அபியும் நானும், ஆனந்த விகடன், விஜயகாந்த் மற்றும் கனேடிய இலக்கியங்கள்

அபியும் நானும் திரைப்படம் இந்தியாவில் வெளியாகி ஓரிரு தினங்களின் பின்னரே கனடாவில் வெளியானது. அண்மைக்காலங்களில் நான் பெரிதும் எதிர்பார்த்த திரைப்படம் இது. வைரமுத்து – வித்யாசாகர் – ராதாமோகன் கூட்டணி ஏற்கனவே மொழியில் ஒரு இனிய இசை அனுபவத்தை தந்த பின்னர் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி என்னை மிகவும் கவர்ந்திருந்தன. அதிலும் பாலா உயிரை தந்து பாடி இருந்த அழகிய அழகிய… பாடலும் சின்னம்மா கல்யாணம்… பாடலும் எப்படியாக படமாக்கப்பட்டிருக்கும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். பிரகாஷ்ராஜ் மீது ஒரு நடிகர் என்பதை தாண்டி நல்ல ஒரு ரசனையாளர் என்றளவிலும் ஒரு மரியாதை உண்டு. இந்த நேரத்தில் படத்தை இங்கே திரையிடவில்லை என்றதும் நல்ல படங்களை திரையிடுவதில்லை என்ற தம் வழக்கத்தை மீண்டும் ஒரு முறை செய்துவிட்டார்களோ என்று நினைத்தேன். தமிழ் சினிமாவின் முக்கிய படங்களாக ஓரளாவு சொல்லத்தக்க சென்னை 600 028, அஞ்சாதே போன்ற திரைப்படங்கள் இங்கு திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படம் பிரகாஷ் ராஜ் பூங்கா ஒன்றில் பிருத்விராஜை சந்தித்து தனது மகளுடனான தன் அனுபவங்களை சொல்வதாக செல்கின்றது. திருப்பங்கள் எதுவும் இல்லாமல் ஒரு தெளிந்த நதி போல செல்கின்ற கதையும் அதில் இயல்பாகவே கலந்த்விடப்பட்ட நகைச்சுவை நிகழ்வுகளும் ஒரு இனிய அனுபவத்தை படம் பார்ப்பவருக்கு கொடுக்கின்றன. இயல்பான, தெளிவான காதலர்களாக திரிஷாவும், கணேஷும் காட்டப்படுகிறார்கள். திரைப்படத்தில் போகிற போக்கில் ஒரு சர்தார்ஜி, அவர்களை கேலி செய்து கொண்டிருந்த தமிழர்களிடம் ஒரு ரூபாயை கொடுத்து அதை காண்கின்ற பிச்சை எடுக்கும் சர்தார்ஜியிடம் கொடுக்க சொல்வதாகவும், இன்றுவரை அந்த ஒரு ரூபாய் தமிழனிடமே உள்ளதாயும் சொல்லும் காட்சி “தெருவெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு வெள்ளை வேட்டி” என்று எம்மவர்களை பற்றி எங்கோ படித்ததை நினைவூட்டியது. தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை என்று சொல்லிக்கொண்டேயிருக்காமல் இப்படியான படங்களை அரங்கிலே சென்று பார்ப்பது சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

2

ஆனந்த விகடனின் தற்போதைய தரம் பற்றிய ஒரு பதிவை கடந்த வாரம் வாசித்திருந்தேன். இதே கருத்தை நானும் உணர்ந்திருக்கிறேன். புதிய அளவில் ஆனந்த விகடன் வெளியானபோது மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்படலாம் என்று நம்பியிருந்தேன். ஆனால் உள்ளடக்கம் பெருமளவான வண்ணப்படங்களாலேயே நிறைக்கப்பட்டிருக்கின்றது. அகமும் புறமும் என்று வண்ணதாசன் எழுதிய பிறகு தீதும் நன்றும் என்று நாஞ்சில் நாடன் எழுதிவருகிறார். பத்தி எழுத்துவகையை சேர்ந்த கட்டுரைகள் இவை. இதற்கு முன்னர் இதே விதமாக ஆனந்த விகடனில் எழுதிய சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன் உடன் ஒப்பிடும்போது இவர்களின் எழுத்து இறுக்கம் குறைந்ததாகவே தெரிகின்றது. நாஞ்சில்நாடனின் நஞ்சென்றும் அமுதென்றும் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை தொகுதி. எந்த விதமான ஆவேசமும் இல்லாமல் ஒரு மெல்லிய த்வனியில் தனது கருத்துக்களை மிக நெருக்கமான ஒருவருடன் கதைப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக சொல்லியிருப்பார். அதேபோல வண்ணதாசனின் சிறுகதைகளும் என்னை கவர்ந்திருக்கின்றன. வண்ணதாசனின் படைப்புகள் அவற்றில் வருகின்ற ரசனை பூர்வமான சொல்லாடல்களுக்கு பேர்பெற்றவை. அதிலும், அவரது கட்டுரைகள். அகமும் புறமும் எழுத தொடங்கு முன்பாக விகடனில் இவரது பேட்டி ஒன்று வெளியாகி அடுத்த இதழிலேயே அவர் எழுதிய கடிதம் ஒன்று பிரசுரமாகியிருந்தது. ஆனால் அவர் எழுதிய அகமும் புறமும் அவரது முன்னைய படைப்புகளுடன் ஒப்பிடும்போது என்னை பாதித்த விதம் சற்று குறைவாகவே இருந்தது. வாரா வாரம் ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்ற அழுத்தம் சிலவேளை இவர்களது படைபாற்றலை பாதித்திருக்கலாம்.

அதுபோல கடந்த சில மாதங்களாக மாறி மாறி தி.மு.க மற்றும் அ.தி.மு.க பற்றி மாறி மாறி எக்ஸ்ரே ரிப்போர்ட் என்கிற பெயரில் ரிப்போர்ட்கள் வந்தன. அதுவும் அழகிரி ராஜ்யம் பற்றியும், இரண்டு கட்சிகளினதும் முக்கியஸ்தவர்களதும் விபரங்களுடனும் வந்த கட்டுரைகள் முக்கியமானவை. ஆனால் இதேநேரம் விகடன் கிராமம், கிராமமாக விஜயகாந்துடன் டூர் அடிக்க தொடங்கினான். இது கிட்ட தட்ட இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றுத் தீர்வாக மக்கள் விஜயகாந்தை பார்ப்பது போன்ற ஒரு விம்பம் தொடர்ந்து காண்பிக்கப்படுகின்றது. ஒரு தனிக்கட்சியாக விஜயகாந்த் பிரமிக்க தக்க அளவு வளர்ந்திருந்தாலும் அவரிடம் இருக்கும் மாற்று தீர்வு என்ன? என்ற அடிப்படை கேள்விக்கு இன்றுவரை எவருமே பதிலளிக்கவில்லை. கறுப்பு எம். ஜி. ஆர் என்று தன்னை தானே அறிமுகப்படுத்திக்கொண்ட இவர், திராவிடக் கட்சிகள் வளர்த்துவிட்ட இலவச பொருட்களை தருவதாக கூறி வாக்குகளை அள்ளும் கலாசாரத்தை இன்னும் வளார்த்துவிடுவாரோ என்றே எண்ண தோன்றுகின்றது. விகடன் மட்டுமில்லாமல் குமுதம் உட்பட பல பத்திரிகைகள் விஜயகாந்தை பெரும் சக்தியாக காட்டிக்கொண்டிருக்கின்றன. இயக்குனர் மகேந்திரன் வன்னி சென்று திரும்பியபின்னர் குமுதத்துக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் விஜயகாந்தை வன்னியில் சின்ன பிரபாகரன் / சின்ன தலைவர் என்று அழைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பின்னர் தான் அப்படி ச்ரு செய்தியை கூறவேயில்லை என்று மகேந்திரன் மறுப்பு தெரிவிக்க, குமுதமும் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. சன் குழுமம் என்ற பெயரில் பெரும்பான்மை மீடியாக்களை எல்லாம் தி. மு. க வளைத்து போட்டபின்னர், அரசியல் ரீதியான ஒரு பின்புலம் வேண்டும் என்பதாலேயே ஆனந்தவிகடன் இப்படி விஜயகாந்த் புகழ் பாடலாம் என்று அண்மையில் எனக்கு அறிமுகமான நண்பர் ரமணன் சொன்னது சரிபோலதான் தோன்றுகின்றது. விஜய்காந்த் பற்றிய விமர்சனங்களையும் ஆனந்த விகடன் சரியான முறையில் முன்வைக்காத இந்நாட்களில் அதே ஆனந்த விகடனில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் ஜெயகாந்தன் திமுக, அதிமுக இரண்டுக்கும் மாற்றாக விஜயகாந்த் வந்துள்ளாரே என்று கேட்டபோது “கழுதை என்று ஒன்று இருக்கிறது, குதிரை என்று ஒன்று இருக்கிறது இப்போது கோவேறு கழுதை என்று ஒன்று வந்துள்ளது” என்று சொன்னதுதான் ஞாபகம் வருகின்றது.

3

நவீன இலக்கியம் மீதான எனது ஈடுபாட்டில் “காலம்” இதழாசிரியர் செல்வம் அவர்களின் பங்கு முக்கியமானது. யானையுடன் மோதாதே எலியே என்ற பொருள்பட கருணாநிதி எழுதிய ஒரு கவிதைக்கு (கருணாநிதி ஒரு பிரசார எழுத்தாளரே தவிர அவர் இலக்கியவாதி அல்ல என்று இளையபாரதியின் புத்தக வெளியீட்டை முன்வைத்து ஜெயமோகன் சொன்னதற்காக இக்கவிதை எழுதப்பட்டதாய் நினைவு) எதிர்வினையாக ஜெயமோகனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்கு விரைவிலேயே பதிலும் வந்தது. அவர் மூலமாகவே செல்வத்தின் அறிமுகமும் கிடைத்தது. அதற்கு முன்பொருமுறை ஒரு கண்காட்சியில் செல்வத்திடம் இருந்து கணையாழியின் தொகுப்பு ஒன்றை பெற்றிருக்கிறேன். சென்ற வாரம் அவரை எதேச்சையாக சந்தித்தபோது காலம் சஞ்சிகையின் 31வது இதழையும் கனவாகிப்போன கச்சதீவு என்ற நூலையும் பெற்றுக்கொண்டேன். கனடாவின் குறுகிய வணிக சாத்தியங்களுக்கு மத்தியில் காலம் சிறப்பாகவே வந்துகொண்டுள்ளது. இம்முறை காலம் இதழில் சினேகிதனை தொலைத்தவன் என்ற பொ. கருணாமூர்த்தியின் கதையும் குட்டான் என்ற டானியல் ஜீவாவின் கதையும் எனக்கு பிடித்துள்ளன. இதழை முற்றாக வாசித்து முடிக்காத நிலையில் மற்ற ஆக்கங்கள் பற்றி விமர்சனம் செய்ய முடியவில்லை. ஆனால் ஜீவாவின் கதையில் கனடாவில் பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்கள் அனுபவித்திருக்க கூடிய ஒரே வீட்டில் பலர் சேர்ந்து குடியிருப்பதும் அதனால் வரும் சிக்கல்களும் காட்டப்படுகின்றன. கதையில் சாந்தா என்ற பாத்திரம் தன் வீட்டில் குடியிருக்கும் குட்டானை பற்றி தன் மாமியார் எல்லை மீறி பேசி வீட்டைவிட்டு வெளியேற சொல்லும்போது அதற்கு தன் எதிர்ப்பை காட்டுகின்றது. இதனை எதிர்கொள்ளாத மாமியார் குட்டானை நீ வச்சிருக்கிறாயா என்று கேட்பதுடன் கதை நிறைவேறுகிறது, எம் மனம் அரட்டப்படுகின்றது. பெண்களின் முதல் எதிரிகள் பெண்கள்தான் என்று அனேகமாய் எல்லா ஆண்களும் சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம்.

இதே போல கருணாமூர்த்தியின் கதையில் தன் பால்ய சினேகிதங்களை தேடி அலையும் ஒருவனின் அனுபவம் சொல்லப்படுகின்றது. இலங்கை செல்லும் கதை நாயகன் இறுதியில் பாலசந்திரன் என்ற தன் பால்யசினேகிதனை காண்கிறான். தான் எழுதிய புத்தகத்தை பரிசளித்துவிட்டு பேசிக்கொண்டிருக்கின்றான். அந்தரங்கமான பழைய நினைவுகள் எல்லாம் கிளறப்படுகின்றன. தான் திரும்பி செல்ல முன்னர் மறுமுறை வருவதாக வாக்களித்துவிட்டு விடைபெறும்போது நண்பன் (பாலசந்திரன்) இவர் கொடுத்த புத்தகத்தின் பின்புறத்தை பார்த்தவாறு (அதில் அ. முத்துலிங்கம் எழுதிய முன்னுரை இருக்கின்றது) “அ. முத்துலிங்கம் என்று எங்களோட யாரும் படிக்கேல்லையே…..நீ யார் மச்சான்…. உனக்கு என்ன பெயர்?” என்று கேட்கிறான். அத்துடன் கதை முடிகின்றது. ஒரு கதையை சரியான இடத்துடன் நிறுத்திவிடுவதில்தான் அதன் வெற்றி உள்ளது என்பார்கள். அதனை திறம்பட செய்துள்ளார் கருணாமூர்த்தி அவர்கள்.

4.


கடந்த சில நாட்களாக இணையத்தில் பெண்புலிகளின் இறந்த உடல்களை சிங்கள ராணுவத்தினர் புணர்ந்து அதை வீடியோவில் எடுத்ததாக வந்த வீடியா துண்டுகள் பெரும்பாலானவர்களின் மனதை பாதித்தன. ஈழப்போராட்டத்தில் எத்தனையோ பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர். இவற்றை பற்றி சரியான முறையில் வந்த பதிவுகள் குறைவென்பது எனது கருத்து. அண்மையில் டிசே தமிழன் எழுதிய ஒரு சிறுகதை சரியான முறையில் வாசகன் மனதிலும் இந்த பாதிப்பை கொண்டுசென்றிருக்கின்றது என்று நினைக்கிறேன். ஒரு கவிஞராக பரவலாக அறியப்பட்ட இவர் என்னை ஒரு கட்டுரையாளராக, ஒரு புனைவு எழுத்தாளராகதான் பெருமளவு கவர்ந்திருக்கிறார். இனி நீண்ட காலத்துக்கு, உங்களை பாத்தித்த சிறுகதை எது என்று கேட்டால் எந்தவித தயக்கமும் இல்லாமல் இந்த கதையை கூறலாம்

22 thoughts on “அபியும் நானும், ஆனந்த விகடன், விஜயகாந்த் மற்றும் கனேடிய இலக்கியங்கள்

Add yours

  1. நல்லதொரு பதிவு. மிலேச்சத்தனம் எது என்பதை மீண்டும் ஒரு தடவை இலங்கை அரசபடை காட்டி இருக்கிறது. எல்லாம் விடியும். காலம் விரையும். இன்னும் உலகம் கண்மூடி மௌனமாக இருப்பது கவலையே. வார்த்தைகள் வலிமை இழக்கின்றன.

    Like

  2. மிக அருமையான பதிவு. அபியும் நானும் திரைப்படம் உண்மையிலேயே ஒரு நல்ல திரைப்படம், அப்பா மகளுக்கான உறவை சொல்லும் மிக குறைந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

    Like

  3. //மிலேச்சத்தனம் எது என்பதை மீண்டும் ஒரு தடவை இலங்கை அரசபடை காட்டி இருக்கிறது//இதை தான் அவர்கள் இன்னும் பலமுறை செய்துள்ளார்களே. இதை பற்றி இன்னும் “புதிய ஜனநாயகவாதிகள் எதுவும் சொல்லவில்லை எனபதும் குறிப்பிடத்தக்கது

    Like

  4. வணக்கம் நானாக நான்//அப்பா மகளுக்கான உறவை சொல்லும் மிக குறைந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.//உண்மைதான். தமிழ் சினிமாவில் உறவுகள் சரியாக சித்திகரிக்கப்படூவதிலை. ஒன்று கேலிக்கூத்தாக்கியிருப்பார்கள் அல்லது மிகை உணர்ச்சீயாக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் காணப்படும் யதார்த்தம் எமக்கு புதிது

    Like

  5. வணக்கம் அருண்மொழிவர்மன்அபியும் நானும் பார்க்க துடிக்கும் படம், பூ படத்தை இன்று எடுத்து வந்தேன்.ஆனந்த விகடனின் 15 வருஷத்துக்கு முந்திய இதழ்களை இப்போதும் வைத்திருக்கிறேன், நீண்ட நாள் வாசகன் என்ற வகையில் விகடனின் தரம் குங்குமம், கல்கண்டு வகையறாவுக்கு கீழ் இறங்கியது என்றே சொல்வேன். வண்ணதாசனின் தொடர் என்னையும் பெரிதாக ஈர்க்கவில்லை, ராமகிருஷ்ணன் தான் முறையாக பயன்படுத்தினார். நாஞ்சில் நாடனின் தொடர் ஆரம்பத்தில் இருந்த சுவாரஸ்யம் கெட்டு விட்டது.

    Like

  6. அண்ணன் ‘அபியும் நானும்’ நானும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம் இன்னும் பார்க்கவில்லை, விகடன் பற்றிய அபிப்பிராயங்கள் கூறுகிற அளவுக்க விகடன் தொடர்ச்சியாய் எனக்கு கிடைப்பதில்லை ஆனால் பழைய விகடன் போல் இல்லை என்பது எனக்கும் தெரிகிறது தோற்றமும் சரி தரமும் சரி…டிசேயின் எந்தப்பதிவானாலும் படிக்காமல் விடுவதில்லை ஆனால் பின்னூட்டங்கள் எல்லா பதிவுகளுக்கும் போடுவதில்லை, ஹேமாக்காவை நானும் படித்தேன் இப்படியாக எழுதுகிற திறமை சிலருக்கே வாய்க்கிறது… நாடற்றவனின் குறிப்புகள் கூட இன்னமும் படிக்கவில்லை சொல்லி அனுப்பியிருக்கிறேன்…

    Like

  7. வணக்கம் பிரபா//ஆனந்த விகடனின் 15 வருஷத்துக்கு முந்திய இதழ்களை இப்போதும் வைத்திருக்கிறேன், நீண்ட நாள் வாசகன் என்ற வகையில் விகடனின் தரம் குங்குமம், கல்கண்டு வகையறாவுக்கு கீழ் இறங்கியது என்றே சொல்வேன்//சரியாக சொன்னீர்கள். ஒரு காலத்தில் ஏன், 90 களின் ஆரம்பப் பகுதி வரை இருந்த தரத்தை கல்கண்டு முற்றாக இழந்தேவிட்டது. எனது வீட்டில் என் தந்தை வாசித்த 70 களில் வெளிவந்த கல்கண்டு தீபாவளி மலர்கள் சிலவற்றை வைத்திருந்தார். எல்லா வயதினரும் பார்ர்கும் விதத்தில் வந்த இதழ் அது.பின்னர் அதில் வெளியான தொடர்கள் (இரத்த பந்து, இருள் வரும் நேரம், கொல்ல துடிக்குத் மனசு, தமிழ்வாணன், சங்கர்லால் கதைகள்) போன்றவையும் ஆரம்ப காலத்தில் லேனா எழுதிய ஒரு பக்க கட்டுரைகளும் அற்புதமானவை.இப்போது விகடனும் அதே நிலையில் போகின்றது. தொடர்ச்சியான உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்

    Like

  8. தமிழன் கறுப்பி//டிசேயின் எந்தப்பதிவானாலும் படிக்காமல் விடுவதில்லை ஆனால் பின்னூட்டங்கள் எல்லா பதிவுகளுக்கும் போடுவதில்லை, //என்னை பொறுத்தவரை, முக்கியமான ஈழத்து எழுத்தாளார்களுல் ஒருவர் டிசே. அவரது நாடற்றவனின் குறிப்புகளை பற்றி தேவகாந்தன் செய்த விமர்சன கட்டுரை வாசித்து பாருங்கள்.

    Like

  9. நான் இன்னும் அபியும் நானும் பார்க்கவில்லை.. ஆனால் நான் நினைத்து போலவே இருக்கிறது உங்கள் பதிவும்.. இனி பார்த்துவிட்டு ஒப்பிடுகிறேன்.. :)ஆ.வி பற்றிய உங்கள் பார்வையே,எனதும், நண்பர்கள் பலபேரின் பார்வையாகவும் இருக்கிறது.. ஒரு சில விஷயங்களையும், அந்தப் பழைய புத்தகத்தையும் விட மிச்சம் எல்லாமே வேஸ்ட்.இப்போதெலாம் செலவு செய்து வாங்குவதில்லை.. ஓசியில் கிடைத்தால் வாசிக்கிறேன்..இலங்கை பற்றிய கட்டுரைகள் வந்தால் கிழித்து விட்டுத் தான் இங்கே விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.. உலகில் எங்கு போர் நடந்தாலும் முதல் இலக்குகளில் ஒன்று பெண்களும்,கற்பும் தான்..:(எங்கள் பெண்களின் பாதிப்புக்கள் பல தசாப்தங்களாகத் தொடர்கின்றன..நல்ல பதிவு.. தங்கு தடையற்ற உங்கள் நடை தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகிறது..

    Like

  10. நன்றிகள் லோஷன்அபியும் நானும் கட்டாயமாக பாருங்கள். நல்ல ஒரு அனுபவமாக அமையும். //ஒரு சில விஷயங்களையும், அந்தப் பழைய புத்தகத்தையும் விட மிச்சம் எல்லாமே வேஸ்ட்//அந்த பழைய புத்தகங்களை கூட அனேகமாக கிட்டடியில் நிற்பாட்டிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் இப்போதே இரண்டையும் இணைத்து ஒரே புத்தகமாக வெளியிட தொடங்கிவிட்டார்கள். மெல்ல மெல்ல அதையும் அப்படியே நிறுத்திவிடுவார்கள்.மிக விரைவில் பழைய கல்கண்டு, முத்தாரம், கல்கி ரேஞ்சிற்கு விகடனும் போய்விடுமோ என்று கவலையாக உள்ளது

    Like

Leave a Reply to அருண்மொழிவர்மன் Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: