத்தைக் கேட்கின்றார்.  அனேகம் மாணவர்கள் “வாட்டர் ப்ரூஃப்” கைக்கடிகாரங்களைக் கட்டியிருப்பதால் அதுவே பதிலாக வருமென்று எதிர்பார்க்கின்றார்.  “புல்லட் ப்ரூஃப்” என்று பதில் வருகின்றது.  போருக்குள் பிறந்து வளர்ந்தவர்கள் எப்போதும் போர் சார்ந்த எண்ணங்களுடன் இருக்கின்றதான ஒரு சூழல் இக்கதையில் காட்டப்படுகின்றது.  மக்களின் இயல்பு வாழ்க்கையில் இது போன்ற போரியல் சார்ந்த சொற்கள் மிக இயல்பாக வழக்கில் இருப்பதை இன்றும் கூட நாம் அவதானிக்கலாம்.

போர்க்காலச் சூழலை விபரிக்கின்ற இன்னுமொரு சிறுகதையாக “வீடு” அமைகின்றது.  இக்கதையில் ஆனந்தந்தின் வீடு பற்றி விபரிக்கும்போது வெகு இயல்பாக “ஆனந்தம் நிறையப் பூமரங்கள் வைத்திருக்கிறார்.  முன் வாசலடியில், முற்றத்தை மறைத்து நிழல் பரப்பும் மாமரம்.  அதன் கீழே வேலியருகே பதுங்கு குழி …” என்று வீட்டின் ஓர் அங்கமாக பதுங்கு குழியும் குறிப்பிடப்படுகின்றது.  தொண்ணூறுகளில் நான் யாழ்பாணத்தில் வாழ்ந்தபோது வீட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து அல்லது போர் இடம்பெற்ற இடங்களுக்கு வெளியில் இருந்து வருகின்ற உறவினர்களுக்கு வீட்டைச் சுற்றிக் காட்டுவது போல வீட்டின் பதுங்குகுழிகளையும் காட்டியது நினைவில் இருக்கின்றது.  வீட்டில் எத்தனை அறைகள் இருக்கின்றன, என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்று பேசுவது போல, பதுங்கு குழி என்ன வடிவில் அமைந்திருக்கின்றது என்பதையும் பதுங்குகுழிக்கு எத்தனை வாயில்கள் வைத்திருக்கின்றோம் என்பதையும் கூட பேசியிருகின்றோம்.  அந்த அளவுக்கு, வீட்டின் ஒரு அங்கமாகவே பதுங்கு குழிகளும் இருந்த காலம் அது!  அங்கே ஆனந்தம் வீட்டில், அவன் நீண்டநாட்களாக தேடிய திருநீற்றுப் பச்சை என்கிற சிறிய தாவரத்தைக் காணுகின்றான்.

“உனக்கு வேணுமா? மூண்டு நாலு கண்டு முளைச்சு நிக்கு… தாறன்..
வலித்தது”

என்று கதை முடிகின்றது.  சொந்த நிலத்தில், சொந்த வீட்டில் இருந்து வெளியேறிய மக்கள்.  இப்போது விருப்பமான செடியை நடக்கூட சொந்த நிலம் இல்லையே என்று எண்ணும்போது வரும் வலி அது.  சாந்தனின் இந்தக் கதை எழுதப்பட்டடது 1990 இல்.  பின்னாளில் அனைத்து மக்களையுமே நாடெங்கும் அகதிகளாகப் போர் துரத்தியதுவும் கூட நிகழ்ந்தது.

அண்மையில் நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிய உரையாடல்களில் புலம்பெயர் தமிழர்களுக்கும், இன்றும் ஈழத்தில் இருப்பவர்களுக்கும் இடையிலான முரணை, குறிப்பாக புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் குறித்து ஈழத்தில் இருக்கின்ற தமிழர்களுக்கு இருக்கின்ற அதிருப்தியை அல்லது கசப்புணர்வினை உணர முடிந்தது.  அரசியல் ரீதியாகக் கூர்மையடந்திருக்கக் கூடிய இந்த இடைவெளிகள் முன்னரே நாளாந்த வாழ்க்கைமுறைகளின் ஊடாக ஏற்பட்டுவிட்டவை தான்.  90களின் மத்தியில் போர் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தவர்களில் சிலர் “என்ன மொத்தமாகி விட்டீர்கள், ஜிம்மிற்குப் போவதில்லையா?”, என்றும் “சோறு சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும், மரக்கறியில் சலட் செய்து சாப்பிடலாம், தேங்காய்ப் பூ கொலஸ்ரோல், நீங்கள் ஃபமிலி டொக்ரரிடம் கேட்பதில்லையா?” என்றும் கேட்பதை எல்லாம் அவதானித்து இருக்கின்றேன்.  இது போன்ற அபத்தமான உரையாடல்களே மிகப்பெரிய விலகல்களைத் தொடக்கி வைக்கின்றன.  இப்படியான ஒரு நிகழ்வைக் கூறுவதே “அஸ்பெஸ்ரஸ்” என்கிற சிறுகதை.  இந்தச் சிறுகதையில் வெளிநாட்டில் இருந்து வந்த பாலாவும் ஊரிலேயே இருக்கின்ற சிவாவும் பேசும்போது இடம்பெற்ற (இந்திய ராணுவத்துடனான) கடுமையான 150px-089போர் பற்றிய உரையாடல் வருகின்றது.  வெளிநாட்டில் இருந்து வந்த பாலா “ஆனாலும் இப்ப எங்களுக்கெண்டு ஒரு அடையாளம் வந்திருக்கு… இலங்கைத் தீவின் தமிழர்கள் என்று சொல்றதில ஒரு பெருமையும் இருக்கு” என்று கூறுகின்றான்.  “அந்த அடையாளத்திற்கு நாங்கள் விலை கொடுத்தோம்” என்று சிவா பதிலளிக்கின்றான். புதிதாகக் கட்டி போர்ச்சூழல் காரணமாக வெள்ளை கூட அடிக்க முடியாத வீட்டைப் பற்றிக் கூறும்போது அஸ்பெஸ்ரஸே போட்டிருக்கிறியள்? என்கிறான் பாலா.  ஷெல்லுக்கு கொங்கிரீட் கூட தாங்காது என்கிறாள் சிவாவின் மனைவி ஈஸ்வரி.  வெளிநாட்டில் அஸ்பெஸ்ரஸ் சுவாசநோய்களை உருவாக்கும் என்பதால் அதனைத் தடை செய்துவிட்டார்கள் என்றும், ஏற்கனவே இருந்த இடங்களில் இருந்தும் அஸ்பெஸ்ரசை அகற்றி விட்டனர் என்றும் கூறி, ஏன்டாப்பா இதைப் போட்டனி எவ்வளவு ஆபத்தான விடயம்? என்று கேட்கின்றான் பாலா.  இதைக் கேட்டு, விருந்தினர் என்ன நினைப்பார்களோ என்று கூட பாராமல் பலமாகச் சிரிக்கின்றான் சிவா.  1988இலேயே புலம்பெயர் தமிழர்களுக்கும், ஈழத்தில் வாழ்பவர்களுக்கும் இடையில் ஏற்படக்கூடிய இடைவெளியை மிக நுணுக்கமாக உணர்ந்து இக்கதையில் வெளிப்படுத்தி இருக்கின்றார் சாந்தன்.

“எழுதாத கடிதம்” உம் “நன்றி” உம், இந்திய இராணுவம் ஈழத்தை விட்டு வெளியேறிய காலப்பகுதியைப் பேசுகின்றன.  “நாங்கள் போகத்தான் வேணும், நான் திரும்பிப் போகப் போகின்றேன்” என்று ஒரு முறை சொன்ன இந்திய இராணுவ வீரனை “உங்களவர்கள் எல்லாரும் போல ஒரு முகந்தான்.  ஆனால் முறுக்கிய கூர் மீசைக்குப் பின்னால் ஒரு குழந்தை எட்டிப் பார்த்தது” என்று எழுதாத கடிதத்தில் விழித்து எழுதுகின்றார் சாந்தன்.  “உங்களைப் போல் இன்னும் வேறு பேர் இருந்திருக்கலாம்.  ஆனால் எய்யப்பட்ட அம்புகள் நீங்கள்” என்றும் “மிக்க நன்றி எம்மைப் புரிந்து கொண்டமைக்கு” என்றும் எழுதும்போது சாந்தனின் விசாலமான பார்வை புலப்படுகின்றது.  “நன்றி” சிறுகதையில் வீட்டில் அவ்வளவு காலமும் இருந்த பெட்டை நாயை அடித்து விரட்டுகின்றார் மணியத்தார்.  “பெட்டையெண்டாலும் அதை நம்பித்தானே இருந்த நாங்கள் இவ்வளவு நாளும்” என்று சொல்லும் மனைவியிடம் “அது அப்ப… இப்ப இந்தியன் ஆமி போட்டிது.  இனி என்ன சவத்துக்கிதை?” என்கிறார்.  இந்திய இராணுவ காலத்தில் இருந்தவர்கள் இந்தக் கதையை நெருக்கமாகப் புரிந்துகொள்ளலாம்.  ஒரு நாளின் எந்தப் பொழுதிலும் எந்தத் தடமும் இல்லாமல் வீட்டினுள் சோதனை என்ற பெயரில் நுழைந்து அத்துமீறல் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தது இந்திய ராணுவம்.  இந்திய இராணுவம் தொலைவில் வருகின்ற போதே அவர்கள் கூடவே வருகின்ற எண்ணெய் மணத்தினை வைத்து அறிந்துகொள்ளும் நாய்கள் வித்தியாசமான முறையில் ஒன்றாகக் குரைத்து மனிதர்களுக்கு சமிக்ஞை அனுப்பும்.  நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இருந்த தொடர்பு நெருக்கமானதாகவும், நாய்களின் தேவை மனிதர்களுக்கு அதிகமும் தேவையானதாகவும் இருந்த காலமென்று இந்திய இராணுவ காலத்தைக் குறிப்பிடமுடியும்.  இந்தக் காலப்பகுதியைப் பிரதிபலிப்பதாக இந்தக் கதை அமைகின்றது.

மனித நேயத்தைப் பேசுகின்ற இன்னொரு கதை “பாத்திரம்”.  இக்கதையில் கலவரத்தால் இடம்பெயர்ந்து வந்ததாகவும், கொட்டில் போட காசு தேவை என்றும் கூறிக்கொண்டு ஒரு பெண் சிறு குழந்தையுடன் வருகின்றாள். அவள் கலவரத்தின்போது எங்கிருந்தாள் என விசாரிக்கின்றான்.  தெமட்டகொடவில், வெள்ளைவத்தைக்குப் போற ரோட்டில, வியாங்கொட முகாமில் இருந்ததாகக் கூறுகின்றாள் அவள்.  முரணான இந்தத் தகவல்களை வைத்தே அவள் பொய் கூறுகின்றாள் என்ற அனுமானத்திற்கு அவன் வருகின்றான்.  இதற்கிடையில் அவன் தாய் காசைக் கொடுத்து அனுப்புகின்றாள்.  ஏன் கொடுத்தனீங்கள்.  சொன்னதெல்லாம் போய் என்று அவன் கூறும் போது, “சீ, பாவம்.  அவள் வீட்டை விட்டு அதிகம் வெளிக்கிடாமல் இருந்திருக்கலாம்” என்கிறாள் தாய்.  பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பார்கள்.  சொல்லும் காரணங்களும், நிலைமையும் பொய்யானதாகவும், மிகைப்படுத்தியதாகவும் இருந்தாலும் தேவையும், அதற்கான முக்கியத்துவமும் இருந்தால் அதுவே உதவி செய்யப் போதுமானது என்பதே அந்தத் தாயின் நிலைப்பாடாக இருக்கலாம்.  இந்தக் கதை ஒரு விதத்தில் சுஜாதா எழுதிய நிஜத்தைத் தேடி என்கிற சிறுகதையை ஞாபகமூட்டுவதாகவும் உள்ளது.

2009ல் ஈழப்போரின் இறுதி நாட்களில் இறந்தவர்களின் சாவுக்கணைக்கினை கிரிக்கெட் ஸ்கோர் சொல்வது போல சில ஊடகங்களும் தனிப்பட்டவர்களும் பகிர்ந்துகொண்டதை அறிவோம்.  ஓரிரிவர் சாவதும், ஐம்பது நூறு பேர்கள் என்று சாவதும் சாதாரணமாக மாறிவிட ஐநூறு, ஆயிரம் என்று செத்தால் மட்டுமே அது செய்தி என்றே அன்று பார்க்கப்பட்டது.  எந்தப் போரிலும் முதலில் கொல்லப்படுவது மனிதம் தான் என்பதை உறுதிசெய்தவை அவை.  1990ல் பிரசுரமான கதையில் இப்படியான நிலையை ஒரு கதாபாத்திரமூடாக அலசுகின்றார் சாந்தன்.  பத்திரிகை வாசிப்பதை மிகுந்த விருப்புடன் ரசனை பூர்வமாகச் செய்கின்ற கந்தையரின் மனம் திடீரென்று உறுத்தலுக்கு உள்ளாகின்றது.  “இதெல்லாம் ரசனைக்குரிய செய்திகளல்ல.  இந்தச் சனம் இவ்வளவு பாடுபடுகையில், இருக்க இடமும் உண்ண உணவும், உயிருக்கு உத்தரவாதமும் இல்லாமல் ஓடிவருகையில், அவர்கள் பற்றிய சேதிகளை, அவர்கள் படும் அவலங்களைத் தான் இப்படி ஆறுதலாக ஓய்வாகக் கிடந்து படிப்பதே பிழை! அது ஒரு பாபமாகக் கூடப்பட்டது… கடவுளே!” என்பதாகக் கந்தையரின் மனநிலை சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதுபோலவே ரிஷ்கா என்கிற கதையில், கதை சொல்லிக்கு அசோகமித்திரனின் ரிஷ்கா சிறுகதையை நினைவூட்டும்படி நடக்கும் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவதாக  அமைகின்றது.  ஆயினும், இக்கதையில்

“இங்கே பேசிய பிரதிநிதிகள் இதை ஒரு ஹர்த்தால் என்றும் துக்கதினம் என்றும் குறிப்பிட்டார்கள்.  அது தவறு.  நாங்கள் அநுஷ்டிக்கப்போவது எதிர்ப்பு தினம்.  எங்கள் எதிர்ப்பை – இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை அகில உலகிற்கும் எடுத்துக்காட்டப்போகிற தினம் அது”

என்று சாந்தன் பதிவுசெய்வது முக்கியமானது.  ஈழப்போராட்டம் பற்றிய உரையாடல்களில் “இனப்படுகொலை” என்ற சொல்லாடல் பரவலாக இடம்பெறுவதற்கு வெகுகாலம் முன்னராகவே தன் படைப்பில் சாந்தன் இதனை உரத்துக் கூறியிருக்கின்றார் என்றே சொல்லவேண்டும்.

“அவன்” சாந்தனின் வழமையான கதைகளில் இருந்து மாறுபட்டதாக அமைந்திருக்கின்றது.  யார் இந்த “அவன்” என்பதை யோசிக்கின்றபோது, அது நான் யார்? என்கிற சுய தேடலாக விரிவடைந்து செல்வது சிறப்பு.  “அந்நியமான உண்மைகள்” என்கிற சிறுகதை, குடியேற்றங்கள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் திருகோணமலைக்குச் செல்கின்ற தமிழ் மட்டுமே பேசத் தெரிந்த ஒருவன் எதிர்கொள்ளுகிற புறக்கணிப்பையும், அந்நியத்தன்மையையும் காட்டுகின்றது.  இது பற்றி அவனது மச்சானிடம் கேட்கும்போது மச்சான் “இது பற்றிக் கதைத்தால் அரசியலாகும்” என்று கூறுகிறான்.

“காலங்கள்” இத்தொகுதியில் இருக்கின்ற மிகப் பெரிய கதை.  இக்கதையில் 1963, 1973, 1988, 1989, 1990, 2003 என்று வெவ்வேறு காலப்பகுதியில் இருந்த கள நிலைமைகள் கல்லுண்டாய் வெளியைத் தளமாக வைத்துக் காட்டப்படுகின்றன.  1991ல் எழுதப்பட்ட இக்கதையில், 2003ல் எவ்விதம் இருக்கும் என்று எதிர்வுகூறும்போது சாந்தன் கொண்டிருந்த வளமான எதிர்காலத்துக்கான நம்பிக்கையை அவர் மக்கள் மீது கொண்டிருந்த பற்றின் வெளிப்பாடாகவே கருதமுடிகின்றது. “இருகோடுகள்”, “ஒரு விருந்தின் முடிவு”, “அதே விதியெனில், சுரண்டல்” ஆகிய கதைகள் எனது வாசிப்பில் ஆழமான தாக்கத்தை உருவாக்கவில்லை.  ஒரு விதத்தில் அவை கருத்துப் பகிர்வகளாகவே அதிகம் தெரிகின்றன என்றே சொல்லவேண்டும்.

ஐம்பது வருடங்களாக படைப்பிலக்கியங்களை எழுதிவரும் சாந்தன் தான் வரித்துக்கொண்ட கோட்பாடுகளை முன்னிறுத்தாமல் மானுட நேயத்தை முன்னிறுத்திப் பேசிவருபவர்.  ஈழப்போராட்டம் தொடர்பாக அனேக இடதுசாரிகள் எடுத்த தளம்பல் நிலைப்பாட்டைப் போல அல்லாமல் சாந்தன் தனது படைப்புகளூடாக இன ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் பேசிவருபவர்.  அதே நேரம் சுய விமர்சனத்தின் குரலும், பிற இனத்தவர்கள் மீதான நேசத்தையும் கூட இவரது படைப்புகளில் தொடர்ந்து காணலாம்.  பொதுவாக சாந்தனின் படைப்புகளில் நிலவியல் குறித்த விபரணங்களோ அல்லது வர்ணனைகளோ அதிகம் இடம்பெறுவதில்லை.  சாந்தனைப் பொறுத்தவரை அவரது படைப்புகள் மக்களுடன் உரையாடுவதற்கு அவர் கையாளும் கருவிகள்.  அந்தத் தேவையை அவர் எழுத்துகள் திருத்தமாகவே பூர்த்திசெய்கின்றன.


  1. இக்கட்டுரை செப்ரம்பர் 2015 ஜீவநதி இதழில் வெளியானது
  2. நூலகம் திட்டத்தின் கீழ் சாந்தனின் நூல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.  அதற்கான இணைப்பு http://goo.gl/V4HLbj

2 thoughts on “ஐ. சாந்தனின் “காலங்கள்”

Add yours

  1. சாந்தன் சிறுகதைகள் பற்றிய தங்கள் வாசிப்பு அனுபவம் சிறப்பாக இருந்தது. சாந்தன் எம்மத்தியில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர். எனது நீண்ட கால நண்பர். எனது வாழ்த்துக்கள்.
    முருகபூபதி
    அவுஸ்திரேலியா

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: