குப்பிழான் சண்முகனின் “கோடுகளும் கோலங்களும்”

407px-1645தொண்ணூறுகளுக்கு முன்னர் வெளியான ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் குறித்து எழுதுவது என்று யோசித்தவுடன் தனித்துத் தெரியும் மற்றும் ஒருவர் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள்.  70களில் ஈழத்தில் படைப்பிலக்கியம் தொடர்பாக தொடர்ச்சியாக இடம்பெற்ற வாதங்கள், உரையாடல்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியாக படைப்பிலக்கியங்கள் வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்தன.  அந்த நேரத்தில் இருந்த, அவர்கள் சார்ந்திருந்த இலக்கிய அணிகள், போக்குகள் என்பவற்றைப் புறந்தள்ளி ஒரு வாசகனாக தற்போது பார்க்கின்றபோது, மொழிக்கும் வடிவத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, அழகியலை முன்னிலைப்படுத்திய படைப்பாளிகளில் ஒருவராக குப்பிழான் ஐ. சண்முகன் இருக்கின்றார்.

குப்பிழான் ஐ. சண்முகனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பான கோடுகளும் கோலங்களும், அலையின் இரண்டாவது வெளியீடாக 1976ம் ஆண்டு மார்கழியில் வெளியாகியிருக்கின்றது.  இத்தொகுப்பில் 1969 முதல் 1974 வரை வெவ்வேறு இதழ்களில் வெளியான பதினொரு சிறுகதைகள் இடம்பெறுகின்றன.  இந்த நூலை இப்போது பார்த்தாலும் உடனே கவர்வது அதன் அழகிய அட்டைப்பட வடிவமைப்பும் நேர்த்தியான வார்ப்புருவும்.  அட்டைப்படத்தினை வடிவமைத்தவர் ஓவியர் ரமணி.  அச்சுக்கலையும் தொழினுட்பமும் வளர்ந்திருக்கும் இன்றைய நாட்களில் கூட புத்தகங்கள் ஏனோதானோ என்ற வடிவமைப்புடன் வெளிவருவதைப் பார்க்கின்றபோது நாற்பது வருடங்களுக்கும் முன்னைய இந்தப் புத்தக உருவாக்கம் நிச்சயம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதாகின்றது.

இத்தொகுப்பில் இருக்கின்ற கதைகள் பெரிதும் தன் அனுபவக் கதைகளாக, அகவயம் சார்ந்தனவாக உள்ள அதேவேளை பல்வேறு வாசிப்புகளுக்கான சாத்தியத்தை கச்சிதமாகக் கொண்டிருக்கின்றன.  “ஒரு றெயில் பயணம்” என்கிற கதை இந்த அளவில் மிக முக்கியமானது.  ஏதோ ஒரு றெயில் பயணம் ஒன்றில் கதை நிகழ்கின்றது.  கதைசொல்லி றெயில் பயணத்தில் ஒரு பெண்ணைக் காணுகின்றான், அவள் மீது ஒரு வித ஈர்ப்பு உருவாகின்றது, அவளுடன் பேச எத்தனிக்கின்றான்.  அவளைத் தனக்கு சிங்களம் படிப்பிக்க முடியுமா என்று கேட்கின்றான்.  “நாம் இப்போது றெயிலில், இப்பயணத்தில் நானும் நீங்களும் நண்பர்கள், பின் நான் யாரோ நீங்கள் யாரோ” என்று கூறி அவள் பிரிந்துசெல்கின்றாள் என்று கதை செல்கின்றது.  இங்கே றெயில் பயணம் என்பது எதை? வாழ்க்கையையா? அதன் அபத்தத்தையா?  அதன் நிலையின்மையையா?  எம் சக மனிதர்களுடன் எமக்கிருக்கும் சமூக உறவுகளைக் கூட நாம் ஒரு விதத்தில் றெயில்பயணமாகப் பார்க்கலாம் தானே? இவ்வாறான சாத்தியங்களுடன் வாசிப்பினைச் செய்யும்போது மிகுந்த சுவாரசிமாகின்றது இச்சிறுகதை.

குப்பிழான் சண்முகனின் மிகப் பெரிய பலம் அவர் காட்சிப்படுத்தும் விதம்.  அவர் எழுதும் ஒவ்வொரு காட்சியும் ஒரு தேர்ந்த ஒளிப்படக் கலைஞனின் நுட்பத்துடனும் கோணத்துடனும் மனதில் பதிவாகின்றது.  இந்தத் தொகுப்பு முழுவதும் நிறைந்திருக்கின்ற அவரது நுட்பமான விபரிப்புக்கு உதாரணமாக இந்தக் கதையில் அவர் கூறும் றெயில் காட்சியை ஒன்றைப் பார்ப்போம்,

“வண்டியில் கூட்டம் கூடியிருந்தது.  கடந்த ஸ்ரேசனில் ரெண்டு, மூன்று பேர்கள் வண்டியில் புதிதாக ஏறியிருப்பார்களென எண்ணினேன்.  நான் நின்ற இடத்தில் ஒரு வாலிபன் நின்று கொண்டு ஏதேதோ கதைகளில் மூழ்கியிருந்தான்.  அப்பால் ஒரு மீனவன் ஒரு வெறுமையான கூடையைக் கவிழ்த்து அமர்ந்திருந்தான்.  சுவீப் ரிக்கெற் விற்கும் பையன் ஒருவன் தன் சுவீப் ரிக்கெற்றுகள் கொண்ட பலகையை கையில் பிடித்தவண்ணம் கடற்கரையை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான்.  அவனுக்கு அப்பால் இருந்த ஓர் தாடிக்காரக் கிழவன், என்னையும் அவளையும் வெறிக்கவெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான்.  யாரோ ஒரு பிச்சைக்காரக் கிழவி ஒரு நவீன சினிமாப் பாடலைப் பாடிய வண்ணம் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தாள்.  அவள், எனக்கும் அவளுக்கும் முன்னால் வந்து நின்று கொண்டு அந்தப் பாட்டைப் பாடிக் கையை நீட்டினாள்”

“மீன்காரக் கிழவன் ஆதரே மம ஆதரே (நேசிக்கிறேன் நான் நேசிக்கிறேன்) என முணுமுணுத்தான், தாயின் அணைப்பிலிருந்த குழந்தை கையைக் காலை ஆட்டி விளையாடியது.  வாசலில் நின்ற இளைஞன் ஏதோ நினைவில் சிரித்துக்கொண்டான்”

என்றும் குறிப்பிடுகின்றார்.  அவ்வாறு பார்க்கின்றபோது படிமங்களூடாகச் சொல்லப்பட்டதோர் கதையென்ற வாசிப்பொன்றையும் செய்யமுடிகின்றது.  தவிர அவருக்கேயான நுட்பமாக விபரிக்கும் ஆற்றலினால் திரைப்படக் காட்சி ஒன்றினைப் பார்ப்பதுபோன்ற உணர்வையும் ஏற்படுத்துகின்றார்.

இதுபோலவே “மௌனகீதம்” என்கிற இன்னொரு கதையும் அகவயமான உரையாடல்களின் ஊடாக பிரிவொன்றிற்கான காரணங்களை சொல்லிச்செல்லுகின்றது.  இக்கதை எழுதப்பட்ட காலத்தில் இருந்த இலக்கியம் தொடர்பான நிலைப்பாடுகளைப் பற்றிய தன் கருத்துகளைச் சொல்வதற்கு கதையை ஒரு களமாக பாவித்திருக்கின்றார் குப்பிழான் சண்முகன் என்றே தோன்றுகின்றது.  இதே உத்திதான் “தடங்கள்” என்கிற கதையிலும் கையாளப்பட்டிருக்கின்றது.  இந்தக் கதையில் கதைசொல்லியும், நந்தகுமார், பொன்னுத்துரை ஆகிய மூன்று கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் கருத்துநிலையை வைத்து அக்காலத்தில் இருந்த இலக்கியம் குறித்திருந்த மூன்றுவகையான போக்குகளையும் ஓரளவு அவதானிக்கலாம்.  ஆயினும், இப்போது வாசிக்கின்ற போது அவை முழுமையாக சிறுகதை என்ற வடிவத்தை அடையவில்லை என்றே கருதமுடிகின்றது.

“ஒரு பாதையின் கதை” என்கிற கதை குப்பிழான் சண்முகம் வழமையாக்க் கையாளும் கதைக்களத்தைவிட்டு வேறானது.  இக்கதையில் ஆதிக்கசாதியைச் சார்ந்த, அதிகார வெறி பிடித்தவராக இருந்த ஒருவர் தன் குடிமையாக இருந்த ஒருவரின் மகனின் தர்க்கரீதியான வாதங்களால் கவரப்பட்டு kuppilanமனமாற்றம் அடைவதையும், அவ்வாறு “பாதையைச்” செப்பனிட்டு வீதியாக்கும் முயற்சியில் அவன் இறந்த பின்னர் அவர் அதனை நினைவுகூறுவதையும் கூறுகின்றது.  இந்தத் தொகுப்பில் ஏனைய கதைகள் தனிமனித அகவயம் சார்ந்தனவாயும், அழகியல் வெளிப்பாடுகள் குறித்ததாயும் இருக்க இக்கதை சமூகப் பார்வையுடன் இருக்கின்றது என்பதால் தொகுப்பில் வேறுபட்டுத் தெரிகின்றது.  “இணை” என்கிற இன்னொரு சிறுகதை ஒரே சாதியைச் சேர்ந்த ஆனால் வர்க்கத்தால் பிரிக்கப்பட்ட இருவர் காதலித்துத் திருமணம் செய்வது பற்றிக் குறிப்பிடுகின்றது ஆனால் கதை சொல்லப்பட்ட விதத்தில் பண வசதி குறைந்திருப்பவர்களுக்கு தாழ்வுச்சிக்கல் இருப்பதாகக் குறிப்பிடுவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.  “வேட்டைத் திருவிழா” கதையில் வேட்டைத் திருவிழா ஒன்றையும் அதன் பரபரப்பையும் கண்முன்னே கொண்டுவருகின்றார்.  ஆனால் இந்தக் கதையும், உணர்ச்சிகள், எல்லைகள் ஆகிய கதைகளும் வாலிபம் தாண்டிய வயதுகளில் உருவாகின்ற உறவுச்சிக்கல்களையே பேசுகின்றது.

கோடுகளும் கோலங்களும் என்கிற இந்த நூலை ஒரு தொகுப்பாக வாசிக்கின்ற போது உறவுகள் பற்றியும், உறவுச்சிக்கல்கள் பற்றியும் குறிப்பிட குப்பிழான் சண்முகன் ஒரே பாணியிலான வசனங்களைத் திரும்பத் திரும்பப் பாவிப்பது போன்ற தோற்றம் வருகின்றது.  இதனால் தொகுப்பில் உள்ள பல கதைகள், ஒரே கதையை மீள மீள வாசிப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றன.  காட்சிகளை நுட்பமாக விபரிப்பதை பல இடங்களில் சிறப்பாகச் செய்திருக்கும் குப்பிழான் சண்முகம், அதேயளவு இவற்றைக் களைவதிலும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னமும் சிறப்பானதாக இந்தக் கதைகள் அமைந்திருக்கும் என்றே கருத முடிகின்றது.  அதே நேரம் அப்போது மலிந்திருந்த சற்றே வறண்ட, நேரடியாக பிரசார தொனி வீசுகின்ற படைப்பிலக்கியங்களில் இருந்து தனிமனித உணர்வுகளையும், உறவுச் சிக்கல்களையும், அக உலகையும் பேசுவதிலும், அதற்கான கவித்துமான மொழிநடையைக் கையாண்டு அழகியல் ரீதியான ஒரு இலக்கிய செல்நெறியை உருவாக்கிய முன்னொடிகளில் ஒருவராகவும் குப்பிழான் ஐ. சண்முகனின் படைப்புகள் மிக முக்கியமானவை என்பதை உறுதியுடன் கூற முடிகின்றது.


1. குப்பிழான் ஐ. சண்முகனின் “கோடுகளும் கோலங்களும்”, “சாதாரணங்களும் அசாதாரணங்களும்”, “உதிரிகளும்..”., “அறிமுகங்கள், விமர்சன்ங்கள், குறிப்புகள்” ஆகிய நூல்கள் நூலகம் திட்ட்த்தின் கீழ் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.  விருப்பமானவர்கள்
http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%90.
என்ற இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.

2. அவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு “ஒரு பாதையின் கதை” என்ற பெயரில் காலச்சுவடு பதிப்பகத்தால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது

3. இக்கட்டுரை ஜுலை 2015 ஜீவநதி இதழில் வெளியானது.

One thought on “குப்பிழான் சண்முகனின் “கோடுகளும் கோலங்களும்”

Add yours

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑