வாசிப்பும் தேடலும் நிறைந்தவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் திறப்பினைச் செய்வதாக அமைந்துவிடும் நூல்கள் எல்லாம் முக்கியமானவையாகவே அமைந்துவிடுகின்றன. வாசிப்பு தரும் அனுபவமானது இதற்கு முன்னர் வாசித்த ஏதோ நூலுடனோ, கண்ட சம்பவத்துடனோ தனி அனுபவத்துடனோ தொடர்புபட்டதாகி, அனுபவத்தின் நீட்சியை ஏற்படுத்திவிடுகின்றது. அத்தகைய, அனுபவ நீட்சியை ஏற்படுத்திய ஒரு நூலாக செல்வமனோகரன் எழுதிய ”சொற்களால் அமையும் உலகு” என்ற நூலினைச் சொல்லமுடியும்.
செல்வமனோகரன் எனக்கு முதலில் ஒரு பேச்சாளராகத்தான் அறிமுகமானார். நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், அங்கே பெரும்பாலான பேச்சாளர்கள் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பிரபலமாக இருந்த கம்பன் கழகத்தின் பாதிப்பில் புராணக் கதைகளை எடுத்துப் பேசுபவர்களாகவே இருந்தார்கள், சமகால எழுத்துகளை எடுத்துப் பேச்சாளர்கள் பேசியதில்லை என்றே சொல்லலாம். இவர்களில் இருந்து மாறுபட்டு சமகால எழுத்துகளைச் சுட்டிக்காட்டி ஆற்றொழுக்காகப் பேசுகின்ற செல்வமனோகரன் எமக்குப் பாடசாலைக்காலத்தில் பிடித்ததோர் ஆளுமையாக இருந்தார். பத்தாம் வகுப்பில் பாலகுமாரனை ஆர்வமாக தேடித்தேடி வாசித்துக்கொண்டிருந்த எனக்கு எம்மை விட இரண்டு வயது கூடிய செல்வமனோகரன் பாடசாலை மண்டபத்தில் நிகழ்த்திய பேச்சொன்றில், பாலகுமாரனின் இரண்டாவது சூரியோதயத்தில் வருகின்ற ஒரு சம்பவத்தினை சுட்டிக்காட்டி “நெஞ்சுக்குள் நெருப்பாச்சு” என்ற வரிகளை மீளமீள விபரித்துப் பேசியது நினைவில் இருக்கின்றது. கம்பன் கழகத்தாரின் பேச்சுகளில் இருந்த ஆர்வம் குறைந்து சென்ற அதேகாலப்பகுதியில் பாடசாலை மட்டத்தில் பேசிய செல்வமனோகரன் போன்றவர்களின் பேச்சு என்னை கவர்ந்திழுக்கத் தொடங்கியது.
இதற்குப் பின்னர் செல்வமனோகரன் 1997 இல் தூண்டி என்கிற இதழின் ஆசிரியராக எனக்கு மீளவும் அறிமுகமானார். யாழ்ப்பாணம் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, மக்கள் அங்கே திரும்பிய மிகவும் நெருக்கடியான சூழலில் தொடங்கப்பட்ட இதழ் என்ற வகையில் தூண்டிக்கு முக்கியமான ஒரு பாத்திரம் உண்டு. அத்துடன் அதில் மாணவப்பருவத்தில் இருந்த பலரும் எழுதி வந்தனர். இன்றுவரை தூண்டி இலக்கிய வட்டத்தின் சார்பில் காத்திரமான ஆய்வரங்குகளை ஒருங்கிணைப்பதுடன் புத்தகப் பதிப்புகளையும் செய்துவருகின்றார். மெய்யியலிலும் தமிழ் ஆய்வுகளிலும் இயங்கிவரும் செல்வமனோகரன் சிவஞான சித்தியார் ஞானப்பிரகாசர் உரை, சிவசங்கர பண்டிதம், சிவஷேத்திராலய மகோற்சவ விளக்கம், சைவ பூஷன சந்திரிகை ஆகிய நூல்களை மீள்பதிப்புச் செய்திருக்கின்றார். காஷ்மீர சைவமும் சைவ சித்தாந்தமும், தமிழர் மெய்யியல் ஆகிய நூல்களை ஏற்கனவே எழுதி இருக்கின்ற செல்வமனோகரன் ஆற்றிய உரைகளின் கட்டுரை வடிவங்களையும் நேரடியாக எழுதப்பட்ட கட்டுரைகளையும் கொண்டு பதினொரு கட்டுரைகளின் தொகுப்பாக ”சொற்களால் அமையும் உலகு” நூல் வெளிவந்திருக்கின்றது.
அ. யேசுராசாவின் குறிப்பேட்டிலிருந்து நூல் மீதான வாசிப்பாக அமைகின்ற குறிப்பேட்டிலிருந்து என்கிற கட்டுரையை ஒருவிதத்தில் இந்தத் தொகுப்பில் செல்வமனோகரன் எழுதி இருக்கின்ற வெவ்வேறு நூல்களின் வாசிப்பு அனுபவங்களுக்கான ஒரு மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். குறிப்பேட்டிலிருந்து தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்ற கட்டுரைகளைப் பற்றிய அறிமுகங்களையும் அபிப்பிராயங்களையும் செல்வமனோகரன் சொல்லிச் செல்கின்றபோது அவை பெரும்பாலும் எனது அபிப்பிராயங்களையும் ஒத்தனவாகவே இருக்கின்றன. இந்தக் கட்டுரை செல்வமனோகரன் கலை இலக்கியம் பற்றிய மதிப்பீடுகளை எந்த அடிப்படையில் மேற்கொள்கின்றார் என்பதனை ஒருவிதத்தில் தெளிவுபடுத்துவதாக அமைகின்ற அதேவேளை, அ. யேசுராசா என்கிற ஆளுமையினைப் பற்றி செல்வமனோகரனிற்கு இருக்கக்கூடிய மதிப்பீட்டினை இந்த நூலின் அடிப்படையில் மீண்டும் உறுதிசெய்வதாகவும் அமைகின்றது. குறிப்பாக கலை, அழகியல் குறித்த யேசுராசாவின் நிலைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கலைப்பொருளுக்கு உயிர்த்துவம் அளிப்பது பற்றி விதந்து பேசும் செல்வமனோகரன் அதேசமயம் தொடர்ச்சியாக கைலாசபதி பற்றிய விமர்சனங்களை வைத்துள்ள அ.யேசுராசா, கைலாசபதியின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளைப் பற்றியும் எழுதவேண்டும் என்று எடுத்துரைக்கின்ற சமநிலையை செல்வமனோகரனிடம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
அதேநேரம் அரசியல் புனைவுகளான நீந்திக் கடந்த நெருப்பாறு, வெற்றிச்செல்வியின் போராளியின் காதலி, ஈழப்போரில் இறுதி நாட்கள், ஆறிப்போன காயங்களின் வலி ஆகிய நூல்களைப் பற்றிப் பேசுகின்றபோது செல்வமனோகரன் அந்த நூல்கள் பேசும் அரசியலுடன் தனது அரசியல் நிலைப்பாடுகளையும் கலந்து இந்த நூல்கள் பேசும் அரசியலை இன்னும் வலுவூட்டிப் பேசுவதையும் காணமுடிகின்றது. ஈழப்போரின் இறுதி நாட்களுக்குப் பின்னர் தமிழ்த் தேசியம், விடுதலை புலிகள், போராட்டம் ஆகியவற்றை விமர்சித்து வந்த பல்வேறு நூல்களும் படைப்புகளும் பேசிய அரசியல், அவை முன்வைத்த தரவுகள் என்பன குறித்தும் அவற்றில் இருக்கக்கூடிய போலித்தனம் குறித்தும் செல்வமனோகரன் கடுமையான விசனம் உற்றிருப்பதை இந்தக் கட்டுரைகளின் வாயிலாக அறியமுடியகின்றது. ”வெற்றிச்செல்வியின் எழுத்துக்களில் பம்பைமடு” என்கிற கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் செல்வமனோகரன்,
“போராடும் தரப்போடு நின்று தம்மை உயர்த்திக்கொண்ட அல்லது தமக்கான அடையாளங்களைப் பெற முற்பட்ட அதேகுழுமம் போராடித் தோற்ற தரப்பை மிகவும் இழித்துரைக்க முற்பட்டது. அதிகாரத் தரப்புடன் இணைந்து தம் விருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும் தம் வாழ்வினை மேம்படுத்தவும் சுயலாப அரசியலைக் கட்டவிழ்த்துவிட்டது. தமிழ்த்தேசியத்துக்கெதிரான மூளைச் சலவை செய்ய தமிழகம் தொட்டு தமிழர் வாழும் அனைத்துத் தேசங்களுக்கும் பறந்து சென்றது. புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்த்தேசியத்துக்கெதிரான குறித்த நபர்களுடன் இணைந்து பொருளாதார தேடத்தில் ஈடுபட்டது. அத்தரப்பு சார்ந்த தமது பிறரதுமான எழுத்துக்களை நூலக்கம் செய்தது. அவற்றை ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்த்து பொருளாதார, அரசியல் லாபங்களைத் தேடமுற்பட்டுள்ளது. இதன்வழி சந்தர்ப்பவாத அரசியலுக்கு தமிழ் இளைஞரிடையே தூபம் போற்பட்டது. படித்த மேதாவிகள் சிலர் மயங்கித்தான் போயினர் (பக்கம்88)”
இவ்வாறு குறிப்பிடும் செல்வமனோகரன் தொடர்ந்து “ஆயினும் காலவோட்டத்தில் இவ்விஷமப் பிரச்சாரங்களுக்கெதிரான குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கின (பக்கம் 89)” என்று குறிப்பிடுகின்றார். நடைமுறையில் இப்படியான ஒரு நிலைமை இருக்கின்றது என்பதும் பிரதிகளின் ஊடாக தமது அரசியல் நிலைப்பாடுகளையும் தாம் சார்ந்த அல்லது தாம் எதிர்க்கின்ற அமைப்புகளை ஆதரிக்கவும் எதிர்க்கவும் நிராகரிக்கவும் அவதூறு பரப்பவும் முயற்சிகள் நடக்கின்றன என்பதும் உண்மையே. வாய்வழிக்கதைகளாகவும், உள்ரகசியம் என்ற தோரணையுடனும் பரப்பப்பட்டு வந்த பல்வேறு விதமான கதைகள் தற்போது பிரதிகளாகவும் படைப்புகளாகவும் உலவுவதுடன் அவையே ஈழப்போராட்டம் பற்றியும் ஈழம் பற்றியும் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையினர் அறிவதற்கான மூலங்களாகவும் ஆனதைக் காலக்கொடுமை என்றே சொல்லவேண்டும். வெவ்வேறு கருத்துநிலைகளில் உள்ளவர்கள் தமது தரப்பினை நியாயப்படுத்தவும் தம் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றவும் மற்றைய தரப்பினரைத் தாக்கவும் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றபோது விமர்சகர்கள் பிரக்ஞையுடனும் விமர்சனப் பார்வையுடன் ஆழ்ந்தகன்று நோக்கித் தமது கருத்துகளை வெளிப்படுத்துவது மிக முக்கியமானதாகும். குறிப்பாக சில இடங்களில் துரோகம், துரோகிகள், கைக்கூலிகள் என்று குறிப்பிடும்போதும் காசுக்கும் பொருளுக்கும் பெண்ணுக்கும் விலைபோனவர்கள் என்றும் குறிப்பிடும்போது சமநிலை தவறி உணர்ச்சியால் உந்தப்பட்டுள்ளதாகவே உணரமுடிகின்றது. இப்படியான சொல்லாடல்கள் எமது சூழலில் எதிர்க் கருத்துக்கொண்டவர்களை வசைபாட சர்வ சாதாரணமாகப் பாவிக்கப்படும் சொற்களாகி, சகிப்புத்தன்மை அறவே இல்லாமல் போய்விடும் சூழலில் இந்தச் சொற்களைப் பாவிப்பது குறித்து எழுத்துச்செயற்பாட்டில் ஈடுபடும் அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தவேண்டி இருக்கின்றது.
ஆயினும் இந்தப் பிரதிகளை அவற்றின் உள்ளடக்கத்துக்காக செல்வமனோகரன் விதந்துபேசுகின்றபோதும் அவற்றின் வடிவம் சார்ந்து தனது நிலைப்பாடுகளை உள்ளடக்கத்தின் பாதிப்பில்லாமல் குறிப்பிடுகின்றார் என்பது முக்கியமான அம்சமாகும். நா. யோகேந்திரநாதனின் நீந்திக் கடந்த நெருப்பாற்றினை “இறுதிப் போர் பற்றிய பொய்மைகளும் முழுப் புனைவுகளும் மட்டுமே கொண்ட ஆக்கச் சூழலில் இந்நாவலின் வருகை முக்கியமானதும் காத்திரமானது கூட. இது நாவல் என்ற வடிவவியலிலும் அதற்குரிய அழகியலிலும் சிறந்தது என்று கூறமுடியாது. ஆனால் நாவலுக்குரிய பண்புகளும் சித்திரிப்பு முறைகளும் கொண்ட முக்கிய படைப்பு –பதிவு எனலாம் (பக்கம் 109)” என்றே குறிப்பிடுகின்றார். இதே தொகுப்பில் சண்முகம் சிவலிங்கத்தின் காண்டாவனம் சிறுகதைத் தொகுப்புப் பற்றி எழுதுகின்றபோது “அதன் (தமிழ்த் தேசியத்தின்) நியாயப்பாடுகளை கோசங்களோ பிரசார நெடியோ இல்லாமல் முன்வைக்கின்றார். அதுவே அவரின் ஆளுமைத்திறன் ஆகும் (பக்கம் 113)” என்று செல்வமனோகரன் குறிப்பிடுவதையும் கவனிக்கலாம். அவரது கலை இலக்கிய மதிப்பீடுகளின் ஆதாரத் தளங்களில் ஒன்றாகவும் இந்தப் பார்வையை எடுத்துக்கொள்ளலாம்.
இந்தத் தொகுப்பில் இருக்கின்ற ”துக்கத்தின் மீது கட்டப்பட்டதே வாழ்க்கையும்” (கனவுச்சிறை குறித்த கட்டுரை) ”தாமரைச்செல்வியின் படைப்புலகமும்” எனது வாசிப்புடன் நெருக்கமான கட்டுரைகளாக அமைகின்றன. அஜந்தகுமாரின் சோம்பேறியின் கடல் கவிதைத் தொகுப்பையும் புதிய நூற்றாண்டின் ஈழத்து வடபுலத் தமிழ்க்கவிதைகள் என்கிற கட்டுரையில் குறிப்பிடப்படும் படைப்பாளிகளின் பெரும்பாலான கவிதைகளையும் நான் முழுமையாக வாசிக்கவில்லை என்பதால் அந்தக் கட்டுரைகள் எனக்கு சற்று இடைவெளியுடனேயே இருக்கின்றன. ஆயினும் கவிதைகள் குறித்த கூர்மையான சில அவதானங்களை இந்தக் கட்டுரைகளில் காணமுடிகின்றது.
எழுபதுகளின் தொடக்கங்களில் எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களில் தனிமனிதர்களுக்கிடையிலான உறவுகள், அதனால் எழுகின்ற சிக்கல்கள், சமத்துவத்தையும், விடுதலையையும் அவாவி நிற்கின்ற இளைய சமூகத்தினரின் ஊடான சமூகப் பார்வை என்பவற்றைத் தமது எழுத்துக்களின் பொதுத்தன்மையாகக் கொண்டிருந்தவர்களில் தனித்துவமான ஒருவராகவே நான் சட்டநாதனை அடையாளப்படுத்துகின்றேன். இந்தத் தன்மைகளை சட்டநாதன் கச்சிதமாகக் கையாண்ட தொகுப்பாக ”மாற்றம்” சிறுகதைத் தொகுப்பினைக் குறிப்பிடலாம். மாற்றம், உலா என்கிற அவரது தொகுப்புகளில் உள்ள சிறுகதைகளும் அவரது பின்னைய தொகுப்புகளும் ஒரே விதமாக மதிப்பிடக்கூடியன அல்ல, முக்கூடல் என்கிற அவரது தொகுப்பும் அண்மைக்காலமாக அவர் எழுதிய பல்வேறு சிறுகதைகளும் மிகவும் பலவீனமானவை என்பதுடன் பெண்கள், உறவுகள் குறித்த புரிதல்களில் போதாமையும் கொண்டன (”புதியவர்கள்” தொகுப்பு இன்னமும் வாசிக்கக் கிடைக்கவில்லை). குறிப்பாக க.சட்டநாதனின் கதைகளில் பெண்கள், குழந்தைகள் என்கிற கட்டுரையில் குறிப்பிடப்படுகின்ற சட்டநாதனை அவரது அண்மைய படைப்புக்களில் காணமுடியவில்லை என்பதை இங்கே குறிப்பிடவே வேண்டும்.
ஈழத்துப் பெண்நிலைவாத சஞ்சிகைகள் என்கிற மிகப்பரந்த விடயம் இன்னொரு கட்டுரையில் ஆய்வுசெய்யப்படுகின்றது. ஈழத்தில் வெளியான பெண்கள் சஞ்சிகைகள், ஆளுமைகள் போன்ற முதல்நிலைத் தரவுகளைத் தொகுக்கின்ற பணியே இன்னும் சரியாக நடக்கவில்லை என்பதே நடப்பு நிலையாகும். இந்தக்கட்டுரையில் குறிப்பிடப்படுகின்ற பெண்ணின் குரல், நங்கை, தாகம் போன்ற இதழ்கள் 1979 -1988 காலப்பகுதியில் வெளியானவை. பெண்கள் சேவா சங்கம் என்கிற பெண்களுக்கான அமைப்பினை 1902 இல் ஆரம்பித்த மங்களம்மாள் மாசிலாமணி 1923 முதல் 1971 வரை ”தமிழ்மகள்” என்கிற இதழினை நடத்திவந்தார். தமிழ்மகளுக்கும் செல்வமனோகரனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இதழ்களுக்கும் இடையில் ஈழத்தில் இருந்து வெளியான பெண்கள் இதழ்கள் எவை? அவை என்னவிதமான கருத்துநிலைப்பாடுகளைக் கொண்டிருந்தன என்பது பெரும் ஆய்வுக்கான விடயமாகும். பெண்நிலைவாத சஞ்சிகைகள் என்ற பொருளில் ஆய்வுரை ஒன்றைச் செல்வமனோகரன் செய்துள்ளபோதும் அவ்வாறாக வெளியான சஞ்சிகைகளை இந்தக் கட்டுரையின் பொருட்டேனும் வாசித்திருப்பார் என்றாலும் இந்நூல் முழுக்க முழுக்க ஆண்பால் விகுதிகளுடனே அமைந்திருப்பது ஏமாற்றமளிப்பதாக இருக்கின்றது. வாசகர், எழுத்தாளர் போன்ற மிகச்சாதாரணமாகவே பழக்கத்திற்கு வந்துவிட்ட பாவனைகள் கைவிடப்பட்டு முழுக்க வாசகன், எழுத்தாளன் என்றே இந்நூல் முழுவதும் எழுதப்பட்டுள்ளது. செல்வமனோகரன் இந்தவிடயத்தில் பிரக்ஞையுடன் செயற்படவேண்டும்.
”ஈழத்து நவீன இலக்கிய விமர்சனமும் கலாரசனையும்” என்கிற கட்டுரை உரையாடலுக்குரிய கட்டுரைகளில் ஒன்று. இந்தக் கட்டுரையின் ஈழத்து விமர்சன வரலாற்றில் செல்வாக்குச் செலுத்திய போக்குகள், கருத்துநிலைகள் என்பவற்றைத் தொகுப்பாய்வு செய்கின்றார் செல்வமனோகரன். விமர்சன வகைகள் பற்றிய வெவ்வேறு வகையான பகுப்பாய்வுகளை இங்கே செல்வமனோகரன் குறிப்பிடுகின்றபோது எந்த வகையின் அடிப்படையிலான சட்டகத்தில் வைத்துத் தன் மதிப்பீடுகளை செல்வமனோகரன் முன்வைகின்றார் என்பது இந்தக் கட்டுரையில் தெளிவாகவில்லை. உதாரணமாகக் கட்டுரையின் ஓரிடத்தில் 1) அநுகரணக் கொள்கை, 2) பயன்வழிக் கொள்கை, 3)வெளிப்பாட்டுக் கொள்கை, 4) புறநிலைக் கொள்கை என்று நால்வகையாகக் குறிப்பிடுகின்றார். இந்த நால்வகையும் எவ்வாறு வரையறை செய்யப்படுகின்றன என்கிற சிறுகுறிப்பையேனும் கொடுத்திருந்தால் கட்டுரை இன்னும் தெளிவாக அமைந்திருக்கும். செல்வமனோகரனின் கற்கைத் துறைகளான தமிழ் மெய்யியல் சார்ந்த விமர்சன மரபுகளாக அவை இருக்கலாம் என்பது துணிபு. ஆனால் அந்த அடிப்படையிலான விமர்சன நோக்கில் இந்தத் தொகுப்பில் உள்ள செல்வமனோகரனின் ஏனைய விமர்சனங்கள் எழுதப்பட்டனவா என்று தெரியவில்லை. இந்த நூலில் மேற்குறித்த நால்வகை விமர்சனக் கொள்கைகளைப் பற்றி செல்வமனோகரன் குறிப்பிட்டிருந்தார் அது வாசகர்களுக்கு இன்னொரு திறப்பினை ஏற்படுத்தியிருக்கும். அதுபோல, ஐம்பதுகளுக்குப் பின்னராக ஈழத்து இலக்கிய விமர்சனப் போக்கினை கருத்தியல் அடிப்படையில் 1)முற்போக்குக் காலம், 2)போரியற் காலம், 3)தற்காலம் என்று மூன்றுவகையாகச் சுட்டுகின்றார். இந்தப் பகுப்புகளை கருத்தியல் ரீதியாக பகுப்புகள் சென்று சொல்லமுடியாது; அந்த அந்தக் காலப்பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய கருத்தியல்களை மையமாக வைத்து இந்தப் பகுப்புகள் செய்யப்பட்டிருக்குமானால் தற்காலம் என்பது பற்றிய தெளிவான வரையறை வழங்கப்பட்டிருக்கவேண்டும். செல்வமனோகரனின் இந்தக் கட்டுரையில் தற்காலப் போக்கை “பல்வேறு இசங்களையும் தாண்டி பின்னவீனத்துவம் கோலோச்சுங்காலமிது” என்று குறிப்பிடுவது சற்றுக் காலாவதியாகிவிட்ட கருத்தென்றே கருதமுடியும். பின்னவீனத்துவம் பேசப்பட்ட, அதன் வாசிப்புமுறைகள் அறிமுகமான காலகட்டத்தைத் தமிழ் இலக்கியச் சூழல் தாண்டிவிட்டது. அவற்றின் பாதிப்பினால் ஏற்பட்ட சாதக, பாதக விளைவுகளை ஆய்வுசெய்கின்ற போக்கினையும் சமகாலத்தில் காணக்கூடியதாக உள்ளது. பின்னவீனத்துவம் குறித்து செல்வமனோகரன் இந்தக் கட்டுரையில் குறிப்பிடும் கருத்துகளில் பின்னவீனத்துவத்தை சரியாக உள்வாங்காமல் பேசியவர்களின், செல்வமனோகரன் சொல்வதுபோலவே சொன்னால் பிதற்றல்கள் மீதான எதிர்வினையாகக் காணமுடியும். செல்வமனோகரனின் இந்த நிலைப்பாட்டை உறுதிசெய்வதாக அவரது பின்வரும் கூற்று அமைகின்றது “தற்கால உலகமயமாதற் சூழல் முறையற்றதே முறையென்றும் வடிவமற்றதே வடிவமென்றும் கூறும் கூறுகெட்ட செயலை நற்செயலெனப் பாராட்டுபவர்களை உற்பவித்துள்ளது (பக்கம் 40)”. ஆனால் அவற்றை வைத்து பின்னவீனத்துவம் பற்றிய நேரடியான முடிவுக்கு வந்துவிடுவது விமர்சகருக்கு ஏற்புடையதல்ல.
படைப்பிலக்கியமும் விமர்சனங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. ஈழத்து இலக்கியம் பற்றிய உரையாடல்களின்போதுஇந்தப் பிரக்ஞையுடன் எழுத்துச் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் அரிதாக இருப்பதும் அப்படிஇருப்பவர்களும் தமது கருத்துகளை வெளிப்படுத்துவதில் தயக்கங்காட்டுவதையும் அறியக்கூடியதாகஇருக்கின்றது, அப்படியானசூழலில் தொடர்ச்சியாக நூல்கள் பற்றிய விமர்சனங்களும் உரையாடல்களும் நிகழ்வதும் அவைபரவலாக்கப்படுவதும் முக்கியமானதாகும். செல்வமனோகரனின் சொற்களால் அமையும்உலகு அந்தவகையில் முக்கியமானதாகும். இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துவிமர்சனங்களும் முழுமையானவை என்று சொல்லமுடியாவிட்டாலும் அவை போலித்தனமில்லாதவையாக, உரையாடலைத்தொடர்வதற்கான வெளியைத் தருவனவாக இருக்கின்றன. இந்நூலின்முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல தனது ஏனைய உரைக்குறிப்புகளையும் செல்வமனோகரன்தொகுக்கவேண்டியது அவசியமாகும்.
குறிப்பு: இக்கட்டுரை கலைமுகம் – 66வது இதழில் (ஏப்பிரல் – ஜூன் 2018) வெளியானது. இந்தப் பதிவில் பாவிக்கப்பட்டுள்ள செல்வமனோகரனின் புகைப்படம் வசீகரன் குலசிங்கத்தால் முகநூலில் பகிரப்பட்ட புகைப்படத்தில் இருந்து பெறப்பட்டது.
Leave a Reply