அனேகமான இடங்களில் கட்டாயப் பணிநீக்கங்கள் ( Layoff) நடந்துகொண்டுள்ளன. இந்த வேலையிழப்புகள் பற்றிப் பேசும்போது பெரும்பாலானோர் இவற்றுக்குப்பின்னால் தானியக்கம் (Automation), எண்ணிமத் தொழினுட்பம் (Digitalization) ஆகியவற்றின் வளர்ச்சியும் அவை தொழிற்துறைகளில் ஏற்படுத்திய தாக்கத்தையும் இதற்குக் காரணமாகக் காட்டுகின்றார்கள். இதுபற்றிப் புரிந்துகொள்வதற்காக வாசித்துக்கொண்டிருந்தபோது Cory Doctorow என்கிற கனடிய எழுத்தாளர் எழுதிய Enshittification: Why Everything Suddenly Got Worse and What to Do About It என்ற புத்தகம் கிடைத்தது. வேலை இழப்புகள், அதன் பாதிப்புகள் பற்றியதாக இந்தப் புத்தகம் நேரடியாக இல்லாதபோதும் இவற்றுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகின்ற எண்ணிமத் தளங்களின் (Digital Platforms) தற்போதைய நிலை என்னவாக இருக்கின்றது என்கிற மதிப்பீடாக அமைகின்றது.
எண்ணிமத் தளங்களின் உச்சம் என்று நாம் நினைக்கிற இந்தக் காலப்பகுதியில் உண்மையில் எண்ணிமத் தளங்கள் அவை வழங்குகின்ற சேவையின் தரத்தால் வீழ்ச்சியை அடைந்திருப்பதுடன் அவற்றின் சேவையின் தரம் குறித்த பயனாளிகளின் மதிப்பீட்டிலும் மனக்குறையைச் சந்தித்திருக்கின்ற காலப்பகுதியாக இருக்கின்றது என்று டொக்ரோவ் அடையாளம் காணுகின்றார். இந்த வீழ்ச்சியை சேவைத்தரத்தின் வீழ்ச்சி என்று மட்டும் பார்க்கமுடியாது; மாறாக எண்ணிமத் தளங்களிடையே இது ஒரு போக்காக இருக்கின்றது என்பதைச் சுட்டுக்காட்டும் டொக்ரோவ், பயனாளிகளின் தேவைகளை முதன்மைப்படுத்துவதாயும், பெரும்பாலும் இலவசமாக சேவைகளை வழங்கும் தளங்கள் என்றும் இயங்கத்தொடங்கிய இந்தத் தளங்கள் அவற்றின் தற்போதைய நிலையை மூன்று வெவ்வேறு படிகளினூடாக வந்தடைந்திருப்பதாக அடையாளம் காட்டுகின்றார்.
தொடக்கநிலையில் (Stage One: Good to users) பயனாளிகளை மையமாக வைத்து, அவர்களுக்குத் தரமானதும், திருப்தியளிக்கக் கூடியதுமான சேவையை வழங்குவதைத் தமது நோக்காகக் கொண்டு எண்ணிமத் தளங்கள் இயங்கத் தொடங்குகின்றன. இந்தக் காலப்பகுதிகளில் பயனாளிகளின் தேவையே முதன்மைப்படுத்தப்படுவதுடன் பெரும்பாலும் சேவைகள் பயனாளிக்கு இலவசமாகவே கிடைக்கின்றன.
அவற்றின் முதலாவது படிநிலையில் பயனாளிகளைப் பெருமளவில் பெற்றுக்கொள்கின்ற இந்த எண்ணிமத் தளங்கள். அவற்றின் அடுத்த படிநிலையில் (Stage Two: Good to Business Customers) தமது பயனாளிகள் எண்ணிக்கை, பயனாளிகள் மத்தியில் தமக்கிருக்கின்ற மதிப்பு ஆகியவற்றைத் தம் சந்தை மதிப்பாகக் காட்டி வணிக ரீதியில் விளம்பரதாரர்களிடம் தம்மைச் சந்தைப்படுத்துகின்றார்கள். இதன்மூலம் அவர்கள் பெருமளவு வணிகச் சந்தையைக் கட்டியெழுப்புவதுடன் பெருமளவு இலாபமீட்டும் நிறுவனங்களாகத் தம்மை நிலைநாட்டுகின்றார்கள்.
இந்த எண்ணிமத் தளங்களின் வளர்ச்சியில் அவற்றுடன் நீண்டகாலமாகப் பயனாளிகளாக இணைந்திருந்தவர்கள் ஒருவிதத்தில் அவற்றில் தங்கிவாழ்பவர்களாகவும் தமது தேவைகளையும் தொடர்பாடல்களையும் நிறைவேற்றுவதற்கான முதன்மை ஊடகங்களாகக் குறித்த எண்ணிமத் தளங்களை மட்டுமே தமக்காக ஒற்றைத் தேர்வாகவும் கொண்டிருப்பவர்களாகவும் மாறிவிடுகின்றார்கள். இந்த நிலையில் எண்ணிமத் தளங்கள் தம் மூன்றாவது படிநிலைக்குச் (Stage Three: A Gilant Pile of Shit) சென்றுவிடுகின்றார்கள். இதன்போது தமது வாடிக்கையாளர்களான (Business partners) விளம்பரதாரர்களிடம் அதிகளவிலான கட்டணத்தை அறவிடுபவர்களாக மாறிவிடுவதுடன், பயனாளிகளின் தேவையை முதன்மைப் படுத்தாமல் தமது வாடிக்கையாளர்கள் / விளம்பரதாரர்களது பொருட்களையும் சேவைகளையும் பயனாளிகள் மீது திணிப்பவர்களாகவும் மாறிவிடுகின்றார்கள்.
அமேசன், முகநூல், ஐபோன், ட்வீற்றர் ஆகியவற்றை முன்வைத்து இந்த அவதானங்களை எழுதியிருக்கின்ற டொக்ரோவ் இந்தத் தளங்கள் ஒவ்வொன்றிலும் இந்த மூன்று படிநிலை மாற்றங்கள் எவ்விதம் தொழிற்பட்டிருக்கின்றன என்பதனை மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் பட்டியலிடுகின்றார்.
ஓர் எடுத்துக்காட்டுக்கு அமேசனை எடுத்துக்கொண்டால் தொடக்கநிலையில் பயனாளிகளை முக்கியப்படுத்தியபோது குறைந்த விலையும், நிறையத் தெரிவுகளும் பயனாளிகளுக்குக் கிடைத்தன. அத்துடன் பயனாளிகள் தமது தேவைகளைத் தேடும்போது சுயாதீனமான விதத்தில் தேர்வுகளுக்காக பட்டியல்களும் தரப்பட்டன. இதனால் பயனாளிகளுக்குச் சிறந்ததோர் தேர்வாக அமேசன் அமைந்து பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது. அதேநேரத்தில் விற்பனையாளர்களுக்கு விற்றவிலையை முழுமையாகக் கொடுத்த அமேசன், தொடக்கத்தில் முதலீடு செய்திருந்த பணம், பங்குச் சந்தையில் ஏற்பட்ட இலாபம் ஆகியவற்றைக்கொண்டு, பயனாளிகளுக்குக் குறைந்தவிலையில் பொருட்களை விற்றதுடன், பொருட்களை திருப்பிக் கொடுத்து மீள்கட்டணம் பெறும் வசதியையும் இலவசமாகவே அளித்திருந்தது (refund policy with shipping costs)
இந்த அதிகரித்த பயனாளிகள் எண்ணிக்கையையும் நற்பெயரையும் தன் மூலதனமாக பயன்படுத்தத் தொடங்கிய அமேசன் அதன் அடுத்த படிநிலையில் விற்பனையாளர்களை விளம்பரம் செய்யத்தூண்டி அதன் மூலம் இலாபமீட்டுவது, விற்பனையாளர்களைத் தமக்கு அதிகக் கழிவுவிலைக்குப் பொருட்களைத் தரவேண்டும் / விற்கின்ற விலையில் கணிசமான பகுதியைத் தரகுப்பணமாகத் தரவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஆகிய விடயங்களைச் செய்யத்தொடங்கியது. இந்தப் படிநிலையில் விற்பனையாளர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்க, பயனாளிகள் அனுபவித்த சேவையின் தரமும் தேர்வும் குறைகின்றன. அமேசன் தளத்தினைப் பயன்படுத்துவோர் அதன் மூன்றாவது படிநிலையில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்திருப்பர். விற்பனையாளர்களிடம் இருந்து சேவைக்கட்டணங்களை Fulfilled by Amazon என்கிற பெயரில் அறவிடுவது, விற்பனையாளர்களிடம் பொருட்களை விநியோகம் செய்வதற்காக அதிகளவிலான கட்டணங்களை அறவிடுதல் போன்றவற்றைச் செய்கின்றது. இதன்மூலம் அமேசன் மூலம் தனது பொருள் ஒன்றினை விற்கின்ற விற்பனையாளர் தனது இலாபத்தில் 45% முதல் 51% வரையானதை ஏதோ ஒரு விதத்தில் அமேசனுக்கே செலுத்தவேண்டியவராக இருக்கின்றார். அத்துடன் பயனாளிகளின் தேடல் முடிவுகள் பொருட்களின் தரம், அவை குறித்த மதிப்பீடுகளின் அடிப்படையில் இல்லாமல் விளம்பரம் தந்த விற்பனையாளர்களின் பொருட்களை தேடல் முடிவுகளில் முதன்மைப்படுத்துவது போன்றவற்றையும் அமேசன் செய்கின்றது. பயனாளி ஒருவர் பொருளொன்றை வாங்கத் தேடும்போது அமேசன் பரிந்துரைக்கின்ற பொருளொன்றின் விலையானது (தரம், வணிகப் பெயர் போன்றவற்றையும் வைத்துப் பார்க்கின்றபோது) நாம் நேரடியாகத் தேடிப் பார்த்து வாங்கக் கூடிய பொருளொன்றின் விலையைவிட 29% அதிகமானதாக இருக்கின்றது என்பதுடன், சராசரியாக அமேசன் பரிந்துரைக்கின்ற ஒழுங்கின்படி பார்த்தால் கிட்டத்தட்ட 17வது இடத்திலேயே ”உண்மையில்” சரியான தேர்வு இருக்கும் என்பதையும், அமேசன் தனது இலாபம், தனக்குக் கிடைக்கும் விளம்பரம் போன்றவற்றை வைத்துப் பயனாளிகளின் தேவைகளுக்குப் பொருத்தமில்லாத பொருட்களை தமது முதன்மையான பரிந்துரைகளாகக் காட்டி பயனாளிகளை மூளைச் வெளுக்கை செய்வதாக டொக்ரோவ் சுட்டிக்காட்டுகின்றார். இவற்றின் அடிப்படையில் அமேசன் Enshittification என்கிற அவரது கருத்தாக்கத்தின் இறுதி நிலையை – அதன் அழிவு நிலையை – அடைந்துவிட்டதாக டொக்ரோவ் கூறுகின்றார். கூர்ந்த அவதானிப்புகளுடனும் தர்க்கரீதியிலான பார்வையுடனும் ஈர்க்கக்கூடிய எளிமையான மொழியில் டொக்ரோவ் எழுதியிருக்கின்ற இந்தப் புத்தகமானது எண்ணிமத்தளங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு உதவக்கூடியது. Tik Tok ஐ வைத்து அவர் எழுதிய The ‘Enshittification’ of TikTok என்கிற கட்டுரை www.wired.com என்கிற இணையத்தளத்தில் வெளிவந்துள்ளது.
Leave a comment