ஆனந்தமயிலின் எழுத்துகளையும், அவ்வாறு ஒரு எழுத்தாளர் இருந்தார் என்பதையும் மிக மிகத் தாமதமாக, அவர் இறந்தும் சில வருடங்களுக்குப் பின்பாகவே நான் அறிந்துகொண்டேன். சென்ற ஆண்டு யேசுராசா அவர்கள் எழுதிய நினைவுக்குறிப்பு ஒன்றினூடாகவே ஆனந்தமயில் பற்றிய அறிமுகம் எனக்குக் கிடைத்தது. சில காலங்களின் பின்னர் “ஓர் எழுதுவினைஞனின் டயறி” என்கிற அவரது சிறுகதைக் தொகுதியும் கிடைத்தது. படைப்பு என்பது ஓயாமல் பிரசவித்துக் கொண்டிருப்பது அல்ல, அது ஒரு எழுத்தாளரது இயல்பான மனவெழுச்சியாலும், பாதித்த, மனதிலும் நினைவுகளிலும் அசைபோட்ட விடயங்களை இயல்பாகவும் கலையமைதியுடனும் வெளிப்படுத்துவதாலும் உருவாகுபவையே நல்ல படைப்புகளாகும் என்கிற வாதத்தை ஒட்டியவை ஆனந்தமயிலின் சிறுகதைகள்.
ஈழத்துச் சிறுகதைகளில் வடிவத்திலும் வெளிப்பாட்டு முறையிலும் பெருமாற்றங்கள் நிகழ்ந்த எழுபதுகளில் எழுத ஆரம்பித்தவர்களுள் ஆனந்தமயிலும் ஒருவர். கரவெட்டியில் 1947 ஆம் ஆண்டில் பிறந்த ஆனந்தமயில் எழுதி வெளியான ஒரே ஒரு சிறுகதைத் தொகுதியான “ஓர் எழுதுவினைஞனின் டயறி” இல் அவர் எழுதிய ஒற்றைக்கால்கோழி, முருகைக்கற்பூக்கள், காக்காச்சி கரிமகளே, திருவிழா, ஓர் எழுதுவினைஞனின் டயறி, வாழும் வெளி, ஒரு கட்டுமரம் காத்திருக்கிறது, கொலுமீட்பு, நண்பனும் ஒரு புளியமரமும், விதி, கலை வந்தபோது, விளக்கீடு ஆகிய பன்னிரண்டு சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. விளக்கீடு என்கிற கதை 1971 இலும் காக்காச்சி கரிமகளே என்கிற கதை 1998 இலும் எழுதப்பட்டிருக்கின்றது. இருபத்தியேழு வருடங்களில் பன்னிரண்டு சிறுகதைகள். ஆனால் தனது படைப்புகளால் தன்னை நிறுவிக்கொள்ள ஆனந்தமயிலுக்கு அது போதுமானதாக இருக்கின்றது. ஆறு சிறுகதைகளையும், ஐந்து கவிதைகளையும் கொண்ட அவரது தொகுப்பு ஒன்று எண்பதுகளில் வெளிவர இருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட தடங்கல்களினால் இந்நூல் பின்னர் 2008 இல் பன்னிரண்டு சிறுகதைகளுடன் வெளியானதாகவும் பதிப்புரையில் இருந்து அறிந்துகொள்ள முடிகின்றது.
எழுபதுகளில் எழுதப்பட்ட அனேகக் கதைகளில் தென்படுகின்ற சமூகக் கோபம், சமூக வழக்கங்களுக்கு எதிராக படைப்புகளில் கதாபாத்திரங்களும், சில சமயங்களில் படைப்பாளியும் நேரடியாகவே காட்டுகின்ற எதிர்வினை என்பவற்றை அவரது முதலாவது சிறுகதையாக அமைகின்ற விளக்கீடில் காணலாம். கணவனை இழந்த பெண்ணொருத்தி தன் சிறுவயது மகனை மீன்களை விற்று வரும் குறைந்த வருமானத்தில் வளர்க்கிறாள். தனித்துவாழும் பெண் மீது சமூகம் திணிக்கும் ஒடுக்குமுறையையும், வருமான ஏற்றத்தாழ்வு சிறுவர்கள் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் போன்றவற்றை இக்கதையில் ஓரளவு காட்டினாலும் விளக்கீடு நாளின்போது தன் குடிசையையே கொழுத்திவிட்டு அவள் தன் மகனுடன் கிராமத்தைவிட்டு வெளியேறுவதாக வருகின்ற முடிவானது சமூக அவலங்கள் பற்றிய நேரடியான எதிர்வினையாக, இப்போதைய வாசிப்பில் தெரிகின்றது.
திருவிழா என்கிற சிறுகதை கால ஒழுங்கின்படி விளக்கீடிற்கு அடுத்ததாக எழுதப்பட்டிருக்கின்றது. ஆடம்பரமாகக் கொண்டாடப்படும் கோயில் திருவிழா ஒன்றினைக் களமாகக்கொண்டிருக்கின்ற இக்கதை அன்றைய இளைஞர்களின் மனநிலை, கிராமத்து மனிதர்களுக்கு இடையில் இருக்கின்ற வருமான ஏற்றத்தாழ்வு, ஏழை, பணக்காரர் என்கிற வேறுபாடு போன்றவற்றால் எழக்கூடிய சிக்கல்கள், தலைமுறை இடைவெளி காரணமாக எழக்கூடிய முரண்நிலை என்பவற்றைச் சுட்டி நிற்கின்றது. கடவுள் இல்லை என்று வாதிட்டு தகப்பனிடம் அடிவாங்கும் மகன், கசங்கிய சேலை கட்டியிருக்கின்ற பெண்ணைப் பார்த்து இன்னொரு பெண் ஏளனமாகச் சிரிப்பதைப் பார்த்து கோபங்கொள்ளும் கதை சொல்லி, கோயில் குளமென்றால் அவர் இதைத்தான் போட்டுத் திரிவார் என்று தனது மகன் அணிந்திருக்கும் சிகப்பு நிற சட்டை பற்றிக் கூறும் தாய், இசைக்குழுவினர் “எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்” என்ற பாடலைப்பாடி முடிக்க பலமாகக் கைதட்டும் இளைஞர் குழு, அந்தக் குழுவில் இருக்கின்ற தன் அத்தானைப் பார்த்துப் புளகாங்கிதப்படும் பெண், தெருவில் சிவப்பாலும் வெள்ளையாலும் எழுதப்பட்டிருக்கின்ற புரட்சி வாசகங்கள், அவற்றை உரக்க வாசித்துச் செல்லும் ஊர்ப்பெடியங்கள் என்று எழுபதுகளின் ஈழத்துக் கிராமம் ஒன்றினைக் கண்முன்னே நிறுத்துகின்றார் ஆனந்தமயில்.
வறுமையின் பாடுகளைப் பேசுகின்ற இன்னொரு கதை “ஒரு கட்டுமரம் காத்திருக்கின்றது”. இந்தக் கதையில் சிறுவயதில் தந்தையை இழந்த பின்னர் தாயாரால் மீன் விற்றும், மழைக்காலத்தில் மீன் பிடி பாதிக்கப்படும்போது நெல்லுக் குற்றியும், அரிசிமா இடித்தும் வளர்க்கப்படும் தருமு என்பவன் தன் பட்டப்படிப்பு முடிய நான்கு மாதங்களே இருக்கின்றபோது படிப்பைக் கை விடுகின்றான். வசதி நிறைந்த அவனது பெரியப்பா அவனது அக்காவிற்கு இரண்டாம் தாரமாக, இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை மணமுடிக்குமாறு திருமண ஏற்பாடு ஒன்றை முன்வைக்கின்றார். முப்பத்தைந்து வயதிலேயே அறுபது வயதுக் கிழவியாகத் தென்படுகின்றாள் அவனது தாய். ஒரு விதத்தில் விளக்கீடு கதையின் நீட்சியாக இக்கதை அமைகின்றது. அதேநேரம் நேரடி வாக்குமூலம் போன்று அமைவது ஒரு குறை.
ஓர் எழுதுவினைஞனின் டயறி என்கிற புத்தகத்தின் தலைப்பில் இருக்கின்ற கதை, வடிவத்தில் அவரது முன்னைய மூன்று கதைகளை விட நிறைய மாறி இருக்கின்றது. சமூக ஏற்றத்தாழ்வுகள், இளைஞர்கள் மத்தியில் அது தொடர்பாக இருக்கின்ற எதிர்ப்புணர்ச்சி, அபிப்பிராயம் போன்றன முன்னைய மூன்று கதைகளில் பிரதான பேசுபொருளாக இருக்க, இந்தக் கதையில் தனிமனித அகவுணர்வுகளை முன்வைத்துப் பேசுகின்றது. முன்னைய கதைகளில் இருந்த நேரடியான வெளிப்படுத்தும் தன்மை இல்லாமல் இந்தக் கதையில் உணர்வுகளை வெளிப்படுத்துவது மூலம் வாசகர்கள் கதையுடனும் கதாபாத்திரத்துடனும் தொடுக்கப்படுகின்றார்கள். மனதுக்குப் பிடிக்காத, வாழ்க்கைத் தேவைகளுக்காக பொறுப்பேற்ற வேலை, மனதுக்குப் பிடித்த காதல் – ஆனால் பொருளாதார காரணங்களால் அதில் ஏற்படும் பிரிவு, மத்தியதரவர்க்கக் குடும்பப் பொறுப்புகளில் உழலும் அன்றைய சமகால இளைஞனின் மனப்போராட்டங்கள் என்பவற்றை அவனது டைரிக்குறிப்புகளூடாக வெளிப்படுத்தும் உத்தி இச்சிறுகதை. இன்றும் கூட புதுமையானதாகவே கருதப்படுகின்ற வடிவத்தில் இக்கதை அமைந்திருக்கின்றது. எழுபதுகளின் மத்தியில் ஈழத்தில் சிறுகதைகளின் வடிவத்தில் நிகழ்ந்த மாற்றத்தின் தாக்கம் ஆனந்தமயிலின் கதைகளை கால ஒழுங்கில் வரிசைப்படுத்தும்போது இக்கதையில் வெளிப்படையாகவே தெரிகின்றது. குறிப்பாக, “வாவியில் மழைத்துளிகள் தாய்ச்சிப் பணியாரங்களாய் வட்டமிட்டுச் சிடுசிடுத்துத் தெறித்தன” என்கிற அவரது வர்ணனைகள் வாசகருக்கு இன்னமும் நெருக்கத்தைக் கொடுக்கின்றன. நீர்ப்பாசனத் திணைக்களத் தமிழ்ப்பண்பாட்டுக்கழகம் 1978 ஆம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற இச்சிறுகதையின் முடிவுப்பகுதித் தாள் தவறிவிட்டது என்கிற குறிப்புடன் இக்கதை முழுமைபெறாமல் இருக்கின்றது. ஆவணப்படுத்தலின் அக்கறை கொண்டவன் என்றவகையிலும், பண்பாட்டு வரலாற்றில் ஆர்வம் கொண்டவன் என்றவகையிலும் இதில் எனக்குத் தனிப்பட இரண்டு முக்கியமான தகவல்கள் இருக்கின்றன. முறையான ஆவணப்படுத்தல் இன்றி எமது கலை இலக்கியங்கள் அழிந்துசெல்வதற்கு இன்னுமொரு சான்றாக இக்கதை அமைகின்ற அதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களம் போன்றன இவ்வாறான சிறுகதைப் போட்டிகளை நடத்தி அக்காலப்பகுதியில் நவீன எழுத்துவடிவமாக இருந்திருக்கக்கூடிய இக்கதையை பரிசளித்து கௌரவித்தார்கள் என்பது மகிழ்வூட்டக்கூடிய ஓர் அவதானமாகும்.
ஒற்றைக்கோழி என்கிற கதை ஆனந்தமயிலின் கேலியான எழுத்துநடைக்கு நல்லதொரு உதாரணமாகும். இதற்கு முன்னைய கதைகளில் இருந்து முற்றிலும் மாறான இன்னுமொரு எழுத்து வடிவத்திற்கு இதில் மாறிவிடுகின்றார். இக்கதை முழுக்க தம்பி என்கிற நிரந்தரமான வேலையற்ற ஓர் எழுத்தாளர் பற்றிய சித்திரம் கேலி கலந்து எழுதப்படுகின்றது. அவரது கவிதை ஒன்று பிரசுரமானதும் அவர் பாரதி, தாகூர் வரிசையில் தன்னைச் சேர்த்துக் கற்பனை செய்துகொள்ளுகின்றார். தன்னிடம் உருவாகி இருக்கின்ற அபாரமான கருக்களுக்கு இலக்கிய உருவம் வழங்க கடதாசி வாங்கித்தரும்படி மனைவியிடம் கேட்டுக் கேட்டு அலுத்துப்போகும் அவர் தனக்குக் கிடைக்கக்கூடிய இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிந்திப்போவதாக எண்ணுகின்றார். தம்பி என்கிற எழுத்தாளர் பற்றிய இச்சித்திரம் எழுத்தாளரின் சமூகப் பொறுப்புப் பற்றி அந்நாட்களில் எழுந்திருந்த உரையாடல்களின் தாக்கத்தால் விளைந்திருக்கலாம் என்று கருதமுடிகின்றது.
நண்பனும் புளியமரமும் என்கிற கதை அவரது தொடக்க காலக்கதைகளைப் போன்றே வறுமை போன்ற சமூக அவலங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றது; ஆனாலும் இரண்டு நண்பர்களுக்கு இடையிலான உரையாடலாகவே கதை நகர்த்திச் செல்லப்படுகின்றது. தனக்குச் சொந்தமில்லாத மரங்களை தன்னுடையதாகக் கூறி விலை பேசி விற்றுவிடுகின்றான் கோபால். தொய்வு நோயால் பாதிக்கப்பட்ட அவனுக்கு கடுமையான உடல் உழைப்பைக்கோரும் வேலைகளைச் செய்வது கடினமாக இருக்கின்றது. அதற்கான அவனது நியாயம் அது. அவனை “ஏதாவது தொழிலைத் தொண்டைச் செய்து உழைக்கவேண்டும்” என்று அறிவுறுத்துகின்றான் நண்பன். இக்கதையில் கோபால் பற்றிய அறிமுகம் “அவன் ஒரு விசித்திரப் பிறவி, முரட்டுத்தன்மை வாய்ந்தவன் என்று ஊரில் விலாசம், தனக்கு நியாயமெனப்பட்டால் கை நீட்டவும் தயங்காதவன் … இவ்வளவிற்கும் அவன் நல்லவன், மற்றவரின் துன்பத்தைக் கண்டு கொதிப்பவன். அதற்காகப் பல அசௌகரியங்களை தானே ஏற்றுக்கொண்டவன்” என்று எண்பதுகளின் தொடக்கங்களில் வெளியான தமிழ்த்திரைப்படங்களின் நாயகர்களின் சாயலைக்கொண்டிருப்பதையும் அவதானிக்கமுடிகின்றது. தவிர இயல்பான உரையாடல்களில் புரட்சி பற்றிய பேச்சுவரும்போது ஒருவித பிரகடனம் செய்கின்ற தொனியும் இருக்கின்றது. இந்த இடத்தில் கதாபாத்திரங்களை மீறி ஆசிரியர் வெளிப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
கிட்டத்தட்ட எட்டாண்டுகள் ஓய்விற்குப் பின்னர் ஆனந்தமயில் 1989 இல் எழுதிய கதை வாழும்வெளி. போர்க்காலங்களில் நிலவிய வாழ்வின் அபத்தத்தைக் கூறும் இக்கதை போர்க்காலம் பற்றிய இலக்கிய ஆவணமாகவும் அமைகின்றது. மினிபஸ் மிதிபலகை நிலத்தில் முட்டியும் முட்டாமலும் இருப்பது, விறகுச் சுமையுடன் செல்லும் “மக்காட்” இல்லாத மிதிவண்டிகள், பத்து வருடத்திற்கு முன்னர் இரண்டு ரூபாயுடன் பஸ்ஸில் புத்தகம் வாசித்துப்போகுமளவுக்கு பஸ்ஸில் இடம் இருந்தது என்று சொல்லும் பயணி, முப்பது கொடுத்தும் மூச்சிவிட முடியாத பயணம் என்று சொல்லும் முதியவர் என்று ஒரு காலகட்டத்தை இக்கதை ஊடாகப் பதிவுசெய்கின்றார். இறந்த போராளிகளின் நினைவாக வைக்கப்பட்டிருக்கும் நினைவஞ்சலிப் படங்களை “சந்திப்புகளில் வைக்கப்பட்டிருக்கும் இழந்துவிட்ட இளமையின் தோற்றங்கள் துன்பத்தைத் தந்தன” என்று பதிவுசெய்கின்றார். பஸ் பயணத்தில் வல்லைவெளியை அண்மித்துச் செல்லும்போது காணும் காட்சியை,
“பாலச்சுவரில் இருவர் தூண்டில் கம்புகளுடன் நின்றனர். கிழக்கே சிலர் கரப்பு வைத்த கண்டிகளில் மீன் வேவித்தனர். பாலத்தின் மேற்கே சிலர் வீச்சுவலை எறிந்தனர். நீண்ட கொக்குகள் வடக்கு நோக்கிப் பறந்தன.”
என்று எழுதும்போது ஆனந்தமயிலின் எழுத்தில் ஒரு தேர்ந்த ஓவியனின் ஆளுமையையும் அவதானிக்க முடிகின்றது. பொம்மர் என்று குறிப்பிடப்படும் குண்டுவீச்சு விமானம் நெருங்கும்போது “மேலே அந்தச் சத்தம் எங்களை நோக்கி வந்தவண்ணம் ஸ்தம்பித்தது. பத்திரிகையில் படங்கள் போட்டு எங்கோ நிகழ்ந்த இழப்பின் சிதைவுக் கொடூரம் மனதில் பளிச்சிட்டது” என்று எழுதுவது போரில் வாழ்ந்த எல்லாரும் அனுபவித்த உணர்வு.
இதைத்தொடர்ந்து நான்காண்டுகள் இடைவெளியில் முறையே 1993 ஆம் 1997 ஆம் ஆண்டுகளின் ஆனந்தமயில் எழுதிய கதைகள் முருகைக்கற்கள், கொலு மீட்பு. இவை இரண்டும் சிறுகதைகளாக இல்லாமல், நினைவுமீட்டல்களாக அமைகின்றன. முருகைக்கற்கள் மீன்பிடித்தலைத் தொழிலாகச் செய்யும் கிராமம் ஒன்றைப்பற்றிய நினைவுமீட்டலாகவும், கொலுமீட்பு சிறுவயதில் அறிமுகமான ஒரு ஓவியக் கலைஞர் பற்றிய நினைவுமீட்டலாகவும் உள்ளன. அந்த அளவில் அவை முக்கியமானவையே என்றாலும் சிறுகதையாக அவை வெளிப்படவில்லை என்றே கூறவேண்டும்.
விதி என்கிற கதையில் சரியாக நடக்கமுடியாத 71 வயதுப் பெண்ணொருத்தி சக்கரநாற்காலிக்குச் செய்திருந்த விண்ணப்பம் அவள் அறுபது வயதைத் தாண்டியவள் என்பதாள் மறுக்கப்படுகின்றது. காயாய்ப் பிஞ்சாய்க் கொண்டுபோறவன் ஏன்தான் என்னை இன்னும் வைச்சிருக்கிறானோ? என்று அந்தப் பெண் நீத்தல் விண்ணப்பம் செய்கின்றாள். இதற்கு அடுத்ததாக எழுதிய “கலை வந்தபோது” ஆனந்தமயில் இதற்கு முன்னர் எழுதியிராத புதிய வடிவில் ஆன்மீக தேடலைச் சாரமாகக்கொண்டிருக்கின்றது. இந்த தொகுப்பில் உள்ள ஆறு சிறுகதைகளுக்கு முருகையன் 1986 இல் எழுதிய முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“ஆனால் நடைமுறையில், கலைப்படைப்பை மாத்திரமன்றி கலைஞனைத் தனிப்பட்ட முறையிலும் நாம் அறிவோம். ஆனந்தமயிலின் கதைகளையும் கவிதைகளையும் மாத்திரமல்லாமல் அவரைப் பற்றியும் வாசகர்களிற் சிலருக்கேனும் தெரிந்துதான் இருக்கின்றது. அப்படி அவரது சொந்த வாழ்க்கையையிட்டு நாம் அறிந்த செய்திகள் அவருடைய கலைப்படைப்பை மதிப்பிடும்போது நாம் சென்றடையும் முடிவுகளைப் பாதிப்பதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. ஆனால் அவருடைய குணம்பற்றியும் நடத்தைகள் பற்றியும் நாம் அறிந்த செய்திகள், அவருடைய படைப்புகள் மீது அதிக்கப்படியான வெளிச்சத்தைப் பாய்ச்ச முடியுமானால், அந்தச் செய்திகளை நாம் வரவேற்க வேண்டும் பயன்படுத்தவேண்டும்.”
ஆனந்தமயில் நடக்கமுடியாத நிலையில் இருந்தபோது 1998 இல் அவரால் எழுதப்பட்டவையே விதி, கலை வந்தபோது என்கிற சிறுகதைகள் என்று அறியும்போது அந்தக் கதைகள் இன்னமும் ஆழமான அர்த்தத்தைக் கொடுக்கின்றன. குறிப்பாக கலை வந்தபோதுவின் சாரம் முழுமையும் அந்த நோக்கில் மிகுந்த அர்த்த பூர்வமானதாகிவிடுகின்றது.
ஓர் எழுதுவினைஞனின் டயறி தொகுப்பில் கால ஒழுங்கில் கடைசியாக எழுதப்பட்ட கதை “காக்காச்சி கரிமகளே”. இக்கதையில் பகடி எழுத்தில் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றார் ஆனந்தமயில். அன்றைய சமூக நிலை, இடப்பெயர்வு அவலம், அன்னிய ராணுவ வருகை, போர், இயக்கங்களுக்கிடையிலான முரண்பாடுகள் போன்றன நகைச்சுவையுடனும் குறியீடுகளுடனும் எழுதப்படுகின்றன.
“இராஜகுமாரியான அக்கா பிறந்து இன்டர் நெட்டை அறிந்திருப்பாளோ தெரியாது … ஆனால் காகங்களின் சகுனக்குறியை அறிந்திருந்தாள். அக்கா இராஜகுமாரியாகப் பிறந்தது சுவாத்திய வசதிக்காக ஒரு மண்வீட்டில்தான். அவளது ஜனனம் சம்பவிக்கும் முன்னர் காகம் எத்தகைய சகுனத்தைக் காட்டியதோ தெரியாது. அவளது தாய் அவள் பெரியபிள்ளையாவதற்கு முன்னரே இறைவனடி சேர நேர்ந்துவிட்டது.
அவளது பிராப்தப் பயனாக கடலில் வெள்ளித்துகள்களைத் தேடும் இராஜகுமாரனுக்கு சோறு குடுப்பிக்க நேர்ந்துவிட்டது. அவர் திருமணத்திற்கு முன் தன் இராஜ்யபாரத்தை அதிகம் சுமந்துவராதலால் கணந்தவறாது புகை ஊதுவதிலும் மகாத்மா, லக்ஷ்மி மடுவங்களில் – பத்மினி, தேவிகா ஆகிய அரம்பையரின் நர்த்தனங்களில் லயித்து, மனைவியுடன் சங்குன்னியின் லட்டுக்களை ருசித்து இருப்பதிலும் காலத்தைச் செலவிட்டார். இராஜ்ய வாரிசுகளும் உருவாயின”
என்று எழுதும்போது மிக மிக சரளமாக அவருக்குக் கைவருகின்ற நகைச்சுவை கலந்த புதிய நடையை அவதானிக்கமுடிகின்றது. இயக்கங்களில் இணைந்த அக்காவின் மகனைப்பற்றிக் குறிப்பிடும்போது “அவனும் தனியான சொர்க்காபுரிகளைக் காணப்புறப்பட்டு அந்நிய சக்கரவர்த்தியின் சைனியத்தினால் பிடிக்கப்பட்டான். அக்கா அதற்காக நாளாந்த வசூலில் செலவளித்தது ஏராளம்” என்று குறிப்பிடுவது இன்னும் ஓர் உதாரணம். இறுதியில் அக்காவின் மரணத்தை “கிடுகு ஜாகையின் வெளியே குமாரத்தியர் மூவரும் வட்டமிட்டுக் குரல் வைத்தனர். குமாரர்களுக்குப் பதிலாக கணவன் கொள்ளிக்குடம் தூக்கி வர, பூகோள கிராமத்து இராஜகுமாரி இராஜ்யபாரத்தை துறந்து பிரயாணமானாள். பூச்சரம் தொங்கும் பிரேதவண்டியில் போவதற்குப் பதிலாக, முன்னைய கால நாகரிகப்படி கைத்தாங்கலாகவே போக நேர்ந்தது. இராஜதந்திரம் தெரியாது வாழ்ந்த பேதையான அவளுக்கு, கல்வெட்டோ நடுகல்லோ இல்லாது போனது. ஆனால் எங்காவது ஒரு காகப் பிரலாபமாவது இருக்கமல்லவா!” என்கிறார். தொகுப்பின் ஆகச்சிறந்த கதையாக மட்டுமல்லாமல் தமிழில் வெளியான ஆகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகவும் இக்கதையைக் குறிப்பிடலாம்.
ஈழத்தின் முக்கியமான படைப்பாளிகள் அனேகமானோர் குறைவாக எழுதியவர்களாகவே அமைந்தது எமக்கான பின்னடைவுகளில் ஒன்று. ஆனந்தமயில் மிகக் குறைவாக எழுதியவர். இக்கட்டுரையை எழுதுவதற்காக “ஓர் எழுதுவினைஞனின் டயறி”யை பல முறை மீண்டும் மீண்டும் படித்தேன். இந்தக் கதைகள் அனைத்தும் முக்கியம் வாய்ந்தனவாக இருப்பதுடன் கால ஒழுங்கில் ஈழத்து இலக்கிய வரலாற்றின் வெட்டுமுகத்தினைப் பிரதிபலிப்பனவாகவும் அமைகின்றன. வெவ்வேறு காலப்பகுதிகளில் அவரது எழுத்துநடையும், வடிவமும் உள்ளடக்கமும் தொடர்ச்சியான மாறுதலுக்கு உள்ளாகிவந்திருக்கின்றன. அதன்பொருட்டே இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளை அவை எழுதப்பட்ட காலஒழுங்கில் இக்கட்டுரையில் வரிசைப்படுத்தி எழுதவும் தீர்மானித்தேன். ஒரு படைப்பாளி நிலைப்பது வரிசையாக புத்தகங்களை வெளியிடுவதால் அல்ல. மிகக் குறைவாகவே எழுதியும், பெரிதாக வெளியில் அறியப்படாமலும் இருந்தாலும் ஆனந்தமயிலின் எழுத்துகள் நிச்சயம் நிலைத்து நிற்கின்றன.
- ஓர் எழுதுவினைஞனின் டயறி சிறுகதைத்தொகுதியை தந்துதவிய கந்தசாமி மாஸ்ரர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
- இக்கட்டுரை ழகரம் 5 இதழில் இடம்பெற்றது.
- இக்கட்டுரையில் உள்ள படங்கள் முறையே hainalama.wordpress.com என்கிற முகவரியிலும் ஆனந்தமயிலின் விக்கிபீடியா பக்கத்திலும் இருந்து பெறப்பட்டவை
Leave a Reply