எங்கள் குமாரதேவன் ஐயா

ஈழத்தில் நான் வாழ்ந்த போர் சூழ்ந்த 1990 முதல் 97 வரையான காலப்பகுதியில் என் பதின்மங்களிலும் பதின்மங்களை ஒட்டிய பருவங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அன்றைய வாழ்வை, அதை எதிர்கொண்டவிதங்கள் பற்றிய நினைவுமீட்டல்களாக  யாழ் உதயன் பத்திரிகையின் வார இறுதிச் சிறப்பிதழான சூரியகாந்தியில் தொடரொன்றை 2014 ஆம் ஆண்டின் இறுதியில் எழுதிவந்தேன். சில வாரங்கள் மட்டுமே வந்த இந்தத் தொடர் அன்றைய யாழ்ப்பாணத்து உணவகங்கள், சிற்றுண்டிச் சாலை, தனியார்கல்வி நிலையங்கள் பற்றிய நினைவுகள், யாழ்ப்பாண வெளியேற்றத்துக்குப் பின்னரான தென்மராட்சி வாழ்க்கை, கையெழுத்துப் பிரதிகள் எழுதிய காலப்பகுதி போன்ற பல்வேறுவிடயங்கள் பற்றிய நினைவுமீட்டல்களாக அமைந்தது.  தனிப்பட அந்தத் தொடரை எழுதிய காலம் எனக்கு முக்கியமானதோர் காலப்பகுதி.  கடுமையான மன அழுத்தம் என்னை முழுமையாக ஆக்கிரமிக்கத் தொடங்கி நான் அதிலிருந்து வெளியேற மிகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருந்த காலப்பகுதி. 

இந்தக் காலப்பகுதி தான் பின்னாளில் கிட்டத்தட்ட அனைத்துச் செயற்பாட்டுகளிலும் இணைந்து பணியாற்றிய விதை குழுமத் தோழர்களுடனான உறவேற்பட்டதும், புதிய சொல் என்கிற இதழுக்கான சிந்தனை எழுந்ததுமான காலப்பகுதியுமாகும். நாடோறும் மணித்தியாலக் கணக்கிலான உரையாடல்களும், அறிமுகங்களும், கனவுகள் பற்றிய பகிர்தல்களும் செயல்நோக்கிய உரையாடல்களும் தொடர்ந்துகொண்டிருந்தன.  இந்த உற்சாகத்தாலும் ஊக்குசக்தியாலும் நானும் மன அழுத்தத்திலிருந்தும் மனச்சோர்விலிருந்தும் மீண்டுவந்தேன். சூரியகாந்தியில் நான் எழுதியதாக இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தொடரில் :185 ஆம் கட்டை, மீசாலை வடக்கு – நினைவுகள்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் யாழ்ப்பாண வெளியேற்றத்தின் பின்னர் நாம் இடம்பெயர்ந்து மீசாலை வடக்கில் இடம்பெயர்ந்திருந்த காலப்பகுதியிலான சமூக பண்பாட்டுச் சூழல்களைப் பின்னணியாக வைத்து என் நினைவுகளைப் பகிர்ந்திருந்தேன்.  அதில், அப்போது சங்கத்தானையில் தற்காலிகமாக இயங்கிவந்த சண்முகம் அண்ணையின் உணவகம் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.  அந்தத் தொடரைத் தொடர்ந்து வாசித்து வந்த குமாரதேவன் ஐயா, சண்முகம் அண்ணையின் கடையிலேயே வேலைசெய்தும் வந்தார்.  தொடரில் சண்முகம் அண்ணையின் கடை பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்து உற்சாகமடைந்த குமாரதேவன் ஐயா, அதை எழுதிய அருண்மொழிவர்மன் யாரென்று தேடத்தொடங்கியிருக்கின்றார்.  இந்தக் காலப்பகுதியில் கிரிஷாந், யதார்த்தன், சதீஸ் உள்ளிட்ட நண்பர்கள் சண்முகம் அண்ணையின் கடைக்கு வழமையாகப் போவதையும் அங்கிருந்து அரட்டையடிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.  சாதாரண அறிமுகத்திலிருந்து தொடங்கி வாசிப்பு, அரசியல், இலக்கியம், கலை என்று வெவ்வேறு தளங்களிலான உரையாடல்களால் குமாரதேவன் ஐயாவுக்கும் நண்பர்களுக்குமான நெருக்கம் அதிகரித்துவந்த அந்தக் காலப்பகுதியில், குமாரதேவன் ஐயா கிரிஷாந்திடம், சூரியகாந்தியில் தொடரெழுதுகின்ற அருண்மொழிவர்மனைத் தெரியுமா என்று கேட்டிருந்தார்.  கிரிஷாந்தும், அவர்களுக்கும் எனக்குமிடயிலான நட்பினைக் குமாரதேவன் ஐயாவிடம் தெரிவித்துவிட்டு என்னிடம் பேசும்போது குமாரதேவை ஐயா பற்றிக் குறிப்பிட்டார்.  உண்மையில் அந்த முதல் சந்தர்ப்பத்தில் அதை வெறும் தகவலென்று மட்டுமே நான் எடுத்துக்கொண்டேன். 

தொடர்ந்து இயங்கவும் கூடி உரையாடவும் செயற்படவுமாக நாம் எமது உரையாடல்களைத் தொடங்கியிருந்தத ஆரம்ப காலப்பகுதி அது.  அப்போதுதான் ஒருமுறை கிரிஷாந் சொன்னார், நாங்கள் குமாரதேவன் ஐயாவுடனும் ஒருக்கா கதைக்கவேண்டும் என்று.  அவருடன் பேச முன்னர் அவரைப் பற்றிக் கொஞ்சமாவது அறியவேண்டும் என்பதற்காக கிரிஷாந்திடம் அவரைப் பற்றிக் கேட்டுக்கொண்டேன், கிரிஷாந் அவரைப் பற்றிச் சொன்ன அறிமுகம் அவரை மதிப்புக்குரியவராகக் காட்டியது.  ஆயிரம் கனவுகளுடன் இருந்த, அனுபவத்திற் குறைந்தவர்களான எமக்கும் தன் அனுபவங்களை ஞானமாகத் திரட்டிவைத்திருந்த, அரசியல், வாசிப்பு, திரைப்படங்கள், அரசியல் என்று பல்வேறு துறைகளில் ஆழ்ந்தகன்ற பார்வை கொண்டவருமான குமாரதேவன் ஐயாவுக்கும் இடையிலான அழகான ஓர் உறவு அங்ஙனம் ஆரம்பமாயிற்று.

வாசிப்பு, தேடல் என்பவற்றுக்கு அப்பால் நேர்படப் பேசுதல், வெளிப்படைத் தன்மை, மாற்றுக் கருத்துகளுக்கான வெளியை கொடுத்தவாறே தனது கருத்துநிலையில் இருந்துகொண்டு ஜனநாயகபூர்வமான உரையாடலைத் தொடர்தல் என்பன நாம் அவரிடமிருந்து கற்கவேண்டிய பண்புகள்.  கடந்த ஐந்தாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அனேக கலை இலக்கிய நிகழ்வுகளிலும் யாழ்ப்பாணத்துக்கு வெளியே இடம்பெற்ற சில நிகழ்வுகளிலும் குமாரதேவன் ஐயா பங்கேற்றபோதெல்லாம் உரையாடல்களை உயிர்த்துடிப்புடனும் கருத்துச் செறிவுடனும் ஜனநாயக ரீதியில் முன்னெடுத்தவராக அவர் இருந்தார்.  அக்காலப்பகுதியில் நாளுக்கு நாள் அவர் நண்பர்கள் வட்டம் பெருகிக்கொண்டு போனதுபோலவே அவரது பண்புகளால் அவர் நிறையப் பேரால் மதிக்கவும் விரும்பவும்பட்டார். 

தமிழ்ச் சூழலில் தீவிரமான வாசிப்புப் பழக்கம் மெல்ல மெல்லக் குறைந்துவருகின்ற இன்றைய காலப்பகுதியில் வாசகர் தரப்பின் அடையாளமாகவும் நம்பிக்கையாகவும் திகழ்ந்தவர் குமாரதேவன் ஐயா.  நூல்களாக வாசிப்பதற்கு அப்பால், நாளாந்தம் வருகின்ற பத்திரிகைகளில் இருந்து இணைய இதழ்களில் இருந்து தனக்கு அறிமுகமானவர்களின் வலைப்பதிவுகள், சமூக வலைத்தளங்கள் என்று அனைத்தையும் படித்துவிடுவது குமாரதேவன் ஐயாவின் வழக்கம்.  எளிமையின் சின்னமாக வாழ்ந்தவர் குமாரதேவன் ஐயா; அவரிடமிருந்த செல்லிடபேசி மிக அடிப்படையான, இணைய இணைப்பில்லாத சாதாரணமானதாக இருந்தது.  குமாரதேவன் ஐயாவுடன் மிக நெருக்கமாகப் பழகியவர்களில் ஒருவரான நண்பர் சசீந்திரனின் கடைக்குக் கிட்டத்தட்ட ஒவ்வொருநாளும் செல்கின்ற குமாரதேவன் ஐயா, அங்கிருந்தே இணைய இணைப்பினூடாக பத்திரிகைகள், வலைத்தளங்கள் என்பவற்றைப் பார்ப்பது வழக்கம்.  குமாரதேவன் ஐயாவைப் பொறுத்தவரை வாசிப்பது என்பது வாசித்துவிட்டுப் போவது என்பதல்ல, அவரைப் பொறுத்தவரை வாசிப்பென்பது உரையாடலின் ஒரு பகுதி.  அவர் வாசிக்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் ஏதோ ஒரு உரையாடலின் தொடர்ச்சியாகவோ, புதியதோர் உரையாடலின் தொடக்கமாகவோ, முன்னைய உரையாடல் ஒன்றின் நீட்சியாகவோ தான் அவர் முன்னெடுப்பது வழக்கம்.  எந்த ஒரு விடயம் குறித்தும் வெறும் அபிப்பிராய உதிர்ப்பைச் (Opinion Droping) செய்கின்ற வழக்கம் அவரிடம் அறவே கிடையாது.  ஒன்றை வாசித்துவிட்டால் அது சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர், வெளியீட்டாளர்கள், அந்த விடயத்துடன் தொடர்புடைய செயற்பாட்டாளர்கள் என்று அனைவரையும் தொலைபேசியிலோ அல்லது நேரேயோ சந்தித்து உரையாடிவிடுவது குமாரதேவன் ஐயாவின் வழக்கம்.

பதின்மூன்று வயது மட்டுமே தான் பாடசாலைக் கல்வியைப் பெற்றதாகவும் தனக்கு ஆங்கிலப் புலமை அவ்வளவு போதாதும் என்றும் பல்வேறு பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார் குமாரதேவன் ஐயா; ஆனால் தனது வாசிப்பினாலும் தேடல்களினாலும் பல்கலைக் கழகக் கல்வியாலும் பட்டங்களினாலும் கூட பெற்றுத் தரமுடியாத அளவுக்கு அறிவுச்சுடர் கொண்டவராக அவர் விளங்கினார்.  ஆங்கிலப் புலமை போதாது என்று அவர் குறிப்பிட்டார் என்றாலும் ஆங்கிலப் பத்திரிகைகள், ஆங்கில வார இறுதிப் பத்திரிகைகள் என்பவற்றைக் கூர்மையாக வாசிப்பதுடன் அவற்றை உள்வாங்கி அவை குறித்தும் அவர் தொடர்ச்சியாக உரையாடியே வந்தார்.  அவருடன் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவரான சசீந்திரனிடம் கேட்டால் இவைபற்றிச் சுவையான பல நிகழ்வுகளைக் குறிப்பிடுவார். 

தனக்குக் கிடைக்கக் கூடிய சில நிமிடங்களைக் கூட தன் தேடல்களையும் வாசிப்பையும் விரித்துச் செல்வதற்காகவே கர்மமே கண்ணாகப் பயன்படுத்தியவர் குமாரதேவன் ஐயா.  2018ஆம் ஆண்டு நவம்பரில் நான் இலங்கை சென்றிருந்தபோது நண்பர் சத்தியன் என்னை அழைத்துச் சென்று பாசாம் எழுதிய “வியத்தகு இந்தியா” நூலினை வாங்கித்தந்திருந்தார்.  நண்பர் காண்டீபராஜ் நிர்வகித்து வந்த  D’ Villa Garden இல் நான் குடும்பத்தினருடன் தங்கியிருந்தேன்.  நண்பர்கள் தொடர்ந்து வந்து அங்கே நிறைந்திருந்த மிக மிக நெகிழ்வாகவும் அன்பாகவும் இருந்த நாட்களவை.  நாம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிடுவதற்கு முதல்நாள் நண்பர்கள் அனைவரும் சந்தித்து D’ Villa Garden இற்கு முன்னதாக இருந்த கூடத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தோம்.  குமாரதேவன் ஐயா எம்முடனே இணைந்து பயணித்துக்கொண்டிருப்பவராக மாறியிருந்த காலப்பகுதி அது.  அங்குவந்திருந்த குமாரதேவன் ஐயா, வியத்தகு இந்தியா புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் புத்தகத்தில் இலயித்துப் போய்க் கருத்தூன்றி வாசித்துக்கொண்டிருந்தார்.  அவர் அந்த வாசிப்பில் காட்டிய ஆர்வமும் ஈர்ப்பும் எனக்கு ஆச்சரியத்தை ஊட்டுவதாக இருந்தது.  ”வர்மனோட நான் போனில கதைக்கலாம் தானே, இது முக்கியமான புத்தகம், வர்மன் கொண்டுபோகோனும்.  அதற்கும் முதல் நான் வாசிக்கேலுமானத வாசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வாசித்துக்கொண்டே இருந்தார்.  சத்தியன் ஊடாக அந்தப் புத்தகத்தின் பிரதியொன்று அவருக்குக் கிடைக்க வழிசெய்திருந்தேன்.  அதற்குப் பிறகு தொலைபேசியூடாக அவருடன் கதைத்த சில சந்தர்ப்பங்களில் அந்தப் புத்தகத்தில் முக்கியமானவையென்று பட்ட சில விடயங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார். 

குமாரதேவன் ஐயா பற்றிக் கூறும்போதெல்லாம் நாம் நன்றியுடன் நினைவுகூரவேண்டியவர் சண்முகம் உணவகத்தின் உரிமையாளான சண்முகம் அவர்கள்.  அந்தக் கடையில் குமாரதேவன் ஐயா பணியாற்றினாலும் கூட சண்முகம் அண்ணைக்கும் குமாரதேவன் ஐயாவிற்கும் மிகநெருக்கமான தோழமை இருந்ததென்றே சொல்லவேண்டும்.  சண்முகம் அவர்களின் வீட்டிலும் சண்முகம் உணவகத்திலுமே குமாரதேவன் ஐயா தங்கிவந்தார்.  அங்கு பணியாற்றிய அனைவரதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக இருந்ததுடன் குமாரதேவன் ஐயாவின் நிமித்தம் கலை இலக்கிய ஆர்வலர்களின் சந்திப்புப் புள்ளியாகவும் சண்முகம் உணவகம் மாறிவந்தது.  அதற்கான வெளியையும் சண்முகம் அவர்கள் கொடுத்தே வந்தார்.  என்னுடம் கதைத்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சண்முகம் அவர்கள் குறித்து நேசம் நிறைந்த ஏதோவொரு விடயத்தைத் தன்னும் குமாரதேவன் ஐயா குறிப்பிட்டுவந்தார். 

குறுகிய வட்டமொன்றுக்குள் அடைபட்டுவிடாமல் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பல்வேறு எழுத்தாளர்கள், ஆளுமைகளுடன் அவர் தொடர்ச்சியாக உறவுகளைப் பேணியே வந்தார்.  ஐ. சாந்தன், வித்தியாதரன், அ, யேசுராசா, குப்பிழான் ஐ. சண்முகன் உள்ளிட்ட பலருடன் அவர் தொடர்ச்சியாகப் பேசியும் உறவைப் பேணியும் வந்தார்.  அவரது நட்புவட்டம் மிகப் பெரியது.  விதை குழுமம், புதிய சொல் ஆகிய எங்கள் வட்டத்தில் குமாரதேவன் ஐயா பெருமதிப்புக்கும் தோழமைக்கும் உரியவராக விளங்கியதுடன் எமக்கான ஆலோசகராவும் ஆதாரசக்திகளில் ஒன்றாகவும் செயற்பட்டவர்.  அவரது தலைமுறையைச் சேர்ந்தவர்களில் எம்முடன் நெருக்கமான தொடர்புகளை அவரளவு பேணியவர்கள் மிக மிகச் சிலரே.  புதிய சொல்லுக்காக அவருடனான சந்திப்பினை நிறைவு செய்வதாக “கடும் சுகவீனத்திலிருந்து மீண்டு தற்போதைய வாழ்க்கையை மேலதிக போனஸாக உணர்கையில் இசங்கள், கோட்பாடுகள், சுமைகள் எதுவுமின்றி வெள்ளைமனதுடன் நவீன இலக்கியத்துக்குள் பிரவேசிக்கும் புதிய இளந்தலைமுறையினருடன் சேர்ந்து பறக்க என்னில் சிறகுகளை உருவாக்க முயற்சி செய்கின்றேன்” என்று நிறைவு செய்திருப்பார்.  அப்படித்தான் அவர் பயணித்தார்.  எங்கள் கனவுகளை அவர் தூக்கிச் சுமந்தார், அவை நிறைவாக அவரும் செயற்பட்டார். 

குமாரதேவன் ஐயாவை யோசித்துப் பார்க்கின்றபோது எதிலும் பற்று வைக்காது அனைத்தையும் காதலுடன் நேசித்த ஒரு பேரன்புவாழ்க்கையை வாழ்ந்தவராகவே, ஒரு சித்தர் வாழ்வு வாழ்ந்தவராகவே எண்ணத்தோன்றுகின்றது.  வேட்டி அல்லது சாரத்தினை அள்ளிக் கட்டியபடி சட்டையில் ஓரிரு பொத்தான்களை மட்டும் அணிந்தபடி ஒரு பையுடன் அவர் நடந்துவருகின்ற தோரணை மிகவும் கம்பீரமானது. 

எங்கள் வட்டங்களில் ஆளுமை மிக்க ஒருவராகவே அவரை மதித்துக் கொண்டாடினோம்.  ஓரிரு மாதங்களுக்கு முன்னர் எனக்கு சத்தியனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.  என்னவென்று கேட்டேன், வர்மன், கந்தரோடையில் நிற்கிறோம், குமாரதேவன் ஐயாவும் நிற்கிறார்.  உங்களோட கதைக்கோனுமாம் என்றார்.  கதைத்தேன்.  அன்று சத்தியனைச் சந்தித்துக் கதைக்கும்போது யதேச்சையாக, இவ்வளவு பக்கத்தில இருந்தும் தான் ஒருமுறையும் கந்தரோடைக்குப் போய்ப்பார்க்கவில்லை என்று சொல்லியிருக்கின்றார் குமாரதேவை ஐயா.  இப்பவே போவோம் என்று சொல்லி அழைத்துச் சென்றிருக்கின்றார் சத்தியன்.  அதையிட்டு மிகவும் நெகிழ்ந்துபோயிருந்தார் குமாரதேவன் ஐயா.  குமாரதேவன் ஐயாவுக்கும் கிரிஷாந்துக்கும் இடையிலான நட்பு மிகவும் அணுக்கமானது.  கிரிஷாந் – பிருந்தாவின் மரபுகளை மறுத்த திருமணத்தினை குமாரதேவன் ஐயாவே தலைமைதாங்கி நடத்திவைத்தார்.  இதுபோல குமாரதேவன் ஐயாவுடன் நெருங்கிப் பழகிய அனைவருக்குமே அவர் பற்றிச் சொல்ல எத்தனையோ இருக்கும். அவற்றையெல்லாம் நிச்சயமாக அவர்கள் பதிவுசெய்வதனூடாக மானுடத்தின் பேரன்புடன் வாழ்ந்த ஒருவரை நாம் இன்னும் தெரிந்துகொள்ள ஏதுவாகலாம்.  எங்களுடன் பயணித்தவர்களை நாம் இழக்கும்போதெல்லாம் அவர்கள் கனவுகளையும் நாம் சேர்ந்தே சுமப்போம். 

கனவுகள் மெய்ப்படும்!


இக்கட்டுரை குமாரதேவை அவர்கள் இயற்கையெய்தி ஒரு மாதத்தின் பின்னர் அவரது நினைவாக வெளியிடப்பட்ட நினைவுமலரில் பிரசுரமானது.

குமாரதேவன் அவர்களின் இந்த ஓவியத்தை மிகக்குறுகிய அவகாசத்தில் வரைந்து தந்த ஓவியர் ஜீவா அவர்களிற்கும், அவரைத் தொடர்புபடுத்திவிட்ட டிலிப்குமார் அவர்களிற்கும் நன்றி

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑