நந்தினி சேவியரின் “அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்”

ayalசில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்கள் இணைந்து நந்தினி சேவியரின் “நெல்லிமரப் பள்ளிக்கூடம்” என்கிற சிறுகதைத் தொகுப்பினைப் பற்றிய அறிமுகம் ஒன்றினைச் செய்வதற்குத் திட்டமிட்டிருந்தனர்.  அதன் நிமித்தம் நெல்லிமரப் பள்ளிக்கூடத்தினை வாசித்ததன் ஊடாக நந்தினி சேவியரின் அறிமுகம் எனக்கு நிகழ்ந்தது. அதன் பின்னர் அண்மையில் விடியல் பதிப்பகம் வெளியிட்ட “நந்தினி சேவியர் படைப்புகள்” என்கிற தொகுப்பினையும் வாசிக்கக் கிடைத்தது.  ஈழத்துப் படைப்பாளி ஒருவரின் படைப்புகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்பது மகிழ்ச்சிகரமானது என்றாலும், அவர் எழுதிய 30 சிறுகதைகளில் 16 மட்டுமே இவ்விதம் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்பதும், ஏனைய 14 கதைகளின் பிரதிகளைப் பெறமுடியவில்லை என்பதும் கவலைக்குரியதாக இருக்கின்றது.

நந்தினி சேவியர் ஈழத்தில், இலக்கியத்தின் வடிவம், அதன் உள்ளடக்கம் பற்றிய தொடர்ச்சியான உரையாடல்கள் நிகழ்ந்துகொண்டிருந்த 60களின் பிற்பகுதி – 70களின் தொடக்கத்தில் எழுதத் தொடங்கியவர்.  நந்தினி சேவியர் படைப்புகள் நூலின் பதிப்புரையில் குறிப்பிடப்படுவது போல, இடதுசாரிப் போராட்டங்களின் ஊடாகவும், தீண்டாமை ஒழிப்பு வெகுஜனப் போராட்டங்களின் ஊடாகவும், தலித் மக்களின் ஆழ்மனங்களுக்குள் உருவாகும் வீறு கொண்ட மன எழுச்சியை, அவர்களின் துன்பியல் வாழ்வை, புறவயமாக, அதற்கேயுரிய கால நீட்சியுடன் கண்டடையும் முயற்சியாக நந்தினி சேவியரின் படைப்புலகம் அமைகின்றது.”  தான் எடுத்துக்கொண்ட விடயத்தை மக்களிடம் பேச அல்லது அதன் நிமித்தம் உரையாடல் ஒன்றினை மேற்கொள்ளும் சாத்தியத்துக்கான ஒரு கருவியாக புனைவைப் பிரயோகித்தவையே இவரது படைப்புகள்.  அவை பெரும்பாலும் சாதாரண, அடித்தட்டு மக்களின் வாழ்வியலை, அவர்கள் வாழ்வின் பாடுகளை, பிரயத்தனங்களை வெளிப்படுத்துவபவை.

நந்தினி சேவியரின் முதலாவது சிறுகதைத் தொகுப்பான “அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்” இனை 1993ம் ஆண்டு தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் வெளிட்டிருந்தனர்.  இதில் வேட்டை, அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு பகற்பொழுது, நீண்ட இரவுக்குப் பின், பயணத்தின் முடிவில், மத்தியானத்துக்குச் சற்றுப் பின்பாக, ஆண்டவருடைய சித்தம், தொலைந்து போனவர்கள் ஆகிய 8 கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.  இதன் முதலாவது பதிப்பிற்கு எழுதிய முன்னுரையில் இ. முருகையன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் : நடப்பியலின் அச்சுப் பதிவு போலத் தோற்றமளித்தாலும், இது வெறும் அப்பாவித்தனமாக ஆவணப்படுத்தல் என்று கருதி விடுதல் கூடாதுநடப்பியலின் எந்தெந்த அம்சங்களைப் படப்பிடிப்பின் பொருட்டுத் தெரிந்தெடுப்பது என்பதிலும், அவற்றுள்ளும் எவை எவற்றுக்கு எந்த எந்த அளவு அழுத்தம் தருவது என்பதிலும் கலைஞர்களின் கவனம் சிறப்பாக ஈடுபட்டதுஇதன் பயனாக நுணுக்கமான கலை நயங்கள் பிறப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. இவ்வகையாக எழுத்தாக்க நெறியின் சாயல்களையே நந்தினி சேவியரின் படைப்புக்களில் நாம் இனங்கண்டு கொள்ளுகிறோம்”.  எனது வாசிப்பிலும் முருகையனின் மதிப்பீட்டுக்கு ஈடு செய்வதாகவே “அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்” அமைகின்றது.

“ஒரு பகற்பொழுது” என்கிற கதை, குடும்பங்களின் வறுமை நிலையைக் குறிப்பிடுகின்றது.  குறிப்பாக இந்தக் கதை குறிப்பிடும் காலப்பகுதி ஶ்ரீமாவோ பண்டாரநாயகவின் ஆட்சிக்காலத்தில் ரேஷன் முறைமை நடைமுறையில் இருந்த காலமாக இருக்கவேண்டும்.  மூன்று பிள்ளைகள் இருக்கின்ற குடும்பம் ஒன்றிற்கு, ஒரு இறாத்தல் பாண் கிடைக்கின்றது.  அதைப் பகிர்ந்து உண்ணும்போது, இளையவர்களுக்காக, ஒன்பது வயதேயான மூத்த மகன் விட்டுக் கொடுத்து உண்ணுகின்றான்.  மாணிக்கம், அந்த வீட்டிற்குரிய கூப்பன் புத்தகத்தில் “வேலையாள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளவன்.  நாளாந்த கூலி வேலை செய்கின்ற அவனுக்கு தினமும் வேலை கிடைப்பதே அரிதாக இருக்கின்றது.  ஶ்ரீமாவின் ஆட்சி இடம்பெற்ற இக்காலத்தில் அடித்தட்டு மக்களே இன்னமும் வறுமையை அனுபவித்ததாகவும், பதுக்கல்களை செய்த வியாபாரிகள் மென்மேலும் சுரண்டல்களில் ஈடுபட்டதாகவும் கூறுவார்கள்.   கடையில் கடனுக்கு வாங்கிய பொருட்களுக்கான பணத்தை உரிய தவணையில் செலுத்தமுடியாத போது, கடை உரிமையாளன் அவர்கள் வீடு வந்து திட்டி விட்டுச் செல்லுகின்றான்.  இதனால் மாணிக்கத்தின் மனைவி செல்லம் தன்னிடம் இருக்கின்ற தோட்டை விற்றுக் கடனை அடைக்க முயல்கின்றாள்.  சுரண்டல்கள் நடைபெறும்போது கண்ணுக்குப் புலப்படாத நுட்பமான வலையமைப்புடன் நடைபெறுவதே வழமை.  அவளது தோட்டை நகைக்கடைக்காரன் அறாவிலைக்கு, 65 ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளுகின்றான்.  அதில் ரூ 64.83 கடைக்கடனுக்குப் போக 17 சதம் காசுடன் வீடு திரும்புகின்றாள்.  அப்போது வீட்டில் இருந்த ஒரு இறாத்தல் பாணையும் நாய் தூக்கிக் கொண்டு போக, பக்கத்து வீட்டு வள்ளியாச்சி ஒரு மரவள்ளிக் கிழங்கினைக் கொடுத்து சமாதானம் செய்கின்றாள்.  அன்றைய பொழுது அப்படிக் கழிய, அடுத்த நாள் எவ்விதம் ஆகும் என்கிற கேள்வியை எமக்கு எழுப்பியபடி கதை நிறைவுறுகின்றது.  அன்றைய அடித்தட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை சித்திகரிப்பதுடன் கலையமைதி கொண்டதாயும் இக்கதை அமைகின்றது.

“அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்” என்கிற கதையில் மாயக்கை என்கிற கிராமத்தில் கிட்டிணன் என்பவன் பனையால் விழுந்து இறந்துவிடுகின்றான்.  ஆதிக்க சாதிக்காரர்களுடன் அவனுக்கு விரோதம் இருந்ததன் காரணமாக அவனது உடலினை சுமந்துசெல்ல அவனது கிராமத்தவர்கள் பின்வாங்கி நிற்கின்றபோது அடிமைத் தளைகளில் இருந்து ஏற்கனவே விடுபட்ட அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு தைரியம் ஊட்டி, பாடையைச் சுமக்கச் செய்து அவர்களுக்கு காவலாகவும் செல்கின்றனர்.  இக்கதையில் “நாங்கள்” என்று சொல்லப்படுபவர்கள் எந்தக் குறிப்பிட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று நேரடியாகச் சொல்லப்படாதது ஒரு சிறப்பம்சம்.  அதனை, அவர்கள் ஏற்கனவே ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தம்மைப் பீடித்திருந்த ஏனைய தளைகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்றவர்கள் என்கிற வாசிப்பினையும் மேற்கொள்ளலாம்.  “செத்துப் போன அந்தக் காலத்தை நினைக்குந்தோறும் நாம் எமக்குள் மிகுந்த வெட்கமுறுவோம்”,  “எம் கண்முன் ஒரு பாதை தெரிந்துகொண்டிருந்தது.  அதன் வழியே நாம் நமது சந்ததியை வழிநடத்திச் செல்வதற்கு ஊக்கமாக இருந்தோம்” என்கிற வசனங்கள் ஊடாக இவை சுட்டிக்காட்டப்படுகின்றன.  இந்தக் கதையைப் பொறுத்தவரை எளிமையான இந்த  வசனங்கள் கதைக்கு வலிமையூட்டவே செய்கின்றன.  ஆயினும், கதை திட்டமிட்ட, முன் கூட்டியே அனுமானிக்கப்படக்கூடிய திசையோடும், அனுமானிக்கப் படக்கூடிய உரையாடல்களூடாகவும் கொண்டு செல்லப்படுவது ஒரு பலவீனம்.  கிட்டிணனின் இறந்த உடலைத் தூக்கிச் செல்லும்போது முருகன், “கூற்றாயினவாறு விலக்ககலீர்” என்கிற தேவாரத்தைப் பாடுகின்றான்.  திருநாவுக்கரசர் சமண மத்ததைத் தழுவியிருந்தபோது அவருக்கு சூலை நோய் வர, தான் செய்த பாவங்களை மன்னித்துப் பொறுத்தருளும்படி சிவனிடம் வேண்டிப் பாடியதாக இந்தத் தேவாரம் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது.  அவ்விதம், கிட்டிணன் செய்த பிழையை பொறுத்தருளுவதாக ஆதிக்க சாதியினரை இந்தப் பாடலினூடாக வேண்டுவதாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகின்றது.

தொகுப்பின் முதலாவது கதையாக அமைகின்ற “வேட்டை”, வடிவத்திலும் சொல்லப்பட்ட விதத்திலும் நன்றாக அமைந்திருக்கும் கதை.  இக்கதை தம்பர் என்பவர் தன் நாயுடன் செய்கின்ற இரண்டு வேட்டைகளின் சித்திகரிப்பாக அமைந்துள்ளது.  “தம்பரின் மெலிந்த தேகம் உடும்புத்தோலைப் போல சொரசொரத்து முந்திரிகை வற்றல் போல சுருங்கி அலையாகக் காட்சியளித்துக்கொண்டிருக்கும்” என்றும், “மெலிந்த எலும்புகள் உடலைப் புடைத்துக்கொண்டு வெளியில் தெரிய, முன்னங்கால் ஒரு பக்கம் சாய்ந்து தம்பரைப் போல கம்பீரமாக நடக்கும், ஓர் அலாதி… நாய் தான் தம்பர் … தம்பர் தான் நாய்” என்றும் நந்தினி சேவியர் தீட்டும் சொற்சித்திரம் முதன்மையாகக் குறிப்பிடப்பட வேண்டியது.  தவிர, அடித்தள மக்கள் அல்லது உழைக்கும் வர்க்கத்தினர் தமது வாழ்வில் விலங்குகளுடனும் கருவிகளுடனும் கொண்டுள்ள பிணைப்பு நந்தினி சேவியர் படைப்புகளில் அருமையாகச் சித்திகரிக்கப்படும்.  வேட்டை சிறுகதையில் தம்பருக்கும் அவரது நாய்க்கும் இடையிலான பிணைப்பு அதற்கு நல்லதோர் உதாரணம்.  இத்தொகுப்பிலேயே அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கதையில் ஆறுமுகம் என்பவனின் “வாய்ச்சி” சேதமடைவது பற்றி “கம்மாலைக்குப் போய் அதைத் தோய்வித்துவிடவேண்டும் என்று ஆறுமுகம் அடிக்கடி முனகிக் கொண்டிருந்தான்.  வலது கை ஊனமாகிவிட்ட்து போன்ற மனவருத்தம் அவனுக்கு” என்று குறிப்பிடுவார்.  அதுபோல, “ஒரு பகற்பொழுது” சிறுகதையிலே கோழி முட்டையிடுவது, தனது கோபத்தை ஆட்டின் மீது காட்டுவது, இறுதியில் அயல் வீட்டு வள்ளியாச்சி மரவள்ளிக்கிழங்கைக் கொடுத்து ஆறுதல் கூறுவது என்பனவும் பதிவாகும்.  குறித்த காலப்பகுதியிலான மக்களின் வாழ்வியல் பற்றிய ஆவணங்களாக இவை அமைகின்ற அதே நேரம், வெறும் தகவற்திரட்டுகளாக அமையாது கலையமைதியும் கொண்டுவிளங்குவது சிறப்பம்சமாகும்.

“ஆண்டவருடைய சித்தம்” என்கிற கதை விடுப்பு நாளிலும் வேலைத்தளம் பற்றிய சிந்தனையுடனேயே இருக்கின்ற ஒருவனைக் கதாநாயக விம்பத்துடன் பொருத்த முற்படுகின்றது.  அந்தப் பிரயாசையே இக்கதையை எனது வாசிப்பில் முழுமையான இலக்கிய வடிவினை எய்தாததாக ஆக்குகின்றது.   இக்கதை சொல்ல முயல்வது என்ன? என்று யோசித்தால் இக்கதை மத நிறுவனங்கள் எதிர் மார்க்சிசம் என்கிற துருவ நிலைகளைப் பேசுகின்றதா அல்லது அவனைப் புனிதனாக்கி, அவன் தியாகத்தை அவன் திருமணம் செய்ய ஒப்புதல் அளித்த அநாதை மடத்தில் இருக்கின்ற பெண்ணோ அல்லது சிஸ்ரர்மாரோ  புரிந்து கொள்ளவில்லை என்று கூறுகின்றதா என்றே சந்தேகம் எழுகின்றது.

“நீண்ட இரவுக்குப் பின்” என்கிற கதை நகர்ப்புறங்களில் வேலை தேடி கிராமங்களில் இருந்து செல்கின்றவர்களின் எதிர்பார்ப்புகள், யதார்த்த நிலை, அன்றைய காலப்பகுதியில் காலியாக இருந்த ஒரு தட்டச்சாளர் பதவிக்கு 30 சிங்களவரும் 20 தமிழரும் போட்டியிடுகின்ற நிலைமை ஆகியவற்றைப் பதிவாக்குகின்றது.  இதனூடாக அன்றைய வாழ்வியலின் குறுக்குவெட்டுமுகம் ஒன்று பதிவானாலும், இந்தப் பின்னணியை வைத்துக் கொண்டு பேசுகின்ற அரசியல் நேரடியான பிரச்சாரமாக, நாடகீயமானதாக அமைகின்றது.  இதே பலவீனத்தை “பயணத்தின் முடிவில்” என்கிற கதையிலும் காணக் கூடியதாக இருக்கின்றது.

ஒரு எழுத்தாளராகவும், சமூக அக்கறை கொண்டவராகவும் நந்தினி சேவியரை அவரது எல்லாக் கதைகளிலும் காணக்கூடியதாக உள்ளது அவரது பெரும் பலமாகும்.  குறிப்பாக அவரது கதைகள் வெவ்வேறு நிலவியல் தளங்களில் வாழுகின்ற அடித்தள, உழைக்கும் வர்க்க மக்களின் வாழ்வியலையும், அவற்றின் வெளிப்பாடுகளையும் பதிவுசெய்கின்றன.  சில கதைகள் இவற்றைப் பதிவுசெய்வதன் ஊடாகவே எழுத்தாளர் வாசகருடன் செய்ய விரும்பும் உரையாடலை செவ்வனே நிறைவேற்றி விடுகின்றன; சில கதைகளில் அந்த உரையாடலை நேரடியாக எழுத்தாளரே வாசகருடன் மேற்கொள்ளுகின்றார்.  இதில் முன்னையவை கலையமைதி கொண்டதாயும் பின்னையவை பிரச்சாரநெடி கொண்டதாயும் எனது வாசிப்பில் தோன்றுகின்றன.  ஆயினும் இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமல்லாமல் பண்பாட்டு அசைவுகள் பற்றிய ஆர்வம் உள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக, கலை நேர்த்தியும், சொற்சித்திர கச்சிதமும், சமூக ஏற்றத்தாழ்வுகள் மக்கள் மீது திணிக்கு நெருக்கடி பற்றிய பார்வையும், நிலவியல் வர்ணனைகளும், அடித்தட்டு மக்களின் வாழ்வியல் பற்றிய சித்திகரிப்புகளும் கொண்டவையாக மிளிர்கின்றது “அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்” சிறுகதைத் தொகுப்பு.

Capture


குறிப்பு

  1. இக்கட்டுரை ஓகஸ்ட் மாத ஜீவநதி இதழில் வெளியானது.
  2. அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நூல் நூலகம் திட்டத்தின் கீழ் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.  அதற்கான இணைப்பு  http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D   அல்லது http://goo.gl/UDRnzE
  3. நந்தினி சேவியர் படைப்புகள் என்றபெயரில் அவர் எழுத்துகள் தொகுக்கப்பட்டு விடியல் பதிப்பகத்தால் 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டன.

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑