சில பாடல்கள், சில காதல்கள், சில நிகழ்வுகள்

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு” என்ற ஒரு அழகான பாடல் என்னவளே என்ற திரைப்ப்டத்தில் இடம் பெற்றிருந்தது. எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் வைரமுத்து எழுதிய பாடல். பாடியவர் உன்னிகிருஷ்ணன். சற்று நினைத்துப் பார்த்தால் எல்லா நினைவுகளுக்கும், மறக்க முடியாத நிகழ்வுகளுக்கும் அவற்றுடன் தொடர்புடையதாக ஏதோ ஒரு பாடல் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றது. நாம் கேட்கும் பாடல்களும், சமயங்களில் வாசிக்கும் புத்தகங்களும் திரைப்படங்களும் எம் வாழ்வின் பிண்ணனி இசையை தாமே அமைத்துச் செல்கின்றன. கடந்து போன நினைவுகளை எப்போதாவது மீட்டிப் பார்க்கும்போது நினவுகளும், பாடல்களும் ஒரு கோர்வையாக, சரம் சரமாக ஒன்றுடன் ஒன்று தொடுத்து வருவதை நாம் காணமுடியும்.

அப்போது இடம்பெயர்ந்து கொடிகாமத்தில் தங்கி இருந்தோம். நாளை பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாத வாழ்வு. பாடசாலைகள் இடம்பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்த பெரும்பாலான மக்கள் வடமராட்சியிலும், தென்மராட்சியிலும் இருந்த வீடுகளில் அடைக்கலம் அடைந்திருந்தனர். அப்போது நான் இருந்த வீட்டில்தான் பதிவர் புல்லட்டும் தங்கி இருந்தார். அதே போல கதியால் என்ற பெயரில் பதிவெழுதும் என் விசாகன் மிக நீண்டகாலமாக என் ஆக நெருங்கிய நண்பர் ஆதலால் அவரும் ஒவ்வொரு நாளும் வீட்ட வந்து விடுவார். 90முதலே யாழ் குடா நாட்டில் மின்சாரம் இருக்கவில்லை. பாடசாலைகள் வேறு இருக்கவில்லை. பொழுது போவதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. பாடல்கள் மட்டுமே எப்போதும் துணை செய்தன. இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பின் காலை நிகழ்ச்சிகள் எப்போதும் எம் காலை நேர நண்பன். நல்ல வேளை, இலங்கை வானொலி ஒலிபரப்புகளைக் கேட்கக் கூடாது, அப்படி கேட்பவன் துரோகி என்று அப்போது யாரும் புறப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் யாழ் குடாநாட்டு மக்கள் பலாலியில் இருந்து ஒலிபரப்பாகும் எஃப் எம் ஒலிபரப்பு நிகழ்வுகளைக் கூட கேட்டு ரசிக்கவே செய்தனர்.

அந்த நேரங்களில் எஸ் பி. பாலசுப்ரமணியமும் ஜானகியும் இணைந்து சற்று விரகத்துடன் பாடும் பாடல்களுக்கு நானும் விசாகனும் தயா என்ற நண்பனும் நிறையவே ரசிகர்களாகி இருந்தோம். புள்ளகுட்டிக்காரன் படத்தில் வரும் ஒரு பாடலும், திரு. மூர்த்தி என்ற திரைப்படத்தில் வரும் செங்குருவி, செங்குருவி என்ற பாடலும் இதில் அடக்கம். இதில் செங்குருவி பாடல் வெளிவந்து சில காலமே ஆகி இருந்தபடியால் அந்தப் பாடல் மீது ஓரளவு வெறியே இருந்தது.  அப்போது காலையிலேயே விசாகன் எனது வீட்ட வந்துவிடுவான்.  எனது பெரியம்மா நீதிமன்றத்தில் வேலை செய்துவந்தார்.  எனவே அவரை பேருந்து தரிப்பிடத்தில் இறக்கிவிடுவதற்கான நான் சைக்கிளில் ஏற்றிச்செல்லும்போது விசாகனும் என்னுடன் வருவான்.  ஒருமுறை அவரை கொடிகாமச் சந்தியில் இருந்த பேருந்து தரிப்பிடத்தில் இறக்கி விட்டு வரும்போது அங்கிருந்த சாப்பாட்டுக் கடையொன்றில் ஒலித்த இலங்கை வானொலியின் அறிவிப்பு அடுத்ததாக திருமூர்த்தி திரைப்படத்தில் இருந்து எஸ்.பி. பாலசுப்ரமணியம்,  எஸ், ஜானகி பாடிய பாடல் என்ற அறிவிப்பைக் கேட்டோம்.  அவர்கள் குறிப்பிடும் பாடல் செங்குருவி செங்குருவி பாடல்தான் என்று உணர்ந்து  பாடலைக் கேட்டே ஆகவேண்டும் என்று இருவருக்கும் ஒரே நேரத்தில் யோசித்தோம். கடைக்கு வெளியில், தெருவோரமாக இருந்து பாடல் கேட்டால் ஒழுங்காக இராது. வாகன இரைச்சல் வேறு. சைக்கிளை வெளியில் நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே நுழைந்தோம். அது ஒரு அப்பக் கடை. ஆளுக்கு இரண்டு அப்பமும் தேனீரும் பாடலைக் கேட்டபடியே, பாடலைக் கேட்பதற்காகவே சாப்பிட்டோம். அவ்வளவு சுவையான அப்பம் அதன் பிறகு சாப்பிட்டதுமில்லை, அந்த பாடலை அத்தனை நெருக்கமாக பின்னொருபோதும் உணர்ந்ததும் இல்லை.

திரைப்படங்களில் ஏதாவது முக்கிய சம்பவங்கள் நடைபெறும்போதெல்லாம் ஏதாவது ஒரு பாடலைத் திரும்ப திரும்ப காட்டுவார்கள். இதெல்லாம் சினிமாத்தனம் என்றுதான் நாம் பெரும்பாலும் நினைத்திருப்போம். ஆனால் சினிமாவைவிட நம்ப முடியாத நிகழ்வுகள் வாழ்க்கையில்தான் அதிகம் இடம்பெறுகின்றன. அச்சமில்லை அச்சமில்லை என்ற இந்திரா திரைப்படப் பாடலை நான் கேட்ட பெரும்பாலான சந்தர்ப்பங்களும் அது போன்ற அதிசயம்தான். வாழ்வில் நெருக்கடி மிகுந்து, அடுத்தது என்னவென்று தெரியாத சந்தர்ப்பங்களில் எல்லாம் ஏதோ ஒரு மூலையில் இருந்து இந்தப் பாடலை காலம் எனக்காக ஒலிபரப்பும். 95ல் யாழ்ப்பாணத்தை விட்டு, பெற்றோர்கள், தம்பி, தங்கை எல்லாம் கொழும்பு சென்றிருக்க, நானும் ஒரு தம்பியும் (எனக்கு 16 வயது அவனுக்கு 13 வயது) 16 மைல் தூரத்தை இரண்டு நாட்களாக நடந்து கொடிகாமம் வந்து சேர்ந்த அன்று இந்தப் பாடலைக் கேட்டேன். பின்னர் கொடிகாமத்தில் இருந்து ராணுவக் கட்டுபாட்டு யாழ்ப்பாணத்துக்குச் செல்கையில் இதே பாடலைக் கேட்டேன். இது போல தனியாக இந்தியா சென்று தனியறையில் படுத்து இருந்த ஒரு இரவில், கனடா வந்தபின் எல்லா நம்பிக்கைகளும் உடைந்து போய் இருந்த ஒரு மறக்க முடியாத இரவில் என்று எத்தனையோ பொழுதுகளில் காலம் இந்தப் பாடலை எனக்காக பின்னணி இசையாக்கி உள்ளது.

புறா விடு தூது, கிளி விடு தூது, புழுதி விடு தூது என்கிற விடு தூதுகளைப் போல நான் தூது சொல்ல அனுப்பியவையும் பாடல்களே. அப்போது கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன். தோழி ஒருத்தியிடம் மெல்லக் காதலைச் சொல்லவேண்டும். அவளோ நீ யாரைக் காதலிக்கிறாய், யாரைக் காதலிக்கிறாய் என்று அடிக்கடி நச்சரித்துக் கொண்டிருப்பவள். உன்னைத்தான் என்று சொல்ல ஆசை, அதைக் கேட்கத்தான் அவளும் ஆசைப்படுகிறாள் என்று நிச்சயம் தெரியும். ஆனாலும் சொல்லத் தயக்கம். அப்போதும் பாடல் தான் துணை வந்தது. உல்லாசம் திரைப்படத்தில் “வீசும் காற்றுக்கு” என்று ஒரு பாடல் வரும். படத்தில் நாயகி மகேஸ்வரி நாயகன் விக்ரமிடம் நீ யாரைக் காதலிக்கிறாய் என்றூ கேட்க, உன்னைதான் என்று சொல்ல முடியாமல் விக்ரம் தவிப்பார். இதையே நானும் பயன்படுத்திக் கொண்டேன். இந்த சமயத்தில்தான் (இந்த நிகழ்வு நடைபெறும்போதுதான்) மின்சாரக் கண்ணா திரைப்படப் பாடல்களும் வெளியாகி ”உன் பேர் சொல்ல ஆசைதான்” பாடல் என் விருப்பப் பாடலாக வீட்டில் தொடர்ந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இரண்டையும் ஒன்றாக பயன்படுத்தினேன். ஒரு பாடல் கசட்டில் (இசைத்தட்டுகள் எல்லாம் அப்போது அவ்வளவு பிரபலமாகவில்லை) இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்து பதிந்து கசட்டுக்கு “யாரோ அவளுக்கு என்று பெயரும் எழுதி அவளிடம் கொடுத்தேன். நான் காதலிக்கும் பெண் யாரென்று இந்தப் பாடல்களில் சொல்லி இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவளிடம் வாக்மேனைக் கொடுத்தேன். வீசும் காற்றுக்கு பாடல் ஒலிக்கின்றது. யாரவள் யாரவள் என்று பின்னணியில் ஒலித்த குரல்கள் மெல்ல அடர்த்தியாகிவர, “மேகம் போலே என் வானில் வந்தவளே, யாரோ அவளுக்கு நீதான் என்னவளே” என்று பாடல் ஒலிபரப்பாகும். அடுத்து ஒலித்த உன் பேர் சொல்ல ஆசைதான் பாடலும் அதை உறுதி செய்ய, எதிர்பார்த்த செய்தி, எதிர்பாராத சந்தர்ப்பத்தில் கிடைத்த பரவசம் அவள் முகத்தில்.

-2-

ஞாபகங்கள் இனிமையானவை. சமயங்களில் அவை கொடுமையானவையும் கூட. மறந்தே தீரவேண்டும் என்று நினைக்கும் சில நினைவுகளை புதைக்கவே முடியாமல் போவது போல துன்பம் வேறில்லை. “மறக்கத்தான் நினைக்கிறேன்” என்று ஒரு வரியில் இதைக் கவித்துவமாகத் தன் கிறுக்கல்கள் புத்தகத்தில் சொல்லி இருப்பார் பார்த்திபன். ஆட்டோகிராப் சினேகா போல ஒருத்தி. புலம்பெயர் வாழ்வின் என் முதல் கட்டத்தில் எல்லாக் குழப்பங்களையும் தீர்த்தவள். அலைபாயும் மனத்துடன் நான் தடுமாறும் போதெல்லாம் என்னை நிலையாக்கினவள். என் நண்பன், என்பதைத் தாண்டி, எனக்கு மட்டுமே நண்பன் என்கிற அவள் எதிர்பார்ப்பு சமயங்களில் எரிச்சலூட்டினாலும், ஒரு போதும் அவளை வெறுக்க முடிந்ததில்லை. கோகுலத்தில் சீதை திரைப்படத்தில் வரும் ”எந்தன் குரல் கேட்டு” பாடல் எப்போதும் அவள் இருப்பையே நினைவூட்டும். ஒரு கொடிய பொழுதில் எனக்கும் அவளுக்குமான உறவு முறிக்கப்பட்டபோதும் நினைவுகளை நான் மறக்க நினைத்தாலும், மறக்கத்தான் (மறக்கத் தான்) நினைக்கிறேன். மதுவுடன் கூடிய சில மாலைப் பொழுதுகளில் நான் அதிகம் நேரம் செலவளிக்க விரும்புவது அனேகமாக இந்தப் பாடலுடன்தான். என் ஆரம்பகால கனேடிய நட்புகளில் புத்தகம் வாசிப்பவள் இவள் ஒருத்திதான். அப்போது பாலகுமாரனின் தீவிர வாசகர்களாகி இருந்தோம். பயணிகள் கவனிக்கவும், கரையோர முதலைகள், சினேகமுள்ள சிங்கம் போன்ற பாலகுமாரனின் பல புத்தகங்களை ஒன்றாக இருந்தே வாசித்தும் இருக்கிறோம். சண்டையிட்டு இருக்கிறோம். எல்லாரும் படித்த பாலகுமாரனின் இரும்பு குதிரைகள்(இதில் “க்” வராது. ஏனென்று நாவலின் கடைசி அத்தியாயத்தில் அழகாகச் சொல்லியிருப்பார் பாலா. இப்படியெல்லாம் பாலா யோசிக்க மாட்டார், இது சுப்ரமண்ய ராஜூவின் யோசனையாகத்தான் இருக்கும் என்பாள் அவள். எனக்கு பாலாவை அதிகம் பிடிக்கும், அடிக்கடி அவருடன் பேசுவேன் என்பதாலேயே அவர் பற்றி வம்பிழுப்பாள் அவள்.) இரும்பு குதிரைகள் அவள் ஏன் வாசிக்கவில்லை என்றால், அதில் வரும் நாயகி பெயர் தாரணி. இவளோ புத்தகத்தில் தாரணி என்று வரும் எல்லா இடங்களிலும் பேனா மையால் அழித்து வைத்தாள். அந்தப் பெயரை அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காதாம். தன்னைத் தவிர எவரிடமும் நான் நெருக்கமாகி விடக்கூடாது என்ற முனைப்பு அவளுக்கு. இதற்கும் தாரணிக்கும் என்ன சம்மதம் என்று கேட்கிறீர்களா. அதைத்தான் ”காதல் பழசாவதும் இல்லை, தேவதைகளுக்கு வயசாவதுமில்லை என்று பின்னொரு நாளில் பதிவிட்டு வைத்தேன். கொடிகாமத்திலும், கொக்குவிலிலும் நண்பன் விசாகன் அடிக்கடி என்னைப் பார்த்து “கொஞ்ச நாள் பொறு தலைவா…” என்று பாடுவான். அவன் ஏனோ பாடியதை நான் எனக்காகப் பாடியதாக எண்ணிக் கொண்டேன். விசாகன் பாடும் “கொஞ்ச நாள் பொறு தலைவா…:” அவளே ஒரு முறை பாடிய “கஸ்தூரி மான் குட்டியாம் பாடலும்” எப்போதும் என் மனதுக்கு நெருக்கமான பாடல்களே. எப்போதும் என்னால் மறக்கமுடியாத, எவருடனும் பேசவே விரும்பாத ஒரு நினைவாகிப் போனாள் அவள். இரட்டைப் பின்னல், எதிலும் காட்டும் வேகம், சடாரென்ற (நடிகர் ரஜினியை ஒத்த) உடல் அசைவுகள், குறும்பு, அடிக்கடி அணியும் கறுப்பு – சிவப்பு உடைகள்…….. ம்ம்ம்

”மீண்டும், சந்திக்கும் வாய்ப்பு வந்தால் தள்ளி நின்றழுது பார்ப்போம்” – வைரமுத்து

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑