என். செல்வராஜாவின் நமக்கென்றொரு பெட்டகமும் நூலகச் சிந்தனைகளும்

செல்வராஜா அவர்கள் – பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமானது போல – எனக்கும் நூல் தேட்டம் செல்வராஜா என்றே அறிமுகமானவர்.  புலம்பெயர்ந்து கனடாவிற்கு வந்து நான் புத்தக வாசிப்பிற்கு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றி அறிந்துகொள்வது என்பதே மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.   இப்பொழுது ரொரன்றோவில் தமிழ்ப் புத்தகக் கடையென்று ஒன்றுதான் இருக்கின்றது.  ஆனால் அந்தக் காலப்பகுதியில் 5 புத்தகக் கடைகள் இருந்தன.  இவற்றைத் தவிர தனிப்பட்ட முயற்சிகளால் புத்தகங்களை எடுத்து விற்பவர்களும் இருந்தனர்.  ஆனால், அப்படி இருந்தபோதும் இலங்கையில் இருந்து வெளிவருகின்ற புத்தகங்களைப் பெற்றுக்கொள்வது என்பது கடினமான ஒன்றாகவே இருந்தது. நான் கனடாவிற்குப் புலம்பெயர்ந்து பன்னிரண்டு வருடங்களின் பின்னரே முதல்முறையாக இலங்கைக்குப் போனபோதுதான் அங்கே எத்தனை புத்தகங்கள் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றன என்பதைப் பார்க்கமுடிந்தது.  அப்படி இருக்கின்றபோது இலங்கையில் இருந்து வெளிவந்த, வெளிவருகின்ற புத்தகங்களைப் பற்றிய அறிமுகத்தைப் பதிவாகவும் சாட்சியாகவும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தவை பெரியளவிலான நூல் தொகுதிகளாக வெளிவந்துகொண்டிருந்த நூல் தேட்டம் தொகுப்புகள். பின்னர் வலைப்பதிவுக் காலங்களில் வலைப்பதிவுகளூடாகவும் குழுமங்களூடாகவும் பல அறிமுகங்களும் உரையாடல்களும் நிகழ்ந்தன என்றாலும் முறையான பதிவுகளைச் செய்தது நூல்தேட்டமே!

நூல்தேட்டம் போன்ற வேலைத்திட்டங்கள் அமைப்புரீதியாக / நிறுவனரீதியாக செய்யப்படவேண்டிய பெரிய வேலைத்திட்டங்கள்.  அப்படியான வேலைத்திட்டங்களை தனி நபர்கள் செய்வதை நான் பொதுவாக ஆரோக்கியமான ஒன்றாகப் பார்ப்பதில்லை.  ஆனால் நூல் தேட்டம் என்பது செல்வராஜா என்கிற ஒருவரால் முன்னெடுக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான வேலைத்திட்டம்.  இங்கே நான் பிரமாண்டம் என்ற சொல்லை மிகவும் பிரக்ஞைபூர்வமாகவே சொல்கின்றேன், ஏனென்றால் பிரமாண்டத்தை பிரமாண்டம் என்றுதான் சொல்லமுடியும். அதன் 15 தொகுதிகளில் கிட்டத்தட்ட 15000 ஈழத்துநூல்கள் பட்டியலாக்கம் செய்யப்பட்டிருப்பதுடன் அவை குறித்த சுருக்கமான அறிமுகங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.  நூல்தேட்டம் தொகுதிகளை எனது வீட்டு நூலகத்தில் சேர்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தில் ஒருமுறை செல்வராஜா அவர்களைத் தொடர்புகொண்டு நூல்தேட்டம் தொகுதிகளை எப்படி கனடாவுக்குப் பெற்றுக்கொள்வது என்று கேட்டிருந்தேன்.  அதற்கு அவர் சொன்னார் “ராசா, அதை நீங்கள் கனடாவுக்கு எடுக்கிறதென்றால் கனகாசு முடியும், நான் எல்லாத் தொகுதிகளையும் ஒன்லைனில் கொடுத்திருக்கிறேன் தானே, நீங்கள் அங்கேயே பார்த்துக்கொள்ளுங்கோ” என்று.  இதை ஒரு முக்கியமான பண்பாக நான் பார்க்கின்றேன்.  புலமைச் சொத்து அனைவரிடமும், குறிப்பாக அந்தத் துறைகள் குறித்துச் செயற்படுபவர்களிடம் போய்ச்சேரவேண்டும் என்கிற அக்கறையாகவே அவர் எனக்குச் சொன்ன பதிலினை நான் பார்க்கின்றேன்.  அத்துடன், அந்தத் தொகுதிகளை வாங்க விரும்புவோருக்கு இருக்கக் கூடிய பொருளாதாரச் சுமைகள், வசதியீனங்கள் பற்றியும் அக்கறைகொண்டதோர் பண்பாக அதனை நான் விதக்கின்றேன். 

நூல்தேட்டம் செல்வராஜா என்று அறியப்பட்டு வந்த செல்வராஜா அவர்களைச் சுட்டுவதற்கான மிகப் பொருத்தமான சொல்லாக நூலியலாளர் என்பதையும் நூலியலாளர் என்ற சொல்லால் சுட்டப்படக்கூடிய பொருத்தமானவராக செல்வராஜா அவர்களையும் நான் இங்கே கூறிக்கொள்கின்றேன்.  உண்மையில் இதுகுறித்து மிக விரிவாக எடுத்துரைத்தவர் நண்பர் சத்தியதேவன், அவரது கூர்மையான அந்தக் கணிப்பிற்கும் நன்றி கூறிக்கொள்கின்றேன்.  நூலகராகவும், ஈவ்லின் ரட்ணம் நூலகத்திற்கான உந்துசக்தியாக அமைந்த அவரது பங்களிப்புகள், நூலகவியல், நூலகங்கள் என்கிற கருத்தாக்கம், பட்டியலாக்கம் ஆகியவற்றிற்கான அவரது பங்களிப்புகளுக்கும் மேலாக பதிப்பாக்கம், நூலொன்றினைப் பதிப்பித்தல் தொடர்பால தொழினுட்ப ரீதியிலான வழிகாட்டல்கள், உள்ளூரில் புத்தகம் ஒன்றைப் பதிப்பிப்பதிலும் சந்தைப்படுத்துவதிலும் விற்பதிலும் இருக்கக் கூடிய சவால்கள், அவற்றை எதிர்கொள்வதற்கான பொறிமுறைகள், இந்திய நூல்களால் ஈழத்துப் பதிப்புச்சூழல் எப்படி நசுக்கப்படுகின்றது, இவற்றுக்கு இடையில் நிகழக்கூடிய அசமத்துவம், வாசிப்பினைப் பரவலாக்கல், கிராமிய நூலகங்கள் என்பதை ஒரு செயற்பாடாக்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தொடர்ந்து எழுதியும் உரையாடியும் செயற்பட்டும் வருகின்ற செல்வராஜா அவர்கள் நூலியலாளர் என்கிற சுட்டுதலுக்கு மிகப் பொருத்தமானவரே.

நமக்கென்றொரு பெட்டகம் : தமிழ்த்தேசிய நூலகச் சிந்தனைகள் என்கிற இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் பேசுகின்ற விடயங்களைத் தனித்தனியே குறிப்பிடுவதைத் தவிர்த்து இந்தப் புத்தகத்தில் உள்ள கருத்தாக்கங்கள் குறித்து நான் கவனப்படுத்துகின்றேன். 

இந்நூல் ஆவணக்காப்பகம், நூலகம் ஆகிய இரண்டினதும் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன் இவை இரண்டிற்குமான வேறுபாடுகளையும் எடுத்துரைக்கின்றது.  ஒரு சமூகத்தின் வரலாற்றையும் பதிவுகளையும் சமகாலத்திலும் எதிர்காலத்திலும் வரக்கூடிய ஆய்வுத்தேவைகளுக்காக பேணிப் பாதுகாத்து வழங்கக்கூடிய இடமாக ஆவணக்காப்பகத்தை செல்வராஜா குறிப்பிடுகிறார்.  அதேநேரம் நூலகம் என்பது அனைத்துத் தரப்பினரது வாசிப்புத் தேவைகளையும் பூர்த்திசெய்யக்கூடியதாகவும் இலகுவில் அணுகக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என்பதை செல்வராஜா வலியுறுத்துகின்றார்.  பொதுவாக நாம் நூலகம் என்று யோசிக்கும்போது அங்கே இருக்கக் கூடிய கனமான விடயங்களை உள்ளடக்கிய ”தீவிர இலக்கியம்” என்று சொல்லப்படக்கூடிய நூல்களையே நினைவில்கொள்வோம்.  ஆனால் செல்வராஜா நூலகங்கள் குறித்துப் பேசும்போதெல்லாம் சிறுவர் நூலகங்கள் குறித்தும் நூலகங்களை சிறுவர்களுக்கு அணுக்குமாக்குவது குறித்தும் விசேட அக்கறையுடன் இருப்பதை அவரது கட்டுரைகளூடாகத் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.  சிறுவர் நூலகங்கள் குறித்தும் அங்கே எப்படியான புத்தகங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்தும் சிறுவர் நூலகங்கள் எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது குறித்தும் அந்தப் புத்தகங்களை சிறுவர்களிடமும் சிறுவர்களைப் புத்தகங்களிடமும் சேர்த்து வைப்பதற்கும் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது குறித்தும் அவர் கவனம் செலுத்துகின்றார். 

இந்தப் புத்தகத்தில் தீவகப் பிராந்திய நூலகம், புங்குடுதீவுப் பிராந்திய நூலகம் ஆகிய இரண்டு கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.  இந்த நூல் வெளியீட்டிற்குப் பிற்பட்ட காலங்களிலும் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கின்ற அரங்கம் என்கிற பத்திரிகையில் மட்டக்களப்பில் உருவாகிக்கொண்டிருக்கின்ற ஒரு நூலகத்தின் உள்ளடக்கம் குறித்தும் பொதுநூலகங்களில் தன்மை குறித்தும் அவர் எழுதிக்கொண்டிருக்கின்ற கட்டுரைத் தொடர் மிகப்பெறுமதியானது.  கிராமங்களில் நூலகங்கள் குறித்து அக்கறைப்படுகின்ற, விதை குழுமத்தினூடாக புத்தகக் குடில் போன்ற சிறு நூலக அமைப்புத் திட்டங்களை முன்னெடுத்துவருகின்ற எமக்கு எழக்கூடிய பல குழப்பங்களுக்கும் கேள்விகளுக்கு தொழினுட்பரீதியில் பதிலளிக்கக்கூடியதாக இந்தத் தொடர் அமைகின்றது. 

ஒரு லண்டன் கடிதம் என்கிற கட்டுரை கடிதவடிவில் மிகமுக்கியமான ஒருவிடயத்தைப் பேசுகின்றது.  புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற முதல்தலைமுறை தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற தமக்கு அடுத்த தலைமுறையினருடன் கொண்டிருக்கக் கூடிய உறவு குறித்தும் அவர்களுடன் கொண்டிருக்கவேண்டிய ஊடாட்டம் குறித்தும் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படுகின்றது.  அதேநேரம், புலம்பெயர் நாடுகளில் இருப்போர் தாயகத்தில் இருப்போரின் நாளாந்த நடவடிக்கைகளையும் அரசியல் நடவடிக்கைகளையும் Remote Politics செய்வது குறித்து இந்தக் கட்டுரையில் இருக்கின்ற கருத்துகள் மிகமுக்கியமானவை.  இந்தப் புத்தகத்தின் சமர்ப்பணத்தை இங்கே ஒருமுறை வாசித்துக்காட்டுகின்றேன்,

ஈழத்தமிழர்களின் அறிவியல் முதுசொத்தை தலைமுறை தலைமுறையாகப் பெட்டகங்களில் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கையளித்துவந்த எமது மூதாதையினருக்கும் பெட்டகங்களையும் பெட்டகக் கலாசாரத்தையும் தொலைத்துநிற்கும் எமது தலைமுறையினரின் முதுசொத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த வழிதேடி அலையும் இளைய தலைமுறையினருக்கும் இந்நூல் சமர்ப்பணம்

இந்தச் சமர்ப்பணத்தின் விளக்கமாக அமைந்ததே ஒரு லண்டன் கடிதம் என்கிற கடித வடிவிலான கட்டுரை.

இந்நூலில் குறிப்பிடப்படுகின்ற தேசிய நூலகம் என்கிற கருத்தாக்கம் மிக முக்கியமான ஒன்று.  தேசிய நூலகம் என்பது குறித்த தேசியத்தின் வரலாறு, பண்பாடு, அதன் நிலவியல், ஆளுமைகள், அந்த ஆளுமைகள் குறித்த பதிவுகள் ஆகியவற்றை எல்லாம் திரட்டிவைத்திருக்கின்ற ஓரிடமாக இருக்கவேண்டும் என்பதை செல்வராஜா வலியுறுத்துகின்றார்.  செல்வராஜா எழுதிய பல்வேறு கட்டுரைகளில் இலங்கையின் தேசிய நூலகங்கள் என்பவற்றுள் முறையாக உள்ளடக்கப்பட்டாத / வெளித்தள்ளப்படுபவர்களாக வடக்கு கிழக்கு / தமிழர்கள் சார்ந்த பதிவுகள் இருப்பதை அவர் ஆதாரபூர்வமாகவும் புள்ளிவிபரங்களூடாகவும் முன்வைத்து வருகின்றார்.  அப்படி வெளித்தள்ளப்பட்டு / உள்வாங்கப்படாதவர்கள் இலங்கை தேசியம் அல்லாத இன்னொரு தேசியர்களாக தம்மை உணர்கின்றனர் என்கிற விடயத்தையும் செல்வராஜாவின் எழுத்துகளினூடாக உணர முடிகின்றது.  தமிழ், மலையக, முஸ்லிம் தேசிய இனங்களை இந்தக் கண்ணோட்டத்தில் அரசியல் ரீதியாகவும் புரிந்துகொள்ளமுடிகின்றது. இவ்வாறு நூலகங்கள் எவற்றைத் தம்முள் கொண்டிருக்கவேண்டும் என்று பேசுகின்றபோது நூலகமொன்றிற்கு என்று பெரியதோர் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் அதற்குப் புத்தகங்கள் தேவையென்றும் வந்த அறிப்பொன்றைக் குறிப்பிடும் செல்வராஜா, பல்வேறு தனிநபர்களாலும் அமைப்புக்களாலும் ஏற்கனவே திரட்டப்பட்ட, சேகரித்து வைக்கப்பட்ட, ஆவணப்படுத்தி வைக்கப்பட்ட புத்தகங்களை ஒன்றிணைத்தே தேசிய நூலகங்களை உருவாக்கவேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.  நூலகம் என்பது கட்டப்பட்ட கட்டடத்தினை புத்தகங்களால் நிறைத்துவைப்பது அல்ல என்பதை செல்வராஜா ஆணித்தரமாக எடுத்தியம்புகின்றார்.   யாழ்ப்பாண பொதுசன நூலகம் உருவாக்கப்பட்டபோது அது பல்வேறு தனிநபர்களின் சேகரங்களினையும் ஒன்றிணைத்தே உருவாக்கப்பட்டது தொடர்பான விடயங்களை கமால்தீன், க.சி. குலரத்தினம் ஆகியோர் யாழ்ப்பாண பொதுசன நூலகம் பற்றி எழுதிய நூல்களில் இருந்து செல்வராஜா சுட்டிக்காட்டுகின்றார்.

நூலகங்களை உருவாக்குதல், ஆவணக் காப்பகங்களை உருவாக்குதல் என்பவற்றைப் போன்றே புத்தகச் சந்தைகள் குறித்து செல்வராஜா குறிப்பிடுகின்ற விடயங்களை இந்த இடத்தில் பேசுவது முக்கியமானது என்றே கருதுகின்றேன்.  இந்தியாவில் இருந்து வெளிவருகின்ற புத்தகங்களை குறிப்பாக அரசியல் நீக்கம் செய்யப்பட்ட அல்லது வலதுசாரி அரசியலைப் பேசுகின்ற புத்தகங்களைப் பெற்றுக்கொள்வது கனடாவில் இலகுவானதாகவே இருக்கின்றது.  ஆனந்த விகடன், குமுதம் போன்றவற்றை பெரும்பாலான பலசரக்குக் கடைகளில் கூடப் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கின்றது.  அண்மைக்காலமாக பகவத் கீதையையும் பலசரக்குக் கடைகளில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.  ஆனால் ”எங்கட புத்தகங்களை”ப் பெற்றுக்கொள்வது என்பது சிரமமானதாகவே இருக்கின்றது.  இங்கே நான் “எங்கட புத்தகங்கள்” என்று சொல்வதை தெளிவாக வரையறை செய்யவிரும்புகின்றேன். எங்கட புத்தகங்கள் என்பது யாழ்ப்பாணப் புத்தகங்களோ, கொழும்புப் புத்தகங்களோ, கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, மலையகப் புத்தகங்களோ அல்ல, ஈழத்தவர் நோக்கில் இருந்து இந்தியப் புத்தகங்கள் அல்லாத, ஈழத்தவரின் புத்தகங்களைக் குறிப்பிடுவதற்காக ஒரு சொல்லாகவே “எங்கட புத்தகங்கள்” என்ற பிரயோகத்தை நான் புரிந்துகொள்ளுகின்றேன்.  ஏன், புலம்பெயர் நாடொன்றில் இருந்து வெளிவரும் புத்தகம் ஒன்றினை இன்னொரு புலம்பெயர் நாட்டினில் பெற்றுக்கொள்வதும் சந்தைப்படுத்துவதும் கூட சிரமமானதாகவே இருக்கின்றது.  புலம்பெயர் நாடுகளில் புத்தக விற்பனையைச் செய்கின்ற சிலரிடம் “எங்கட புத்தகங்கள்” என்றால் பணம் கொடுத்து வாங்கமாட்டார்கள், அவை இலவசமாகக் கொடுக்கப்படவேண்டியவை என்கிற அபிப்பிராயமும் இருக்கின்றது.  இவற்றுடன் சேர்த்துத்தான் புத்தகச் சந்தைகளுக்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியலை நாம் பேசவேண்டியிருக்கின்றது.  நல்லூர்க் கந்தசாமி கோயில் முன்றலில் அமைக்கப்படுகின்ற புத்தகச் சந்தையில் இந்தியத் தூதுவராலயத்தின் வகிபாகம், அந்தப் புத்தகக் கண்காட்சியில் விற்கப்படாத இந்தியப் புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டு தமிழர் பிரதேசத்தில் உள்ள நூலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன, கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் 3000 பிரதிகள் இலங்கையில் உள்ள நூலகங்களுக்காகக் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றன; அதேநேரம் இலங்கையில் இருந்து வெளிவருகின்ற தமிழ்நூல்கள் இவ்வாறு கொள்வனவு செய்யப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றமை போன்றவை குறித்து அவரது உரையாடல் விரிந்து செல்கின்றது.  இலங்கையில் இருக்கின்ற புத்தகக் கடைகளின் காட்சிப்படுத்தல்களில் இலங்கையில் இருந்து வெளிவரும் புத்தகங்கள் மெல்லமெல்லமாக பின்னுக்குத் தள்ளப்பட்டு, அவை பயிற்சிப் புத்தகங்களுடனும், பின்னர் அங்கிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டுப் பழைய புத்தகங்கள் வைத்திருக்கின்ற பகுதிகளுக்கும் சென்றிருப்பதை கடந்த 12 ஆண்டுகளாக இலங்கைக்குச் சென்றுவரும் போதெல்லாம் அவதானித்துவருகின்றேன்.  இப்படியான சூழலில் புத்தகக் கண்காட்சிகளில் இந்தியப் புத்தகங்களை நிறைத்து, ஈழத்துப் புத்தகங்களைப் புறக்கணித்து புத்தகங்கள் என்றாலே இந்தியப் புத்தகங்கள் என்கிற தோற்றப்பாட்டினை உருவாக்குவதற்கான ஒரு எதிர்ப்புச் செயற்பாடாகவே எங்கட புத்தகங்கள் என்கிற பெயரில் ஈழத்தவர் நூல்களை விற்கின்ற கண்காட்சி அமைகின்றது.  எந்தப் பிரதேசமும் தேசியமும் சாராமால் ஈழத்தவர்களின் புத்தகங்கள் என்கிற நோக்குடன் அது இயங்குவதே அதன் நோக்கத்தை நிறைவாக்கும்.  எங்கட புத்தகங்கள் என்கிற கண்காட்சியும் இதழ் வெளியீடும் அவற்றின் தொடர்ச்சியான பதிப்பக முயற்சிகளையும் இந்தியாவினால் பிரயோகிக்கப்படும் பண்பாட்டு ஆதிக்கத்துக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் என்கிற பிரக்ஞையின் அடிப்படையில் மிக முக்கியமான செயற்பாடுகளாகப் பார்க்கின்றேன்.    

நமக்கென்றொரு பெட்டகம் நூலினை அடிப்படையாக வைத்து நூலியல் குறித்தும் நூலகவியல் குறித்ததுமான செல்வராஜா அவர்களின் கருத்தாக்கங்கள் மற்றும் முன்வைப்புகள் குறித்து இதுவரை பேசியிருந்தேன்.  ஆனால் இந்தப் பரப்புகளில் நூலியலாளர் செல்வராஜாவின் பங்களிப்பு இன்னும் காத்திரமானது.  கிராமிய நூலகங்கள், புத்தகக் குடில்கள் போன்ற விதை குழுமத்தின் செயற்திட்டங்களை இன்னும் விளைதிறனும் வினைத்திறனும் கிராமிய மக்களின் பங்கேற்பும் கொண்டதாக மாற்றுவது குறித்தும் அதில் நாம் எதிர்கொள்ளுகின்ற சவால்கள் குறித்தும் தோழர் சத்தியதேவனுடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுதொன்றில்தான் அவர் செல்வராஜா அவர்களின் கிராமிய நூலகங்களும் அபிவிருத்தியும் என்கிற நூலினை அறிமுகம் செய்தார்.  அந்த நூலானது எமக்கான பல கிடப்புகளைத் திறந்துவிட்டது.  கிராமிய நூலகங்களும் அபிவிருத்தியும் நூலை வாசித்தபின்னர் தான், எமக்கென்றோரு பெட்டகம் என்கிற நூலிற்கான மூலம் அல்லது விதை கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்னரே தூவப்பட்டுவிட்டது என்பதை நன்குணர்ந்தேன்.  கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்னர் செல்வராஜா அவர்களும் நண்பர்கள் சிலருமாய் இணைந்து சர்வோதயம் நூலகத் திட்டம் என்ற ஒன்றினை முன்னெடுக்கின்றார்கள்.  செல்வராஜா அவர்கள் எழுதி, நூலகம் இணையத்தளத்திலே நீங்கள்  காணக்கூடிய சர்வோதயம் – கிராம நூலகர்களுக்கான வழிகாட்டி என்கிற சிறுபிரசுரத்தின் பின்பக்கத்தில் நான்கு விடயங்களைப் பட்டியலிட்டிருப்பார்கள்

 • கிராமங்கள்தோறும் நடமாடும் நூலகம்
 • வீடுகள்தோறும் குடும்ப நூலகம்
 • பள்ளிகளுக்கேற்ற மாணவர் நூலகம்
 • ஊர்கள்தோறும் பொதுநூலகம்

ஆகியவற்றை உருவாக்கவும் உருவாக்கியதை வளர்க்கவும் உதவும் திட்டம் இது

செல்வராஜாவின் கருத்தாக்கங்களில் முக்கியமான ஒன்றாக இதை நான் கருதுகின்றேன்.  கிராமங்கள்தோறும் நடமாடும் நூலகம் என்பதன் செயல்வடிவமே அவருடைய சர்வோதய நூலகத் திட்டம்.  அது என்னவென்றால் ஓரிடத்தில் இருக்கின்ற பிரதான நூலகத்தில் இருக்கின்ற புத்தகங்களை, அவற்றை விரும்பிப் படிக்கின்ற வாசகர்கள் மற்றும் ஆரம்பநிலை வாசகர்களை நோக்கி, அவர்களது வீடுகளுக்கு தன்னார்வலர்களினூடாக எடுத்துச் செல்லுதல் என்பதை அடிப்படைச் செயன்முறையாக கொண்டியங்குவதாகும்.  இதன்மூலமாக வாசிப்புப் பண்பாடு விருத்தியடைவதுடன் வீட்டு நூலகங்களை அமைப்பதும் பரவலாகும். வாசிப்புப் பழக்கம் விருத்தியடைந்தாலே நூலகங்கள் வளர்ச்சியடையும்.  நாம் கட்டடங்களைக் கட்டலாம், புத்தகங்களால் அவற்றை நிரப்பலாம்.  ஆனால் வாசகர்களாலும், அவர்களின் பயன்பாட்டினாலுமே நூலகங்கள் உயிர்ப்பாக மாறும். 

அதுபோல கிராம நூலகங்களும் அபிவிருத்தியும் நூலில் அவர் கிராமிய நூலகமொன்றின் சேவைகள் என்று ஒரு பட்டியலை இட்டிருப்பார்.  அந்தப்பட்டியல்,

 1. வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல்
 2. கிராமம் தொடர்பான வரைபடம், புள்ளிவிபரங்களைச் சேகரித்தல்
 3. கிராமப் பெரியார்களின் வாழ்க்கைக் குறிப்புகள், கடிதங்கள், அவர்களின் வெளியீடுகளைச் சேகரித்தல்
 4. கோயில்கள், புனிதத் தலங்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்பு
 5. கல்வெட்டு, சிறப்பு மலர்கள் போன்றவற்றைச் சேகரித்தல்
 6. பத்திரிகைகளின் அந்தக் கிராமம் தொடர்பாக வருகின்ற வெட்டுத்துண்டுகளைச் சேகரித்தல்
 7. கருத்தரங்கு, வாசகர் வட்டம், நூல் விமர்சன கூட்டம் போன்றவற்றை ஒருக்கிணைத்தல்
 8. சிறுவர் பிரிவை அமைத்தல்  

என்றமைகின்றது.  இப்படியான செயற்திட்டங்களை கிராம நூலகங்கள் முன்னெடுக்கும்போது அந்தக் கிராமங்கள் முன்னேற்றப் பாதையில் நகர்வதோடு அந்த நகர்வில் அந்தக் கிராமத்து மக்களும் பிரக்ஞைபூர்வமாக பங்கேற்பதும் உறுதிசெய்யப்படும்.  நூலகங்கள் – கிராம நூலகங்கள் – அவற்றின் சமகாலத் தேவைகள் என்கிற பெரும்பரப்பிற்கான முக்கியமான பரிந்துரைகளாக இவற்றை நான் கருதுகின்றேன்.  முன்னர் வாசிப்பதற்குப் புத்தகங்கள் வருவதில்லை தப்பித்துக்கொள்ளல் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டுவந்தது.  ஆனால் இன்று பல முக்கியமான விடயங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு தமிழில் வந்துகொண்டே இருக்கின்றன.  ஈழத்திலும் கூட முக்கியமான பலநூல்களை குமரன் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டுக்கொண்டே இருக்கின்றன.  ஆனால் அவை எத்தனை பேரால் வாசிக்கப்படுகின்றன என்பது குறித்து ஆராயவேண்டி இருக்கின்றது.  சமூக வலைத்தளங்களின் செல்வாக்கு, காணொலிகளின் மீதான நாட்டத்தின் அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணிகளை நாம் இதற்குக் காரணமாகச் சொல்லலாம்.  அதேநேரம் இன்னொரு விடயத்தையும் நான் ஆய்வுநோக்கில் முன்வைக்க விரும்புகின்றேன்.  நாம் சிறுவர்களாகவும் பதின்பருவத்தினராகவும் இருந்த தொன்னூறாம் ஆண்டுகளில் – நான் அப்போது நவாலி / சுதுமலையில் வாழ்ந்தேன் – கொக்குவில் நாச்சிமார் கோயிலுக்கருகாமையில் பெரியதோர் நூலகம் இருந்தது, ஆணைக்கோட்டை கிராமசபை நூலகம் இருந்தது, மானிப்பாய் நகரசபை நூலகம் இருந்தது.  இவற்றுக்கு எல்லாம் சிலதடவைகள் போய் இருக்கின்றேன், ஆனால் அவற்றை அணுகுவது எனக்கு இயல்பானதாக இருக்கவில்லை.  ஆனால் மானிப்பாயை அண்டிய இடங்களில் இருந்த சின்னச் சின்ன நூலகங்களையெல்லாம் தேடித்தேடிப்போய் புத்தகங்களை எடுத்து வாசிப்பவனாக இருந்திருக்கின்றேன்; இப்படியான பல நூலகங்கள் சிறு கடைகளின் / பாடசாலை உபகரணங்களைப் பிரதானமாக விற்கின்ற கடைகளின் பகுதியாக இருந்தவை.  மானிப்பாய் இந்துக்கல்லூரிக்கு எதிராக இருந்த ஒரு சிறுகடை, மானிப்பாய் நாயகபாலன் புத்தகக் கடை, மருதடிப் பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் இருந்த ஒரு கடை, கொக்குவில் ஞானம் புத்தகக் கடை போன்ற கடைகளைச் சொல்லலாம்.  இவற்றில் 4 அல்லது 5 தட்டுகளைக் கொண்ட ஒன்று அல்லது இரண்டு புத்தக றாக்கைகளில் வைக்கப்பட்டிருக்கின்ற புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்திருக்கின்றேன்.  நான் கூட எனது 11 – 13 வயது காலப்பகுதியில் எனது வீட்டில் லிட்டில் லைப்ரரி என்ற பெயரில் ஒரு நூலகத்தை நடத்திவந்தேன்.  அதில் 25 பேர் அங்கத்தவர்களாக இருந்தனர்.  அக்காலத்தில் நான் வசித்துவந்த நவாலியில் எமது வீட்டுக்கு அருகில் வசித்துவந்த சர்வேஸ்வரன் என்பவர் நடத்திவந்த ”வாசிஜா – வள்ளுவன் கோட்டம்” என்கிற – அவரது வீட்டில் இயங்கி வந்த நூலகத்தில் ஒவ்வொருநாளும் புத்தகங்களை எடுத்து வாசித்திருக்கின்றேன்  அந்த வயதுக்குரிய அலட்சியங்களைத் தவிர்த்துப்பார்த்தால் வாசிப்புப் பண்பாடு என்கிற செயற்பாட்டிற்கான எனது பங்களிப்பாகவே இவற்றைப் பார்க்கின்றேன்.  அதுபோலவே, இங்கே நான் குறிப்பிட்ட சிறுநூலகங்களை நான் இலகுவாக தொடர்ச்சியாகப் பயன்படுத்தியதற்கும் அவை எனக்கு அணுக்கத்திற்கு இலகுவாக அமைந்தமையே காரணமாக இருக்கும்.  இப்பொழுது நான் யோசித்துப்பார்க்கின்றபோது, அன்று இப்படியாகக் கிராம மட்டத்தில் இயங்கிய சிறு நூலகங்கள் மட்டும் இல்லாது போயிருந்தால் நான் ஒருவேளை வாசிப்பினை இடையறாது தொடர்ந்த ஒரு வாசகனாக உருவாகாமலே போயிருந்திருக்கக்கூடும்.  அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே, ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாழ்கின்ற பிரதேசத்தில், அவர்கள் விரும்பிப் படிக்கக் கூடிய நூல்களையும் கொண்டுள்ள, அவர்களுக்கு அணுக்கமாக இருக்கக் கூடிய சிறுநூலகங்களே வாசகர்களை அதிகரிக்கவும் வாசிப்பில் மேம்பாடடையச் செய்யவும் உதவும் என்பதை முழுமையாக நம்புகின்றேன்.  தனது எழுத்துகளையும் செயற்பாடுகளையும் இந்தப் பிரக்ஞையுடன் தொடர்ந்து முன்னெடுக்கும் நூலியலாளார் செல்வராஜா அவர்களின் எழுத்துகள் நாம் முக்கியத்துவம் கொடுத்துத் தொடரவேண்டியன.

 1. விதை குழுமம் ஒருங்கிணைத்த நமக்கென்றொரு பெட்டகம் நூல் அறிமுக நிகழ்வில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.
 2. இந்நிகழ்வில் இடம்பெற்ற உரைகளும் உரையாடல்களும் விதை குழும வெளியீடாக நூல் வடிவம் பெற்றுள்ளன.
 3. இக்கட்டுரை நவம்பர் 2021 தாய்வீடு இதழில் வெளியாகி இருந்தது. https://thaiveedu.com/pdf/Nov-2021.pdf

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: