செல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும்

போருக்குப் பிந்தைய காலத்தில் அபிவிருத்தி, மக்கள் நல உதவித்திட்டம், கல்விக்கான உதவி, மக்கள் எதிர்கொள்ளும் சமகாலப் பிரச்சனைகள் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு கவனப்படுத்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  அவைகுறித்து நேர்மறை / எதிர்மறையான பார்வைகளும் கேள்விகளும் உரையாடல்களுக்கான தேவைகளும் இருக்கின்றன.  ஆயினும் சமூக பொருளாதார அடிப்படையிலான நோக்குகளும் ஆய்வுகளும் பொதுத்தளத்தில் நடப்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது.  போருக்குப் பின்னைய காலத்தில் மட்டும்தான் இந்த நிலைமை என்றில்லாமல், அதற்குமுன்னரும் கூட இந்த உரையாடல்கள் பரவலாக்கப்படவில்லை என்றே சொல்லமுடியும். 

உள்ளூர்ப் பொருளாதாரம் பற்றிய அமைப்பு ரீதியான நகர்வுகளும் வெளியீடுகளும் போர்க்காலத்தில் நடைபெற்றன என்றாலும் அதனை ஒரு அரசியலாக, விடுதலைக்கான கருவிகளில் ஒன்றான உரையாடலாக மக்கள்மயப்படுத்தவில்லை என்றே கருதுகின்றேன்.  பொருளாதார கொள்கை, பொருளாதார திட்டமிடல் என்வற்றின் அடிப்படையில் கல்விமுறை, சமூக அபிவிருத்தி, உள்ளூர்ப் பொருளாதாரம் ஆகியவற்றைப் பற்றியும் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புறும் / தாக்கம் செலுத்தும் விடயங்கள் குறித்தும் உரையாடவேண்டிய அவசியம் பலமாக உள்ளபோதும் பொதுத்தளத்தில் இவைபற்றிய உரையாடல்கள் குறைவாகவே நிகழ்கின்றன. 

இரண்டாண்டுகளுக்கு முன்னர் மதிப்புக்குரிய நண்பர் பிரேமச்சந்திரா அவர்களுடனான உரையாடல் ஒன்றின்போது இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோதுதான் அவர் முதன்முறையாக செல்வின் அவர்கள் குறித்தும் அவரது துறைசார் உயிர்ப்பான புலமை மற்றும் விமர்சனரீதியான அணுகுமுறை குறித்தும் சொல்லியிருந்தார்.  தான் ஈடுபடும் செயற்திட்டங்கள் குறித்து குறிப்பிடும்போது செல்வின் அவர்களின் நோக்குநிலைகள் குறித்த நேர்மறையான அபிப்பிராயங்களை பிரேமச்சந்திரா குறிப்பிட்டுவருவார்.   பிரேமச்சந்திரா போன்றவர்கள் முக்கிய பங்காற்றும் ஊருணி – தமிழ் மாணவர் உதவித்திட்டத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் செல்வின் அவர்கள் ”விழுமியங்கள் சார்ந்த மனிதர்களை உருவாக்கும் கல்விப்பணியில் உள்ளூர் கல்வித்துறையும் புலம்பெயர் சமூகமும் எவ்வாறு இணையலாம்” என்கிற தலைப்பில் ஆற்றிய சிறப்பான உரையையும் கேட்டேன்.  கல்விமுறை, சமூக பொருளாதார, புலம்பெயர் தமிழர்களின் பங்கு, அபிவிருத்தி என்பவற்றை மையம்கொண்ட சுருக்கமான செறிவானதோர் உரையாக அது அமைந்தது.  அறிக்கைகள், ஆய்வுநூல்கள் என்பவற்றின் பெறுமதி அதிகம் என்றபோதும் ஆரம்பநிலையில் இவை குறித்த அவதானங்களை மக்களிடம் எடுத்துச்செல்வதற்கு நேரடியான உரைகளும் காணொலிகளும் தினசரிப் பத்திரிகைகளில் இடம்பெறக்கூடிய கட்டுரைகளும் காத்திரமான வடிவங்களாக அமையும்.  அந்தவிதத்தில் இவை பொதுத்தளத்தில் நிகழ்த்தப்படுவதும் பரவலாக்கப்படுவதும் மிகவும் முக்கியமானது.

நிமிர்வு இதழ் தமது யூட்யூப் தளத்தில் இணையத்திலும் செல்வினின் 2 உரைகளை சிறிய சிறிய பகுதிகளாகப் பிரித்து பகிர்ந்திருக்கின்றார்கள்.  அவை இரண்டுமே முக்கியமான உரைகள்.  தேவையும் முக்கியத்துவமும் கருதி ஊருணி தமிழ் மாணவர் உதவித்திட்டத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் செல்வின் ஆற்றிய உரை குறித்து அதன் செய்திமடலில் வெளியான குறிப்பினையும் அவரது உரையின் யூ ட்யூப் காணொலியையும் இத்துடன் பகிர்கின்றேன்.  நிமிர்வு தளத்தில் இடம்பெற்றுள்ள அவரது உரைகளுக்கான இணைப்புகளும் கீழே தரப்பட்டுள்ளன.  இவற்றைப் பார்ப்பவர்கள் இந்த உரையாடலை நீட்டியும் அகலித்தும் செல்வார்கள் என்று நம்புகின்றேன்.

000

தொழில்ரீதியாக ஒரு SLAS அதிகாரியாக பணியாற்றும் செல்வின் முரண்களுக்குப் பிந்திய காலத்திய அபிவிருத்தி, மனிதவள அபிவிருத்தி, தொழில்துறை அபிவிருத்தி, இளையோர் வலுவாக்கற் செயற்பாடு, பிராந்திய அபிவிருத்தி, மற்றும் பொருளாதார

அபிவிருத்தி ஆகிய துறைகளில் தொடர்ந்து செயற்படுபவர்.  பாடசாலைக் கல்வியென்பது கல்விசார் அடைவுகளை மாத்திரம் குறிக்கோளாகக் கொள்ளாமல் சமூக பொறுப்பான, ஆளுமை மிக்க மனிதர்களை உருவாக்குகின்ற நிறுவனங்களாக பாடசாலைகளும் பாடசாலைக் கல்வியும் அமையவேண்டும் என்பதை வலியுறுத்துப் பேசிய செல்வன் அவர்களது பாடசாலைகளின் செயற்பாடுகளையும் அதில் புகுத்தப்படும் இ-கல்வியையும் விமர்சன பூர்வமான ஆராய்ந்ததாக அமைந்தது.  பரீட்சை அடைவுகளை அடைந்து, போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்து அரச உத்தியோகங்களை ஆற்றுவதற்கான கூலி அடிமைகளை உருவாக்குவதாகவே தற்போதையை கல்விமுறை இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய செல்வின் கல்விமுறை குறித்த பண்புநிலை மாற்றமும் தொலைநோக்குப் பார்வையும் அவசியம் என்று சுட்டுக்காட்டினார்.  வடமாகாணத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறைக்குக் காரணம் ஆசிரியர்கள் சரியான முறையில் பகிரப்படாமையே என்று குறிப்பிட்ட செல்வின், இ-கல்வி மூலமான நிகழ்நேர வகுப்புகள் முன்னெடுக்கப்படும்போது ஏற்கனவே இருக்கின்ற ஆசிரியர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்பது குறித்தும் ஏற்பாட்டாளர்கள் பரிசீலிக்கவேண்டும் என்றார்.  கல்விநிலையில் முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்பதற்கான செய்கின்ற வசதிப்படுத்தல்கள் குறுகிய கால நோக்குடையதாகவோ அல்லது புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களில் உள்ளூரில் உள்ளவர்கள் தொடர்ந்து தங்கி இருப்பதாகவோ அமைந்துவிடக் கூடாது என்றும் ஆசிரியர்களை மேம்படுத்தி, வலுவூட்டி அவர்களை பொறுப்புகோருவோராக மாற்றுவதன் மூலமே பேண் தகு நிலையை உருவாக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.  எனவே புலம்பெயர் நாடுகளில் இருந்து உதவிகளைச் செய்கின்றவர்கள் இவை குறித்தும் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்கவேண்டும் என்றும் செல்வின் தெரிவித்தார்.

தெற்கு, மேற்கு மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணத்தின் வளர்ச்சிவீதமானது மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதைக் குறிப்பிட்ட செல்வின், வடக்கின் வளர்ச்சிவீதம் மேம்படுதவற்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து செய்யப்படுகின்ற தொலைவிலிருந்து இயக்குகின்ற பொறிமுறை வழிசமைக்காது என்று குறிப்பிட்டு,

1. முழுமை தழுவிய தந்திரோபாய திட்டங்கள்

2. செழுமைப்பட்ட மனிதவளம்

3. அதிர்வாற்றல் கொண்ட நிறுவனங்கள்

4. தொழிலாண்மை கொண்ட சமூகம்

5. ஒருங்கிணைக்கப்பட்ட மூலதனப் பாய்ச்சல்

6. தொலைநோக்கான சமூகம் சார்ந்த தலைமைத்துவம்

ஆகியவற்றை நோக்கியதானமுறையில் கல்விமுறையில் பண்புமாற்றம் நிகழவேண்டும்.  இவற்றை உள்வாங்கி புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் தம் சிந்தனையை விரிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

(ஊருணி – தமிழ் மாணவர் உதவித்திட்டம் செய்திமடல்)

000

நிமிர்வு இதழின் யூட்யூப் தளத்தில் இடம்பெற்றுள்ள செல்வினின் காணொலிகளுக்கான இணைப்புகள்

உள்ளூராட்சி எனும் கருப்பொருளை விளங்கிக் கொள்ளல்

குறைந்த விலைக்கு பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள்

கூலிக்கு மாரடிக்கும் கொத்தடிமைகளை உருவாக்கும் இலங்கையின் கல்விமுறை

பணமாக்கப்படும் குடிநீர், நஞ்சாக்கப்படும் உணவு, மலடாக்கப்படும் நிலம்

தமிழ் மக்கள் ஒரு சமூகமாக மேலெழுவது எப்படி?

தேசத்தைக் கட்டியெழுப்பும் அபிவிருத்தியை தமிழ்மக்களுக்கு தேவை

தொழில்முயற்சிகளை வளர்த்தெடுக்கும் நிதி நிறுவனங்கள் கட்டமைக்கப்பட வேண்டும்

தாயகத்தில் பல புலம்பெயர் முதலீடுகளின் தோல்விக்கு காரணம் என்ன?

000

கொரோனாவுக்குப் பின்னரான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க எது அவசியம்? செல்வின் விளக்குகின்றார்

https://thinakkural.lk/article/41385

நன்றி – நிமிர்வு

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑