கவிதைகள் கருத்தரங்கு – சில கருத்துக்கள்

-1-
வாழும் தமிழ் என்ற பெயரில் காலம் சஞ்சிகை தொடர்ச்சியாக நடத்தும் நிகழ்வுகளின் வரிசையில் இன்று நடைபெற்ற கவிதைகள் பற்றிய கருத்தரங்கத்திலும், புத்தகக் கண்காட்சியிலும் கலந்துகொண்டேன்.    காலம் சஞ்சிகை மற்றும் காலம் செல்வம் பற்றிய விமர்சனங்கள் காலத்துக்குக் காலம் பலராலும் வைக்கப்பட்டாலும், காலம் புலம் பெயர் சூழலில் காலம் மிக முக்கியமான ஒரு இடத்தை தனக்கென நிலை நாட்டியே இருக்கின்றது.   1990 ஜூலையில் தனது முதலாவது இதழை வெளிட்ட காலம் கடந்த 20 ஆண்டுகளில் 35 இதழ்களை வெளியிட்டதுடன், தொடர்ச்சியாக பல புத்தக கண்காட்சிகளை நடத்தியும், இலக்கியச் சந்திப்புகளை ஒருங்கிணைத்தும் தன் பணிகளைத் தொடர்ந்திருக்கின்றது.  
அண்மையில் பதிவுகள் இணையத் தளத்தில் காலம் செல்வம் புத்தக விலைகளை வியாபார நோக்குடன் நிர்ணயிக்கிறார் என்ற ஒரு குற்றச் சாற்றை முன்வைத்திருந்தனர்.  கனடாவில் இலக்கிய வாசகர்கள் அனேகம் பேர் காலம் ஒருங்கிணைக்கின்ற புத்தகக் கண்காட்சிகளுக்கு நிச்சயம் சென்றிருப்பர்.  பலர் அவர் வீட்டுக்கே போய் புத்தகங்களை வாங்கி இருக்கவும் கூடும்.  அங்கே அவர் எத்தனை புத்தகங்களை விற்பதற்காக வாங்கி இன்றுவரை விற்கப்படாமல் அவரிடமே தங்கி இருக்கின்றன என்பதையும் நாம் பார்க்கத்தானே வேண்டும்.  பெட்டி பெட்டிகளாகவும், ராக்கை ராக்கைகளாகவும் விற்கப்படாமல் தேங்கி இருக்கின்ற புத்தகங்களை நானே அவதானித்து இருக்கின்றேன்.  தொடர்ச்சியாக விற்கப்படாமல் தேங்கி நிற்கும் புத்தகங்களை பின்னர் ஒரு புத்தகம் ஒரு டொலர் என்று விற்றுத் தள்ளுவதையும், அதில் கூட பேரம் பேசுபவர்களையும் நான் கவனித்தே வருகிறேன்.  இந்தச் சூழலில் எந்த அறங்களின் அடிப்படையில் காலம் மீதான குற்றச் சாற்றுகள் வைக்கப்படுகின்றன என்று தெரியவில்லை.  தவிர, காலம் செல்வம் ஒன்றும் கனடாவில் தமிழ்ப் புத்தகங்கள் விற்பதற்கான ஏக அனுமதி பெற்றவரும் இல்லை, எனவே அவர் மீது குற்றச் சாற்றுகளை அள்ளி இறைப்பவர்கள் ஏன் தாமே ஒரு புத்தகக் கண்காட்சியை ஒழுங்கமைத்து ‘எந்த வியாபாரத்தனமும்’ இல்லாது நியாய விலைக்கு புத்தகங்களை விற்காமல் காலம் செல்வம் மீதான அவதூறுகளை மாத்திரம் கூஉறி வருகின்றனர் என்பதும் அவ்வாறு புத்தகம் விற்க அவர்கள் எடுத்த முயற்சிகளை ஏன் கைவிட்டனர் என்பதையும் அவர்கள் நிச்சயம் அறிந்தே இருப்பர்.  
புத்தகங்களை நாம் நமக்குள்ளேயே பகிர்ந்து வாசிப்பதன் மூலம் காலம் செல்வம் ஊடாக விற்கப்படுகின்ற புத்தகங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும் என்று இப்ப புதிதாக ஒரு சாரார் கூறத் தொடங்கி உள்ளனர்.   இது போன்றவர்கள் தாம் நாம் இலக்கியச் சூழலில் அவதானமாக இருக்கவேண்டிய நச்சுச் சக்திகள்.  இவர்களிடம் இருப்பது காழ்ப்புணர்வு தவிர வேறொன்றுமில்லை.  புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிப் படிக்கும் வழக்கம் தமிழர்களிடம் மிக அரிதாகவே காணப்படுகின்றது.  அதையும் முடமாக்க முயலும் இவர்களை என்ன சொல்லித் திட்டுவது?  தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து விமர்சனங்களையும், விசனங்களையும் முன்வைக்கும்போது முழு நேர எழுத்தாளனென்று ஒருவன் தன்னை நிர்ணயித்துக்கொள்ளும் சூழல் தமிழில் இல்லாமல் இருக்கின்றது என்பதையும் அவதானித்தே பார்க்கவேண்டும்.  தவிர இணையம் ஊடாக புத்தங்களை வாங்கலாம் என்றபோதும், சிறிய, புதிய பதிப்பகங்களின் புத்தகங்களை இணையம் ஊடாக வாங்க எவரும் முன்வருவதில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.  எனக்குத் தெரிந்து 90களின் மத்தியில் ரொரன்றோவில் 5 புத்தகக் கடைகள் இருந்தன.  இன்று 2 புத்தகக் கடைகள் மாத்திரமே இருக்கின்றன.     அதிலும் ஒரு கடையில் இருந்த புத்தகங்களை மாத்திரமே வைத்து விற்கின்றனர்.  புதிதாக புத்தகங்கள் எடுப்பது (விகடன் பிரசுரங்கள் தவிர்த்து) இல்லை அல்லது மிக மிகக் குறைவு.  இந்தச் சூழலில் காலம் மீதான ஆலாசனைகளையும், ஆரோக்கியமான விமர்சனங்களையும் செய்வதைத் தவிர்த்து, புரளி கிளப்புவதும், எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் எந்த விதத்திலும் ஆக்க பூர்வமாக மாட்டா.
-2-
இன்றைய கவிதை பற்றிய கருத்தரங்கு சேரன் தலமையில் நடைபெற்றது.  முதலில் இசைத் தமிழ் என்ற தலைப்பில் வி. கந்தவனம் உரையாற்றினார்.  இதற்கு சில வாரங்களின் முன்னர் நண்பர்கள் இணைந்து கவிதைகள் பற்றிய திறந்த வெளி கல்ந்துரையாடல் ஒன்றை ஒழுங்கமைத்திருந்தோம். அதில் செல்வம் பேசும்போது கவிதை எழுத வருபவர்கள் கட்டாயம் கம்பனைப் படிக்கவேண்டும் என்றும், பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயம் எமது மொழி ஆளுமையை அதிகரிக்கும் என்றும் கூறியிருந்தார்.  கிட்டத்தட்ட அதன் தொடர்ச்சியாகவே இன்றைய கந்தவனத்தின் பேச்சும் இருந்தபோதும், செல்வம் – கந்தவனத்தின் நவீன / தற்கால இலக்கிய வாசிப்பு பற்றிய வேறுபாடு இங்கே முக்கியமானதாக இருக்கின்றது.  செல்வம் தொடர்ந்து சமகால இலக்கியங்களைப் படித்தே வருகிறார்.  தவிர பழந்தமிழ் பாடல்கள் முதல் நிறைய கவிதைகளை நினைத்த மாத்திரத்தில் வரி பிசகாமல் மேற்கோள் காட்டும் திறனும் படைத்தவர்.  ஆனால் கந்தவனத்தின் வாசிப்பு பற்றிய விவரணம் பரிதாபகரமானதாகவே இருக்கின்றது.  தன்னுடைய பேச்சில் ஒரு பொழுதில் அவர் கூறுகிறார், “இன்று புதுக்கவிதை எழுதுவதிலே உச்சத்தில் இருக்கின்ற வைரமுத்து கூட மரபுக் கவிதை எழுதுவதில் பயிற்சி பெற்றவர்” என்று.  இந்த ஒன்றை வைத்தே நாம் கந்தவனம் இன்னமும் 80களின் தொடக்கத்தை விட்டு வெளியே வரவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். 
கந்தவனம் தன் பேச்சில் கம்பனின் மற்றும் பழந்தமிழ்ப் பாடல்களில் இருந்த ஓசைநயம் பற்றியும்,  கம்பன் பாடல்களில் அநதப் பாடல்கள் வருகின்ற சூழலிற்கும், பாடலைப் பாடும்போது வருகின்ற ஓசைக்கும் இடையிலான தொடர்புகளைக் குறிப்பிட்டிருந்தார்.  ஆனால் இது போன்ற இலக்கியச் சுவைகளைத் தாண்டி அவரது பேச்சில் நிறைய இடங்கள் ஏமாற்றத்தையே தந்தன.  வைரமுத்து ஆரம்பகாலப் பாடல்களில் மரபுப் பாடல்கள் இல்லாமல், ஓசை நயம் பற்றிய அக்கறை இல்லாமலே ஆனால் கவிதை நயத்துடன் எழுதினாரென்று என்று கூறி மண்வாசனை படப் பாடல்களை சிலாகித்த பின்னர், வைரமுத்து ரகுமானுடன் சேர்ந்து கொண்ட பின்னர் ஓசை நயத்துடன் எழுதத் தொடங்கினாரென்றும் குறிப்பிட்டார்.  ஆனால் இவர் குறிப்பிட்ட மண்வாசனை படத்தில் தான் வைரமுத்து எழுதி மிகப் புகழ்பெற்ற “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு” பாடல் இரண்டு வடிவங்களிலும் (காதல் பாடல், பிரிவைச் சொல்லும் பாடல்) உள்ளது.  இந்தப் பாடலில் கந்தவனம் குறிப்பிட்ட ஓசைநயம் இல்லையா?.  அதன் பின்னர் சொன்னார், வாலியை எல்லாம் குறைத்து மதிப்பிட முடியாது.  புதுக் கவிஞர்களில் அவர் முக்கியமானவர்.  காப்பியங்களை எல்லாம் அவர் புதுக் கவிதையில் எழுதி இருக்கிறார் என்று.  வாலி எழுதிய பாண்டவர் பூமி. அவதார புருஷன் என்பன நல்ல முயற்சிகள் என்பதை நான் மறுக்கவில்லை.  ஆனால் இவற்றை அடிப்படையாக வைத்து வாலியை முக்கியமான ஒரு புதுக்கவிஞர் என்று ஒருவர் 2010லே அதுவும் ஒரு சிறப்புப் பேச்சாளர் கூறுவதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.  தவிர சேரன் அவைத்தலைவராக உள்ள அவையிலேயே, அதுவும் சேரனுக்கு அருகில் இருந்தபடியே தன் உரையை ஆற்றிய கந்தவனம், மரபுக் கவிதைகளிலோ அல்லது சேரன் கவிதைகளிலோ என்று சொல்லி நிறுத்தி விட்டு, புதுக்கவிதைகள் என்று குறிப்பிட்டால் என்ன, சேரன் கவிதைகள் என்றால் என்ன இரண்டும் ஒன்றுதான் என்று சொன்னது ஆபாசத்தின் உச்சம்.  சேரனுக்குக் கூட அது விரசமான ஒரு கணமாகவே இருந்திருக்கும்.  அந்தக் கணத்தில் தமிழ்நாட்டில் கவியரங்கம் என்ற பெயரில் வாலி, வைரமுத்து, அப்துல் ரகுமான், பா. விஜய் போன்றோர் கருணாநிதிக்கு காக்கா பிடிப்பதன் சாயல் வெளிப்படையாகவே தெரிந்தது.  
இதன் பின்னர் ஒரு பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டு தன் பேச்சினை கந்தவனம் நிறைவு செய்யவும் கேள்வி நேரம் ஆரம்பமானது.   “தமிழ் இலக்கணப் பயிற்சியும், மரபுக் கவிதை எழுதுவது பற்றிய அறிவும் கவிதை எழுதுபவர்களுக்கு முக்கியம், அப்படி இல்லாமல் எழுத வருபவர்கள் அவர்கள் படைப்பை மாத்திரம் அல்ல, அந்தச் சூழலையே நாசம் செய்துவிடுகின்றனர்” என்ற சாரத்துடன் பேசிய கந்தவனத்திடம் தர்ஷன், கந்தவனம் மேலே சொன்ன எல்லா வாய்ப்புகளும் நிராகரிக்கப்பட்ட சூழல்களில் இருந்து வரும் விளிம்புநிலை மனிதர்கள் தாம் வழமையாக உபயோகிக்கும் மொழியுடனேயே படைப்பிலக்கியத்தில் ஈடுபடுகின்றனர். அவற்றை கந்தவனம் எவ்வாறு பார்க்கின்றார் என்று கேள்வி எழுப்பினார்.  துரதிஸ்டவசமாக கந்தவனத்துக்கு அந்த கேள்வி என்னவென்றே புரியவில்லை.  தான் மலையக மக்களுக்கு அவர்கள் மொழியிலேயே கூட கவிதை எழுதி வாசித்துக் காட்டியதாயும், (விளிம்புநிலை மனிதர்கள் என்றவுடன் மலையக மக்களே கந்தவனத்துக்கு நினைவு வருகின்றா அளாவு இருக்கின்றது கந்தவனத்தில் சமூகப் பிரக்ஞை) எல்லா மக்களுக்கும் விளங்கக் கூடியவாறு கூட தான் கவிதைகள் எழுதி இருப்பதாயும், திருக்குறளில் இருக்க்கும் எளிமையான சொற்கள் நவீன கவிதைகளில் கூட இல்லை என்றும் சொன்னார்.  அதன் பின்னர் என். கே. மகாலிங்கம் கேட்ட வேறு ஒரு கேள்வியைத் தொடர்ந்து சேனா, தர்ஷன் கேட்ட கேள்வியைக் கந்தவனம் தவறாகப் புரிந்து கொண்டதைச் சுட்டிக் காட்டி, விளிம்புநிலை மனிதர்கள் எழுதும் படைப்புகளை கந்தவனம் எவ்வாறு புரிந்து கொள்கிறார் என்று கேட்டார்.  ஆனால் கந்தவனம் போன்றவர்களிடம் இருந்து இது போன்ற கேள்விகளுக்கு எவ்வாறான பதில்கள் கிடைக்கும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டது.  “நான் கவிதை எழுதுவது எப்படி என்று உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன், அவருக்கு இந்த சந்தேகம் வந்ததென்றால் நான் இது வரை சொன்னது எதுவுமே அவருக்கு விளங்கவில்லை என்று அர்த்தம் , i thought this is an intelligent crowd’ என்று சொல்லிஅரங்கை விட்டு விலகினார் கந்தவனம்.   வேறு ஒரு நிகழ்வுக்குத் தான் செல்லவேண்டும் என்று அவர் ஏற்கனவே சொல்லித்தான் இருந்தார்.  ஆனால் தர்ஷன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாத கந்தவனம் பின்னர் அதே கேள்வியை சேனா கேட்ட போது சில நிமிடங்கள் மாத்திரமே எடுத்து தன் பதிலை சொல்லி இருக்கலாம், அல்லது பதில் தெரியவில்லை என்றாவது ஒப்புக் கொண்டிருக்கலாம்.  ஆனால், தன்னை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக நினைத்து கந்தவனம் செய்த செயல்களும், , i thought this is an intelligent crowd என்ற திமிரில் தோய்ந்த வார்த்தைகளும் முழுக்க முழுக்க அயோக்கியத்தனம்; அப்படி இல்லை எனும் பட்சத்தில் அறியாமை.  எனது கேள்வி எல்லாம் இது போன்ற இடங்களில் ஏன் இவரை எல்லாம் பேச அழைக்கின்றனர் என்பது தான்.  இவர் பேசிய அதே அவையிலேயே தம்மை தம் கவிதைகளால் நிலை நாட்டிய சேரன், செழியன், மு. புஷ்பராஜன், திருமாவளவன் போன்றோர்கள் இருந்தனர்.  நான் கவிதை எழுதுவது எப்படி என்று உங்களுக்கெல்லாம் சொல்லித் தந்திருக்கிறேன் என்ற கந்தவனத்தின் திமிர் தோய்ந்த வார்த்தைகள் இவர்களுக்கெல்லாம் அவ மரியாதை இல்லையா? ஏற்கனவே ஒரு இடத்தில் தன்னிடம் கேள்வி கேட்ட ஒருவரிடம் அந்தக் கேள்விக்கான பதிலையோ அல்லது விளக்கத்தையோ சொல்லாமல், நான் ஒரு மலை என்னிடம் மோதினால் நீதான் நொறுங்கிப் போவாய் என்று இதே கந்தவனம் பஞ்ச் டயலாக் ஒன்றைச் சொன்னதை நான் அவதானித்து இருக்கிறேன்.  இன்றைய கந்தவனத்தின் ஒட்டுமொத்த செயல்களும் கந்தவனம் மீதான் என் கணிப்பை மீளவும் உறுதி செய்திருக்கின்றன.  ஆனால் கவிதை பற்றிய கருத்தரங்கம் ஒன்றின் தலைமைப் பேச்சாளராக கந்தவனத்தை அழைத்த காலம் செல்வத்துக்கு இது ஒரு தோல்வியே.
-3-
நிகழ்வின் இன்னொரு பேச்சாளராக கலாநிதி. நா. சுப்ரமண்யன், “தமிழில் புதுக்கவிதை ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வாசித்தார்.  ஆராய்ச்சி அடிப்படையிலான ஒரு கட்டுரையாக அவரது கட்டுரை அமைந்த போதும், அவரே சொன்னது போல தற்கால எழுத்துக்களை வாசிக்காத, அவற்றுடன் பரிச்சயம் இல்லாத அவர் அவர் கட்டுரை கூட பூரணமில்லாததாகவே இருந்தது.  தன் கட்டுரை வாசிப்பினிடையே ஓரிடத்தில் கடந்த 15 வருட கவிதைகள் பற்றிய பரிச்சயம் தனக்கில்லை என்பதை சுப்ரமண்யன் குறிப்பிட்டார்.  15 வருடம் என்பது தமிழ்க் கவிதை உலகில் மிகப்பெரிய மாறுதல்களை உள்ளடக்கிய காலப்பகுதி.  அப்படி இருக்கும்போது அந்தப் 15 வருட வாசிப்புகளை உள்ளடக்காத சுப்ரமண்யனின் கட்டுரை ஆறின கஞ்சியாகவே இருந்தது.  ரமேஷ்-பிரேம் என்கிற கவிஞர்கள், விமர்சகர்கள் கவிதை பற்றி இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள்என்று சில கருத்துக்களை தன் கட்டுரையை வாசிக்கத் தொடங்கும்போது சுப்ரமண்யன் சொன்னார்.  ஐயா, ரமேஷ்-பிரேமை எல்லாம் கவிஞர்கள் – விமர்சகர்கள் என்று அறிமுகம் செய்துவைத்து கட்டுரை வாசிக்கின்ற அளவுக்கு அந்த மேடையில் யாரும் இருக்கவில்லை.
கவிதை பற்றிய கருத்தரங்கம் என்கிற இந்த முயற்சி முக்கியமானது.  அது போலவே, மரபு இலக்கியப் பயிற்சி, பழந்தமிழ்ப் பாடல்களின் பரிச்சயம் போன்றவை ஒரு படைப்பாளிக்கு எந்த அளவுக்கு முக்கியமானவை என்கிற வாதங்களும் நிச்சயம் தேவை.  ஆனால் பேசிய இரண்டு பேச்சாளர்களுமே நவீன கவிதைகள், சமகால இலக்கியம் பற்றிய எதுவித வாசிப்பும் இல்லாமல் இருந்தது “கவிதை கருத்தரங்கம்” என்ற நிகழ்ச்சித் தலைப்புக்துப் பொருத்தமில்லாததாகவே அமைந்தது.
-4-
நிகழ்வின் இன்னோர் அங்கமாக நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பின்வரும் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டேன்
 1. ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் – ஆ. சிவசுப்ரமணியன் (காலச்சுவடு)
 2. தாத்தாவும் பேரனும் – ராபர்ட் ஸி. ரூவர்க்;  தமிழாக்கம் – வல்லிக்கண்ணன் (சந்தியா)
 3. பாஸ்கரபட்டேலரும் என் வாழ்க்கையும் – சக்கரியா’ தமிழாக்கம் – சுரா (சந்தியா)
 4. சுயம்வரம் – தொகுப்பு மீரா (அன்னம் வெளியீடு)
 5. கதிரேசன் செட்டியாரின் காதல் – மா. கிருஷ்ணன் (மதுரை பிரஸ்)
 6. திராவிடச் சான்று (எல்லீஸும் திராவிட மொழிகளும் – தாமஸ் டிரவுட்மன் (காலச்சுவடு)
 7. பேரினவாதத்தின் ராஜா – டி. அருள் எழிலன் (புலம்)


25 thoughts on “கவிதைகள் கருத்தரங்கு – சில கருத்துக்கள்

Add yours

 1. வர்மன், நீங்கள் கந்தவனம் பற்றிப் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை உண்மையிலேயே ஆதரிக்கிறேன். அவரது பேச்சில் தொனித்த கர்வம் இறுதி வரை நீடித்து கேட்கப்பட்ட கேள்விகளிற்கு பொருத்தமான பதில்களை வழங்காமல் (சொந்த வேலை நிமித்தம் )அவர் கிளம்பிச் சென்றதில் முடிந்தது….!! விளிம்பு நிலை மக்களால் புரிந்து கொள்ளத் தக்கதும், அவர்களாலே இயற்றத் தக்கதுமான புதுக் கவிதைகள் குறித்த அவரது பார்வை இப்படி இருந்திருக்க வேண்டாம்.//இன்றைய கந்தவனத்தின் ஒட்டுமொத்த செயல்களும் கந்தவனம் மீதான் என் கணிப்பை மீளவும் உறுதி செய்திருக்கின்றன//…!!! அதே…!சுடச் சுட பதிவேற்றியிருக்கிறீர்கள்…பகிர்விற்கு மிக்க நன்றி..!

  Like

 2. மேலே நான் குறிப்பிட்ட காலம் செல்வம் தொடர்பான பதிவுகளில் வெளியான விமர்சனம் இருக்கின்ற தொடுப்புhttp://www.geotamil.com/pathivukal/review_koor2010.htm

  Like

 3. நான் 'த‌விர்க்க‌முடியாத‌ கார‌ண‌த்தினால்' நிக‌ழ்விற்குப் பிந்தி வ‌ந்த‌தால், க‌ந்த‌வ‌ன‌ம் அவ‌ர்க‌ளின் பேச்சைத் த‌வ‌ற‌விட்டிருந்தேன். கேட்டிருந்தால் 'க‌ம்ப‌ராமாய‌ண‌ம் ப‌டித்த‌ க‌தை‍ பாக‌ம் 02' எழுதியிருக்க‌லாம்; அருமையான‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தைத் த‌வ‌றவிட்டேன் போலும். க‌ந்த‌வ‌ன‌த்தைக் கூப்பிட்ட‌து அவ‌ர் ம‌ர‌புக்க‌விதை ப‌ற்றி விரிவாக‌ உரையாட‌க்கூடிய‌வ‌ர் என்ப‌தால் இருக்க‌லாமென‌ நினைக்கிறேன். ஆனால் அதேபோன்று இன்றைய‌ க‌விதைக‌ளோடு ப‌ரிட்ச‌ய‌முடைய‌ யாரேனும் ஒருவ‌ரைச் செல்வ‌ம் பேச‌வைத்திருக்க‌லாம். இல‌ண்ட‌னிலிருந்து வ‌ந்த‌ மு.புஷ்ப‌ராஜ‌ன் பேச‌க்கூடுமென‌ எதிர்ப்பார்த்து நிக‌ழ்விற்கு வ‌ந்திருந்தேன்; அதுவும் ந‌ட‌க்க‌வில்லை. ஆகக்குறைந்த‌து சேர‌னையாவ‌து பேச‌வைத்திருக்கலாம். ஆனால் இதையெல்லாவ‌ற்றையும் விட‌ என‌க்குக் க‌வ‌லை த‌ந்த‌ விட‌ய‌ம் என்ன‌ என்றால், செல்வ‌த்திட‌ம் இறுதியாய் வெளிவ‌ந்த‌ 'கால‌ம்' இத‌ழ் த‌ரும்ப‌டி கேட்ட‌போது, எப்போது நீ ஒழுங்காய் குறித்த‌ நேர‌த்திற்கு ஒரு நிக‌ழ்விற்கு வ‌ருகின்றாயோ அப்போது ம‌ட்டுமே 'கால‌ம்' கிடைக்கும் என்றார். அப்ப‌டியெனில் என‌க்கு இனி எப்போதுமே 'கால‌ம்' இத‌ழ் கிடைக்காதா?

  Like

 4. "'காலம் ' அடிக்கடி 'வளரும் தமிழ் ' என்று புத்தகக் கண்காட்சிகளை நடாத்துகின்றது (செல்வம் நூல் விலைகள் விடயத்தில் சிறிது தாராளம் காட்டுவாரா ?). பாரதி மோகனும் தனிப்பட்ட ரீதியில் சில புத்தகக் கண்காட்சிகளை நடாத்தியிருக்கின்றார். மிகவும் நியாயமான விலையில் நூல்களை விற்றுப் பலரின் பாராட்டுதல்களைத் தட்டிக்கொண்டவரிவர். "மேற்கூறிய வரிகள்…அண்மையில் கூகுலில் ஏதோ ஒன்றைத் தேடியபோது கிடைத்த இணைப்பு இது…..http://www.thinnai.com/?module=displaystory&story_id=60002134&format=htmlஒன்றை நான் இங்கு கூறவேண்டும்….98ம் ஆண்டு என நினைக்கின்றேன்…புத்தக் கண்காட்சி தனிப்பட்ட முறையில் நான் செய்யவில்லை…அரசியல் நோக்கங்களுக்காகவும் கூட்டு முயற்சியாகவும் செய்யப்பட்டது….ஆகவே விலைகள் பெரிய இலாபம் இன்றி நிர்ணையிக்கப்பட்டது….ஒழுங்கமைத்தது மட்டுமே நான்…முடிவில்…இதனால் நான் பட்ட கஸ்டங்கள் பல….நல்ல நட்புகளை இழந்தேன்…..பட்ட கடனை அடைக்கமுடியாமல் திண்டாடினேன்…இறுதியாக காலம் செல்வத்திடமே மிகுதிப் புத்தகங்களை கொடுத்துவிட்டேன்…காலம் செல்லவம் இவ்வளவு காலம் தொடர்ந்து இவ்வாறான ஒரு நிகழ்வை நிகழ்ந்துவது மிகப் பெரிய விடயமே…புத்தகங்களின் விலைகள் அதன் பக்ககங்களைப் பொருத்து நிர்ணையிக்கப்படுபவையல்ல…அதன் முக்கியத்துவத்தைப் பொருத்தே நிர்ணையிக்கப்படுபவை….அப்பொழுதுதான் வீட்டு நுhலக பண்பாடு இல்லாத நமது தமிழ் கலாசாரத்தில் ஒரளவாவது புத்தக விற்பனையை செய்யலாம்…அல்லது யார் செய்ய முன்வருகின்றார்கள்…???செய்கின்றவர்களை ஊக்கிவிப்பது என்பது நமது சமூகத்தில் குறைவாகவே இருக்கின்றது…குறை கூறுவதைத் தவிர…

  Like

 5. ப‌கிர்விற்கு ந‌ன்றி சுத‌ன்.. நீண்ட‌ நாட்க‌ளின் பின் ஒரு பிர‌யோச‌ன‌மான‌ நாளாக‌ நேற்று என‌க்கு க‌ழிந்த‌து.. உங்க‌ள் இந்த‌ விம‌ர்ச‌ன‌மும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள‌ ப‌ட‌க் கூடிய‌ நேர்மையான‌ தெளிவான‌ விம‌ர்ச‌ன‌மாக‌ இருக்கிற‌து.. ந‌ன்றி..

  Like

 6. முன்பொருமுறை கவிநாயகர் பற்றி ஒரு கிசுகிசு எழுதினேன் ஞாபகமிருக்கிறதா? கவிநாயகரையும் அவரது கவிதை வடிவத்தையும் முற்று முழுதாக நிராகரிக்கக்கூடாது என்கிற ஆதங்கம் என்னிடம் இருந்தது. தன் பாணி தவிர்ந்த பாணியில் எழுதுபவனை just like that நிராகரிக்கக்கூடாது என்பது என் கருத்து. ஆனால் கவிநாயகர் பித்தேறி ஆடியிருக்கிறார் போலிருக்கிறது. எல்லாம் செல்வத்தினுடைய பிழையே. ஒப்பாரிப்பாட்டு எழுதிற ஆளைக் கூப்பிட்டது அவரிட பிழை.///i thought this is an intelligent crowd///பச்சைத் தூசணத்தில திருப்பிக் கேக்காமல் இஞ்ச வந்து எழுதிறியளே…. உங்களை பிஞ்ச செருப்பாலையே அடிக்கோணும்.

  Like

 7. இந்தக் கட்டுரையை அந்த அலும்பு பிடிச்ச மனுசனுக்கு யாராவது அனுப்பி வையுங்கள். உதப்பார்த்தாவது அந்தாளுக்குச் சுரணை வரட்டும்

  Like

 8. Anonymous said…கனடா தமிழ் இலக்கிய சூழலை மாசுபடுத்தியதில் முதலிடம் வகிப்பவர் கவிஞனம் கந்தவனம் என்பது எனது தாழ்மையான கருத்து. கவி என்றால் குரங்கு என்ற பொருள். மக்டொனால்ட்டில் விற்கப்படும் கொம்போ கவிஞரும் மேடையெங்கும் முழங்கி வருகின்றார். கவிஞர் புத்தகங்கள் வாசிப்பதில்லை, எழுதுவதிலேயே கவனம் செலுத்துகின்றார். காலம் செல்வம் பல நல்ல இலக்கிய முயற்சிகளை செய்துவருகின்றார். இவரைப் போன்றோரை மேடையேற்றுவதன் மூலம் செல்வத்தின் முயற்சிகள் மீது களங்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாது. செல்வம் சிந்தித்தால் நல்லது.

  Like

 9. நன்றிகள் நதியானவள்,//! விளிம்பு நிலை மக்களால் புரிந்து கொள்ளத் தக்கதும், அவர்களாலே இயற்றத் தக்கதுமான புதுக் கவிதைகள் குறித்த அவரது பார்வை இப்படி இருந்திருக்க வேண்டாம்.//இன்னமும் சொல்லப் போனால் கந்தவனம் விளிம்புநிலை மனிதர்கள் என்று சொல்லப்படுவோர் யாரென்று பற்றியே எதுவித பிரக்ஞையும் அற்றே இருக்கிறார் என்பதையே அவரது நேற்றைய நடத்தை காட்டியது..

  Like

 10. நன்றிகள் DJ//கேட்டிருந்தால் 'க‌ம்ப‌ராமாய‌ண‌ம் ப‌டித்த‌ க‌தை‍ பாக‌ம் 02' எழுதியிருக்க‌லாம்; அருமையான‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தைத் த‌வ‌றவிட்டேன் போலும். //அட, அப்படி இன்னொரு கம்பராமாயணம் படித்த கதை கிடைக்கும் என்றால் இன்னொருமுறை கந்தவனத்தின் பேச்சைக்கூட கேட்க தயாராக இருக்கிறேன்.//க‌ந்த‌வ‌ன‌த்தைக் கூப்பிட்ட‌து அவ‌ர் ம‌ர‌புக்க‌விதை ப‌ற்றி விரிவாக‌ உரையாட‌க்கூடிய‌வ‌ர் என்ப‌தால் இருக்க‌லாமென‌ நினைக்கிறேன். ஆனால் அதேபோன்று இன்றைய‌ க‌விதைக‌ளோடு ப‌ரிட்ச‌ய‌முடைய‌ யாரேனும் ஒருவ‌ரைச் செல்வ‌ம் பேச‌வைத்திருக்க‌லாம்//உண்மைதான். ஆனால் கந்த வனம் மரபுக் கவிதைகளில் பரிச்சயம் உள்ளவரென்றாலும் அவர் தற்காலக் கவிதைகளில் மிக மிக அதிகம் பின் தங்கியே இருக்கிறார். அதே நேரம் அவர் தற்காலக் கவிதைகளையோ, வாசகர்களையோ ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. மரபு இலக்கியப் பயிற்சி இல்லாமல் வருபவர்கள் அந்த சமூகத்தையே நச்சுப் படுத்திவிடுகின்றனர் என்ற கூற்று எவ்வளவு அதீதமான குற்றச்சாற்று…தவிர gulfல் பரவிய எண்ணெயுடன் கூட இதை ஒப்பிடுகிறார்….நீங்கள் சொன்னது போல மு. புஷ்பராஜன் பேச்சினை நானும் எதிர்பார்த்தேன். அதே போல அவைத் தலைவராக இருந்த சேரன் கந்தவனம் பற்றி ஏதாவது சில கருத்துக்களாவது சொல்வாரென்றும் எதிபார்த்தேன்.

  Like

 11. நன்றிகள் மீராபாரதி,//'காலம் ' அடிக்கடி 'வளரும் தமிழ் ' //வாழும் தமிழ் என்று வரவேண்டும்.உண்மைதான் மீராபாரதி. இவர்கள் எல்லாரும் குற்றம் சாற்றுவார்களே தவிர எதையும் செய்ய மாட்டார்கள். நீங்கள் நடத்திய புத்தகக் கண்காட்சிகளுக்கு நான் வந்ததில்லை, ஆனால் எனக்குத் தெரிந்து செல்வம் தவிர்த்து கனடாவில் புத்தகக் கண்காட்சி நடத்திய இன்னொருவர் "மணிமேகலைப் பிரசுரத்தார்". ஹொப்பர் ஹட் இருக்கின்ற அதே தொகுதியிலேயே கண்காட்சி நடைபெற்றது. அந்தக் கண்காட்சிகளில் சிலமுறை கலந்து கொண்டதாலேயே எனக்கு செல்வத்தின் வாழும் தமிழ் கண்காட்சிகளின் அருமை அதிகம் தெரிகின்றது என நினைக்கிறேன்.

  Like

 12. நன்றிகள் பாரதி,நீண்ட நாட்களாக புத்தகங்களை அதிகம் தேடித் திரிந்தீர்கள். நேற்று நல்ல வேட்டை ஒன்று ஆடிய திருப்தி இருக்கும் என நினைக்கிறேன்

  Like

 13. வணக்கம் கிருத்திகன்,மன்னிக்கவும், கடந்த 2 வார இறுதிகளில் நண்பனின் திருமணம் காரணமாக சற்று வேலைகள் இருந்ததால் இது பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன்.பாதகம் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என பாரதி சொன்னதை செய்ய முடியாமல் போவது வருத்தமே

  Like

 14. அனாமிகளே,உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.இது போன்ற விடயங்களுக்கான எமது எதிப்பினை நாமும் காட்டுவதன் மூலமேயே எதிர்காலத்தில் ஒரு சுமுகமான சூழலை ஏற்படுத்தலாம் என நினைக்கிறேன்

  Like

 15. பதிவுக்கு நன்றி அருண்மொழிவர்மன்,கூட்டத்தைத் தவறவிட்டுவிட்டேன்….:( கனடாவில் இருந்த காலங்களில் நல்ல புத்தகங்களை 'வாழும் தமிழ்'கண்காட்சியிலேயே பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புத்தகங்களை அனுப்பும் செலவே அதிகமானதுதான். (பத்து கிலோவிற்கு 1350 ரூபாய்கள்.) தவிர, கொழும்பு பொதிகள் பிரிவிற்கு அலைந்து அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வடக்குக்கு அனுப்பினால் திருகோணமலைக்குத்தான் போய்ப் பெற்றுக்கொள்ள முடியும். நிறையக் கதைக்கலாம். ஆனால், ஒரு விடயத்தைச் செயற்படுத்துவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களையும் புரிந்துகொள்ளவேண்டும். மேலும், காலம் செல்வம் போன்ற ஒருவரே நல்ல புத்தகங்களைத் தெரிந்து எடுத்துவர முடியும் என்று நான் நினைக்கிறேன்.

  Like

 16. பகிர்வுக்கு நன்றி சுதன் – வார இறுதி நண்பர்களுடன் கழிந்ததாலும் நிகழ்ச்சி நிரல் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாமையாலும் நிகழ்வை தவற விட்டிருந்தேன் ஆனால் நிகழ்வைத் தொகுத்து எழுதியதில் பெரும்பாலான தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியே. கவிதைகள் மிகத்தொடர்ச்சியான காலம் ஒரு மனிதனில் ஆளுமை செய்வதற்கான சாத்தியங்கள் இன்று குறைந்து கொண்டே வருகிறது – இதற்கு அவர்கள் எதிகொள்ளும் புறவயமானதும் அகவயமானதுமான நிறையக் காரணங்களைச் சொல்லமுடியும் – ஆனால் பிரச்சினை என்னவென்றால் ஒவ்வொருவரும் தமக்கும் கவிதைகளுக்குமான வாசிப்பு அல்லது தொடர்பு அறுந்து போன அந்தக்கணத்தோடு கவிதையின் இயக்கம் நின்று விட்டது என்று சொல்லுகின்ற கற்பிதம் தான் முட்டாள்த்தனமானது. அதன் தொடர்ச்சியான வெளிப்பாடுகள் தான் இந்த மாஜிக்கவிஞர்களின் பேச்சுகள், சேரன் கவிதைகள் என்றால் என்ன புதுக்கவிதைகள் என்றால் என்ன இரண்டும் ஒன்றுதான் என்கின்ற புலுடாக்கள் எல்லாம். அத்தனை சுலபமாக கவிதையின் இயக்கம் நிற்பதில்லை என்பதையும் அது யாருக்குள்ளும் அடங்கி நிற்பதில்லை என்பதையுமே இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது.நீங்கள் சொல்வதைப்போலவே செல்வம் ஒரு நல்ல செயற்பாட்டாளர் – எளிமையும் சுவையுமாக பேசக்கூடியவர். இருந்தாலும், கடந்த சந்திப்பிலும் கம்பனை படியுங்கோ என்றதிலையும் நீங்கள் சின்னப் பெடியள் என்றதிலையும் செல்வம் முனைப்பாய் இருந்தவர். இதில அதையே கந்தவனமும் சொல்லியிருக்கிறார் – நல்லது – பழந்தமிழ் பாடல்களில் இருக்கின்ற மதிப்பு காலம் செல்வம் அவர்களிடம் இருக்கின்ற மதிப்பை போலவே உயர்வானது – இரண்டையும் மறுக்கவில்லை, ஆனாலும் கவிதை எழுத கம்பனை தெரிய வேண்டும் என்ற கருத்தை கொஞ்சம் சங்கடத்தோடு தான் சகிக்க வேண்டி இருக்கிறது – முதலும் ஒருக்கா செல்வம், சேரன் செழியன் ஜெயபாலனுக்கு பிறகு ஒரு கவிஞனை காட்டுங்கோ எண்டு கேட்டிருந்தார் – ஒருவேளை அவர்களோடு செத்துப்போன ஈழக்கவிதைக்கு கம்பனை படித்த ஒருவரே உயிர் தர முடியும் எண்டு நினைக்கிறார்களோ என்னவோ…..

  Like

 17. வுpளிம்பு நிலைமக்கள் பற்றி……. கவி கந்தவனம் ஒரு தோழரின் 75வது பிறந்த நாளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தோழர் தீண்டாமைக்கு எதிராக போராடியவர். கவிஞர் அங்கு பேசும் பொழுது தீண்டாமை என்பது மனைவியை தீண்டாமை என்ற பொருள்பட பேசினார். இதை எங்கே சொல்லி ………….ஏனக்கு ஆச்சரியமான விடயம் நீங்கள் மேலே குறிப்பிட்ட கவிஞர்கள் யாவரும் மௌனம் காத்தமையே. சேரனின் மௌனம் கேள்விக் குறியாகவேயுள்ளது.டி.செ………..காலம் செல்வத்தின் குறைபாடே “கைத்தட்டல் பெறுவோரையும், பசையுள்ளோரையும” ஆதரிப்பதே.;, உங்களுக்கு…. அவர் கூறியது ஆச்சரியப்படத்தக்கது அல்ல. மரபுக் கவிதையை நன்கறிந்த பலர் இங்கிருக்கையில் கவிஞரை நாடியதுக்கும் “கையும் பசையுமே” காரணம்.சுதனின் எதிர்வினை காலம் சஞ்சிகையில் வெளிவருமா? செல்வம் கடைசிவரையும் இதனை வெளியிடமாட்டார். கவிஞரிடமிருந்து மன்னிப்பும் ((i thought this is an intelligent crowd) (என்ற மோசமான வார்த்தைகளுக்கு ) பதிலும் கிடைக்குமா? இறுதி வரை இவற்றை செல்வம் செய்யமாட்டார். செல்வம் இப்போ தி.மு.க வழி.

  Like

 18. வுpளிம்பு நிலைமக்கள் பற்றி……. கவி கந்தவனம் ஒரு தோழரின் 75வது பிறந்த நாளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தோழர் தீண்டாமைக்கு எதிராக போராடியவர். கவிஞர் அங்கு பேசும் பொழுது தீண்டாமை என்பது மனைவியை தீண்டாமை என்ற பொருள்பட பேசினார். இதை எங்கே சொல்லி ………….ஏனக்கு ஆச்சரியமான விடயம் நீங்கள் மேலே குறிப்பிட்ட கவிஞர்கள் யாவரும் மௌனம் காத்தமையே. சேரனின் மௌனம் கேள்விக் குறியாகவேயுள்ளது.டி.செ………..காலம் செல்வத்தின் குறைபாடே “கைத்தட்டல் பெறுவோரையும், பசையுள்ளோரையும” ஆதரிப்பதே.;, உங்களுக்கு…. அவர் கூறியது ஆச்சரியப்படத்தக்கது அல்ல. மரபுக் கவிதையை நன்கறிந்த பலர் இங்கிருக்கையில் கவிஞரை நாடியதுக்கும் “கையும் பசையுமே” காரணம்.சுதனின் எதிர்வினை காலம் சஞ்சிகையில் வெளிவருமா? செல்வம் கடைசிவரையும் இதனை வெளியிடமாட்டார். கவிஞரிடமிருந்து மன்னிப்பும் ((i thought this is an intelligent crowd) (என்ற மோசமான வார்த்தைகளுக்கு ) பதிலும் கிடைக்குமா? இறுதி வரை இவற்றை செல்வம் செய்யமாட்டார். செல்வம் இப்போ தி.மு.க வழி.கவிஞர் நீங்கள் சுதனின் எதிர்வினையையும், பின்னூட்டங்களையும் வாசித்திருப்பீர்கள். நிச்சயமாக வாசித்திருப்பீர்கள். பல பத்திரிகைகளில் எழுதி வருகின்றீர்கள். மன்னிப்பையும் பதிலையும் எதிர்பார்க்கலாமா?பிற் குறிப்புகவிஞர் இப்போ தி;மு.கவில் தான் உள்ளார்.செல்வம் இன்று கவிதை எழுதும் பலருக்கு மரபு தெரியாமல் இருக்கலாம். பல வீச்சமான தரமான கவிதைகளை இவர்கள் எழுதி வருகின்றார்கள். இது இலங்கையில் மாத்திரமல்ல இந்தியா புலம் பெயர் நாடுகளிலும் தொடர்கின்றது. நீங்களே அவ்வப்போது பல கவிஞர்களை குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களது முதல் அறிமுகமும் கவிஞராகவே இருந்தது. நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் நீங்கள் கம்பராமாயணம் வாசித்து விட்டு தான் கவிதை எழுதினீர்கள் என. கம்பராமயணம் வாசித்தமையினால் தான் உங்களிடமிருந்து நல்ல கவிதைகள் வருவது நின்று விட்டது. உங்களுக்கு களம் உண்டு. பல நல்ல விடயங்களை செய்ய வேண்டும் என்ற மனம் உண்டு. தயவு செய்து இது போன்ற குழந்தைப் பிள்ளைத் தனத்தை கைவிடுங்கள். “நீங்கள் குழந்தைப் பெடியள”; என மட்டம் தட்டும் வேலையை கைவிடுங்கள். உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. இது கவிஞர் கந்தவனத்துக்குரிய சொற்கள்….

  Like

 19. Thirumavalavan Kanagasingam 07 செப்டம்பர், 02:52 க்குநன்றி. தங்கள் கட்டுரை படித்தேன்.தாங்கள் குறிப்பிட்ட 'காலம்' தொடர்பான செயல்பாடுகளை நான் வழிமொழிகிறேன்.எனக்கு செல்வம் மீது அன்பும் மரியாதையும் உண்டு. அது அவர்இப்பணியில் தொடர்ச்சியாக நின்றுபிடிப்பது தொடர்பானதேசில வாரங்களின் முன்னர் நண்பர்கள் இணைந்து கவிதைகள் பற்றிய திறந்த வெளி கலந்துரையாடலில் நானும் கலந்துகொண்டேன்.புதுக்க எழுதவருபவர்கள் கம்பனைப் படிக்கவேண்டும் என்று கூறினார்.நான் கம்பன் பெரும்புலவன். சந்தேகமே இல்லை. ஆனால் அவன் பாடியது செய்யுள் என மறுத்துரைத்தேன்.அவர் தன் கருத்துக்கு வலுச்சேர்க்கவே இன்றைய நிகழ்வைக் கூட்டினார். அதில் ஒன்றும் தப்பில்லை. நூறுகருத்துகள் வருவதும் பட்டுத் தெறிப்பதும் தெளிவதும் இயல்புதானேசெல்வம் அண்ணாவைப் பொறுத்தவரையில் அவர் ஜெயபாலன் சேரன் காலத்தோடு உறைந்துபோனவர்.இன்று நாங்களும்கூட புதுக்க (அவரின்) எழுதவருபவர்கள் பட்டியலில் அடக்கம்எனக்கு வருத்தமான விடையம் என்னவென்றால் இவர்கள் கம்பனைப் படிக்கச் சொல்வதும் அல்லது இன்றைய பலரின்உரையில் தொக்கி நின்றதும் ஒன்றே. அதாகப்பட்டது (புது)கவிதைக்கு ஓசைநயம் வேண்டும் என்பதே.காலந்தான் பதில் சொல்ல வேண்டும் பார்க்கலாம்

  Like

 20. //…எனவே அவர் மீது குற்றச் சாற்றுகளை அள்ளி இறைப்பவர்கள் ஏன் தாமே ஒரு புத்தகக் கண்காட்சியை ஒழுங்கமைத்து 'எந்த வியாபாரத்தனமும்' இல்லாது நியாய விலைக்கு புத்தகங்களை விற்காமல் காலம் செல்வம் மீதான அவதூறுகளை மாத்திரம் கூஉறி வருகின்றனர் என்பதும் அவ்வாறு புத்தகம் விற்க அவர்கள் எடுத்த முயற்சிகளை ஏன் கைவிட்டனர் என்பதையும் அவர்கள் நிச்சயம் அறிந்தே இருப்பர். …..//இது ஒரு வரவேற்கத்தக்க விடயம்….(உங்கள் கருத்தும் செல்வத்தின் சேவையும்)///…..ஒரு கடையில் இருந்த புத்தகங்களை மாத்திரமே வைத்து விற்கின்றனர். புதிதாக புத்தகங்கள் எடுப்பது (விகடன் பிரசுரங்கள் தவிர்த்து) இல்லை அல்லது மிக மிகக் குறைவு. …//// இந்தப் பிரச்சினை பல இடங்களில் உள்ளது. ஒப்புக் கொள்கிறேன் காசு கொடுத்துப் புத்தகம் வாங்கும் பண்பு குறைந்து கொண்டே வருகிறது.

  Like

 21. நன்றிகள் தமிழ்நதி,//கூட்டத்தைத் தவறவிட்டுவிட்டேன்….:( //இப்போது எங்கே இருக்கின்றீர்கள்?புத்தகங்கள் வாங்குவது பற்றி நீங்கள் சொன்னது முழுக்க உண்மைதான். ஏற்கவே தெரிந்த புத்தகங்கள் என்றால் இணையம் ஊடாக வாங்க வாய்ப்பிருக்கின்றது. ஆனால் புதிய புத்தகங்களை வாங்க கண்காட்சிகளே சிறந்த வழி. ஒரு உதாரணத்துக்கு அடையாளம் போன்ற பதிப்பகங்களின் புத்தகங்களை இணையமூடாக வாங்குவதென்பது சிரமம்தான்

  Like

 22. வணக்கம் துர்க்கா-தீபன்,//ஒரு மனிதனில் ஆளுமை செய்வதற்கான சாத்தியங்கள் இன்று குறைந்து கொண்டே வருகிறது – இதற்கு அவர்கள் எதிகொள்ளும் புறவயமானதும் அகவயமானதுமான நிறையக் காரணங்களைச் சொல்லமுடியும் -//இந்த அவதானம் முக்கியமானது. இதை நானும் அனுபவித்திருக்கிறேன். ஏனோ, எனக்கு இப்போது கவிதை வாசிப்பதற்கான மனநிலை வருவதே அரிதாக இருக்கின்றது. ஆனால் அதற்காக கவிதையின் இயக்கம் நின்று விட்டது என்று சொல்ல மாட்டேன், வாசிக்கும் கவிதைகள் சில நல்லதோர் வாசிப்பனுபவத்தைத் தந்தாலும், வாசிப்பதில் இருக்கின்ற ஈடுபாடு குறைந்துவிட்டதென்றே கருதுகின்றேன். //சேரன் செழியன் ஜெயபாலனுக்கு பிறகு ஒரு கவிஞனை காட்டுங்கோ எண்டு கேட்டிருந்தார் – ஒருவேளை அவர்களோடு செத்துப்போன ஈழக்கவிதைக்கு கம்பனை படித்த ஒருவரே உயிர் தர முடியும் எண்டு நினைக்கிறார்களோ என்னவோ…//அண்மையில் உயிர்மையில் ரவிக்குமார் கூட இது போன்ற ஒரு கருத்தினை சொல்லி இருந்தார். "? ஈழத்திலிருந்து முன்புபோலக் காத்திரமான கவிதைக் குரல்கள் ஒலிக்காமல் போனதற்குக் காரணம் என்ன என்ற என் கேள்விக்கு சேரனின் கவிதையில் பதில் இருப்பதுபோல்படுகிறது. ‘எல்லோரும் போய்விட்டோம் / கதைசொல்ல யாரும் இல்லை…‘ என்ற வரிகளிலும் அவற்றைத் தொடர்ந்து ‘இப் பொழுது இருக்கிறது / காயம்பட்ட ஒரு பெருநிலம் / அதற்கு மேலாகப் பறந்து செல்ல / எந்தப் பறவையாலும் முடியவில்லை / நாங்கள் திரும்பி வரும் வரை‘ என்ற வரிகளிலும் அந்தப் பதிலை நான் பார்த்தேன்" மே 2010 இதழில். ஆனால் உண்மையில் ஈழத்தில் இருந்து – உயிர்ப்பயத்துடனேயே- போரைப் பதிவு செய்துகொண்டு எத்தனையோ பேர் இருக்கவே செய்கிறார்கள். குறைந்த பட்சம் அதே காலப்பகுதியில் உயிர்மையில் எழுதிக் கொண்டிருந்த தீபச்செல்வன் கூட ரவிக்குமாருக்கு நினைவு வரவில்லை.

  Like

 23. வருகைக்கு நன்றிகள் திருமாவளவன்,கம்பன் பற்றிய உங்கள் கருத்தில் எனக்கும் முழுக்க உடன்பாடே. கம்பன் ஒரு பாடலாசிரியன், அவன் பாடல்களில் கவித்துவம் இருந்தது என்று கொள்வது இன்னும் சிறப்பு எனக் கருதுகிறேன். வைரமுத்து, வாலி போன்றவர்களையும் அவ்விதமே குறிப்பிடவேண்டும் என நினைக்கிறேன்.ஒரு தகவலுக்காக சொல்லுகிறேன், நானும் சில காலம் கம்பராமாயணம் (சுந்தரகாண்டத்தில் ஒரு பகுதி) ஒருவரிடம் படித்தேன். அது எனக்கு எப்படி உதவியதென்றால், பழந்தமிழ்ப்பாடல்களை சந்தி பிரித்து பொருள் உணரவும், அவற்றில் இருக்கும் இலக்கியச் சுவையை அறியவும்… இதே பயிற்சியை தற்காலப் பாடல்களில் பிரயோகிக்கவும் எனக்கு கம்பராமாயணம் படித்தது உதவியது. சினேகிதனே சினேகிதனே பாடலில் "நான் அழும்போது நீ அழ நேர்ந்தால் துடைத்திட விரல் வேண்டும்" என்று ஒரு வரிவரும்,டக்கென்று தமக்கு ஒரு குழந்தை வேண்டும் எனக் கேட்கிறார்கள் என புரிய முடிந்தது…நீங்கள் சொன்னது போல கருத்துக்கள் மோதுவது நன்றே என்றாலும், அந்தக் கருத்தைக் கந்தவனம் சொல்வதற்காக காட்டிய "மெக்ஸிகன் குடாவில் பரவிய எண்ணெய்" உதாரணம் எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாத அவதூறு.நன்றிகள் திருமாவளவன், மீண்டும் பேசுவோம்

  Like

 24. 'கூர் கலை இலக்கிய மலர் 2010' இதழில் வெளிவந்த 'காலம்' செல்வம் பற்றி வெளிவந்த கருத்துகள் பற்றிக் குறிப்பிடும்பொழுது கட்டுரையாசிரியர் அருண்மொழிவர்மன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்: 'அண்மையில் பதிவுகள் இணையத் தளத்தில் காலம் செல்வம் புத்தக விலைகளை வியாபார நோக்குடன் நிர்ணயிக்கிறார் என்ற ஒரு குற்றச் சாற்றை முன்வைத்திருந்தனர். கனடாவில் இலக்கிய வாசகர்கள் அனேகம் பேர் காலம் ஒருங்கிணைக்கின்ற புத்தகக் கண்காட்சிகளுக்கு நிச்சயம் சென்றிருப்பர். பலர் அவர் வீட்டுக்கே போய் புத்தகங்களை வாங்கி இருக்கவும் கூடும். அங்கே அவர் எத்தனை புத்தகங்களை விற்பதற்காக வாங்கி இன்றுவரை விற்கப்படாமல் அவரிடமே தங்கி இருக்கின்றன என்பதையும் நாம் பார்க்கத்தானே வேண்டும். பெட்டி பெட்டிகளாகவும், ராக்கை ராக்கைகளாகவும் விற்கப்படாமல் தேங்கி இருக்கின்ற புத்தகங்களை நானே அவதானித்து இருக்கின்றேன். தொடர்ச்சியாக விற்கப்படாமல் தேங்கி நிற்கும் புத்தகங்களை பின்னர் ஒரு புத்தகம் ஒரு டொலர் என்று விற்றுத் தள்ளுவதையும், அதில் கூட பேரம் பேசுபவர்களையும் நான் கவனித்தே வருகிறேன். இந்தச் சூழலில் எந்த அறங்களின் அடிப்படையில் காலம் மீதான குற்றச் சாற்றுகள் வைக்கப்படுகின்றன என்று தெரியவில்லை. தவிர, காலம் செல்வம் ஒன்றும் கனடாவில் தமிழ்ப் புத்தகங்கள் விற்பதற்கான ஏக அனுமதி பெற்றவரும் இல்லை, எனவே அவர் மீது குற்றச் சாற்றுகளை அள்ளி இறைப்பவர்கள் ஏன் தாமே ஒரு புத்தகக் கண்காட்சியை ஒழுங்கமைத்து 'எந்த வியாபாரத்தனமும்' இல்லாது நியாய விலைக்கு புத்தகங்களை விற்காமல் காலம் செல்வம் மீதான அவதூறுகளை மாத்திரம் கூஉறி வருகின்றனர் என்பதும் அவ்வாறு புத்தகம் விற்க அவர்கள் எடுத்த முயற்சிகளை ஏன் கைவிட்டனர் என்பதையும் அவர்கள் நிச்சயம் அறிந்தே இருப்பர்.'மேலும் 'செல்வம் புத்தக விலைகளை வியாபார நோக்குடன் நிர்ணயிக்கிறார்' என்று ஊர்க்குருவி தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்த குற்றச்சாட்டினைக் குறிப்பிடும் கட்டுரையாளர் அருண்மொழிவர்மன் 'கனடாவில் இலக்கிய வாசகர்கள் அனேகம் பேர் காலம் ஒருங்கிணைக்கின்ற புத்தகக் கண்காட்சிகளுக்கு நிச்சயம் சென்றிருப்பர். பலர் அவர் வீட்டுக்கே போய் புத்தகங்களை வாங்கி இருக்கவும் கூடும். அங்கே அவர் எத்தனை புத்தகங்களை விற்பதற்காக வாங்கி இன்றுவரை விற்கப்படாமல் அவரிடமே தங்கி இருக்கின்றன என்பதையும் நாம் பார்க்கத்தானே வேண்டும். பெட்டி பெட்டிகளாகவும், ராக்கை ராக்கைகளாகவும் விற்கப்படாமல் தேங்கி இருக்கின்ற புத்தகங்களை நானே அவதானித்து இருக்கின்றேன்' என்றும் குறிப்பிடுகின்றார்.இதில் மறைமுகமாகத் தொனிப்பதென்னவென்றால் செல்வம் அவ்விதம் விற்றால்தான் ஓரளவாவது சமாளிக்கலாம் என்பதுதான். அதனைத் தானே ஊர்க்குருவியும் 'முதலாளித்துவ நாடொன்றில் 'தேவை'யை (Demand) மையமாக வைத்து இவ்விதம் விலைகளை நிர்ணயிப்பது சாதாரண்மானதே. ஒரு பொருளின் விலை ஒரே நகருக்குள்ளேயே இடத்துக்கிடம் பல்வேறு விலைகளில் விற்கப்படுவதைப்போல்தான் இதுவும். இதுவொரு வியாபார நடைமுறை. இத்தகைய நடைமுறைகளைத் தவிர்த்திருந்தால் வியாபாரியென்ற பெயர் கிடைத்திருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கப் போவதில்லை. உண்மையில் இது போன்ற முயற்சிகளை சேவையென்னும் அடிப்படையில் செய்வதானால் தாக்குப் பிடிக்க முடியாது. ஓரளவு நியாயமான இலாபத்துடன் கூடிய வியாபாரமாக நடாத்துவதே மிகப்பெரிய சேவையாக அமையுமென்பதென் கருத்து' என்று குறிப்பிடுகின்றார். செல்வம் தனது நேர்காணலில் 'புத்தகங்களை அறிமுகம் செய்து ஒரு அறிவார்ந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று ஆரம்பித்த முயற்சி இன்று வியாபாரி என்ற பெயரைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது' என்று குறிப்பிட்டதனால்தான் ஊர்க்குருவியும் தன் அனுபவத்தின் அடிப்படையில் அவ்விதம் கூறவேண்டியதாயிற்று. 3 அல்லது 4 டொலர்கள் பெறுமதியுள்ள நூலொன்றை '10' டொலர்களுக்கு விற்க முடியுமானால், அதே பெறுமதியுள்ள , அதே அளவுள்ள இன்னுமொரு நூலொன்றினை 20 டாலர்களுக்கு விற்கவேண்டிய தேவையில்லை. உண்மையில் ஊர்க்குருவி குறிப்பிட்டிருந்த நூல்கள் வருமாறு: சுந்தரராமசாமியின் 'காகங்கள்' ($10) அடுத்தது உ.வே.சாமிநாதரின் 'சிலப்பதிகார்ம்' ($20). உவெசாவின் நூலை விட சுராவின் நூல்களுக்கே அதிகமான தேவை இருந்திருக்கும் வாய்ப்புண்டு. 'ஓரளவு நியாயமான இலாபத்துடன் கூடிய வியாபாரமாக நடாத்துவதே மிகப்பெரிய சேவையாக அமையுமென்பதென் கருத்து' என்று ஊர்க்குருவி கூறுவதிலென்ன தவறு?

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: