குறளிசைக் காவியம், குறளோவியம்…

லிடியன் நாதஸ்வரமும் அவர் சகோதரி அமிர்தவர்ஷினியும் இணைந்து திருக்குறளின் 1330 குறள்களையும், அவற்றிற்கு சக்திவாசன் எழுதியுள்ள பொருளையும் கிட்டத்தட்ட 1000 பாடகர்களின் குரல்களில் ”குறளிசைக்காவியம்” என்ற பெயரில் இசையமைத்துள்ளார்கள்.  இது பற்றிய பதிவுகளப் பார்த்தபோது எனக்குப்பிடித்த சில திருக்குறள்களை, அவை ஏற்கனவே அவர்களின் யூடியூப் தளத்தில் கிடைக்கின்றனவா என்பதை ஆர்வத்துடன் தேடிப்பார்த்தேன்.  அப்போது இந்தக் குறள் பற்றிய நினைவுகள் வந்தன. 

”தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை”

என்கிற இந்தக் குறளுக்கான பொருளாக பரிமேலழகர் முதல் சாலமான் பாப்பையா உள்ளிட்ட பலரும், ”பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்” என்ற பொருளிலேயே எழுதியுள்ளனர். 

பெண்கள் எப்படி இருக்கவேண்டும் என்கிற அறிவூட்டலாக இந்தக் குறளைச் சொல்லுவதை நாம் சிறுவயது முதலே பார்த்திருப்போம்.  இந்தக் குறளுக்கு இவர்கள் சொல்லும் பொருள், பெண்களை ஆணுக்கு அடங்கியிருக்கவேண்டும் என்று திணிப்பதாகவே அதுவரை வழங்கிவந்தது.  அந்த நேரத்தில் கலைஞர் கருணாநிதி இதற்கு இப்படியொரு பொருளை எழுதியிருக்கின்றார்.  

”கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்”

எப்போது பெய்யவேண்டுமோ அப்போது பெய்யும் மழைதான் சிறப்புமிக்கது, அப்படியில்லாமல் மற்றவர்கள் கட்டளையிட்டுவிட்டார்கள் என்று பெய்யும்போது அதற்கான தனித்த பெருமையினை இழந்துவிடுவதுடன் காலந்தவறிப் பெய்யும் மழையாகவும் மாறிவிடுகின்றது.  காலந்தவறிப் பெய்யும் மழை அழிவையே தருவது.

அது போலவே  கணவனைத் தன் தோழனாக, தனக்கு நிகரானவனாக நினைக்காமல் அவன் சொல்பவற்றுக்கெல்லாம் ஆமாம் சொல்லிக் கொண்டு, அவன் தயவிலேயே தங்கியிருக்கின்ற பெண்கள் தாமும் அடிமைகளாக இருப்பதோடு அவர்களைச் சார்ந்திருப்போரின் அழிவிற்கும் காரணமாகிவிடுவார்கள் என்று கலைஞர் சொல்லும் பொருள் எனக்குப் பிடித்திருந்தது. 

குறளோவியத்திலும் இந்தக் குறளைப் பற்றி கலைஞர் எழுதியிருந்தபோதும், அதில் பாரதிதாசன் எழுதிய பொருளையே அதற்கு முற்பட்டோர் சொல்லிய பொருளுக்கு மாற்றாக கலைஞர் சொல்லியிருக்கின்றார்.  ”கண்ணையும் மனதையும் கவர்வனவும் மிக்க பயன் விளைப்பனவும் ஆகிய தெய்வம், தன் கணவனைவிட வேறு இல்லை என்று எண்ணும் மனைவி, அக்கணவனுக்குப் பயன் மழை,  பெய்யெனப் பெய்யும் மழை என்றது அளவறிந்து பெய்வதோர் பயன் மழையை” என்பது பாரதிதாசன் இக்குறளுக்கு வழங்கிய கருத்து.  அதிலிருந்தும் மேம்பட்ட பொருளினைத் தனது திருக்குறள் உரையில் கலைஞர் எழுதியிருக்கின்றார்.  திராவிட இயக்கத்தவர்களும் திராவிடக் கட்சியைக் சேர்ந்தவர்களும் கலை இலக்கியத்தினை மக்களிடம் எடுத்துச்செல்லும்போது எவ்வளவு பிரக்ஞையுடன் இயங்கியிருக்கின்றார்கள் என்பதை இதுபோன்ற சின்னச் சின்ன விடயங்கள் கூடச் சுட்டிக்காட்டுகின்றன.

எனக்குப் பதினொரு வயதாக இருக்கும்போது திருக்குறளுக்கு மு. வரதராசன் உரையை வாங்கிப் பரிசளித்த பெரியப்பா, எனக்குப் பதினாறு வயதிருக்கும்போது குறளோவியத்தையும் பின்னர் 20 வயதாக இருக்கும்போது திருக்குறள் கலைஞர் உரை நூலையும் வாங்கிப் பரிசளித்தார்.  இவற்றினூடாக ஒரு பயணம் இருக்கின்றது.

குறளிசைக் காவியத்தின் யூட்யூப் கணக்கிற்கான இணைப்பு https://www.youtube.com/playlist?list=PLuyzEIvsNVTnggtxbFQFUB-jTAf9yBu6d

டிசம்பர் 2025 இல் தாய்வீடு இதழில் எழுதத்தொடங்கிய சொல்லத்தான் நினைக்கிறேன் 2.0 தொடரில் இருந்து. இந்தப் பத்தி ஒரு மாதம் மாத்திரமே வெளிவந்தது.

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑