சென்ற ஞாயிற்றுக் கிழமை ரொரன்ரோ ஸ்ரார் பத்திரிகையின் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற Drinking in the Basement என்கிற Samantha Craggs எழுதிய சிறுகதை ஒன்றை யதேச்சையாகப் படித்தேன். பெரியளவில் சிலாகித்துச் சொல்ல முடியாத கதையென்றாலும் அந்தக் கதையில் வருகின்றது போன்ற வாழ்க்கை முறைகளைப் பல இடங்களிலும் பார்திருக்கின்றேன். போதை, பொருப்பின்மை, சிதையும் நம்பிக்கைகல் பற்றிக் கதை பேசுகின்றது. மதுபானப் பாவனைக்கு நான் ஒரு போதும் எதிர்க்குரல் எழுப்புவதில்லை. ஆனால் தம்மைத் தாமே வாழ்க்கையை விட்டுத் தூரத்தில் வைத்துக் கொள்ள மதுவை ஒரு உபாயமாகக் கைகொள்ளுவதில் உடன்பாடில்லை. அதே நேரம். கதையில் வெள்ளை இனத்தவர்களாகவே கதாபாத்திரங்களாகக் கொள்ளப்பட்டாலும், கனடாவில் புதிதாகக் குடியேறிய பலரிடையே புதிய கலாசாரமொன்றை எதிர்கொள்வதில் இருக்கின்ற சிக்கல்களும், மிக இறுக்கமான கலாசார, சமூக சூழல்களில் வாழ்ந்தவர்கள் கனடா போன்ற ஓரளவு கலாசார ரீதியில் மென்போக்குடைய நாடொன்றில் தம்மை இணைத்துக் கொள்வதில் எதிர்கொள்கின்ற சிக்கல்களை நிச்சயம் ஆராயவேண்டும். இந்தக் கலாசார வேறுபாடுகள் தருகின்ற மன அழுத்தங்களும், உளவியல் ரீதியான நெருக்கடிகளும் நிறையப் பேரைப் பாதித்திருக்கின்றபோதும் கூட, இதற்கான ஆலோசனைகளையோ அல்லது சிகிச்சைகளையோ நாடுவது நாம் வளர்ந்த சூழலூடாகச் சொல்லித்தரப்பட்ட கற்பிதங்களால் கடினமானதாகவே உள்ளது.
தனிப்பட்ட முறையில் உயர் கல்லூரியில் படித்து முடித்தபின்னர் தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்லத் தொடங்கியபோது எதிர்கொண்ட மன நெருக்கடிகளை நானும் எதிர்கொண்டிருக்கின்றேன். வெளிநாடு ஒன்றிற்கு அகதியாக வந்து சேர்ந்த போது, நிச்சயம் இங்கே படித்து முன்வரவேண்டும் என்ற ஆசை நிறையப் பேரைப்போலவே எனக்கும் இருக்கவே செய்தது. உயர்கல்லூரி முடியும் வரை எல்லா வகையிலும் அந்த இலக்குக்கு தகையுடையவனாகவே என்னை வைத்திருந்தேன். பின்னர் காலத்தின் / சூழலின் போக்கில் கல்வியை இரண்டாண்டுகளுக்கு, ஐந்தாண்டுகளுக்கு என்று மெல்லத் தள்ளிவைத்து, தொடராமலே ஒத்தி வைக்கவேண்டி வந்தபோது அந்தத் தாக்கம் மனதளவில் பெரிதும் தங்கியே இருந்தது. குறிப்பாக, உயர்கல்லூரியில் உடன் படித்தவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு சென்று முதல் இரண்டாண்டுகள் வரை அவர்களுடன் நல்ல உறவும் தொடர்பும் இருந்தது. பாடங்களின் சில பகுதிகளில் அவர்களுக்கு உதவவும் முடிந்தது. என்றாவது ஒரு நாள் அவர்களுடன் இணைந்து பல்கலைக்கழகமொன்றில் படிப்போம் என்ற பெரு நம்பிக்கையும் இருந்தது. ஆனால் நான்காண்டுகள் கழிந்து நண்பர்கள் படிப்புகளைப் பூர்த்தி செய்ய அல்லது தத்தம் துறை சார்ந்து தொழில்களைத் தேட, மெல்ல மெல்ல அவர்கள் நட்பு வட்டத்தில் நான் அந்நியப்படலானேன். இதே சமயம் வாரத்தில் அனேகம் ஏழு நாட்களுமேயும் சில சமயங்களில் நாளொன்றுக்கு இரண்டு வேளைகள் வேலை செய்ய வேண்டிய தேவையும் / கட்டாயமும் ஏற்பட்ட போது எனது உலகம் நான் வாழ விரும்பிய வாழ்க்கையில் இருந்து தொலைந்தே போய்விட்டது. நண்பர்களைத் தேட எந்த வெளியும் கிடையாத இடத்து, சக ஊழியர்களுடன் மாத்திரமே நட்பைப் பேண வேண்டிய நிலையும் உருவானது.
சிறுவயதில் இருந்து வாசிப்பின் மீது பெரு விருப்பு இருந்த போதும் 17 வயதில் இருந்து 24 வயது வரை பாலகுமாரனிலேயே அதிகம் தங்கி இருக்கவேண்டியும் உருவானது. அப்படி வாசித்தவற்றைக் கூட எவருடன் பகிரவும் முடியவேயில்லை. எனது வட்டத்தில் வாசிப்புப் பழக்கம் இருந்தவர்கள் கூட ராணி, குமுதம் தாண்டி வரவேயில்லை. பாலகுமாரன், சுஜாதா போன்ற பெயர்கள் கூட அவர்களுக்கு அந்நியமாகவே இருந்தது. அந்நாட்களில் பாலகுமாரனுடன் தொலைபேசியில் அடிக்கடி கதைப்பது வழக்கம். ஒரு முறை நண்பன் ஒருவனிடம் இதைச் சொல்லப் போக, அவன் பின்னொரு பிறந்த நாள் விருந்தொன்றில் நான் கண்ணதாசனுடன் அடிக்கடி தொலைபேசியதில் கதைப்பதாகச் சொல்ல, (அவனுக்கும் பாலகுமாரன் என்ற பெயர் கூட அந்நியமானதானதே, எழுத்தாளர் ஒருவருடன் நான் கதைக்கிறேன் என்பதை அவனால் உடனே கண்ணதாசனுடன் கதைக்கிறேன் என்றே பொருத்திப் பார்க்க முடிந்தது) அதன் பிறகு நான் கண்ணதாசனுடன் போன் கதைப்பவன் என்றே தொடர்ந்து கேலி செய்யப்பட்டேன். அதன் பின்னர் ஜெயமோகன் மூலமாக மெல்ல காலம் செல்வத்தின் அறிமுகம் கிடைத்து பின்னர் அவரூடாக நிறையப் புத்தகங்களை வாசிக்கக் கிடைத்தது. ஆனாலும் நேரப் பற்றாக்குறை. இதனால் காலம் செல்வம் ஒழுங்கு செய்யும் வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சிகளில் பெருந்தொகையான புத்தகங்களை வாங்கி பின்னர் வேலையில் விடுப்பு எடுத்து வாசிக்கவும் தொடங்கினேன். வாசிப்பை மாத்திரமே எனது தனிமைக்கும், மன நெருக்கடிகளையும் தாண்டி வரும் ஒரே மார்க்கமாக நான் கைக்கொண்டேன். ஆனாலும் தனிமை துரத்தவே செய்தது. நண்பர்களும் இல்லாமல் உறவுகளுடனும் எதையும் பகிரவே முடியாத சூழ்நிலை அது.
வேலைத் தளங்களில் என் வயதொத்த நிறைய நண்பர்கள் கிடைத்தபோது ஓய்வு நேரங்கள் கிட்டியபோதெல்லாம் அவர்களுடன் கழிக்க ஆரம்பித்தேன். அதுவே வினையாயும் ஆனது. கூட ஆட்கள் இருக்கின்றார்கள் என்கிற “கூட்டம் தரும் துணிவும்” போதையும் வழி நடத்த வம்பை விலைக்கு வாங்கும் வயசுடா என்று நண்பர்கள் குதூகலிக்கத் தொடங்கியபோது அது உடன் பாடில்லாத போதும் வேறு நண்பர்கள் இல்லாததால் அவர்களை விட்டு விலக முடியவில்லை. ஒரு கட்டத்தில் கூட்டம் – போதை – திமிர் – ஏதாவது தகராறு என்பதே வழமையாகிப் போனது. கிட்டத் தட்ட இதே காலப்பகுதியில் நண்பர் ஒருவர் அறிமுகப்படுத்தி தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளை வாசிக்கவும், பின்னர் அவரின் தூண்டலிலேயே வலைப்பதிவுகளில் ஈடுபடவும் ஆரம்பித்தேன். என் சக நண்பர்கள் மீது எனக்கிருந்த அக்கறை சார்ந்த கோபமே என்னை “இனத்துக்காகவேனும் திருந்துங்கள்” என்று எனது இரண்டாவது பதிவையும் எழுத வைத்தது.
இன்று தொடர்ச்சியான வாசிப்பும், எழுத்தும், இவற்றினூடாக உருவான புதிய நண்பர்கள் வட்டமும் மன நிறைவைத் தந்தாலும், இது பற்றி தொடர்ந்து எழுதவும் பேசவும் நிறைய இருக்கின்றது. அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் புலம்பெயர் நாடொன்றில் நுழைந்தவர்கள் தமது எதிர்பார்ப்புகள் பொய்க்கின்ற போதும், கனவுகள் கலைகின்றபோதும் உளரீதியாக அடைகின்ற தாக்கங்களில் இருந்து மீளவேண்டும் என்பதில் நான் நிச்சயம் கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக புள்ளியிடும் முறைமூலம் (poinst system) புலம்பெயர் நாடொன்றில் குடியேறியவர்களும் புலம்பெயர் நாடொன்றில் வாழ்ந்து வரும் ஒருவரால் இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ இருந்து திருமணம் செய்து ஒருவர் இங்கே அழைக்கப்படும் ஒருவர் எதிர் நோக்குகின்ற நெருக்கடிகளும் முக்கியமாக கவனம் செலுத்தப்படவேண்டியன. குடும்பம் – உறவுகள் – சமூகம் என்று பல்வேறு நிலைகளிலும் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கும், இந்த நெருக்கடிகளைத் தாண்டுவதற்கு ஒருவர் தனக்குள்ளேயே வைத்திருக்கக் கூடிய தடைகளையும் பற்றி பேசப்படல் வேண்டும்.
இந்தக் கட்டுரையில் எனது அனுபவங்களூடாக அணுகியதற்கு முக்கிய காரணம், எனது அனுபவங்களைப் பகிர்வதன் மூலம் என் போன்ற பிறரின் அனுபவங்களைப் புரிந்துகொள்ளலாம் என்பதும், என் போன்றே பல்வேறு தரப்பினரும் செய்யும் பகிர்தல்கள் இது போன்ற உளரீதியான சிக்கல்கள், நெருக்கடிகள், அழுத்தங்கள் பற்றிப் பேசுவதற்கான ஒரு வெளியை உருவாக்கும் என்ற நம்பிக்கையுமே.
Leave a Reply