மீசை என்பது வெறும் மயிர்

மீசைபுனைவு நூலொன்றின் புனைவு எதில் இருந்து தொடங்குகின்றது? என்பதைக் கேள்வியாக எழுப்பி, புனைவு நூலொன்றின் புனைவு அதன் அட்டையில் இருந்தே தொடங்குகின்றது என்று நந்தஜோதி பீம்தாஸ் கூறுவதாக “மீசை என்பது வெறும் மயிர்” என்கிற நூலில் வருகின்றது.  என்ன சுவாரசியம் என்றால் புனைவினை அதன் முன்னட்டையில் இருந்து பின்னட்டை வரை புனைவாகவே கொண்டமைந்த நூல் என்று மீசை என்பது வெறும் மயிரே அமைகின்றது.

யார் இந்த நந்தஜோதி பீம்தாஸ்? நாடு திரும்பாத எழுத்தாளர் என்ற பொதுத் தலைப்பின் கீழ் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பலரது ஆக்கங்களை வெளிக்கொணரும் திட்டம் ஒன்றினை நந்தஜோதி பீம்தாஸ் என்ற சாதி வெறி காரணமாக நாட்டைவிட்டு பல நாடுகளாக அலைந்து தற்போது ஜெர்மனியில் இருக்கின்ற தீவொன்றில் வசிக்கின்ற எழுத்தாளரிடம் இருந்து தொடங்குவதாக Otherside என்கிற பதிப்பகத்தின் வெளியீட்டுப் பிரிவின் செயலாளரின் பதிப்புரை இந்நூலில் கூறுகின்றது.  இதில் நந்தஜோதி பீம்தாஸ் என்பவரே ஒரு புனைவுப் பாத்திரம்.  எனவே அவரிடம் எடுக்கப்பட்டதாக வரும் நேர்காணல், அவர் பற்றிய அறிமுகக் குறிப்பு அவர் எழுதியதாக குறிப்பிடப்படும் Moustache : Nothing But Hair என்கிற நாவல், அதற்காக எழுதப்பட்ட மேலே குறிப்பிடப்பட்ட பதிப்புரை, அந்த நாவலின் சுருக்கமான தமிழ் மொழிபெயர்ப்பு என்று அனைத்துமே ஆதவன் தீட்சண்யாவால் புனைவாக எழுதப்பட்டிருக்கின்றது.  வாசிக்கும்போது ஜேஜே சிலகுறிப்புகள் நினைவில் தோன்றினாலும், இது ஜேஜே சில குறிப்புகளை விடவும் வேறுபட்டது.  சுவாரசியமான வித்தியாசமான புனைவுவடிவம்.

திருமண நாளின்போது மாப்பிள்ளைச்சவரம் செய்யும்படி பணிக்கப்பட்டபோது மாப்பிள்ளையின் ஆணுறுப்பை வெட்டி வீசிவிட்டு, சிலநாட்களில் இனி இவன்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் சேவகம் புரிவதில்லை என்ற முடிவோடு தமிழகத்திலிருந்து வெளியேறி இலங்கைக்குத் தனது 19வது வயதில் வந்து சேர்ந்த கனகமூர்த்தி, அவரது மகன் ஆனந்தம்பிள்ளை என்கிற பாத்திரங்களூடாக இலங்கை மலையக அரசியல் வரலாறு, அவர்களின் வாழ்நிலை என்பனவும் குறிப்பிடப்படுகின்றன.  குறிப்பாக ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் பற்றியும் அது பற்றிய தமிழ்க்கட்சிகளின் நிலைப்பாடுகள் பற்றிய தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் ஆனந்தம்பிள்ளை என்பவரின் கதையைச் சொல்லும்போது பகிரப்படுகின்றன.  அதிகாரங்களுக்கு எதிரான குரல்களும், பகடியுமாய் புனைவு நிரம்பியிருப்பது இன்னுமொரு முக்கிய அம்சம்.  அண்மைக்காலத்தில் வெளியான புனைவுகளில் வாசிப்பதற்குப் பரிந்துரை செய்யப்படக்கூடியது “மீசை என்பது வெறும் மயிர்”

000

சிறுவர் நூல்கள்

இப்பொழுதும் தமிழில் சிறுவர் நூல்கள் வருகின்றனவா? என்று ஈழத்தில் இருக்கும் நண்பர்க்ளுடன் பேசிக்கொண்டிருந்தேன்.  தமிழில் சிறுவர் நூல்கள் என்பதே அரிதானதாகி விட்டது.  வந்துகொண்டிருப்பவையும் பெரிதும் “கொமிக்ஸ்” நூல்கள் என்ற வகையைச் சேர்ந்தனவாகவே இருக்கின்றன. கடந்த சில வருடங்களில் எஸ். ராமகிருஷ்ணன் ஒருவரே தொடர்ச்சியாக சிறுவர் விதைநூல்களை எழுதிக்கொண்டிருக்கின்றார்.  நான் சிறுவனாக இருந்த நாட்களில் பழனியப்பா பிரதர்ஸ் நிறைய சிறுவர் நூல்களை வெளியிட்டார்கள். அது போல ராதுகா பதிப்பகம் மூலம் நிறைய ரஷ்ய நூல்கள் தமிழில் வெளியாகின. வாண்டுமாமா அறிவியல் கலந்து நிறையப் புத்தகங்கள் எழுதினார். 1990 இல் கோட்டை பிரச்சனை காலப்பகுதிகளில் பதுங்கு குழியில் இருந்து தம்பியுடன் யார் முதலில் வாசிப்பது என்று சண்டை போட்டு வாசித்த “இதையும் தெரிந்து கொள்ளுங்கள்” என்ற வாண்டுமாமாவின் புத்தகம் நினைவுக்கு வருகின்றது.  “நெருப்புக்கோட்டை” என்றொரு புத்தகம் வாண்டுமாமா எழுதியது. அதை வாசித்தவர்கள் அப்போது எம் வகுப்பில் நானும் இன்னொரு நண்பனும்தான். வகுப்பு முழுவதும் அந்நாவல் பற்றி கதை கதையாகச் சொல்வோம். வாண்டுமாமாவுக்கு அப்போதே 65 வயதாகி இருந்ததை எம்மால் நம்பவேமுடியவில்லை.

அது போலவே என் சிறுவயதில் நான் நவாலி YMCA யில் பெற்று வாசித்த வீரமணியின் விடுமுறை என்ற சிறுவர் நாவல் எனக்கு அப்போது மீண்டும் மீண்டும் வாசிக்கும் அளவு பிடித்திருந்தது.  இந்நாவலில் சிறுவர்களுக்கு இடையில் கிரிக்கெட் விளையாடுகையில் வருகின்ற சண்டை ஒன்றின் காரணமாக ஒரு அவர்கள் கிரிக்கெட் விளையாடும் மைதானத்திற்கு சொந்தக்காரரான ஒரு சிறுவனின் தந்தை மற்ற சிறுவர்கள் அந்த மைதானத்தில் இனி விளையாட முடியாது என்று அனுமதி மறுத்துவிடுவார்.  சிறுவர்கள் விளையாட இடம் இல்லாது இருப்பர்.  அப்போது வீரமணி என்ற சிறுவனின் தந்தை எல்லா சிறுவர்களையும் அழைத்து சிறுவர்கள் விளையாட ஒரு மைதானத்தை எப்படி சிறுவர்களே பணம் திரட்டி வாங்கலாம் என்று ஆலோசனை தருவார்.  அதன் படி சிறுவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, அந்த வீட்டில் தேவைக்கு அதிகமாக அல்லது பயன்படுத்தாமல் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன, என்னென்ன சேவைகளை அவர்களால் பிறருக்கு வழங்கப்படும் என்றும், அது போல என்னென்ன பொருட்களும் சேவைகளும் தேவைப்படுகின்றன என்றும் விபரங்களைத் திரட்டுவர்.  பின்னர இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்கள் விரும்பிய தொகையை தமக்கு தரக்குக் கூலியாகக் தரும்படி கேட்பர்.  இவ்விதம் மைதானம் வாங்கப் பணம் திரட்டப்படும்.

அந்நாட்களில் சிறுவர் இதழ்கள் என்று அம்புலிமாமா, ரத்னபாலா, பூந்தளிர், பாலமித்ரா, கோகுலம் என்று பல்வேறு இதழ்கள் வெளியாகிக்கொண்டிருந்தன.  போர்க்காலங்களில் கூட யாழ்ப்பாணத்தில் இருந்து அறிவுக்களஞ்சியம், அர்ச்சுனா, . நங்கூரம் போன்றன வெளியாகிக்கொண்டிருந்தன.  நங்கூரத்தை சிறுவர் இதழ் என்பது பொறுத்தமில்லை என்றாலும் மாணவர்கள் அதனை விரும்பி வாசித்து வந்தனர்.  சாளரம், வெளிச்சம் போன்ற இதழ்களும் மாணவர்களுக்காக வெளியாகிக்கொண்டு இருந்தன.  உலகஉலா என்ற பெயரில் உலக நடப்புகள் பற்றிய ஆங்கிலக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகளும் சில நேரடிக் கட்டுரைகளுமாக ஓர் இதழ் -கிட்டத்தட்ட The Economist ன் தமிழ் வடிவில்- வெளிவந்துகொண்டிருந்தது.  சில காலங்களின் முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து விஜய் என்று ஒரு சிதழ் சிறுவர்களுக்காக வெளியானது என்று அறிய முடிந்தது.  ஆயினும் அதன் எந்தப் பிரதியையும் நான் படிக்கவில்லை.  தற்போதையை மாணவர்களது நேரத்தின் பெரும்பகுதியை தொலைக்காட்சியும், இணையமும் பறித்துவிட்டது என்பது வேதனையானது.  இதனால் தம் பால்யத்தைத் தொலைத்த ஒரு தலைமுறை உருவாகிவருகின்றது.

கடந்த சில மாதங்களில் யாழ்ப்பாணத்தில் விதை குழுமத்தினர் குட்டி இளவரசன் நூல் வாசிப்பு, ஆயிஷா நூல் வாசிப்பு, குழந்தைகளுக்கான ஓவிய நிகழ்வு என்று மூன்று நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருந்தனர்.  இது போன்ற இளைஞர்களின் செயற்பாடுகளே நம்பிக்கையூட்டுவதாக அமைகின்றன.

0000

தழும்பு குறும்படம்

தழும்புஈழத்திலிருந்து தொடர்ச்சியாக குறும்படத் உருவாக்கங்களிலும், நடிப்பிலும் பங்களித்துக் கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர் மதி சுதா.  குறும்படம் என்பதனை ஒரு தனியான கலை வடிவமாக உணர்ந்து பங்களித்துக்கொண்டிருப்பவர் இவர்.  இவரது அனேக குறும்படங்கள் முன்னாள் போராளிகள் பற்றியும் சமூகத்தில் இன்று அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் கருவாகக் கொண்டவை.  அதேநேரம் மக்களின் சம காலப் பிரச்சனைகள் பற்றிய கவனப்படுத்தல்களையும் தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருப்பவை.

தழும்பு என்ற குறும்படத்தில் போராட்டத்தில்  ஒரு கை ஊனமுற்ற ஒரு முன்னாள் போராளி ஒருவன் சிறியதோர் பெட்டிக்கடையை வைத்து நடத்துகின்றான்.  ஒரு சிறுவன் வந்து சிகரெட் கேட்கும்போது உனக்கு எத்தனை வயசு என்று கேட்டு கொடுக்க மறுக்கின்றான். அதைப் பார்த்குக்கொண்டிருக்கும் ஒருவர் “உனக்கேன் தேவையில்லாத வேலை, பெரியாக்களோ, சின்னப்பெடியங்களோ ஆர் கேட்டாலும் கேட்ட சாமான்களைக் கொடுக்கிறது தானே, இயக்கத்தில இருந்து வந்தவர்க்கு சனத்தின்ட நிலைப்பாடு தெரியாமல் இருக்கு” என்கிறார்.  வழியில் ஒரு நண்பனிடன் வங்கி கடன் எடுக்க உதவுமாறு கேட்க அவன் “உனக்குத் தெரியும் தானேடா உங்களுக்கெல்லாம் கையெழுத்து வச்சா பிரச்சனை” என்கிறான்.  அவன் சிகரெட் கொடுக்க மறுத்த சிறுவன் வழியில் தன் நண்பர்களுடன் சேர்ந்து கேலி செய்கின்றான்.  இதனால் அவன் ஆத்திரமுற்று சிறுவனை அறைந்துவிட சிறுவனின் தந்தை, “காட்டுமிராண்டி, செத்தசனத்திட்ட காசை அடிச்சு கடையைப் போட்டிட்டு ஊரை ஏமாத்திறாய், கொலைகார நாய்” என்று வசை மாரி பொழிகின்றான்.  மக்களுக்காகப் போராடி, ஊனமுற்ற பின்னரும் கூட சமூகப் பொறுப்புடன் இருப்பவனுக்கு இவையெல்லாம் தழும்பாகப் படிகின்றன.

நெற்கொழுதாசனின் மூலக்கதைக்கு மதி சுதா திரைக்கதை அமைத்து இயக்கிய இக்குறும்படம் பல்வேறு பரிசுகளையும் வென்றுள்ளது.  அத்துடன் தற்போது யாழ்ப்பாணத்தில் இளவயதினரிடையே அதிகரித்து வரும் புகைத்தல் பழக்கத்தையும் அது பற்றிய அக்கறை சமூகத் தலைவர்கள் மத்தியில் இன்னமும் ஏற்படவில்லை என்பது பற்றிய கவனத்தையும் கோரி நிற்கின்றது.  இவரது பெரும்பாலான குறும்படங்களை கீழே இணைக்கப்பட்டுள்ள யூ-ட்யூப் பக்கத்தில் பார்க்கலாம்.

https://www.youtube.com/channel/UCYQLM5x3OvzfCAUruMskKmg


இக்கட்டுரை நான் தாய்வீடு பத்திரிகையில் நான் எழுதும் சொல்லதான் நினைக்கிறேன் என்ற தொடரின் 6வது அங்கமாக செப்ரம்பர் 2015ல் வெளியானது.

தமிழ்நதிக்கு நன்றி!