மானிட நேயம் மாண்புறப் பேசினார் எஸ்பொ!

எஸ்பொ விற்குப் பிந்திய இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவன் நான்.  வாசிப்பு மீது அக்கறையும் ஆர்வமும் கொண்ட எனது தலைமுறையைச் சேர்ந்த பலரையும்போலவே எஸ்பொ எனக்கும் பிடித்தமான ஒரு எழுத்தாளர்.  சிறுவயதில் இந்தியப் பத்திரிகைகளையே அதிகம் படித்து வளர்ந்தவன் என்பதால் எழுத்தாளன் என்கிற கர்வத்துடனனான விம்பங்களாக இருவர் என் மனதில் பதியவைக்கப்பட்டனர்.  ஒருவர் பாரதி.  அடுத்தவர் ஜெயகாந்தன்.  பின்னாளில் அந்த திருவுருக்கள் மனதில் தூர்ந்துபோயினர்.  ஆனால் மறக்கவே முடியாதவராக, பேராளுமையாக தாக்கம் செலுத்தியவர் எஸ்பொ அவர்கள்.  அவருடன் நெருக்கமான உறவு எதுவும் எனக்குக் கிடையாது. ஓரிருவார்த்தைகளைத் தவிர பேசியதுமில்லை.  “எஸ்பொவின் நனவிடைதோய்தல்” என்கிற, காலம் செல்வம் ஒழுங்கு செய்திருந்த கூட்டம் ஒன்றில் எஸ்பொவின் பேச்சொன்றினைக் கேட்டிருக்கின்றேன்.  “ஈழத்து ஜெயகாந்தன் என்று உங்களை அழைக்கலாமா ? என்று அவரிடம் கேட்டதற்கு, ஜெயகாந்தனை வேண்டுமானால் தமிழ்நாட்டு எஸ்பொ என்று அழையுங்கள்” என்று எஸ்பொ கூறியதாகக் கேட்டிருக்கின்றேன்.  அப்படி கேட்டிருக்கக் கூடியவர் என்பதை உறுதி செய்கின்ற தோரணையிலான பேச்சு.  அப்போது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கான எதிர்ப்பை எஸ்பொ முன்னெடுத்து, அது பற்றிய சர்ச்சைகள் இடம்பெற்றிருந்த காலம்.  தான் ஏன் கனடா வந்தேன் என்று சொல்ல வெளிக்கிட்டவர், கனடாவில் இருந்து ஒருவர், சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் எஸ்பொ சிலுவையில் அறையட்டுவிட்டார் என்ற பொருள்பட கூறியதாகவும், அதற்கு தான், சிலுவையில் அறையப்படுவது நிகழ்ந்தால் புத்துயிர்ப்பும் நிச்சயம் நிகழும், எஸ்பொவின் புத்துயிர்ப்பு கனடாவிலேயே நிகழும் என்று கூறியதாகவும், அதன் நிமித்தமே கனடா வந்தேன் என்றும் கூறினார்.  நான் வாசித்த, கேள்விப்பட்ட, கற்பனை செய்திருந்த அதே எஸ்பொவை கண் முன்னால் கண்ட தருணம் அது.  ஒரு வாசகனாக எஸ்பொ பற்றிய என் பார்வையை, அவர் என்னில் ஏற்படுத்திய தாக்கங்களை இச்சிறு கட்டுரையில் முன்வைக்கின்றேன்.

எஸ்பொவின் படைப்புகளில் எனக்கு பிடித்தவை என்று தீ, சடங்கு, அப்பாவும் மகனும், நனவிடை தோய்தல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.  இன்று வரை எஸ்பொ பற்றிக் குறிப்பிடுபவர்கள் பேணும் எஸ் பொ பற்றிய விம்பம் கிட்டத்தட்ட முழுவதுமே தீயாலும், சடங்காலுமே கட்டமைக்கப்பட்டது.

எஸ்பொவின் தீ மனிதனின் அடிப்படை உணர்ச்சியும் உறவுகளின் அடிப்படையும் காமத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றது என்பதை தத்துவ நோக்கில் (ஆழமாக இல்லாத விடத்தும்) ஒரு நாவல் வடிவில் சொல்கின்ற படைப்பாகும்.  இந்நாவலின் முன்னுரையில் எஸ்பொ அவர்கள் கூறுகின்றார் “மேனாட்டார் Sex ஐ மையமாக வைத்துப் பல நவீனங்களை சிருஷ்டித்திருக்கின்றனர்.  மனித இனத்தின் பின்னமற்ற அடிப்படஇ உணார்ச்சி பாலுணர்ச்சியே.  இவ்வுணர்ச்சியில் வித்தூன்றிக் கருவாகி ஜனித்து, வளர்ந்து,, அந்த நுகர்ச்சியில் எழும் குரோதம் பாசம் ஆகிய மன நெகிழ்ச்சிகளுக்கு மசிந்து, சிருஷ்டித் தொழிலில் ஈடுபட்டே வாழ்கிறான் மனிதன்.  அவன் தனது பலவீன நிலைகளில் செய்பவற்றையும், அனுபவிப்பவற்றையும் சொல்லவும், ஒப்புக்கொள்ளவும் ஏன் கூச்சப்படவேண்டும்?”  இந்தக் கேள்வியே எஸ்பொவின் பலபடைப்புகளுக்கான அடிநாதமாகும்.  கதையில் கதையின் நாயனுக்கு அவன் வாழ்வில் சந்திக்கின்ற 7 பேருடன் பாலுறவின் அடிப்படையிலான தொடர்பு உருவாகின்றது. (இதில் சிறு வயதில் பாதிரியார் ஒருவரால் அவன் பாலியல் தேவைகளுக்காக அறிந்தும் அறியாமலும் பலியாக்கப்படுவதும், பின்னர் அவனே பூப்பெய்தாத சிறுமியை தனது தேவைகளுக்காக பலியாக்க முயல்வதும் உள்ளடக்கப்பட்டுள்ளது. கலாசாரம், பண்பாடு என்ற போர்வைகளில் வெளியில் சொல்லப்படாது மறைக்கப்பட்டு நான் சிறுவனாக இருந்த காலத்திலும் கூட நிறையப் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.   ஆனால் 1960 களிலேயே இது பற்றி எஸ்பொ எழுதி இருக்கின்றார் என்பதை அறியும் போது வியப்பாகவே இருக்கின்றது.

அது போல சடங்கு நாவல் கலாசாரம், புனிதம் என்றெல்லாம் கட்டியமைக்கப்பட்டு, கட்டியழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தில் 1960களிலேயே இந்நாவல் எழுதடப்பட்டது பேரதிசயம் தான்.  அதிலும் குடும்பம் என்பதை சமூகத்தின் ஆகச் சிறிய அலகாக்கி கட்டி எழுப்பப்பட்ட அமைப்பை முதன்மைப்படுத்தி, தனி நபர் ஆசாபாசங்களைப்பற்றி அக்கறை கொள்ளாது தியாகம், விட்டுக் கொடுத்தல், புனிதம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் சமூகங்களில், குடும்ப உறவுகளைப் பேணவும், குடும்பத்தை நிலைப்படுத்தவும் (முக்கியமாக பொருளாதார ரீதியில்) எடுக்கும் முயற்சிகளில் தனி மனித உணர்வுகளும் விருப்பங்களும் எப்படி நிராகரிக்கபடுகின்றன .  என்று சொல்கிறது சடங்கு நாவல்.  இந்த இரண்டு படைப்புகளும் அவற்றின் பேச்சும்பொருட்களால் இன்றுவரை சமகாலப் பிரதிகளாக கருதத்தக்கவை.

அதுபோல பண்பாட்டு வரலாற்றியல் என்பதில் பெரும் அக்கறை கொண்டவன் என்ற வகையில் எனக்கு எஸ்பொவின் ஆக்கங்களுல் அதிகம் பிடித்தது நனவிடைதோய்தல் ஆகும்.  நனவிடை தோய்தல் (nostalgia) என்றாலே காதலுடன் மாத்திரமே தொடர்புபடுத்திப் பார்க்கின்ற காலத்தில் முதன்முதலாக இந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதாலோ என்னால் முதல் வாசிப்பில் லயிக்கமுடியவிட்டாலும் மீண்டும் வாசித்த போது எனக்கு மிக மிகப் பிடித்த புத்தகங்களில் ஒன்றாகிவிட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்னைய யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறையை மிகமிக அழுத்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிவுசெய்திருக்கின்றார்.  அந்நாளைய மக்களின் வாழ்க்கை முறை பற்றிய சிறந்த ஆவணப்பதிவாகவும் இந்தப் புத்தகம் உள்ளது.  உதாரணத்துக்கு ஒரு சிறிய பகிர்வை எஸ்பொவின் எழுத்துக்களிலேயே தருகின்றேன்

“பின்னர், ஐந்து சத நோட்டுக்களும் பாவனைக்கு வந்தன. இது புதினமான நோட்டு. ஒரே தாளில் இடப்பக்கம் இரண்டு சத முத்திரை போலவும் வலப்பக்கம் மூன்று சத முத்திரை போலவும் அச்சிடப்பட்டிருந்தன. தேவை கருதி அந்தத் தாளை இரண்டு முத்திரைகளாகக் கிழித்து, இரண்டு சதமாகவும் மூன்று சதமாகவும் பாவித்துக் கொள்ளலாம். மூன்று சய இரண்டு சமன் ஒன்று என்கிற வாய்ப்பாட்டில் ஒரு சதக் கணக்கும் சரி செய்யப்பட்டது”

இது போல பணம், துட்டு என்கிற பிரயோகங்கள் மெல்ல வழக்கொழிந்து எப்படி ரூபா சதம் என்கிற பாவனை வந்தது என்பதையும் மிகச் சுவாரசியமாகச் சொல்லுகின்றார் எஸ்பொ. நாலு பணம் என்பது இருபத்தைந்து சதம். இந்தக் கணக்கின் அடிப்படையில் 3 பணம் என்றால் அது பதினெட்டுச் சதமா அல்லது பத்தொன்பது சதமா என்று பெரிய வாக்குவாதம் கூட நடைபெற்றதாம்.

இன்றுவரை எஸ்பொ குறிப்பிட்ட இந்த ஐந்துசத தாள் பற்றி வேறெங்கும் என்னால் அறியமுடியவில்லை. எஸ்பொ மட்டும் எழுதியிராவிட்டால் இந்த வரலாறு மறக்கப்பட்டதாகவே போய் இருக்கும்.

அதுபோல எஸ்பொவின் மொழிபெயர்ப்புப் பணி பற்றியும் குறிப்பிடவேண்டும்.  எஸ்பொ ஒரு வேலைத்திட்டமாக ஆபிரிக்க நாவல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்தார்.  லத்தின் அமெரிக்க இலக்கியங்கள் தமிழில் தொடர்ச்சியாக மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிட்டு, அதைவிட அதிகமும் தமிழர் வாழ்வியலுடன் ஒற்றுமைகள் கொண்டிருந்த ஆபிரிக்க இலக்கியங்களை தமிழ் மொழியிலாக்கும் முயற்சியை முன்னெடுத்தார் எஸ்பொ.  2011ல் ரொரன்றோ வந்திருந்தபோதும் அவர் அப்போது மொழியாக்கம் செய்து முடித்திருந்த 5 நாவல்களை ஒரே தொகுதியாகவே விற்பனை செய்தார்.  இவற்றில் சினுபா ஆச்சிபேயின் A Man of the People என்பதை “மக்களின் மனிதன்” என்று மொழியாக்கம் செய்ததும், நக்வீப் மஹ்ஃபூஃப் எழுதிய Miramar என்பதை சாதாரணன் மொழியாக்கம் செய்ததும், ஜே எம் கூற்சி எழுதிய The Disgrace என்பதை “மானக்கேடு” என்று மொழியாக்கம் செய்ததும், மையா கௌரோ எழுதுய “The Sleep Walking Land” என்பதை நித்திரையில் நடக்கும் நாடு என்று மொழியாக்கம் செய்ததும், கம்ரன் லெயெ எழுதிய The African Child என்பதை கறுப்புக் குழந்தை என்று மொழியாக்கம் செய்ததும், என்று பத்துக்குமேற்பட்ட ஆபிரிக்க இலக்கிய நூல்களை தமிழாக்கம் செய்து மக்களிடன் கொண்டுசெல்ல முயன்றார். அவரளவில் அவர் முன்னெடுத்த அரசியலுக்கு பண்பாட்டு ரீதியில் வலிமைசேர்ப்பதாக இந்த இலக்கியங்களை அவர் கண்டுகொண்டார். இவைதவிர அவர் வெவ்வேறு காலப்பகுதிகள் செய்த மொழியாக்கங்கள் மகாவம்ச உட்பட பல!

அதேநேரம், எஸ்பொ பற்றிக் குறிப்பிடும்போது அவர் பற்றி சில எதிர்மறையான அபிப்பிராயங்களையும் பதிவுசெய்வதே எஸ்பொவிற்கு உண்மையாக இருப்பதாகும்.  பொய்யைத் தலைக்குள் வைத்துக்கொண்டு என்னால் எழுத முடியாது என்றார் எஸ்பொ.  அவ்விதம் ஒழுகவே விருப்பம்.  எனவே சம்பிரதாயம் கருதாமல் அதையும் பதிவுசெய்கின்றேன்.  நிறைய எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தினூடாக அவர் எப்படி இருப்பார் என்று தோன்றுகின்ற விம்பம் போல இருப்பதில்லை. ஆனால் எஸ்பொ, அவர் எழுத்துகளூடாகத் தெரிவது போன்ற கலகம் செய்யும் இயல்புடையவராகவே நான் கனடாவில் அவரை நேரடியாகப் பார்த்தபோதும் தெரிந்தார். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, தமிழ் தேசியம், மகாவம்சம் என்று நிறைய விடயங்களைத் தொட்டுப் பேசினார். அதே நேரம் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்திக் கூறும்போது சிங்களவர்கள் பற்றிக் கூறிய சில கருத்துக்கள் மிகுந்த ஏமாற்றத்தையும் அயர்ச்சியையும் தந்தன. இது போன்ற பேச்சுக்களை எஸ்போ போன்ற அனுபவமும் ஆளுமையும் நிரம்பிய ஒரு மூத்த எழுத்தாளரிடம் இருந்து நான் எதிர்பார்க்கவேயில்லை.  சடங்கு, தீ போன்ற படைப்புகளூடாக பாலியல் பற்றி மக்களிடையே இருந்த போலி ஒழுக்கத்தை, பாலியலைப் பேசக் கூடாத ஒன்றாக கருதும் மனப்பாங்கை உடைத்துப் போட்ட எஸ்பொ, “கற்பு நிலை” பற்றிப் பேசியதும், ஆதியிலே தமிழராக இருந்தவர்கள் பின்னர் சிங்களவர்களாக மாறியதற்குக் காரணம் கூறும்போது “சிங்களப் பெண்கள் கற்பு நெறி பிறழ்ந்ததும் ஒரு காரணம்” என்று கூறியதும் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தன.  முற்போக்கி இலக்கியத்தைவிட்டு விலகி நற்போக்கு இலக்கியம் என்று தன்னை வகைப்படுத்திக்கொண்ட எஸ்பொ, பின்னர் தனது மாயினியில் முன்னிறுத்திய தேசியத்தின் உள்ளடக்கத்தால் மாயினி எனது பார்வையில் அது எஸ்பொவின் மிக பலவீனமான பிரதியாகவே உருப்பெற்றிருந்தது.  (தேசியத்தை அவர் முன்னெடுத்ததால் இப்படைப்பு பலவீனமாகவில்லை.  அவர் தேசியத்தை முன்வைத்த விதத்தாலேயே பலவீனமானது).  இதே பாதிப்பை எஸ்பொ மித்ர வெளியீடு ஊடாக வெளியிட்ட புத்தகங்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகளில் “தமிழ் தேசியத்தின்” நிமித்தம் கடைப்பிடித்த மென்போக்கிலும் காண முடிந்தது.  ஒரு உதாரணமாக ஈழவாணி எழுதிய நிர்வாண முக்தி சிறுகதை தொகுதியையும், அதற்கு எஸ்பொ எழுதிய முன்னுரையையும் வாசித்துப்பார்க்கலாம்.  (எஸ்பொ வைத் தொடர்ந்து வாசித்தவர்கள் எஸ்போ என்கிற படைப்பிலக்கியவாதிக்கும் , எஸ்பொவின் விமர்சனங்கள் / மதிப்பீடுகளுக்கும் இடையில் இருக்கின்ற பெரிய இடைவெளியை தெளிவாக அவதானித்திருப்பர்).

அடுத்து எஸ்பொ தன்னை தமிழ் ஊழியம் செய்பவன் என்றும், பாணன் என்றும் காட்டான் என்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அழைத்துக்கொண்டார்.  அவர் பிற்போக்கு இலக்கியம் (மரபைப் பேணும் இலக்கியம் என்பதே பொருத்தமானது) X முற்போக்கு இலக்கியம் என்று இருந்தபோது தன்னை நற்போக்கு என்று கூறியது ஒரு தனிமனித செயற்பாடே அன்றி அது ஒரு இயக்கம் அல்ல.  அவர் இயக்கமாக “நற்போக்கு இலக்கியத்தை” முன்னெடுத்தவரும் அல்ல.  ஒரு படைப்பாளியாக அவர் எடுத்துக்கொண்ட சுதந்திரம் அது.  ஆனால் அது அவரது அரசியல் வேலைத்திட்டம் அல்ல.  தற்போது எஸ்பொ வின் “எல்லாவற்றையும் உடைத்தல்” என்பதை அரசியல் செயற்பாட்டாளார்களும் (நாம் எஸ்பொ வழி வந்தவர்கள் என்று கூறிக்கொண்டே) பின்பற்றுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.  ஒரு செயற்பாட்டாளர் கலகம் செய்யும்போது அது பற்றிய ஒரு தெளிவான பார்வையும், தொலைநோக்குப் பார்வையும் இருக்கவேண்டும்.  அப்படி இல்லாமல் எல்லாவற்றையும் உடைப்பது கலகமும் அல்ல, செயற்பாடும் அல்ல.  ஒரு கலகம் என்பது முன்னெடுக்கப்படும்போது மாற்றாகவும் தொடர்ச்சியாகவும் ஒரு ஆக்கபூர்வமான ஒரு வேலைத்திட்டம் இருக்கவேண்டும் என்பது பொறுப்பான செயற்பாட்டாளார் செய்யவேண்டியது.

இன்று எஸ்பொ அவர்களின் மரணத்தின் பின்னர் தமிழ் தேசியர்களும், தமிழ் தேசியத்தை மறுதலித்து சாதிப் பிரிவினைகள் தொடர்பான பிரச்சனைகளை தம் பிரதான வேலைத்திட்டங்களாக முன்னெடுப்போர்களும் எஸ்பொவை தம்முடன் சேர்த்து அடையாளப்படுத்த முயல்வதைக் காணமுடிகின்றது.  எஸ்பொவுக்கு அதிகாரங்கள் மீதான கோபம் இருந்தது.  சாதி ஒழிப்பு தொடர்பான அக்கறை இருந்தது.  பிற்காலத்தில் அவர் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகவே அடையாளப்படுத்திக்கொண்டார்.  துரதிஸ்டவசமாக அவர் முன்வைத்த தமிழ்த்தேசியம் இனவாதம் பேசுவதாக அமைந்தது.  அதுவும் சேர்ந்ததாகவே எஸ்பொ அமைந்தார்.

மாய்ந்து மாய்ந்து

நான் எழுதியதெல்லாம்

மானிட நேயம் மாண்புற என்றேன்.

என்றார் எஸ்போ.  அவ்விதமே வாழ்ந்தார்.  அவ்விதமே நம் நினைவிலும் நிலைத்தார்.


குறிப்பு 1 : எஸ்பொ எழுத ஆரம்பித்த ஆரம்பகாலங்களிலேயே எஸ்பொ மற்றும் நற்போக்கு இலக்கியம், முற்போக்கு இலக்கியம் X நற்போக்கு இலக்கியம் பற்றி மு.தளையசிங்கம் “ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில்” எழுதியவை முக்கியமானவை.


 

குறிப்பு 2 :

எஸ்பொவின் மறைவை ஒட்டி ரொரன்றோவில் காலம் செல்வம் அவர்களால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்வில் வாசித்த கட்டுரை.  இக்கட்டுரை ஜனவரி, 2015 தாய்வீடு இதழில் பிரசுரமானது.

ஏற்கனவே நான் எழுதிய வெவ்வேறு கட்டுரைகளில் இருந்து சிலபகுதிகள் இக்கட்டுரையில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑