தாயகக் கனவு நோக்கிய ஒரு மாற்றத்துக்கான குரல்! – எஸ்.கே. விக்னேஸ்வரன்

2013 இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து வந்தபோது, இனி நான் வாழப்போகிற இந்த நாடு எப்படிப்பட்டது, இங்குள்ள மக்கள் என்ன செய்கிறார்கள், இலங்கையிலிருந்து இங்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பவை பற்றிய எத்தகைய ஒரு விரிவான புரிதலும் என்னிடம் இருக்கவில்லை. தாயகம் பத்திரிகை, தாய்வீடு இதழ், காலம் சஞ்சிகை என்ற இந்த மூன்றையும் தவிர கனடாவில் இருந்து வெளிவரும் வேறெந்த இதழ்களையும் நான் அறிந்திருக்கவில்லை. மனவெளி நாடகக் குழுபற்றி அறிந்திருந்தேன்; தேடகம் அமைப்புப் பற்றித் தெரிந்திருந்தேன்; அவர்களது நாடகங்கள் மற்றும் சமூக செயற்பாடுகள் பற்றித் தெரிந்து வைத்திருந்தேன். ஆயினும் அவை எல்லாமே மிக மேலோட்டமான தகவல்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருந்தன. ஏற்கனவே இலங்கையில் இருக்கும்போது எனக்குத் தெரிந்திருந்த, முன்னரே கனடாவுக்குப் புலம்பெயர்ந்திருந்த பல நண்பர்கள் இங்கு இருந்தார்கள். அவர்களுடனான தொடர்புகளினூடாக, பின்னால் எனக்குப் புதிதாகப் பல நண்பர்களது தொடர்பும் கிடைத்தது. அவர்களுள் கலை, இலக்கியம், அரசியல், ஊடகவியல், சமூக செயற்பாடு என்று பல்வேறு துறைசார்ந்த, தமக்கென தனித்துவமான பார்வையும் செயலூக்கமும் கொண்டவர்களும் இருந்தார்கள். ஆயினும், அவர்களது அரசியல், கலை,இலக்கியம், சமூக செயற்பாடு என்ற துறைகள் சார்ந்து பேசவும் பழகவும் கிடைத்த ஆரம்பகாலப் பொழுதுகளில், சமூக செயற்பாட்டுக்கான அவர்களது முயற்சிகளில் ஒருவகையான சோர்வு நிலை காணப்படுவதாகவே உணர்ந்தேன். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அந்தக் காரணங்கள் எல்லாவற்றையும் அடையாளம் காணுமளவுக்கு கனடிய வாழ்க்கைமுறையையோ, அதில் ஒரு புலம்பெயர் சமூகமாக ஈழத்தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பது பற்றியோ எனக்கு போதிய அறிவோ அனுபவமோ இருக்கவில்லை. நூல் வெளியீடுகள், நாடகவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளுக்கு அப்பாலான வேறு நிகழ்வுகளைக் காணமுடியவில்லை. ஊடகத்துறை மிகவும் பலவீனமாக இருந்தது. மாற்றுச் சிந்தனைகளும், புதிய சிந்தனைக்கான வெளியை உருவாக்கும் செயற்பாடுகளும் மிகவும் அரிதாகவே இருந்தன. ஒருவகையில், இங்குள்ள வாழ்க்கை முறையில் இது  தவிர்க்க முடியாததோ என்ற எண்ணம் என்னைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தது,

 இவ்வாறான ஒரு சூழலில் தான் நண்பர் அருண்மொழிவர்மனுடனான தொடர்பு எனக்குக் கிடைக்கிறது. நூலகம் அமைப்பின் ஒரு செயற்பாட்டாளராகவே அவர் எனக்கு அறிமுகமானார். அந்த அறிமுகத்தைத் தொடர்ந்து அவ்வப்போது நடந்த சந்திப்புக்களின் போதான உரையாடல்களின்போது வெளிப்பட்ட, தேடல் தொடர்பாக அவரிடம் இருக்கும் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. தேடல் என்பது, தான் கொண்டிருக்கும் கருத்துநிலை கேள்விக்குள்ளாக்கப்படும்போது, அதை உள்வாங்கவும் ஆராயவும் தயாராக இருந்தால் மட்டுமே விரிவுகொள்ளக் கூடியது. தேடல் விரிவடையும் போதே தேடும் விடயம் சார்ந்த உண்மைகளின் பல்வேறு பரிமானங்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. மாறாக, தான் கொண்டிருக்கும் கருத்துநிலையே சரியானது என்பதற்கான ஆதாரங்களை மட்டும் திரட்டுவது தேடல் அல்ல. அது ஒருபோதும் உண்மையை நெருங்கிச் செல்ல ஒருவரை அனுமதிக்கப் போவதில்லை. அவரிடம் தான் அறிந்திருக்கின்ற ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும் ஆழமும் துல்லியமும் கொண்ட தெளிவை அடைவதற்கான தேடல் இருந்தது. அந்த வகையில் சிந்திக்கின்ற, கனடாவிற்கு வந்தபிறகு எனக்குப் புதிதாக அறிமுகமான பல நண்பர்களில் மிகவும் தனித்துவமும், ஆர்வமும்  கொண்டவர்களாக  நான் அடையாளம் கண்டவர்களில் நண்பர் அருண்மொழிவர்மன் முக்கியமானவர். தனது சொந்த வாசிப்பினூடாகவும் தேடல்களூடாகவும், பல்வேறு சிக்கலான விடயங்கள் தொடர்பாக அவரிடம் எழும் கேள்விகளை, ஒரு சமூக செயற்பாட்டாளருக்கு இருக்க வேண்டிய, அவ்வாறு தன்னை வளர்தெடுத்து முன்செல்ல அவசியமான அடிப்படைகள் குறித்தான கேள்விகள் என்று அடையாளம் கண்டு கொண்டேன். இதன் காரணமாக ஒரு வாரத்தில் ஒருதரமாவது நீண்ட நேரம் உரையாடுவதும் கருத்துக்களைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதும் அவற்றை மேலும் விரிவாக விவாதிப்பதும், அவரது சமூக செயற்பாட்டு நிக்ழ்வுகள் தொடர்பாக தோழமையுடன் எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதும் என்று எங்கள் உறவு தொடர்ந்தது.

உண்மையில், கனடாவில், நண்பர் கற்சுறா அவர்களது முன்முயற்சியில் நடாத்தப்பட்ட 48வது இலக்கியச் சந்திப்பு நிகழ்வுக்கான நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவதற்காக உருவாக்கப்பட்ட  ஏற்பாட்டுக் குழுவில் நண்பர் அருண்மொழிவர்மனது முன்மொழிவின் அடிப்படையில் நானும் இணைந்து செயற்பட்டபோதே அவருடனான எனது உறவு மேலும் விருத்தி கொண்டது என்று நினைக்கிறேன். ஒரு சமூக செயற்பாட்டாளருக்கு இருக்கவேண்டியதென நான் புரிந்துகொண்டுள்ள அனைத்து அம்சங்களும் கொண்ட ஒரு ஆளுமையாக அவரை நான் இனம் கண்டுகொள்ள இந்தச் சந்தர்ப்பம்  நல்லதொரு வாய்ப்பை எனக்கு வழங்கியது. அதைத் தொடர்ந்து அவரது எல்லா வகையான சமூக செயற்பாடுகள், சமூக அரசியல் கருத்துருவாக்கம், கலை இலக்கிய சமூக செயற்பாடுகள் என்ற பல்வகைப்பட்ட  முயற்சிகளிலும் நானும் ஏதோ ஒருவகையில் மிகச் சிறிய அளவிலாயினும் அவருடன் தொடர்ச்சியான உரையாடலில் ஈடுபட்டு வருகிறேன். ஒருவகையில் எங்கள் இருவருக்குமிடையிலான உறவை,கொள்ளலும்  கொடுத்தலுமான தோழமை உறவாகப் பரிணமித்து வளரும்  ஒரு உறவு என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்..

அந்த  வகையில் அவரது சமூகம் சம்பந்தப்பட்ட எல்லா முயற்சிகளையும் பற்றி எனக்கு மிகுந்த மதிப்பும் ஆர்வமும் உண்டு. புதிய சொல் இதழை அவரும் அவரது  நண்பர்களும் இணைந்து வெளிக்கொணர்ந்தது முதல், இப்போது அவர் செயற்பட்டுவரும் விதை குழுமம் ஊடாக நடந்துவரும் நிகழ்வுகள் வரை நான் ஒரு தொடர்ச்சியான பார்வையாளனாக, ஆதரவாளனாக, சில சமயங்களில் ஒரு நேர்ப்படியான விமர்சகனாகவும் இருந்து வருபவன் என்ற முறையில், அவரது ‘தாயகக் கனவு’ என்ற இந்த நூல் அவர் ஒரு சமூக செயற்பாட்டாளராக வளர்ந்துவந்த வழித்தடத்தை அடையாளம் காட்டும் ஒரு நூல் என்று என்னால் துணிந்து கூற முடியும்.  

நண்பர் அருண்மொழிவர்மனது இந்த நூலிலுள்ள கட்டுரைகள் அவர் கடந்த கிட்டத்தட்டப் பத்தாண்டு காலத்தில் அவ்வப்பொது எழுதி, வெவ்வேறு இதழ்களில் வெளியான கட்டுரைகள். நூலின் தலைப்பாகவந்துள்ள  ‘தாயகக் கனவு’ என்ற கட்டுரை, ஒருதசாப்தகால இடைவெளிக்குப் பின் நாடுதிரும்பியபோது பெற்ற  தனது அனுபவங்களை, தாயகம் பற்றித் தனக்கிருந்த கனவுகள் வெறும் கனவுகளாகவே இருக்க தாயகம்  எவ்வாறு மாறிப்போயிருக்கிறது என்பதை, தான் ஏற்கனவே வாசித்த மிலன் குந்தேரா அவர்களது ‘மாய மீட்சி’ என்ற நாவலின் கதையுடன் ஒப்பிட்டு உரையாடுகிறது. யுத்தம் நாளாந்த இயல்பு வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்ட காலப்பகுதியில் வாழும் சமூகம் எவ்வாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் விதத்தில் முற்றாக மாற்றம் கண்டுவிடுகிறது என்பது, அவருக்கு வெறும் அதிர்ச்சிச் செய்தியாக அல்லது கலைந்துபோன கனவாக மட்டுமல்ல, மிகவும் ஆபத்தான, மனித உரிமைகள் எவையும் கணக்கில் எடுக்கப்படாத ஒரு மோசமான நிலை அங்கு உருவாகியிருப்பதை அடையாளம் காணவும் வைக்கிறது. அங்குள்ள மக்களை வழிநடத்தும் அரசியலின் பலவீனம், நடக்கும் நிகழ்வுகளின் குரூரம் எல்லாம் இது இலங்கையே அல்ல என்ற என்ணத்தை அவருக்கு ஏற்படுத்துகின்றன.  அவை ஏன் அப்படி நடக்கின்றன, அதற்கான காரணம் என்ன என்ற கேள்விகளை எழுப்பி விடைதேடும் முயற்சியை மேற்கொள்ளும் ஒரு கட்டுரையாக இக்கட்டுரை அமைகிறது. இந்தப் பார்வையின் வளர்ச்சியும் விரிவுமாகவே நூலின் ஏனைய கட்டுரைகள் அமைகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து இன்னொன்று மேலும் புதிய பரிமாணங்களுடன் விடயங்களை அணுகும் வளர்ச்சியை வெளிப்படுத்துபபவையாக அமைகின்றன. இந்நூலிலுள்ள கட்டுரைகள் முதலாவதும் இறுதியானதுமான கட்டுரைகள் தவிர்ந்த ஏனையவை அவர் வாசித்த நூல்கள் பற்றிய விமர்சனங்களாக அமைந்தபோதும், அவரது விமர்சனப் பார்வை வெறுமனே நூலின் உள்ளடக்கம் சார்ந்ததாக மட்டும் குறுகிவிட்டதாக அல்லாமல், அவற்றின் பின்னணியில் உள்ள போக்குகள் , நோக்குகள் பற்றிய விமர்சனங்களாகவும் அமைந்துள்ளதை நூலைப் படிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்வர்.

தனது இந்தக் கட்டுரைகளுக்காக அவர் தேர்ந்தெடுத்த  நூல்கள் அவை பேசுகின்ற விடயப்பரப்பின்  சமூக, அரசியல் முக்கியத்துவம் கருதியே அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்றே நினைக்கிறேன். அப்படி இல்லாமலும் இருக்கலாம். ஆயினும் அவர் கொண்டிருக்கும் சமூக அரசியல் சார்ந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில்.அவற்றைத் தெளிவாகவும் தர்க்க நேர்த்தியுடனும் அணுகுபவையாக  இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. இவை பொதுவாக மூன்று விடயங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளன என்பதை இவற்றை வாசிக்கும் ஒருவரால் அடையாளம் காணமுடியும். முதலாவதாக நூலின் பேசுபொருள், அதன் முக்கியத்துவம் என்பவற்றைக் குறிப்பிட்டு, அவற்றை அடிப்படையாகக் கொண்டு நூல்சொல்ல வரும் விடயத்தினை அடையாளம் காட்டுதல். இரண்டாவதாக, நூல் எழுதப்பட்டிருக்கும் விதத்தில் வெளிப்படும் பலங்களும் பலவீனங்களும் பற்றிய அவதானிப்பு முன்வைக்கப்பட்டு அவை அலசப்படுகின்றன. மூன்றாவது பகுதி, அந்த நூலின் பலம் அல்லது பலவீனத்தை மதிப்பிடுகிறது. பலவீனங்கள் சில சமயம் தகவல் தவறுகளாகவோ அல்லது வேண்டுமென்றே கவனிக்கப்படாமல் விடப்பட்டவையாகவோ இருக்கலாம். ஆனால் அவை எப்படி அந்த நூலையும் அதன் நோக்கையும் ஊறுசெய்கின்றன என்பதை தெளிவுபடுத்துவதாக இந்தப் பகுதி அமைகிறது. அல்லது வேறுவிதமாக சொல்வதானால், அது தன் பேசுபொருளை ஒரு இலக்கிய முழுமையாக தந்த அல்லது தராத படைப்பு என்று வரையறை செய்வது, அல்லது எழுத்தாளரது சமூக,அரசியல்,வரலாறு சார்ந்த பார்வை எவ்வாறு ஒரு நூலின் முழுமையை பாதிக்கிறது அல்லது வளப்படுத்துகிறது என்பதை வரையறை செய்வது என்பதாக அமைகிறது.

 என்னைப் பொறுத்தவரை, ஒரு சமூக செயற்பாட்டாளர் எப்போதும் தன்முன்னால நடக்கும் எல்லா நிகழ்வுகளையும், தான் சரியென  நம்பும்  கருத்துநிலை அல்லது கோட்பாட்டுநிலை நின்று நோக்கவும், அவற்றை ஆராயவும், அவற்றிலிருந்து கற்றுக் கொள்ளவும், தான் சார்ந்த கருத்து நிலையையும் கூட தேவைப்படும்போது திருத்திக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். ஒரு சந்தர்ப்பத்தில், நமது அறிவுக்கும் அனுபவத்துக்கும் எட்டிய அளவில்  சரியானதாகத் தோன்றும் ஒரு விடயம், உண்மையிலேயே சரியானதாகவோ அல்லது  எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சரியானதாகவோ இருக்கும் என்று உறுதியாகக் கொள்ளமுடியாது. அதுவும், சமூகவியல் சம்பந்தப்பட்ட விடயத்தில் இது மிக முக்கியமான ஒரு அடிப்படை விதி என்றே சொல்லலாம். சமூக வாழ்வின் இந்த இயங்கியலைப் புரிந்துகொள்வது ஒரு சமூக செயற்பாட்டாளருக்கு மிகவும் அவசியமானது. அந்தவகையில், இந்நூலிலுள்ள கட்டுரைகள், அவற்றுக்குக் காரணமான நூல்கள் பேச எடுத்துக்கொண்ட விடயங்களுடன்  உடன்பட்டும், முரண்பட்டும் கருத்துக்களை முன்வைப்பதன் மூலம், வாசகர்களிடையே நூல்கள் பற்றி மட்டுமல்ல,அவற்றை நோக்கும் நிலைதொடர்பாகவும் தனது கருத்துக்களைக் கொண்டுசேர்க்கிறார். வெறுமனே பொதுப்புத்தியின் பாற்பட்ட நோக்குநிலையை விமர்சிப்பதாக தன்னை மட்டுப்படுத்தாது, அதற்கடுத்ததாக கவனத்திலெடுக்க வேண்டிய விடயங்களையும் முன்வைத்து விவாதிப்பவையாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன என்பது இந்த நூலுக்கான முக்கியத்துவம் என்று என்னால் துணிந்து சொல்லலாம்.

நூலின் இறுதிக் கட்டுரையான, முள்ளிவாய்க்கால்: நினைவுகூர்தலில் இருந்து அரசியல் செயற்பாடு நோக்கி என்ற கட்டுரை, ஒரு செயற்பாட்டாளரின் சிந்தனைகளாக எழுதப்பட்ட ஒரு கட்டுரை எனலாம். இன்றைய சூழலின் தேவையைக் கருத்தில் கொண்டு  எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. விரிவான கலந்துரையாடலுக்கும் கருத்துப் பரிமாற்றங்களுக்குமான அடிப்படைகளைக் கொண்ட ஒரு அவசியமான ஒரு கட்டுரை.

மொத்தத்தில் இந்த நூல், நமது காலத்தின் ஈழத்தமிழ் அரசியல் இலக்கிய செயற்பாடுகளின் பெரும்போக்கின், தாயகக் கனவின் செல்நெறி மீதான, அதனூடு கேள்விகளுடன் சமாந்தரமாகப் பயணிக்கும் ஒரு சக பயணியின் மாற்றுக் குரல் என்று  சொல்லலாம்.

அவரது முதலாவது நூல் இது. அவரது எழுத்துப் பணி தொடரவேண்டும். இன்னும் பேசப்படவேணடிய பல விடயங்கள் பற்றி அவர் பேசவேண்டும். பேசுவார் என்று நம்புகிறேன்.

குறிப்பு:

என்னுடைய முதலாவது நூலான தாயகக் கனவுகளின் அணிந்துரையாக எஸ்.கே. விக்னேஸ்வரன் அவர்கள் எழுதித்தந்த குறிப்பிது. இது ஓகஸ்ட் 2022 தாய்வீடு இதழிலும், ஒக்ரோபர் 16, 2022 அன்று வெளியான தமிழன் முரசு இதழிலும் மீள்பிரசுரமானது.

https://thaiveedu.com/pdf/22/Aug2022.pdf

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: