”மரபுரிமையக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான் – பா.அகிலன்”

akilan-2யாழ்ப்பாணம் அராலியைப் பிறப்பிடமாகக் கொண்ட பாக்கியநாதன் அகிலன் நல்லூரை நெடுங்காலமாக வாழிடமாகக் கொண்டிருக்கிறார். தனது ஆரம்பப் பாடசாலைக் கல்வியை வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலை, நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் மிகக் குறுகிய காலம் பெற்ற பின்னர் யாழ்ப்பாணம் சென் ஜோன் பொஸ்கோவிலிருந்து பெற்றுக் கொண்டார்.  பின்னர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றில் (நுண்கலை) பட்டமும் குஜராத்திலுள்ள பரோடா எம்.எஸ் பல்கலைக்கழகத்தில் கலை விமர்சனத்தில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றார்.  தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்று விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.  காண்பியக்கலைகள், நாடக அரங்கியல் மற்றும் மரபுரிமை ஆகிய துறைகள் சார்ந்து எழுதிவரும் அவர் தற்போது யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு இயங்கி வருகின்ற கலை, கட்டடக்கலை, வடிவமைப்புக்கான இலங்கை ஆவணக் காப்பகத்தில் ஷாமினி பெரேரா, சனாதனன் ஆகியவர்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

தொண்ணூறுகளில் கவிதைகள் எழுதத் தொடங்கிய அகிலன் மிகக் குறைவான கவிதைகளையே எழுதியவராக இருந்தாலும் தனது கவிதைகளூடான மிகவும் பரவலாக அறியப்பட்டவர்.  அவரது முதலாவது தொகுப்பான பதுங்குகுழி நாட்கள் அன்றைய யாழ்ப்பாணம் பற்றிய மிகச்சிறந்த இலக்கியப் பதிவுகளில் ஒன்றாக மதிப்பிடப்படுகின்றது.  நீண்டகால இடைவெளியின் பின்னர் 2010இல் வெளியான “சரமகவிகள்” போரின் அவலங்களை மீண்டும் பாடிய முக்கியமான ஒரு தொகுப்பு.  ‘இலங்கைச் சமூகத்தையும் பண்பாட்டையும் வாசித்தல்: தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள்’ என்கிற 03 பாகங்களைக் கொண்ட தொகுப்புநூலின் இரண்டாவது, மூன்றாவது தொகுதிகளிற்கும் ‘வெ.சா வாதங்களும் விவாதங்களும்’ என்கிற நூலுக்கும் இணைத் தொகுப்பாசிரியராக இருந்துள்ளார்.  Art Lab என்கிற கலை மற்றும் பேறு தொடர்பாக வருகின்ற வெளியீடுகளின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் அகிலன் இருக்கின்றார்.

மரபுரிமைகள் பற்றியும் ஆவணப்படுத்தல் பற்றியும் அக்கறையுடன் செயலாற்றிவரும் அகிலன் மக்கள் மத்தியில் மரபுரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் யாழ்ப்பாணத்தில் இருந்த வெளிவருகின்ற உதயன் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் ‘காலத்தின் விளிம்பு’ என்கிற பெயரில் வெளியாகி இருக்கின்றன.  ஆவணப்படுத்தல், மரபுரிமைகள், பண்பாடு சார்ந்து அக்கறையுள்ளவர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டியதொரு தொகுப்பாக ‘காலத்தின் விளிம்பு’ முதன்மை பெறுகின்றது.  தற்போது இதே அக்கறையுடன் கூடிய தொடர் பத்தி ஒன்றினை அகிலன் தினக்குரல் பத்திரிகையிலும் எழுதிவருகின்றார்.

யோர்க் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது தமிழியல் மாநாட்டிற்காக கனடா வந்திருந்த அகிலன் அவர்களை தாய்வீடு பத்திரிகை சார்பாக சந்தித்தபோது அவரது பல்வேறு பரிமாணங்களை அறிய விரும்பினேன்.  ஆயினும் காலத்தின் தேவைகருகியும், முக்கியத்துவம் கருதியும் இந்நேர்காணல் மரபுரிமைகளைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்தல் ஆகிய தளங்களையே மையமாகக் கொண்டுள்ளது.

  1. உங்களது பதுங்கு குழி நாட்கள் கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் பத்தாண்டுகாலப் பகுதியில் எழுதப்பட்ட முப்பது கவிதைகள் என்பதாகக் குறிப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இப்போது ஒரு தொகுப்பாக அதனைப் பார்க்கின்றபோது அந்தக் கவிதைகளினூடாக அந்தக் காலப்பகுதியிலான மக்களின் வாழ்வியல், போர், அது மக்களைப் பாதித்த விதம், போரை எதிர்கொள்வதற்கான மானுடத்தின் எத்தனம் எல்லாம் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக உணரமுடிகின்றதுபதுங்குகுழி நாட்கள் வெளியாகிக் கிட்டத்தட்ட பத்தாண்டுகளின் பின்னர் சரமகவிகள் வெளியானபோது அது ஈழத்தில் இடம்பெற்ற இறுதிப்போரின் அழிவுகளைப் பாடுவதாக அமைந்திருந்ததுஅந்த வகையில் பார்க்கின்றப்போது உங்கள் இரண்டு தொகுதிகளும் இலக்கியமாகவும் முக்கியமாக இருக்கின்ற அதேவேளை அவை முக்கியமான வரலாற்றுப் பதிவுகளாகவும் அமைகின்றனபின்னாட்களில் உங்கள் ஈடுபாடும் செயற்பாடுகளும் கூட உங்களை ஆவணப்படுத்தல், பதிவுசெய்தல் என்பவற்றில் அக்கறை கொண்டவராகவே காட்டிக்கொள்கின்றனஇந்தத் தொகுப்புகளை வெளியிடும்போதும் இதனை உணர்ந்தே செய்தீர்களா?

 பதுங்குகுழி நாட்கள் வெளியானபோது அப்படி ஒரு எண்ணம் இருந்ததாகச் சொல்லமுடியாது.  அந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டது போல அது வாழ்வுக்கும் சாவு பற்றிய எண்ணத்துக்கும்; இடையில் உருவான மனப் போராட்டம் – சாவு பற்றிய பயம் என்பன மீதான எதிர்வினையாற்றற் செயற்பாடாகவே  இருந்தது என நினைக்கிறேன்.  அந்தக் காலப்பகுதியில் தனியனாகவும், போர்கள் உருவாக்கும் வாழக்கை நிலவரங்கள் மத்தியில் வாழ்ந்த பலரில் ஒருவனாகவும் பெற்றுக் கொண்ட நிலைகுலைவுகளின் கீழாக உடைந்து நொருங்கிய ஆசைகள், ஏக்கங்கள் உருவாகிய மனவலிகள், பிரிவுகள், விரக்தி என்பன யாவும் அக் கவிதைகளுள் நிரம்பியிருந்திருந்தது. வாழ்க்கை பற்றி இருந்த இளவயது நம்பிக்கைகள், கனவுகள், லட்சியங்கள் என்ற யாவும் குலைந்த அந்தக் காலப்பகுதியின் மேலாக குண்டுகளும் – ஏவுகணைகளும் வீழ்ந்து வெடித்தன. இவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள – வெளியேற சொற்களை பற்றிக் கொண்ட போது சித்தித்ததே பதுங்குகுழி நாட்கள் எனலாம்.

ஆனால் சரமகவிகள் உருவான  காலத்தினைப்; பொறுத்தவரை அவ்விதமான ஒரு உந்துதல் இருந்தது என்றே தோன்றுகிறது.  சாட்சியற்ற போரின் பல்வேறு சாட்சியங்களில் ஒன்றாகக் கவிதைகள் தொழிற்படவேண்டுமென்ற எதிர்பார்க்கை மனசுள் பலமாக இருந்த காலத்தில் சரமகவிகள் உருவானது.

  1. நான் அறிந்தவரை கிட்டத்தட்ட 2002 ஆம் ஆண்டிலிருந்து மரபுரிமைகளைப் பாதுகாப்பது பற்றி தொடர்ந்து பேசிவருகின்றீர்கள். அண்மைக்காலமாக செயற்பாட்டு அளவிலும் எழுத்துகளினூடாகவும் மரபுரிமையைப் பற்றிய விழிப்புணர்வை இன்னும் பரவலாகச் செய்துவருகின்றீர்கள்மரபுரிமை என்றால் என்னவென்று தாய்வீடு வாசகர்களுக்காக மீளவும் ஒருமுறை கூறமுடியுமா?

ஒரு சமூகக் குழுமத்தால் காலந்தோறும் உற்பத்தி செய்யப்பட்டதும், பெற்றுக் கொள்ளப்பட்டதும், மாற்றியமைக்கப்பட்டதுமான பௌதீகப் பொருட்கள்,வாழ்கை முறைகள், ஆற்றுகைகள் மற்றும் அவர்கள் வாழும் பிராந்தியத்திற்கே தனிச்சிறப்பாயுமுடைய தாவரங்கள், பறவைகள், நிலநீர் உருவங்கள் என்பவற்றின் தொகுதியையே பொதுப்படையாக மரபுரிமைகள் என்போம்.

இன்னும் சுட்டிப்பாகக் கூறுவதானால் ஒரு சமூகக்குழுமத்தின் தனியடையாளமாகக் திகழும் இயற்கை மற்றும் பண்பாட்டுப் பொருட்கள மற்றும் செயற்பாடுகளின் தொகுதியே மரபுரிமைகளாகும்.

  1. மரபுரிமைகள் பற்றியும் அவற்றைக் காத்தல் பற்றியதுமான செயற்பாடுகளில் நேரடியாக எப்படி பங்கேற்கத் தொடங்கினீர்கள்? உங்களது செயற்பாடுகள் மிக நீண்டகாலமாக தொடர்கின்றபோதும் மக்கள் மத்தியில் அது தொடர்பான சரியான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கின்றதா?

 உண்மையில் அரும்பொருட்கள் பற்றியும் பண்பாட்டுப் பெறுமானம் கொண்ட பொருட்கள் பற்றியதுமான எனது பார்வை கலைவரலாற்று மாணவனாக இருப்பதனால்  அதிகபட்சம் உருவான ஒன்றுதான்.  2002 ஆம் ஆண்டில் – இந்த விடயங்கள் தொடர்பாக நாம் கல்விப்புலம் சார்ந்து கதைத்துக் கொண்டிருந்த போதுதான் சமாதானத்தின் பெயரில் ஏ9 பாதை திறக்கப்பட்டிருந்தது.  அப்போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தென்னிலங்கையில் ஏற்கனவே தம்மை பெரியளவில் நிலை நிறுத்தியிருந்த அரும்பொருள் வியாபாரிகள் மிக வலுவான ஒரு வலைப்பின்னலின் ஊடாக யாழ்ப்பாணத்தின் மூலைமுடுக்கில் இருக்கின்ற அரும்பொருட்களையெல்லாம் பெருமளவில் அள்ளிச் செல்லத் தொடங்கியிருந்தார்கள்.  உண்மையில் எமக்கு என்ன செய்வதென்றோ எவ்விதம் எதிர்வினையாற்றுவது என்றோ தெரியவில்லை.  நாங்கள் உடனடியாக இலங்கை அரசின் காவற்துறை முதல் விடுதலைப்புலிகளின் காவற்துறை வரை இந்த விடயம் குறித்தும் பேசிப்பார்த்தோம். விடுதலைப்புலிகள் இந்த நிலவரங்களைக் கட்டுப்படுத்தக்கோரும் சில அறிக்கைகளை வெளியிட்டார்கள் – ஆனால் துரதிஷ்டவசமாக இரு தரப்பும்; நடைமுறை ரீதியாக  நிலைமையைக் கட்டுப்படுத்தவில்லை.

எனவே நாம் அடுத்தகட்டமாக பத்திரிகைகளின் ஊடாக பொதுமக்களிடம் செல்ல விரும்பினோம். இவற்றின் சமூக பண்பாட்டு வரலாற்று முக்கியத்துவத்தை விளக்குமாறான சில விளம்பரங்களை வெளியிடவும் கட்டுரைகளை எழுதவும் ஆரம்பித்தோம்.  பொதுமக்களிடமிருந்து பொதுப்படையான ஆதரவு தளமொன்று உருவாகத் தொடங்கியிருந்தது. ஆனால் அரும்பொருட் சூறையாடலின் வலைப் பின்னல் இவற்றால் பெரியளவில் ஈடாடியது எனச் சொல்வதற்கில்லை.  அவ்வாறான நாட்களில் ஒருநாள் எமது இறுதிவருட மாணவராக அப்போதிருந்த ஜெயதீஸ்; விடிகாலை 06 மணியளவில் வீட்டுக்குவந்து  ஒரு லொறியளவு அரும்பொருட்கள் தென்னிலங்கைக்கு ஏற்றிச் செல்லத் தயார்நிலையில் இருப்பதை மிகக் கோவத்தோடும் – பதைபதைப்போடும் கூறினார். அதனை எப்படியாவது தடுத்துவிட வேண்டுமென அவர் விரும்பினார். என்ன செய்வது எனக்; கடுமையாக யோசித்தோம்.  நுண்கலைத்துறையில் ஆசிரியர்களாக இருந்த சனாதனனும், நானும்,  அப்போது கலைவரலாற்று மாணவர்களாக இருந்த ஜெயதீஸ், கணேஷ், அபிராமி, சிவாஜினி, கண்ணன் மற்றும் நாடக அரங்கியல் மாணவர்களாக எமது துறையில் இருந்த ராஜ், ஜெயமதன் முதலியோர் இது பற்றிய பிரசாரங்களிற்காக வீதியில் இறங்கிச் செயற்படத் தீர்மானித்தோம்.  அவர்கள் அல்லாத நிமால், திலகநாதன் முதயோரும் கூட இச் செயற்பாட்டில் இடையிடையே  எமக்கு  உதவினர். இதற்காகப் பொய்க்கால் குதிரைகள், வேட முகங்கள் – வேட ஆடைகள் கட்டி, பறை முழக்கி ஆடிச் சனங்களைக்; கூட்டியபின் நானும் சனாதனனுமாக அரும்பொருட்களின் அவசியம், அவற்றின் பண்பாட்டுப் பெறுமானம், அவற்றை ஏன் விற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மக்கள் மத்தியில் உரையாற்றுவோம்.  ஒரு விதத்தில் இது மக்களிடையே சலனத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும்.   இவ்வாறு உரையாற்றி – உரையாற்றிச் செல்லும் பயணத்தை விரைவுபடுத்தவும் – பரவற்படுத்தவும்  தெரிந்த நண்பர் மூலமாக குறைந்த கட்டணத்தில் ‘வான்’ ஒன்றினைப் பெற்றுக்கொண்டோம்  அது எம்மை யாழ் குடாநாட்டின் முக்கிய பகுதியெங்கும் கொண்டு சேர்த்தது.

அத்துடன் அது ‘சமாதான காலம்’ எனும் ஒரு காலமாகக் காணப்பட்டதால் ஒப்பீட்டளவில் எமக்கு அது அச்சுறுத்தல்கள் அல்லாத ஒப்பீட்டளவிற் பாதுகாப்பான காலமாகவும் இருந்தது.  இப்பின்னணியைப் பயன்படுத்தி கிராம சேவகர்களைச் சந்திப்பது, பள்ளிக்கூடங்களுக்குச் சென்று பேசுவது என்று ரீதியிற் தொடர்ந்து விழிப்புணர்வுச் செயற்பாட்டில் ஈடுபட்டோம். பள்ளிக்கூடங்களில் இவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியான கட்டுரைப் போட்டிகள் நடத்துவது, சுவரொட்டிகள் உருவாக்கச் செய்வது என்கிற வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்தோம். நுண்கலைத்துறையும் – துறையின் கலைவரலாற்று மாணவர் அமைப்பான கலை வட்டமும் இதனைப் பரவாலாக முன்னெடுத்தன.

இந்த வேலைத்திட்டங்கள் மூலமாக எம்மால் நாம் நினைத்த அளவுக்கு அரும்பொருட்கள் வெளியேறுவதைத் தடுக்கமுடியாவிட்டாலும் கூட, அரும்பொருட்களின் முக்கியத்துவம் பற்றியும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றியும் மக்கள் மத்தியில் பொதுப் பிரக்ஞை ஒன்றை உருவாக்குவதில் இந்த வேலைத்திட்டங்கள் சந்தேகமில்லாமல் முக்கிய பங்காற்றியிருக்கிறது.

  1. வீதி அகலமாக்கலிற்காகக் கட்டடங்கள் இடிக்கப்படக்கூடிய ஒரு நிலை 2009 இன் பின் உருவானபோது அவ்வாறு இடிக்கப்படக் கூடிய கட்டடங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, மரபுரிமைகளாகக் கொள்ளத்தக்க கட்டடங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தபோது மரபுரிமைகளைக் காப்பது தொடர்பான அடுத்த கட்ட எதிர்வினையாற்றல்கள் ஆரம்பமாகின அல்லவா?

2002 ஆம் ஆண்டு எமக்குக் கிட்டிய அனுபவங்களுடன் இன்னமும் கூடிய கவனத்துடன் இதனைக் கையாளவேண்டிவரும் என்பதையும், இது பலவகையில் சிக்கலான பிரச்சினை என்பதையும் புரிந்துகொண்டிருந்தோம்.  இந்த வீதி அகலமாக்கலுக்காகத் தெரிவுசெய்யப்பட்டிருந்த பகுதிகளில் பல பண்பாட்டுவரலாற்று முக்கியத்துவடைய பாடசாலைகள், பண்பாட்டு நிறுவனங்கள், ஆலயங்கள் – வீட்டுக்கட்டுமானங்கள் என்பனவெல்லாம் காணப்பட்டன. ஓருவகையில் யாழ்ப்பாணமெனும் இடத்தின் அடையாள உருவாக்கத்தின் வரலாற்றுக்களங்கள் யாவும் இந்த அகலமாக்கலுக்குள் அகப்பட்டுக் கொண்டன. யாழ்ப்பாணத்தின் சமூக சமயப் பெரியார்கள் என அறியப்பட்டவர்கள், பலவேறு பண்பாட்டமைப்புகளின் பிரதிநிதிகள், இதர அமைப்புகள் ஆகியவற்றை அணுகி நாம் இந்த வீதி அகலமாக்கல் தொடர்பாகவும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் உரையாடத் தொடங்கினோம். ஆனால் இவர்களிற் பலரும் இந்த விடயம் தொடர்பில் அதிகம் சிரத்தை காட்டவில்லை அல்லது கொஞ்சம் வேண்டாவெறுப்போடு தான் நடந்து கொண்டார்கள். இதேநேரம் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவஞ் செய்த அரசியல்வாதிகள் யாரும் இது சிற்றளவேனும்; வாய் திறக்கவில்லை.

இன்னொரு பக்கம் சமூக, பண்பாட்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பண்டைய சின்னங்களும் இடங்களும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை முதன்மைப்படுத்தியும் அதற்கான ஆக்கபூர்வமான நிலவரங்கள் தொடர்பாகவும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை அரச அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரிற் பலர் எளிமையாக ஒருபுறம் நகர்த்தி வைத்துவிட்டு வீதியை அகலிக்கலாமா? இல்லையா? என்று பட்டிமன்ற விவாதம் போல இந்த விடயத்தை பேசத் தலைப்பட்டார்கள். மேற்படி மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாற்றுவழிகள் பற்றி யோசிக்கப்படவில்லை. எனவே அடுத்தகட்டமாக நாம் இந்தப் பிரச்சனைகள் தொடர்பாக அமைச்சர்களுக்கும், மேலதிகாரிகளுக்கும் விளக்கும் கடிதங்களை எழுதத் தொடங்கினோம்.  அனேகமாக அவை கிணற்றிற் போட்ட கல்லாகவேயிருந்தன.  இப்படியான சூழலில் எமக்கு அப்போதைய யாழ்ப்பாணத்துக்கான ஆளுனருடன் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.  அப்போது ஆளுனர் இதற்கான மாற்றுவழிகள் பற்றிக் கேட்டார்.  அதற்கான சில மாற்றுவழிகளையும் நாம் அவருக்குச் சமர்ப்பித்தோம். எதுவும் நடைபெறவில்லை. உள்ளுர் அரச அதிகாரிகள் கடும் கோபமடைந்தனர். அபிவிருத்திக்கு எதிரானவர்கள் என்ற ஒரு முத்திரையை கேள்வியெழுப்பியவர்கள் மீது அவர்கள் குத்தினர். இது தொடர்பில் உள்ளுர் அதிகாரிகள் கூட்டிய அனைத்து ஆலோசனைக் கூட்டங்களிலிருந்தும்  அதற்காகக் குரல் கொடுத்த தரப்பினர்; திட்டமிட்டு விலத்தி வைக்கப்பட்டனர்.

pa-akilanஇதேநேரத்தில் மக்களிடம் இந்தப் பிரச்சனைகளை நேரடியாக உரையாடுவதற்காக பத்திரிகைகளில் இதுபற்றி எழுதுவது என்று தீர்மானித்தோம்.  அதிர்ஷ்டவசமாக அப்போது உதயன் ஆசிரியர் குழுவில் தீர்மானம் மிக்க இடத்தில் த.பிரபாகரன் அவர்கள் இருந்ததார். அதனால் இந்த உரையாடலை செய்வதற்கான பலமான ஆதரவும், வாய்ப்பும் எமக்கு உதயனிற் கிட்டியது.  பத்திரிகைகளில் எழுதத் தொடங்கியதும் அது உடனடியாக சில தாக்கங்களை ஏற்படுத்தியது.   வீதியதிகார சபையிடமிருந்து வந்த முதலாவது எதிர்வினை, ‘பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இப்படி மக்களைக் குழப்பி அபிவிருத்திக்குக் குறுக்காக நிற்கக் கூடாது’ என்றவாறு அமைந்தது. இந்த எதிர்ப்புக் கடிதம், எமது உரையாடலை; வளர்த்துச்செல்லக் எமக்கொரு அடித்தளத்தை உருவாக்கித் தந்தது.   நாம் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், எவ்வாறு இந்த மரபுச்சொத்துகளைக் காப்பாற்றிக்கொண்டு அபிவிருத்தியைச் செய்யலாம் என்பது பற்றியும் – உலக நாடுகள் இந்தவாறான மரபுரிமையோடு கூடிய அபிவிருத்தி என்பதை எப்படி ஒரு கலாசார மற்றும் பொருளாதார முதலீடாகவும் முன்னெடுக்கிறது என்பது பற்றியும் இது தொடர்பில் நாமெழுதினோம். அதேவேளை – எப்படி இப்போது செய்யப்படும் வீதியகலிப்புச் செயற்பாடு இலங்கையின் வீதியகலிப்புத் தொடர்பான அனைத்துச் சட்டங்களையும் மீறிச் செய்யப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினோம். மக்களிடமிருந்து எடுக்கப்பட்ட காணிகளுக்கான இழப்பீட்டைக் கூட கொடுக்காமல், அவர்களது அறியாமை எவ்வாறு துஷ்பிரயோகஞ் செய்யப்படுகிறது என்பதையும் எடுத்துக்காட்டினோம். அவற்றின் தொடராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை தற்போது  செய்யப்படும் வீதியகலிப்புச் செயற்பாடானது எவ்வாறு  இனக்குழுமமொன்றின் அல்லது பிராந்தியம் ஒன்றின் பண்பாட்டுத் தடயங்களை அழிக்கும் ஒரு செயற்பாட்டை அபிவிருத்தியின் பெயராற் செய்கிறது என்பதையும் எடுத்துக்காட்டிக் கண்டித்தது. ஆனால் அது ஓர் ஒற்றைக் குரலாகவே அப்போது காணப்பட்டது.

இதேநேரம் பத்திரிகையில் தொடர்ச்சியாக வந்த கட்டுரைகளின் ஊடாக மக்களுக்கு மரபுரிமைகளின் முக்கியத்துவம் பற்றியும், அதற்கான சட்டரீதியான பாதுகாப்பு, உலக அளவில் கைக்கொள்ளப்படுகின்ற நடைமுறைகள் என்பன தொடர்பாகவும் ஓரளவு விழிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.  சாதாரணமக்கள் இவை தொடர்பாக ஆழமாக சிந்திக்கவும், தமக்குள் உரையாடவும் அது தொடர்பில் சிற்றளவிலேனும் செயற்படவும் தொடங்கினார்கள்.  நாங்கள் இதேசமயம் வீதி அகலிப்பால் பாதிக்கப்படக் கூடிய முக்கியமான இடங்களைப் பட்டியலிடவும் அவை பற்றிய தகவல்களைத் திரட்டி அவை பற்றி எழுதவும் பேசவும் தொடங்கினோம்.  இவற்றின் விளைவுகளாக வீதி அகலிப்புத் திட்டமானது ஏற்கனவே திட்டமிடப்பட்டதைவிட அகலம் குறைக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது என்பதுடன் இலங்கை அரசு இவற்றில் சிலவற்றை இலங்கையின் பிரகடனப்படுத்தப்பட்ட மரபுரிமைகளின் பட்டியலுக்குள் சேர்ப்பதற்கான முயற்சியையும் எடுத்தது. அதனால் பல கட்டடங்கள் (இப்போதைக்காயினும்) பாதுகாக்கப்பட்டன. ஆனால் இந்த ஓரளவு மாற்றத்தை அரச தரப்பு செய்த போதிலும் இன்றும் தமிழ்கூறு நல்லுலகம் தனது பெருமையான கடந்த காலத்தின் சின்னங்களை அழித்து மகிழ்கிறது. பின்னர் எழுந்திருந்து தேசியமும் பேசுகிறது என்பதுதான் இதிலுள்ள முரண்நகை.

  1. நானும் ஆவணப்படுத்தல் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடுபவன் என்றவகையில், ஆவணப்படுத்தல் தொடர்பாக மக்களை அணுகும்போது அவர்கள்ஓமோம் , அது முக்கியமான வேலைதான்என்று சொல்கின்றார்கள், ஆனால் அதற்கு அப்பாலாக மக்களை உள்வாங்குவது என்பது கடினமானதாக இருக்கின்றது. இது குறித்த உங்கள் அனுபவம் எவ்வாறாக இருந்தது?

எல்வோரும் ஒருவிதமாகச் சிந்திக்கவேண்டும் – செயற்படவேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அவரவருக்கும் அவரவர் சார்ந்த வரையறைகளுண்டு – அவற்றுக்கு நடுவில் அவர்களை எவ்வளவு தூரம் வலிமையாக செயற்பட வைக்கலாம் என்பதுதான் எங்கள் முன்னுள்ள கேள்வி. முக்கியமாக யுத்தத்துக்கு பிற்பட்ட சமூகத்தில் பல விடயங்கள் தலைகீழாகப் புரண்டு இருந்தன. அவற்றுக்கு ஊடாகத்தான் நாங்கள் நடந்து செல்ல வேண்டியிருந்தது. சில பல சந்தர்ப்பங்களில் ஒரு பொது மையத்திற்கு அரும்பொருட்களை கையளிக்க ஆட்கள் தயாராக இருந்தாலும் அதனைக் கொள்வனவு செய்து பாதுகாப்பதற்கான நிறுவனரீதியான வளமோ அல்லது பொருளாதார வசதியோ எம்மிடம் இருக்கவில்லை.  எனவே எம்மால் இயன்றவரை இவ்வாறான அரும்பொருட்களை ஒளிப்படங்களாக எடுத்து வைக்க முயற்சித்தோம். மேலும் இயலுமான அளவுக்கு தகவல்களைத் திரட்டிவைப்பது என்றும் முடிவுசெய்தோம்.  இந்தப் புரிதலுடன் நுண்கலைத்துறையானது தனது கல்விசார் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்படி ஆவணப்படுத்தலை அடிப்படையாகச் கொண்ட செயற்பாடுகளை உள்வாங்கியது.  இச் செயற்பாட்டில் சனாதனன் ஆரம்பித்த ‘முதுசம்’ என்ற செயற்றிட்டம்; அவற்றுக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கியது. இவ்வாறாக எமக்குக் கிடைக்கக் கூடியதாக இருந்த எல்லா வளங்களையும் திரட்டி நாம் மக்களிடம் அரும்பொருட்களைப் பேணுவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றோம்.

உண்மையில் பொதுமக்களின் சரியான அக்கறையும், விழிப்பும், பங்கேற்பும் இருக்கும்பட்சத்தில் மேற்படி செயற்பாட்டை மிக வலுவாக முன்னெடுக்க முடியும். நாம் அரசாங்கத்திடம் கேள்விகேட்டும், எமது உரிமைகளை எடுத்துக்கூறியும் போராடுகின்ற அதேவேளை எமது மரபுரிமைகளைக் காத்துக்கொள்வதற்கான சுய பொறிமுறைகளை பலமாக உருவாக்கவேண்டும் என்பது முக்கியமானது.

  1. உங்களது ஆவணப்படுத்தல் முயற்சிகளில் எவற்றைப்பற்றியெல்லாம் ஆவணப்படுத்தல்களையும் விழிப்புணர்வூட்டலையும் செய்தீர்கள்?

இவை இவையென்று நாம் குறுக்கிக்கொள்ளாமல் எல்லாவற்றின் மீதும் அக்கறை செலுத்தினோம்.  செலுத்த வேண்டியிருந்தது. கட்டடங்கள், மரத்தளபாடங்கள், கதவு நிலைகள், ஜன்னல்கள், பித்தளையில் உருவாக்கப்பட்ட பொருட்கள், மரத்தால் செய்யப்பட்ட வாகனங்கள், தேர்ச்சிற்பங்கள் என்று மிகப்பரந்த பரப்பில் நாம் வேலைசெய்தோம்.

  1. அண்மைக்காலமாக புலம்பெயர் நாடுகளில் இருந்து பல்வேறு அமைப்புகள், சங்கங்களின் ஊடாக ஈழத்திற்கு அனுப்பப்படும் நிதிகளின் ஊடாக ஆலயங்கள், பாடசாலைகள் என்பவற்றில் இருக்கின்ற பழைய கட்டடங்கள் இடித்துக் கட்டப்படுகின்றன. அத்துடன் தளபாடங்கள், பாவனையில் இருந்த உபகரணங்கள், கருவிகள் என்பனவும் மாற்றீடு செய்யப்படுகின்றனஆலயங்களில் இருக்கின்ற வாகனங்கள், தேர் என்பன எல்லாம் மாற்றப்படுகின்றனஇவ்வாறு செய்யப்படுகின்றபோது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிறைய விடயங்கள் அழிக்கப்பட்டுவிடுகின்றனஇதுபோன்ற விடயங்களில் புலம்பெயர் சமூகமும் பொறுப்புணர்வுடனும் ஆவணப்படுத்தல் பற்றிய பிரக்ஞையுடனும் இருக்கவேண்டும் அல்லவா?

மிகமுக்கியமான விடயம் என்னவென்றால், எப்போதுமே பண்டைப்பெருமை மிக்க அல்லது வருங்கால சந்ததிக்கு முதலீடாக இருக்கக் கூடிய எந்தவொரு விடயத்தையும் சேமித்து வைப்பதற்குச் சவாலாக உலகம் முழுவதும் பலவிடயங்கள் இருக்கின்றன.  ஆயினும் அனேக வளர்ச்சியடைந்த நாடுகளில் இவற்றின் பெறுமதியும் முக்கியத்துவமும் அறியப்பட்டு அவற்றைப் பேணிப்பாதுகாக்க நிறைய முயற்சிகளும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் உள்ளன.  ஆயினும் மூன்றாம் மண்டல நாடுகள் என்று சொல்லப்படுகின்ற நாடுகளில் இவற்றை பழையன என்கிற கண்ணோட்டத்துடன் – ‘தேவையில்லாதன’ அல்லது ‘காலாவதியானவை’ – ‘நாகரிகம் இல்லாதவை’ என்கிற பார்வையுடனேயே அவை அணுகப்படுகின்றன.  இந்தக் குறைபாடுடைய பார்வையினால் எம்மில் பலரால் சமகாலத் தன்மை கொண்ட பொருட்களையும், கட்டடங்களையும் வைத்திருப்பதே நாகரிகம் என்று நம்பப்படுகின்றது. ஆனால் எல்வோரிடமும், எல்லா இடங்களிலும் உள்ளவற்றைக் காணவும் கொண்டாடவும் உலகம் முனைவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியாது.  இதனால் பெரியளவில் கட்டட மரபுரிமைகள் பாதிக்கப்படுகின்றன.  புலம்பெயர்மக்களுடன் தொடர்புபட்டு அவை இரண்டு விதங்களில் பாதிக்கப்படுகின்றன.  ஒன்று புலம்பெயர்ந்தவர்கள் தமது கட்டடங்களை விற்கின்றபோது அவற்றை வாங்குபவர்கள் தமது தேவைகருதியோ அல்லது விருப்பத்தின் பேரிலோ கட்டடங்களை இடித்துக் கட்டுகின்றார்கள். அடுத்ததாக ஆனால் மிகத் தீவிரமான பிரச்சனை என்னவென்றால் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கிடைக்கின்ற நிதிகளின் ஊடாக பெருமளவில் பாடசாலைக் கட்டடங்கள், கோவில்கள் மற்றும் ஏனைய பொதுக் கட்டடங்கள் இடித்துக் கட்டப்படுகின்றன.  எனவே புலம்பெயர் நாடுகளினூடாக நிதியுதவிகள் செய்யப்படும்போது அவர்கள் நன்கொடையாளர்கள் என்கிற அளவில் அந்தத் திட்டங்களினூடாக மரபுரிமைகள் காக்கப்படவேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக வைக்கலாம்: வைக்கவேண்டும்.  ஆனால் துரதிஷ்டவசமாக இந்த நன்கொடையாளர்களில் பலருக்கு இந்தப் புரிதல் இல்லை அல்லது  இருந்தாலும் அது தொடர்பில் அவர்கள் அசட்டையாக இருக்கிறார்கள்.

இதேநேரம் நகர திட்டமிடல் என்கிற பாடத்தைக் கற்பிப்பவர்கள் உட்பட பலரும் இன்றும் கூட யாழ்ப்பாணத்தில் ஒரு சிங்கப்பூரை உருவாக்குவோம் என்று முன்மொழிவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.  ஆனால் இன்று உலகளவில் சிங்கப்பூர் என்பது ஒரு தோல்வியடைந்த மாதிரியாகவும், தனக்கென்ற எந்த அடையாளமும் இல்லாத பெரியதோர் சந்தையாகவுமே  பார்க்கப்படுகின்றது என்பதே உண்மை.  அலுமினியத்தாலும் கொங்கிரீட்டாலும் ஆன நெடிதுயர்ந்த கட்டடங்கள் நிரம்பிய சிங்கப்பூரைப் போன்ற ஒரு கட்டடக் காட்டை கட்டியெழுப்புவதே நாகரிகம் என்பதாகவே அவர்களது எண்ணவோட்டம் இருக்கின்றது.  இப்படியான மனநிலையைக் கேள்விக்குள்ளாக்குகின்ற விவாதங்களை தொடக்குவதும், மேலதிகமாக இவை பற்றிய கற்கைகளுக்கான வெளிகளை அதிகரிப்பதும் இந்த மனநிலையின் பின்னால் இருக்கின்ற அபத்தத்தைச் சுட்டுக்காட்டுவதும் முக்கியம்.  குறிப்பாக நன்கொடையாளர்களை அணுகி அவர்கள் செய்கின்ற நிதியுதவியுடன் நடைபெறவுள்ள திட்டங்கள் தொடர்பாக கவனத்திலெடுக்கவேண்டிய விடயங்கள் பற்றிச் சுட்டிக்காட்டி நன்கொடை வழங்கும்போதே அவற்றையெல்லாம் நிபந்தனையாகக் குறிப்பிடுமாறு அவர்களிடம் வலியுறுத்தலாம்.  அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட, மாற்றியமைக்கப்பட்ட பல கட்டடங்கள் தமக்கான பண்பாட்டுச் சிறப்புகளோ, தட்ப வெட்ப சூழ்நிலைக்கோ ஏற்றனவாக இல்லாமல் படோபகாரமான, ஜொலிக்கின்ற, சோடனைகள் நிரம்பிய சினிமாத்தனம் நிரம்பியவையாக இருப்பதைக்காணலாம்.  இதற்குப் பின்னாலிருக்கின்ற பண்பாட்டு வறுமைஃதாழ்வு மனநிலை கவனத்திற்கொள்ளவேண்டிய ஒன்று.

  1. எமக்கான பண்பாட்டுச் சிறப்புகள் பற்றிப் பேசும்போது இன்னொரு விடயத்தையும் பேசவேண்டி இருக்கின்றது. அண்மைக்காலமாக எம்மீது பண்பாட்டுப் படையெடுப்பு ஒன்று நடந்துகொண்டிருப்பதை உணரமுடிகின்றதுகுறிப்பாக தமிழகச் செல்வாக்கையும், வட இந்தியச் செல்வாக்கையும் வெவ்வேறு விதங்களில் காண முடிகின்றதுஇதனூடாக சமூக பொருளாதார உறவுகளும் வாழ்வியலும் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின்றனஆயினும் இந்தப் பாதிப்பையும் படையெடுப்பையும் எம்மால் இலகுவில் அடையாளம் காணமுடியாமல் இருக்கின்றதுஇதை எவ்விதம் எதிர்கொள்ளலாம் என்று நினைக்கின்றீர்கள்?

இது நாம் எதிர்கொள்ளும் முக்கியமான சமகாலப் பிரச்சனைகளில் ஒன்றுதான்.  இதனை ஊக்குவிக்கின்ற கருவிகளாக தென்னிந்திய தொலைக்காட்சிகள், தென்னிந்திய திரைப்படங்கள் போன்றவற்றின் பாதிப்புக்கள் இருந்தாலும் அதனையே அடிப்படைப் பிரச்சனையாகக் கருதமுடியாது என்றே கருதுகின்றேன்.  தென்னிந்தியத் தாக்கம் எமக்கு நீண்டகாலமாக இருந்தாலும் கூட அதன் பாதிப்பு அண்மைக்காலத்தில் அதிகரிக்க பண்பாடு என்றால் என்ன என்பது பற்றிய சரியான புரிதல் எம்மிடம் இல்லாமையே காரணமாக இருக்கும் என நினைக்கின்றேன்.  உதாரணத்திற்கு பண்பாடு என்கிற பெயரில் ஆடை அணிவது, எவ்வாறான ஆடைகளை அணியலாம் என்பது பற்றி அண்மைக்காலங்களில் நிகழ்ந்த உரையாடல்களில் தெரிந்த வெளிப்படையான அடிப்படைவாத எண்ணக்கருக்கள் பண்பாட்டின் அவசியம் தொடர்பான உரையாடல்களையே வலுவிழக்கச் செய்துவிடுகின்றன.  நாம் எவ்விதம் தனித்துவமானவர்கள் என்பதையும், எமது பிராந்தியத்தின் தனி அடையாளங்கள் பற்றியதுமான விவாதங்களை உள்ளடக்கியதாகவும்,  எவ்வாறு ஏனைய இடங்களில் இருந்து நாம் வேறுபடுகின்றோம் என்பதையும்  தெளிவாக வலியுறுத்துவதாக எமது சிந்தனை முறை மாற்றம் பெறவேண்டியது உடனடித்தேவை காணப்படுகிறது. நீங்கள் சொன்ன தென்னிந்திய திரைப்படங்கள் போன்றவற்றின் தாக்கம் இருந்தபோதும்கூட எமக்கான தனித்துவம் இருந்தது.  ரேடியோ சிலோனை எடுத்துக்கொண்டால் அதில் நல்ல தமிழ் பேசுகின்ற ஒரு அறிவிப்பாளர் பரம்பரையே இருந்தது.  ஆனால் இன்று எந்த எஃப்எம் வானொலியை எடுத்துக்கொண்டாலும் இயல்பாக இல்லாமல் வேணுமென்றே செருகப்படும் பிறமொழிச் சொற்களும் மொழிக்கொலையும் நிறைந்து காதுகொடுத்துக் கேட்கவே முடியாதவிதத்தில் அது இருக்கின்றது.  இவையெல்லாம் நவநாகரிகம் என்ற பெயரிலேயே நடக்கின்றது.  எம்மிடம் பண்பாடு பற்றிய புத்திபூர்வமான விவாதமும், அதனடிப்படையில் எழக்கூடிய எதிர்ப்புணர்வு இல்லாமல் இருப்பதும், இவற்றைத் தலைமைதாங்கக் கூடிய நிறுவனங்களும் தலைமைகளும் இல்லாமல் இருப்பதும் தான் இதற்கெல்லாம் முக்கிய காரணம்.  துரதிஷ;டவசமாக பண்பாடு பற்றிப் பேசுபவர்கள் அடிப்படைவாதிகளாக இருப்பது இன்னுமொரு பின்னடைவாக அமைகின்றது.

  1. பண்பாடு பற்றிய புரிதல் இல்லாமை என்று பார்க்கின்றபோது, கனடியச் சூழலில் நான் அவதானித்த விடயம் ஒன்றினை குறிப்பிடலாம். இங்கே பெரும்பாலானவர்களுக்கு நாம் பண்பாடு என்று சொல்பவற்றை குறிப்பாக ஊரில் எமது வாழ்வியல் தொடர்பானவை எல்லாவற்றையும்பழையனஎன்றும்நாகரிகமடையாதவைஎன்றும் கருதுகின்றபோக்கு இருக்கின்றதுஅதனடிப்படையில் அவர்கள்நாகரிகமடைந்ததுஎன்றும்புலம்பெயர் நாடுகளின் வாழ்க்கைமுறை என்றும் அவர்கள் கருதுகின்றமுறையில் வாழத் தலைப்படுகின்றனர்ஆயினும் அவர்களுக்கு அந்த நாடுகளின் பண்பாடும், வாழ்க்கைமுறையும், வரலாறும், தொன்மையும் கூட தெரிவதில்லைஒருவருக்கு தமிழ் தெரியும் என்று சொல்லும்போது அவருக்கு தமிழைப் பேச மட்டும் தெரிந்தால் போதுமானதா என்கிற கேள்வி இருக்கின்றதுமொழி, இலக்கியம், கலை, வரலாறு, தொன்மை இவற்றையெல்லாம் அறியாதிருப்பவர்கள் பண்பாட்டு ரீதியிலான தாழ்வுச்சிக்கலுக்கு ஆட்பட்டு இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றதுஎனவே, எம்மவர்களில் பலர் புலம்பெயர் நாடுகளில் வெறும் மொழிகளை மாத்திரம் தெரிந்து கொண்டு நாளாந்த வாழ்க்கையை அதன் மேலோட்டமான புரிதலுடன் மட்டும் வாழ்ந்துவிடுகின்றனர்இந்தப் பண்பாட்டு வறட்சியை புலம்பெயர் நாடுகளில் அதிகரித்துவருகின்ற மன அழுத்தம், மனச் சோர்வு, தற்கொலைகள், அதிகரித்துவரும் போதைப் பொருட்பாவனை என்பவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம் என்றே கருதுகின்றேன்இதுபோன்ற உளவியல் பிரச்சனைகளை ஈழத்திலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளதா?

சமகால ஈழத்தமிழ் பரப்பெனப்படுவது, சுமார் 30 – 40 வருடங்களுக்கு முன்பு நாம் அறிந்தது வைத்திருந்தல்ல என்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை – இப்போதுள்ள ஈழச் சமூகமெனப்படுவது சமூகத்தில் பொதுவாக அனைத்து மட்டங்களிலும் ஏற்பட்ட ஒருவிதமான இடைவெளியை நிரப்பலூடாகவும் கல்வி – புலம்பெயர் பணம் ஆகியவற்றாலும் எழுச்சி பெற்ற ஒரு புதிய சமூகத்தின் ஆதிக்க வயப்பட்டது. அதன் வாழ்வு தொடர்பான எதிர்பார்க்கைள் – அபிலாஷைகள் வேறுவிதமானவை, அது தன்னை தக்க வைத்தல் – இன்னும் மேல்நிலையடைதல் சார்ந்த பல கனவுகள் – தந்திரங்கள் – விட்டுக் கெர்டுப்புக்கள் என்பவற்றோடு பரம்பரை அல்லது கடந்த காலம் தொடர்பான பண்பாட்டு வரலாற்று அனுபவங்கள் அதிகம் அற்ற ஒன்றாகவே அதிகம் காணப்படுகிறது. இதேநேரம் காலனியத்தோடு உருவாகிய தாழ்வுச் சிக்கல் என்பது எல்லா தரப்பிலும் ஏதோவொரு வகையிற் தொழிற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த ‘சிந்தனை முறை’  தான் ஒருவிதத்தில் புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்திலும் பண்பாடு என்பது பற்றிய புரிதல் இல்லாமல் – உள்ளீடற்ற ரீதியில் தமது வாழ்க்கைமுறைகளையும் தேர்வுகளையும் பலர் மேற்கொள்ளக் காரணமாகின்றது எனலாம்.

kaalaththin-villimbuஎம்மிற் பலர் நினைப்பதுபோல பண்பாடு என்பது கடந்தகாலம் அல்ல.  அது தொடர்ச்சியானதொரு நீரோட்டம்.  எந்த அடிப்படையான விடயங்கள் எமது பிரக்ஞைக்கும், எம்மை நிலைநிறுத்தவும், எம்மைக் கொண்டு செல்லவும் ஊக்கியாக இருக்கின்றதோ அவையெல்லாம் அந்த நீரோட்டத்தில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றது என்ற புரிதல் ஏற்படும்போது நமக்கு பண்பாடு பற்றிய புரிதலும் ஏற்பட்டுவிடும். அது பழமைகளாலும் – புதுமைகளாலும் தொடர்ந்து கட்டப்பட்டு வருவது. அந்த அடிப்படையில் பண்பாடு என்பது அந்த அந்த காலத்தின் தேவைக்கேற்ப அதன் நிலைகளில் இயல்பாகவே சிலமாற்றங்களை அடையும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

  1. மரபுரிமைகளைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்தல் என்பனபற்றி நாம் தொடர்ந்து பேசுகின்ற அதேவேளை அதனைக் கவனமாகச் செய்யாவிட்டால் ஒருவிதமான வலதுசாரித்தனமான, அதிகாரங்களின் பெருமைகளைப் பதிவு செய்வதாகிப் போய்விடும். எனவே ஆவணப்படுத்தல், மரபுரிமை தொடர்பான செயற்பாடுகளின்போது சிறுபான்மைச் சமூகம் தொடர்பான அக்கறையும் அவர்களது நோக்கிலான பார்வையும் இணைந்திருப்பது மிக மிக முக்கியமானது அல்லவா?

நிச்சயமாக. பொதுவாக தமிழ் சமூகம் எந்த மரபுரிமைகளை பொதுவாக இன்று கொண்டாடுகின்றது என்று பார்த்தால் அவற்றுக்குப் பின்னால் தொழிற்படும் அதிகாரப் பொறிமுறையை எம்மால் இனங்காண முடியும்.    உதாரணமாக நாம் தமிழ் மரபுரிமை என்று எதைச் சொல்லுகின்றோம், எதைக் கொண்டாடுகின்றோம், எது குறித்துப் பெருமிதம் கொள்ளுகின்றோம், எதைச் சொல்லாமல் தவிர்க்கின்றோம், எதை இருட்டடிப்புச் செய்கின்றோம் என்ற கேள்விகளை எழுப்பிப்பார்த்தால் மரபுரிமை குறித்த எமது சிந்தனைகளில் நாம் எவ்வளவு தூரம் ஜனநாயகமாக இருக்கின்றோம் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.  இதனால் மரபுரிமை பற்றிப் பேசுவதே ஒருவிதமான மேட்டுக்குடிச் சிந்தனை என்று கருதுபவர்களும் இருக்கின்றார்கள்.   அதேநேரம் சிறுபான்மைச் சமூகங்களுக்கு, அதிலும் குறிப்பாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகங்களுக்கு மரபுரிமையைக் காத்தல் என்பதும் ஆவணப்படுத்தல் என்பது ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு அரசியல் செயற்பாடாகவும், தனது அடையாளத்தை பேணுகின்ற ஒரு செயற்பாடாகவும், தனது இருப்பைப் பேணுவதற்காக முயற்சிகளில் ஒன்றாகவும், தனது வரலாற்றைக் காவுகின்ற காரணிகளில் ஒன்றாகவும் பொருளாதாரத்தை மேம்பாட்டைச் செய்வதற்கான கருவியாகவும் காணப்படுகின்றது.  எனவே மரபுரிமை குறித்த செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் ஜனநாயகபூர்வமாக தமக்குள் இருக்கின்ற சிறுபான்மையினரையும், சிறுபான்மைக் கருத்தியல்களையும், வெவ்வேறு இனத்துவம், வர்க்கம், சாதி, பால்நிலை, மதம், பாலியல் போன்ற பன்முகத்தன்மைகளை உள்வாங்குபவர்களாகவும் இருக்கவும் வேண்டும் என்பதை மிக மிக முக்கியமான நிபந்தனையாகக் கொள்ளவேண்டும்.

  1. யாழ்ப்பாணத்தில்தொன்ம யாத்திரைபோன்ற மரபுரிமை நடைச் செயற்பாடுகள் மரபுரிமை காப்புச் செயற்பாடாக முன்னெடுக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கின்றதுஇந்தச் செயற்பாடுகள்; மரபுரிமை இடங்களை இனங்காணுவதுடன் அந்த இடங்கள் பற்றியும் அவை எவ்விதம் மரபுரிமைகளாக மதிப்பிடப்படுகின்றன என்பது பற்றியும் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்வதுடன் அந்த இடங்கள் பற்றிய பதிவுகளையும் செய்வது அவசியமாகின்றதுஇன்றைய யாழ்ப்பாணத்துச் சூழலில் இது தொடர்பான செயற்பாடுகளில் எழக்கூடிய சவால்கள் என்னவாக இருக்கும்?

நாம் மரபுரிமையாக கண்டறியும் பொருளானது அந்த இடத்தை விட்டு விலத்தி எடுத்துச் செல்லமுடியாததாக இருக்கின்றபோது ஒப்பீட்டளவில் அது பாதுகாப்பாக அந்த இடத்தில் இருக்கும்;. மாறாக சில இடங்களில் நாம் கண்டறியும் பொருள் அந்த இடத்திலிருந்து எடுத்துச் செல்லக்கூடியதென்றால் அதனை யாரும் எந்த நேரத்திலும் எடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்பது மிக மிக பெரிய சவாலாக இருக்கின்றது.  இன்று இவை எல்லாம் கல்விசார் நடவடிக்கைகளும் ஆகியிருக்கின்றபோது ஒருசாரார் மிகுந்த பிரயத்தனத்துடன் மரபுரிமைகளை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து அவற்றையெல்லாம் பாதுகாக்கவேண்டும் என்று முயன்று கொண்டிருக்க இன்னொரு சாரார் இவற்றையெல்லாம் விற்றுக் காசாக்கிக் கொண்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  எனவே நாம் மரபுரிமைகளாக அவற்றை சமூக முன்னிலைப்படுத்தவும் வெளிக்கொண்டுவரவும் முயலுகின்றபோது இவ்வாறு வெளிக் கொண்டுவருவதால் அந்தப் பொருள் ஆபத்துக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளதா என்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறான நிலைமைகளுக்குள் அகப்படக் கூடியவற்றுக்கான பாதுகாப்புப் பொறிமுறை பற்றியும் நாம் யோசிக்க வேண்டும்.

அதேநேரம் இயற்கை மற்றும் செயற்கைக் காரணிகளால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களிலிருந்து காக்க அவற்றை இயன்றவரை எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தியும் தகவல்களைத் திரட்டியும் வைப்பது அவசியமானது.

அதேநேரம் சிலவேளைகளில் தமது பொறுப்பில் அல்லது தமது தனியாள் சொத்தாக இருக்கும் ஒரு பண்பாட்டு வெளிப்பாட்டை மரபுரிமை என்று கோருவதை இன்னும் சிலர் விரும்புவதில்லை. அவ்வாறு செய்தால் மேற்படி வெளிப்பாடு மீதாக ஆளுகை போய்விடும் என்று  அவர்கள் கருதுவார்கள். அவ்வாறான சந்தர்பங்களில் இது தொடர்பான பேச்சு வரும் ஆரம்ப கட்டத்திலேயே அதனை அழித்து விட அல்லது அது பற்றி உங்களைப் பேசவிடாமற் தடுக்கவும் முயலுவார்கள்.

ஆகவே எமது செயற்பாடுகளில் மிகுந்த பொறுப்புணர்வு தேவைப்படுகிறது. அதேநேரம் சலிப்பற்ற தொடர் செயற்பாடுகளே விரும்பத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது முக்கியமானது.

  1. ஈழத்தைப் பொறுத்தவரை ஆவணப்படுத்தல் என்பது பெரிதும் தனி மனித ஆவணக்காப்பாளர்களாலேயும் ஆர்வலர்களாலுமே மேற்கொள்ளப்படுகின்றது. உதாரணமாக ஈழத்தின் முக்கியமான ஆவணக்காப்பாளர்களான குரும்பசிட்டி கனகரத்தினம், கலைஞானி செல்வரத்தினம் போன்றவர்கள் எல்லாமே தனி நபர்களாக தமது ஆவணப்படுத்தல்களை முன்னெடுத்தவர்களேகடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நூலக நிறுவனம் ஈழத்தமிழருக்கான ஆவணப்படுத்தல்களைச் செய்துவருகின்றது என்றாலும் அதுவும் ஆவணப்படுத்தலில் அக்கறையும் ஆர்வமும் கொண்ட சில தனி மனிதர்களை மையமாக வைத்தே அதிகம் இயங்கிவருகின்றதுஇவை அனைத்துமே மிக முக்கியமான விடயங்கள் என்றபோதும் கூட ஆவணப்படுத்தல் போன்றவை அவற்றின் முழுமையான வடிவத்தை அடைய அவை நிறுவனமயப்படுத்தப்படவேண்டியது அவசியம் என்று நினைக்கின்றேன்இந்த நிறுவனமயமாக்கல் என்ற பொறிமுறையை வெற்றிகரமாக எய்துவதற்கு இருக்கக்கூடிய தடைகள் எவை?

நீங்கள் சொன்ன தனிநபர்களில் குரும்பசிட்டி கனகரத்தினத்துடன் நேரடியான அறிமுகம் எனக்கு அதிகம் இருக்கவில்லை.  ஆனால் கலைஞானி அவர்கள் வேலைசெய்கின்ற முறையை சிலவருடங்கள் பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது.  மிகப்பெரிய அர்ப்பணிப்பு அவருடையது.  உங்களுக்குத் தெரியுமோ தெரியாது, அவர் மூன்று நேரமும் பாணைத்தான் உணவாகச் சாப்பிடுவார்.  இவ்வாறு தனது அத்தியாவசியத் தேவைகளில் கூட மிகவும் சிக்கனமாக இருந்து சேமித்த பணத்தை வைத்துத்தான் ஆவணப்படுத்தலுக்காக பொருட்களை சேகரிப்பதற்கு அவர் செலவளித்தார்.  ஆனால் என்ன பிரச்சனை என்றால் துரதிஷ்டவசமாக ஆவணப்படுத்தலை எப்படிச் செய்யவேண்டும் என்பதிலும், ஒப்பீட்டளவில் எவை எவை முக்கியமாக ஆவணப்படுத்தப்பட வேண்டியன என்று தெரிவு செய்வதற்குமான ஆவணப்படுத்தல் பற்றிய முறைசார் பார்வைத் தெளிவு அவருக்குப் போதுமான அளவு இருக்கவில்லை.  ஆவணப்படுத்தல் என்று வரும்போது அதற்கான சரியான முறைகளும் நியமங்களும் பின்பற்றப்படவேண்டும் என்பது மிகமிக அவசியம்.  அந்த விதத்தில் பார்க்கின்றபோது குரும்பசிட்டி கனகரத்தினத்தின் ஆவணப்படுத்தல்களில் பெரும்பகுதி வெவ்வேறு இடங்களில் தொகுதிகளாக எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தப்பட்டிருப்பது நல்லவிடயம்.  நிறுவனமயமாக்கப்படாமல் தனி ஆர்வலர்களால் செய்யப்படும் ஆவணச் சேகரங்கள் காலப்போக்கில் கைவிடப்பட்டுப் போய்விடக்கூடிய வாய்ப்புகளும், முறையாக ஆவணப்படுத்தப்படாமல் போய்விடும் வாய்ப்புகளுமே அதிகம்.  நாம் உடனடியாகச் செய்யவேண்டியது என்னவென்றால் இவ்வாறான தனிநபர் ஆவணச் சேகரிப்பாளர்களையும், ஆவணங்கள் இருக்கின்ற இடங்களையும், ஆவணப்படுத்தப்படவேண்டிய நிறுவனங்கள், அமைப்புகள், இயக்கங்கள் என்பவற்றைப் பற்றியும் பட்டியல்களை உருவாக்குவதும் அவை தொடர்பான விபரங்களைத் திரட்டுவதுமாகும்.  அதுவே மிகவும் சவாலான இருக்குமென்றே நம்புகின்றேன்.  அடுத்ததாக ஆவணப்படுத்தல் பற்றிய முறைசார் கற்கைகளை ஊக்குவிக்கவேண்டும்.  அடுத்து சமகாலத்தில் ஆவணப்படுத்தல் தொடர்பாக பயன்படுத்தப்படுகின்ற தொழினுட்பம், முறைகள், நியமங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி ஆவணப்படுத்தல் செயற்பாட்டளர்களுக்காக கைநூல் ஒன்றினை உருவாக்கவேண்டும்.  இவையெல்லாவற்றையும் விட முக்கியமாக ஆவணப்படுத்தலின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்குத் தொடர்ந்து பரப்புரை செய்துகொண்டேயிருக்கவேண்டும்.  இவற்றையெல்லாம் நாம் செய்ய ஆரம்பித்தால் நிறுவனமயமாக்கல் என்பது பெரிய சிக்கலான ஒரு காரியமாக இருக்காது என்று நினைக்கின்றேன்.

  1. ஆவணப்படுத்தல் என்பது சேகரித்தல், பாதுகாத்தல், பகிர்தல் என்கிற மூன்று படிநிலைகளைக்கொண்டது என்று எளிமையாகக் குறிப்பிடலாம். இவை தம்மளவில் பெருமளவு நிதித் தேவையை எதிர்பார்த்திருப்பவைஆவணப்படுத்தல் செயற்பாடுகளுக்காக அரசு சார் அமைப்புகளில் இருந்து நிதியுதவிகள் கிடைக்காமல் இருக்கின்ற சூழலில் இந்த நிதித்தேவைகளை எவ்வாறு பூர்த்திசெய்யலாம்?

ஆவணப்படுத்தல் மற்றும் அது சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவோர் பெரும்பாலும் தமது கைப்பணத்தைச் செலவுசெய்தும் தமது தனிப்பட்ட நட்பு, உறவு வட்டங்களில் இருந்து பெற்றுக்கொள்ளுகின்ற நிதியினை வைத்துமே எமது சூழலில் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.  உண்மையில் எத்தனையோ விதங்களில் வேண்டுகோள்கள் விடுத்தும், பத்திரிகைகள், வெளியீடுகள், தனிப்பட்ட நிகழ்வுகள், கவனயீர்ப்பு நிகழ்வுகள் என்பன நடத்தப்பட்டபோதும் கூட இன்று வரை எமது மாகாண அரசு ஆவணப்படுத்தல் தொடர்பாக எதையும் செய்யத்தொடங்கவில்லை.  உள்ளூராட்சி சபைகள் மரபுரிமைகளைக் காப்பதற்காகச் சட்டரீதியாகச் செய்திருக்கக் கூடியவற்றைக் கூட செய்யவில்லை.  தமிழ் தலைமைத்துவத்தின் இந்தப் பலவீனம் ஒரு பெரிய பாதிப்பாகத்தான் பார்க்கப்படவேண்டியது.

புலம்பெயர் நாடுகளில் இருந்து செய்யப்படுகின்ற நிதியுதவிகளில் இருக்கின்ற சிக்கல் என்னவென்றால் பல சந்தர்ப்பங்களில் அந்த நிதிகளைத் தருபவர்களால் செய்யப்படுகின்ற மேலாண்மை, அவற்றின் பின்புலத்தில் இருக்கக்கூடிய அரசியல்கள் என்பன எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடுவனவாகவும் அமைந்துவிடுகின்றன.  இவற்றின் காரணமாகவே பல சந்தர்ப்பங்களில் புலம்பெயர் நாடுகளில் இருந்து செய்யப்படுகின்ற நிதியுதவிகளைத் தயக்கத்துடன் பார்க்கவேண்டியதாக இருக்கின்றது.  புலம்பெயர் நாடுகளில் இருந்து நிதியுதவிகளைச் செய்யும் தனிமனிதர்களும் சரி சங்கங்களும் சரி ஈழத்தில் இயங்கிவருகின்ற பாடசாலைகள், கோயில்கள் உள்ளிட்ட சமூக நிறுவனங்கள் தொடர்பான முடிவுகளை தாமே எடுக்கத் தொடங்குவதும், நிர்வாகத்தில் தலையீடுசெய்வதும் பிழையான முன்னுதாரணமாகும்.  இவ்வாறான நிதியுதவிகளின்போது நிதியுதவிகளைப் பெறுகின்றவர்கள் தமது இறைமையை உறுதிசெய்து ஒப்பந்தம் செய்வதை வழமையாக்கவேண்டியது அவசியம்.  குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் பாடசாலைகளுக்குக் கிடைக்கின்ற நிதியுதவிகள் மிகச் சில ‘பெரிய’ பாடசாலைகளுக்கு மாத்திரமே கிடைக்கின்றன.  இவற்றினால் பாடசாலைகள் மத்தியில் ஒரு அசம நிலை உருவாவதுடன் அது நேரடியாக மாணவர்களையும் பாதிக்கின்றது.  நிறையச் சிறு பாடசாலைகளில் போதிய மாணவர்கள் இல்லாமையால் அவை மூடப்படக்கூடிய நிலையை நோக்கிச் செல்ல பெரிய பாடசாலைகளில் மாணவர்கள் பெருந்தொகையாகக் குவிந்தபடியுள்ளனர்.  அதேநேரம் வெவ்வேறு நாடுகளில் இருக்கின்ற பழைய மாணவர்கள் தமக்குள் போட்டியாக கருதிக்கொண்டு வெவ்வேறு பாடசாலைக் கட்டடங்களை இடித்துக்கட்டுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.  இவ்வாறு இடித்துக்கட்டும்போது மரபுரிமையாகப் பேணப்படவேண்டிய கட்டடங்களும் சேர்த்தே இடித்துக் கட்டப்படுகின்றன.  இவ்வாறாக கட்டடங்கள் மாத்திரமல்ல நீண்டகாலமாக இருந்த தளபாடங்களும் சேர்த்து அகற்றப்பட்டுவிடுகின்றன.  எனவே புலம்பெயர் நாடுகளில் இருந்து செய்யப்படும் நிதியுதவி சாதகமான ஓர் அம்சம் என்றாலும், அதனுடன் இணைந்தேவருகின்ற அதிகாரமும், தலையீடும் பற்றிய எமக்குப் பிரகஞை எமக்கு இருக்கவேண்டும்

அதுதவிர புலம்பெயர்நாடுகளில் இருந்து அனுப்பப்படும் நிதியானது உள்ளூர் சமூக பொருளாதார உறவுகளில் சடுதியில் ஏற்படுத்திய மாற்றமானது உள்ளூரில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியலில் பெரியளவு தாக்கத்தினை உருவாக்கியிருக்கின்றது.  உதாரணமாக கோயில் திருவிழா, தண்ணீர்ப் பந்தல், உள்ளூர் சனசமூக நிலையங்களுக்கான நிர்வாகச் செலவு போன்றவற்றுக்காக உள்ளூர் மக்களிடம் சிறியளவில் நிதி திரட்டப்பட்டபோது மக்களது ஆத்மார்த்தமான பங்களிப்பும் இவற்றுடன் இருந்தன.  துரதிஸ்ரவசமாக புலம்பெயர் நாடுகளில் இருந்து வருகின்ற பணத்தின் வருகையானது மக்கள் உரிமையுடன் பங்கேற்பதைப் பாதித்துள்ளது.  எனவே தாம் அனுப்புகின்ற பணமானது மேலாண்மையையோ, அதிகாரத்தையோ கோரி நிற்காமல், நிர்வாகத்தில் வீண் தலையீடு செய்யாமல், சரியான பொறிமுறைகளூடாக உள்ளூர் அபிவிருத்திக்கும் புனர்வாழ்வுக்கும் பங்களிக்கவேண்டும் என்பதில் புலம்பெயர் மக்கள் தெளிவாகவும் இருக்கவேண்டியது அவர்களது கடமையாகும்.


இந்நேர்காணல் செப்ரம்பர் 2016  தாய்வீடு இதழில் வெளியானது, இங்கே பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் பா. அகிலனின் முகநூல் பக்கத்தில் இருந்து பெறப்பட்டவை.  

 

2 thoughts on “”மரபுரிமையக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான் – பா.அகிலன்”

Add yours

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑