காலச்சுவடு: கருணா பற்றிய கட்டுரைக்கு ஒரு எதிர்வினை

தொடர்ச்சியாக திணிக்கப்பட்ட ஒரு கட்டாய ஓய்வுக்குப் பின்னர், ஒரு முழு மூச்சுடன் வாசிப்பில நான் இறங்கியபோது தீவிர இலக்கிய இதழ்கள் மீது பெரும் காதலுடன் தான் அவற்றை அணுகினேன். தொடர்ச்சியான வாசகர் ஆதரிப்பில் தமிழில் ஓரளவு நிலைத்துவிட்ட தீவிர இலக்கிய இதழ்கள் என்ற நிலையை காலச்சுவடு, உயிர்மை இதழ்கள் அடைந்திருந்தாலும் காலச்சுவடை என்னளவில் ஒரு மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே அணுக முடிந்தது. இதற்கு நான் வாசிப்பில் இறங்கிய அந்த நாட்களில் கண்ணன் தலைமையில் காலச்சுவடு செய்த சில இலக்கியத்துக்கு புறம்பான அரசியல்களோ அல்லது காழ்ப்புணர்வுடன் செயலாற்றிய சம்பவங்களோ, இல்லை அதே சமயத்தில் மனுஷ்யபுத்திரன் காலச்சுவடை விட்டு வெளியேற, அவர் மீது தொடர்ச்சியான புறங்கூறல்கள் சொல்லப்பட, அவரது கவிதைகளில் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்த எனது மன நிலையோ காரணமாக இருந்திருக்கலாம் அவ்வப்போது எல்லா நச்சில்கூட ஒரு துளி இனிப்பேனும் உண்டென்று எண்ணும் என் மனப்பாங்குடன் காலச்சுவடை அணுகும் எனக்கு காலச்சுவடாகவே தலையில் சம்மட்டி அடி போட்டு தம்மை நிரூபித்துவிடுவது வழக்கம். மீண்டும் ஒரு முறை ஏப்ரல், 2009 காலச்சுவடு இதழில் இது பலமாக நிரூபிக்கப்படுகின்றது.

பொதுவாக அடக்குமுறைகளுக்கு எதிராக வணிக இதழ்கள் அதிகார வர்க்கத்தின் குரலாகவும் தீவிர இதழ்களே பாதிக்கப்பட்டவரின் குரலாகவும் ஒலிப்பது மரபு. இந்த நிலையில் உண்மைக்கு மிக நெருக்கமானவையாக அமைவதால் தீவிர இதழ்களின் பக்கங்களை மிகுந்த ஆவலுடன் புரட்டுவது என் வழக்கம். இந்த நிலையில் ஏப்ரல் மாத காலச்சுவடின் அட்டையில் ”காட்டிக்கொடுக்கும் கருணா, ஒரு போராளி துரோகியான கதை” என்ற பெயரில் ஒரு அட்டைப்பட கட்டுரை இருந்தது. சை. பீர்முகம்மது எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மிக முக்கிய நிலையில் இருந்த கருணா, பின்னர் அந்த அமைப்பை விட்டு சில காரணாங்களால் வெளியேறி “தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP)” என்ற அரசியலமைப்பை ஏற்படுத்தி இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார். இவரது அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் அண்மைக்கால செயற்பாடுகள் பற்றி பலவித விமர்சனங்கள் இருக்கின்றன. இது பற்றிய எந்த ஒரு விமர்சனத்தையும் தாண்டி, கருணா காட்டிக்கொடுக்கும் துரோகி ஆன கதை” என்று கவர்ச்சியான தலையங்கத்துடன் வந்திருக்கும் இந்த கட்டுரையில் பல தகவல் பிழைகள் மிக சாதாரணமாக விரவிக்கிடக்கின்றன. அதுவும் எந்த விதமான சமரசங்களுக்கும் உட்படவேண்டிய தேவைகளும் இல்லாமல், மிகத்தெளிவாக தெரியக்கூடிய பிழைகள்.

முதலில் “மட்டக்களப்பு மாவட்டத்தில் போராளிகளாலும் மக்களாலும் ‘அம்மான்’ என்னும் சிறப்பு அடைமொழியால் அழைக்கப்பட்ட கருணா இலங்கை ராணுவத்திற்கெதிரான போர்முனைகளில் முதன்மையான போராளியாகப் போற்றப்பட்டார்.” என்று கூறப்படுகின்றது. அம்மான் என்கிற பட்டம் போராட்ட அமைப்புகள் ஆரம்ப கட்டங்களில் இயங்கியபோது வழங்கப்பட்ட அடைமொழி. இந்த நாட்களில் ராணுவ ரீதியான தரப்படுத்தல்கள் இல்லாத போது இப்படியான அடைமொழிகள் சேர்க்கப்பட்டு முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை செல்லக்கிளி அம்மான், பொன்னம்மான், பொட்டம்மான், புலேந்தி அம்மான் போன்றவர்களுடன் கருணாவும் இப்படி அழைக்கப்பட்டார். இதே போல ஆரம்ப காலங்களில் புளொட் அமைப்பு “மாமா” என்கிற அடைமொழியை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது (உதாரணம் தாஸ் மாமா, ஆனால் யாழ்ப்பாண மக்களால் விடுதலைப்புலிகள் அமைப்பின் கிட்டுவும் கிட்டுமாமா என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது).

இதை தொடர்ந்து போர் முனைகளில் திறமையான தளபதியாக கருணா செயல்பட்டிருக்கின்றார். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை ஆனால் இந்தக்கட்டுரையில் ஆணையிறவு சமர் பற்றிய எழுதியது கூட பிழையான ஒரு தகவல் தான். ”1994 – 95இல் முல்லைத் தீவு, ஆனையிறவு ஆகிய இடங்களில் கடும்போர் மூண்டது. ஒவ்வொரு நாளும் வெற்றிச் செய்திகள் வந்தவண்ணமிருந்தன. சிங்கள ராணுவம் முழுபலத்துடன் போரிட்டும் பல டாங்கிகளையும் கவச வாகனங்களையும் பறிகொடுத்தது. ஆனையிறவின் கி9 பிரதான சாலையில் 2002இல் யாழ்ப்பாணம் செல்லும்பொழுது இப்படியான சில கவச வாகனங்கள் சிதிலமடைந்து கிடந்ததை நேரில் பார்த்திருக்கிறேன். இந்தக் கடும்போரில் கருணாவின் படையும் ஜெயந்தன் என்னும் மற்றொரு தளபதியின் 5000 புலிப் படையும் மிகப் பெரிய வெற்றியை ஈட்டின” . முதலில் இவர் சொல்கின்ற இந்த ஆனையிறவு சமர் நடைபெற்றது 2000 காலப்பகுதியில். மேலும் ஜெயந்தன் என்ற தளபதியின் நினைவாக அமைக்கப்பட்டதுதான் ஜெயந்தன் படையணியே தவிர ஜெயந்தனின் தலைமையில் அமைக்கப்பட்ட அணி ஜெயந்தன் படையணி அன்று. விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள ஜெயந்தன் படையணி, விக்ரர் படையணி, சார்ள்ஸ் அன்ரனி படையணி, கிட்டு படையணி, சோதியா படையணி போன்ற படையணிகளும் அருள் 89, பசீலன் 2000 முதலிய எறிகணை, மிதிவெடி வகைகளும் மரணித்த வீரர்களின் நினைவாக பெயரிடப்பட்டனவே தவிர தளபதிகளின் பெயரில் அழைக்கப்பட்டவை அல்ல. அண்மயில் கனேடிய முக்கியஸ்தர் ஒருவர் சார்ள்ஸ் அன்ரனி படையணி என்ற பெயரை தன் மகன் பெயர் என்பதால் தான் அந்த படையணிக்கு சூட்டப்பட்டது என்று ஒருவர் சொன்னபோது என்ன எண்ணினேனோ அதே தான் பீர் முகம்மது பற்றியும் எண்ணத் தோன்றுகின்றது. உண்மையில் இந்தப் பெயர் பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக இருந்த சார்ள்ஸ் அன்ரனியின் நினைவாகவே அந்தப் படையணிக்கு சூடப்பட்டது. 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி பலாலி வீதியில் நடத்தப்பட்ட தாக்குதல் கூட அதே ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகது கொல்லப்பட்ட சார்ள்ஸ் அன்ரனியின் நினைவாகவே நடத்தப்பட்டதாக அனிதா பிரதாப்புக்கு 1984ம் ஆண்டு வழங்கிய பேட்டியொன்றில் பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார். அதே போராளியின் பெயரைத்தான் தன் மகனுக்கும் வைத்தார். அடுத்ததாக கருணாவின் மனைவி தளபதி சூசையின் சகோதரி என்று வரும் தகவல். எனக்கு தெரிந்த வரை ராம் என்கிற தளபதியின் மனைவிதான் தளபதி சூசையின் சகோதரி. கருணாவின் மனைவி முன்னாள் போராளியான நிரா.

இதுபோல கருணா விடுதலைப்புலிகள் இயக்கத்தைவிட்டு வெளியேறி அமைத்த அரசியலமைப்பின் பெயர் தமிழ் மக்கள் விடுதலை முன்னணி. இதைக்கூட இவர் தவறாகவே குறிப்பிடுகின்றார். “இதன் பிறகு ‘மக்கள் விடுதலைப் புலிகள்’ என்னும் கட்சியைத் தொடங்கி அதற்குத் தலைவரானதோடு அதை ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவுசெய்தார்” என்கிறார் சை.பீர்முகம்மது.

இவையெல்லாவற்றையும் கூட சகிக்கும்படி கட்டுரையின் இறுதிப்பகுதியில் பெரிய ஒரு போடு போடுகின்றார் பீர்முகம்மது. அதாவது “கடந்த கால வரலாற்றில் கருணாவுக்குப் பல விஷயங்கள் சாதகமாகவே அமைந்துவிட்டன. உண்மையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தளபதியாக வந்திருக்க வேண்டியவர் குமரப்பா. கொக்கட்டிச்சோலை என்னும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வந்தவர் குமரப்பா. இவர்தான் அந்த மாவட்டத் தளபதியாக இருந்தார். இவர் மனைவி மருத்துவர். கிட்டு, புலேந்திரன் மற்றும் குமரப்பாவோடு 11 தளபதிகள் இந்தியக் கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்தார்கள். இந்தியக் கடற்படை புலிகளின் கப்பலைச் சோதனையிட வந்தபொழுது அதனை வெடிவைத்துத் தகர்க்க அனைவரும் மூழ்கி இறந்தனர். குமரப்பாவும் அதில் இருந்தார்”. உண்மையில் மேற்சொன்ன விடயம் பற்றி நான் எந்த எதிர்வினையாற்றவும் விரும்பவில்லை. குமரப்பா, புலேந்திரனின் சயனைட் அருந்திய மரணமும், கிட்டுவின் வங்கக்கடலில் நடந்த மரணமும் ஈழப்போராட்டத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள். இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்த காலப்பகுதியில் பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். நியாயபூர்வமான அனைத்துக் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட அவர்கள் அனைவரும் சயனைட் அருந்தினர். 5 பேர் அதன் பின்னர் சிகிச்சைகளில் உயிர்பிழைக்க வைக்கப்பட ஏனைய 12 பேரும் 1987 அக்டோபர் மாதம் 5ம் திகதி மரணத்தை தழுவினர். இந்திய-இலஙை ஒப்பந்தம் பற்றி விடுதலப்புலிகள் கடும் அதிருப்தி கொள்ள இந்த நிகழ்வு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் கிட்டுவும் குட்டி சிறி உட்பட்ட சில போராளிகளும் லண்டனில் இருந்து திரும்பும்போது சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டபோது தம்மை மாய்த்துக்கொண்டு உயிர் துறந்தவர்கள். இது நடந்தது 93ல் ஜனவரி 16ல்.

இதுபோன்ற ஒரு அடிப்படை தகவல்களைக் கூட சரிபார்க்காமல் ஒரு முன்னணி இதழில் இப்படியான ஒரு கட்டுரை வந்திருப்பது மிகப்பெரும் ஏமாற்றங்களுக்கு உள்ளாக்குகின்றது. அதுவும் கருணா விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு விலகி (2004 மார்ச் 3ம் திகதி) கிடைத்த 5 ஆண்டு அவகாசத்தைக்கூட சரியாக பயன்படுத்தாமல் எழுதப்பட்ட இந்த கட்டுரையை எழுதிய பீர்முகம்மதுவும், அதை வெளியிட்ட காலச்சுவடும் இந்த தகவல் பிழைகளுக்கு கட்டாயம் பொறுப்பேற்க வேண்டியவர்கள். ”தமிழரின் தனிக்குணம், தனித் தனியே பிரிந்து சண்டையிடும் குணம்” என்று அப்துல் ரகுமான் ஒரு முறை எழுதியிருந்தார். தமிழரின் வரலாறு கூட தம்மிடையே சண்டையிட்டு அழிந்து போனது (சேரர், சோழர் பாண்டியர் காலம் முதல் இக்காலம் வரை) என்று வரலாறும் எமக்குக் கற்பித்திருக்கின்றது. இவை எல்லாவற்றையும் விட பெரிய இழுக்கு நாமே எம் காலத்து வரலாறை இப்படித் திரித்து எழுதுவதுதான்.

16 thoughts on “காலச்சுவடு: கருணா பற்றிய கட்டுரைக்கு ஒரு எதிர்வினை

Add yours

  1. ஒரு துரோகிக்கு கவர்ஸ்டோரி கொடுத்ததே காலச்சுவடின் வெறித்தனமான வியாபாரம்தான். வியாபாரிகள் எல்லாம் புத்தகம் போட வந்து காலச்சுவடு, கணையாழி எல்லாம் நரகல் போல நாறுது

    Like

  2. இன்னொரு முறை உங்கள் எதிர் வினையை வாசித்தால் ஒரு சொல் என்றாலும் திருத்தலாம்…எதிர்வினை என்கிற வகையில் அது பெரிய தவறாகலாம்…திரும்ப வாசியுங்கோ…

    Like

  3. அண்ணா!!நான் கூட காலச்சுவடு கட்டுரையை படித்தேன்…வெறுத்தே போய்விட்டது.தவறான “சுவடுகள்”.எழுதிவிட்டு proof பார்ப்பதே இல்லை போல் உள்ளது.எனக்குத் தெரிந்த வரையில் கருணா குழுவின் ஆரம்ப காலப் பெயர்”தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்”(TMVP)… நீங்களும் தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள் என் எண்ணுகிறேன்.

    Like

  4. வணக்கம் தமிழன்துரோகிகள் என்று சொல்லப்படுபவர்களுக்கு கவர் ஸ்டோரி கொடுக்கப்படுவது அறவே கூடாது என்பதை என்னால் முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்கும் ஒரு வரலாறு உள்ளது. ஆனால் அவர்களை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதப்படும்போதும் அதில் வரும் தகவல் பிழைகள் களையப்படவேண்டும் என்று நினைக்கின்றேன். அதே நேரம் காலச்சுவடு, கணையாழி பற்றிய உங்கள் கருத்துக்களில் எனக்கும் பல உடன்பாடுகள் உண்டு

    Like

  5. வணக்கம் தெரிஞ்சவந்தான்நீங்கள் எனக்கு சொன்ன அந்த ஒரு சொல் “தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ” என்பதை “தமிழ் மக்கள் விடுதலை முண்ணனி என்றூ சொன்னது என்றூ நினைக்கின்றேன். அதை திருத்திவிட்டேன். நன்றி

    Like

  6. வணக்கம் பாரதி. இதைப்போல காலச்சுவடின் பொறுப்பில்லாத இந்த கட்டுரையால் பலர் மன உளைச்சல்களுக்கு உள்ளாகி உள்ளனர். அதே நேரம் நீங்கள் சொன்ன கருணாவின் அரசியல் அமைப்பின் பெயரை நான் ஏற்கனவே திருத்திவிட்டேன்

    Like

  7. //அந்த மின்னல் வெட்டு நேரத்தில் என் மனத்திற்கு இவர் ‘சரியான ஆளல்ல’ என்று ஏனோ தோன்றியது. இப்படிப்பட்ட கணிப்புகள் பலமுறை சரியாக இருந்திருக்கின்றன. இம்முறையும் என் அனுமானம் தப்பவில்லை// – மூலக்கட்டுரையில் பீர் முகம்மதுஈழ போராட்டங்களையும் அதன் உட்காட்சியாகும் சம்பவங்களையும் எவரும் தங்களை முதன்மைபடுத்தாது எழுதவில்லை என்பது வருத்தத்துக்குரியது. இதை ஒருமுறை ஷோபாசக்தியும் சி.புஷ்பராஜா குறித்து வெளிப்படுத்தி இருந்தார். அவர்களையாவது மன்னிக்கலாம் ஏதோ ஒருவிதத்தில் தொடர்புபட்டு சொல்கிறார்கள், இதுபோன்ற அமானுஷ்ய கருத்துக்களை என்ன சொல்வது?கட்டுரையாளர் ஒருதடவை வன்னிக்கு போயிருக்கிறார், இங்கு பலரும் நம்புவதை போல அவரும் அந்த தகுதி ஒன்று மட்டும் போதும் என்றே போர்கள் குறித்தும் களம் குறித்தும் படையணி குறித்தும் எழுதியிருக்கிறார். ஆனையிறவு தளத்தில் கட்டளைத்தளபதிகள் பால்ராஜ், தீபன் மற்றும் பானு களமுனை தளபதிகள் நகுலன், அமுதாப், கோபித் முதலிய பலர் முதன்மைப்படையணியும் CASR எனப்படுகின்ற Charles Antony Special Regiment . அனால் சம காலத்து வன்னியின் தென் போர்முனை அரங்குகளான கரப்புக்குத்தி, கனகராயன்குளம் மற்றும் நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற ஓயாத அலைகள் தொடர் சமர்கள் மற்றும் செய் அல்லது செத்து மடி தொடர் சமர் என்பவையே தளபதிகள் கருணா மற்றும் ஜெயம் பங்கெடுத்த ஜெயந்தன் படையணிகள் சமராடிய களங்கள் ஆகும். இதுபற்றி புலிகள் வெளியிட்ட ஆவணங்களே இந்த வரலாற்றுக்கு சாட்சி. இவரோ பொதுப்படையாக கேக்கிறவன் கேனையன் என்ற கணக்கில் ஆனையிறவுக்கு பிறகுதான் கருணா பிரபாகரனின் விசுவாசமான தளபதி என்று கதை விடுகிறார்.பின்னூட்டம் ஒரு பதிவாகுமளவில் அந்த கட்டுரையில் தவறுகள் இருந்தது. கருணா தமிழ் மக்கள் விடுதலை புலிகள் என்பது ஒரு இயக்கம் என்றும் அரசாங்கத்துக்கு எதிராக கிழக்கில் போராடும் என்றுதான் BBC க்கும் பேட்டியளித்து ஆரம்பித்தார். அரசியல் கட்சி ஆனது பிறகு நிகழ்ந்தது. மேலும் அவர் குறிப்பிடும் குமரப்பாவுடன் கிட்டு என்பது என்ன வரலாறு என்பது அவருக்கே வெளிச்சம்.

    Like

  8. கருணா தோற்றம் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை ஒத்தது,இவர் பிரபலத்துக்கு அலையும் ஜாதி என்பது எப்போதே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது, இவர் தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்தை மன்னித்து தமிழ் சினிமாவில் ஆக்ஷ்ன் ஹீரோவாக சான்ஸ் கொடுத்து நயனுடன் நடனமாட விட்டால் இவர் தனது பதவியை தூக்கி எறிந்து தமிழகம் வரத்தயார், அத்துடன் புலிகள் அவரை மன்னித்துவிட்டதாக வாக்குறுதியும் தர வேண்டும்.பி.கு: திருமா ஹீரோவாக நடிக்கும் போது கருணாவிற்கு என்ன குறை கருணா ஒரு ஆசியன் ஜேம்ஸ் பாண்ட்…!!!!

    Like

  9. வணக்கம் துர்கா//இதை ஒருமுறை ஷோபாசக்தியும் சி.புஷ்பராஜா குறித்து வெளிப்படுத்தி இருந்தார்.// பொதுவாக வரலாறுகள் சம காலத்தில் எழுதப்படும்போது இது போன்றா பல குற்றச்சாட்டுகள் ஏற்படும். இதே குற்றச்சாட்டு அடேல் பாலசிங்கத்துக்கும் உண்டு. ஆனால் பீர் முகம்மது சொல்கின்ற பிழைகள் இந்தியத் தலைநகரம் வாஷிங்க்டனிலே என்பது போல எல்லாருக்கும் தெரிந்த தகவல்களையே பிழையாக எழுதியுள்ளார்.//ஆனையிறவு தளத்தில் கட்டளைத்தளபதிகள் பால்ராஜ், தீபன் மற்றும் பானு களமுனை தளபதிகள் நகுலன், அமுதாப், கோபித் முதலிய பலர் முதன்மைப்படையணியும் CASR எனப்படுகின்ற Charles Antony Special Regiment . அனால் சம காலத்து வன்னியின் தென் போர்முனை அரங்குகளான கரப்புக்குத்தி, கனகராயன்குளம் மற்றும் நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற ஓயாத அலைகள் தொடர் சமர்கள் மற்றும் செய் அல்லது செத்து மடி தொடர் சமர் என்பவையே தளபதிகள் கருணா மற்றும் ஜெயம் பங்கெடுத்த ஜெயந்தன் படையணிகள் சமராடிய களங்கள் ஆகும். இதுபற்றி புலிகள் வெளியிட்ட ஆவணங்களே இந்த வரலாற்றுக்கு சாட்சி.//பல விடயங்களை தெரிந்துவைத்துள்ளீர்கள். ஆனால் ஒரு குறாஇந்த பட்ச விடயங்களை கூட தெரியாமல் எழுதும் மேற்சொன்ன கட்டுரைகள் மிகுந்த விசனத்தையே தருகின்றன//மேலும் அவர் குறிப்பிடும் குமரப்பாவுடன் கிட்டு என்பது என்ன வரலாறு என்பது அவருக்கே வெளிச்சம்.//இதை வாசித்தவுடன் பேசாமல் இவர் “ITS A FICTION” என்று எங்காவது குறிப்பிட்டுள்ளாரா என்று தேடினேன். அவ்வளாவு பெரிய் காமெடி இது

    Like

  10. வணக்கம் அனாமி, கருணா மீதான தனிப்பட்ட விமர்சனமாக அல்லாது அவர் பற்றிய கட்டுரை ஒன்றிற்கான எதிர்வினையாகவே எனது கட்டுரை அமைந்தது.

    Like

  11. வணக்கம் அனாமி//HAVE ANY READ THE LATEST INTERVIEW HE GAVE TO KUMUDHAM?, //ம்ம் வாசித்தேன். அதிலும் சில முரண்கள் எனக்கு உண்உ. அதில் கருணா அடிக்கடி தான் கொலிஜ் ல் படித்ததென்று சொல்கின்றார். ஆனால் எனக்கு தெரிந்த வரை பள்ளிக்கூடம் என்ற சொல்தான் பாவிகப்படுவது வழமை….. என்னவோ தெரியாது???

    Like

  12. வணக்கம் அருண்,கருணா மீதான தனிப்பட்ட விமர்சனமாக அல்லாது அவர் பற்றிய கட்டுரை ஒன்றிற்கான எதிர்வினையாகவே உங்கள் கட்டுரை அமைந்தது என்று எனக்கு நன்கு தெரியும், ஆனாலும் நடந்து முடிந்த கதைக்கு வினையும் எதிர்வினையும் எழுதிக்கொண்டிப்பது அரைச்சமாவை அரைப்பதையும் துவைச்ச துணியை துவைப்பது போன்றது,கருணா பிரிந்த ஆதார காரணங்களை முதலில் கண்டறிந்து அதை நீக்குவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் ஏன்னென்றால் கருணாவின் சின்ன சின்ன ஆசைகள் ஈடேற பல உயிர்கள் உடமைகள் அங்கங்கள் இழந்ததை மறக்க முடியாது, இனியும் ஒரு கருணா உருவாகாமல் தடுக்க புலிகள் இயக்கத்தில் உள்ள கடுமையான பாலியல் சட்ட விதிகளை சற்று தளர்த்த வேண்டும்…!!!! இதை எவ்வாறு நடைமுறை படுத்துவது என்று உங்கள் போல் அறிஞர்கள் கட்டுரை வரைய வேண்டும்…!!!!

    Like

  13. இதுதான் தமிழர்களிடம் உள்ள பெரிய குறைபாடு. வரலாறுகளை திரிபுபடுத்துவது. சரி, தளபதி கிட்டு வீரச்சாவடைந்தது 1993. தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் வீரச்சாவடைந்தது 1987. இவைகள் எல்லாம் ஈழம் பற்றி அக்கைறையோடு பார்ப்பவருக்கும்,அதேநேரத்தில் ஈழப்போராட்டத்தை நன்கு விமரிசனம் செய்பவருக்கும் தெரிந்திருக்கும். வேண்டும் என்று அவர் எழுதினாரா, அல்லது தவறாகவே அவர் புரிந்து கொண்டு வைத்துள்ளாரா தெரியவில்லை. சமர்களுக்கு எல்லாம் ‘தாய்ச்சமர்’ என்று புலிகளால் வர்ணிக்கப்படும் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமராகட்டும், அதன் பின்னர் நடந்த ஓயாத அலைகள் -03 வலிந்ததாக்குதல் ஆகட்டும் கருணா தலைமையில் ஜெயந்தன் படையணியே போரிட்டது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அது அவர்களின் நிதர்சனம் வெளியிட்ட கானொளிக்காட்சி பலவற்றிலே கருணா திட்டமிடும் காட்சிகளும் இருக்கின்றன.ஆனையிறவுச் சமர் நடைபெற்றது 2000 ஆம் ஆண்டு. அதைக் கைப்பற்ற பிரதான காரணமாக இருந்த குடாரப்பு தரையிறக்கமும், இத்தாவில் பெட்டிச் சமரும்தான். அதிலே பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலே சார்ள்ஸ் அந்தனி விசேட படைப்பிரிவும், கேணல் விதுஷா தலைமையிலே மாலதி படையணியும்தான் பெரும் பங்காற்றின. ஆனால் ஆனையிறவுக்கு பின்னால் தென்புறமாக சண்டை செய்தது ஜெயந்தன் படையணி. ஆனையிறவை கைப்பற்றிய பின்னர் ஆனையிறவு என்ற பெயர் தாங்கிப் பலகையில் இவர்கள் ‘ஜெயந்தன் படையணி’ என்று பொறித்திருந்தனர். இதனை ஏ-9 நெடுஞ்சாலை வழியாக பயணித்த அனைவருக்கும் தெரியும். இதை வைத்துத்தான் பீர் முகம்மது அவர்கள் முடிவெடுத்தாரா தெரியாது. எல்லாவற்றிற்கும் ஒருங்கிணைப்புத் தளபதியாக கேணல் பானு அவர்கள் இருந்தார். அவரே பால்ராஜ் உடன் -வரலாற்று முக்கியம் மிக்கதான- கைலாகு கொடுத்து ஆனையிறவில் கொடி ஏற்றினார். ஆனால் ஆனையிறவு மீட்புச் சமர் என்றால் அது உடனே பிரிகேடியர் பால்ராஜின் பெயரைத்தான் நினைவு படுத்தும். அதே போலத்தான் ஜெயந்தன் படையணியையும் அதை அப்போது வழிநடத்திய கருணாவையும் பற்றி கதைத்தால் அது ‘ஜெயசிக்குறு’ முறியடிப்புச் சமர்தான் நினைவு வரும்.இவைகள் எல்லாம் தகுந்த காலம் வரும் போது விடுதலைப்புலிகள் வெளிப்படுத்துவர். ஆனாலும் இவைகள் தொடர்பாக நிறைய கானொளிக்காட்சிகளை அவ்வப்போது வெளியிட்டும் உள்ளனர். வரலாறு சம்பந்தமாக கட்டுரையோ அல்லது ஒரு ஆராய்ச்சியோ, செய்பவர் நல்ல ஒரு உசாத்துனை வைத்திருப்பது உகந்தது. அதனை இதில் இருந்து பெற்றேன் என்று குறிப்பிடுவது சிறந்ததும் ஒரு நல்ல பண்புமாகும்

    Like

  14. விரிவான பதிலுக்கு நன்றி தமிழ் விரும்பி. நீங்கள் சொன்னது போல சரியான தரவுகள் இல்லாமல் அரசியல் கட்டுரைகள் எழுதுவது முகப்பிழையானது.மேலும் நீங்கள் சொன்ன ஓயாத அலைகள் 3 பற்றிய ஒளிப்பட துண்டுகளை நானும் பார்த்தேன்.எதிலும் இப்போது கருணாவின் படத்தை காணாவில்லை. அனைத்தையும் அழித்துவிட்டார்கள் என்றூ நினைக்கின்றேன். அது போல கருணாவின் பிரிவின் பின்னர் நீங்கள் சொன்ன ஜெயந்தன் படையணி என்று குறித்த பெயர்ப்பலகை கூட அகற்றப்பட்டதாய் அறிந்தேன்

    Like

  15. புலி தளபதி கிட்டு மீது ரகுமான் ஜான் கிறநைட் வீசியதால் புலி அருணா நாவலர் வீதியில் புலியின் தடுப்பு முகாமில் இருந்த நூற்றுகணக்கான மாற்று கருத்து போராளிகள் சுட்டு கொல்லப்பட்டு மாநகரசபை நீர் வண்டியால் தெருவில் ஓடிய இரத்த வெள்ளம் கழுவியதை இன்னமும் மறக்கவில்லை.முதன் முதலாக சித்திரவதை முகாம் ஆரம்பித்த பெருமை ரகுமான் ஜான் இருக்கும்போது புளட்டால் ஒரத்தநாடு தஞ்சாவூரில் ஆரம்பிக்கப்பட்டது.புலி தளபதி பொட்டன் கூட புளட்டால் கடத்தப்பட்டு அந்த முகாமில் வதைக்கப்பட்ட போது பிரபாகரன் புளட் கண்ணனை சென்னையில் கடத்தி பொட்டனை விட்டால் தான் கண்ணனை விடுவோம் என்று சொல்லி பொட்டன் விடுவிக்கப்பட்டான்.

    Like

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑