மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள்

தேர்தல் பரபரப்புகள் நடந்துகொண்டிருந்த அதே சமகாலப் பகுதியில் சைவ மகாசபையின் ஏற்பாட்டில் எழுப்பப்பட்ட இராவணன் சிலை பற்றிய குறிப்பொன்றினையும் சைவ மகாசபையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பரா. நந்தகுமாரின் முகநூலில் காணநேர்ந்தது.  தேர்தல் பற்றிய தொடர்ச்சியான செய்திகள், பரபரப்பு என்பனவற்றாலும், தொடர்ச்சியாக மதவாதப்போக்கு அதிகரித்துச் செல்வதை அவதானிப்பதில் ஏற்படுகின்ற சலிப்பாலும் இதையும் கடந்துபோகவே விரும்பினாலும் சில விடயங்களை நாம் உரையாடுவது அவசியம் என்று கருதுகின்றேன்.

ஈழத்தில் இப்படியாக இராவணனை இராவணேசுவரர் என்கிற ”சைவத் தமிழ்” அடையாளங்களுடன் முன்னிறுத்துகின்ற போக்கினையும் அதற்குப்பின்னால் இருக்கின்ற மனநிலையையும் புரிந்துகொள்வதற்கு சமாகலத்தில் ஈழத்தில் இடம்பெறுகின்ற சில விடயங்களைக் கவனத்திற்கொள்ளவேண்டியது அவசியமாகும்.  ஈழத்தில் மிக நீண்டகாலமாக சிங்கள பௌத்த பேரினவாதம் ஏனைய இனங்களின் அடையாளங்களை அழிக்கின்ற செயற்பாடுகளைச் செய்துவருகின்றது.  நாட்டின் பலபகுதிகளிலும் திட்டமிட்டமுறையில் எழுப்பப்படுகின்ற விகாரைகளையும், வரலாற்றுத் திரிப்பைச் செய்து மரபுரிமை இடங்களை தம்முடையதாக மாற்றுகின்ற செயற்பாடுகளையும் இந்த சிங்கள பௌத்த செயற்பாட்டிற்கான உதாரணமாகக் காணலாம்.  அத்துடன் அண்மைக்காலமாக இதுவரை காலமும் ”தமிழ் மன்னன்” என்ற அடையாளத்துடன் இருந்த ”இராவணனை” ”சிங்கள இராவணனாக”, தம் மூதாதையராகச் சித்திகரித்து உரிமைகோருகின்ற போக்கையும் வெகுதீவிரமாக “சிங்கள பௌத்த” தரப்பு முன்னெடுக்கின்றது.  இந்த இரண்டு போக்குகளும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள, தாம் சம உரிமையுடன் நடத்தப்படவில்லை என்கிற உணர்வுடன் இருக்கின்றவர்களான ஈழத்தமிழர்களுக்கு அச்சத்தையும் தம் இருப்புக் குறித்த பாதுகாப்பின்மை கலந்த உணர்வையும் உருவாக்கும்.  அவற்றின் எதிர்வினையாகவே இராவணன் சிலை போன்றவற்றை முன்னெடுப்பவர்கள் தம்மை நியாயப்படுத்திக்கொள்ளுகின்றார்கள்.  ஆனால் மூளாய் இராவணேசுவரர் குறித்த விளக்கத்தின் பின்னால் இருக்கக்கூடிய அபத்தங்களைப் பார்ப்போம்.

இந்த மூளாய் இராவணேசுவரர் குறித்த பரா. நந்தகுமாரின் முகநூல் பதிவானது பின்வருமாறு அமைகின்றது. 

//சிவ பூமியின் யாழ் மூளாய் இராவணேசுவரத்தில் சைவத் தமிழ் மாமன்னன் சிலையாக இறை சிவலிங்கத்தை தாங்கியவாறு சைவ மகா சபை ஏற்பாட்டில் எழுந்தார் இன்று … இராவணேசுவரர் பற்றிய சரியான புரிதல் எம் மண்ணில் உதயமாகட்டும்.

இராவணேசுவரர் தம் ஆருயிர் தங்கை மானபங்கப்படுத்தப்பட்டமையாலேயே சீதையை சிறை எடுத்தார். போரிலே வீர மரணம் அடையும் கடைசி கணம் வரை அவர் சீதையை தீண்டவில்லை.

இராமனை போற்றுங்கள் அதற்காக தவறே செய்யாத சீதையை போன்று கற்புக்கரசியான மண்டோதரியை இல்லாளாகப் பெற்ற இராவணனை தூற்றாதீர்கள்

இராவணன் மேலது நீறு …

//

// இராவணேசுவரரும் இராமபிரானும் சிறந்த சிவபக்தர்கள் .மண்டோதரி, சீதை எனும் மிக உயர்ந்த பெண்மணிகளை இல்லத்தரிசிகளாகக் கொண்டவர்கள். ஒருவர் போரில் வீர மரணம் அடைந்தார். இன்னொருவர் வெற்றி பெற்றார். சகோதரர்களான சூர்பனகை மற்றும் இலக்குவன் காரண நிமிர்த்தம் போருக்கு சென்றார்கள்.

இதில் காரண காரியங்கள் வரலாற்று நோக்கோடு ஆராயப்பட வேண்டும். இலக்கிய சுவைக்காக சேர்க்கப்பட்ட பத்து தலை, சாபங்கள் போன்றவற்றை பகுத்து ஆராய்ந்து தெளிய வேண்டும். அதை விடுத்து இராம பக்தர்கள் கோதாவில் இராவணனை இகழ்வதையும் தமிழர்கள் என்ற போர்வையில் இராமனை இகழ்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆனால் சைவத் தமிழர் என்ற அடிப்படையில் இலங்கையை சிவபூமி என நிலைநிறுத்திய இலங்கைக்கு பண்பாடு தந்த மருத்துவம் தந்த மாமன்னன் இராவனேசுவரரை எம் மூதாதையை இராவணன் மேலது நீறு என்று தமிழ் ஞானசம்பந்தர் பாடிய எந்தையை கொண்டாடுவதை யாரும் மறுக்க முடியாது.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு

//

முதலில், இராமயணம் என்பது ஒரு புராணம்.  புராணங்களை வைத்தோ அல்லது புராணங்களின் அடிப்படையிலோ வரலாற்றை எழுதுவது என்பது முறையானதல்ல.  இங்கே புராணங்களை வரலாறாகப் பார்ப்பதுடன் தங்கைக்காகவும், தம்பிக்காகவும் போரிட்டார்கள் என்றும், சிவபக்தர்கள் என்றும் ”தவறே செய்யாத சீதையை போன்று கற்புக்கரசியான மண்டோதரியை இல்லாளாகப் பெற்ற” என்பதான வியாக்கியானங்களுடனும் இராவணனை முன்வைக்கும்போது அதனுடன் சேர்த்து பண்பாடென்ற பெயரில் பெண்களை ஆணாதிக்க ஒழுங்கிற்குள்ளே சேர்த்தே மதிப்பிடுவதையும் அதையே இனத்தின் பெருமையாகக் கருதும் போக்கையே மீளவும் வலியுறுத்துவதையுமே காணுகின்றோம். 

இராமன், இராவணன் இருவருமே புராணக் கதாபாத்திரங்கள்.  மதவாத சக்திகள் தமது லாபத்திற்காக இந்தப் புராணங்களை வைத்து அரசியல் செய்வார்கள்.  இந்தியாவில் தற்போது நடப்பது அதுதான்.  எழுபதுகளில் இன்னொருவிதமான அரசியல் நடந்தது, இராமன் எதிர் இராவணன் என்பதை ஆரிய எதிர் திராவிட போர் என்கிற அரசியல் என்பதன் அடிப்படையில் எதிர்கொண்ட  திராவிட இயக்கங்களும் தமிழறிஞர்களும் இராவண காவியம், இராவண லீலா போன்றவற்றை எதிர்வினைகளாக ஆற்றினார்கள்.  ஒரு விதத்தில் அது எதிர்ப்பு அரசியல், ஆனால் அந்த எதிர்ப்பு அரசியலைச் செய்கின்றபோது அது பிற்போக்குத்தனங்களையோ அல்லது ஒடுக்குமுறைக் கருத்தியல்களையோ தன்னுடன் இணைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.  இராவணனை சைவத்தமிழன், கற்புக்கரசியை மனைவியாகப் பெற்றவன், தங்கையின் மானத்தைக்காக்கப் போரிட்டு வீரமரணத்தைத் தழுவியவன் என்று பெருமிதப்பட்டு சிவலிங்கத்தைத் தூக்கிய இராவணனன் சிலையை அடையாளமாக முன்னிறுத்தி, இலங்கையை சிவபூமி என்று அடையாளப்படுத்தும்போதும் எதிர்ப்பு அரசியலுக்கு இருக்கவேண்டிய அறம் நீர்த்துப்போய்விடுகின்றது.

ஈழத்துச் சூழலில் சைவம் என்பதற்குத் தனித்துவமானதும் நீண்டதுமான வரலாறு ஒன்றுண்டு.  சைவம், வைணவம் உள்ளிட்ட தமிழகத்திலும் ஈழத்திலும் ஏற்கனவே வழக்கத்தில் இருந்த மதங்களை ”இந்துமதம்” என்பதன் கீழ் அப்படியே விழுங்கிச் செரித்தது மிகப்பெரியதோர் பண்பாட்டு ஆக்கிரமிப்பு.  அதற்குப்பிறகும் தனித்துவமான. ஆரிய மதங்களுக்கு அல்லது ”இந்துமதத்துக்கு” எதிரானதாக சைவம் தன்னைக் காத்தும் போராடியும் வந்தது.  ஈழத்தில் வழக்கத்தில் இருந்த சைவசித்தாந்த மரபினை அவ்விதமே நோக்கவேண்டும்.  ஆயினும், காலனிய காலகட்டத்தில் கிறித்தவ மதப்பரப்பலிற்கு எதிரானதாக மதச்சீர்திருத்தம் என்கிற பெயரில்,  பிற சமயங்களின் மீதான வெறுப்புணர்வையும், தீண்டாமையையும் பெண்ணொடுக்குமுறையையும் தன் உள்ளடக்கமாகக் கொண்டதான ஒரு சைவத்தை பரப்பி அதற்காகப் பிரசாரம் செய்தார் ஆறுமுக நாவலர்.  ஆறுமுக நாவலர் பரப்பிய அந்த சைவம் சமூகநீதி என்பதற்கு முற்றிலும் எதிரானதபோக்கையே தன் அடித்தளமாகக் கொண்டமைந்தது.  காலனியத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்கான கருத்தியல் ஆயுதமாக சமூக ஒடுக்குமுறையைச் செய்யும் இன்னொரு கருவியை எடுத்தார் என்ற அளவில் அவரது செயல் அடிப்படையிலேயே தவறானது.  இப்பொழுது, வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளாமலும் பரிசீலனை செய்யாமலும் மீண்டும் சமூக ஒடுக்குமுறையையும் பிற்போக்குக் கருத்தியல்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட “சைவத் தமிழ்” என்கிற அடையாளத்தை ஈழத்தில் முன்னெடுப்பது என்பது அழிவுகரமானது என்றே கூறமுடியும்.

பௌத்த சிங்கள பேரினவாதம் செய்கின்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிரானதாக இந்துத்துவத்தையும் அதனோடிணைந்த பிற்போக்குக் கருத்தியல்களையும் ”சைவம்” என்ற போர்வையின் கீழ் முன்னெடுப்பது சமூகவிடுதலைக்கு முற்றிலும் முரணானதாகவும் இன்னொரு பண்பாட்டு அழிப்பிற்கு இடங்கொடுப்பதாகவுமே அமைந்துவிடும்.  நாம் சாதிய, மதவாத, ஆணாதிக்க சிந்தனைகளைப் புறந்தள்ளி, எல்லா இனத்தைச் சேர்ந்தவர்களும் சம உரிமையும் சுயமரியாதையும் கொண்டவர்களாக வாழ்வதற்கான உரிமையை நோக்கியே தொடர்ந்து குரல்கொடுக்கவேண்டும். 

விதை குழுமம் இணையத் தளத்தில் ஓகஸ்ட் 2020 இல் பிரசுரமானது

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑