பால் – பாலியல், காமம் – காதல், பெண் – பெண்ணியம்: ஓர்ஆண்நிலைநோக்கு : உரையாடல் ஒன்றுக்கான குறிப்புகள்

குறிப்பு:

மீராபாரதி எழுதிய பால் பாலியல், காமம் காதல், பெண் பெண்ணியம் – ஓர் ஆண் நிலை நோக்கு என்கிற நூலின் வெளியீட்டினை முன்வைத்து ரொரன்றோவில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும்படி நூலாசிரியர் மீராபாரதி கேட்டிருந்தார்..  இந்நூல் பேசுகின்ற விடயமும் அது பற்றி மீராபாரதி அவர்கள் கொண்டிருக்கின்ற அக்கறையும் முக்கியமானது.  அந்த வகையில் இந்நூலையும் அதில் உள்ள கட்டுரைகளையும் தன் அக்கறையின் பாற்பட்டும், தான் கொண்ட கருத்தியலின் மீதிருக்கும் நம்பிக்கையின் பாற்பட்டும் மீராபாரதி தன்னோடும் சமூகத்தோடும் தொடர்ச்சியாக நடத்திய உரையாடல்களின் தொகுப்பாகவே நான் இனங்காணுகின்றேன்.  நான் உரையாடல்களில் நம்பிக்கை கொண்டவன்.  காத்திரமான உரையாடல் ஒன்று நிகழும்போது அது இரு தரப்பினரையும் தம்மை சுயவிமர்சனம் செய்யவும் தாம் கொண்டிருக்கும் கருத்தியல்கள் பற்றி மறுபரிசீலனை செய்யவும் உதவும் என்றும் நம்புகின்றேன்.  அந்த நம்பிக்கையின் பாற்பட்டு, பெண்விடுதலை மீதும், சமத்துவம் பற்றியும் அக்கறை கொண்டவன், அதை இயன்றவை தனிப்பட்ட வாழ்விலும் பயில முனைபவன் என்றவகையில் இந்நூலுடன் தொடர்புடைய என் தேடல்கள், தெளிவுகள், அவதானங்களை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.  குறிப்பாக பெண்விடுதலை, ஆணாதிக்கம் மற்றும் இவை சமூக அளவில் ஏற்படுத்தியிருக்கின்ற தாக்கங்களைப் புரிந்துகொள்கின்ற முயற்சியாக இந்தக் கட்டுரை அமையும்.  அத்துடன் இந்தக் கட்டுரையானது இந்த நூலின் உள்ளடக்கத்தினைக் குறித்த மதிப்பீடாகவோ அல்லது விமர்சனமாகவோ இல்லாமல், இந்த நூல் பேசுகின்ற விடயப்பரப்பினைக் குறித்த ஓர் உரையாடலை உருவாக்கவும், பங்கேற்கவும் செய்கின்ற முயற்சியாகவே அமையும்.  மிக ஆழமாகப் பேசவேண்டிய இந்த விடயங்கள் குறித்து கட்டுரையின் அளவு கருதி மிக சுருக்கமாகவே இந்தக் கட்டுரையில் பேசமுடிகின்றது. 

பெண்ணியம் என்று பேச முனையும்போது தவிர்க்கவேமுடியாமல் ஆணாதிக்கம் என்பது பற்றியும் பேச வேண்டியதாகின்றது.  ஆண்களாலும் ஆண்களை முதன்மைப்படுத்தியும் பெண்கள் மீதும் ஆண்கள் உள்ளிட்ட சமூகத்தின் மீதும் நிகழ்த்தப்படுகின்ற ஒடுக்குமுறை என்று ஆணாதிக்கத்திற்கு அர்த்தம் கொள்ளலாம் என்றாலும், ஆணாதிக்கம் எப்படி செயற்படுகின்றது எவ்விதம் தாக்கம் செலுத்துகின்றது என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ள ஆணாதிக்கத்துக்குக் காப்பாக இருக்கின்ற “தந்தைமை” (Patriarchy) பற்றிப் புரிந்துகொள்ளவேண்டும். 

பால்நிலை சார்ந்த உரிமைகளும், அவர்களுக்கான சமூக நிலையும் வரலாற்றின் எந்தக் காலப்பகுதியிலும் “நியாயத்தின்படியாக” அமைந்ததாகக் கொள்ளமுடியாது.  அந்த அந்தக் காலப்பகுதியில் நிலவிய நம்பிக்கைகள்/மூட நம்பிக்கைகள் சார்ந்தும், வழமைகள் சார்ந்தும், மருத்துவ வசதிகள், பொருளாதார முறைகள் உள்ளிட்ட காரணிகள் செலுத்திய தாக்கம் என்பவற்றின் அடிப்படையிலேயே பால்நிலைகளுக்கான உரிமைகளும் சமூக நிலைமைகளும் நிலவின.  எனவே அந்த அந்த சமூக ஒழுங்குகளையும் சமூக உறவுகளையும் காக்கும் நோக்குடன் அவற்றைப் பேணவும், அவ்வாறு பேணும்விதத்திலான பெரும்பான்மையினரை முன்னிலைப்படுத்தியும் அவர்களது நலன்களை உறுதிப்படுத்தியும் வழமைகள் உருவாகின.  காலத்துக்கு காலம் அவ்வாறு உருவாகிய முறைமைகள் நீண்ட கால ஓட்டத்தில் சமூக பொருளாதார உறவுகளிலும் உற்பத்தி முறைகளிலும், மொழி மற்றும் பண்பாட்டு நிறுவனங்களூடாகவும் எம்மால் இன்று உணர்ந்துகொள்ளக் கூட முடியாத அளவு நுணுக்கமாகத் தாக்கம் செலுத்துபவனவாகவும், சமூக அசமத்துவத்தைப் பேணுவதாயும், தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளுக்கு ஆதாரமாயும் மாறிப்போயின.

மனிதன் சேர்ந்து வாழத்தொடங்கிய காலங்களில் தொல்குடிகளின் மரபாக தாய்வழி சமூகங்களையும், தந்தைமை சமூகங்களையும் இனங்காண முடியும்.  ஒப்பீட்டளவில் தந்தைமை சமூகங்கள் தாய் வழி சமூகங்களைவிட சிக்கலான உறவுமுறைகளையும், இறுக்கத்தையும் கொண்டவை.  இன்றுவரை தாய்வழிச் சமூக அமைப்பின் செல்வாக்கை கேரளாவிலும் மட்டக்களப்பிலும் காணமுடியும்.

தொல்குடிகளிடம் மனிதக் கருவுறுதல் அதிகரிப்பது பயிர்களின் விளைச்சலையும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை காணப்பட்டது.  எனவே மனித கருவுறுதலை தூண்டும் அல்லது அதிகரிக்கும் நோக்குடன் பல்வேறு சமயச் சடங்குகளும் நம்பிக்கைகளும் நிலவின.  அக்காலப்பகுதிகளில் கருவுறுதலில் ஆணின் பங்கு / உடற்சேர்க்கை பற்றிய அறிதல் மக்களிடம் இருக்கவில்லை.  எனவே அன்றைய வாழ்வியலைப் பொறுத்து பெண் செல்வத்தைத் தருபவளாகவும், செல்வமாகவும் பார்க்கப்பட்டாள்.  தொல்குடிகளில் ஆண்குறி அல்லது லிங்க வழிபாடு காணப்பட்ட காலப்பகுதிக்கு முன்னராக பெண்குறியே சமயச் சடங்குகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.  மிகப்பழைய நாகரிகங்களில் ஒன்றான எகிப்தில் பெண்குறி வடிவினதான “சங்கு” மாயத்தன்மை கொண்டதாகவும், பணமாகவும் கருதப்பட்டது.  அன்றைய மனிதன் பெண்ணை செல்வத்தைத் தருபவளாகவும், மாயத்தன்மை கொண்டவளாயும் பார்த்தான்.  பின்னர், ஆணை மையப்படுத்திய சமூக உறவுகள் தோன்றியபோது அவன் பெண்ணை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அல்லது தனது உடமையாக வைத்திருப்பதே தன்னை பலமிக்கவன் ஆக்கும் என்று கருதினான்.  மெல்ல மெல்ல நவீன சமூகங்கள் தந்தைமை சமூகங்கள் ஆனபோது, அவற்றின் தாக்கம் அதிகரித்தபோதும் தந்தைமை சமூகத்தைப் பேணுவதும் கட்டிக்காப்பதுமே பெண்களை “புனிதமாக்குவதாக” மாறியது. 

மேலும் கிறீத்தவ மதத்தின் செல்வாக்கும் பெண்களுக்கான ஒழுக்கவிதிகளைத் தீர்மாணித்தன.  தொடக்க கால கிறீத்தவ மதத்தில் சென்ற். போல் திருமணம் தொடார்பாக கூறிய கருத்துகளைத் தொகுத்து “மரீஜ் அன்ட் மோரல்ஸ் என்ற நூலில் பட்டியலிடும் பேர்ட்ராண்ட் ரஸ்ஸல், சென்ற் போலினது திருமணம் தொடர்பான கருத்துகள் பெண்ணின் பாலியல் ஒழுக்கத்தை வரையறை செய்யும்பொருட்டே என்றும், அது இனவிருத்தி தொடர்பான அக்கறையின் பாற்பட்டது அல்ல என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.  அத்துடன் அக்காலத்தில், ஒரு பெண் திருமணத்துக்கு வெளியே எவருடன் உறவு கொண்டாலும் அது குற்றமாகக் கருதப்பட்டது என்றும், ஆணைப்பொறுத்தவரை அவன் இன்னொரு ஆணின் மனைவியுடன் உறவு கொண்டால் மாத்திரமே, அதுவும் இன்னொருவரின் சொத்துகளை அபகரித்தான் என்ற வகையிலான குற்றமாகவே கருதப்பட்டது என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.

தாய் சமூகங்களில் எல்லாக் குழந்தைகளும் சந்திரனின் குழந்தைகள் என்கிற நம்பிக்கையும் மக்களிடத்தே காணப்பட்டது.  தமிழர்களின் பழைய பண்டிகைகளும், சடங்குகளும் நிலவை மையமாகக் கொண்டு கணிக்கப்பட்டன என்பதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.  தவிர பழந்தமிழர்களின் ஆதித் தெய்வங்களாகத் தாய் தெய்வ வழிபாடும் மகன் தெய்வ வழிபாடும் இருந்ததையும் காணலாம்.  காடு கெழு செல்வி, கடல் கெழு செல்வி என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது அந்தத் தாய்த் தெய்வம்.  சங்க இலக்கியங்களில் செல்வி என்பது குழந்தை பெற்ற தாயினையே குறிப்பிடுவதாக உள்ளது என்பதை இங்கே குறிப்பிடவேண்டியுள்ளது.  அதே போல, இத்தாய் தெய்வத்தின் மகன் தெய்வமாக முருகன் குறிப்பிடப்படுகின்றான்.  இந்த முருகன் பாலகனாகவே இருக்கின்றான்.  வீரமும் இளமையும் பொருந்திய முருகனாக அவனைக் குறிப்பிடும் வழக்கம் பக்தி இலக்கிய காலத்திலேயே உருவானது.  அதுபோல வைதீக சமயங்களின் எழுச்சியிலேயே தாய்த் தெய்வம் சிவனின் மனைவியாகவும், திருமாலின் சகோதரியாகவும் ஆக்கப்பட்டாள்.  அதன் பின் தாய்த்தெய்வக் கோயில்களிலும் அவள் ஆண் தெய்வம் ஒன்றை சார்ந்தவளாக ஆக்கப்பட்டாள்.  ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் “காமக் கோட்டம் அழித்தார் பட்ட பாவம்” என்று தாய்த்தெய்வக் கோயில்கள் அழிக்கப்பட்டாதகக் குறிப்பிடப்படுவதாயும், அவை அனேகம் தந்தை தெய்வக் கோயில்களாக மாற்றப்படுவதற்காக வைதீக சமயத்தவரால் அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் “தெய்வம் என்பதார்” நூலில் தொ. பரமசிவன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.  வைதீக சமயங்களில் இருந்த ஆணாதிக்க அல்லது ஆண் முதன்மைவாத போக்கு இவ்விதம் பழந்தமிழர்களின் வழிபாட்டு முறைகளுடன் கலந்தது.  தொடர்ந்து சோழர்காலத்தில் பரவிய பார்ப்பனச் செல்வாக்கும் வைதிக சமயங்களின் எழுச்சியும், இதனை மக்களிடையே ஊடு புகச்செய்தன என்று அறிய முடிகின்றது.  இன்றுவரை ஈழத்தில் மட்டக்களப்பில் தாய் வழி சமூகச் செல்வாக்கும், வடபகுதியில் தந்தைமை சமூக செல்வாக்குகளும் அதிகம் காணப்பட வடபகுதியில் பிற்காலத்தில் ஏற்பட்ட சோழர்களின் செல்வாக்கு காரணமாக அமையக்கூடும்.  ஆயினும் இன்றும் கிராமங்களில் சிறு கோயில்களில் தாய்த் தெய்வவழிபாட்டிலும், சடங்குகளிலும் தாய்ச்சமூகத்தின் எச்சங்களைக் காணலாம்.

அதே நேரம் கிரேக்கத்திலும் பெண்களுக்கான சமூக வகிபாகம் பற்றிய உரையாடல்கள் நிகழ்ந்திருப்பதை காணக் கூடியதாக உள்ளது.  குறிப்பாக பிளேட்டோவின் குடியரசின் 5வது நூலில் இது பற்றிய உரையாடல்கள் நடந்திருக்கின்றன.  இந்த உரையாடல்களை இன்றைய பெண்ணிய சிந்தனைகளுடன் ஒப்பிடுவது பொருத்தம் அற்றது என்றாலும் அது நிகழ்ந்த காலத்தில் முக்கியமானதாகவே கருத முடிகின்றது.  ஆயினும் அரிஸ்ரோட்டில் தனது அரசியல் என்ற நூலில் கூறும் கருத்துகள் இன்று ஆணாதிக்கம் என்று கூறப்படும் கருத்துநிலைக்கு ஆதரவுத் தளத்தினை வழங்குவனவாக அமைகின்றன.  நாடு அல்லது அரசு என்பதன் முக்கியத்துவத்தைக் கூறும் அரிஸ்டோட்டில், குடும்பங்களை அடிப்படை அலகுகளாகவும், குடும்பங்கள் சேர்ந்து கிராமங்களையும் கிராமங்கள் சேர்ந்து அரசுகளையும் உருவாக்குவதாகக் கூறுகின்றார்.  எனவே அரசு பற்றிய உரையாடல் குடும்பங்களில் இருந்து தொடங்கப்படவேண்டும் என்று கூறி, குடும்பம் என்பது  ஆண்டான் (மாஸ்ரர்) ஐயும் அடிமைகளையையும் கொண்டதாக அமையும் என்றும் அங்கே பெண் ஆண்டானுக்கும் அடிமைகளுக்கும் இடைப்பட்டவள் என்றும் கூறுகின்றார்.  அத்துடன் பெண்களின் இயல்புகள் பற்றி அரிஸ்ரோற்றில் கூறுகின்ற கருத்துகளும் இன்றுவரை ஆணாதிக்க சிந்தனையில் பெண்கள் பற்றி இருக்கின்ற கண்னோட்டமாகவே இருக்கின்றது என்பதையும் அவதானிக்க முடிகின்றது.  தவிர குடும்பதில் ஒருவரின் நிலை அல்லது மதிப்பு அவரில் எவ்வளவு அந்த குடும்பம் தங்கியிருக்கின்றது என்பதைக் கொண்டே இருக்கின்றது என்றும், அந்த வகையில் குடும்பத்தில் தலைவன் அல்லது தந்தையே முதன்மையானவன் என்கிற கருத்துகளும் இவ்வகையானவையே.  கிட்டத்தட்ட இத்தகைய செல்வாக்குகளே 19ம் நூற்றாண்டின் இறுதிவரை வரை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எதிர்ப்புகள் இன்றி நிலவின. 

ஆயினும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செல்வாக்கு செலுத்திய இரண்டு முக்கிய சிந்தனைப் பள்ளிகளான மார்க்ஸிய சிந்தனைப் பள்ளி மற்றும் ஃப்ராய்டிய சிந்தனைப் பள்ளிகளில் ஃப்ராய்டிய சிந்தனைப் பள்ளி பால்/பாலியலை வைத்து சமூக உறவுகளை ஆய்வுசெய்ய ஆரம்பித்தது பெண்ணிய சிந்தனைகளும், தத்துவ வாதிகளும் பெருகக் காரணமானது எனலாம்.  இந்த வகையில் பெண்களின் ஒடுக்குமுறைக்கெதிராகவும், பெண்விடுதலை நோக்கியும் சிந்தனை முறைகள் தோன்றின.  அவ்வாறு தோன்றிய சிந்தனை முறைகளை நடைமுறை, கோட்பாடு சார்ந்து காலத்துக்குக் காலம் மாறுதலுற்றும் வந்தன. ஆய்வாளார்கள் பெண்ணியம் என்பதை முதலாம் அலை பெண்ணியம், இரண்டாம் அலை பெண்ணியம், மூன்றாம் அலை பெண்ணியம் என மூன்றாக வகைப்படுத்துவர். 

முதல் அலை பெண்ணியம் என்பது பொதுவெளியில் பெண்களுக்கு எதிரானதாக பெண் என்கிற பால்நிலை காரணமாக பாகுபடுத்தப்பட்டதாகக் கருதப்பட்ட வாக்குரிமை, சொத்துரிமை, விவாகரத்துக் கோரும் உரிமை, கலை பண்பாட்டுத் தளங்களிலும், உயர் கல்வியிலும், அறிவியல் தேடல்களிலும் ஈடுபடும் உரிமை என்பன பற்றிய போராட்டங்களை முன்னெடுத்ததாகும்.  குறிப்பாக சமூக பொருளாதாரத் தளங்களில் பெண்களுக்கான சம உரிமையை முன்னெடுத்தது முதல் அலை பெண்ணியம்.

இரண்டாம் அலை பெண்ணியம் என்பது, பொது வெளியில் தெரியாத பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிரான The Personal is political என்ற கோஷத்தை முன்வைத்து எழுப்பப்பட்டதாகும்.  குடும்ப வன்முறை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள், போர்னோ கிராபியை எதிர்த்தல், பாலியல் தொழிலை எதிர்த்தல், உடலிறவின் பெயரால் பெண்ணுடல் மீது நிகழ்த்தப்படும் வன்முறை மற்றும் அவை தொடர்பான கற்பிதங்கள், குடும்பம் என்கிற நிறுவனத்தில் பால்நிலை காரணமாக பெண்மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறை, குழந்தை பெறுவது தொடர்பாக பெண்ணுக்குள்ள உரிமை, அபார்ஷன் செய்யும் உரிமை, பண்பாட்டின் பெயரால் பெண் மீது நிகழ்த்தப்படும் வன்முறை என்பன தொடர்பான உரிமைகளைப் பெறவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் போராடியது இரண்டாம் நிலை பெண்ணியம். 

மூன்றாம் அலை பெண்ணியம் என்பது ஒப்பீட்டளவில் “தற்காலத்தில்” எழுந்த கோட்பாட்டு வடிவம்.  குறிப்பாக 90களின் பின்னரே இது செழுமையாக்கப்பட்டது.  இரண்டாம் அலை பெண்ணியம் தோல்வியடைந்தமைக்கான / சரியான தாக்கத்தை ஏற்படுத்தாமைக்கான காரணத்தை மீளாய்வு செய்து அதன் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட கோட்பாட்டு வடிவமே இதுவாகும்.  பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பொதுமைப்படுத்தாமல், அவற்றுள் இருக்கின்ற நுண்ணரசியலை பன்மைத்துவமாக செயலாற்றல் என்பது மூன்றாம் அலையின் விசேட பண்பாகும்.  பால்நிலையில் பெண்கள் என்றாலும் இனத்தாலும், மதத்தாலும், நிறத்தாலும், பண்பாட்டாலும், மொழியாலும், வர்க்கங்களாலும், நம்பிக்கைகளாலும் வேறுபட்டவர்கள் இவர்கள் என்கிற கரிசனத்துடன் பெண்ணியத்தை அணுகுவது மூன்றாம் அலை பெண்ணியம்.  ரொரன்றோவில் முதன்முதலில் நடந்த ஸ்லற் வோக் என்பது மூன்றாம் அலை பெண்ணியத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றாகவே மதிப்பிடப்படுகின்றது.  ஹிஜாப் அணியும் உரிமை, பாலியல் தொழில் பற்றிய விவாதம், பாலியல் தொழிலாளிகளுக்கான உரிமைகளும் கூட இதன் வழியானவையே.

இந்தப் பிரதான வகைப்படுத்தல்கள் தவிர்ந்த வேறு வகைப்படுத்தல்களையும் நடைமுறையில் காணமுடியும்.  இந்த கோட்பாடுகள் பற்றிய பிரக்ஞையுடனும் இல்லாமலும் பெண்ணியம், பெண்விடுதலை பற்றிய முன்னெடுப்புகளும் உரையாடல்களும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.  அத்தகைய முன்னெடுப்புகளில் ஒன்றாகவே பெண்ணியம் குறித்துத் தொடர்ந்து செயற்படுகின்ற மீராபாரதியின் “பால் பாலியல், காமம் காதல், பெண் பெண்ணியம் – ஓர் ஆண் நிலை நோக்கு” என்கிற இந்த நூலும் அமைகின்றது. 

மீராபாரதி எழுதிய இந்த நூலில் ஆணாதிக்கம் குறித்த உரையாடல்கள் அதிகம் இடம்பெற்றிருக்கின்றன.  ஆயினும் ஆணாதிக்கம் குறித்த இந்த நூலில் குறிக்கப்படுகின்ற கருத்துகளுக்குச் சற்று மாறுபட்ட பார்வை ஒன்றினையும் குறிப்பிடவேண்டி இருக்கின்றது.  ஆணாதிக்க சமூகம் ஒன்று பேணப்படுவதால் கிடைக்கப்பெறுகின்ற சலுகைகளை அதிகம் அனுபவிப்பவர்களாக ஆண்களும் தந்தைமை சமூகத்தின் மூலமான சலுகைகளை அனுபவிப்பவர்களும் இருக்கின்றார்கள் என்பது உண்மையே.  ஆனால், ஆணாதிக்கம் என்பது ஆண்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக இருக்கமுடியாது.  அது அக்காலத்தில் சமூக ஒழுங்கு தந்தைமை சமூகமாக மாறியபோதும் அதன் வழியான குடும்பங்களைப் பேணவும் உருவானது.  அதே நேரம் பெண்கள் மீது ஒடுக்குமுறையை பிரயோகிப்பதும் அவர்கள் மீது தொடர்ச்சியாக சுரண்டல்களை மேற்கொள்வது என்பதும் உண்மையே.  ஆயினும் நடைமுறையில் ஆணாதிக்க சமூக ஒழுங்கினை மீற முற்படும் ஆண்களுக்கும் ஆணாதிக்கம் எதிரானதாகவே இருக்கின்றது.  இன்றும் பெரும்பாலான கீழைத்தேய சமூகங்கள் குடும்பங்களையே சமூகத்தின் அடிப்படை அலகாகக் கொண்டவை.  எனவே அத்தகைய சமூகங்களில் ஆணாதிக்கத்துக்கு எதிராக செயற்படும் ஆணும் – அவனுக்கு ஆண் என்பதால் கிடைக்கும் சமூக சலுகைகள் இருந்தாலும் – அந்நியமாகவே உணரப்படுகின்றான்.  தவிர, பெரும்பாலான ஆண்களிடம் இருப்பதுபோல ஆணாதிக்க சிந்தனைகள் பெரும்பாலான பெண்களிடமுமே இருக்கின்றது.  ஆணாதிக்கம் என்பது எவ்வளவு நுட்பமாகத் தொழிற்பட்டு ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கின்றது என்பதைப் பெண்களும் கூட இன்னும் சரியாக உணரவில்லை என்றே கருதமுடிகின்றது.  சாதியம், தேசியம், வர்க்கம் என்கிற எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் தரப்பினரும் கூட தாம் ஒடுக்கப்படுகின்றோம் என்பதையும் தமது உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதையும் உணர்வதில்லை என்பதே உண்மை. 

இந்த நிலையில் ஆணாதிக்க சிந்தனையில் இருந்து வெளிப்படும் முனைப்புள்ள ஆண்/பெண், அதே முனைப்புள்ள ஆண்/பெண்ணிடம் சமூக உறவுகளை மேற்கொள்வது ஒப்பீட்டளவில் இலகுவானது.  அதேநேரம், அவ்விதம் இல்லாமல் ஆணாதிக்க சிந்தனையில் இருந்து வெளிப்படும் முனைப்புள்ள ஆண் அவ்விதம் இல்லாமல் ஆணாதிக்க சிந்தனையின் தாக்கம் உள்ள ஒரு ஆண்/பெண்ணிடம் சமூக உறவுகளை மேற்கொள்ளுவது மிகச் சிரமமானதாகும்.  குறிப்பாக அவ்வாறான சூழ்நிலையில் ஆண் தன் பொறுப்புகளை ஏற்காதவனாகவே அடையாளம் காணப்படுவான் என்பதையும் அவதானிக்கவேண்டி உள்ளது.  அதுபோல மரபான குடும்பம் என்பது ஆணாதிக்க வடிவம் என்றாலும் அதனை உடைப்பதும் சட்ட ரீதியாக மணம் முடிக்காமல் சேர்ந்து வாழல் என்பவற்றை மேற்கொள்ளுவது ஈழம், இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் பெறக்கூடிய சட்டரீதியான பாதுகாப்பையும், சொத்துரிமையையும் கூட இல்லாது செய்துவிடும் என்பதையும் கவனிக்கவேண்டும்.  எனவே சட்டரீதியான பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்வரை இத்தகைய மண உறவுகள் பெண்களுக்கெதிராக இன்னும் சுரண்டல்களுக்கு களம் அமைப்பதாகவும் அமைந்துவிடக்கூடும் என்பதையும் குறிப்பிடவேண்டும்.  இந்த நூலில் குறிப்பிடப்படுகின்ற இதுபோன்ற விடயங்கள் குறித்து நாம் தொடர்ச்சியாக உரையாடவேண்டி இருக்கின்றது.

”பால் பாலியல், காமம் காதல், பெண் பெண்ணியம் – ஓர் ஆண் நிலை நோக்கு” நூலானது தனது நோக்கத்தினைத் தெளிவாகக் வரையறுத்து இருக்கின்றது.  ஒரு செயற்பாட்டாளராகத் தொடர்ந்து இயங்கிவருகின்ற மீராபாரதி இந்த நூலினையும் தனது கருத்துநிலைக்கான ஒரு கருவியாகவே உபயோகப்படுத்துகின்றார்.  இதனை ஒரு முக்கியமான அம்சமாகக் கருதுகின்றேன்.  ஆயினும் நாம் இதுபோன்ற உரையாடல்களை எவருடன் செய்யவேண்டும் என்பதும் சிந்திக்கவேண்டியது அவசியம்.  பொதுவாக இது போன்ற நூல்களும் நூல் வெளியீட்டு நிகழ்வுகளும் அவை பேசும் கருத்துநிலைகளை அறிந்தவர்களால் வாசிக்கப்பட்டும் பேசப்பட்டும் வருவதோடு அவற்றுக்கு எதிர்நிலையில் நிற்பவர்களைச் சென்றடைவதும் குறைவாகவே இருக்கின்றது.   சோக்ரடீஸ் சொல்லுவார், உரையாடல்களை எதிர்தரப்பின் வாதங்களை எடுத்துக்கொண்டு எமக்கெதிராகவே வாதம் புரிவதோடு தொடங்குவோம் என்று.  அதையே நாமும் செய்யவேண்டும்.  ஆணாதிக்க சிந்தனை நிரம்பிய, இன்றுவரை அதையே போற்றுகின்ற பெரும்பான்மை சமூகத்தினரோடும் நாம் தொடர்ச்சியாக உரையாடவேண்டும்.  அதுவே ஆக்கபூர்வமான செயற்பாடாக மாறும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: