அ. யேசுராசாவின் “பதிவுகள்” நூல் குறித்து…

கலை இலக்கியத்தின் போக்குக் குறித்த விவாதங்களும் உரையாடல்களும் ஈழத்தில் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியாக எழுபதுகளைக் குறிப்பிடலாம். அக்காலத்தில் இயங்கத் தொடங்கிய யேசுராசா இலக்கியத்தின் உள்ளடக்கம், அழகியல் தொடர்பாகவும் படைப்பாளிகளுக்கான அறம்,  இதர கலை வடிவங்களில் இருக்கவேண்டிய பரிச்சயம் என்பன குறித்தும் இன்றுவரை தொடர்ச்சியாகப் பேசியும், வலியுறுத்தியும் வருபவர்.  இன்றுவரை ஈழத்தின் கலை இலக்கிய இதழ்களுக்குச் சரியான முன்மாதிரியாக விளங்குகின்ற “அலை” இதழின் ஆரம்பத்தில் அதன் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும், பின்னர் அதன் ஆசிரியராகவும் விளங்கியவர்; தவிர மாணவர்களுடையே கலை இலக்கியம் பற்றிய புரிதலை ஏற்படுத்துகின்ற நோக்குடன் வெளிவந்த கவிதை, தெரிதல் இதழ்களின் ஆசிரியராகவும் பங்களித்திருக்கின்றார்.  சிறுகதை, கவிதை, மொழியாக்கம், பத்தி எழுத்துகள், கட்டுரைகள் என்று இதுவரை எட்டுநூல்கள் வெளிவந்திருக்கின்றன.  அத்துடன் மரணத்தில் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் உள்ளிட்ட முக்கியமான சில நூல்களின் தொகுப்பாசிரியராகவும் யேசுராசுவின் பங்களிப்புகள் விரிகின்றன.  படைப்பிலக்கியம், ஓவியம், புகைப்படம், திரைப்படம், குறும்படம், இசை, இதழியல், மொழியாக்கம் என்று பல்வேறு துறைகளில் 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து செயற்படும் யேசுராசாவின் எழுத்துகள் கூருணர்வும் விமர்சன ரீதியான பார்வையும் நிறைந்தவை.  யேசுராசா சிறப்பிதழாக வெளிவரும் ஜீவநதி இதழில் நான் எழுதும் இந்தக் கட்டுரை அவரது “பதிவுகள்” நூல் குறித்ததாக அமைகின்றது.

ஈழத்து இதழியல் வரலாற்றில் தனித்துவமானதும் அதன் உள்ளடக்கத்தின்படி முன்னோடி இதழுமான அலை 1975 நவம்பர் முதல் 1990 மே வரையான காலப்பகுதியில் வெளிவந்தது.  அமைப்பு ரீதியான பலமும் அரசியல் பலமும் பெற்றதாக முற்போக்கு இலக்கியக் குழுவினர் வளர்ச்சி பெற்றிருந்த காலப்பகுதியில் அவர்களது கலை இலக்கியக் கோட்பாடுகளையும் தேசிய இனப்பிரச்சனை குறித்த அரசியல் நிலைப்பாட்டையும் விமர்சித்து, அவற்றுக்கான வலுவான வினையாற்றலாக தோற்றம் பெற்றதே அலை இதழாகும்.  1970களுக்குப் பிறகு இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் தினசரிப் பத்திரிகைகள், வார இதழ்கள், வானொலிகள் போன்றவற்றில் முற்போக்கு அணியைச் சேர்ந்த படைப்பாளிகளுக்கும் விமர்சகர்களுக்குமே மதிப்பும் முன்னுரிமையும் கொடுக்கப்பட்டதாய் யேசுராசா தன்னுடைய நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகின்றார்.  இப்படியான ஒரு சூழலில்

  • கலை இலக்கியத்தில் நவீனத்தன்மைகள் கொண்ட படைப்புகள் கருத்துகளை வெளியிடுவதற்குக் களமாக அமைவது
  • தேசிய இன ஒடுக்குமுறை குறித்த விடயங்களுக்கும் கலை இலக்கியத்தில் முக்கியத்துவம் கொடுத்தல்
  • தமிழ்நாட்டில் வெளிப்படுத்தப்படும் நவீன இலக்கிய விமர்சனப் போக்குகளை இலங்கைக்கும் பரிமாறிக்கொள்ளுதல்

உள்ளிட்ட நோக்கங்களுடன் யேசுராசா, ஜீவகாருண்யன், மு. புஷ்பராஜன், குப்பிழான் ஐ சண்முகன் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு அலை உருவானது. 

அலை இதழின் தொடர் பகுதியொன்றாக வெளியான பத்தியே பதிவுகள் ஆகும்.  பதிவுகள் நூலின் முன்னுரையில் இது குறித்து யேசுராசா பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

”1975இன் இறுதிப்பகுதியில் “அலை” இதழை வெளியிடுவதற்குரிய ஆயத்த வேலைகளில் ஈடுபட்டவேளை, “பதிவுகள்” என்ற பெயரில் கலை – இலக்கியம் சார்ந்த பத்தியினை தொடர்ந்து எழுதவேண்டுமென எண்ணினேன்; ஆயினும் ஆசிரியர் குழுவில் இணைந்திருந்த ஏனைய மூன்று நண்பர்களும், ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொருவர் மாறிமாறி எழுதலாமென அபிப்பிராயப்பட்டனர்.  அதனை ஏற்றுக்கொண்டு முதலாவது இதழில் நான் எழுதினேன்; தொடர்ந்து ஏனையோர் எழுதினர்”

ஆயினும், அலையின் 25வது இதழுக்குப் பின்னர் ஆசிரியர் குழுவில் யேசுராசா மட்டுமே தொடர்ந்தால் பின்னர் அவரே இந்தப் பத்தியினை தொடர்ந்து எழுதினார்.  அவ்விதமாக அலையில் வெளியான பதிவுகள் என்கிற தொடரில் யேசுராசா எழுதிய பத்திகளின் தொகுப்பாக அலையின் ஒன்பதாவது வெளியீடாக 2003 இல் பதிவுகள் நூலுருவில் வெளிவந்திருக்கின்றது.  இச்சிறுகட்டுரையில் அலையின் தோற்றம் பற்றியும் பதிவுகள் என்கிற பத்தியின் பின்னணி குறித்தும் இயன்றவரை விளக்கமாகக் கூறுவது அவசியெமென்ற புரிதலிலேயே இந்த விளக்கங்களை இங்கே பகிர்கின்றேன்.  பதிவுகளில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் இந்த நோக்கங்களினதும் பின்னணிகளினதும் தொடர்சியான உரையாடல்கள் என்றே கருதுகின்றேன். 

மொத்தம் இருபது “பத்திகள்” இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அன்றைய சமகாலத்தில் நடந்த கலை இலக்கிய நிகழ்வுகள், இதழ்களிலும் பத்திரிகைகளும் வெளிவந்த ஆக்கங்கள், பார்த்த திரைப்படங்கள், அரங்க நிகழ்வுகள் வாசித்த புத்தகங்கள் என்பன பற்றிய தனது கருத்துகளை தன்னெஞ்சறிந்ததன்படி இந்தப் பத்திகளில் யேசுராசா வெளிப்படுத்தியிருக்கின்றார். அன்றைய முற்போக்கு அணியினரின் கலை இலக்கிய மதிப்பீடுகள் குறித்தும் அவர்களது தேர்வுகள், சாய்வுகள் குறித்ததுமான தனது விமர்சனங்களை இன்றுவரை தொடர்ச்சியாகப் பதிவுசெய்து வரும் யேசுராசா அதனை மிகத் தீவிரமாகச் செய்துகொண்டிருந்த காலப்பகுதியில் இந்தப் பத்திகள் எழுதப்பட்டிருக்கின்றன.  அதன் தாக்கங்களை இந்தப் பத்திகளில் வெளிப்படையாகவே காணலாம்.  ”வரட்டுவாதிகள்” என்றும் “சிலர்” என்றும் சுட்டி இந்தப் பத்திகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் யேசுராசா பதிவுசெய்கின்ற கருத்துகள் பெரிதும் முற்போக்கு இலக்கிய அணியினரை நோக்கியன என்பது வெளிப்படை.  ஒரு தனிநூலாக இதனைப் படிக்கின்றபோது அவையெல்லாம் வீணாகச் செய்யப்படுகின்ற வலிந்த தாக்குதலாகத் தென்படலாம்.  ஆனால் அவை அன்றையகால முரண் உரையாடலின் பகுதிகள்.  அந்த முரண் உரையாடலைப் புரிந்துகொள்ள யேசுராசா அடிக்கடி குறிப்பிடும் நான் முதலில் ஒரு வாசகன் என்கிற கூற்றினை எடுத்துப் பார்ப்பது அவசியம்.

1960களின் பிற்பகுதியில் கொழும்பில் பணியாற்றிய காலத்திலும் பின்னர் 70 களிலும் தனது நண்பர்கள் பலரும் நிறைய வாசிப்பவர்களாக இருந்தனர் என்றும் அவர்களில் பலர் எழுதிக்கொண்டும் இருந்தனர் என்றும் என்று குறிப்பிடும் யேசுராசா “நான் அப்போதும் வாசகனாகவே இருந்துவந்தேன்.  அதனால், நண்பர்களுக்கிடையில் கலந்துரையாடும்போது, எனது மதிப்பீடுகளையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்வேன்.  ஆனால் இவையெல்லாம் நண்பர்களுக்கிடையிலான உரையாடல்களாக நிகழ்ந்தனவேயன்றி, நான் வெளியில் அறியப்படவில்லை.” என்று குறிப்பிடுகின்றார்.  அவரது வாசிப்பு குறித்த அந்தக் கருத்துப் பரிமாற்றங்களினதும் நவீன கலை இலக்கியம் பற்றிய அறிமுகங்களை பரிமாறிக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தினதும் வெளிப்பாடுகளை இந்தப் பத்திகள் அனைத்திலும் காணலாம். அதேநேரம் 1975 இல் எழுதப்பட்ட முதலாவது பதிவு முதல் பங்குனி 1984 இல் எழுதப்பட்டுள்ள ஒன்பதாவது பதிவுவரையான அனைத்துப் பதிவுகளிலும் முற்போக்கு அணியினரின் உருவம் உள்ளடக்கம் உள்ளிட்ட கருத்துச் சாய்வுகள் குறித்தும் கலை – இலக்கிய மதிப்பீடுகள் குறித்ததுமான எதிர்வினைகள் தொடர்ந்து இருக்கின்றன.  ஆனால் பங்குனி 1985 முதல் அந்தப் போக்கு மாறுவதுடன் தேசிய இனப்பிரச்சனை, இடம்பெயர்வு, போர்க்காலம் ஆகியன பற்றிய பதிவுகளும் திரையிடல்கள் அரங்க நிகழ்வுகள் குறித்த முக்கியத்துவப்படுத்தல்களும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.  முற்போக்கு அணியினரின் அமைப்பு ரீதியான செயலியக்கமும் ஆதிக்கமும் குறைந்துபோனதையும் தேசிய இனப்பிரச்சனை முதன்மையான பிரச்சனையாக உருமாறியதையும் இது எடுத்துக் காட்டுகின்றது.  அதேநேரம் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை இந்தப் பதிவுகள் வலியுறுத்துவதோடு முஸ்லிம்கள், மலையகத் தமிழர், சிங்களவர் மத்தியில் இருக்கின்ற கலை இலக்கிய ஆளுமைகள் குறித்த அறிமுகங்களையும் செய்துவைக்கின்றது.  குறிப்பாக முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமான உறவில் முரண்களும் கசப்புகளும் உருவாகிக்கொண்டிருந்த ஆரம்பநாட்களில் எழுதப்பட்ட மருதூர்க் கொத்தன் பற்றிய பதிவில் பின்வருமாறு  யேசுராசா குறிப்பிடுகின்றார்,

”தமிழ்பேசும் மக்கள் என்ற கருத்தாக்கத்தினுள் முஸ்லிம் மக்களும் முக்கியமானவர்களாயுள்ளனர். மொழி இவர்களைத் தமிழ் மக்களுடன் பிணைக்கின்றது; வடக்குக் கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம்கள் வாழும் நிலத்தினாலும், பண்பாட்டம்சங்களாலும் மேலும் பிணைப்புற்றிருக்கின்றனர். இந்த அந்நியோன்னியம் மிக நீண்ட காலமாயே நிலவிவருகின்றது இடையில் இந்த ஆண்டு சித்திரையில் அம்பாறை, மட்டக்களப்புப் பிரதேசங்கள் சிலவற்றில் நிகழ்ந்த கலவரம் ,துரதிர்ஷடவசமானது. பொறுப்புணர்வும், துாரதிருஷ்டியுமற்ற சில தமிழ் இளைஞர் குழுக்களின் செயற்பாடுகளை, பிரித்து ஆளுதலில் கவனங்கொண்டுள்ள ஒடுக்கும் அரசினது கருவிகள் தந்திரத்துடனும், நுட்பத்துடனும் பயன்படுத்தியதாலேயே அவலமான அந்த நிகழ்வுகள் நடந்தேறின. தமக்கு முன்னாலுள்ள பொது ஆபத்தைக் கருத்திற் கொண்டு, புரிந்துணர்வுடன்கூடிய ஐக்கியத்தைத் தம்முள் வளர்த்துக் கொள்ளவேண்டியதே, இருசாராருக்கும் அத்தியாவசியமானது. பெரும்பான்மைச் சமூகமான தமிழ் மக்களுக்கு இதிற் கூடிய பொறுப்பு உண்டு தம்முள் சிறுபான்மையாய் வாழும் முஸ்லிம் மக்களின் மத, கலாசாரத் தனியுணர்வுகளுக்கு மதிப்பளித்து – ஐயுறவுகளை நீக்கும் வழிகளில், அவர்களே தீவிரமாய் முயல வேண்டும்.”

இன்று தமிழர்களும் முஸ்லிம்களும் தம்மைத் தனித் தனித் தேசிய இனங்களாகவே அடையாளப்படுத்துகின்ற காலத்திலும் இந்தப் பிரக்ஞையுடன் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் வளர்த்தெடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.

70களிலும் 80களிலும் எழுதப்பட்ட இந்தப் பத்திகளை நான் நூலுருவில் 2014 இல் படித்தபோது எனக்கு இந்தப் பத்திகள் எழுதப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவிய உயிர்ப்பான பண்பாட்டுச் சூழல் வியப்பையே ஏற்படுத்தியது.  அலை தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டபோது எனக்குப் பத்து வயது.  அலை இயங்கிய காலத்தில் இடம்பெற்ற கலை இலக்கிய நிகழ்வுகள், உரையாடல்கள், கருத்துமோதல்கள், வெகுஜனத் தளத்திற்கு மாற்றாக இடம்பெற்ற செயற்பாடுகள், இதழ்களின் கருத்தியல் சார்ந்த உள்ளடக்கம் என்பவற்றை வைத்து நோக்கும்போது 70களில் நடந்த கலை இலக்கியம் குறித்த விவாதங்கள் செழுமையான ஒரு பண்பாட்டுச் செயற்பரப்பை உருவாக்கியிருப்பதை உணரமுடிகின்றது.  யேசுராசா போன்ற ஆளுமைகளின் கூருணர்வும் அயராத செயற்பாடுகளுமே இவற்றைச் சாத்தியமாக்கியிருக்கவேண்டும்.  அந்த வகையில் யேசுராசா எம் நன்றிக்குரிய முன்னோடிகளில் ஒருவர்.    


இக்கட்டுரை ஜீவநதி வெளியிட்ட அ. யேசுராசா சிறப்பிதழில் வெளியானது (ஜீவநதி 156, ஆவணி 2021)

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑